* கட்டுரையாசிரியர்: முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -



முன்னுரை

அணுவினைப் பற்றி கூறும் இயல் 'அணுவியல்' ஆகும். இயற்பியலின் ஒரு பிரிவாக விளங்குகிறது. 'அணு' என்ற சொல்லிற்கு 'நுண்மை' என்று பிங்கல நிகண்டு பொருள் கூறுகிறது. இன்றையக் காலத்தில், அறிவியல் உலகில் பல அற்புத வளர்ச்சிகளைப் பெற்று விளங்குவது அணுவியலேயாகும். கம்பராமாயணத்தில் அணு பற்றியச் செய்திகள் குறித்து கூறப்பட்டுள்ளவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

அணுக் கொள்கையின் தந்தை

ஒரு பொருளைப் பிரித்துக் கொண்டேப்போனால், பிரிக்க முடியாது நிற்கும் பொருளே அடிப்படையாகும். அதற்கு 'அணு' என்று பெயரிட்டு மேலைநாட்டில் அணுக்கொள்கையை முதன் முதலாக எடுத்துக்கூறியவர் 'டெமாக்டிரிடஸ்' (Democritus) என்பவர். இவரே மேலைநாட்டு அணுக்கொள்கையின் தந்தையாவார்.

அணு:

அணு ஆற்றல் தொடர்பான அறிவியல் இருபதாம் நூற்றாண்டில்தான் நவீன அறிவியல் வளர்ச்சியாகக் காணப்பட்டது. இது பற்றிய சிந்தனைப் பண்டைத் தமிழரிடத்தில் இருந்தது என இதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன.

அணு என்பது மிகச் சிறிய மூலக்கூறு, கண்ணால் காண இயலாத அணுத்துகள். அணுவைப் பிரிக்க முடியாது என்பது தொடக்கக் கால அறிவியல் கூற்று. அணுவினை உடைக்க இயலும் என்பது அண்மைக் கால கண்டுபிடிப்பாகும். 'சைக்கிளோட்ரோன்' என்னும் கருவியின் உதவியால் அணுவைப் பிளக்க முடியும் என்பதனை 1932-ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த 'லாரென்ஸ்' என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். 1938- ஆம் ஆண்டு ஜெர்மன் விஞ்ஞானிகள் அணுவின் உட்கருவை, நியூட்ரான் உதவியால் பிளந்து, நியூட்ரான்களை வெளிப்படுத்தி, தொடர்வினைக்குத் தக்க நிகழ்ச்சிகளை உண்டு பண்ணினார்கள். இவ்வாறு அணுப்பிளவுடன் ஏற்படும் அணுக்கருத் தொடர் இயக்கத்தை அணுகுண்டுகள் வெடிப்பதற்குப் பயன்படுத்துகின்றனர்.

இன்றைய அறிவியலின் மூச்சு மூலமாக இருக்கக்கூடியது அணுக்கொள்கை. "The Atomic Theory' என்று இதனை ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றோம். அணுவின் இயக்கமில்லாமல் எதுவும் நடைபெறாது. அணுவின் நுண்துகள்களான எதிர்மின் துகள் (Electron), நேர்மின்துகள் (Proton), நடுநிலைத்துகள் (Neutron) போன்ற துகள்கள்தான், அணுவின் தொடர்பாக அமைந்துள்ளன. அணுக்களின் கூட்டுத்தொகையே உலகத்தின் அனைத்துப் பொருள்களுக்கும் அடிப்படை. எலக்ட்ரானின் இயக்கமின்றிப் பறந்து விரிந்துள்ள அண்டப்பொருள் ஏதும் இல்லை என்ற கருத்துக்களை அறிந்து கொண்டுள்ளோம். ஆனால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அணுவியல் பற்றிய சிந்தனைத் தெளிவு நம் பழந்தமிழரிடையே இருந்துள்ளது.

அணுக்களின் இணைவு:

1850-களில்தான் ஒரு குறிப்பிட்ட அணு, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வேறு அணுக்களுடன்தான் இணையமுடியுமென்று 'அணுக்களின் இணைவு' கண்டுபிடிக்கப்பட்டது.

1938-ஆம் ஆண்டு டிசம்பரில் 'ஆட்டோஹான்' என்ற விஞ்ஞானியும், 'ஃபிரிட்ஸ் ஸ்ட்ராங்மேன்' என்ற இயற்பியலாரும் சேர்ந்து முதன் முதலில் அணுக்கருப் பிளவை (Nuclear fission) நிகழ்த்திக் காட்டினார்கள்.

