தமிழியலாய்வு வளர்ச்சியில் இடதுசாரி முற்போக்கு ஆய்வாளர்களின் பங்களிப்புகள் பெருந்திருப்பத்தை ஏற்படுத்தின. வரலாற்று நோக்கு, சமூகப் பார்வை முதலானவற்றின் பின்னணியில் தர்க்கபூர்வமாக ஆய்வுகளை முன்னெடுத்துள்ள அவர்கள், கலை இலக்கியங்களுக்கும் சமூக இயக்கத்துக்கும் இடையிலான தொடர்புகளையும் கலை இலக்கியங்களில் வர்க்கக் குணாம்சங்கள் அமைந்துள்ளவாற்றையும் கண்டறிந்து விளக்கினர். அக்குழுவினர் கையாண்ட அணுகுமுறையினால் கலை இலக்கியங்களின் உருவ – உள்ளடக்க அமைவில் சமூக வாழ்வு செலுத்திய தாக்கங்கள் கண்டறியப்பட்டதுடன் கலை இலக்கியங்களைக் கொண்டு சமூக வரலாற்றை மீட்டெடுத்தலும் சாத்தியமாயிற்று. 1950களில் தனித்துவமுடைய செல்நெறியாக வளர்ந்துவந்த அவ்விமர்சனமுறைமை, 1980களின் பிற்பகுதி முதல் தன் முதன்மையை மெல்ல மெல்ல இழக்கத் தொடங்கியது. அத்தேய்வு வெவ்வேறு தளங்களில் இடம்பெற்று வருகின்றபோதிலும், முற்போக்கு விமர்சகர்கள் வளர்த்தெடுத்த செழுமையான ஆய்வுமரபின் தொடர்ச்சியைப் பேணும் முயற்சிகளைச் சிலர் மிகுந்த அக்கறையுடன் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுள் தனித்துச் சுட்டிக்காட்டத்தக்க ஒருவராக எல்.ஜோதிகுமார் விளங்குகிறார்.
மார்க்சிய மூலவர்கள் முன்வைத்த சித்தாந்தங்கள், அவற்றின் பிற்கால வளர்ச்சி மற்றும் திரிபுகள், மார்க்சிய விரோத சக்திகளின் நகர்வுகள், தமிழக மற்றும் இலங்கைச் சூழலில் இடதுசாரி அமைப்புகளின் இயக்கம் முதலானவை குறித்த விரிந்த புலமைகொண்டுள்ள ஜோதிகுமார் படைப்பு, இதழியல், ஆய்வு, பதிப்பு, மொழிபெயர்ப்பு எனப் பலதளங்களில் கருத்தியல் வலுவுடன் சமரசமற்று இயங்கி வருகிறார். வரலாற்று நோக்குடனும் சமூகப் பார்வையுடனும் கலை இலக்கியங்களையும் சமகால அரசியல் அசைவுகளையும் நுட்பமாக ஆராய்ந்து வரும் அவர், மேலாதிக்க வர்க்கத்தின் பிற்போக்கு நிலைபாட்டையும் அதனை ஆதரிக்கும் கலை இலக்கியங்கள் விதைக்கும் நச்சுத் தன்மையையும் அம்பலப்படுத்தி வருவதுடன் இடதுசாரி இலக்கியத் தளத்தில்நின்று, அவ்விலக்கிய மரபு பேணவிளையும் இலக்கிய நாகரிகத்தையும் அந்நாகரிகத்தை வெவ்வேறு தளங்களில் வளர்த்தெடுத்தவர்களையும் அதன் தொடர்ச்சியாக இயங்கியவர்களையும் ஆழமாக அறிமுகப்படுத்தும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில் முற்போக்கு இலக்கியக் குழுவினர் வளர்த்தெடுத்த செழுமையான ஆய்வு மரபின் சமகால அடையாளங்களுள் முதன்மையான ஒருவராக அவரை முன்நிறுத்தலாம். அதற்கு ‘23ஆம் வயதில் பாரதி’ என்ற இந்நூலும் சான்றாக அமைந்துள்ளது.
பாரதி, டால்ஸ்டாய், சிங்கிஸ் ஐத்மாதவ், சுந்தரம் ஆகியோர் பற்றிய கட்டுரைகள், ஓவியர் வீரப்பன் சதானந்தனுடடான நேர்காணல், மாறுகின்ற உலகமும் அமெரிக்காவும் என்ற கட்டுரை ஆகியவற்றுடன் எல். சாந்திகுமார், ‘இலங்கைவாழ் இந்தியர்களின் குடியகல்வு’ என்ற ஜெயசிங்கின் நூலுக்கு வழங்கிய அணிந்துரை, சுந்தரம் பற்றிய வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதை, ஜோதிகுமார் மொழிபெயர்த்த வான் காத்தின் கவிதை ஆகியனவும் இந்நூலில் அடங்கியுள்ளன. வான்கோவின் பிரசித்திபெற்ற, ‘விதைப்பவன்’ ஓவியம் நூலின் முன்னட்டையாக அமைந்துள்ளது. அவ்வோவியம் குறித்த விளக்கம், நூலிலுள்ள கட்டுரை ஒன்றில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
“ஓர் இளம் சூரியன் பிரகாசமாய் முழுமைபெற்று உலகின் அனைத்து அவதரிப்புகளுக்கும் அடித்தளமாய் அமைகிறது எனக் காட்டப்படுகிறது. அதாவது, விவசாயியின் வாழ்வு, இந்த விதைப்பவனின் வாழ்வு, உலகுக்கு அடித்தளமாய் அமைகிறது என்ற புரிதல் இவ்வோவியத்தில் ரம்மியமாய் வெளிப்படுவதாக உள்ளது.”
இந்தச் சூரியனும் விதைப்பவனும் ஆற்றும் பணியை ஒத்ததான பணியையே இந்நூலில் பேசப்படும் பாரதி, டால்ஸ்டாய், கோர்க்கி, வான்கோ முதலான ஆளுமைகள் முன்னெடுக்க முயன்றுள்ளனர் எனலாம். வெவ்வேறு நிலபுலத்தில், வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த அவர்களிடையே ஒத்த கருத்துகளும் முரண்பட்ட நோக்குகளும் காணப்பட்டுள்ள போதிலும் அவர்கள் யாவரும் மானுட மேம்பாட்டையே அழுத்தமாகப் பற்றியிருந்துள்ளனர். தொழிற்சங்கச் செயற்பாட்டாளராக விளங்கிய சுந்தரத்திடமும் ஓவியர் வீரப்பன் சதானந்தனிடமும் அந்த மானுட மேம்பாட்டின் கீற்றுக்களையே தரிசிக்க முடிகிறது. அதேவேளை, ஜோதிகுமார் அவர்களின் நோக்குமுறையும் எடுத்துரைப்பும் அந்த மானுட மேன்மையை, மேம்பாட்டுக்கான சிந்தனையை அழுத்தமாக வலியுறுத்துவனவாகவே அமைந்துள்ளன.
