தாமரைச்செல்வியின் 'செங்காரிப்பசு' சிறுகதைத்தொகுப்பின் முதற் கதை 'யாரொடு நோவோம்'. தொகுப்பின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று. வாணி என்னும் பெண்ணின் வாழ்வை மையமாகக்கொண்ட கதை. யுத்தத்தின் இறுதிக்காலத்தில் மக்கள் அடைந்த துயரின் குறியீடாக அமைந்த கதை. யுத்தத்தின் இறுயில் வாணிக்கு ஏற்பட்ட நிலைதான் ஆயிரக்கணக்கான பலருக்கும் ஏற்பட்டது. தொடர்ச்சியான படையினரின் ஷெல்லடி, தொடர்ச்சியான மக்களின் இடப்பெயர்வு, இடப்பெயர்வுகள் ஏற்படுத்திய வலி, எறிகணைத்தாக்குல்களினால் ஏற்பட்ட படுகாயங்கள், இழந்த உடலுறுப்புகள் , குடும்ப உறவுகள் பிரிக்கப்படல், (சில சமயங்கள் நிரந்தரமாகவே அமைந்து விடுகின்றன) இவ்விதமாக மக்கள் மேல் யுத்தம் ஏற்படுத்திய பாதிப்புகளைக் கதை விபரிக்கின்றது.
அவளது வாழ்க்கை வறுமை மிக்கது. அவளது தந்தை விதானையாரின் காணியில் குடிசை போட்டு வாழ்பவன். அவ்விதம் வாழ்ந்துகொண்டே விதானையாரின் வயலையும் பார்த்துக்கொள்கின்றான். வேணியும் குடும்பச்சூழல் காரணமாகப் படிப்பை எட்டாம் வகுப்புடன் நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்லத்தொடங்குகின்றாள். இவ்விதமாக வாழ்ந்தவள் வாழ்க்கையில் செல்வராசா குறுக்கிடுகின்றான். விதானையாரின் வயலில் வேலை செய்ய வருபவன் மீது இவளுக்குக் காதல் முகிழ்க்கின்றது. திருமணம் செய்து வாழத்தொடங்குகின்றாள். குழந்தை பிறக்கின்றது. போர்ச்சூழல் செல்வராசாவையும் பிரித்து விடுகின்றது. அவன் காணாமல் போகின்றான். தேடித்தேடி வாடிப்போகின்றாள் வாணி.
தொடரும் போர் பரந்தன் தொடக்கம் முள்ளி வாய்க்கால் வரை அவளைத் துரத்தி அடிக்கின்றது. உறவுகளைக் குழந்தையுட்படப் பிரிந்து விடுகின்றாள். தாக்குதல்களுக்குள்ளாகி , ஆஸ்பத்திரியில் காலம் கழித்து, ஒரு கையிழந்த நிலையில் , மீண்டும் அவள் தாயையும், குழந்தையையும் கண்டடைகின்றாள். தாயும் சிறிது காலத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றாள். இவ்விதம் செல்லும் வாழ்க்கையில் திரவியம் எதிர்ப்படுகின்றான். முன்னாட் போராளியான அவனும் உறவுகளைப் போரில் இழந்தவன். கணவன் காணாமல் போய் விட்டான். இனியும் அவன் உயிருடன் இருக்கும் வாய்ப்பில்லை என்னும் நிலையில், நினைப்பில் கைக்குழ்ந்தையுடன் , ஒரு கையுடன வாழ்க்கைப்போராட்டத்தை எதிர்கொள்ளும் நிலையில் இருந்த வேணி திரவியத்துடன் வாழ்க்கையைப் பிணைத்துக்கொள்கின்றாள். ஒரு குழந்தையும் பிறக்கின்றது.
- எழுத்தாளர் தாமரைச்ச்செல்வி -
இவ்விதம் காலம் கழிகையில் , ஒரு நாள் காணாமல் போன கணவன் செல்வராசா அவளைப் பார்க்க வரும் தகவல் கிடைக்கின்றது. துடித்துப் போகின்றாள். அவளும், திரவியம் இருவருமே இதனை எவ்விதம் எதிர்கொள்வது என்பது தெரியாமல் தடுமாறுகின்றார்கள். காணாமல் போன காதல் கணவன் திரும்பி வருகின்றான் என்று சந்தோசம் அடைவதா? அதே சமயம் இந்நிலை திரவியத்தையும் உளவியல்ரீதியில் பாதிக்கின்றது. முடிவுக்குத் தீர்வைக் கதாசிரியர் பின்வருமாறு வைக்கின்றார் - கணவன் செல்வராசாவும் தன்னை யுத்தச் சூழலில் காத்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தியை மணந்து புது வாழ்க்கை வாழத்தொடங்கியிருந்தான். இந்நிலையில் தன் முன்னாள் மனைவியைப்பற்றிய தகவலறிந்து பார்க்க வருகின்றான். அவனுக்கு ஏற்கனவே வாணி திரவியத்தை மணந்த விடயம் தெரியும். தான் அவளுக்குத் துரோகம் இழைத்ததாக வாடியிருந்தவனுக்கு அது ஒரு வித நிம்மதியைத்தருகின்றது. அவர்களை வந்து பார்த்துச் செல்கின்றான் செல்வராசா. அவரவர் அவரவர்தம் புது வாழ்க்கையில் வாழ்க்கைப் பயணத்தைத்தொடர்கின்றனர்.
