

பொங்கலை நோக்கி நிற்கின்றார் யாவரும்
காத்திருப்பார் கவலை போக்கிடட்டும் பொங்கல்
களிப்புப் பெருகட்டும் கண்ணீர் மறையட்டும்
கலகலப்பாய் யாவருமே பொங்கியே மகிழட்டும்
நாளும் பொழுதும் நாடிவரும் துன்பம்
நமையண்ட விடாமல் நாமிறையை வேண்டிடுவோம்
பொங்கலைப் பொங்கிப் போக்கிடுவோம் அனைத்தையும்
மங்கலமாய் பொங்கி மகிழ்ந்திடுவோம் வாருங்கள்
பொங்கலை நினைத்தால் புத்துணர்வு பெருக்கெடுக்கும்
புத்தாடை மத்தாப்பு நினைப்பிலே வந்தமரும்
பச்சரிசி சர்க்கரை பாலோடு கரும்பும்
பருப்போடு தேனும் பதிந்திடுமே மனமெங்கும்
காலையிலை நீராடி கோலமிட்டு வாசலிலே
கும்பமும் வைத்து குத்துவிளக் கேற்றிடுவோம்
அடுப்பினை மூட்டி ஆண்டவனைக் கும்பிட்டு
பொங்கற் பானையினை பக்குவமாய் வைத்திடுவோம்
அம்மா இருப்பார் அப்பாவும் இருப்பார்
அன்பான பாட்டியும் தாத்தாவும் இருப்பார்
அக்காவும் தங்கையும் அருகிலே இருக்க
அடுப்பிலே பொங்கல் பொங்கியே வழியும்
பொங்கிய பொங்கலை கதிரவனுக்குப் படைத்து
கையெடுத்துக் கும்பிட்டு கண்மூடி நின்று
எங்களின் கவலைகள் இல்லாது போக
இன்னருளைச் சுரந்திடுவாய் எனவேண்டி நிற்போம்
ஆலயம் செல்வோம் அர்ச்சனை செய்வோம்
அனைவருக்கும் நல்வாழ்த்தை அளித்துமே நிற்போம்
மூத்தோரை வணங்குவோம் முழுவாசி பெற்றிடுவோம்
பொங்கிய பொங்கலை பங்கிட்டு மகிழ்வோம்
ஊரெல்லாம் உல்லாசம் பொங்கியே நிற்கும்
உறவினர்கள் வீடெல்லாம் உளமகிழச் செல்வர்
பொங்கலெனும் உணர்வு பூரிப்பைக் கொடுக்கும்
பூப்போல மத்தாப்பாய் கலகலப்பு விரியும்
எங்குமே கொண்டாட்டம் நிறைந்துமே இருக்கும்
எழிலாகப் பாட்டரங்கம் பட்டிமன்றம் நடக்கும்
மங்கையரும் வாலிபரும் மனமகிழக் கலப்பார்
எங்குமே ஆனந்தம் பொங்கியே வழியும்
உழவரது திருநாளாய் அமைந்ததுவே பொங்கல்
உழவினது மகத்துவத்தை உணர்த்துவதே பொங்கல்
உழைக்கின்ற உழைப்பினை உயர்த்துவதே பொங்கல்
உழைக்கின்றார் வாழ்வுயர அமையட்டும் பொங்கல்
தமிழரது திருநாளாய் மலர்கிறதே பொங்கல்
சமயத்தைக் கடந்து உயர்கிறதே பொங்கல்
பொங்கலெனும் வார்த்தையிலே பூரிப்பே இருக்கு
மங்கலமாய் மலருவதே பொங்கல் திருநாளே !



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