பாரதியின் பங்களிப்புகளைச் சமூக வரலாற்றுப் பின்புலத்திலும் ஒப்பியல் அடிப்படையிலும் ஆழமான ஆய்வுக்குட்படுத்தி, பாரதியியலை விசாலப்படுத்தியதில் முற்போக்கு எழுத்தாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். அவர்களின் ஆய்வுகளே பாரதியின் வரலாற்றுப் பாத்திரத்தை விரிந்த தளத்தில் முன்நிறுத்தின. ப.ஜீவானந்தம், தொ.மு.சி. ரகுநாதன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, கோ.கேசவன் முதலானோரின் பங்களிப்புகள் அவ்வகையில் குறிப்பிடத்தக்கன. அத்தொடர் வரிசையில் ஜோதிகுமாரும் இணைத்துக்கொள்ளத் தக்கவர் என்பதைப் பாரதி குறித்த அவருடைய ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன.
- எழுத்தாளர் எல்.ஜோதிகுமார் -
பாரதியின் எழுத்துகளைத் திரட்டித் தொகுத்து வெளியிடும் முயற்சிகள் நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்றன. இன்றும்கூட பாரதியின் அறியப்படாத எழுத்துகளைக் கண்டறியும் முயற்சிகளை ய.மணிகண்டன், ஆ.இரா. வேங்கடாசலபதி முதலானோர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த நெடும் வரலாற்றில் சீனி. விஸ்வநாதனின் பங்களிப்பு மகத்தானதாகும். தன் வாழ்நாள் முழுவதையும் பாரதியியலுக்காக அர்ப்பணித்த அவர், பாரதியின் எழுத்துகளை அர்ப்பணிப்புடன் திரட்டிக் காலவரிசைப்படுத்தி, அடிக்குறிப்புகளுடன் பல தொகுதிகளாக வெளிக்கொணர்ந்துள்ளார். அவற்றுள் முதலாம் தொகுதியில் உள்ள எழுத்துகள் பற்றியதாக இந்நூலில் உள்ள பாரதியார் பற்றிய கட்டுரைத் தொடர்கள் அமைந்துள்ளன. அம்முதல் தொகுதி 1897 முதல் 1906 ஆம் ஆண்டுவரையான (24.01.1897 – 29.12.1906) பாரதியின் எழுத்துகளைக் கொண்டுள்ளது. அவற்றுள் 21.07.1906 (பார்லிமெண்டிலே ரீஸ் செய்யும் தொந்தரை) வரையான எழுத்துகளை மிக நுணுக்கமாகப் பரிசீலித்து, தன் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார், ஜோதிகுமார்.
மேற்படி கால எல்லையில் 1905 மற்றும் 1906ஆம் ஆண்டுகளில் பாரதி ஒப்பீட்டளவில் அதிகமாக எழுதியுள்ளதைக் காணமுடிகிறது. அவையே பாரதியிடத்து ஏற்பட்ட திருப்பத்தை, பாரதி ஏற்படுத்திய திருப்பத்தை வெளிப்படுத்துவனவாகவும் அமைந்துள்ளன. அத்துடன் அக்கால கட்டத்திலேயே பாரதியின் வாழ்விலும் முக்கிய திருப்பங்கள் ஏற்படுகின்றன. பாரதியின் பிற்காலப் பயணங்களுக்கான அடிப்படைகளும் அக்காலத்திலேயே அரங்கேறுகின்றன. அதனால், அந்த 23ஆம் வயதைப் பாரதியின் புலமை விசாலத்தின் மையப் புள்ளியாகக் கொண்டு, 23 மற்றும் 24ஆம் வயதுகளில் பாரதியிடம் வெளிப்பட்ட சிந்தனைகளை அன்றைய சமூக வரலாற்றுப் பின்புலத்தில்நின்று மதிப்பிட்டு, பாரதியின் ஆளுமையைக் கணிக்க முனைந்துள்ள ஜோதிகுமார், பிற்பட்ட காலத்தில் விஸ்வரூப வளர்ச்சிபெற்ற பாரதியிடம், அதற்கான முளை தொடக்க காலத்திலேயே காணப்பட்டுள்ளவாற்றை ஆதாரபூர்வமாக விளக்கியுள்ளார்.
கார்ல் மார்க்ஸ், இந்தியா குறித்து எழுதும்போது குறிப்பிடும், “ஆங்கிலேய ஆட்சியில் அழிவும் ஆக்கமும் ஒருங்கே நிறைவேற்றப்பட என்றோ விதிக்கப்பட்டாகிவிட்டது... இச்சிதைவுகளிலிருந்தே புதிய முளையானது தோற்றுவிக்கப்படுகிறது. அப்புதிய முளையானது எமது மானுடத்தின் பூரண விடுதலைக்கான வித்தாக இருக்கப்போகிறது” என்ற புள்ளியிலிருந்து பாரதியின் ஆளுமையை இனங்காட்ட முயலும் ஜோதிகுமார், மார்க்ஸ் குறிப்பிடும் அப்புதிய முளையின் அடையாளங்களைப் பாரதியிடம் காண்கிறார்.
அதேவேளை, இத்தொடருக்கு அவர் இட்டுள்ள பெயர், ‘ஆனந்த மடம் : 23-24 ஆம் வயதில் பாரதி’ என்பதாகும். பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் நாவல், அந்நியரை எதிர்க்கத் துணியும் சந்நியாசிகள் கூட்டத்தை மையமிட்டது. ‘வந்தே மாதரம்’ என்ற இந்திய விடுதலை கீதம் அந்நாவலிலே இடம்பெற்றுள்ளது. ஆனந்த மடத்தை இந்திய விடுதலையின் குறியீடாகக் கொள்ளலாம். இவ்வாறு மார்க்ஸ் கூறும் புதிய முளை, ஆனந்த மடம் முன்நிறுத்தும் விடுதலை முதலானவற்றுடன் பாரதியின் விடுதலை சித்தாந்தத்தை, அதன் மைய இழையை ஜோதிகுமார் இணைக்கும் புள்ளி, பாரதியியலுக்குப் புதிய வளத்தைச் சேர்த்துள்ளது எனலாம்.
