முன்னுரை

இராவணன், குபேரனுடன் போரிட்டு இலங்கை மற்றும் அவனுடைய புட்பகவிமானத்தையும் கைப்பற்றிக் கொண்டு அந்த விமானத்தில் ஏறி வெற்றிக் களிப்புடன் பறந்து வந்து கொண்டிருந்தான். அப்போது கயிலாயமலைக்கு அருகில் வரும்போது, நந்தியம்பெருமான் இராவணனிடம் இது சிவன் வாழும்பகுதி இங்கே பறக்கக்கூடாது என்று கூறினார். கோபம் கொண்ட இராவணன் சிவன்மேல் அதிக அளவு பக்தி கொண்டவன் என்றாலும், ஆணவத்தினால் அந்தக் கயிலாயமலை தனக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று எண்ணி, அதைப் பெயர்த்தெடுக்க முயன்றான். அதை அறிந்த சிவபெருமான் தன் கால் கட்டை விரலால் லேசாக அழுத்த, கைகளுடன் அவன் மலையின் கீழ் மாட்டிக் கொண்டான்.தன் தவறுஉணர்ந்த இராவணன் சாமகானம் பாட, அதனால் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு சந்திரகாசம் என்ற வாளும், ஆத்மலிங்கமும் பரிசளித்தார். சிவபெருமான் இருந்த மலையைப் பெயர்க்க எண்ணியதே தவறு. அந்த முயற்சியால் அவன் பல்லாண்டு காலமாகத் துன்பப்பட்டான். இறைவனின் பெருங் கருணையால் உயிரும் வாளும், ஆத்மலிங்கமும் பெற்றான் என்றாலும், ஊருக்குள் வந்து தான் கயிலாயமலையைப் பெயர்த்தேன் அதனை மெச்சியே சிவபெருமான் வாளும், ஆத்மலிங்கமும் தந்தார் என்று கூறி அனைவரையும் நம்ப வைத்தான்.என்ன நடந்தாலும் அதனை மறைத்து இது தான் நடந்தது என்றே சொன்னால் மக்கள் நம்புவர் என்பதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.கம்பராமாயணத்தில் இராவணனும் கயிலாயமலையும் என்பதைக் குறித்து ஆராய்வோம்.

கலித்தொகை

இமயத்தை வில்லாக வளைத்த பரமசிவன் உமையாளுடன் கயிலையிலே வீற்றிருந்தான். அப்பொழுது 10 தலைகளை உடையவனான அரக்கர்களின் தலைவரான இராவணன் காப்புப் பொழியும் தன் வலிமையான கைகளை மலையின் கீழே புகுத்தி அதை எடுக்க முயன்றான். எடுக்க முடியவில்லை மலையின் கீழ் மாட்டிக் கொண்டு வருந்தினார்.

"இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக
ஐயிறு தலையின் அரக்கன் கோமான்
தொடிப்பொலி தடங்கையின் கீழ் புகுந்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல"
(38 கலித்தொகை)

பக்தி இலக்கியத்தில்

இராவணன் ஆணவத்தோடு கயிலையைத் தூக்க , அதன்கீழ் நசுக்குண்டான்.அதிலிருந்து மீழ்வதற்காகசிவதாண்டவ தோத்திரம்பாடி சிவனைக் குளிர்வித்தார்.சிவபெருமான் சந்திகாசம் வாளை வழங்கினார் திருநாவுக்கரசர் தமது, திருக்கயிலாயம் பதிகத்தில்

“கனகமா வயிர முந்து மாமணிக் கயிலை கண்டும்
உனகனா யரக்க னோடி யெடுத்தலு முமையாளஞ்ச
அனகனாய் நின்ற வீச னூன்றலு மலறி வீழ்ந்தான்
மன்னாயூன்றி னானேன் மறித்துநோக்கில்லை யன்றே”
(திருக்கயிலாயம் பதிகம் 4:47:456)
பாடியுள்ளார்.