அணுவின் அமைப்பு:

அணு மிக மிக நுண்ணியத் துகள். பேராற்றல் வாய்ந்த நுண்பெருக்கியால் (Microscope) காணமுயன்றாலும் கண்ணுக்குத் தெரியாது. அரைக்கோடி அணுக்களை அணிவகுத்து நிற்க வைத்தால், அவை நாம் எழுதும் போது இடும் முற்றுப்புள்ளிக்குள் அடங்கிவிடும். எனினும் அறிவியல் அறிஞர்கள் மிகச்சிறிய அணுவின் அளவினையும் கணக்கிட்டுள்ளனர்.

ஓர் அங்குலத்தினை இருபத்தைந்து கோடிகளாய்ப் பங்கிட்டால், கிடைக்கும் அளவே, அணுவின் குறுக்களவாகும் என்று கண்டுள்ளனர். பெரிய அணுவின் குறுக்களவு, இதனை விட இரண்டரை மடங்கு பெரியது. அதாவது ஓர் அங்குலத் தினைப் பத்து கோடியாய்ப் பங்கிட்டதில் ஒரு பங்காகும்.

இன்றைய அறிவியல் அறிஞர்கள் அணுவின் எடை, அதன், அகலம், நீளம், கனம், அமைப்பு, இனம், ஆக்கப்பாடு, அழிவாற்றல் முதலிய அனைத்தையும், ஆய்வகத்தில் ஆய்வுக் கருவியின் துணைக் கொண்டு இறுதியிட்டுள்ளனர்.(முனைவர் க.மங்கையர்க்கரசி, பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் பக்கம் 88)

எலக்ட்ரான்கள்:

எலக்ட்ரான்கள் நிறையற்றவை எனக் கருதப்பெறும் அளவுக்கு மிகவும் சிறியவை. நுண்ணியவை இவற்றிலுள்ள மின்னேற்றம் உட்கருவின் நிறையையொட்டி அதிகமாகும். புரோட்டான், எலக்ட்ரானை விட, 1850 மடங்கு எடைமிக்கது. அணுவோ மின்னேற்றம் ஏற்படாமல் சமநிலையிலுள்ளது. உட்கருவைச் சுற்றிக் கோள் நிலையாகச் சுழன்று கொண்டிருக்கும். எலக்ட்ரான்கள் ஒன்றிலிருந்துப் படிப்படியாய் 92 வரையில், உயர்ந்து கொண்டேப்போகும். இந்த எதிர் மின்னேற்றத்தை சரிபடுத்தப் புரோட்டான்களும் ஒன்றிலிருந்து 92 வரை மிக்கு வருகின்றன. எனவே ஓர் அணுவில் எத்தனை புரோட்டான்கள் உள்ளனவோ, அத்தனை எலக்ட்ரான்களும் இருக்கும். இவற்றையொட்டியே அணுக்களின் வகையும் 92 என்றாகியுள்ளது. அணுக்கள் பலவகையாய்க் காணப்படுவதற்கு, இந்த மின்னேற்ற வேறுபாடேக் காரணமாகும். மிகச் சிறியதாகிய எலக்ட்ரானோ, அதனையொட்டிப் புரோட்டானோ, ஓர் அணுவில் ஒன்று சேர்வதால், ஓரணு வேறு ஒரு வகை அணுவாய் மாறுகிறது.

அணுவின் உட்கருவிலுள்ள துகள்களானப் புரோட்டான், நியூட்ரான் மிக இறுகப்பிணைக்கப்பெற்றுள்ளன. இவைப் பிணைந்திருக்கும் ஆற்றல் மிகப் பெரியது. இந்த ஆற்றலை 'உட்கருவின் பிணைப்பாற்றல்' (Binding Energy of the Nucleus) என்று வழங்குவர். அணுவின் உட்கருவிற்கும் எலக்ட்ரான்களுக்கும் இடையேயுள்ள மின்னாற்றலைவிட, இவ்வாற்றல் பத்து இலட்சம் மடங்கு பெரியது, வன்மையும் வாய்ந்தது. இந்த ஆற்றல்தான் ஹிரோசிமாவை அழித்தது, நாகசாகியை நாசமாக்கியது. இதுவே அணுகுண்டு செயற்படும் ஆற்றலாகும். (ஹிரோசிமா, நாகசாகி என்பன ஜப்பானிலுள்ள நகரங்கள், இரண்டாம் உலகப்பெரும் போரில் அமெரிக்க அணுகுண்டுகளால் அழிக்கப்பெற்றன).

