என்றும் அழியாத நல்ல நாமத்தோடும் புகழோடும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருந்கக் கூடியவர்கள் கலை இலக்கியத்தினூடக தமது ஆற் றல்களை எப்போதும் புதிய பரிணாமங்களுடன் வெளிப்படுத்தி வாழ்வாங்கு வாழ்ந்த மனிதர்களே என்றால் அது மிகையாகாது.
கலை இலக்கித்துறையில் சாதனைகள் புரிந்து மக்களால் போற்றப்பட்டு வந்த சில ஆளுமைகளின் இழப்பு செய்தி அண்மைக்காலத்தில் அடுத்தடுத்து வந்து கலை இலக்கிய ஆர்வலர்களை கலக்கமடையச் செய்திருக்கிறது. அந்த வகையில் வந்த செய்திகளுக்குள் ஒன்றுதான் நாடகர் என அநேகரால் போற்றப்படும் சர்வதேச மட்டத்தில் நாடக அரங்கக் கலையால் தனது பெயரை வலம்வரும்படியாக நாடகக்கலையில் பல சாதனைகளைப் புரிந்த மதிப்புக்குரிய கலைஞர் நாடகர் கலாநிதி குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களின் மறைவுச்செய்தி.
யார் இந்த நாடகர்? இதை நான் சொல்வதால்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை காரணம் ஈழத் தமிழ் மக்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் நன்கு அறிமுகமானவர் இவர். சர்வதேசமட்டத்தில் அநேகமான தமிழ் மக்களின் மனதில் ஆழமாக பதிந்த மனிதர்தான் இவர். மண் சுமந்த மேனியர் என்ற மேடை நாடகத்தின் மூலம் மிகப்பெரிய ஆர்வத்தை நாடகக் கலைஞர்களிடத்தில் உருவாக்கியவர் என்பது மட்டுமல்ல மேடை நாடக கலையிலும் நவீனத்துவம் மிக்க மாற்றத்தை உருவாக்கியவர்.
அரங்க ஆற்றுகை திறன் மேம்பாட்டின்பொருட்டு மேலும் சில ஆளுமைகளின் ஒத்தாசையோடு அவர்களது ஈடுபாட்டுடன் மற்றொரு நாடகக் கலைஞரான தார்சீசியஸ் அவர்களுடன் இணைந்து 1978 தை 23ஆம் திகதி நாடக அரங்கக்கல்லூரியை ஆரம்பித்தார். இவர்களுடன் நாடக கலைஞர் வி. எம் குகராஜா போன்ற மேலும் சிலரும் அப்போது இணைந்து செயற்பட்டமையும் வி. எம். குகராஜாவை ஆசிரியராகக்கொண்டு நாடக அரங்கக் கல்லூரியின் ஒரு வெளியீடாக அரங்கம் என்ற சஞ்சிகை வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. நாடக அரங்கக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு சில காலங்கள் கடந்த நிலையில், 1982 என்று நினைக்கிறேன் அவரை நான் முதன் முதலில் சந்தித்தேன். அப்போது எனக்கு அதிக தூரம் பயணிப்பது சிரமம் என்பதாலும் வயதும் அவர்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக இருந்தமை காரணமாகவும் ஆரம்பத்தில் ஒரு சில சந்திப்புகளோடு தொடர்பு நின்றுபோக மீண்டும் மண் சுமந்த மேனியர் நாடகத்தை பார்பதற்காகச் சென்ற சந்தர்ப்பத்தில் சந்தித்திருக்கிறேன். தொடர்ந்து அவருடன் இணைந்து பயணிக்கவேண்டும் என்ற எனது ஆர்வம் நாட்டில் இருந்த சூழ்நிலைகளால் கைகூடவில்லை. பின்னர் எப்போதாவது நீண்ட இடைவெளிகளுக்கு இடையில் சந்திக்கும்போது முகமலர்ச்சியோடு கை கொடுத்துவிட்டு திரும்புவது என்ற நிலைமைதான் இருந்தது.
