
தமிழர் ஆரியச் செல்வாக்குக்கு உட்படமுன்னரே ஊரறிய திருமணச் சடங்குகளை நிறைவேற்றியுள்ளனர். உறவினர்கள், ஊரவர்கள் கூடி மிகச்சிறப்பாக கொண்டாடியுள்ளனர். ஆரம்ப காலத்தில் காதலர் இருவர் கருத்தொருமித்துக் காதல் திருமணம் செய்யும் முறையும் பெற்றோர் மணம்பேசு திருமணம் செய்துவைக்கும் முறையும் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. காதலன் காதலியைக் கண்டு மனம்விரும்பி தாய் தந்தையார் உறவினர் யார் என்று தெரியாத நிலையில் காதல் வயப்பட்டு மணம் முடித்துள்ளனர். இருவர் ஓரிடத்தில் ஒருவரை ஒருவர் எதிர் கொள்கின்றனர். தங்கள் மனதைப் பறிகொடுக்கின்றனர். கண்டதும் காதல் சங்ககாலத்திலும் இருந்துள்ளது. உனது தாய் தந்தை யார் என்று அறியேன், உனது ஊர் எதுவென அறியேன் எனது தாய் தந்தையருக்கு அவர்கள் என்ன உறவோ என்றும் அறியேன் ஆனால் உன்மீது காதல் பிறந்துவிட்டதே எங்கள் இருவரது நெஞ்சளும் கலந்துவிட்டனவே பார்வையில் என செம்புலப் பெயல் நீரார் என்னும் புலவர் பாடடிய பாடலைப் பார்த்தால் காதல் மணம் அன்றே நடந்துள்ளதை அறியமுடிகிறது:
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
இப்பாடலை இயற்றியவர் பெயர் தெரியவில்லை. ஆயினும் இதில் உள்ள "செம்புலப் பெயனீர்" என்ற உவமையின் சிறப்பின் காரணமாக "செம்புலப் பெயனீரார்" என்ற பெயரில் அழைக்கப்படுகிறார், நம் காலத்தில் Mr. Bitcoin என்று பிற்கொயின் காசு முறையை கண்டுபிடித்தவரை அழைப்பதைப் போல. குறிஞ்சித் திணை, புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறித்த பாடல்களைக் குறிப்பது.
இப்பாடலின் பொருள்:
யாயும் ஞாயும் = என் தாயும் உன் தாயும்
யாராகியரோ = யார் யாரோ
எந்தையும் நுந்தையும் = என் தந்தையும் உன் தந்தையும்
எம்முறைக் கேளிர் = எவ்வகையில் உறவினர்கள்
யானும் நீயும் = நானும் நீயும்
எவ்வழி அறிதும் = எப்படி ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்கள் ஆகினோம்
செம்புலப் பெயனீர் போல = செம்மண் நிலத்தில் மழை பெய்யும் போது, நீரும் மண்ணும் இணைந்து பிரிக்க முடியாத சகதியாகி விடும். அதைப் போல ...
அன்புடை நெஞ்சம்தான் கலந்தனவே = ... அதைப் போல நம்முடைய அன்பான நெஞ்சங்கள் பிரிக்க முடியாதபடி கலந்துவிட்டன.
“கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குறி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே” (தொல்.பொருள்.கற்பு.நூ.1)
என்று குறிப்பிடுகிறார். அதாவது கற்பென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது, சடங்கோடு பொருந்திய மரபின் அடிப்படையில், தலைவன் கொள்ளுதற்குரிய மரபினையுடைய தலைவியை, அவர்களுடைய தந்தையும் தமையன்மாரும் மணஞ்செய்து கொடுக்க, மணந்து கொள்ளுதல் ஆகுமென்று விளக்கமளிக்கிறார்.
‘திரு’ என்பது தெய்வத்தன்மை எனவும், ‘மணம்’ என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, ‘திருமணம்’ என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம்.
திருமண நிகழ்வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்ய தாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமானவள் என்ற தகுதி பெறுகின்றாள்.
