- கட்டுரையாசிரியர்: சீவகசிந்தாமணியில் அகப்பொருள் மரபுமாற்றங்கள்! - முனைவா் பா.பொன்னி,,இணைப்பேராசிாியா் மற்றும் துறைத்தலைவா், இளங்கலைத்தமிழ்த்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி( தன்னாட்சி ), சிவகாசி -
இலக்கியங்கள் அவை தோன்றும் காலத்தின் பின்புலத்திற்கு ஏற்ற மாற்றங்களைத் தன்னுள் ஏற்கும் தன்மை உடையவை. ஆகவே இலக்கியங்கள் வரலாறுக்கு அடிப்படையாகவும், வரலாற்றை அறிவதற்கு ஆதாரமாகவும் அமைகின்றன. குறிப்பிட்ட காலச்சூழலில் தோன்றும் இலக்கியங்கள் அவை காலத்திய சூழலுக்கு ஏற்ப அமைகின்றன. இலக்கியங்களில் ஒரு காலத்தில் மரபாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருண்மைகள் பின்னா் வரும் காலத்தில் மாற்றங்களைப் பெறுவதும் கூட மரபாகவே அமைகின்றன. அவ்வகையில் சீவகசிந்தாமணியில் மாற்றம் பெற்ற அகப்பொருள் மரபுகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
மரபு :
முன்னோா்கள் மொழிந்த பொருளினை அவ்வாறே பின்பற்றுவதை மரபு என்று சுட்டுவா். மரபு என்பதற்குக் கழகத் தமிழ் அகராதி “பழமை, முறைமை, வழக்குமுறை, இலக்கணம், இயல்பு”1 ( கழகத் தமிழ் அகராதி, ப.742 ) என்று பல பொருள் தருகிறது. தமிழ் மொழி அகராதியானது“குணம்,பழமை,முறைமை” (தமிழ் மொழி அகராதி, ப. 126 ) எனச் சுட்டுகிறது.
மேலும்,“மரபு என்பது இலக்கணம் மட்டும் அல்ல. மரபு என்பது இலக்கியத்திற்கு மட்டும் அல்ல. மரபு என்பது முந்தைய தலைமுறை சோ்த்து வைத்திருக்கும் அனுபவம், அறிவு, முடிவு ஆகிய அனைத்தும் சோ்ந்தது. குலநீட்சியில் மானுட வா்க்கம் தன் அறிவுத் தோட்டத்தில் அனுபவத்திளைப்பில் உணா்ந்து தெளிந்து உருவாக்கிய முடிவுகள். அவை வருங்காலத்திற்கென்று இலக்கியமாக, சமயமாக, அறநெறியாக, பிற அறிவுத்துறைகளாக முந்தைய தலைமுறை விட்டுச் சென்ற அனுபவத் திரட்டு தான் மரபு. அறிவுத் தோட்டத்தில் கிடைத்த செல்வம் தான் மரபு” ( பாலா, புதுக்கவிதை ஒரு பாா்வை, பக்.22-23 ) என்பா். இவற்றின் வாயிலாக முன்னோா்கள் வகுத்துள்ள வரைமுறைப்படி அமைவதே மரபு எனலாம்.
மரபு மாற்றங்கள் :
காலங்கள் மாறும் போது அக்காலங்களுக்கு ஏற்ற நிலையில் மாற்றங்களும் ஏற்படுவது தவிா்க்க இயலாதது எனலாம். “ஒவ்வொரு காலத்திற்கும் அந்தந்தக் கால வாழ்க்கை முறைகளுக்கேற்ப புதிய அனுபவங்கள் கிட்டுகின்றன. புதிய வாழ்க்கை அதன் தேவைக்கிசையாத, அறிவுக்கிசையாத முந்தைய அறிவு அனுபவங்களைப் புறக்கணித்து விடுகிறது. அப்போது பழைய மரபு மறைந்து புதிய மரபு ஒன்று தழைக்கிறது” ( பாலா, புதுக்கவிதை ஒரு பாா்வை, ப.406 ) என்பா். இதன் வாயிலாக மனிதா்களின் வாழ்க்கை நிலையில் அனைத்து நிலைகளிலும் மாற்றங்கள் ஏற்படுவது தவிா்க்க இயலாதது எனக் கருத இடமுள்ளது. அவ்வகையில் இலக்கியங்களிலும் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானது எனலாம்.