கயிலாயமலையைப் பெயர்த்ததாக இராவணன் கூறல்

இராவணனுக்கு இயற்பெயர் தசகிரீவன். கயிலாயத்தில் சிவன் பார்வதியோடு இருந்த பகுதியை தன் தோள் வலிமையினால் 20 கைகளினால் அடியோடு பெயர்த்து எடுக்க முயற்சி செய்ய, அந்தப் பகுதி சற்று இடம் பெயர அதனைத் தூக்குவதற்காகத் தன்னுடைய கைகளை முழுமையாக நுழைத்த உடனே சிவன் தன் சேவடிக்கொழுந்தால் மலையைப் பெயராதவாறு அழுத்த, கைகள் மலையின் உள்ளே அகப்பட்டன. கைகளை வெளியே எடுக்கவும் முடியாமல், வலி தாங்கவும் முடியாமல் பெரிதாக குரல் எடுத்துக் கதறினான். அதனால் “பெரிய குரல் எடுத்து கதறுபவன்” என்ற பொருள்படும் “இராவணன்” என்று சிவன் கூறினார். அதன் பின் சிவபெருமானை வழிபட்டு இராவணன் வரமும், சந்திரகாசம் என்ற வாளும் பெற்றான். பத்து தலைகளில் ஒரு தலையை வெட்டி ஒரு கையையும் வெட்டி வீணை போல் அமைத்து சாமகானம் பாடி சிவபெருமானை வழிபட்டான். இராவணனின் சிவ பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், வரமும், வாளும் தந்தருளினான். இதையே இராவணன் கயிலாய மலையைத் தான் பெயர்த்து எடுத்ததாகவும், அவனுடைய பேராற்றலைக் கண்டு சிவன் வரமும், வாளும் தந்ததாகவும் செய்தியைப் பரப்பி அனைவரையும் நம்பச் செய்திருந்தான். கதறி அழுதவன் இராவணன் ஆனால் ’பிறர் கதறி அழும்படி செய்தவன்’ என்ற பொருள்படும்படியாக மற்றவர்களிடம் கூறி நம்பவும் செய்தவன். அதனால்தான் உண்மை என்று நம்பியே மக்களும் பேசினர்.

வீடணன், இராவணனுக்கு அறிவுரை கூறல்

இராவணன் மந்திரப்படலத்தில் வீடணன், இராவணனுக்குப் பலவாறாக அறிவுரை கூறுகிறான்.எல்லை இல்லாத வன்மை கொண்ட மன்னனே, மிக உயரமான கயிலாயமலையை நீ பெயர்த்து எடுத்த முற்காலத்தில், நான்கு தோள்களையுடைய நந்தி இட்ட சாபத்தால், வால் உள்ள பெரிய குரங்குகள் உனக்குக் கேடு உண்டாக்கும் என்னும் அதனை, வாலியிடம் நீ தோல்வி கண்டதால் அறிந்தோம் என்று கூறினான்.

“மேல் உயர் கயிலையை எடுத்து மேலைநாள்
நாலு தோள் நந்திதான் நவின்ற சாபத்தால்“
(இராவணன் மந்திரப்பலம் 91)

இராவணன், கயிலாயமலையைப் பெயர்த்தெடுத்தான் என்று வீடணனும் நம்பியதை அறிந்து கொள்ளமுடிகிறது.

ராவணன், வீடணனிடம் தன் பெருமையைத் தானே பேசினான்

மந்திரப்படலத்தில் அறிவுரை கூறிய வீடணனுக்கு, இராவணன் பெருங்கோபத்துடன், உலகத்துடன் எட்டு திசையானைகளையும் தன் ஆற்றலால் தாங்கும் திசையானைகளை இலகச் செய்த, தீ வண்ணனான சிவபெருமானை வெள்ளி மலையுடன் பெயர்த்தெடுக்கவும் நான் வரம் பெற்றதுண்டா? இல்லையே எனவே நீ தீங்கைக் கூறினாய் என்றான்.

“தாங்கும் யானையைத் தள்ளி அத்தழல் நிறத்தவனை
ஓங்கல் ஒன்றொடும் எடுக்கவும் வரம் கொண்டது உண்டோ?”
(இராவணன் மந்திரப்படலம் 113)

இராவணன், வீடணனிடம் கயிலாயமலையைப் பெயர்த்தெடுக்க சிவபெருமானிடம் நான் வரம் பெறவில்லை என்று கூறுவதிலிருந்து தான் கயிலாயமலையைப் பெயர்த்தவன் என்று கூறுகிறான்.

இராவணன், சீதையிடம் தன் பெருமையைத் தானே பேசினான்

கிழவேடத்தில் இருந்த இராவணன், சீதையிடம் பேசும்போது அவனே, இராவணனின் பெருமையைப் பலவாறாகப் பேசும்போது (கயிலையங்கிரியை வேரோடு பறிக்கும் ஆற்றல் உடையவன் என்று தன் பெருமையைத் தானே பேசுகிறான்).இராவணன், சிவபெருமான் வீற்றிருக்கும் புகழ் பொருந்திய கயிலாயமலையை முன்னொரு காலத்தில், அதனுடைய ஊசி போன்ற சிறிய வேறொடு பறித்து எடுத்த வலிமை உடையவன் என்று தன் பெருமையைத் தானே பேசுகிறான்.