பாரதி குறித்த நெடுங்கட்டுரையானது ஆனந்த மடம், ஆன்ம உணர்திறன், பாரதியின் முகங்கள், திலகரின் அரசியலைப் பாரதி அறிமுகப்படுத்தும் முறைமை, பாரதியின் அணுகுமுறை எனும் ஐந்து தொடர்களைக் கொண்டுள்ளது. இவை குறித்த நல்லதொரு அறிமுகத்தை வ.ந. கிரிதரன், பதிவுகள் இணைய இதழில் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நெடுங் கட்டுரையின் முதலாவது தொடர், பாரதி மதுரை சேதுபதி கல்லூரியில் ஆசிரியராதல், அங்கிருந்து சுதேசமித்திரன் பத்திரிகைக்குச் சென்று மிகக் குறுகிய காலத்திலேயே அப்பத்திரிகையின் உபபத்திராதிபராகிக் காசி காங்கிரஸ் வரை செல்லல், ஈற்றில் சுதேசமித்திரனிலிருந்து வெளியேறி இந்தியா பத்திரிகைக்குச் செல்லல் ஆகிய மூன்று முக்கிய தளமாற்றங்களை மையப்படுத்தி, 23ஆம் வயதில் பாரதியின் ஆளுமையை, அவனின் சிந்தனைகளை, அவனது பயணத்தில் செல்வாக்கு செலுத்திய காரணிகளை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
மதுரை சேதுபதி கல்லூரியிலிருந்து ஜி.சுப்பிரமணி ஐயரால், இன்ன பதவி என்று கூறப்படாமல் சுதேசமித்திரனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாரதி, தன் திறமையால் சில மாதங்களிலேயே சுதேசமித்திரனின் உபபத்திராதிபராக நியமிக்கப்பட்டமையைத் தனித்து அடையாளப்படுத்தும் ஜோதிகுமார், அதனூடாக, பாரதி என்ற இளைஞனின் ஆளுமைத் திறத்தை முன்னிலைப்படுத்தியுள்ளார்.
வேல்ஸ் இளவரசரை வாழ்த்திய கவிதையும் கட்டுரையும் குறித்துப் பாரதி ஆய்வாளர்கள் வெவ்வேறு கண்ணோட்டத்தில் அணுகியுள்ளனர். ‘பாரத மாதா தானே பணித்தன்று’ என்ற பாரதியின் குறிப்பும், திலகரின் தீவிரவாத அரசியல்மீதான அவரின் ஈர்ப்பும் அவ்வுரையாடல்களின் மையமாக அமைந்துள்ளன. பாரதி விரும்பியே எழுதினார் என்று சிலரும் மிதவாத அரசியல் சார்பு கொண்ட ஜி.சுப்பிரமணிய ஐயரின் வேண்டுகோளுக்கு இசைந்தே அவ்வாறு எழுதினார் என்று சிலரும் வாதிட்டுள்ளனர். அவ்வாதங்களின் சரி – பிழை குறித்த உரையாடலுக்கு நகராத ஜோதிகுமார், வேல்ஸ் இளவரசரை வாழ்த்திய எழுத்துகளில் வெளிப்படும் சிந்தனைகளுக்கு முதன்மையளித்துள்ளார்.
“தமிழர்களின் பின்னடைந்த நாகரிகங்களை வெறுப்பவனாகவும், அதன் உள்ளூர ஓடும் காலனித்துவ அடிமைத்தனத்தைக் கண்டிப்பவனாகவும், இதனையே உள்ளூர மெச்சிக்கொள்ளும் ஆங்கிலேயரின்பால் கடும் விரோதம் பூண்டவனாகவும் இருப்பது பாரதியின் இளைமைக்காலத்து குணாதிசயங்களில் ஒன்றாக இருக்கின்றது. அதாவது சிங்கத்தின் சீற்றத்தைப்போல் இக்குணாதிசயங்கள் இவ் இளைஞனின் உடன்பிறப்பாகின்றன” முதலானவற்றை அவ்வெழுத்துகளிலிருந்து கண்டறியும் ஜோதிகுமார், அவற்றைக்கொண்டு 23ஆம் வயதில் பாரதி கொண்டிருந்த நிலைப்பாடு, பிற்பட்ட காலத்தில் அவன் பயணித்த பாதையின் அடித்தளத்தை உள்ளடக்கி நிற்கின்றமையை எடுத்துக்காட்டியுள்ளதுடன் இந்நிலைப்பாடு பிறருடைய திசைகாட்டுதலினால் அன்றி, இயல்பாகவே பாரதியிடம் முளைவிட்டிருந்தமையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
1905ஆம் ஆண்டு பாரதி மொழிபெயர்த்த வந்தே மாதரம் பாடலைக் கொண்டு, பாரதி என்ற இளைஞனின் மொழிபெயர்ப்பு புலமையைக் கவனப்படுத்தியுள்ளார், ஆசிரியர். ஆனந்தமட நாவலில் இடம்பெறும் வந்தே மாதரம் பாடலை ஆங்கிலவழி மொழிபெயர்க்க முனையும் பாரதி, அதில் சிறு மாறுபட்ட தோற்றம் இருப்பதால், பெங்காலி மூலமொழிக்குச் சென்று மொழிபெயர்துள்ளார். அதனைப் பாரதியே குறிப்பிட்டுள்ளார். இது அவரின் ஆழ்ந்த மொழிபெயர்ப்பு புலமைக்குச் சான்றாக அமையுமாற்றை எடுத்துவிளக்கும் ஜோதிகுமார், அம்மொழிபெயர்ப்பின்வழி இந்து மத புனருத்தாரண நிகழ்ச்சியை முன்னெடுக்கும் முயற்சியைப் பாரதி முன்னெடுத்துள்ளாரோ என்ற ஐயம் தொனிப்பதையும் சுட்டிக்காட்டி, அக்காலத்தில் அவரிடம் காணப்பட்ட தேசியம் குறித்த எண்ணப்பாங்கை ஆராய முயன்றுள்ளார்.
பலரும் கூறுவதுபோல பாரதி பக்தி எனும் காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கித் திளைத்தவன் இல்லை; தெய்வ பக்தியையும் தேச பக்தியையும் வேறுபடுத்தி நோக்கும் புரிதல், அவனிடம் அக்காலத்திலேயே காணப்பட்டுள்ளது என்பதை, பஞ்சாபி மாது கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு நிறுவியுள்ளார், ஜோதிகுமார். அக்கட்டுரையில் இடம்பெறும் ‘தாதர்கள்’ குறித்த பதிவைக்கொண்டு, ஆங்கிலேயக் காலனிய எதிர்ப்பு பாரதியிடம் அக்காலத்திலேயே உக்கிரமாக வெளிப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் அவர், பாரதி 1910ஆம் ஆண்டு தன் சுயசரிதையில் தாதர்கள் தொடர்பாகக் குறிப்பிடும் செய்தியையும் அதனோடு இணைத்து, பாரதியின் பிற்கால எழுத்துகளில் வெளிப்படும் தாதர்கள் பற்றிய அலட்சியப்பார்வை, அவரின் 23ஆம் வயதிலேயே வெளிப்பட்டுள்ளமையை எடுத்துக்காட்டியுள்ளார்.