சீவக சிந்தாமணி காப்பியத்தைப் படைத்தவர் திருத்தக்க தேவர். சோழர் குலத்தில் அரச மரபைச் சார்ந்தவர். சமண சமயத்தைச் சார்ந்தவர். தீபங்குடியில் பிறந்தவர். இவருடைய காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு ஆகும். சமணத் துறவிகள் அறக்கருத்துகளை மட்டும் அன்றி இல்லறச் சுவையையும் பாட முடியும் என்பதனை நிறுவும் பொருட்டு இந்நூலை இயற்றினார். அவா் சீவகசிந்தாமணியில் படைத்துக் காட்டியிருக்கும் மரபு மாற்றங்களை, கூற்றுநிலை, மடலேறுதல், அறத்தொடு நிற்றல் ஆகிய மூன்று நிலைகளில் ஆராய இயலுகிறது.
கூற்றுநிலை
காதல் என்பது இரு உள்ளத்து உணர்வின் வெளிப்படாகும். அத்தகைய உணர்வினைத் தலைவன் மட்டுமே வெளிப்படையாக வெளிப்படுத்தல் வேண்டும் தலைவி குறிப்பால் மட்டுமே வெளிக்காட்ட வேண்டும் என்பது போன்ற மரபுகளை இலக்கண நூல்கள் வகுத்துள்ளன. ஆனால் சீவகசிந்தாமணியில்,
தலைவனின் அழகைக் கண்டு வியத்தல், தலைவி தன் வேட்கையைக் கூறுதல், தலைவி தலைவனை தவம் செய்து அடைவேன் எனல் போன்ற நிலைகளில் தலைவியின் கூற்று நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதனைக் காணமுடிகிறது.
தலைவிக்கு ஐயம் ஏற்படல்
தலைவன், தலைவி இருவரும் தங்களுடைய காதல் உணர்வை பரிமாறிக் கொள்ளும் பொருட்டு நோக்குவர். அங்ஙனம் நோக்கும் போது, தலைவியின் அழகினைக் கண்டு தலைவனுக்குத் தலைவி வானுலகப் பெண்ணா? பூலோகப் பெண்ணா? என்ற ஐயம் தோன்றும். இத்தகைய ஐயம் தலைவனுக்கு மட்டுமே தோன்றும் என்பர் இலக்கணநூலார்.
"ஐயக்கிளவி ஆடுஊவிற் குரித்தே" ( தொல்.,பொருள்.,நூ.44 )
என்ற நூற்பா வழி களவு சார்ந்த ஐயமானது ஆண்மகனுக்கு மட்டுமே தோன்றும் என்ற தொல்காப்பியரின் கருத்தை அறியமுடிகின்றது. ஆனால் சீவகசிந்தாமணியில் சீவகனைக் கண்ணுற்ற பதுமை அவனின் அழகினைக் கண்டு மயங்கி மன்மதனா? முருகனா? என ஐயம் கொள்கிறாள். இதனை,
''வணங்கு நோன்சிலை வார்கணைக் காமனோ?
மணம்கொள் பூமிசை மைவரை மைந்தனோ?
நிணந்தென் நெஞ்சம் நிறைகொண்ட கள்வனை
அணங்கு காள்! அறி யேன்உரை யீர்களே!" (சீவ.சி.,பதுமையாா் இலம்பகம்,ப-1311)
என்ற பாடலின் வழி அறியமுடிகின்றது.
தலைவனின் அழகைக் கண்டு வியத்தல்
தலைவன், தலைவி இருவரும் நோக்கிய வழி அழகைக் கண்டு வியத்தல், ஐயம் கொள்ளல், காதலை வெளிப்படையாகக் கூறல் போன்றவை தலைவனுக்கு மட்டுமே உரியது என்று இலக்கண நூலார் வகுத்துள்ளனர் இவை காலங்காலமாக பின்பற்றப் பட்டு வரும் மரபு எனலாம். தலைவன் மட்டுமே தலைவியின் அழகினைக் கண்டு அவளது அங்க உறுப்புகளை வருணிக்கலாம். தலைவி தலைவனைக் கண்டு களவு மேற்கொள்ளலாம். ஆனால் அழகிகைக் கண்டு வியத்தல் கூடாது என்பர். ஆனால் சீவகசிந்தாமணியில் சீவகனைக் கண்ட காந்தருவதத்தை அவன் அழகினை வியந்துரைக்கிறாள். இதனை,
''கண்எனும் வலையின் உள்ளான் வையகப் பட்டி ருந்தான்
பெண்எனும் உழலை பாயும் பெருவனப்பு உடைய நம்பி
எண்ணின் மற்று யாவ னாங்கொல் என்இதில் படுத்த ஏந்தல்
ஒண்ணிற உருவச் செந்நீ உருவுகொண் டனைய வேலான்"
(சீவ.சி.,காந்தருவதத்தையாா் இலம்பகம்,பா- 713)
என்ற பாடலின் வழி காணலாகின்றது.