“ஈசன் ஆண்டு இருந்த பேர் இலங்கு மால் வரை
ஊசி வேரொடும் பறித்து எடுக்கும் ஊற்றத்தான்”
(சடாயு உயிர் நீத்த படலம் 844)

இராவணன் தற்பெருமையாக சீதையிடம் கூறியதை அறியமுடிகிறது.

கந்தர்வன் தும்புரு இசையால் பாடுகிறான்

இராவணன் அவையில் இசை வழங்கும் கந்தர்வன் தும்புரு. திக்கு யானைகளை வென்ற பெருமைகளையும்,சிவனும் பழியடையும்படி கயிலைமலையைப் பெயர்த்த சாதனையையும்,புரந்தரனைப் போரில் அடக்கிய கீர்த்தியையும்அவர் பாடுகிறார்.

“திசை உறு கரிகளைச் செற்று தேவனும்
வசையுறக் கயிலையை மறித்து வான் எலாம்”
(சூர்ப்பணகை சூழ்ச்சிப்படலம் 563)

இராவணன் கயிலாயமலையைப் பெயர்த்தெடுத்ததை தும்புரு நம்பினார் என்பதை அறியமுடிகிறது.

மண்டோதரி புலம்பல்

இராவணன் இறந்தவுடன் அங்கு வந்த மண்டோதரி அவனது உடலைப்பார்த்து புலம்புகிறாள்.

"வெள் எருக்கஞ் சடை முடியான் வெற்புஎடுத்த
திருமேனி, மேலும் கீழும்
எள் இருக்கும் இடம் இன்றி, உயிர் இருக்கும்
இடன் நாடி, இழைத்தவாறோ."
(இராவணன் வதைப்படலம் 3879)

என்ற பாடலில் சிவபெருமானுடைய கயிலையங்கிரியை திக் விசயகாலத்தில் தூக்கிய இராவணனது திண்மை வாய்ந்த மேனி, மேலும் கீழுமாக எள் இருக்கும்இடம் இன்றி, உயிர் இருக்கும் இடம் நாடித் தடவியதோ என்று கேட்கிறாள்.

இராவணன் கயிலாயமலையைப் பெயர்த்தெடுத்ததை மண்டோதரி நம்பினாள் என்பதை அறியமுடிகிறது.

இந்திரசித், தந்தையின் பெருமைப் பேசுதல்

இந்திரசித் நிகும்பலையாகம் தடைபட்ட பின் இதற்குக் காரணம் சித்தப்பா வீடணனே என்ற கோபத்தில் அவரிடம், தன் தந்தையான இராவணனின் பெருமையைக் கூறும்போது,என் தந்தை இத்தனைக்காலம் தேவர்கள் தம் அடியை வணங்கும்படியாக ஆட்சி செய்தவன்.சிவபெருமான் இருக்கும் கயிலாயத்தையேப் பெயர்த்து எடுக்கும்படியாக பேராற்றலைப் பெற்றவன். நீ இப்போது சரணடைந்திருக்கிறாயே அந்த மானிடர் இருவர் உதவியோடா என்று பேசுகிறான்.

“முந்தை நாள் உலகம் தந்த மூத்த வானோர்கட்கு எல்லாம்
தந்தையார் தந்தையாரைச் செருவிடைச் சாய்த்துத் தள்ளி
கந்தனார் தந்தையாரை கயிலையோடு ஒரு கைக் கொண்ட
எந்தையார் அரசு செய்வது இப்பெரும் பலம் கொண்டேயோ”
(நிகும்பலை யாகப்படலம் 3040)

தேவர்களின் தந்தையையும், முருகப்பெருமானின் தந்தையையும்விட பலசாலியானவர் என் தந்தை என்று பெருமிதத்துடன் இந்திரசித் பேசுகிறான்.

அப்போது தன் தந்தை கயிலாய மலையைத் தூக்கியவன் என்று பெருமையாகப் பேசுகிறான் என்பதை அறியமுடிகிறது.

இராவணனுடன் இந்திரஜித் பேச்சு

பாசப் படலத்தில் இராவணனுடன் இந்திரஜித் பேசும்போது, திசை யானைகளின் வலிமையினையும், முற்காலத்தில் முப்புரத்தையும் எரியும் படி அழித்த முக்கண்ணனான சிவனது கயிலையும், மூன்று உலகங்களையும் வென்றாய். இன்று அக்ககுமாரனைக் கொன்றுவிட்டு, இன்னும் இங்கேயேத் தங்கி இருக்கும் இக் குரங்கை, முதலிலேயே வெல்லாமல், அவன் வலிமை எவ்வளவு என்று வேடிக்கைப் பார்க்கிறாய். அது கிங்கரர் முதலாகப் பலரையும் கொன்ற பின்பு ’அதனை வெல்வோம்’ என்று சொன்னால் அது பிதற்றல் அல்லாமல் பேரறிவாகுமோ?