பிரம்மாத்திரம் பிரயோகம் செய்யப்பட்டால், ஒரு பெரிய நிலப்பரப்பே அழிவுக்குள்ளாக்கும் என்றும், 12 ஆண்டுகளுக்கு அங்கே புல் பூண்டே முளைக்காது என்றும், மகாபாரதத்தில் வர்ணிக்கப்படுகிறது. ஆனால் இன்று அணு ஆயுதங்களின் விளைவு இது தான்.

இன்றைக்கு அணுமின்சாரம், அணுசக்தி எல்லாம் கிடைக்கிறது. ஒரு சிறிய அணுவை Cyclotron எந்திரத்தில் போட்டு, வேகமாகச் சுழலவிடும் போது, அதிவேக உச்சியில் அது வெடித்துச் சிதறி, அதனுள் உள்ள மாபெரும் ஆற்றல் வெளிப்படும். அந்தச் சிறிய அணுவில் பொதிந்துக் கிடக்கும் ஆற்றல் எல்லையில்லாதது. அப்பொழுது வெளியேறும் வெப்ப சக்தியைக் குறைக்கக் குளிர்ந்த நீர் ஒரு பக்கம் செல்ல, அதுவே கொதிநீராய் மறுபக்கம் மாறி, கடலில் கலக்க, கடல்வாழ் உயிரினங்கள் அழிகின்றன என்று ஒரு பக்கம் கூக்குரலும் தான். அவ்வளவு ஆற்றல் 7 கடல்களின் சக்தி அந்தக் கடுகினுள் உள்ளது என்கிறார் இடைக்காடர்.

அணுவை ஓர் அங்குல நீளம், ஓர் அங்குல அகலம், ஓர் அங்குல உயரம் உள்ள இடத்தில் அடங்கிக் கிடக்கும் அணுத்திரளைகள், ஆறு இலட்சம் கோடி கோடி. இதனை எண்ணால் எழுதினால், 6,00,00,000,000,000,000,000 என்றாகிறது.

இப்பேரெண்ணை மனத்தில் பதித்துக் கொள்ள முடியாது. சுருக்கி எழுதினால் 6 * 10 ^ 19 என்று ஆகும். இதனை விநாடிக்கு ஒரு எண் வீதம் எழுதினால் ஓராண்டில் ஒருவரால் எண்ணி முடிக்கக்கூடியது, மூன்று கோடியே பதினைந்து இலட்சத்து, முப்பத்து ஆறாயிரம். நாற்பது கோடி மக்களும் அந்த அணுக்களை, ஏறக்குறைய எண்ணி முடிக்க 5000 ஆண்டுகள் ஆகும். இப்பொழுது அணுவின் நுட்பமும் எண்ணிக்கையையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.(பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள், முனைவர் க.மங்கையர்க்கரசி ப.89)

இலக்கியங்களில் அணுவியல்

திருவள்ளுவமாலை, விநாயகர்அகவல், திருவாசகம், போற்றித்திருவகவல், திருச்சதகம், கோயில் திருப்பதிகம், திருமந்திரம், திருவிளையாடற்புராணம், மணிமேகலை, பாஞ்சாலி சபதம், தாயுமானவர் பாடல்கள் ஆகிய இலக்கியங்களில் அணுவியல் குறித்த செய்திகள் காணப்படுகின்றன.

வள்ளுவரின் திருக்குறளின் பெருமையைக் கூற வந்த திருவள்ளுவமாலையில் அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள் என்பர் ஔவையார். அணு குறித்த அறிவு அன்றே பழந்தமிழர்களுக்கு இருந்தது. பழங்காலத்தில் அணு என்பது மிகச் சிறிய துகள் என்ற பொருளில் வழங்கப்பட்டது. மணிமேகலையில் பிரபஞ்சத்திலே என்ன விபரீதம் நடந்தாலும், அது அணுத் துகள்களைப் பாதிக்காது. புதிதாக ஒரு அணு பிறப்பதும் கிடையாது. ஒரு அணுக்குள் இன்னொரு அணு புகுந்து ஒன்றாவதும் இல்லை. ஒன்றோடு ஒன்றாக ஒட்டி இருக்கின்ற இரு அணுக்களை இரண்டாகப் பிரிக்க முடியுமே என்று ஒரு அணுவை எந்த முயற்சியாலும் இரண்டாகப் பிளந்து விட முடியாது. அணுவை அதன் தன்மை கெடாமல் கூட உருமாற்றம் செய்ய முடியாது. அணுக்கள் உயர்வதும் தாழ்வதும் உலவுவதும் செய்ய வல்லன. அணுக்கள் ஒன்றோடு ஒன்றாக பல சேர்ந்து வளமுடன் பலமடைவதும், பின் பிரிந்து தனித்தனியாவதும் உண்டு. மணிமேகலை சமயக் கணக்கர் தம்திறம் கேட்ட காதை வேற்று இயல்பு ஏதும் விபரீதத்தால் ஆரம்பித்து உலாவும் தாமும் உயர்வதும் செய்யும் என்கிறது.