இதுதான் கதைச்சுருக்கம். ஆனால் இம்மானுடர்களின் வாழ்க்கையை இவ்வளவு இலகுவாக எடுத்து விடு முடியுமா?
வாழ்க்கை என்பது உறவுகளாலும், உள்ளத்து உணர்வுகளாலும், நினைவுகளாலும் தீர்மானிக்கப்படுவது. செல்வராசா எனபவனை வேணி அவ்வளவு இலகுவாகத் தன் வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி விட முடியாது. நினைவுகளிலிருந்து நீக்கி விட முடியாது. அவன் அவளது காதலன். கணவன். அவன் அவளைவிட்டு நீங்கியது அவனது தவறல்ல. அத்துடன் அவன் அவளது வயிற்றில் உதித்த குழந்தைக்குத் தந்தை. அது போன்றதுதான் செல்வராசாவின் நிலையும்,. வாணி அவனது மனைவியாக இருந்வள். காதலியாக இருந்தவள். அவனது குழந்தைக்குத் தாய். அவர்கள் பிரிந்தது அவர்கள்தம் தவறல்ல. காலம், நாட்டில் நிலவிய போர்ச்சூழல் உருவாக்கிய விளைவு.
அதே சமயம் வேணியின் வாழ்வில் இணைந்து கொண்ட திரவியம், செல்வராசா வாழ்வில் இணைந்து கொண்ட அவனது புது மனைவி இவர்களது நிலை. இவர்களுக்கிடையிலான உளவியல்ரீதியிலான பிணைப்புகள் , இவையெல்லாம் வார்த்தைகளால் இலகுவாக விபரிக்கபட முடியாதவை. தொடர்ந்தும் அவர்களது குடும்பங்கள் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பில் இருக்கத்தான் போகின்றன. வாணிக்குச் செல்வராசா மூலம் பிறந்த குழந்தையுடனான பிணைப்பை அவனால் உதறித்தள்ளி விட முடியாது. அவனுக்குள்ள் உறவையும் , உரிமையையும் அவளாலும் நிராகரிக்க முடியாது.
இவர்களது வாழ்ககை, அது ஏற்படுத்திய உளவியற் போராட்டங்கள் இவற்றை வைத்து விரிவானதொரு நாவலை எழுதலாம். இதனைக் கதாசிரியரும் உணர்ந்திருகின்றார். அதனால்தான் கதையின் முடிவு பின்வருமாறு ம் முடிந்திருக்கின்றது - அவர்களைப் பார்க்க வந்த செல்வராசா பார்த்துவிட்டுத் திரும்புகின்றான். அதனைத் தாமரைச்செல்வி பின்வருமாறு விபரிக்கின்றார்:
""சாப்பிட்டுப் போங்கோ.சமைச்சாச்சு' திரவியம் கேட்டான். 'இல்லை .. இல்லை. எனக்குப் பசிக்கேலை. நான் போயிட்டு வாறன' எல்லோரையும் பார்த்துத் தலையசைத்து விட்டு முற்றம் கடந்து நடந்தான். அவள் திரவியத்தைப் பார்த்தாள். 'இருங்கோ. சாப்பாட்டைப் பெட்டிக்குள்ள போட்டுத்தாறன்' அவள் அடுக்களைக்குள் ஓடிப்போனாள். எடுத்து வைத்த பெட்டிக்குள் சோறு கறிகளைப் போட்டாள். மனம் நிம்மதியாய் இருந்தது. ஆனாலும் ஏனோ கத்தி அழவேண்டும் போலவும் இருந்தது."
கதையின் 'மனம் நிம்மதியாய் இருந்தது. ஆனாலும் ஏனோ கத்தி அழவேண்டும் போலவும் இருந்தது' என்னும் வரிகள் எல்லாவற்றையும் மிகவும் அழகாகக் கூறி விட்டன. பிரிந்து செல்பவன் அவளது அன்புக் கணவனாக இருந்தவன். காதலனாக இருந்தவன். அவள் வயிற்றுக்குழந்தையின் தந்தை. காணாமல் போய்க்கிடைத்து விட்டிருக்கின்றான். ஆனால் அவனை அவளால் அவள் வாழ்க்கையில் பிணைக்க முடியாத சூழல். வந்தவனுக்கு உணவாவது கொடுத்த திருப்தி அவளுக்கு. ஆனால் அது மட்டுமே போதுமானதா? அவனை, அவனுடன் வாழ்ந்த வாழ்க்கையை, பகிர்ந்துகொண்ட தருணங்களை எல்லாம் அவளால் ஒதுக்கி விட முடியுமா? அதெப்படி முடியும்? மானுடர்கள் உணர்வுகளினால், அவை பற்றிய நினைவுகளால் வடிவமைக்கப்பட்டவர்கள். அவர்கள் இருக்கும் வரையில் அவர்களை நினைவுகளும் உணர்வுகளும் துரத்திக்கொண்டுதானிருக்கும். அவற்றிலிருந்து அவர்களுக்கு மீட்சியேயில்லை. வேணியின் நிலையும் அதுதான். அதனால்தான் அவன் பிரிந்து செல்வதைப்பார்க்கையில் ஏனோ கத்தி அழவேண்டும் போலவும் இருக்கிறது என்று தாமரைச்செல்வி முடிக்கின்றார்.
காதலர் இருவர் கருத்தொருமித்து வாழ்ந்த இன்ப வாழ்க்கை இவ்விதம் சிதைந்து போக யார் காரணம்? யாரை நோவது? யாரொடு நோவோம்?