இவர் 1950ஆம் ஆண்டில் அரங்கக்கலைக்குள் குறிப்பாக மேடை நாடகக்கலைக்குள் நுழைந்தவர். யாழ் திருநெல்வேலி இந்து இளைஞர் சங்கத்தினால் மேடையேற்றப்பட்ட நாடகமொன்றில் முதியவராக வேடம்தரித்து தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியமையிலிருந்து இவரது நாடகக்கலைப்பயணம் ஆரம்பிக்கிறது என்று அறியக்கிடைக்கிறது. அப்போதெல்லாம் நான் பிறந்திருக்கக்கூட இல்லை. இவர் இந்த துறைக்குள் நுளைந்த 1950ஆம் ஆண்டு முதல் இறுதிவரை இவர் நாடகத்துறையின் வளர்ச்சி, நவீனத்துவம், மாற்றம் போன்றவற்றில் ஆற்றிய பணிகள் சொல்லியடங்காதவை. அவரது அயராத முயற்சியில் வெற்றியும் பெற்றார் என்றே சொல்லவேண்டும்.
மேடை நாடகவளர்ச்சியில் இவர் தனதாக்கிக்கொண்ட பாத்திரங்கள் பல. அவரது பயணம் நாடக நடிகராக ஆரம்பித்தாலும் பின்னர் நெறியாளராக, நாடகாசிரியராக, தயாரிப்பாளராக, நாடகக் களப் பயிற்றுவிப்பாளராக, நாடக வரலாற்று ஆசிரியராக, விமர்சகராக, திறனாய்வாளராக, நாடக அரங்கக் கல்லூரியை ஆரம்பித்ததன் மூலம் கற்கை நிறுவனம் ஒன்றுன் நிறுவுநராக, விமர்சனைங்களை நடுநிலையாக மேற்கொண்டதன் மூலம் சிறந்த விமர்சகராக என்று நாடக அரங்கக்கலையுடன் தொடர்புபட்ட பல்வேறு முகங்களுடன் பயணித்தவர். அது மட்டுமல்லாது யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் வருகை தரும் விரிவுரையாளராக கடமையாற்றியதன் மூலம் அரங்கக்கலைப் போதனாசிரியராகவும் செயற்பட்டார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் போதனாசிரியராக கடமையாற்றிய காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட ஒரு சிறிய முரண்பாடு காரணமாக சுயமரியாதையை இழந்துவிடக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அதனையும் கைவிட்டு ஒதுங்கியதாக அண்மையில் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இடம்பெற்ற இவர் சார்பான நினைவேந்தல் நிகழ்வொன்றில் அனுபவப் பகிர்வை மேற்கொண்ட பேராசிரியர் மௌனகுரு அவர்கள் குறிப்பிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் மௌனகுரு அவர்கள் இவருக்கு இளையவராக (இருவருக்குமிடையில் 12 வயது வித்தியாசம்) அரங்கக்கலை செயற்பாடுகளுடன் ஈடுபடுபவர் என்பதும் நாம் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டியதே. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் கலாநிதி ம. சண்முகலிங்கம் அவர்களும் பேராசிரியர் மௌனகுரு அவர்களும் இணைந்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா போன்ற பல மாவட்டங்களின் வெவ்வேறு பிரதேசங்களுக்கு சென்று கள நாடகப்பயிற்சிகளை வழங்கி மேடை நாடகக் கலையை ஊக்குவிப்பதற்கான பங்களிப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இவரது மேடைநாடக கலை வளர்ச்சிப்பயணத்தில் அருமை நண்பன் 1958 ஆம் ஆண்டிலும், வையத்துள் தெய்வம் (இந்த நாடகம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உலகத்தமிழாராட்சி மாநாட்டில் முதன் முதலில் மேடையேற்றப்பட்டதாகவும் அறியக்கிடைக்கிறது அப்படியாயின் இது 1956இல் ஆக இருக்கவேண்டும்) 1961ஆம் ஆண்டிலும், கூடி விளையாடு பாப்பா (1978 சிறுவர் நாடகம்), நெடும் பயணம் 1979ஆம் ஆண்டிலும் 1980களில் உறவுகள், நாளை மறுதினம், மாதொருபாகன், தாயுமாய் நாயுமானார், திக் விஜயம், நரகத்தில் இடர்படோம், சத்திய சோதனை, தியாகத் திருமணம், பஞ்சவர்ண நரியார், போன்ற சிறுவர் நாடகங்களும் இவரால் எழுதப்பட்ட நாடகங்களாகும். இதைப்போல் உறவுகள் என்ற நாடகம் 1982இலும் மண்சுமந்த மேனியர் முதற் பாகம் 1985இலும் வெளிவந்தன.