தமிழர் வரலாற்றில் ‘தாலி’ பதினோராம் நூற்றாண்டில்லேயே திருமணச் சின்னம் என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் “”தமிழர் திருமணம்” என்கிற புத்தகம். மாங்கல்யசரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது. ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது. தெய்வீகக் குணம், தூய்மைக் குணம், மேன்மை, தொண்டு, தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல். இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது. தெய்வ திருமணம் முதற்கொண்டு எளியோர் திருமணம் வரை அனைத்து இலக்கிய இதிகாசங்களும் சொல்வது, "மங்கள நாண்" என்பதே. அதாவது மாங்கல்யசரடு (மஞ்சள் நூல்).
எமது முன்னோர் ஐயர் இல்லாமல் ஊர் பெரியவர்களின் வழிகாட்டலில் திருமணங்களை நிறைவேற்றினர். ஆணும் பெண்ணும் விரும்பிச் சேர்ந்துவாழும் முறையே பின்பற்றப்பட்டது ஆனால் காலப்போக்கில் அது மாறியதற்கு ஏமாற்றப்பட்டதே காரணமாகும். அதமைத் தொல்காப்பியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
தமிழர் திருமணச் சடங்குகள்
பந்தல் அமைத்தல்
அழகுக்காகவும் திருமணச் சடங்குகள் நடக்கும் பொழுது பந்தலின் மேலிருந்து தூசி அழுக்குப் பொருட்கள், பல்லி போன்றன விழுந்துவிடாமல் இருப்பதற்காகவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பந்தலை கமுகு, வாழை, தென்னை ஓலைகளால் அலங்கரிப்பர்.
சங்ககாலத் திருமண முறை குறித்து அதிகப்படியான பாடல்களில் குறிப்புகள் இல்லை. ஆனால் அகநானூற்றில் இது பற்றி விரிவான விளக்கம் இடம்பெறுகிறது.
“உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ் சோற்று அமலை நிற்ப நிரைகால்
தண் பெரும் பந்தர்த் தரு மணல் நெமிரி
மனை விளக்குறுத்து மாலை தொடரி
கனை இருள் அகன்ற கவின்பெறு காலை
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென
உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
மன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தர
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வாள் இழை மகளிர் நால்வர் கூடி
கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நல்மணம் கழிந்த பின்றை”(அகம்.86:1-17)
என்ற பாடலில், திருமண நாளன்று உழுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த குழைவாக வெந்தப் பொங்கலொடு பெருஞ் சோற்றுத் திரளை உண்பது இடைவிடாது நடந்து கொண்டே இருந்தது. வரிசையாகக் கால்களைக் கொண்டு குளிர்ந்த பெரிய பந்தலை அமைத்திருந்தனர். அப்பந்தலிலே கொண்டு வந்த மணலைப் பரப்பினார்கள். மனையின் கண் விளக்கினை ஏற்றி மாலைகளைத் தொங்கவிட்டனர். என்பது சங்காலத்தில் இடம்பெற்றுள்ளது
வாழைமரம் நாட்டுதல்
வாழைமரம் ஒருமுறைதான் குலைபோடும் அதுபோல் எமது வாழ்விலும் திருமணம் ஒருமுறைதான் என்பதை உணர்த்துகிறது. வாழைமரம் கட்டுவதன் நோக்கம் வாழையடி வாழையாக வாழை மரம் தழைத்து வருவது போல, நமது சந்ததியும் பெருக வேண்டும் என்பதாகும்.
பாக்கு
பாக்கு கொத்துக் கொத்தாகக் காய்ப்பதால் இது தம்பதிகள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. பாக்கு கிருமி நாசினியாகவும் பயன்படுகின்றது. வெற்றிலை, பாக்கு இரண்டிலும் கிருமித் தொற்றை அகற்றும் சக்தியுண்டு.
வாழையும் தென்னையும் கற்பகதரு இவை அழியாப் பயிர்கள் ஆகும். தென்னை நூற்றாண்டு வாழக்கூடியது. வாழை பிறருக்கு உதவிவிட்டுத் தன்னை அழித்துக்கொள்கின்றது. குலையீன்று கொடுக்கின்றது. குட்டிகளை தன் நிழலிலேயே வளர வைக்கின்றது.
தேங்காயும் வாழைப்பழமும் “வாழையடி வாழையாக” வளர்வது தேங்காயும் வாழைப்பழமும் இறை வழிபாட்டில் முக்கியமாகின்றது. தம்பதிகள் நிலைத்து நின்று அனைவருக்கும் பயன்படக்கூடிய தாக வாழவேண்டும் என்ற தத்துவத்தையே உணர்த்துகிறது.