கம்பராமாயணத்தில் அணுவியல்

ஊர் தேடுபடலத்தில் சீதையைத் தேடி பிற இடங்களில் எல்லாம் செல்லும் அனுமன் நகர மாளிகைகளின் வாயில்களிலும், பலகணிகளிலும், மலர்களிலும், மலர்களின் தண்டுகளுக்குள்ளும் அனுமன் புகையைப் போலவும், காற்றைப் போலவும் புகுந்து தேடுவான். அந்தந்த இடத்தின் வழிக்கு ஏற்றபடி நுண்ணிய வடிவம், பெரிய வடிவம் மேற்கொண்ட அவனது நிலைமையை யாரால் சொல்ல முடியும்? மிகச் சிறிய உருவிலும் மிகப்பெரிய மேருவிலும் உட்புகுந்து ஒன்றாய் கலந்திருக்கும் திருமாலைப் போல அனுமானும் எல்லாப் பொருள்களுக்குள்ளும் தேடுவதற்காகச் செல்வான்.

“மணி கொள் வாயிலில் சாளரத் தலங்களில் மலரில்
கண்கொள் நாளத்தில் கால் எனப் புகைஎனக் கலக்கும்
நுணுகும் வீங்கும் மற்ற அவன் நிலை யாவரே நுவல்வர்
அணுவில் நேருவில் ஆழியான் எனச் செலும் அனுமன்”
(ஊர் தேடுப்படலம் 228)

இரணிய வதைப்படலத்தில் அணு

கம்பராமாயணத்தில் இரணிய வதைப்படலத்தில் இரணியனும், பிரகலாதனும் பேசுகின்ற போது, அணுவைப் பற்றிய கருத்து இடம் பெறுகிறது. நீ சொல்லும் நாராயணன் எங்கு இருக்கின்றான்? என்று இரணியன் பிரகலாதனைக் கேட்க, அதற்கு அவன்

“சாணிலும் உளன் ஓர் தன்மை அணுவினைச் சத கூறிட்ட
கோணிலும் உளன் மாமேருக் குன்றினும் உளன் இந்நின்ற
தூணினும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன் இத்தன்மை
காணுதி விரைவின் என்றான் நன்று எனக் கனகன் சொன்னான்”
(இரணியன் வதைப் படலம் 253)

என்று விடை கூறுகின்றான். இங்கு அணு என்பது ஒரு சிறிய பொருள் அந்நூலில் ஒரு பகுதி கோண் என்ற கருத்து குறிப்பிடப்பட்டுள்ளது. சதக்கூறிட்டு என்று எழுதிய போதே, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வர இருக்கும் அறிவியல்

அறிஞரோடு, இணைத்து குறிப்பிட்டுள்ளார். இரண்டரை கோடி அணுக்களைக் குண்டூசிக் கொண்டையில் அடக்கிடலாம் என்று விஞ்ஞான ஆராய்ச்சி கூறுகிறது.

நாகபாசப்படலத்தில் அணு

நாகபாசப்படலத்தில் இந்திரசித், இலட்சுமணன் மேல் நாகபாசத்தை விடுக்கவேண்டி ஆகாயத்திற்குச் சென்றான். நீலமணியின் நிறத்தைப் பெற்ற இந்திரசித் அப்போது முன்பு குறைவில்லாமல் செய்த தவத்தின் பயனாலும், அறச் செயலின் விளைவாலும், பிறவி முதலிய பிணிகளைப் போக்கும் பிரம்மன் முதலிய கடவுளரிடம் பெற்ற வரத்தின் வலிமையாலும், தனது அரக்கப்பிறப்பின் இயல்பாலும், செய்யும் மாயையுடன் கூடிய மந்திரச் செயலின் மகிமையாலும், அணுவைப் போன்ற ஒரு நுண்ணிய உடலை உடையவன் ஆனான்.

