பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும், பிரதான நூலக இந்திய தகவலகமும் இந்திய உதவித் தூதரகமும் இணைந்து நடாத்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கான கவிதைப் பயிலரங்கு (05.03.2025) புதன்கிழமை அன்று இடம்பெற்றது. பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கும் ஈழத்துக் கவிதை மரபிற்கும் மிக நீண்டகாலமாகவே அணுக்கமான தொடர்பொன்றுள்ளது.ஈழத்தின் முக்கியமான பல படைப்பாளிகளின் ஆரம்ப நாட்கள் பேராதனைக்களத்திலிருந்து உருவானதை அடையாளம் காண முடியும். அந்த வகையில் தமிழ்த்துறை வருடந்தோறும் ஒழுங்கமைக்கும் குறித்த பயிலரங்கு இம்முறை பேராதனைப் பல்கலைக்கழகப் பிரதான நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வில் தொடக்கவுரை ஆற்றிய பேராதனைப் பல்கலைக்கழகப் பிரதம நூலகர் கலாநிதி ஆர். மகேஸ்வரன். “உலக தாய்மொழி தினத்தின் முக்கியத்துவம், அகத்திய முனிவர்இ தொல்காப்பியர் ஆகியோரின் இலக்கணப் பங்களிப்பு முதலான விடயங்களைக் குறிப்பிட்டார். மேலும் இந்திய, தமிழக அரசுகள் வெளியீடு செய்யும் நூல்களை பிரதம நூலகத்திற்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும்” என்று சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கௌரவ இந்திய உயர் ஆணையர் ஸ்ரீமதி சரண்யா அம்மையார் அவர்களிடம் கோரிக்கையொன்றையும் முன்வைத்தார்.
தொடர்ந்து உரை நிகழ்த்திய கௌரவ இந்திய உயர் ஆணையர் ஸ்ரீமதி சரண்யா அவர்கள் “இத்தகைய நிகழ்வுகளை நடாத்துவது ஆளுமை மிக்க மாணவர்களை உருவாக்குவதில் முக்கியமானது என்று கூறினார். பிரதம நூலகரின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் தொடர்ச்சியான செயற்பாடுகள் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் எதிர்வரும் காலங்களில் தமிழ்த்துறையின் முக்கியமான செயற்றிட்டங்களுக்கு தம்மாலான பங்களிப்புக்களை வழங்கமுடியும்”; எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
தலைமையுரை ஆற்றிய தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் அவர்கள் படைப்பொன்றை மாணவர் பாலமைப் பருவத்தில் மனனம் செய்வதில் ஆரம்பமாகும் கற்றல் நடவடிக்கை, பின் குறித்த படைப்பை விளங்கிக்கொள்ளுதல், பிறர் விளங்கும்படி விபரணம் செய்தல், படைப்பினை விமர்சனம் செய்தல் ஆகிய படிநிலைகளைக் கடந்து படைப்பொன்றை படைத்தல் எனும் புள்ளியை அடைவதே கல்வி முறையின் நோக்கம்" எனத் தெளிவுபடுத்தினார்.
மேற்படி நிகழ்வில் வளவாளர்களாகக் கலந்துகொண்ட துறையின் மேனாள் தலைவர்களான பேராசிரியர் எம். ஏ. நுஃமான், பேராசிரியர் துரைமனோகரன் ஆகியோர் தொடர்ந்து அரங்கை வழிநடத்தினர். கவிதையின் தோற்றம், படைப்பு மனம், படைப்பாளுமையில் ஈடுபடும் மாணவர்களுக்கான தேர்ந்த வாசிப்பின் தேவை ஆகிய விடயங்கள் தொடர்பில் பேராசிரியர் துரைமனோகரன் அவர்கள் கலந்துரையாடினார்.
பேராசிரியர் எம். ஏ. நுஃமான் அவர்கள் நவீன கவிதைப் போக்குகள் தொடர்பாகவும் கவிதை நுட்பங்கள் தொடர்பிலும் உரை நிகழ்த்தினார். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் கவிதையில் வடிவ, மற்றும் அச்சக ரீதியாக ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் தொடர்பிலும் மாணவர்களுடன் கலந்துரையாடிமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வின் நிறைவில் மாணவர்களின் கவிதைகள் அரங்கில் வாசிக்கப்பட்டன