“திக்கய வலியும் மேல் நாள் திரிபுரம் தீயச் செற்ற
முக்கணன் கையிலையோடும் உலகு ஒரு மூன்றும் வென்றாய்”
(பாசப் படலம் 993)

இராவணன் கயிலாயமலையைப் பெயர்த்தெடுத்ததை இந்திரசித் நம்பினான் என்பதை அறியமுடிகிறது.

இராவணனின் ஆற்றல் குறித்து மகோதரன்

இராவணன் மந்திரப்படலத்தில் மந்திராலோசனையில் அமைச்சர் மகோதரன் பேசும்போது, வெள்ளிமலையான கயிலாயமலையைக், காளையை ஏறி நடத்துபவனான சிவனோடும் வானத்தில் படும்படி எடுத்து அந்தச்சிவனும் மகிழுமாறு சாமகானம் செய்த பேராற்றல் கொண்டவனே, மரத்தின் சிறிய கிளையிலிருந்து வாழும் இயல்புடைய ஒரு குரங்கின் தோள்வன்மைக்கு முன்னே உன் தோள் வலிமையை எங்கள் ஆற்றலுடனே இகழ்ந்து கூறுவாய் போலும் என்றான்.

“வெள்ளிடம் கிரியினை விடையின் பாகனோடு
அள்ளி விண் தொட எடுத்து ஆர்த்த ஆற்றலாய்
சுள்ளியில் இருந்து உறை குரங்கின் தோள் வலிக்கு
எள்ளுதி போலும் நின் புயத்தை எம்மொடும்”
(இராவணன் மந்திரப்படலம் 36)

கும்பகர்ணன் வதைப்படலத்தில் மகோதரன் உறுதிமொழிகள் கூறும்போது திரிபுரங்கள் எரியும்படி அங்கே ஒப்பற்ற -சிறந்த அம்பைச் செலுத்திய சிவபெருமானும், இந்த உலகங்கள் மூன்றையும் ஓர் அடிக்குள்ளே அடங்கச் செய்த திருமாலும் போரிட்டு உன்னிடம் தோற்றுப் போனார்கள். அரசனே, கயிலை மலையை அசைத்தவனே, மனிதர்கள் புரிந்த போருக்கு நீ அஞ்சுவாய் போலும் என்று கூறினான்.

“பொருது உனக்கு உடைந்து போனார் மானுடர் பொருத போர்க்கு
வெருவுதி போலும் மன்ன கயிலையை வெருவல் கண்டாய்”
(கும்பகர்ணன் வதைப்படலம் 1248)

இராவணன் கயிலாயமலையைப் பெயர்த்தெடுத்ததை மகோதரன் நம்பினான் என்பதை அறியமுடிகிறது.

துர்முகன் பேசியது

இராவணன் மந்திரப்படலத்தில் துர்முகன், உன் வலிமைக்கு முன்னே எட்டுத் திக்கு யானைகளும் வலிமையற்றுப் போயின. தேவர்களும் வன்மை அடங்கப் பெற்றனர். மூன்று கண்களையுடைய சிவபெருமானின் கயிலாயமலையும் வலியற்றதாகியது. இப்படிப்பட்ட வலிமை கொண்ட நின் முன்னே மக்களும், குரங்குகளுமே வலிமையுடையவர்கள் என்றால் ஆ, இந்த இராவணனான உனக்கு அமைந்த ஆற்றல் வியக்கத்தக்கதே என்றான்.

“திக்கயம் வலி இல தேவர் மெல்லியர்
முக்கணான் கயிலையும் முரண் இன்றாயது
மக்களும் குரங்குமேவலியர் ஆம் எனின்
அக்கட இராவணற்கு அமைந்த ஆற்றலே”
(இராவணன் மந்திரப்படலம் 43)

இராவணன் கயிலாயமலையைப் பெயர்த்தெடுத்ததை துர்முகன் நம்பினான் என்பதை அறியமுடிகிறது.