பெண்விடுதலை குறித்த பாரதியின் அக்கறையைக் குறிப்பிடும்போது பலரும், பாரதி நிவேதிதா தேவியைச் சந்தித்த பின்னரே அவரிடம் பெண் விடுதலை குறித்த அக்கறை அழுத்தம் பெற்றது என்ற கருத்தை வலியுறுத்துவதை அவதானிக்கலாம். ஆனால், பாரதி நிவேதிதா தேவியைச் சந்திக்காவிட்டாலும், பெண் விடுதலை பற்றிய அவனுடைய கருத்துகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்காது என்பதைப் பாரத குமாரிகள், துளசிபாய் ஆகிய எழுத்துகளைக் கொண்டு விளக்கிக்காட்டியுள்ளார், ஜோதிகுமார். அவர் எடுத்துக்காட்டும், “நமது தேசத்தின் ஆதார சக்திகளாகிய மாதர்களின் ஹிருதயமும் அவர்களது ஆன்மாவும் இருளடைந்து போக விட்டுவிடுவதைக் காட்டிலும் பாதகச்செயல் வேரில்லை. ஞானகிரணங்கள் அவர்களது ஆன்மாவில் தாக்குமாறு செய்தாலன்றி நமக்கு வேறு விமோசனம் கிடையாது” என்ற பாரதியின் கூற்று ஒன்றே, பெண்விடுதலை குறித்த அவரின் அக்கறைக்குப் போதுமான சாட்சியாக அமைந்துள்ளது. இதனைவிட துளசிபாய், பெண் விடுதலையுடன் இந்து – முஸ்லிம் இணைவை - அன்றைய இந்தியாவுக்கும் இன்றைய இந்தியாவுக்கும் தேவையானது - வெளிப்படுத்தியுள்ளவாற்றையும் ஜோதிகுமார் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார். ஆங்கிலேய ஆட்சி இந்து – இஸ்லாம் எனும் பிளவுபடுத்தும் அரசியலினூடாக இந்திய தேசிய எழுச்சியை முடக்கும் முயற்சியை முன்னெடுக்க முயன்றபோது, அதற்கு எதிரான எதிர்வினையை நிகழ்த்தும் திராணி கொண்டவராகப் பாரதி இளமைக் காலத்திலேயே இருந்துள்ளார் என்பதை அவர் அழுத்திக் கூறியுள்ளார்.
பாரதியின் அரசியல் பாதை குறித்த கருத்துகளையும் ஜோதிகுமார் உரையாடியுள்ளார். நௌரோஜி, கோகலே ஆகிய மிதவாத தலைவர்கள் பற்றிப் பாரதி முதலில் கொண்டிருந்த நிலைப்பாடு குறிப்பாக, ஜி.சுப்பிரமணிய ஐயரின் செல்வாக்கினால் அவர் கொண்டிருந்த நிலைப்பாட்டையும் பின்னர் மிதவாத அரசியலிலிருந்து விலகி, திலகர்மீது கொண்ட ஈர்ப்பையும் வெளிப்படுத்தி, அந்த நகர்வினால் சுதேசமித்திரனில் இருந்து வெளியேறி இந்தியா பத்திரிகைக்குச் செல்வதை, அக்கால அரசியல் நிலைமை, சுப்பிரமணிய ஐயரின் அரசியல் நிலைப்பாடு, அக மற்றும் புறக் காரணிகளால் பாரதியிடத்து ஏற்படும் மாற்றங்கள் முதலானவற்றின் பின்னணியில், பாரதியின் எழுத்துகளைச் சான்றாகக் கொண்டே ஜோதிகுமார் தெளிவுபடுத்தியுள்ளார். நௌரோஜியை முதலில் ‘மகாரிஷி’ என விளித்த பாரதி, பின்னர் ‘ஏதோ கடுகத்தனை’ எனக் குறுக்கிச் சுட்டியுள்ளதை எடுத்துக்காட்டும் ஆசிரியர், அம்மாற்றம் பாரதியின் அரசியல் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்திலிருந்து உதித்துள்ளவாற்றை விளக்கிக் காட்டியுள்ளார்.
பாரதியின் ஆன்ம உணர்திறன் என்ற பகுதியில், 23 – 24ஆம் வயதில் பாரதியிடம் மதம், கடவுள், விவேகானந்தர், உடன்கட்டை ஏறல், மக்கள் முதலான விடயங்கள் குறித்து வெளிப்பட்டுள்ள சிந்தனைகளையும் அச்சிந்தனைகளில் நிறைந்துள்ள பாரதியின் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டியுள்ள ஜோதிகுமார், மதநிலைப்பாடு, மக்களின் வாழ்க்கை நோக்கு, சமூக அமைப்பு முதலானவற்றில் நிலவும் பிற்போக்கு நிலைப்பாட்டையும் அந்நிலைக்கு மாறாக பாரதி பயணப்பட்டுள்ள முற்போக்குப் பாதையையும் தெளிவுபடுத்தி, அதனை மார்க்ஸ் குறிப்பிடும் ஆங்கிலேய ஆட்சியின் அழிவும் ஆக்கமும் என்பதுடன் இணைத்துக் காட்டியுள்ளதுடன், அந்த ஆக்கக்கூறு பாரதியிடம் முளையிட்டுள்ளவாற்றைக் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.
பாரதியின் முகங்கள் என்ற தொடரில், பாரதியின் எழுத்துகளில் காணப்படும் முரண்களாக,
அவனது ஆன்மாவில் (அல்லது சிந்தையில்) தட்டுப்படக்கூடிய முரண்.
அவனது அரசியலில் காணக்கிட்டும் முரண்.
