'இன்னும் சில கங்குகள்' நாவலுக்கான முன்னுரை - எல்.ஜோதிகுமார் (இலங்கை) & நிழல்வண்ணன் (இந்தியா) -
- மக்சிம் கார்க்கியின் பெருநாவலான 'கிளிம் சாம்கினின் வாழ்க்கை' என்னும் தலைப்பில் நான்கு பாகங்களாக (Bystander, The Magnet,Other Fires & The Specter) வெளியான நாவலின் மூன்றாம் பாகமான Other Fires தமிழில் 'இன்னும் சில கங்குகள்' என்னும் பெயரில் தமிழில் எழுத்தாளர்கள் நிழல்வண்ணன், 'நந்தலாலா' ஜோதிகுமார் ஆகியோரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தற்போது இதன் முதற் பதிப்பு நந்தலாலா & சவுத் விஷன் வெளியீடாக வெளிவந்துள்ளது. இது நூலுக்கான முன்னுரை. -
I“இந்நூல், மக்சிம் கார்க்கியின் அனைத்து நூல்களிலும் இருந்து வித்தியாசம் பெற்றது. இவ்வித்தியாச நூலை பின் வருமாறு வரையறுத்துக் கொண்டார் கார்க்கி: 'இந்நூல் என் வாழ்நாள் சவால்... என் வாழ்நாள் சாதனை'. நான்கு தொகுதிகளாய் (கிட்டத்தட்ட 2000 பக்கங்களாய்,) விரியும் இந்நூலின் இறுதி தொகுதியை கார்க்கி எழுதிக்கொண்டிருக்கும் போது, மரணித்தார். “இப்போதுள்ள ஒரே பயம் - இந்நான்காம் தொகுதியை நான் நிறைவு செய்யும் முன்னமே மரணம் என்னை தழுவி விடுமோ” என்பதேயாகும். கார்க்கி பயந்தது நிறைவேறியது. இருந்தும், தொகுதி நான்கின், அரைவாசிக்கும் மேலான பகுதியை, அவரே நிறைவு செய்யக் கூடியதாக இருந்தது. மிகுதி அரைவாசியை, அவரது குறிப்புகளையும் வரைவுகளையும் ஆதாரமாகக் கொண்ட ஒரு எழுத்தாளர் குழுவினர் அதனை நிறைவு செய்தனர்.
உலக நடப்புகளில், இது போன்ற நிகழ்வுகள் ஏற்கெனவே நடந்தேறிய ஒன்றுதான். பெரும் கலைஞர்களின் தவிர்க்க முடியாமைகளை உலகம் இவ்வாறுதான் கையாண்டு வந்தது. இருந்தும், அந்த மகா புருடனுக்கும், ஒரு எழுத்தாளர் குழுவுக்கும் இடையே காணப்படும் வித்தியாசங்கள் அனந்தம்.
இந்நூலின் விடயதானம் எனப்படுவது, கார்க்கியின் சிந்தனையில் ஒரு நாற்பது வருட காலம், இடைவிடாது, தொடர்ச்சியாய் ஓடி புடம் போடப்பட்ட ஒன்று என்றால் அது மிகையாகாது. இதற்கான தடயங்களை, கார்க்கியிலேயே, பல்வேறு சந்தர்ப்பங்களில், வெளிப்படுத்தப்பட்டு இருந்தாலும் இந்நூலிலேயே அவை தீர்க்கமாகவும், படிவுற்றும், பொறிக்கப்பட்டும் உள்ளன. மனுக்குலத்தின் ஒரு மிகப் பெரிய சுமையை அல்லது கடமையைத் தன் தோளில் சுமக்க முன்வருவது ஒருவரது இதயத்தின் உறுதியையும் நாகரிகத்தையும் மாத்திரம் அல்ல-மாறாக குறித்த தோள்களின் திராணியையும் பொறுத்ததாகின்றது. இவையிரண்டும் ஒரு பார்வையில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததுதான்.