தலைவி தன் வேட்கையை வெளிப்படையாகக் கூறுதல்
தலைவி தன் காதலை வெளிப்படையாகக் கூறும் மரபு தொல்காப்பியத்தில் இல்லை. அங்கு நாணத்திற்கே முதலிடம் தரப்படுகிறது. தொல்காப்பியா்,
“காமத் திணையில் கண்ணின்று வரூஉம்
நாணும் மடனும் பெண்மைய ஆதலின்
குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை
நெறிப்பட வாரா அவள் வயினான” ( தொல்.,களவியல்,நூ.17 )
என்றும்,
“சொல்எதிர் மொழிதல் அருமைத்து ஆதலின்
அல்ல கூற்றுமொழி அவள் வயினான” (தொல்., களவியல்,நூ.19 )
என்றும் இலக்கணம் சுட்டுகிறார். சீவகசிந்தாமணியில் காலமாற்றத்தால் மரபினை மீறிய மாற்றமாகத் தலைவி தான் காதல் உற்ற செய்தியை வெளிப்படையாகத் தெரிவித்த பாங்கைக் காணலாகிறது.
சீவகன் மீது காதலுற்ற கனகமாலை தான் காதலுற்ற செய்தியைத் தோழியிடம் கூறி சீவகனின் பதிலை அறிந்து வா என்கிறாள்.
"என்னையுள் ளம்பிணித்து என்னலங் கவர்ந்தஈர்ந் தாரினான்
தன்னையானும் பிணிப்பேன் எனத்தன் மணிச் செப்பினுள்
மன்னுமா லைகொடுத் தவனுக்குய்த் தீயெனத் தொழுது கொண்டு
அன்னம்என்ன ஒதுங்கிச் சிலம்பு அரற்றச் சென்று அணுகினாள்"
(சீவ.சி.,கனகமாலையாா் இலம்பகம்,பா - 1667)
என்ற பாடலின்வழி கனகமாலை வெளிப்படையாகத் தான் காதலுற்ற செய்தியைக் கூறுவதைக் காணமுடிகிறது.
தோழி, தலைவி தலைவன் மேல் காதல் கொண்டதனைத் தலைவியின் தோற்றம், செயலில் ஏற்படும் மாற்றம் போன்றவற்றை வைத்தே குறிப்பால் உணர்வாள். தோழி தலைவனைப் பற்றிக் குறையாகப் பேசும்போதோ அல்லது வேற்று வரைவின் போது மட்டுமோ தலைவி தன் மனதில் உள்ளதைத் தோழியிடம் கூறுவாள் என்று இலக்கணத்தார் குறிப்பிடுவர். ஆனால் கனகமாலையோ மரபினை மீறி தானாகத் தன் தோழியிடம் தன் காதலைக் கூறி அவளைத் தூது அனுப்புவதைக் காணலாகின்றது.
தலைவி தலைவனை தவம் செய்து அடைவேன் எனல்
தலைவன், தலைவி மேற்கொள்ளும் களவு வாழ்வில் தொடக்கம் முதல் இறுதிவரை இலக்கண நூலார்கள் சில குறிப்பிட்ட வரன்முறைகள் வகுத்துள்ளனர். அதிலும் தலைவனை விட தலைவிக்கே வரன்முறைகள் அதிகம் எனலாம். தான் கண்டு களவு கொண்ட தன்மையை வெளிப்படையாகக் கூறுதல் கூடாது. தலைவனும், தோழியும் குறிப்பாலே தலைவி கொண்ட காதலை உணர்வர் எனலாம். காப்பியங்களில் இத்தகைய மரபுகளை மீறி தலைவி தலைவன் மேல் கொண்ட காதலுணர்வு மீற தலைவனை தவம் செய்தாவது அடைவேன் இல்லையெனில் மரணத்தை ஏற்றுக் கொள்வேனே தவிர பிறிதொரு நபரை மணக்க மாட்டேன் என்று தனக்குரிய வரன்முறைகளை மீறிக் குறிப்பிடுவதனைக் காணமுடிகிறது.
