'தமிழ் இலக்கியத்தோட்ட'த்தின் 2022ஆம் ஆண்டுக்கான இயல்விருதுகள் எழுத்தாளர் பாவண்ணனுக்கும், எழுத்தாளர் லெ.முருகபூபதிக்கும் வழங்கப்படுகின்றன. இத்தகவலைப் பதிவுகளுடன் பகிர்ந்துகொண்டவர் எழுத்தாளர் முருகபூபதி. விருதுகள் பெரும் இருவரையும் பதிவுகள் வாழ்த்துகின்றது. - பதிவுகள்.காம் -
வழக்கமாக வருடாவருடம் வழங்கப்படும் இயல்விருது கொவிட் நோய்த் தொற்று காரணமாக 2020 ஆம் வருடம் வழங்கப்படவில்லை. ஆகவே 2022 இல் இரண்டு இயல் விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை 2023 யூன் மாதம் கனடா ரொறொன்ரோவில் வழங்கப்படும்.
லெட்சுமணன் முருகபூபதி
தமிழ் இலக்கியத் தோட்டம், 2022 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் இயல் விருதை, கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவரும் இலங்கையில் பிறந்த படைப்பிலக்கியவாதியும், ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி அவர்களுக்கு வழங்குகிறது. 1972 இல் எழுத்தாளராக அறிமுகமான இவரின் முதலாவது சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது. வீரகேசரி பத்திரிகை ஆசிரிய பீடத்தில் இவர் பணியாற்றியபோது சோவியத் ஒன்றியத்தின் அழைப்பில் உலக இளைஞர் – மாணவர் விழாவில் கலந்து கொண்டார்.
1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த இவர், தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, பேட்டி, பயண இலக்கியம் என எழுதி வெளியிட்டு வருகிறார். அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழாக்களை நடத்துவதில் முன்னின்று உழைத்துவரும் இவர், 2011 இல் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் பிரதம அமைப்பாளராக செயல்பட்டார்.
அவுஸ்திரேலியாவில் 1988 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியம், 2004 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச் சங்கம் ஆகியனவற்றின் ஆரம்ப உறுப்பினருமாவார். இலங்கையில் வடமேல் மாகாணத்தில் நீர்கொழும்பில் 13 யூலை 1951 இல் பிறந்த முருகபூபதி , விவேகானந்த வித்தியாலயத்தில் ( தற்போது விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி ) தமது ஆரம்ப கல்வியை தொடங்கி பின்னர், யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும், ( தற்போது கனகரத்தினம் மத்திய கல்லூரி ) நீர்கொழும்பு அல்கிலால் மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார்.
இவருடைய வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி என்ற ஆவணப்படத்தை 2017 இல் மெல்பேர்ன் எழுத்தாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியும், வீடியோ கலைஞர் மூர்த்தியும் இணைந்து தயாரித்து வெளியிட்டனர். இவருடைய சிறுகதை தொகுதிகள் ஏழும், புதின, சிறுவர், பயண இலக்கியம் மூன்றும், கடித இலக்கியம், நேர்காணல் தொகுதி இரண்டும், கட்டுரை தொகுதிகள் பதினாறும் வெளிவந்துள்ளன.
இவர் பெற்ற இலக்கிய விருதுகள்:
சுமையின் பங்காளிகள் – 1975 ஆம் ஆண்டு சிறந்த சிறுகதை தொகுதிக்கான இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது. பறவைகள் - 2002 ஆம் ஆண்டு சிறந்த நாவலுக்கான இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது. அக்கினிக்குஞ்சு இணைய இதழ் 2018 இல் வழங்கிய வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் விருது.
இதர விருதுகள்:
2002 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய தினத்தின்போது விக்ரோரியா மாநில டெறபின் மாநகர சபை வழங்கிய சிறந்த பிரஜைக்கான விருது.
2011 ஆம் ஆண்டு விக்ரோரியா மாநில பல்தேசிய கலாசார ஆணையத்தின் விருது.
2022 Aust Tamil TV -( Tamil Linguistics Award ) விருது.
இவருடைய இலக்கிய, ஊடகத்துறை மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியம் சம்பந்தமான சேவைகளைப் பாராட்டி 2022 ஆம் ஆண்டுக்கான இயல் விருதை வழங்குவதில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது.