இதில் மண்சுமந்த மேனியர் பாகம் ஒன்று இவரது கலையாற்றலை உலகிற்கே வெளிப்படுத்திய சிறந்த படைப்பாக வெளிப்பட்டதோடு அநேகமான மக்களின் மனதையும் ஆழமாக ஊடுருவியது என்றால் அது மிகையாகாது. மண்சுமந்த மேனியர் நாடகம் யாழ்பாணப் பல்கலைக்கழக கலசாரக்குழுவிற்காக எழுதி தயாரிக்கப்பட்டது. இந்த நாடகம் பல மேடைகளை கண்டது. இந்த நாடகத்தில் அவர் பல்வேறு புதிய நுணுக்கங்களை அறிமுகப்படுத்தயிருந்தார். இதில் பிரபலமான ஒரு மேலைத்தேச நாடகாசிரியரின் நாடகக்கலை நுட்பம் ஆய்ந்தறியப்பட்டு அவையும் இதில் புகத்தப்பட்டதாகவும் சில கருத்துகள் உண்டு. இவர் இதற்காக பயன்படுத்திய நவீனத்துவ நுட்பம் பிறெஸ்ரிலியன் வடிவம் என குறிப்பிடப்படுகிறது. இயல்பான நடிப்பு, சாதாரண மக்களின் வாழ்க்கைமுறை, நாடகத்திற்குள் இசையுடன் கலந்த பாடல்கள், அவ்வப்போது பின்புலத்திலிருந்து சமூகத்தின் உண்மை மனநிலைகளை வெளிகொணர்வதான குரல் மூலமான வெளிப்படுத்துகை, நாடகத்தை மேடையிலன்றி பார்வையாளர்களுக்கு மத்தியிலிருந்தே ஆரம்பித்தல் போன்ற பல்வேறு புதிய நுணுக்கங்கள் புகத்தப்பட்டு பிரமிப்புகள் வெளிகொணரப்பட்டிருந்தது.
அப்போது நாட்டில் இன முரண்பாடுகள் மிகவும் உச்ச நிலையடைந்திருந்தது. அதேவேளை இனவிடுதலையை முன்நிறுத்தி பல விடுதலைப் போராட்ட அமைப்புகள் உருவாகி செயற்பட்டுக்கொண்டிருந்ததோடு அவர்களுக்குள் போட்டியும் முரண்பாட்டுடனான முறுகல் நிலைகளும் அவ்வப்போது தலைகாட்டிக்கொணண்டிருந்த தருணம். அந்த சூழலை மனதில்கொண்டு ஈழ விடுதலைப் போராட்டம் நிகழ்ந்துகொண்டிருந்த போராட்ட களத்தின் சூழ்நிலையை ஆழமாக மனதில்கொண்டு ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாக வெளிவந்ததே இந்த நாடகம். முதல் பாகம் விடுதலையுணர்வை விதைப்பதோடு மக்கள் ஒற்றுமையை வெளிக்கொணர்வதாகவும் இரண்டாம் பாகம் விடுதலைப் போராட்ட அமைப்புகளுக்குள் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் அமைந்திருந்தது. இதில் நேரடியாக அந்த விடயம் குறிப்பிடப்படாவிட்டாலும் நாடகத்தை சிறப்பாக விளங்கிக் கொண்டவர்களால் தெளிவாக விளங்கிக்கொள்ளப்பட்டது.
பாஞ்சாலி சபதம் (1989), எந்தையும் தாயும், மண்சுமந்த மேனியர் பாகம் இரண்டு (1987ஆக இருக்கவேண்டும்), அன்னையிட்ட தீ (1991), உள்ளக் கமலமடி (1992), ஆரோடு நோகேன் (1993), நீ செய்த நாடகமே (1994), இடுக்கண் வருங்கால் (1998 சிறுவர் நாடகம்) யார்க்கெடுத்துரைப்பேன், புழுவாய் மரமாகி, எங்கள் தவப்பயன், நாளை மறுதினம், திரிசங்கு சொர்க்கம், வேள்வித் தீ, பள்ளியெழுந்திடுவீர், மனத்தவம், ஆர்கொலோசதுரர், நரகோடு சுவர்க்கம், வாற்பேத்தை, புகலிடம் பிறிதொன்றுமில்லை, நேயத்தே நின்ற நிமலன், எங்கள் தவப்பயன் போன்றவையும் இவரது நாடகங்களாகும். இவ்வாறு இவர் எழுதிய நாடகங்கள் 150ற்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றுள் மண்சுமந்த மேனியர் பாகம் இரண்டு முதலாவது பாகத்தைப்போன்று பெரியளவிலான வரவேற்பைப்பெறவில்லை என்பது குறிப்பிடப்படக்கூடியது.
