நனவிடை தோய்தல்: நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் (17) - மறக்க முடியாத தமிழ் ஆசான் சிவராமலிங்கம்பிள்ளை மாஸ்டர் - இந்து.லிங்கேஸ் -
கல்லூரிமணி நாளொன்றுக்கு எத்தனை தடவை ஒலிக்கும்? அந்த மணியில் எத்தனை பறவைகள் குந்தியிருந்து விட்டு மீண்டும் பறந்துபோயிருக்கும்? நினைத்தவுடன் மணியில் குந்தவோ, மறுபடியும் அங்கு சங்கமிக்கவோ அவைகளால் முடியும். ஆனால் எமக்கு?
நினைத்தவுடன், விரும்பியவுடன் பறந்துபோய் அந்த உறவோடு பேச முடியுமா? அல்லது எம் கையால் கல்லூரி மணியை ஓங்கி ஒலிக்கும் வரையிலும் அடிக்க முடியுமா? பிரிய முடியாமல் அன்று எம் கல்லூரியைப் பிரிந்தபொழுது கடைசி மணி அன்று,எத்தனை மணிக்கு எம்மோடு பேசி எம்மை வழியனுப்பியது என யாருக்காவது நினைவிருக்கின்றதா? தாயின் மடியும் சரி, பள்ளிக்கூட மணியும் சரி நாம் வாழ மனசார வாழ்த்தும் உறவுகள்.
எங்கள் கல்லூரியிலிருந்து அன்று தொட்டு இன்றுவரை எனக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் ஆசான் திரு.சிவராமலிங்கம்பிள்ளை அவர்கள். சிவராமலிங்கம்பிள்ளை மாஸ்ரர் என்றால் காலம் முழுவதும் பேசிக் கொண்டே போகலாம்.சமயம், தமிழ், இலக்கியம்,ஆங்கிலம் என அனைத்தையும் கரைத்துக்குடித்தவர். எப்போது அவரின் பாடம் வரும் எனக்காத்திருந்த காலமது. அவர் மீதும், அவரின் கற்பிக்கும் ஆற்றல்மீதும் அவ்வளவு ஆசை.