தமிழக எழுத்தாளர் ஶ்ரீஜா வெங்கடேஷ் 'பாண்டிய நெடுங்காவியம்' என்னுமொரு சரித்திர நாவலை எழுதியிருக்கின்றார். மூன்று பாகங்களை உள்ளடக்கிய இந்நாவலின் மூன்று பாகங்களும் வானதி பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. முதற் பதிப்பு வெளியான ஆண்டு 2015. இந்நூலின் பின்னட்டையிலும், உள்ளே விமர்சகர் ஒருவரின் திறனாய்விலும் தமிழில் சரித்திர நாவல் எழுதிய முதலாவது பெண் எழுத்தாளர் ஶ்ரீஜா வெங்கடேஷ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையா?
2012ற்கு முன்பே இவர் சரித்திர நாவல் அல்லது நாவல் எழுதியிருந்தால் அக்கூற்றினை ஏற்றுக்கொள்ளலாம். அப்படி நடந்த மாதிரித்தெரியவில்லை. உண்மையில் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் சிவநயனி முகுந்தன் தற்போது கனடாவில் வசிக்கின்றார். இவர் ஒரு 626 பக்கங்களைக் கொண்ட சரித்திர நாவலொன்றை எழுதியிருக்கின்றார். இவர் கனடாவில் 'வேல்விழியாள் மறவன்' என்னுமொரு சரித்திர நாவலை எழுதி வெளியிட்டுள்ளார். வெளிவந்த ஆண்டு 2012. வெளியிட்ட பதிப்பகம் - 'வித்தக விருட்சம்'. இதன் படி தமிழில் சரித்திர நாவல் எழுதிய பெண் எழுத்தாளர் ஶ்ரீஜா வெங்கடேஷ் அல்லர். பின் யார்? எழுத்தாளர் சிவநயனி முகுந்தனே.
சிவநயனி முகுந்தனின் இந்த நாவலின் மறு பதிப்பு தமிழகத்தில் கெளரா குழுமத்தின் சீதை பதிப்பக வெளியீடாக , இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. கனடாவில் வெளியான நாவல் தனி நூலாக வெளியானது. அதே அட்டைப்படத்துடன் சீதை பதிப்பகம், தமிழகத்தில் , நாவலை இரு பாகங்களாக வெளியிட்டது. பின்னர் புதிய அட்டைப்படத்துடனும் இரு பாகங்களாக வெளியிட்டுள்ளது.
- நாவலாசிரியை சிவநயனி முகுந்தன் -
இந்த நாவல் உறையூரில் ஆட்சி செய்த கரிகாலச் சோழன் இலங்கைக்குப் படையெடுத்து, அநுராதபுரத்தில் ஆட்சி செய்து மன்னன் வங்கநாசிகதிஸ்ஸனுடன் போரிட்டு, 17,000 வீரர்களையும் சிறைப்பிடித்துச் சென்றான் என்னுன் வரலாற்றுத்தகவலை அடிப்படையாகக்கொண்டு பின்னப்பட்ட சரித்திர நாவலிது. அக்காலகட்டத்தில் மாதோட்டம், வன்னி ஆகிய இடங்களில் தமிழ் மன்னர் ஆண்டனர் என்றும் நாவல் தெரிவிக்கின்றது. கரிகாலனின் சேனாதிபதி அநபாயன் , மாதோட்ட நகரின் இளவரசி பூங்கோதை இவர்களுக்கிடையிலான காதலை வெளிப்படுத்தும் நாவலின் முடிவில் அவனும் பூங்கோதையும் இணைகின்றார்கள். வேல்விழியாளான பூங்கோதை, மறவனான அநபாயனுடன் இணைந்து கொள்கின்றாள். கூடவே அவனையே ஒருதலைப்பட்சமாகக் காதலித்து வந்த அவனது முறைப்பெண்ணான தமிழரசியையும் பூங்கோதை தம்முடன் இணைத்து ,இருவரும் அநபாயனுடன் சேர்ந்து வாழ்கின்றார்கள்.