அவன் தன் எழுத்தை ஓர் வாகனமாக வடிவமைக்கும்போது அங்கே எழக்கூடிய முரண்
எனும் மூன்றைச் சுட்டிக்காட்டும் ஜோதிகுமார், அவற்றைப் பாரதியின் வாழ்க்கை நகர்வுகளுடன் இணைத்து ஆராய வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார். பாரதியைப் புரிந்துகொள்வதில் இந்நோக்கு மிகுந்த பயனைத் தரும் எனலாம். பாரதியை மொத்தமாக ஒன்றாக நோக்குவதும் அவனுடைய நகர்வுகளை ஒரே சீராக அணுகுவதும் விபரீதமான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும். அத்தகைய பார்வையற்ற காரணத்தினாலேயே பாரதியிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கவனத்தில் கொள்ளாது, அவரை ஓர் இந்துத்துவ கருத்தியல் வாதியாகவோ வேதாந்தியாகவோ திராவிட எதிர்ப்பாளனாகவோ முற்றிலும் ஒரு மார்க்சிய வாதியாகவோ கட்டமைக்கும் அபத்தங்கள் தொடர்கின்றன எனலாம்.
பாரதியின் முகங்கள் என்ற பகுதியில் காதல், சிறை என்பன குறித்த பாரதியின் கருத்துகள் அக்கால யதார்த்தத்தை உள்ளடக்கி வெளிப்பட்டுள்ளமை, காலனியவாதிகளின் இந்து மத தூசிப்பு குறித்த பாரதியின் நோக்கு, காங்கிரசை மக்கள் சார்பாக மாற்ற முனையும் அவரது ஆர்வம், அன்றைய ஊடக அரசியல் பற்றிய பாரதியின் புரிதல், ரஷ்ய புரட்சி மீதான அவரின் ஈர்ப்பு முதலானவை விபரிக்கப்பட்டுள்ளன. முக்கியமாகக் காலனிய ஆட்சியின் கோரமுகம், அவர்கள் முன்னெடுக்கும் பிரித்தாளும் சதி (இந்து – இஸ்லாமிய முரண்), அதிகாரத்துக்கு துணைபோகும் ஊடகங்களின் போலிமை முதலானவற்றை நுணுக்கமாகப் புரிந்து இயங்கும் ஆற்றல் பாரதி எனும் இளைஞனிடம் இருந்துள்ளவாற்றையும் இச்சதிகளுக்கு மாற்றான கருத்தோட்டங்களை அவர் கொண்டிருந்துள்ளவாற்றையும் ஜோதிகுமார் முன்னிலைப்படுத்தியுள்ளார்.
திலகரின் அரசியலைப் பாரதி அறிமுகப்படுத்தும் முறைமை என்ற தொடரில், திலகரின் அரசியல் பிரவேச கால இந்திய யதார்த்தத்தின் பின்புலத்தில், திலகரை அறிமுகப்படுத்தும் பணியையும் அப்பணியினூடாக தன் அரசியலை முன்நகர்த்தும் செயற்பாட்டையும் பாரதி முன்னெடுத்துள்ளமைச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அக்கால இந்திய யதார்த்தமே மக்களின் மதப் பற்றைத் தேசப்பற்றாக மாற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தியது என்றும் அதற்காகவே பாரதி, தேசபக்திக்கு மத முலாம் பூசும் செயற்பாட்டைப் பிரக்ஞையுடன் மேற்கொண்டுள்ளார் என்றும் ஜோதிகுமார் விபரித்துள்ளார். பாரதியின் தேசியம் பற்றிய கருத்துகளில் இணைந்துள்ள இந்துமதம் தொடர்பான கருத்துகளுக்கான பின்புலத்தை இங்கு ஜோதிகுமார் சுட்டிக்காட்ட முனைந்துள்ளார். அதனைத் திட்டமிட்டுப் பாரதி நிகழ்த்தியுள்ளார், அதற்கான தேவை அக்காலத்தில் நிலவியுள்ளது என்பது அவர் வாதமாகும்.
பாரதியின் அணுகுமுறை என்ற பகுதியில், காலனிய ஆட்சியின் தந்திரமான நகர்வுகளையும், அதற்குத் துணைபோகும் அடிவருடி பத்திரிகைகளின் செயற்பாடுகளையும் ஆங்கிலேய உளவுத்துறையைச் சாந்தப்படுத்த வேண்டிய அவசியத்தையும் உணர்ந்து, நன்கு தெளிந்து பாரதி செயற்பட்டுள்ளவாற்றை ஜோதிகுமார் எடுத்துக்காட்டியுள்ளார். குறிப்பாக, தான் அறிமுகப்படுத்தும் தத்துவங்களில், கருத்துகளில் அன்றைய அரசியல் யதார்த்தத்துக்கு தேவையானவற்றை மட்டுமே முன்நிலைப்படுத்தும் பாரதியின் கூர்மையான முதிர்ச்சியை, அதிமானிடர்களே உலகை முன்னேற்றுபவர் என்ற சிந்தனையை நீட்சேயின் தொடர்ச்சியாக வலியுறுத்திய தோமஸ் கார்லைல் பற்றிய பாரதியின் விபரிப்பை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார். அதுகுறித்த அவரின் கருத்தானது, “ஓர் அறிமுகத்தை ஆற்றும் பொழுது, அவ்அறிமுகத்தின் தேர்வு மாத்திரமல்ல, தான் அறிமுகம் செய்யக்கூடிய தத்துவத்தில் எந்தெந்தப் பக்கங்களை நிராகரிக்க வேண்டும், எந்தெந்தப் பக்கங்களை ஏற்க வேண்டும், என்பதனையும் இவ்இளைஞன் தெரிந்து வைத்திருப்பதே இங்கே கோடிடக்கூடியதாக இருக்கின்றது” என அமைந்துள்ளது. மேற்படியான அணுகுமுறைகளின் வழி பாரதி என்ற மகாகவியின், மேதாவிலாசம் முளை விடுவதை ஆதாரங்களுடன் விளக்கிச் செல்கிறார், நூலாசிரியர்.
23 வயதுடைய இளைஞனிடம் வெளிப்பட்டுள்ள சிந்தனைகளையும் அவனது அர்ப்பணிப்பையும் அன்றைய யதார்த்தத் தளத்தில்நின்று ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ள ஜோதிகுமார், பாரதி என்ற இளைஞனிடம் மானுடம், மானுட வாழ்வு, மானுட விடுதலை குறித்த மேம்பட்ட சிந்தனைகள் வெளிப்பட்டுள்ளமையை அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார். இருபத்துமூன்றே வயதான இளைஞனிடம் வந்தமைந்திருந்த ஒப்பற்ற ஆற்றலையும் அந்த ஆற்றலை அடைவதற்கு அவன் செலுத்திய உழைப்பையும் அர்ப்பணிப்பையும் மேற்கொண்ட பயணங்களையும் ஆசிரியர் முன்னிலைப்படுத்தியுள்ளார். அவருடைய நோக்கு முறையும் எடுத்துரைப்பும் பாரதியைக் கற்பதற்கான சிறந்த நெறியாக அமைகிறது. பாரதியியலுக்கு இக்கட்டுரைகள் புதிய வளம் சேர்த்துள்ளன.
