
மகாஜனக்கல்லூரியில் புதிய மாணவர்களில் ஒருவனாக நானும் அன்று இருந்தேன். இதுவரை காலமும் காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்றதால், புதிய பாடசாலையான மகாஜனக்கல்லூரி எனக்குள் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வீதிவழியாகக் காங்கேசந்துறையில் இருந்து எனது தாயாரின் ஊரான சண்டிலிப்பாய்க்குத் துவிச்சக்கர வண்டியில் போகும் போது மகாஜனாவின் கட்டிட அமைப்பே என்னை முதலில் பிரமிக்க வைத்திருந்தது. இன்று அந்தப் பாடசாலையின் உயர்வகுப்பு மாணவனாக உள்ளே நுழைந்தபோது அதே பிரமிப்பில் மூழ்கிப் போயிருந்தேன். எனது அத்தான் அக்காவின் கணவர் பொ.கனகசபாபதி அவர்கள் மகாஜனாவில் அப்போது ஆசிரியராக இருந்ததால், எனது அக்காவின் விருப்பப்படி நானும் மகாஜனாவில் மாணவனாக இணைந்து கொண்டேன்.
வகுப்பறையில் இன்னுமொரு ஆச்சரியம் எனக்குக் காத்திருந்தது. சணண்முகசுந்தரம் மாஸ்டர்தான் எங்களுக்கு அரசறிவியல் பாடம் கற்பிக்க வந்தார். ஒவ்வொருவராக அறிமுகம் செய்யச் சொன்னார். ஒவ்வொருவரும் அவரது மேசைக்கு அருகே சென்று சகமாணவர்களைப் பார்த்து எங்களை அறிமுகம் செய்ய வேண்டும். முக்கியமாக எங்கள் பெயர், தந்தையின் பெயர், எந்த ஊரில் இருந்து வந்திருக்கிறோம் என்பதைக் குறிப்பிட வேண்டும். நான் எனது பெயரையும் தந்தையின் பெயரையும், ஊரையும் சொல்லிவிட்டு நகர்ந்தேன்.
‘நின்று கொள்’ என்றார். என்னை நிமிர்ந்து பார்த்தார். ‘குருநாதபிள்ளை மாஸ்டரின் மகனா?’ என்று கேட்டார். ‘ஓம்’ என்று பதில் சொன்னேன்.
‘நான் நடேஸ்வராக்கல்லூரியில் அவரிட்டைப் படிச்சு நல்ல பெயர் எடுத்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். அதேபோல என்னட்டை படிக்கிற நீயும் நல்ல பெயர் வாங்கி அவரது பெயரைக் காப்பாற்ற வேண்டும், தெரியுதா?’ என்றார்.
‘தெரியுதா?’ என்பதில் இருந்தே அவர் என்னிடம் எதை எதிர்பார்க்கிறார் என்பதை நான் புரிந்து கொண்டதால், ‘ஓம்’ என்று தலையசைத்துவிட்டு எனது இருக்கையில் சென்று உட்கார்ந்தேன். அவருடனான முதல் அறிமுகம் இதுதான். ஆனால் இவரை அடிக்கடி எங்கோ கண்ட ஞாபகம் சட்டென்று வந்தது.
1925 ஆம் ஆண்டு நவெம்பர் மாதம் 30 ஆம் திகதி பிறந்த இவரது தந்தையின் பெயர் தம்பு, தாயாரின் பெயர் அன்னப்பிள்ளை ஆகும். அந்தக் காலத்தில் ஆசிரியர்களைச் சட்டம்பியார் என்றுதான் எல்லோரும் அழைத்தால், எனது தந்தையையும் சட்டம்பியார் என்றுதான் ஊரில் அழைத்தார்கள். இவரது தகப்பனாரையும் தம்பு சட்டம்பியார் என்று ஊரார் அழைத்தனர். அதன்பின் ஆங்கிலச் சொல் பிரயோகத்தால், ஆசிரியர்களை ‘மாஸ்டர்’ என்று அழைக்கத் தொடங்கியிருந்தனர். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் வீதிக்கு அருகே இவரது வீடு இருந்தது. சண்முகசுந்தரம் மாஸ்டர் நடேஸ்வராக் கல்லூரியில் எனது தந்iயாரிடம் கல்வி கற்றார் என்பதை அவர் சொல்லித்தான் நான் தெரிந்து கொண்டேன்.
