அமரர் க்ரியா ராமகிருஷ்ணனின் தமிழ்ப் பதிப்பகத்துறைக்கான பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. க்ரியா என்றால் தரம் என்னும்சொல் நினைவுக்கு வரும். தேர்தெடுத்த தரமான தமிழ் நூல்களை, ஏனைய மொழிகளில் வெளியான தமிழ் மொழிபெயர்ப்புகளைக் க்ரியா பதிப்பகம் வெளியிட்டது. நூல் வெளியீட்டுடன் , க்ரியா பதிப்பகத்தின் அகராதித்துறைக்கான பங்களிப்பும் முக்கியத்துவம் மிக்கது. நூல்வெளியீடு, அகராதித் துறைப் பங்களிப்பு இவற்றுடன் இன்னுமொரு முக்கிய பங்களிப்புக்காகவும் க்ரியா ராமகிருஷ்ணன் நினைவு கூரப்படுகின்றார். நினைவு கூரப்பட வேண்டும். அது ரோஜா முத்தையா நூலகத்துகான அவரது பங்களிப்பு.
தனியார் உடமையான ரோஜா முத்தையா நூலகத்தைச் சிகாகோ பல்கலைக்கழகம் ஆய்வு நூலகமாக மாற்றியதில் முக்கிய பங்கினை வகித்தவர்களில் ஒருவர் க்ரிய ராமகிருஷ்ணன். சிகாகோ பலகலைக்கழகத்தின் சார்பில் பேராசிரியர் ஜேம்ஸ் நை தமிழகம் வந்திருந்தபோது, மொழி அறக்கட்டளையின் தலைவராகவிருந்தவர் க்ரிய ராமகிருஷ்ணன். அப்போது தமிழ் மொழி அறக்கட்டளையுடன் தொடர்பிலிருந்த பேராசிரியர் ஏ.கே.ராமனுஜனின் பரிந்துரையின் பேரில் , பேராசிரியர் ஜேம்ஸ் நை க்ரியா ராமகிருஷ்ணனை வந்து சந்திக்கின்றார். அவரை அப்போது தமிழகத்தில் நூலகத்துறையில் முக்கிய பங்காற்றிக்கொண்டிருந்த ப.சங்கரலிங்கத்தைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்தார் க்ரியா ராமகிருஷ்ணன். 'அந்தச்சந்திப்பே சிகாகோ பல்கலைக்கழகம் மொழி அறக்கட்டளையுடன் இணைந்து ரோஜா முத்தையா நூலகத்தை நிறுவ வேண்டும் என்ற முடிவுக்குக் காரணமாக அமைந்தது' என இந்து தமிழ் இணையத்தில் வெளியான க்ரியா ராமகிருஷ்ணனின் கட்டுரை வெளிப்படுத்துகின்றது.
இன்று ரோஜா முத்தையா நூலகத்தைப்பற்றி எழுதும் , பேசும் பலரும் மிகவும் இலகுவாக க்ரியா ராமகிருஷ்ணனின் அதன் உருவாக்கத்துக்கான பங்களிப்பை மறந்து விடுகின்றார்கள், அல்லது மறைத்து விடுகின்றார்கள். இதனைச் சுட்டிக்காட்டிப் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் உரையொன்றினை ஆற்றியிருக்கின்றார். அதனைப் பதிவுகள் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம், இதற்கான ஒலிப்பதிவை எமக்கு அனுப்பியிருப்பவர் கவிஞரும், திறனாய்வாளருமான செல்லத்துரை சுதர்சன். அவருக்கு எம் நன்றி. அவ்வொலிப்பதிவுக்கான இணைய இணைப்பினைக் கீழே தந்திருக்கின்றோம். அதனை உங்கள் கணனிக்குப் பதிவிறக்கிக்கிக் கேட்டுக்கொள்ளுங்கள்.
அண்மையில் ரோஜா முத்தையா நூலகத்தின் இயக்குநர் சுந்தர் கணேசனின் நேர்காணற் காணொளியொன்றினைச் செல்லத்துரை சுதர்சன் சுட்டிக்காட்டியிருந்தார், அதனை நானும் முழுமையாகக் கேட்டேன். அதில் சுந்தர் கணேசன் தனி நபர் சேகரிப்பாகவிருந்த ரோஜா முத்தையாவின் ஓர் இலட்சம் நூற் சேகரிப்பைத் தமிழ் மொழி அறக்கட்டளையும், சிகாகோ பல்கலைக்கழகமும் இணைந்து தமிழ் நாட்டில் ரோஜா முத்தையா நூலகமாக உருவாக்கிய விபரத்தைக் குறிப்பிட்டிருந்தார். பின்னர் தமிழ் மொழி அறக்கட்டளை விலகிப்போக, ரோஜா முத்தையா நூலகம் தனி அறக்கட்டளையாக உ ருவானதையும் குறிப்பிட்டுருந்தார். அவ்விதம் குறிப்பிடுகையில் அப்போது தமிழ் மொழி அறக்கட்டளையின் தலைவராக இயங்கிகொண்டிருந்த க்ரியா ராமகிருஷ்ணன், நூலகத்துறையில் இயங்கிக்கொண்டிருருந்த ப.சங்கரலிங்கம் ஆகியோரையும் குறிப்பிட்டிருக்கலாம் என்று தோன்றுகின்றது.
பேராசிரியர் எம்.ஏ.நுஃமானின் உரை
இந்து தமிழ் இணையத்தளத்தில் வெளியான க்ரியா ராமகிருஷ்ணனின் கட்டுரை - ரோஜா முத்தையா நூலகத்தின் அடித்தளம் சங்கரலிங்கத்தால் அமைக்கப்பட்டது!