தேங்காய் உடைப்தன் மூலம் வாழ்க்கை ஆர்பத்தில் கடினமானதாக (தேங்காய் ஓடுபோல) இருக்கும் ஆனார் அதனைத் தகர்த்து உள்ளே சென்றால் அது இனிமையானதாகவும் வெண்மையானதாகவும் அமையும் என்பதை உணர்த்துகின்றது.
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் இனிமையானது, இலகுவாக தோலை அகற்றிவிடலாம். இனிமை மட்டுமல்ல அனைத்து சக்தியும் வாய்ந்தது உற்சாகத்தையும் ஆரோக்கியத்தையும் தரவல்லது. கழைப்பை விரைவாக நீக்கவல்லது. சோர்வை அகற்றவல்லது தானிய உப்புக்கள் அனைத்தையும் வாழைப்பழத்தலர் இருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.
முளைப்பாலிகை போடல்
பெண் வீட்டில் மூன்று அல்லது ஐந்து மண்சட்டிகளில் மண்பரப்பி நீர் ஊற்றி நவதானியங்களையிட்டு வளர்த்தல்.
முளைப்பாலிகை இடுவதன் நோக்கம் திருமணம் செய்து மணமக்களும் அவர்கள் குடும்பமும் முளைவிட்டு பல்கிப் பெருகி வாழ வேண்டும் என்பதே. முளையரும்பி வளரும்போது அதற்கு நீர் மட்டுமல்ல போதிய கவனிப்பும் தேவை. முளைப்பாலிகை உடலாரோக்கியத்திற்கு மிகவும் தேவைப்படும் உணவாகும்.
அரசாணிக்கல்
முற்காலத்தில் திருமண வைபவங்களுக்கு அரசனுக்கும் அழைப்பிதழ் அனுப்புவார்கள். அரசனுக்கும் எல்லாத் திருமணங்களுக்கும் செல்ல முடியாத நிலை இருக்கும். எனவே அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் மருவி அரசாணைக்கால்
ஆகிவிட்டது. இன்று பதிவுத் திருமணம் போல் அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அங்கீகரிக்கப்பட்டது. ஆகவே அத்திருமணம் அங்கீகாரம் பெற்றுவிடுகிறது. இதுவே இன்று திருமணப் பந்தலில் கலியாண முருங்கை மரக்கிளை ஒன்றை வைத்து அதற்கு பட்டுச்சாத்தி அலங்கரித்து வைப்பர்.
அரசாணிக்கால் வெண்முருங்கை கிளையை வெட்டிக் கொண்டுவந்து பட்டுத்துணியால் அலங்கரிப்பர். ஒரு பெண் வெளித்தோற்றத்தைப் பார்த்து மதிப்பிடக்கூடாது. அவள் முள்ளைப்போன்றவள் அவளை அணுவதில் மிகவும் அவதானம்தேவை என்பதனை ஆடவருக்கு நினைவுறுத்துவதாக அமைகின்றது. அத்தோடு முள்ளில் போட்ட சீலையை சுலபமாக எடுத்துவிடமுடியாது. அவ்விதமே திருமணமான பின்னர் பெண்ணைவிட்டு அகல முடியாது என்பதும் உணர்த்தப்படுகின்றது.
இரட்சாபந்தனம் (காப்புக்கட்டல்)
காப்புக்கட்டல் தொடங்கிய கருமம் நிறைபெறும் வரை எந்தவித தீட்டுக்களோ இடையூறுகளோ துக்கங்களோ மணமக்களைச் சாரா திருக்க வேண்டிய பாதுகாப்புக் கருதி செய்யப்படுவது. (கால மிருத்து அவமிருத்து போன்ற அபாயங்களில் இருந்து காப்பாற்றவும்). சர்வரோகம் அணுகாமலும், பீடை, பிணி அணுகாமலும் இருக்கவேண்டி விவாகச் சடங்குகள் இனிதே நடைபெறவும் கட்டப்படுவது நூல் காப்புக் கட்டுதல் ஆகும்.
ஹோமம் வளர்த்தல்
ஹோமத்தில் இடப்படும் பொருட்கள் சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துகிறது ஹோமப்புகை உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும் .