பெரும் சிந்தனையாளர்கள், படைப்பாளர்கள் முதலானோரின் சிந்தனைகள் மட்டுமன்றி அவர்களின் வாழ்க்கை நடத்தைகளும் வாழ்வனுபவங்களும் வாழ்க்கை யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவும் சமுதாய வாழ்வை மேம்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் துணைபுரிகின்றன. மானுட வாழ்வின் மேலான நிலையை அடைவதற்கான அகத்தூண்டலாகவும் அதனை நோக்கிப் பயணிப்பதற்கான திசைவழியாகம் அப்பெரியோரின் வாழ்க்கை கோலங்கள் அமைந்துவிடுகின்றன. துரதிஸ்டவசமாக, பெரும்பாலான பேரறிஞர்களின் வாழ்க்கை நடத்தைகள் ஆழமாகப் பதிவுபெறவில்லை. பாரதிக்கும் இது பொருந்தும். செல்லம்மாள் பாரதி, யதுகிரியம்மாள், வ.ரா., ரா.கனகலிங்கம் எனப் பலரும் பாரதியின் வாழ்க்கை நடத்தைகளைப் பதிவு செய்திருந்தாலும் வாழ்க்கை குறித்த விசாலமான பார்வையின் பின்புலத்தில் நுணுக்கமாக விபரிக்கப்பட்டவையாக அவை அமையவில்லை. ஆனால், டால்ஸ்டாய்க்கு அந்த அதிஸ்டம் வாய்த்திருக்கிறது. அவரின் வாழ்க்கை கோலத்தின் பல அம்சங்களைக் கோர்க்கி மிக நுணுக்கமாகப் பதிவுசெய்துள்ளார். அதுவும் வாழ்க்கை குறித்த மிகவிரிந்த பார்வையுடன் புறநிலையில் நின்று தீட்டியுள்ளார். டால்ஸ்டாயிடம் வெளிப்பட்ட ஒப்பற்ற பண்புகளும் அவரின் கருத்துகளுடன் கோர்க்கி முரண்படும் புள்ளிகளும் அச்சித்திரத்தில் துலக்கமாக வெளிப்பட்டுள்ளன.
அப்பதிவு இரு பெரும் ஆளுமைகளுக்கு இடையிலான ஊடாட்டமாகவும் மூத்த தலைமுறை ஆளுமையொருவருக்கும் இளந்தலைமுறை ஆளுமைகளுக்கும் இடையிலான ஆரோக்கியமான தொடர்பின் வெளிப்பாடாகவும் டால்ஸ்டாயின் சிந்தனைகளை, அவரின் படைப்புகளைப் புரிந்துகொள்வதற்கான ஒரு திறப்பாகவும் மானுடத்தை நேசிக்கும் பரிவு மிகுந்த ஆன்மாக்களின் ஈடுபாட்டையும் ஒரு காலகட்டத்து ரஷ்ய வாழ்வை வெளிப்படுத்தும் ஆவணமாகவும் அமைந்துள்ளதுடன் கோர்க்கியின் வாழ்வு பற்றிய நோக்கையும் வெளிப்படுத்தி நிற்கிறது.
இதுவரை தமிழில் வெளிவராதிருந்த கோர்க்கியின் டால்ஸ்டாய் பற்றி பார்வையை, மிக நேர்த்தியாக மொழிபெயர்த்துள்ளார் ஜோதிகுமார். வெறுமனே நேரடி மொழிபெயர்ப்பாகவன்றி தமிழ் இலக்கியச் சூழல் தகவல்களையும் கோர்க்கி சுட்டிக்காட்டும் தகவல்களின் விரிவான விபரங்களையும் இணைத்து அதனைப் புதியதொரு படைப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
கோர்க்கியின் கிளிம் நாவல் குறித்த தொடர் கட்டுரைகள், அந்நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு முதலானவற்றின் மூலம் ரஷ்ய இலக்கிய வளத்தைத் தமிழுக்கு வழங்கும் பணியை செய்துள்ள ஜோதிகுமார், சமகால எழுத்தாளர்களான ஜெயமோகன், அசோகமித்திரன் முதலானோரின் பிற்போக்குநிலைபாட்டை ரஷ்ய இலக்கியப் பின்னணியில் அம்பலப்படுத்தும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளார். ஜோதிகுமாரின் மேற்படி பங்களிப்புகள், கோர்க்கியைத் தமிழ்ச் சூழலில் விரிந்த தளத்தில் உரையாடும் முயற்சிகளாக அமைந்துள்ளன.
ஜோதிகுமார் அவர்களை நேரடியாக அறிந்தவர்கள் ஓவியத்தின் மீதுள்ள அவரின் ஈர்ப்பையும் ஓவியம் குறித்த அவரின் புலமையும் நன்கு அறிவர். ஓவியர் சதானந்தனுடனான நேர்காணல் அதற்கு நல்லதொரு சான்றாகும். அவ்வாறே ஐத்மாதவ்வின் என் முதலாசிரியன் நாவலையொட்டி அவர் எடுத்துரைக்கும் ஓவியம் பற்றிய தகவல்களும் அப்புலமையை நன்கு வெளிப்படுத்தி நிற்கின்றன.