பாவண்ணன் ( இயற்பெயர் பலராமன் பாஸ்கரன்)
தமிழ் இலக்கியத் தோட்டம், 2022ம் ஆண்டுக்கான வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் இயல் விருதை, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவரும் பாவண்ணன் அவர்களுக்கு வழங்குகிறது.
பாவண்ணன் 1980 களில் எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களின் தலைமுறையை சேர்ந்தவர். ’தீபம்’ என்னும் இதழில் வெளிவந்த முதல் சிறுகதையை தொடர்ந்து சிற்றிதழ்களிலும், பெரிய இழழ்களிலும் இவர் இன்றுவரை தொடர்ந்து எழுதுகிறார்.
தமிழ் சிறுகதைகளையும், தமிழில் வெளிவந்த பிறமொழிச் சிறுகதைகளையும் முன்வைத்து திண்ணை இணைய இதழில் ‘எனக்குப் பிடித்த கதைகள்’ என்னும் தலைப்பில் இவர் அந்தக் கதைகளில் காணப்பட்ட அழகியலையும் வாழ்வியலையும் இணைத்து புரிந்துகொள்ளும் விதமாக எழுதிய நூறு விமர்சனக் கட்டுரைகள் மிகப்பெரிய வாசக கவனத்தை பெற்றன.
ஐம்பது தமிழ்க் கவிஞர்களின் படைப்புகளை முன்வைத்து ’உயிரோசை’ இணையதளத்தில் ’மனம்வரைந்த ஓவியம்’ எனும் தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை. ரசனையை அடிப்படையாகக் கொண்டு இவர் எழுதிய பல இலக்கியக் கட்டுரைகள் இவரை தமிழ் அழகியல் விமர்சகர்களின் முன் வரிசையில் வைக்கத் தகுதியாக்கின.
பாவண்ணன், வளவனூர் என்னும் சிற்றூரில் அக்டோபர் 20, 1958 அன்று பிறந்தார். பள்ளிக் கல்வியை வளவனூரிலும் புகுமுக வகுப்பை விழுப்புரம் அரசுக் கல்லூரியிலும், பட்டப்படிப்பை புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியிலும் படித்து தேறினார். கோட்டப் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவருடைய கவிதை தொகுதிகள் மூன்றும், சிறுகதை தொகுதிகள் 21ம், நாவல்கள் மூன்றும், குறுநாவல்கள் மூன்றும், கட்டுரை தொகுப்புகள் 34ம், சிறுவர் இலக்கியத் தொகுப்புகள் ஒன்பதும், மொழிபெயர்ப்புகள் (கன்னடத்திலிருந்து) 24 நூல்களும், (ஆங்கிலத்திலிருந்து) ஐந்து நூல்களும் (எல்லாமாக 99 நூல்கள்) இதுவரை வெளியாகியுள்ளன.
இவர் பெற்ற இலக்கிய விருதுகள்:
- புதுச்சேரி அரசு சிறந்த நாவல் விருது - 1987
- இலக்கியச் சிந்தனை சிறந்த நாவல் விருது - 1995.
- கதா அமைப்பு சிறந்த சிறுகதை விருது - 1995.
- சாகித்திய அகாதெமி சிறந்த மொழிபெர்ப்பு விருது – 2005
- தமிழக அரசு சிறந்த குழந்தை இலக்கிய விருது – 2009
- சுஜாதா – உயிர்மை அறக்கட்டளை சிறுகதை தொகுப்பு விருது - 2015
- என்.சி.பி.எச் சிறந்த கட்டுரை தொகுதி விருது – 2015
- இந்திய அமெரிக்க வாசகர் வாழ்நாள் சாதனை விருது – 2018
- விளக்கு அமைப்பு புதுமைப்பித்தன் விருது – 2019
- எம்.வி. வெங்கட்ராம் நூற்றாண்டு நினைவு விருது - 2021
இவருடைய இலக்கிய படைப்புகள் சக எழுத்தாளர்களின் மதிப்பை பெற்றவை. முக்கியமாக இவருடைய மொழிபெயர்ப்புகள் தமிழ் இலக்கியத்தின் வளத்தை பெருக்கின. இவருடைய தமிழ் இலக்கியச் சாதனைகளைப் பாராட்டி 2022ம் ஆண்டுக்கான இயல் விருதை வழங்குவதில் தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது.
பதிவுகள் இணைய இதழுக்குத் தகவலைப் பகிர்ந்துகொண்டவர் - முருகபூபதி.