சீவகசிந்தாமணியில் குணமாலை தன்னுடைய காதலைச் சொல்லி கிளியைத் ததூதாக அனுப்புகிறாள். அக்கிளி நல்லதொரு பதில் கூறவில்லையெனில் தவம்செய்து சீவகனை அடைவேன் இல்லையெனில் உயிர்வாழேன் என்று கூறுகிறாள்.
"செந்தார்ப் பசுங்கிளியார் சென்றார்க்கோர் இன்னுரைதான்
தந்தாரேல் தந்தார் என் இன்னுயிர் தாம் தாராரேல்
அந்தோ குணமாலைக்கு ஆகாது என்று உலகம்
நொந்தாங்கு அழமுயன்று நோற்றானும் எய்துவனே''
(சீவ.சி.கு.இ.பா.1036)
என்ற பாடலின் மூலம் தலைவி தனக்குரைத்த வரம்பினைமீறி வெளிப்படையாக அனைவரும் அறியும் பொருட்டு தலைவனை அடைவேன் என்று கூறுவதனைக் காணலாகின்றது.
மடலேறுதல்
தலைவி மீது காதலுற்ற தலைவன் அவளைத் திருமணம் முடிக்கும் பொருட்டு பனைக் குறுத்தோலையால் செய்த குதிரைமீது தலைவியின் உருவப் படத்தை வரைந்து வீதியில் உலாவருவான் இங்ஙனம் வரும்பொழுது தலைவன் காதலுற்ற செய்தியை ஊரார் தெரிந்து கொள்வர் தலைவியைப் பிறர் மணம்முடிக்கவும் மறுப்பர். இதன் மூலம் தலைவியை அவனுக்கே மணம்முடிக்க பெற்றோர் சம்மதிப்பர்.இவ்வாறு மடலேறுதல் நிகழ்வும் தலைவனுக்கு உரியதாகும் என இலக்கண நூலாா் சுட்டுவர்.
தொல்காப்பியர் மடலேறுதல் என்பதனைத் தலைவனுக்குரிய கூற்றாகக் கூறுகின்றார்.
“..... தோழி
நீக்கலினாகிய நிலைமையும் நோக்கு
மடன்மா கூறும் இடனுமார் உண்டே” ( தொல்., களவியல்,நூ.11 )
என்று இம்மடலேறுதலையும் அவர் பெருந்திணையின் பாற்பட்டதாகவே
கூறுகிறார்.
“எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல்
பொற்புடை நெறிமை இன்மையான” (தொல்.,அகத்திணை இயல், நூ.35 )
என்று பெண்கள் மடலேறுதல் கூடாது என்று தெளிவாகவே சுட்டுகிறார். பின்னால் வந்த திருக்குறளும்,
“கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்” (குறள்.428)
என்று இக்கருத்தை அரண் செய்கின்றது. சங்க இலக்கியத்திலும் அன்பின் ஐந்திணைக்கு உரிய மடற் கூற்றாகவே (குறு-14,17,32,173,182; நற்றிணை- 146,152,342,377) ஒன்பது பாடல்கள் தலைவன் கூற்று நிலையில் அமைந்துள்ளன.
சீவகசிந்தாமணியில் சீவகன் மீது காதலுற்ற குணமாலை காதல் வேட்கை மிக, பெண்ணிற்குரிய மரபுமீறி மடலேறப் போவதாகக் குறிப்பிடுகிறாள்.
"சோலை வேய்மருள் சூழ்வளைத் தோளிதன்
வேலை மாக்கடல் வேட்கைமிக் கூர்தர
ஓலை தாழ் பெண்ணை மாமடல் ஊர்தலைக்
காலவேல் தடங் கண்ணி கருதினாள்" (சீவ.சி.,கு.இ.பா.999)
என்ற பாடலின் வழி குணமாலை மடலேறக் கருதும் செய்தியை அறியமுடிகின்றது. சங்க இலக்கியங்களிலும் தலைவன் மடலேறுவேன் என்று கூறுவானே தவிர மடலேறியதாகச் செய்தி சுட்டப்பெறவில்லை. சீவகசிந்தாமணியிலும் தலைவி தான் கொண்ட எண்ணம் ஈடேறவில்லையெனில் மடலேறுவேன் என்று கூறும் மரபு மாற்ற செய்தியைக் காணலாகின்றது. இங்கும் தலைவி மடலேறுவேன் என்று கூறினாளே தவிர மடலேறியதாக இல்லை.