அன்னை வயல், ஜமீலா முதலான நாவல்களின்வழி பரவலான கவன ஈர்ப்பைப் பெற்றவர் சிங்கிஸ் ஐத்மாதவ். அவரின் என் முதல் ஆசிரியன் என்ற நாவலும் மிகுந்த கவனத்தைக் கோருவதாகவே அமைந்துள்ளது. ஒரு காலகட்டத்து ரஷ்ய வாழ்வினதும் ரஷ்யாவில் முகிழ்ப்புப் பெற்ற இடதுசாரி இயக்கம் கட்டியெழுப்பிய ஆரோக்கியமான வாழ்கை கோலத்தினதும் அடையாளமாக அமையும் அந்நாவல், ஆசிரியர் ஒருவருக்கு இருக்க வேண்டிய மன விசாலத்தையும் அவரின் சமூகக் கடமையையும் பொறுப்பையும் இணையற்ற வகையில் வெளிப்படுத்தியுள்ளது. மலையகம் போன்று அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகிவரும் சமூகமொன்றில் ஆசிரியப் பணி, எத்துணை விரிவுபெற்றதாகவும் எத்துணை முக்கியத்துவம் மிக்கதாகவும் அமைய வேண்டும் என்பதை அந்நாவலிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
ஜோதிகுமார் அவர்கள் அந்நாவல் முன்நிறுத்தும் அடிப்படையான நோக்கினை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளதுடன் அதனைத் தமிழ் இலக்கியப் போக்குடனும் இணைத்து வியாக்கியானம் செய்துள்ளார். அவர் சோவியத் முதல் ஆசிரியனின் முன், “இளம் நெஞ்சங்களின் கதவுகளைத் திறப்பது – அவர்களின் அறிவுலகைத் திறப்பது, கனவுகளைக் – கற்பனைகளைத் திறந்துவிடுவது, சோவியத் கலாசாரத்தை அந்த இள நெஞ்சங்களிடையே எப்படி விதைப்பது” எனும் இரு கடமைகள் இருந்தமையையும் அக்கடமைகளின் முக்கியத்துவத்தையும் அவை கட்டியெழுப்பும் ஆரோக்கியமான வாழ்க்கை நோக்கையும் விரிவாக விளக்கிக் காட்டியுள்ளதுடன் ஐத்மாத்தவ் படைத்த அல்தினாவையும் ஜெயகாந்தன் படைத்த கங்காவையும் ஒப்பிட்டுக்காட்டி, ஐத்மாதவ்வின் விரிந்த, மேலான வாழ்க்கைநோக்கை எடுத்துக்காட்டியுள்ளார். அம்மேன்மை இயல்பாகக் கைவரக்கூடியது அல்ல என்பதையும் அதற்கான பின்புலம் விசுவாசமான இடதுசாரி அரசியல் இயக்கத்தால் கட்டியெழுப்பப்பட்டது என்பதையும் ஆசிரியர் வலியுறுத்தியுள்ளார்.
ஜோதிகுமார் நேர்காணல் காண்பதிலும் மிகுந்த தேர்ச்சி மிக்கவர். அவரின் நேர்காணல்களில் பரந்த தேடலையும் விரிந்த சிந்தனைகளையும் காணலாம். இன்குலாப், கே.கணேஸ் ஆகியோருடனான அவரது நேர்காணல்கள் முக்கியமான திறப்புகளை ஏற்படுத்தின. அதன் தொடர்ச்சியில் ஓவியர் வீரப்பன் சதானந்தனுடனான நேர்காணலும் ஆழமான சிந்தனைகளை விதைத்துள்ளது. அந்நேர்காணலின் முக்கியத்துவம் குறித்து என் முகநூல் பக்கத்தில் பதிவுசெய்த கருத்துகளைப் பொருத்தம் கருதி இங்கு குறிப்பிடுகிறேன்.
“நேர்காணலுக்கு வினாக்கள் மட்டுமல்ல விடய ஞானமும் அவசியம் என்பதை இந்நேர்காணல் அழுத்தமாக உணர்த்தியுள்ளது. மேலைத்தேய ஓவிய மரபு, ஓவியர்கள் குறித்தும் இலங்கை ஓவியர்கள் குறித்தும் சதானந்தனும் ஜோதிகுமாரும் நிகழ்த்தியுள்ள உரையாடல்கள் ஓவியக் கலை பற்றியதாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கலை இலக்கிய ஆக்கங்களின் அடிப்படைகளையும் விவாதித்திருக்கின்றன. படைப்பாளியின் சித்தாந்த நிலைப்பாடு படைப்பாக்கங்களில் செலுத்தும் தாக்கம், படைப்பாளியின் வாழ்நிலைக்கும் அவனது சித்தாந்த நிலைப்பாட்டுக்கும் இடையிலான தொடர்பு முதலானவை தொடர்புடைய கருத்துகள், கலை இலக்கியங்களை விரிந்த தளத்தில் அணுகுவதற்கான - புரிந்துகொள்வதற்கான சிந்தனையை விதைத்துள்ளன.
எமக்குக் கையளிக்கப்பட்டுள்ள இலக்கிய மரபு, சமகாலத்தில் முனைப்புற்றிருக்கும் இலக்கியச் செல்நெறி, அடுத்த தலைமுறையினருக்கு நாம் கையளிக்கப்போகும் இலக்கிய நாகரிகம் முதலானவை தொடர்பில் ஆழமான உரையாடல்கள் நிகழும்போதே நமது இலக்கிய மரபின் உச்சங்களையும் வீழ்ச்சிகளையும் தெளிவாக இனங்கண்டு கொள்ளலாம். மிகமுக்கியமாக எந்த மரபை - பிக்காசோக்களையா? வான்கோக்களையா? - கையளிக்கப்போகிறோம் என்பது குறித்த சிந்தனையைக் கிளர்த்த வேண்டியது அவசியமாகும். அத்தகைய சிந்தனையைத் தூண்டுவதாக இந்நேர்காணல் அமைந்துள்ளது”.
‘சுந்தரம் : 1960களில் முகிழ்த்த மலையக வாழ்வியலின் ஒரு கீற்று’ என்ற கட்டுரை மிக முக்கிய சமூக வரலாற்றுப் பதிவாகும். சண்முகதாசன் தலைமையிலான செங்கொடிச் சங்கம், மலையகத்தில் கட்டியெழுப்பிய அரசியல் கலாசாரத்தினதும் வாழ்க்கை கோலத்தினதும் ஆவணமாக அக்கட்டுரை விளங்குகிறது. செங்கொடிச் சங்கம் மலையகத்தில் முன்னெடுத்த செயற்பாடுகள், அதனால் விளைந்த மாற்றங்கள் குறித்துப் போதுமான ஆவணப்படுத்தல்கள் இடம்பெறாத நிலையில், மேற்படி பதிவே அந்தப் பெரும் இடைவெளியை நிரப்புவதாக அமைந்துள்ளது. செங்கொடிச் சங்கத்தின் உச்சத்தையும் வீழ்ச்சியையும் அக்குறிப்பின்வழி அறிந்துகொள்ள முடிகிறது.
இடதுசாரி அரசியலும், அதனடிப்படையிலான விசுவாசமிக்க இயக்கச் செயற்பாடுகளும் எவ்வகையான மனிதர்களை உருவாக்கும் என்பதற்குச் சுந்தரம் சாட்சியாக விளங்குகிறார். இலக்கிய மாந்தர்களாக மட்டுமன்றி யதார்த்த மனிதர்களாக அத்தகைய மானுட நேயமிக்க, உழைக்கும் மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த மனிதர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கும் சுந்தரம் ஒரு சாட்சியாவார். அதேபோல மலையகத்தின் பிற்போக்கு தொழிற்சங்க அரசியல் நிலைப்பாடுகள், சமகால தொழிற்சங்க அரசியல் நடைமுறைகள் முதலானவற்றின் பலவீனத்தைக் கண்டறியவும் ஆரோக்கியமான தொழிற்சங்க அரசியலின் உயர்வைக் கண்டுகொள்ளவும் சுந்தரத்தின் வாழ்வு துணைசெய்கிறது.
