கம்பராமாயணத்தில் ஒற்றர்கள்! - முனைவர் க.மங்கையர்க்க
முன்னுரை
ஒற்றன் என்பதற்கு உளவு பார்ப்பவன் உளவாளி என்று பொருள். ஒற்றாடல் ஆட்சியில் இருக்கும் தலைவனின், மன்னனின் முக்கியமான கடமைகளில் ஒன்றாகும்.ஒவ்வொரு மன்னனும் தன் நாட்டிலும், பிற நாட்டிலும் ஒற்றர்களை வைத்திருப்பர். தன் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறியவும், வேறு நாட்டில் இரகசியமாக என்ன நடக்கிறது என்பதை, தான் அறிந்து கொள்ளவே இரகசிய ஒற்றர்களை வைத்திருப்பர். ஒரு நாட்டில் வேற்று நாட்டு ஒற்றர்கள் பிடிபட்டால், அவர்களைக் கொலை செய்யும் வழக்கமும் இருந்துள்ளது. ஒற்றர்கள் தகவல் தொடர்பு சாதனங்கள் போல் செயல்பட்டுள்ளனர் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. கம்பராமாயணத்தில் ஒற்றர்கள் குறித்து ஆராய்வோம்.
புறநானூற்றில் ஒற்றன்
சோழன் நலங்கிள்ளியிடமிருந்து நீங்கி, நெடுங்கிள்ளியின் உறையூரை இளந்தத்தன் என்ற புலவன் அடைந்தான். அவனை நெருங்கி ஒற்றன் என கருதி, கொல்லத் துணிந்தான். அப்பொழுது புலவனைக் கொல்லாதவாறு நெடுங்கிள்ளியைத் தடுத்தார் கோவூர்கிழார்.
“ வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி,
நெடிய என்னாது சுரம் பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடி
பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி”
(புறநானூறு 47)
இதிலிருந்து பிற நாட்டு ஒற்றர்கள் என்ற ஐயம் ஏற்படின் அவர்களைக் கொலை செய்வதும் இருந்தது என்பதையும், அவ்வாறு இல்லை எனில் அவர்களை விடுதலை செய்ததையும் அறிந்து கொள்ளமுடிகிறது.