“தணிவு அறப்பண்டு செய்த தவத்தினானும் தருமத்தானும்
பிணி அறுப்பவனில் பெற்ற வரத்தினும் பிறப்பினானும்
மணி நிறத்து அரக்கன் செய்த மாய மந்திரத்தினனும்
அணு எனச் சிறியது ஆங்கு ஓர் ஆக்கையும் உடையன் ஆனான்”
(நாகபாசப்படலம் 2128)

இராவணன் சோகப்படலத்தில் அணு

இராவணன் சோகப்படலத்தில் இந்திரசித் இறந்த செய்தியைக் கேட்ட அவன் தாய் மண்டோதரி அலறி அடித்துக் கொண்டு வந்தாள். அவனுடைய இளமைப் பருவ வீரத்தைப் பற்றியெல்லாம் எடுத்துக் கூறிப் புலம்பினாள். சிவபெருமான் முதலான மூன்று தேவர்களுடனும், மூன்று உலகங்களோடும் ஏற்பட்ட பெரும்போர்கள் யாவற்றையும் வென்ற என் மகனா, மானுடரில் ஒருவன் கொல்ல இறந்து படுவான்?இது வியப்பு. இது பெரிய மேருமலை விசிறியினால் உண்டான மெல்லிய காற்றால் வேருடன் பெயர்த்து விழுவதும் உண்டு எனக் கூறுவதுபோல் ஆகும் என்று உரைத்தாள் மண்டோதரி.

“முக்கணான் முதலினோரை உலகொரு மூன்றி னோடும்
புக்கபோர் எல்லாம் வென்று நின்ற என் புதல்வன் போலாம்
மக்களில் ஒருவன் கொல்ல மாள்பவன்? வானமேரு
உக்கிட அணு ஒன்று கூடி உதைத்து போலும் அம்மா”
(இராவணன் சோகப்படலம் 3176)

(அணுவின் ஆற்றலையும் அழிக்கும் தன்மையையும் குறிக்கும் விதமாக, மக்களில் ஒருவன் சொல்ல மாள்பவன் வான மேடு உக்கிட அணுவொன்று ஓடி உதைத்தது போலும் அம்மா) என்ற வரிகளில் சிறிய அணு மேரு மலையைக் கூட தகர்த்தெறிந்து விடும் ஆற்றல் வாய்ந்தது என்கின்றார்.

பிரம்மாத்திரம்

பிரம்மாத்திரம் என்பது இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வீக ஆயுதத்தை ஏவுவதற்கான ஒரு மந்திரமாகும்.இது அணு ஆயுதத்திற்குச் சமமான ஆற்றல் கொண்டது. பிரம்மாத்திரம் பிரம்மாவின் அத்திரமாகும். இலக்கை மொத்தமாக அழிக்கும் வலிமை கொண்டது. வேறு எத்தகைய அத்திரத்தையும் எதிர்க்கும் வலிமை கொண்டது.தேவர்களையும் அழிக்கும் வலிமை கொண்டது. இது அழிவைத்தரவல்லது.

பிரம்மாத்திரத்தின் தன்மை

இது ஒரு மந்திரத்தால் இயக்கப்படும். அணு ஆயுதத்தைப் போன்ற சக்தியைக் கொண்ட ஆயுதம் ஆகும்.இதை ஒரு எளிய அம்பு அல்லது புல் போன்ற சாதாரண பொருளின் மூலமும் ஏவ முடியும். மந்திரத்தால் அதற்கு சக்தியூட்டலாம்.இதை இயக்கும்போது, பெரும் தீப்பிழம்புகள் தோன்றும். நிலத்தில் வெடிப்புகள் ஏற்படும். கடுமையான வறட்சி உண்டாகும்.

பயன்பாடுகளும் விளைவுகளும்

இதைக் கடைசி ஆயுதமாக மட்டுமேப் பயன்படுத்தவேண்டும். ஏனெனில் இது எதிரிகளை அழிப்பதுடன் பெரிய பகுதியையும் அழிக்கும் திறன் கொண்டது. இரண்டு பிரம்மாத்திரம் மோதினால் அது பிரளயத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

கம்பராமாயணத்தில் பிரம்மாத்திரம்

இலட்சுமணன், இந்திரசித்தனை பிரம்மாத்திரத்தால் கொல்ல முயன்றபோது, இராமன் அதைத் தடுத்தான்.ஏனெனில் அது மூன்று உலகத்தையும் அழிக்கும் ஆற்றல் பெற்றது என்பதால் அதை ஏவ வேண்டாம் என்று அறிவுறுத்தினான்.நல்லறிவு உள்ள தம்பி அதனை ஏற்று, பிரம்மாத்திரம் செலுத்துவதை நிறுத்தினான்.