அன்னை இட்ட தீ என்ற நாடகம் தாயகத்தில் இடம்பெற்ற போரினால் ஏற்பட்ட வடுக்களை களத்திலே இருந்து பார்த்த அனுபவங்களை அடிப்படையாக வைத்து அவற்றை நாடகக் கலை மூலமாக வெளிக்கொணரும் நோக்கோடு தயாரித்து நெறிப்படுத்தி அரங்கேற்றினார். அதே போலவே யார்க்கெடுத்துரைப்பேன் என்ற நாடகம் போரின் காரணமாக இடம்பெயர்ந்து ஏதிலியர் முகாம்களில்; வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலைமைகளையும் அவர்களது அவலங்களையும் அப்படியே தத்துபமாக வெளிக்கொணரும்பொருட்டு எழுதி, தயாரித்து, நெறிப்படுத்தி அரங்கேற்றினார். எந்தையும் தாயும் என்ற நாடகம் யுத்ததினால் மேலைத் தேசங்களுக்கு புலம் பெயர்ந்து சென்ற பிள்ளைகளும் அவர்களின் தூரதேச வாழ்க்கையால் பெற்றோர்கள் படும் அவலங்கள் அவஸ்தைகளையும் தத்ரூபமாக வெளிக்கொணரும் நாடகமாக அரங்கேற்றம் கண்டது.
இவற்றுக்கப்பால் அவர் வேற்று மொழி நாடகங்களின் மொழி மாற்றத்திலும் ஈடுபட்டார். அதன் பயனாக கிடைத்தவையே தாகூரின் துறவி, நோவே ஒரு பவை வீடு, இடிபஸ் மன்னன் போன்ற மொழி மாற்ற நாடகங்களாகும்.
இவர் எழுதிய நாடகங்களுள் கண்மணிக் குட்டியார், கண்டறியாத கதை போன்ற சிறுவர் கதைகள் 2005இல் வெளிவந்தவை. அதேபோல் நட்பு, ஆச்சி சுட்ட வடை, கூடிவாழ்வோம், குழந்தைகள் பாவனை செய்யும், அன்னத்தடாகம், வேட்டைக்காரன், குளத்து மீன்கள், செல்லும் செல்லாத செட்டியார், சிலையின் சீற்றம், ஒற்றுமையின் சின்னம், ஒரு பூனையின் விலை என்ன?, முயலார் முயல்கிறார், பண்பும் பயனும், காட்டு இராஜா சிங்கம், பாலுக்கு பாலகன், தாய் சொல்லைத் தட்டாதே, அன்னையும் பிதாவும், மந்திரத்தால் மழை, அயலவன் யார்? பந்தயக் குதிரை போன்ற சிறுவர் நாடகங்களும் இவரால் எழுதப்பட்ட சிறுவர் நாடகங்களுள் குறிப்பிடக்கூடிய சில நாடகங்களாகும்.
இவருடைய அரங்க கலைப்படைப்புகள் சில மக்களின் உளவியல் ரீதியிலான பாதிப்புகளை சரியான முறையில் அடையாளம் கண்டு அந்தப்பாதிப்புகளை தத்ரூபமாக வெளிக்கொணர்வதாய் அமைந்தன. மிக முக்கியமாக போர்ச்சூழலால் ஏற்பட்ட பாதிப்புகளின் மூலம் உருவாகியிருக்கக் கூடிய உள ரீதியான பாதிப்புகள் மிகத் தெளிவாக உணரப்பட்டு சில நாடகங்களின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருந்தன. அந்த நாடகங்களில் குறித்துரைக்கக்கூடியனவாக எந்தையும் தாயும், அன்னை இட்ட தீ போன்ற நாடகங்களை குறிப்பிடலாம். உளவியல் ரீதியான பாதிப்புகளை அடையாளம் காணும்பொருட்டு இவர் பல தேடுதல்களிலும் ஆய்வுகளிலும் ஈடுபட்டிந்தருந்தார். அந்த ஆய்வுகளினதும் தேடுதல்களினதும் பெறுபேறுகள் இந்த நாடகங்களில் அடையாளப்படுத்திக் காண்பிக்கப்பட்டன. உளவியல் ரீதியிலான பாதிப்புகள் பற்றிய இவரது தேடுதல்களை இவர் தனித்து மேற்கொள்ளாமல் அதனுடன் தொடர்புடையவர்களின் ஆலோசனைகள் பங்களிப்புகளுடன் ஒரு கூட்டு முயற்சியாகவே இந்த நாடகங்களை தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவரோடு சிவயோகன் அவர்களும் உளவியல் ரீதியான படைப்புகள் சிலவற்றில் துணையாக செயல்பட்டார் என அறியமுடிகிறது.
