என்னை ஆட்கொண்ட மகாகவி! - வ.ந.கிரிதரன் -
தமிழ் இலக்கிய உலகில் என்னை ஆட்கொண்டவர்களில் முதலிடத்தில் இருப்பவர் மகாகவி பாரதியார். இவருடனான தொடர்பு ஏற்பட்டபோது எனக்குப் பதினொரு வயது. அப்பா வாங்கித் தந்திருந்த மகாகவி பாரதியார் கவிதைகள் நூலின் மூலம் அத்தொடர்பு ஆரம்பமானது. இன்று வரை அது நீடிக்கின்றது. நான் எங்கு சென்றாலும், எங்கு வாழ்ந்தாலும் என் மேசையில் பாரதியாரின் கவிதைத் தொகுப்புமிருக்கும். அவ்வப்போது தொகுப்பைப் பிரித்து ஏதாவதொரு அவரது கவிதையை வாசிப்பது என் வழக்கம். இன்று அந்த மகத்தான மனிதரின் பிறந்தநாள்.
எப்பொழுதுமே நான் பாரதியாரை நினைத்து வியப்பதுண்டு. குறுகிய அவரது வாழ்வில் அவர் சாதித்தவைதாம் எத்தனையெத்தனை!
அவரது கவிதை வரிகள் மானுடரின் குழந்தைப்பருவத்திலிருந்து முதிய பருவம் வரையில் வாழ்க்கைக்கு வழிகாட்டக் கூடியவை. குழந்தைகளுக்கு அவரது வரிகள் இன்பமளிப்பவை. இளம் பருவத்தினருக்கு அவரது கவிதைகள் வடிகால்களாக இருப்பவை. சமுதாயச் சீர்கேடுகளுக்கெதிராக, அந்நிய ஆதிக்கத்துக்கெதிராகப் போராடுபவர்களுக்கு அவரது கவிதைகள் உத்வேகமளிப்பவை. தத்துவ விசாரங்களில் மூழ்கி மானுட இருப்புப் பற்றிச் சிந்திப்பவர்களுக்கு அவரது கவிதைகள் தெளிவையும், தேடல் மீதான ஆர்வத்தை மேலும் தொடர்வதற்கு ஊக்கமளிப்பவை. இயற்கையைச் , சூழலை , சக உயிர்களை நேசிப்பவர்களுக்கு அவரது கவிதைகள் மகிழ்ச்சியைத் தருபவை.
அவரது கவிதை வரிகள் பல மனத்தில் நிலைத்து நிற்கக்கூடியவை. இதுவரை வெளியான தமிழ்ச் சஞ்சிகைகள் பலவற்றின் தாரக மந்திரமாக இருப்பவை அவரது கவிதை வரிகள். திரைப்படங்கள், கலை நிகழ்வுகள், மெல்லிசை, கர்நாடக இசைக்கச்சேரிகள் பலவற்றில் அதிகம் பாடப்பட்டவை அவரது வரிகளாகக்த்தானிருக்க முடியும்.