“ஆன்றவன் அது பகர்தலும் அறநிலை வழாதாய்
ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கில் இவ் உலகம்
மூன்றையும் சுடும் ஒருவனால் முடிகலது என்றான்
சான்றவன் அது தவிர்ந்தனன் உணர்வுடைத்தம்பி”
(பிரம்மாத்திரப்படலம் 2462)

அத்திரங்கள்

அத்திரங்கள் என்பவை அம்பு. தர்ப்பைப் பொருட்களின் மேல் மந்திரங்களால் உறுவேற்றப்பட்ட மிகவும் வலிமை வாய்ந்தவை ஆகும்.அந்த அத்திரங்களுக்கு அம்புகள் தேவையில்லை. ஒரு தர்ப்பைப் புல்கூடஅதைச் செய்யும். அந்த அத்திரத்திற்கு உண்டான மந்திரத்தை செபித்து இலக்கை நோக்கி வீசினால் கூட புல் அத்திரம் தனது பணியைச் செய்து விடும்.

கம்பராமாயணத்தில் தர்ப்பைப் புல்

காம எண்ணத்தில் இந்திரன் மகன் செயந்தன் காகம் வடிவில் சீதையின் மார்பைக் கொத்தினான். இதைக் கண்ட இராமபிரான், கீழே இருந்த ஒரு புல்லை எடுத்து, பிரம்மாத்திரமாக ஏவினான். அந்தக் கணை அவனைத் துரத்தியது. எல்லா லோகங்களுக்கும் சென்ற அந்தக் காகம் எங்கும் தன்னைக் காப்பவர் இல்லை என்பதை அறிந்து, இராமபிரானிடமே அடைக்கலமானது. அவன் செய்த தவற்றிற்காக அவனுடைய ஒரு கண்ணைக் குத்தியது.(காட்சிப்படலம் 356)

இந்திரசித், அனுமன் மேல் பிரம்மாத்திரம் ஏவுதல்

அனுமன் அசோகவனம் புகுந்து அங்கிருந்த வீரர்களை மட்டுமல்லாமல் கிங்கரர்கள், சம்புமாலி,பஞ்சசேனாபதியர் அக்ககுமரன் அனைவரையும் வதம் செய்ததால், அங்கு வந்த இந்திரசித் தானும் சண்டையிட்டு இறுதியாக பிரம்மாத்திரத்தை அனுமன் மேல் ஏவினான். மந்திரத்திற்குக் கட்டுப்பட்ட அனுமனை, இந்திரசித் கைது செய்து இராவணன் முன் கொண்டு வந்து நிறுத்தினான்.

இந்திரசித்- இராவணன்- பிரம்மாத்திரம்

இந்திரசித், இராவணனிடம் பிரம்மாத்திரம் செலுத்தி இராம லட்சுமணர்களைக் கொல்லப் போவதாகவும், ஆனால் அதை அவர்கள் அறியாதபடி, மறைந்து நின்று அவர்கள் மேல் செலுத்துவதே நாம் வெற்றிபெறும் வழி என்று கூறுகிறான். அவர்கள் மீது பிரம்மாத்திரம் செலுத்துகிறேன் என்பதை அவர்கள் அறிந்தால், அதே பிரம்மாத்திரம் செலுத்தி எனது அம்பைத் தடுத்து விடுவார்கள். என்னை நேரில் பார்ப்பார்களேயானால், அந்த தவத்தினர் என்னைக் கொல்லவும் வல்லவரே. இடைப்பட்ட நேரத்தில் ஒன்றும் ஆகப்போவது இல்லை. நல்ல யாகத்தைச் செய்து, அவர் தம் வாழ்க்கையை இன்றே ஒரு கணப் பொழுதில் முடித்து விடுவேன் என்று இந்திரசித் கூறினார்.