ஜோதிகுமார் சர்வதேச அரசியல் நகர்வுகளையும் அதில் வல்லாதிக்கக் குழுவின் கொடூர முகத்தையும் அதனை எதிர்க்கும் குழுவின் ஆரோக்கியமான பக்கங்களையும் ஆழமாக பதிவுசெய்து வருவதுடன் அவற்றின் பின்னணியில் இலங்கை அரசியல் அசைவினை நுணுக்கமாக ஆராய்ந்து வருகிறார். நந்தலாலாவின் ஓர் இதழ் சர்வதேச உரையாடல்கள் என்ற மகுடத்திலேயே வெளிவந்து, மிகுந்த கவனத்தைப் பெற்றது இவ்விடத்தில் நினைவுகொள்ளத்தக்கது. அதன் தொடர்ச்சியில் சர்வதேச அரசியல் அசைவுகள் குறித்து கணிசமான கட்டுரைகளை ஜோதிகுமார் எழுதியுள்ளார். அவற்றுள் ‘மாறுகின்ற உலகமும் அமெரிக்காவும்’ என்ற கட்டுரை மட்டும் இத்தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சமகால உலக ஒழுங்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்களையும் அதன் விளைவுகளையும் ஆதாரங்களின் அடிப்படையில் தர்க்கபூர்வமாக அணுகுவதாக ‘மாறுகின்ற உலகமும் அமெரிக்காவும்’ என்ற கட்டுரை அமைந்துள்ளது. அமெரிக்கா எனும் ஒரு முனைநோக்கிய உலக ஒழுங்கு, பல் முனை உலக ஒழுங்காக மாறிவருவதையும் அதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளையும் ஆழமாக வெளிப்படுத்தியுள்ளார், ஜோதிகுமார். இலங்கையும் அச்சர்வதேச இழுபறிகளிலிருந்து விலகி இயங்க முடியாது என்பதால், அந்நகர்வு குறித்த அறிதல் அவசியமானதாக அமைகிறது. அது குறித்த ஆழமான அக்கறையின்மையாலும் மேலாதிக்கச் சக்திகளுக்குத் துணைபோவதாலுமே உக்ரேனுக்கான தமிழர் அமைப்பு முதலானவை உருக்கொள்கின்றன எனலாம். அவ்வகையில் சமகால உலக அரசியலின் முக்கிய அசைவுகளைத் தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படு்த்தும் பெரும் பணியை ஜோதிகுமார் அக்கட்டுரையில் மேற்கொண்டுள்ளார் எனலாம்.
மேற்கண்டவாறு ‘23ஆம் வயதில் பாரதி’ நூலிலுள்ள கட்டுரைகளைத் தொகுத்து நோக்கும்போது, தேர்ந்துகொண்ட பொருள் பற்றிய மிக விரிந்த தேடலுடனும் சிந்தனைத் தெளிவுடனும் தர்க்கபூர்வமாக எழுதப்பட்டுள்ள அக்கட்டுரைகள், கருத்தியல் வலுமிக்கவையாக விளங்குவதைக் காணமுடிகிறது. கோட்பாட்டு விபரிப்புகள் அற்று, இடதுசாரி கருத்தியலை, ஆய்வுப் பொருளுடன் பிணைத்து வெளிப்படுத்துதல் இக்கட்டுரைகளின் முக்கிய எடுத்துரைப்பு முறைமையாக அமைந்துள்ளது. ரஷ்ய படைப்பாளிகள், இலக்கியங்கள் பற்றிய கட்டுரைகளில் தமிழ் இலக்கியப் போக்கு ஒப்பிட்டு விளக்கப்பட்டுள்ளமை, தமிழ் இலக்கியங்களின் முற்போக்கானதும் பிற்போக்கானதுமான அம்சங்களைக் கண்டுதெளியக்கூடியதாகவும் தமிழ் வாசக மனதுக்கு நெருக்கமானதாகவும் அமைந்துள்ளது.
நூலிலுள்ள எல்லாக் கட்டுரைகளும் முன்நிறுத்தும் மைய இழையாக மானுட விடுதலை - மானுட வாழ்க்கை மேம்பாடு விளங்குகிறது. ஆதிக்கத்திலிருந்தும் அடக்குமுறையிலிருந்தும் விடுபட்டு, தான், தனது சுற்றம் என்ற குறுகிய எல்லைகளிலிருந்து வெளியேறி, மக்கள்சாரியை நேசிக்கும், அவர்கள் மீது பரிவைக் காட்டும், அவர்களை அரவணைக்கும் குரல் அவற்றின் அடிநாதமாக இருக்கிறது.
கார்ல் மார்க்ஸ் குறிப்பிடும், பூரண மானுட விடுதலைக்கான வித்தாக அமையும் முளைகளின் பண்புகளே, இந்நூல் கொண்டாடும் ஆளுமைகளிடம் வெவ்வேறு தளங்களில் வெளிப்பட்டுள்ளன. அவற்றைத் திரட்டி, தர்க்கபூர்வமாக ஒழுங்குபடுத்தி, ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும் பெரும் பணியை ஜோதிகுமார் நேர்த்தியாக முன்னெடுத்துள்ளார். அவ்வகையில், மார்க்ஸ் குறிப்பிடும் புதிய முளைகளின் பண்புகளைக் கொண்ட ஆளுமைகளுடைய சித்திரத்தைத் தீட்டிக்காட்டும் முயற்சி இந்நூலில் இடம்பெற்றுள்ளது எனலாம். அச்சித்திரம், ஜோதிகுமார் என்ற புலமையாளன், வாழ்வு குறித்தும் மக்கள் விடுதலை குறித்தும் மக்களை நேசித்த ஆளுமைகள் குறித்தும் கொண்டுள்ள பார்வையையும் ஒருங்கே வெளிப்படுத்தி நிற்கிறது. அதீத தனிமனிதவாதமும் மனவிசாலமற்று உட்சுருங்கும் தன்மையும் பெருகிவரும் தற்காலத்தில் இந்நூல் முன்நிறுத்தும் விடயங்கள், ‘மானுடன் தன்னைக் கட்டிய தளைகளை அறுக்கத்’ துணை செய்வனவாகும்.
(நந்தலாலா இலக்கிய வட்டம் 24.01.2026 அன்று ஹட்டனில் நடத்திய எல்.ஜோதிகுமாரின் 23ஆம் வயதில் பாரதி நூல் வெளியீட்டில் ஆற்றிய கருத்துரையின் விரிவாக்கப்பட்ட வடிவம்)



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









