சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் 'என் முதல் ஆசிரியர்' பற்றிய சிந்தனைகள் (2) - ஜோதிகுமார் -
இவ் ஓவியனின் தேடலை, தூண்டிவிட்டிருக்கும் கதைவருமாறு:
ஓவியன் சிறுவனாய் இருந்தபோது, பறவைகளின் கூடுகளைக் கலைப்பதற்காகக் குன்றின்மேல் இருக்கும் பாப்ளர் மரங்களின் உச்சிக்கு ஏறுகின்றான். மரங்களின் உச்சியை அடையும் சிறுவர்களின் முன் இயற்கை அப்படியே விரிந்து கிடக்கும். ‘பூமியின் மகத்துவம் எங்களை வியப்பில் ஆழ்த்தும். மங்கிய, சூடேறிய ஸ்டெப்பியின் காற்றில், கன்னிநிலம் ஒய்யாரமாய் படுத்துக்கிடக்கும் - ‘கண் பார்வை எட்டும் வரை ஒரே நீல பூமி... வார்த்தைகளுக்கு அகப்படாத பெரும் நிலப்பரப்பு’ ஆறுகள், தொடுவானத்தருகே மெல்லிய நூலிழையாகி மறையும். மரக்கிளைகளில் நாம் ஒன்றி படுத்தவாறே விண்ணுலகத்து காற்றின் ஓசைகளையும் ரகசியங்களையும் செவிமடுப்போம். இலைகள், அந்த ரகசியங்களை எல்லாம் எம்மிடம் அன்போடு முணுமுணுத்தன.
இப்படியாக, இயற்கையை அன்போடு விசாரிக்கும், இதே சிறுவர்களில் ஒருவன் மரங்களை நட்டவன் குறித்தும் கேள்விகளை எழுப்பிக்கொள்கின்றான்:
‘யார் இந்தமரங்களை, இக்குன்றுகளில் நட்டிருப்பவர்? நட்டவரின் நம்பிக்கை என்ன? அவரது கனவுதான் யாது?’
சிறுவனின் தேடல்கள் சிலவிடயங்களை எமக்குப் புகட்டுவதாய் உள்ளன.
பொட்டல் காடாய் இருந்த இக்குன்றில்தான், ‘தூய்ஷேன்’ பள்ளிக்கூடம் என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. தூய்ஷேன், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியை, இந்தப் பின்னடைந்த லம்பாடி கிராமத்தினரிடையை (அசோக மித்திரனின் பாஷையில்) பிரதிநிதித்துவம் செய்தவர் என்றும் கூறினர்.
தூய்ஷேன்தான் இந்தப் பள்ளிக்கூடத்தை இங்கு ஆரம்பித்தவராம். இப்போது சாந்தமான தாடிகார தபால்காரராய் இருக்கின்றார் இவர். 1924 இல், இக்கதையின் நாயகிக்கு. 14 வயதாய் இருக்கும்போது ஓர் இளைஞன் போர்வீரனின் மேல்கோட்டோடு, இந்தப் பின்தங்கிய கிராமத்திற்கு வந்துசேர்கின்றான்.
குட்டிப்போட்டால், அக்குட்டிகளையும் குதிரைகளையும், குளிர்காலத்தில் அடைத்துவைக்கும், வசதிபடைத்தோரின் இந்தக் களிமண் குதிரைக் கொட்டிலை, இவர்தான் ஆரம்பப் பள்ளியாக மாற்றியவர். சுற்றிலும் முட்புதர்கள். களைகள். சுவர்கள் மலையில் நனைந்து, நனைந்து கரைந்து இடிந்துபோய் நின்றன. கதவு ஆடிக்கொண்டிருந்தது.
ஆகவே, இவ் இளைஞன் முன் இரண்டு பொறுப்புகள் கிடந்தன. ஒன்று சீரழிந்து போன இம்மண் கொட்டகையை, சின்னஞ்சிறுசுகள் படிக்கக்கூடிய இடமாக எப்படி மாற்றுவது என்பது முதலாவது. அடுத்ததாய், இப்பள்ளிக்கான, சிறுபிள்ளைகள் கூட்டத்தை, இப்பின்னடைந்த கிராம மக்களிடையே இருந்து எப்படி இழுத்து வந்து சேர்ப்பது என்பது இரண்டாவது.