இதைவிட சண்முகசுந்தர மாஸ்டர் எனக்கு உறவினருமாவார். இவரது ஒன்றுவிட்ட சகோதரி சிவஞனம் அக்கா எங்கள் குருவீதியில் இரண்டு வீடு தள்ளித்தான் தான் குடியிருந்தார். அவரைப் பார்ப்தற்காக அடிக்கடி இவர் அங்கே வருவது நினைவில் வந்தது. நாங்கள் தொடர்வண்டிப்பாதைக்கு அருகே இருந்த குரு விளையாட்டுக்கழக மைதானத்தில் விளையாடிக் கொண்டிருப்போம். சைக்கிளில் கடந்து போகும்போது வீதியில் பார்வை இருந்தாலும் கடைக்கண்ணால் என்ன நடக்கிறது என்பதைப் படம் பிடித்து விடுவார். காரணம் எங்களோடு விளையாடிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் அவரது மகன் அருள்முருகன் என்பதும் எங்களுக்குத் தெரியும். குருநாதசுவாமி கோயில் திருவிழாவிற்கு அவர் தவறாது வருவது மட்டுமல்லாமல், வரமுடியாத காலத்தில் தவறாது மகன் அருள்முருகனை அனுப்பிவைப்பார்.
மகாஜனா உயர் வகுப்புகளுக்கான தமிழ் மாணவர் மன்றத்தின் செயலாளராக என்னை நியமித்தபோது, அதிபர் தெ.து. ஜயரத்தினத்தின் அறைக்கு அழைத்துச் சென்று என்னை அறிமுகமும் செய்து வைத்தார். ‘மகாஜனன்’ மலரின் பதிப்பாசிரியாகவும் அவர் இருந்தார். அவர் தந்த பயிற்சியால் புலம்பெயர்ந்த மண்ணில் கனடா பழைய மாணவர் சங்கத்தின் ‘மகாஜனன்’ இதழ்களுக்கும் மலராசிரியராக என்னால் பணியாற்ற முடிந்தது.
இவது எழுத்துக்கள் சிறுகதை, நாடகம், கட்டுரை என்று பல வகையிலும் தமிழ் இலக்கியத்திற்கு அணிசேர்த்தன. முக்கியமாக உள்ளூரில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற கோயில்களை ஆவணப்படுத்துவதில் கவனம் செலுத்தினார். இறங்கணியவளை குருநாதரை வணங்கி ‘குருநாதர் மான்மியம்’ எழுதினார். குருநாதர்பற்றி ஒல்லாந்தர் காலத்தில் வரதபண்டிதரும் கிள்ளைவிடுதூது எழுதியிருந்தார். ‘மாவை முருகன் காவடிப்பாட்டு.’ ‘மாருதப்புரவீகவல்லி கப்பற்பாட்டு,’ ‘வாழ்வு பெற்ற வல்லி’ போன்ற நூல்களின் சொந்தக்காரர் எங்கள் சண்முகசுந்தர மாஸ்டர்தான். இந்த நூல்களில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டதற்குக் காரணம் இந்த நூல்களுக்கான மேலதிக தகவல்களைச் சேகரிப்பதற்கு உள்ளூர் கோயில்கள் பற்றி விபரங்களைப் பெற்றுத் தரும்படி அப்போது அவரது மாணவனாக இருந்த என்னிடம் அன்புக் கட்டளையிட்டதால், நான் அந்தப் பணியை மேற்கொண்டேன். எனக்கும் எங்கள் அயற்கோயில்களைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் இருந்ததால் விருப்பத்தோடு செயற்பட்டேன்.