“தொடுக்கின்றேன் என்பது உணர்வரேல் அப்படை தொடுத்தே
தடுப்பர் காண்பரேல் கொல்லவும் வள்ளல். அத்தவத்தோர்
இடுக்கு ஒன்று ஆகின்றது இல்லை நல்வேள்வியை இயற்றி
முடிப்பேன் இன்று வாழ்வை ஓர் கணத்து என மொழிந்தான்”
(பிரம்மாத்திரப் படலம் 2474)

இந்திரசித் பிரம்மாத்திரம் விடும் பொருட்டு கேள்வி செய்தல்

வேள்வி செய்வதற்காக அரக்கப்பிராமணர் யாகத்துக்குத் தேவையான மூலக்கருவிகளை முறையாகக் கொண்டு வந்தனர். இந்திரசித் அம்புகளினால் பெரிய ஹோம விறகுகளைச் (சமித்துகளை) அமைத்தான். அதன் தீயிலே பெரிய தும்பை மலர்களைத் தூவினான். பின்பு கரிய எள்ளினைப் போட்டான். கொம்போடும் பற்களோடும் கூடிய கருநிறம் பெற்ற வெள்ளாட்டினது மிகுதியான உதிரத்தையும், வேகவைக்க வேண்டிய வெள்ளிய தசைகளையும் முறையாக இட்டு, சிறந்த நெய்யினால் ஹோமம் செய்தான்.

வெற்றி பெறுவதற்கான நிமித்தங்கள்

வேள்வித்தீ நறுமணம் பொருந்தி வலப்புறமாக சுழன்று வந்து நிமிர்ந்தது. நன்மையைத் தருவனவாகிய சிறந்த குறிப்பினை அது முறையாக உணர்த்தியது. அதனால் அரக்கர் குலத்தில் பிறந்து தோன்றுகின்ற கொடுமைகளை உடையவனாய் இந்திரசித் போர்க்களத்திலிருந்து தனக்கு வெற்றி தோன்றும் என்பதை முறைமையினால் உணர்ந்து கொண்டு பிரம்மாத்திரத்தை செலுத்துவதற்காக வானத்தே உயர்ந்து சென்றான்.

பிரம்மாத்திரம் செலுத்தினான். அத்திரத்தைக் கண் இமைப்பதற்கு முன் இந்திரசித் செலுத்தினான். பொன்மயமான பெரிய மலையிலே குருவிக்கூட்டங்கள் வந்து மொய்ப்பதைப் போல சொல்லும் தரம் அல்லாதவனவான ஒளி வீசுகின்ற அம்புகள் அந்த இலட்சுமணன் உடலில் பாய்ந்தன.

கோடி கோடி நூறாயிரம் கொடிய அம்புக் கூட்டங்கள் உடலை முழுவதும் மூடிச் சூழ்ந்தனவாய் மூழ்க, இடையில் செய்வது இன்னது என்று உணராத இலட்சுமணன், தனது அறிவு ஒடுங்கிப் போக, வலிய பெரிய யானை செயல் இழந்து படுக்கையில் அடங்கினாற் போலக் களைத்து விட்டான்.

“இன்ன காலையில் இலக்குவன் மேனி மேல் எய்தான்
முன்னை நான்முகன் படைக்கலம் இமைப்பதன் முன்னம்
பொன்னின் மால் வரைக் குரீஇ இனம் மொய்ப்பது போலப்
பன்னல் ஆம் தரம் அல்லன சுடர்கணை பாய்ந்த”
(பிரம்மாத்திரப் படலம் 2552)

களம் கண்ட வீடணன்

மருத்துமலைப் படலத்தில் வீடணன் அந்த இடத்தைப் பார்த்தான்.இந்த உலகங்கள் அனைத்தையும் தானே உண்டாகுமாறு நோன்பு மேற்கொண்ட பிரம்மனது அத்திரத்தால் அவனது சாபத்தால் செத்தவர்களைப் போல, வானர வீரர்கள் அனைவரும் உடல் முழுவதும் தாக்கப் பெற்றவராய், இறந்தவர் போலக் கிடைப்பதைக் கண்டான். விடத்தைத் தானே மிகுதியாகப் பருகியவனைப் போல சிறிது நேரம் மயங்கி நின்று பிறகு உணர்வு நீங்கப் பெற்றான்.(மருத்துமலைப்படலம் 2646)

மருந்துமலையைக் கொண்டு வந்தால் இறந்தவர்கள் அனைவரும் உயிர்த்தெழுவர் என்று சாம்பவான் கூறக் கேட்ட அனுமன் சென்று மலையைத் தூக்கிவர, அந்த சஞ்சீவினியால் மாண்ட அனைவரும் மீண்டனர்.