ரோஜா முத்தையா நூலகத்தின் நூலகர் சுந்தரின் பேட்டியை வாசித்தேன் (‘வங்கத்திலிருந்து வருகிறார்கள்; இங்கிருப்பவர்கள் கண்டுகொள்ளவில்லை’, ‘இந்து தமிழ்’ ஆகஸ்ட்-14). அதில் நூலகர் சுந்தர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்: “1994-ல் இந்த நூலகம் தொடங்கப்பட்டது. அப்போது, நாங்கள் கைகளில்தான் புத்தகங்களைப் பட்டியலிட்டு வந்தோம். பிறகு, கணினிகள் மெல்ல மெல்ல ஊடுருவ, நாங்கள் கணினிக்கு மாறினோம்.”
இது உண்மை அல்ல; இப்படிக் கூறுவது ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தின் முதல் இயக்குநரும், நூலகத் துறையில் நீண்ட பயிற்சி பெற்று, கணினிவழி நூற்பட்டியலைத் தயாரிப்பதில் குறிப்பிடத்தக்க சாதனையைச் செய்தவருமான ப.சங்கரலிங்கத்தின் பங்கை இருட்டடிப்புச் செய்வதாகும். இந்நூலகத்தின் ஆரம்பகட்டப் பணிகளில் சங்கரலிங்கத்துடன் இணைந்து செயலாற்றியவன் என்னும் முறையில் என்னால் இதை உறுதியாகச் சொல்ல முடியும்.
1990-1991-லேயே சங்கரலிங்கம் கணினியைப் பயன்படுத்தி இந்திய மொழி ஆவணங்களுக்கு நூற்பட்டியல் தயாரிக்கும் முயற்சியில் முழுவதுமாக ஈடுபட்டிருந்தார். இப்படிச் செய்வற்கான வாய்ப்பு புதுவை பிரெஞ்சு நிறுவனம் மூலம் அவருக்குக் கிட்டியது. தன் நூலகத்தில் இருந்த இந்திய மொழி ஆவணங்களுக்குக் கணினிவழி நூற்பட்டியல் தயாரிக்கும் பொறுப்பை சங்கரலிங்கத்துக்கும் அவருடன் பணியாற்றிய பேராசிரியர் கே.எஸ்.ராகவனுக்கும் இந்த நிறுவனம் அளித்தது. இந்தத் திட்டம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூலகத் துறையிலிருந்து செயல்பட்டது.
ரோஜா முத்தையாவின் புத்தகச் சேகரிப்பில் ஆர்வம் கொண்ட சிகாகோ பல்கலைக்கழகத்தின் சார்பாக ஜேம்ஸ் நை, டிசம்பர் 1992-ல் சென்னைக்கு வந்தார். அவர் நோக்கம் தமிழ்நாட்டில் எந்த நிறுவனத்துடன் இணைந்து இந்தப் பொறுப்பை ஏற்பது என்று தெரிந்துகொள்ள முயல்வது. ‘மொழி அறக்கட்டளை’யுடன் தொடர்புகொண்டிருந்த ஏ.கே.ராமானுஜன், நை என்னைச் சந்திக்க வேண்டும் என்று யோசனை சொல்லியிருந்தார். ஆகவே, நை என்னுடன் பேசினார். அப்போது அவரிடம் சங்கரலிங்கத்தின் முயற்சிகளைக் குறிப்பிட்டு, நை சங்கரலிங்கத்தின் திட்டப் பணிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் சொன்னதன்பேரில் டிசம்பர் 11-ம் தேதி நாள் முழுவதும் சங்கரலிங்கத்துடன் கழித்து, அவருடைய கணினிவழி நூற்பட்டியல் பணிகளை நை கேட்டறிந்தார். அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் நூலகத் துறையில் சங்கரலிங்கம் ஒருவர்தான் இந்த முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டிருந்தவர்.
இந்தச் சந்திப்புதான் சிகாகோ பல்கலைக்கழகம் மொழி அறக்கட்டளையுடன் இணைந்து ரோஜா முத்தையா நூலகத்தை நிறுவ வேண்டும் என்ற முடிவுக்குக் காரணமாக அமைந்தது. சங்கரலிங்கம் ‘மொழி அறக்கட்டளை’யின் அறங்காவலர்களில் ஒருவராக இருந்தார். சங்கரலிங்கம் கடுமையான உழைப்பாளி. தன் துறையில் புதிய அறிவைப் பெற, இரவும் பகலும் உழைப்பார். இந்தக் கடின உழைப்பின் விளைவாகத்தான் 1996 இறுதியிலேயே ரோஜா முத்தையா நூலகத்தில் இருந்த அனைத்துப் புத்தகங்களுக்கும் கணினிவழி நூற்பட்டியல் தயாராகிவிட்டிருந்தது. கணினிப் பயன்பாட்டினாலேயே அவர் இதைச் சாதிக்க முடிந்தது. 1994-ல் கையால் நூற்பட்டியல் தயாரிக்க வேண்டியிருந்தால், 1996-ல் இந்தச் சாதனை சாத்தியப்பட்டிருக்குமா?
ஆக, 1994-ல் நூலகம் சென்னைக்கு வந்த உடனேயே கணினிவழி நூற்பட்டியல் வேலையும் தொடங்கிவிட்டது. அப்போது நூலகத்தின் பணியில் சுந்தர் சேர்ந்திருக்கவில்லை!
- ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன், அகராதியியலாளர், பதிப்பாளர் -
க்ரியா பதிப்பகம்.
தொடர்புக்கு: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Courtesy:https://www.hindutamil.in/news/opinion/columns/137789--1.html