கும்பம் வைத்தல்
கும்பம் இறைவனது திரு உடம்பின் அடையாளம் . இறைவனின் வித்யா தேகமாகத் திகழ்வது கும்பம். இறைவனது திருமேனி, கும்பத்தில் பாவிக்கப்படும். கும்பம் தெய்வமாக பாவனை செய்யப்படுகின்றது. வாழ்வியலுக்குத் தேவையான அனைத்தையும் ஒரு சேர வைத்து வழிகாட்ட கும்பம் உதாரணமாக அமைகின்றது.
கும்பவஸ்திரம்——- உடம்பின் தோல்
நூல்———————— நாடி நரம்புகள்
குடம் —————————— தசை
தண்ணீர் ————————– இரத்தம்
நவரத்தனங்கள் —————— எலும்பு
தேங்காய் ————————- தலை
மாவிலை ——————– தலைமயிர்
தருப்பை ————————- குடுமி
மந்திரம் ————————– உயிர்
ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது .
தாலி அணிவித்தல்
ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன்.
மூன்று முடிசிக்கான விளக்கம்
இந்த மாங்கல்யதில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டும்.
இரண்டாவது முடிச்சி குலப்பெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டும்.
மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீ என்று காட்டும் என்பதாகும்.
திருமாங்கல்யம் அணிவிக்கும் பொழுது கெட்டிமேளம் கொட்டுதல்
மாங்கல்யம் சூட்டும்போது கெட்டி மேளம் கொட்டுவது சபையில் உள்ளோர் யாராவது தும்முதல், அபசகுன வார்த்தைகள் பேசுதல் போன்றவை மணமக்களிற்குக் கேட்கக் கூடாது என்பதற்காகவே. பல்லி சொல்லுவது தாலி கட்டும் நேரத்தில் கேட்கக்கூடாது என்பது ஐதீகம். எனவே கொட்டுமேளம் கொட்டுவது வழமையாயிற்று.
கைவிளக்கு ஏந்தி நிற்பது
தாலி கட்டும்போது கைவிளக்கு ஏந்தி நிற்பது ஏனென்றால் தாலி கட்டியதற்கு விளக்கு ஏந்தியவர் ஒரு சான்றாவார். இன்னொரு விளக்கம் சகுனத் தடைகள் ஏற்படாமலிருக்கவும் தாலி இரவு நேரமானாலும் சரியாகக் கட்டப்பட்டுள்ளதா என்பதனை உறுதிப்படுத்தவும் விளக்கு பயன்படுத்தப்பட்டது. இன்று உள்ளதுபோல் அன்று மின் விளக்குகள் இல்லை இருட்டில் பின்பக்கம் மறைவாக இருப்பதால் வெளிச்சம் தேவை என்னும் உட்பொருள் கொள்ள இடமுண்டு.
நெற்றியில் குங்குமம் வைத்தல்
தாலி கட்டிய பின் மணமகன் மணமகளின் உசந்தலையில் குங்குமத்தால் திலகமிடுவார். இது அவள் தன் கணவனுக்கே உரியவள் என்பதை எடுத்துக்காட்டவே. அத்தோடு அவ்விடத்தில் தான் மகாலட்சுமி வாசம் செய்கின்றாள்.
அட்சதை
தாலி கட்டும்போது தூவப்படும் அட்சதை மணமக்கள் தீய சக்திகளிடம் இருந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற்கும் ஆசீர்வதிப்பதாகும்.
மணமகளின் கையை மணமகன் பிடித்தல்
"நீயும் நானும் முதுமையடைந்து விட்டாலும் கூட ஒருவரை ஒருவர் பிரியாதிருப்போம் என்று கையைப்பிடிகிறேன்" என்பதாகும். நம்பியவரைக் கைவிடக்கூடாது என்பதுதான் இதன் உட்பொருள். ஒருவரை ஒருவர் இறுகப்பற்றி வாழ்வதே உண்மையான வாழ்க்கை. இணைபிரியாது இருப்பதை உறுதிப்படுத்துவது கரங்கோர்த்தல்.