படைத்தலைவன் பிரகத்தன் பேசினான்

ஒற்றுக் கேள்விப் படலத்தில் பாட்டன் மாலியவான் இராவணனுக்கு அறிவுரைகள் பல கூறினான்.அங்கிருந்த படைத்தலைவன் பிரகத்தன்,

இராவணனிடம், நீ பகைவர்க்கு அஞ்சினாய்.குரங்கினத்தார் மலைகளைப் பெயர்த்தெடுத்து வளைந்த கடலில் எறிந்தனர் என்னும் ஒரு வீரச் செயலையே சொல்வாய். இவன் கயிலைமலையைப் ஊசிவேரேடும் அதில் வீற்றிருக்கும் சிவனோடும் பெயர்த்து எடுத்ததில்லையோ என்று கேட்டான்.

“கூசி வானரர் குன்று கொடி இக்கடல்
வீசினார் எனும் வீரர் விளம்புவாய்
ஊசி வேரொடும் ஓங்கலை ஓங்கிய
ஈசனோடு மெடுத்ததும் இல்லையோ”
(ஒற்றுக் கேள்விப்படலம் 737)

இராவணன் கயிலாய மலையைப் பெயர்த்தெடுத்ததைப் படைத் தலைவன் பிரகத்தன் நம்பினான் என்பதை அறியமுடிகிறது.

இலங்கை மக்கள் பேச்சு

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலத்தில் சூர்ப்பணகையைக் கண்ட இலங்கை மக்கள், துயரம் அடைந்து தங்களுக்குள் புலம்பிக் கொண்டனர். அவிழ்ந்து சரிந்த கூந்தலுடைய அரக்க மகளிர் சிலர், சிவனது கயிலாய மலையைத் தன் உள்ளங்கையில் ஏந்திய வல்லமையுள்ள இராவணனுக்குத் தங்கையான சூர்ப்பணகையின் உயர்ந்த நிலைமை இங்கு இவ்வாறு இழிவடைந்ததோ என்று கூறிச் சோர்வுற்று, இரு கொங்கைகளையும் சிவந்த தம் கைகளால் அடித்துக்கொண்டு, சூர்ப்பணகையின் காலடியில் வந்து விழுந்தனர்.

“அங்கையின் அரன் கயிலை கொண்ட திறல் ஐயன்
தங்கை நிலை இங்கு இது போல் என்று தளர்கின்றார்”
(சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 594)

இராவணன் கையால் கயிலாயமலையைத் தூக்கினான் என்று இலங்கை மக்களும் நம்பினர் அதனால் கூறினர் என்பதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

மாரீசன் அறிவுரைக்கு இராவணன் பதில்

மாரீசன் வதைப் படலத்தில் மாரீசன் அறிவுரை கூறியதற்கு வெகுண்டு இருந்த இராவணன் மாரீசனிடம் கங்கை ஆற்றைத் தன் சடையில் தங்கச் செய்த சிவனோடு அவனது கயிலை மலையை, ஓர் உள்ளங்கையால் அள்ளி எடுத்த ஆண்மைத் தொழில் புரியும் என் அழகான தோள்கள், இப்போது ஓர் அற்ப மனிதனுக்குத் தோற்கும் எளிமை பெற்றன என்று நீ கூறிவிட்டாய் என்று சொல்லி தன் கொடிய கண்கள் அனலாக எரிய புருவங்கள் நெறித்து நெற்றியின் மேலே செல்ல, பெருங்கோபம் கொண்டான்.

“கங்கை சடை வைத்தவனொடும் கயிலை வெற்பு ஓர்
அங்கையின் எடுத்த எனது ஆடு எழில் மணித்தோள்”
(மாரீசன் வதைப் படலம் 740)

இராவணன் கயிலாயமலையைப் பெயர்த்தெடுத்ததை மாரீசன் நம்பினான் என்பதை அறியமுடிகிறது.

கவிக்கூற்று 1

ஜடாயு உயிர் நீத்த படலத்தில் இராவணனுடன் ஜடாயு போரிடல் குறித்துக் கூறும்போது, ஒளி வீசுகின்ற வெள்ளிமலையான கயிலைமலையை, அதில் வீற்றிருந்த சிவபெருமானோடு மற்போரில் வல்ல தன் தோளினால் பெயர்த்தெடுத்தவனான இராவணனது வில்லைத் தன் வாயினால் பறித்துக் கவ்விக்கொண்டு, வானவில்லைத் தோற்றுவித்துக் கொண்டு ஆகாயத்தில் உயர்ந்து விளங்கிய ஓர் பெரிய மேகம் போலத் திகழ்ந்தான் ஜடாயு. ஜடாயுவின் தோளினது வலிமையைச் சொற்களைக் கொண்டு சொல்ல வல்லவர் எவர் உள்ளனர். எவரும் இல்லை.

