திராவிட இலக்கிய கர்த்தாக்களில் பாரதிதாசன் - சந்திரகெளரி சிவபாலன்
தமிழர்க்குத் தொண்டு செய்யும் தமிழ னுக்குத்
தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய்ப் போகும்
தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை
தமிழ்த் தொண்டன் பாரதிதாசன் செத்த துண்டோ
திராவிட இலக்கிய கர்த்தாக்களினால் படைக்கப்பட்ட இலக்கியங்களே திராவிட இலக்கியங்கள். இங்கு திராவிடம் என்றால் என்ன? திராவிடர் என்பவர்கள் யார்? என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஆய்வாளர் சமரன் நாகன் அவர்களின் ஆய்வின்படி "திருவிடர்கள்" அதாவது திரு இடத்தில் வசிப்பவர்கள் என்கின்ற ஒரு கருத்தைச் சொல்லுகின்றார். உதாரணமாக திருத்தணி, திருஅண்ணாமலை, திருப்பரங்குன்றம், திருஅனந்தபுரம், திருப்பதி இவ்வாறு தமிழர்களின் மிகச் சிறந்த ஊர்கள், இடங்களின் பெயர்களுக்கு முன்பு திரு என்பதை சேர்ப்பது வழக்கம். ஏன் மதிப்புறு பேரறிஞர்களுக்கும் திரு என்னும் அடைமொழி வைப்பது வழக்கமே. உதாரணமாகத் திருவள்ளுவரை நாம் கூறக்கூடியதாக இருக்கிறது. அதேபோல் திரு, திருமதி போடுகின்ற வழக்கம் எல்லாம் இருக்கிறது. ஆனால், இது முழுக்க முழுக்க தமிழ்ச் சொல். ஆகவே தமிழ் அறிஞர்கள் வசித்த இடம் திருவிடம். அதனால், அவர்கள் திருவிடர்கள் என்று அழைக்கப்பட்டனர். திருவிடர்கள் திராவிடர்கள் என்று வந்தது என்று ஆய்வாளர் சமரன் நாகன் அவர்களின் ஆய்வினை ஊடகவியலாளர் கே. எம். விஸ்வநாத், அவர்கள் எடுத்துக் கூறுகின்றார.