அம்மி மிதித்தல்
பெண்ணின் வலதுகாலை (அதாவது எட்டாவது அடி) மணமகன் கையால் தூக்கி அம்மியில் வைத்து பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டி வைத்து அணிவிப்பார். இந்தக் கல்லைப் போல் நிலையாக நின்று உன் எதிரிகளைச் சகித்துக் கொள். இது பெண்ணிற்கு கற்பையும் ஆணுக்கு ஒழுக்கத்தையும் புகட்டுகின்றது. கல் எப்படி எதையும் தாங்குமோ அது போல் வாழ்கையிலும் இன்ப துன்பங்களைக் கண்டு கலங்காமல் உறுதியான கொள்கைகளைக் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என்று உணர்த்துகிறது. மன உறுதிதான் வாழ்வின் வெற்றிக்கு அடிப்படை உறுதிபூண்டு வாழ்வில் காலடிவைக்க எடுத்துக்காட்டு அம்மி மிதித்தல். கல்லில் வைக்கும் பாதம் வழுக்காது, மிக உறுதியாக இருக்கும். அந்த உறுதிதான் வாழ்வின் இலட்சியத்தை அடையும் வழி.
மெட்டி அணிவித்தல்
திரும்பவும் இரண்டாம் முறை அக்கினியை வலம் வரும்போது இடக்காலை அம்மியில் வைத்து மெட்டி அனுவிக்கப்படும். திருமணமான பெண் அவளைப் பார்க்கும் இன்னொரு ஆடவன் அவள் திருமணமானவள் என்பதை உணர்த்த மெட்டி அணிவிக்கப்படுகின்றது. அவ்விதமே ஆண்களுக்கும் அணிவிப்பது அவனும் திருமணமானவன் என்பதை எடுத்துக்காட்டும். அதனைவிட முன்னர் கழல் ஆண்களுக்கு அணிவிக்கப்பட்டது. கழல் திருமணத்தின் போது அணிந்துவிட்டால் அவன் திருமணமானவன் என்பதே பொருள்.
கணையாழி எடுத்தல்
மூன்றாம் முறை அக்கினியை வலம் வரும்போது கிழக்குப்பக்கத்தில் வைத்திருக்கும் மஞ்சள் நீர் நிறைந்த பாத்திரத்தில் இருக்கும் பொருளைத் தேடி எடுக்கவேண்டும். இது மூன்று முறைகள் நடைபெறும். இருவரும் ஒருவருக்குகொருவர் விட்டுக் கொடுத்து எடுத்தல் வேண்டும். இது தம் வாழ்க்கையிலும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இதற்கும் மேலாக திருமண மேடையில்தான் ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் பார்க்கும் நிலை பண்டைய காலத்தில் காணப்பட்டுள்ளது. இருவரும் மறைவாகக் கையால் தங்கள் எண்ணத்தைக் காட்டிக்கொள்ளவும் இந்த கணையாழி எடுத்தல் பயன்படுவது போன்று அவர்களிடம் உள்ள வெட்கத்தை நீக்கவும் காரணமாக அமைகின்றது.
அருந்ததி பார்த்தல்
மூன்றாம் சுற்றில் அருந்ததி பார்த்தல் நடைபெறும். இருவரையும் கூட்டிக் கொண்டு மண்டபத்தின் வடக்கு வாசலக்கு வந்து வானத்தில் இருக்கும் நடத்திரங்களுக்குப் பூஜை செய்து அருந்ததியைக் காண்பிப்பார். “நிரந்தரக் கற்பு நட்சத்திரமாக மின்னுவேன்” என்று ஆணையிடுவ தாகும். அனுமன் கண்டேன் கற்றுக்கணியை’ என்பது போன்று கற்போடு வாழ உறுதியளிப்பதாக அமைவது இந்த அருந்ததி பார்த்தல் நிகழ்வு. .
ஆரத்தி
தம்பதிகளுக்கு தீயசக்தியினால் தீமை ஏற்படாமலும் கண்திருஷ்டி நீங்கும் பொருட்டும் இவை செய்யப்படுகின்றன. தீப ஒளி மணமக்களின் முகத்தில் எழிலை ஊட்டி அழகாகக் காட்டுகின்றது. மன மகிழ்வைத் தருகின்றது. .
* டிஜிட்டல் ஓவியம் : கூகுள் நனோ பனானா வழி வநகி -



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