அவர் குறிப்பிட்டபடி எனது ஒன்றுவிட்ட சகோதரி குறமகள் வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்களிடம் இருந்து பல தகவல்களைப் பெற்றுக் கொண்டேன். குறிப்பாக எங்கள் வீட்டிற்கு அருகே இருக்கும் குருநாதசுவாமி, நாச்சிமார், கூத்தியவத்தைப் பிள்ளையார் போன்ற புராதன கோயில்கள் பற்றிய தகவல்களை குறமகளின் பாட்டியார் சொன்னதாக அவரது தாயாரிடம் இருந்து பெற்றுக் கொண்டோம். சண்முகசுந்தர மாஸ்டர் குதிரைமுகம் பற்றிக் குறிப்பிட்ட போது இதைப் பற்றி மேலும் ஆய்வுகள் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அப்பொழுதுதான் மாருதப்புரவீக வல்லியின் குதிரைமுக நோய் பற்றி நான் ஒரு ஆய்வு செய்தேன். உண்மையிலே அது ‘குதிரைமுகமாக இருந்திருக்குமா?’ என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அதனால்தான் பலாலியில் வசித்த பிரபல மூலிகை மருத்துவரான பஞ்சாட்சர ஐயரிடம் இருந்த மூலிகை மருத்துவம் என்ற மிகப்பழைய நூலில் இருந்து குதிரைமுக நோய் பற்றி அறிந்து கொண்டேன். சோழ இளவரசி மாருதப்புரவீகவல்லியைப் பீடித்தது குதிரை முகம் அல்ல ‘குதிரைமுக நோய்’ என்பதை அதன் மூலம் அப்போது உறுதி செய்தேன். அக்காலத்தில் ஓவியர்களும், சிற்பிகளும் குதிரைமுக நோயை அடையாளப் படுத்துவதற்காக குதிரை முகத்தையே வரைந்திருந்தார்கள். அக்காலத்தில் வேறுவிதமாக இவற்றை அடையாளப்படுத்த வசதிகள் இருக்கவில்லை.
இதே போன்ற குதிரை முகத்தோடு கூடிய சிலையை கிரேக்க நாட்டில் மைக்கோனோஸ் நகரத்தில் பார்த்திருந்தேன். அவர்கள் அதைத் தங்களின் பெண் தெய்வம் என்று சொன்னார்கள். மேலை நாடுகளில் ஐபோடேன்ஸ் அல்லது ஹிப்போடேன்ஸ் ((Ipotanes or hippotaynes) என்று அழைக்கப்படுவது புராணங்களில் குறிப்பிடப் பட்டிருக்கும் உயிரினங்களாகும். அவை பொதுவாக சென்டார்களிலிருந்து (Mythological creature) மிகவும் வேறுபட்ட அரை-மனித அரை-குதிரை உயிரினங்களாக சித்தரிக்கப்படுகின்றன. அதனால்தான் எனது தேடுதலில் கிடைத்த இந்த வரலாற்று உண்மையை புதினமாக இப்போது ஞாயிறு வீரகேசரியில் எழுதுகின்றேன்.
மகாஜனாவில் கல்வி கற்பித்த எனது சில ஆசிரியர்கள் அதிபர்களானதால், திரு. க. கிருஸ்ணபிள்ளை, திரு. பொன். சோமசுந்தரம், திரு தெ. து. ஜயரத்தினம், திரு. பொ. கனகசபாபதி, திரு. மா. மகாதேவன், தமிழருவி திரு. த. சண்முகசுந்தரம் ஆகிய ஆறு அதிபர்களிடம் கல்விகற்றதாக நான் சிலசமயங்களில் பெருமையாகச் சொல்லிக் கொள்வதுண்டு. எனது மதிப்புக்குரிய ஆசான் தமிழருவி த. சண்முகசுந்தரம் அவர்கள் 1986 ஆம் ஆண்டு எங்களை விட்டுப் பிரிந்தாலும் அவரிடம் கல்விகற்ற பலர் இன்று தமிழ் இலக்கிய வளச்சிக்காக உலகெங்கும் பரந்து அரும்பெரும் சேவையாற்றிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்காக அவர் நூல் வடிவில் விட்டுச் சென்ற ஆவணங்கள் என்றும் இவ்வுலகில் நிலைத்து நிற்கும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