அறத்தொடு நிற்றல்
'அறன்' என்பது பல பொருள்களைக் கொண்டிருந்தாலும், இங்குப் பெண்ணுக்கு உரிய முதற்பண்பான கற்பையே குறிக்கும். 'அறவழியில் நின்று, களவொழுக்கத்தைப் பெற்றோர்க்கு வெளிப்படுத்துதல்' என்பதே இத்துறையின் பொருளாகும். அறத்தொடு நிற்கும் முறையும் ஒருவித ஒழுங்கிலேயே நடைபெறும். தலைமகள் தோழிக்கும், தோழி செவிலிக்கும், செவிலி நற்றாய்க்கும், நற்றாய் தந்தை தன்னையர்க்கும் களவொழுக்கச் செய்தியை வெளிப்படுத்துவர் என்று இலக்கண ஆசிரியர்கள் குறிப்பிடுவர்.
"தலைவி பாங்கிக் கறத்தொடு நிற்கும்
பாங்கி செவிலிக் கறத்தொடு நிற்கும்
செவிலி நற்றாய்க் கறத்தொடு நிற்கும்
நற்றாய் தந்தை தன்னையர்க் கறத்தொடு
நிற்கும் என்ப நெறியுணர்ந் தோரே" (நாற்கவிராச நம்பி., நம்பி அகப்பொருள், நூ.48 )
என்ற நூற்பா வழி இதனை அறியலாகிறது.
சீவகசிந்தாமணியில் குணமாலையை மணம்முடிக்க பிறிதொருவர் வரும் வேளையில் குணமாலை செவிலித்தாயிடம் நேரடியாக என் மனதைக் கவர்ந்த சீவகனையன்றி பிறிதொருவனை மணக்க மாட்டேன் என்று செவிலித்தாயிடம் கூறுகிறாள்.
"மணிமதக் களிறு வென்றான் வருத்தச் சொற் கூலியாக
அணிமதக் களிற னானுக்கு அடிபணி செய்வ தல்லால்
துணிவ தென் சுடுசொல் வாளால் செவிமுதல் ஈரல் என்றாள்
பணிவரும் பவளப்பாவை பாிவு கொண்டனையாது ஒப்பாள்”
( சீவ.சி.,குணமாலையாா் இலம்பகம்,பா – 1049 )
என்ற பாடல் வழி தலைவி நேரடியாக செவிலியிடம் காதலை வெளிப்படுத்தும் பாங்கினைக் காணமுடிகிறது.இவ்வாறு, களவினை கற்பாக மாற்றும் அறத்தொடு நிற்றல் முறைமை மாற்றம் பெற்று அமைந்திருப்பதைக் காணலாகிறது.
சீவகசிந்தாமணி சீவகனின் வீர தீரச் செயல்கள், பேரழகு, பேராற்றல், போராற்றல், அரச குடும்பத்தின் செயல்கள், அரசியல் நெறிமுறைகள், மனித குல மேம்பாட்டிற்குத் தேவையான அறக்கருத்துகள் கூறுதல் முதலான பல செய்திகளைக் கொண்டதாக விளங்குகின்றது. ஆயினும் தலைவனின் சிறப்பினையே பெருமளவு மையப் படுத்தி அமைந்து இருப்பதால் தலைவனை சிறப்பிப்பதன் பொருட்டு தலைவியாின் மரபில் திருத்தக்க தேவா் மாற்றங்களைப் படைத்துள்ளாா் எனலாம்.
உசாத்துணைப்பட்டியல்
கழகத் தமிழ் அகராதி - கழகப் புலவா் குழுவினா்(ப.ஆ), திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.1999
தமிழ் மொழி அகராதி - கதிரைவேற் பிள்ளை, கௌரா பதிப்பகம், சென்னை.1986.
தொல்.,பொருளதிகாரம், சண்முகம் பிள்ளை ( பதி ) ,முல்லை நிலையம், சென்னை.1999.
புதுக்கவிதை ஒரு புதுப்பாா்வை , பாலா, அன்னம் அகரம் வெளியீடு,சிவகங்கை.2019
நம்பி அகப்பொருள், ராவ்பகதூா் பவானந்தம் பிள்ளை, முல்லை நிலையம், சென்னை-2006
சீவக சிந்தாமணி , திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (திருநெல்வேலி), 1952
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