பிரம்மாத்திரம் ஒரு பெரும் அழிவு சக்தியாகக் கொண்ட தெய்வீக அத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.இதைப் போரில் பயன்படுத்தினால் விளைவுகள் பெரிதாகவே இருக்கும் என்று கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

முடிவுரை

அணுவினைப் பற்றி கூறும் இயல் அணுவியலாகும். இயற்பியலின் ஒரு பிரிவாக விளங்குகிறது. ஒரு பொருளைப் பிரித்துக் கொண்டேப் போனால் பிரிக்க முடியாத நிற்கும் பொருளே அடிப்படையாகும். அணு என்பது மிகச் சிறிய மூலக்கூறு. கண்ணால் காண இயலாத அணுத்துகள். அணுவைப் பிரிக்க முடியாது என்பது தொடக்க கால அறிவியலின் கூற்றாகும். பின்பு சைக்ளோட்ரான் உதவியால் அணுவைப் பிளக்க முடியும் என்று கண்டறிந்தனர்.அதற்குப் பல்லாண்டுகளுக்கு முன்பே தமிழ் இலக்கியங்களில் அணு குறித்தப் பதிவுகள் காணப்படுகின்றன.திருவள்ளுவமாலை, விநாயகர்அகவல், திருவாசகம், போற்றித்திருவகவல், திருச்சதகம், கோயில் திருப்பதிகம், திருமந்திரம், திருவிளையாடற்புராணம், மணிமேகலை, பாஞ்சாலி சபதம், தாயுமானவர் பாடல்கள் ஆகிய இலக்கியங்களில் அணுவியல் குறித்த செய்திகள் காணப்படுகின்றன. கம்பராமாயணத்தில் அனுமன் இலங்கைக்குள் செல்லும் போது பெரிய உருவத்திலும், சிறிய உருவத்திலும் சென்றதையும், பிரகலாதன் இறைவன் எல்லா அணுக்களிலும் இருக்கிறான் என்று கூறும் போதும், இந்திரசித் இறந்தபோது அவன் தாய் மண்டோதரி புலம்பலின் வாயிலாகவும் அணு குறித்த செய்திகள் கூறப்பட்டுள்ளன. கம்பராமாயணத்திலும் சில இடங்களில் அணு குறித்த செய்திகளை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

கம்பராமாயணத்தில் இந்திரசித் பிரம்மாத்திரத்தை அனுமன்மேல் ஏவி அவனைக் கைது செய்தான். இந்திரசித்தை வீழ்த்த எண்ணிய இலட்சுமணன் பிரம்மாத்திரம் ஏவ வேண்டி, இராமனிடம் அனுமதி கேட்டான். இராமன் தடுத்தான். ஏனெனில் அது மூன்று உலகங்களையும் அழிக்கும் தன்மை கொண்டது. அண்ணன் பேச்சைக் கேட்டு தம்பி பிரம்மாத்திரம் செலுத்த இருந்ததை விட்டுவிட்டான். ஆனால் இந்திரசித், இராவணனிடம் தான் பிரம்மாத்திரம் ஏவி இராம லக்ஷ்மணர்களைக் கொல்ல எண்ணியதைக் கூற, தந்தையும் சம்மதித்தான். தேவையான யாகங்களை முறையாகச் செய்து வந்து, இலட்சுமணன் மற்றும் வானர வீரர்கள் மேல் ஏவி, அனைவரையும் மாளச் செய்தான். பிரம்மாத்திரம் ஒரு பெரும் அழிவு சக்தியாகக் கொண்ட தெய்வீக அத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.இதைப் போரில் பயன்படுத்தினால் விளைவுகள் பெரிதாகவே இருக்கும் என்று கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.கம்பராமாயணத்தில் அணுவியல், பிரம்மாத்திரம் மற்றும் அதன் தன்மைக் குறித்தும் நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

துணைநூற்பட்டியல்

1.சுப்பிரமணியம்.வ.த.இராம.தண்டியலங்காரம்,முல்லைநிலையம்,சென்னை, 2019.
2.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
3.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம், சென்னை,2016.
4.நடராசன்.பி.ரா. தண்டியலங்காரம்,சாரதா பதிப்பகம், சென்னை,2012.
5.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
6. மங்கையர்க்கரசி.க, பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள், லாவண்யாப் பதிப்பகம், சென்னை, 2018.

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்