நாவலாசிரியர் கல்கியின் பாதிப்பால் எழுத்தாளர்கள் பலர் சரித்திர நாவல்கள் எழுதினார்கள். ஆனால் தனித்துவ மொழி நடையும், சிருங்கார ரசமும் மிக்க சாண்டில்யனின் நடையினால் பாதிக்கப்பட்டுச் சரித்திர நாவல்கள் எழுதிய முதலாவது நாவலாசிரியராகவும் சிவநயனி முகுந்தனைப் பார்க்கின்றேன். சாண்டில்யனின் சிருங்கார இரச வர்ணனைகளை இவரது நாவலில் காணாவிட்டாலும், மொழிநடை, சம்பவ விபரிப்பு, அத்தியாய முடிவுகள், கதைப்பின்னல், உரையாடல்கள் இவற்றில் சாண்டில்யனின் பாதிப்பை நன்கு காண முடிகின்றது. அதுவே சுவைக்கவும் செய்கின்றது. சாண்டியனின் 'கடல்புறா'வின் பாதிப்பையும் இந்நாவலில் நன்கு காண முடிகின்றது. கடல் புறாவில் அநபாயச் சோழன், அவனது படைத்தளபதி கருணாகரத் தொண்டைமானைப் போல் இந்நாவலில் கரிகாலச் சோழன், அவனது படைத்தளபதி அநபாயன். கடல்புறாவில் காஞ்சனாதேவி , மஞ்சள் அழகியைப் போல் இந்நாவலில் பூங்கோதை, தமிழரசி. குமுதம் சஞ்சிகைக்கு மட்டும் இந்நாவல் கிடைத்திருந்தால், சாண்டில்யனின் மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட இடைவெளியை நீக்க 'சாண்டில்யனி' என்னும் பெயரில் இந்நாவலைத் தொடராக , இரு பாகங்களாக வெளியிட்டிருக்கும். சாண்டில்யனின் மொழி நடையை உள் வாங்கி அவ்விதமே எழுதுவதென்பது அவ்வளவு இலகுவானதொன்றல்ல.
இச்சமயத்தில் இன்னுமொரு விடயம் நினைவுக்கு வருகின்றது. மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மீராவின் 'எனக்கும் உனக்கும் ஒரே ஊர். வாசுதேவ நல்லூர்' என்பதையே முதலாவது தமிழில் வெளிவந்த அறிவியற் கவிதையாகக் குறிப்பிடுவார். ஆனால் , ஐம்பதுகளிலேயே இலங்கையில் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) 'எதிர்காலச் சித்தன் பாடல்' என்னுமொரு நீண்ட கவிதையினை எழுதியிருக்கின்றார். 'தேன்மொழி' சஞ்சிகையில் வெளியான கவிதை. கவிஞர் முருகையன் அக்கவிதையைப் போல் தமிழகத்தில் கூட யாரும் எழுதியிருக்கவில்லையென்று கூறியிருக்கின்றார். நிகழ்கால மனிட்ய்ஹஅ.ந.கந்தசாமியின் 'எதிர்காலச் சித்தன்' கவிதையினையே தமிழின் முதலாவது அறிவியற் கவிதையாக நான் கருதுகின்றேன். சுஜாதாவுக்கும் அ.ந.க.வின் மேற்படி கவிதை பற்றி தெரிந்திருந்தால் அவரும் அவ்விதமே கூறியிருப்பார். மேற்படி கவிதை நிகழ்கால மனிதன் எதிர்கால மனிதன் ஒருவனைச் சந்தித்து, உரையாடித் திரும்புவதைப் பற்றி விபரிக்கிறது. இதனை கவிதையாக வெளிவந்த அறிவியற் புனைவாகவும் கருதலாம். இக்கவிதையை பதிவுகள்.காம் அமேசன் - கிண்டில் மின்பதிப்பாக வெளியிட்ட 'எதிர்காலச் சித்தன் பாடல்' கவிதைத்தொகுப்பில் வாசிக்கலாம். தொகுப்பை நூலகம் தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணைப்பு - https://noolaham.net/project/1207/120622/120622.pdf

* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