“எல் இட்ட வெள்ளிக் கயிலை பொருப்பு ஈசனோடும்
மல் இட்ட தோளால் எடுத்தான் சிலை வாயின் வாங்கி”
(ஜடாயு உயிர் நீத்த படலம் 915)

கவிக்கூற்று 2

கடல் தாவு படலத்தில் மகேந்திர மலையில் நிகழ்ந்த குழப்பம் அனுமன் அடியூன்றிய பாரத்தைப் பொறுக்க முடியாமல் மகேந்திர மலை வெடித்தது. அதனால் நடுக்கம் எய்திய மயில் போன்ற மனைவியர் அம்மலையில் இருந்த தன் கணவராகிய தேவர்களைத் தழுவிக் கொண்டனர். தேவர்கள் ஒவ்வொருவரும், இராவணன் கயிலை மலையைத் தூக்க, அஞ்சிய பார்வதி தழுவிக் கொண்ட சிவபெருமானை ஒத்திருந்தனர்.

“அயில் எயிற்று அரக்கன் அள்ளத் திரிந்த நாள் அணங்கு புல்லக்
கயிலையில் இருந்த தேவைத் தனித்தனி கடுத்தல் செய்தார்”
(கடல் தாவுபடலம் 11)

இராவணன் கயிலாயமலைப் பெயர்த்தெடுத்ததை கவிக்கூற்றாகவும் அமைந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.

இலங்கையின் மாட்சி குறித்து அனுமன்

ஊர் தேடு படலத்தில் இலங்கையின் மாட்சியை நோக்கி அனுமன் மனதைப் பறிகொடுத்தல் குறித்துக் கூறும் போது முன்பு கயிலை மலையை எடுத்த இராவணன் தேவர்கள் நமக்குத் தீங்கு செய்யத்தக்கவர்கள் அதனால் அவர்கள் தன் ஊரிலிருந்து வெளிவரும் வாயிலைப் பயன்படாமல் செய்து, அதையும் கடந்த உயரத்தில் மதிலை அமைப்பேன் என்று எண்ணி ஆகாயம் எனும் இடம் முழுவதையும் கடந்து உயர்ந்த நல்ல மதிலை அமைத்து விட்டான் என்று என்று அனுமன் எண்ணினார்.

“காயம் என்னும் அக்கணக்கு அறு பதத்தையும் கடக்க
ஏயும் நன் மதில் இட்டனன் கயிலையை எடுத்தான்”
(ஊர் தேடுபடலம் 116)

அனுமன் பேசியது

முதல் போர்புரி படலத்தில் அனுமன் இராவணனோடு நிகழ்த்திய வீர உரையில் விரிவாகப் பலவற்றைக் கூறி என்ன பயன்? பரவிய கயிலையாகிய பெரிய மலைக்கும், செந்திறம் கொண்டு எரிக்கின்ற தீப்பொறி பறக்கின்ற விழிகளுடைய திக்கு யானைகளுக்கும் சிறிதும் பின்வாங்காத வலிமைத் திரளையுடைய உயர்ந்த இருபது தோள்களை உடையவனே, வலியவனே, இனிக் குரங்கு தன் ஒப்பில்லாத கையால் குத்தும் குத்தினைத் தாங்க வல்லாயோ என்று அனுமன் கூறினார்.

“பரக்கப் பல உரைத்து என் படர் கயிலைப் பெருவரைக்கும்
அரக்குற்று ஏறி பொறிக்கண் திசைக்கரிக்கும் சிறிது அனுங்கா”
(முதல் போர்புரி படலம் 1122)

இராவணன் கயிலாயமலையைப் பெயர்த்தெடுத்ததை அனுமன் கூறியதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது

அதிகாயன் குறித்து வீடணன்

அதிகாயன் வதைப்படலத்தில் அதிகாயன் திறமையை வீடணன் பகரும்போது காடுகள் நிறைந்த கயிலை மலையை அங்கு வீற்றிருந்த சிவபெருமானுடன் இருந்த இடத்திலிருந்து பெயர்த்து எடுத்த இராவணனே, உலகத்தில் பல தெய்வங்களுடன் கூடிய வடமேரு மலையை அகழ்ந்து எடுப்பதற்காக அதற்கேற்ற வலிமை பெறுமாறு இந்த அதிகாயனை வளர்த்தான்.

“கடம் ஏய் கயிலைக் கிரி கண்ணுதலோடு
இடம் ஏல எடுத்தவனே இவனே
திடனே உலகில் பல தேவரோடும்
வடமேரு எடுக்க வளர்தனனால்”
(அதிகாயன் வதைப் படலம் 1725)

வீடணன் கூறியதையும், தன்னைப்போல தன் மகனும் வடமேருமலையை எடுக்கவேண்டும் என்பதற்காகவே வலிமை பெறுமாறு வளர்த்தான் என்பதையும் அறிந்து கொள்ளமுடிகிறது.