சமூக உளவியல் மற்றும் உளம் சார் மருத்துவ ரீதியான அடையாளம் காணல் மற்றும் ஆற்றுப்படுத்துகை போன்ற விடயங்களில் இவருக்கு கூடுதல் ஆதரவையும் ஆலோசனைகளையும் வழங்கி பக்கபலமாக இருந்தவர்கள் அருட் தந்தை எஸ். டேமியன், வைத்திய கலாநிதி டீ. ஜே. சோமசுந்தரம், அருட்தந்தை சா. ம. செல்வரத்தினம் வைத்திய கலாநிதி இ. சிவசங்கர் போன்றோரேயாவர். இவர்கள் தவிர்த்து உளவியல் ஆற்றுப்படுத்துகை செயற்பாட்டுடன் தொடர்புடைய நிபுணத்துவம் வாய்ந்த வேறு சிலரின் உதவி மற்றும் ஆலோசனைகளையும் பெற்றிருந்தார். இந்த உளவியல் சார்ந்த நாடகங்கள் உளவியல் செயற்பாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஆற்றுப்படுத்துகை செயற்பாட்டுக்கு இணையாக ஆற்றுப்படுத்துகையில் முக்கிய பங்கை வகிக்கும் வகையில் உருவாக்கம் பெற்றிருந்தமையும் அதே நோக்கில் மக்களின் அமோக ஆதரவை பெற்றிருந்தமையும் சிறப்பாக கருதமுடியும். அத்துடன் உள ஆற்றுப்படுத்துகை செயற்பாடுகளை நாடகம் மூலம் மருத்துவ ரீதியான சிறந்த பெறுபேறுகளைப் பெறும் வகையில் உருவாக்கிய ஈழத்தவர் குழந்தை ம. சண்முகலிங்கம் என்பது என்றும் கவனத்தில் கொள்ளவேண்டியது. இதே நடைமுறையை மருத்துவ ரீதியிலான ஆற்றுப்படுத்துகையின் பொருட்டு பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த ஆட்டாவூட் மற்றும் இலத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த அகஸ்தாபோல் போன்றவர்கள் இவருக்கு முன்னரே பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் சிறுவர்களுக்கான அதிக நாடக பிரதியாக்கங்களை மேற்கொண்டமை, சிறுவர்களை மேடை நாடக செயற்பாடுகளிற்கமைவாக பயிற்றுவித்தமை, சிறுவர் நாடகங்களை நெறிப்படுத்தியமை அவற்றை மேடையேற்றம் செய்தமைபோன்ற காரணங்களால் இவர் ஈழத்தின் சிறுவர் நாடகங்களின் தந்தை எனவும் போற்றப்படுகிறார்.