முதல் போர் புரி படலத்தில் இராவணன் தானே போருக்குச் செல்ல துணிந்தபோது கயிலை மலையை பெயர்த்து எடுத்தவனான இராவணன் மிகுந்து செய்கின்ற போரில் நிகழ்ந்தவைகளை எல்லாம் நன்கு ஆராய்ந்து புண் பிறத்தார் போன்ற செந்திலமான கண்களை உடையவனாய் சிந்து மிக்க வலிமையுடைய தேரை ஆராய்ந்து அதில் ஏறினான்

“மண்டுகின்ற செருவின் வழக்கெலாம்
கண்டு நின்று கயிலை இடந்தவன்
புண் திறந்தன கண்ணினன் பொங்கினான்
திண் திறல் நெடுந்தேர் தெரிந்து ஏறினான்”
(முதல் போர் புரிபடலாம் 1051)

உண்மையிலேயே இராவணன் கயிலைமலையைப் பெயர்த்தெடுத்தானா?

நிந்தனைப் படலத்தில் சீதை, இராவணனிடம் கயிலை மலையை நீ எடுத்தபோது கால் விரலால் அழுத்தி உன்னை வென்ற சிவபெருமான் திரிபுரங்கள் தீ பற்றி எரியும் பொருட்டு ஒப்பற்ற ஒரு அம்பைச் செலுத்துவதற்கு வில்லாக இருந்தது மேருமலை அந்த மேரு மலையாகிய சிவனதுவில் என் கணவனின் வலிமையைத் தாங்கும் வல்லமை அற்றதாய் முறிந்து வீழ்ந்த போது எழுந்த பேரொலியினை நீ கேட்கவில்லை போலும் அது என்ன அதிசயம் என்று கேட்கிறாள்

“குன்று நீ எடுத்த நாள் தன் சேவடிக்கொழுந்தால் உன்னை
வென்றவன் புரங்கள் வேவத் தனிச்சரம் துரந்த மேரு
என் துணைக் கணவன் ஆற்றற்கு உரன் இலாது இற்று வீழ்ந்த
அன்று எழுந்து உயர்ந்த ஓசை கேட்டிலை போலும் அம்மா”
(நிந்தனை படலம் 450)

இராவணன், சிவன் வீற்றிருக்கும் கயிலாயமலையைத் தூக்க முயற்சி செய்தான். ஆனால் அடியில் மாட்டிக் கொண்டு பெருங்குரலெடுத்து அழுதான் என்பதை சீதை அறிந்திருந்தாள் என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.

வானரர்கள் கூற்று

ஆறு செல் படலத்தில் வானரர்கள் பாண்டு மலையின் சிகரத்தை அடைந்தபோது, அந்தப் பாண்டு மலை, உலகத்தில் பரவிய இருளைத் தாக்கி ஒழித்து வானத்தில் எழுந்து தோன்றிய சந்திரன் வியப்பை உண்டாக்கும் செழுமையான நிலவின் ஒளி வீசுவதால், மனத்தில் அருள் சிறிதும் தோன்றுதல் இல்லாத அரக்கனான இராவணன் மீது, அவன் கீழே விழுந்து உருளும்படி அழுத்திய வலிய கயிலாய மலையைப் போன்றது

“அருள் உறுத்திலா அடல் அரக்கர் மேல்
உருள் உறுத்த திண் கயிலை ஒத்ததால்”
(ஆறு செல் படலம் 909)

இராவணன் கயிலாயமலைப் பெயர்த்தெடுத்தபோது நடந்தது என்ன என்பதை வானரர்கள் அறிந்து வைத்திருந்தனர் என்பதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

இராவணனின் தோற்றம், பெருமை

திக்கு யானைகளுடன் போர் செய்யும் மார்பும், கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த தோளும், இசையிலே வல்ல நாரதமுனிவனும் மிகச் சிறந்தது என்று ஏற்றுக் கொள்ளும்படி இனிய இசை வழங்கும் நாவும், மாலை சூடிய மகுடங்கள் பத்தும், மகேசுவரன் வழங்கிய வாளும் தன்னிடமிருந்து அதுவரை அகலாத வீரமும் உடையவன் என்று அவன் பெருமையை அறியமுகிறது.

"வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த
தோளும் நாரத முனிவற்கு ஏற்ப தயம்பட உரைத்த நாவும்
தார் அணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்தவாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு மீண்டு போனான்"
( கும்பகருணன் வதைப் படலம் 1213)

இராவணனுடைய பெருமையை அறிந்து கொள்ள முடிகிறது.

"முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய
பெருந் தவமும் முதல்வன் முன்நாள்
எக்கோடி யாராலும் வெலப்படாய்
எனக் கொடுத்த வரமும் ஏனைத்
திக்கொடும் உலகு அனைத்தும் செருக் கடந்த
புய வலியும் தின்று மார்பில்
புக்கு ஓடி உயிர் பருகிப் புறம் போயிற்று
இராகவன் புனித வாளி"
(இராவணன் வதைப் படலம் 3838)

இப்பாடலில் இராகவனது தூய்மை பொருந்திய அம்பு, இராவணனுடைய மூன்று கோடி வாழ்நாளையும், அவன் முயற்சியுடன் செய்த பெருமையான தவத்தையும், பிரம்மன் முன்னாளில், ‘தேவர்களில் எப்புகழ் வாய்ந்தவராலும் வெல்லப்படமாட்டாய்’ என்று கொடுத்த வரத்தினையும், மற்றும் திசைகளோடு உலகம் முழுவதையும் போரினால் வென்ற தோள் வலிமையினையும் தின்று மார்பில் புகுந்து உடலைக் குடைந்து உயிரைக் குடித்துப் புறத்தே சென்றது என்று கூறுவதிலிருந்து இராவணன் எத்தகைய சிறப்பு பெற்றவன் என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.

அனுமனுக்கும், இராவணனுக்கும் குத்துச் சண்டை

முதல் போர்புரி படலத்தில் அனுமனுக்கும், இராவணனுக்கும் குத்துச்சண்டை நடந்தது. அனுமன், இராவணனைக் குத்தியபோது ஏற்கனவே திசையானைகளுடன் நடந்த போரில் அதன் தந்தங்களை அவன் மார்பில் குத்தியபோது ,அவன் அவைகளைத் தள்ளிவிட்டபோது தந்தம் உடைந்து அவன் மார்பில் தங்கிவிட்டது.இப்போது அனுமன் குத்தியதால் அப்போது குத்திய தந்தங்கள் இப்போது வெளியே வந்து விட்டது. (முதற்போர்புரிபடலம் 1133)

முடிவுரை

வாரணம் பொருத மார்பு, நாரதர்க்கேற்ப நயம்பட உரைத்த நா, முக்கோடி வாழ்நாள், சந்திரகாசம் வாள்,பத்துத் தலை,இவையெல்லாம் நேரில் பார்த்ததால் கயிலாயமலையை இராவணன் பெயர்த்தெடுத்தேன் என்று கூறியதை யாருமே அதை நேரில் பார்க்கவில்லை என்றாலும் மற்ற சிறப்புகள் இவனிடம் உள்ளதால் அவன் இதையும் செய்திருப்பான் என்று நம்பவைத்தது என்பதையும் அறியமுடிகிறது.கயிலாயமலையைத் தூக்க எண்ணியதே தவறு. மலைக்கடியில் மாட்டிக் கொண்டு கதறி அழுததால் இராவணன் என்ற பெயரும் கிடைத்தது வீணையில் சிவபெருமானே மயங்கும்படியாக சாமகானம் பாடியதால் தான் சந்திரகாசம் வாள் கிடைத்தது என்றாலும், மலையைத் தூக்கியதால் மகிழ்ந்த சிவபெருமான் வாளைத் தந்ததாகக் கூறி அனைவரையும் நம்ப வைத்ததையும் நாம் அறிந்து கொள்ளமுடிகிறது. இராவணன் கயிலாய மலையைத் தான் பெயர்த்து எடுத்ததாகவும், அவனுடைய பேராற்றலைக் கண்டு சிவன் வரமும், வாளும் தந்ததாகவும் செய்தியைப் பரப்பி அனைவரையும் நம்பச் செய்திருந்தான். கதறி அழுதவன் இராவணன் ஆனால் ’பிறர் கதறி அழும்படி செய்தவன்’ என்ற பொருள்படும்படியாக மற்றவர்களிடம் கூறி நம்பவும் செய்தவன். அதனால்தான் உண்மை என்று நம்பியே மக்களும் பேசினர் என்பதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

துணைநூற்பட்டியல்

1.செல்வம்.கோ,கம்பன் புதையல், சாரு பதிப்பகம், சென்னை 2016.
2.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
3.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம், சென்னை,2016.
4.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி ,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011. 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
 
வ.ந.கிரிதரன் பக்கம்
                                                                                             


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். இது இலாப  நோக்கற்று இயங்கும் இதழ். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. It operates on a not-for-profit basis. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்