கலாநிதி ம. சண்முகலிகம் அவர்கள் மாரி பொழியும் மாதமாகிய கார்த்திகை மாதம் 15ஆம் திகதி 1931ஆம் ஆண்டு அன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலி என்ற ஊரில் பிறந்தார். தந்தையின் பணி காரணமாக கொழும்பு நீர்கொழும்பு பகுதியில் உள்ள போலவத்தை என்னும் பிரதேசத்தில் பிறந்த சில மாதங்களின் பின்னர் இருந்து 10 வருட காலம் வாழ்ந்தார். இதனால் சிங்கள மக்களுடனான பழக்கமும் சிங்கள மொழியில் தேர்ச்சியும் மிக்கவராக விளங்கினார். போலவத்தையில் உள்ள ஒரு ஆங்கில பாடசாலையிலேயே தனது ஆரம்பக் கல்வியை கற்றார் பின்னர் யாழ்ப்பாணம் சென்று தனது பாடசாலைக் கல்வியை தொடர்ந்தார். தன்னுடைய உயர் கல்வி சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்ததன் மூலம் இளங்கலைமாணி பட்டத்தை பெற்று பட்டதாரியானார். பட்டப்படிப்பின் பொருட்டு பொருளியல், வரலாறு மற்றும் அரசியல் போன்ற பாடங்களை தேர்ந்து கற்றார். அதன் பின்னர் யாழ் செங்குந்தா இந்துக் கல்லூரியல் ஆசிரியராக தனது பணியை ஆரம்பித்த இவர் 1972ஆம் ஆண்டு காலப்பகுதியில் பளை மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக பணிபுரிந்தார். 1976ஆம் ஆண்டு கொழும்பு பலகலைக்கழகத்தில் அரங்கக்கலை பட்டயப்படிப்பை (டிப்ளோமா) முடித்து பட்டய சான்று பெற்றார். தொடர்ந்து தனது ஆசிரியப்பணியில் ஈடுபாட்டுடன் தொடந்தார். இதன் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வருகை தரும் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டு அந்தப் பணியையும் மேற்கொண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்; நாடகமும் அரங்கியலும என்ற துறையின் உருவாக்கத்திற்கு வளர்ச்சிக்கும் வித்திட்டவர்களில் பேராசிரியர் சிவத்தம்பி மற்றும் பேராசிரியர் மௌன குரு அவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு அதே வேளை பின்னரான வளர்ச்சியில் பங்காற்றியவர்களில் கலாநிதி குழந்தை ம. சண்முகலிங்கம் மிக முக்கியமானவர் ஆவார். இவருக்கு நான்கு பிள்ளைகள், எந்தையும் தாயும் நாடகத்திலே காண்பிக்கப்படுகின்ற பேர்க்கால சூழலினால் ஏற்பட்ட தூர தேச இடம்பெயர்வுகளால் பிள்ளைகளின் பிரிவினால் ஏங்கித் தவிக்கும் பெற்றோர்களின் மனநிலையிலே இவரும் இருந்தார் என்பதும் மூத்த பிள்ளையின் நீண்டகால இடைவெளியின் பின்னரான வருகையின் பின்னர் இவர் இவ்வுலகை நீத்தமையும் இங்கு குறிப்பிடவேண்டிய முக்கியமான விடயமாகும்.
நாடகத்துறையில் இவரது பங்களிப்பை கவனத்தில் எடுத்து அதற்கான அங்கீகாரத்தை வழங்க நினைத்த கிழக்கு பல்கலைக்கழகம் 2001ஆம் ஆண்டு இவருக்கு கௌரவ கலாநிதி பட்டத்தை வழங்கியது. 1976ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து வெளியான பொன்மணி என்ற தமிழ் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தேசிய கலை இலக்கியப் பேரவையின் வெளியீடாக இலங்கையில் இருந்து வெளிவரும் தாயகம் சஞ்சிகையின் ஆசிரியர் குழாமில் இவரும் ஒருவராக செயற்பட்டார். மண்சுமந்த மேனியர் (பாகம் 1), அன்னையிட்ட தீ போன்ற நாடகங்கள் தனியாக நூலுருப்பெற்று வெளிவந்துள்ளன. இவ்வாறு நாடக அரங்கக் கலையில் சிறப்பு முன்னோடியகத் திகழ்ந்து நாடகர் என அங்கீகாரம் பெற்றவர்; கலாநிதி குழந்தை ம. சண்முகலிங்கம். இவர் தனது கலைப்பயணத்தை 17 தை மாதம் 2025 அன்று முடித்துக்கொண்டு இவ்வுலக வாழ்க்கையை துறந்தார். இவரது இழப்பு ஈழத்தின் நாடக அரங்கக் கலைத்துறைக்கு பேரிழப்பாக இருந்தாலும் இவரது படைப்புகளாலும் இவரால் உருவாக்கப்பட்ட அரங்கக்கலை ஆளுமைகளாலும் நாடக அரங்கக் கலைத்துறை இப்பிரபஞ்சம் இருக்கும்கால் வாழும்.
இவரைப்பற்றி எழுதுவதாயின் இன்னும் நிறையவே எழுதிக்கொண்டு போகலாம். அதற்கு சஞ்சிகைகளின் பக்க ஒதுக்கீடுகள் அனுமதிக்காது. ஆகையால் முடிந்தளவு சுருக்கமாக எழுதியுள்ளேன். ஆயினும் இவரைப்பற்றிய தேடல்களை தொடர்ந்து மேற்கொண்டு கிடைக்கும் சகல தகவல்களையும் ஆவணப்படுத்துவது எனது எதிர்கால நோக்கமாகும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









