- சரஸ்வதி மஹால் நூல் நிலையம் -
மராட்டி-தமிழ் தொடர்புகள்; வரலாற்றுப்பின்னணி
பண்டைக் காலந்தொட்டே ஆசியக் கண்டத்தின் முக்கிய நிலப்பரப்பாக இந்தியா விளங்கி வருவதால், உலக நாடுகள் பலவும் பல்வேறு நிலைகளில் இந்தியாவுடான உறவுகளைப் பேணுவதில் முனைப்புடன் செயல்பட்டு வந்துள்ளன. குறிப்பாக வணிகம் செய்தல், சமயத்தைப் பரப்புதல், அரசியல், பொருளாதாரத்தில் மேலாதிக்கம் செலுத்துதல் போன்றவை அவர்களின் முக்கிய நோக்கங்களாக இன்றளவும் உள்ளன. வெளிநாட்டவர்கள் தாக்கத்தில் இந்தியாவை ஆட்சி செய்த மன்னர்களும், குறுநில மன்னர்களும் தங்களின் மேலாதிக்கத்தைச் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஒரு மொழிசார் நாகரிகம் பிற மொழிசார் நாகரிகத்திலிருந்து கடன் பெறுவது தொன்றுத்தொட்டு உலக மக்களிடையே காணப்படும் பண்பாட்டுப் பரிமாற்றப் போக்காக அமைகிறது. பொதுவாக வேற்றுநாட்டு அரசர்கள் பிற நாட்டின் மீதான தங்களுடைய ஆதிக்கத்தை, சமயத்தின் வழியாகவும் மொழியின் வழியாகவும் செலுத்திப் பண்பாட்டு மாற்றங்களை நிகழ்த்தினர். இதனை மணவாளன் அவர்கள் பின்வருமாறுக் கூறுகிறார். “கி.பி இரண்டாம் நூற்றாண்டிற்கும் கி.பி ஐந்தாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தே விளைந்த அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டிலும் சமுதாயத்திலும் பல்வேறு பண்பாட்டு மாற்றங்களை ஏற்படுத்தின என்று வரலாற்று வல்லுநர்கள் கருதுகின்றனர். வேற்று அரசர்களின் ஆட்சி, வேற்றுச் சமயத்தின் செல்வாக்கு, வேற்று மொழியின் ஆதிக்கம் போன்றன இம்மாற்றங்களை உண்டு பண்ணின” (அ.அ.மணவாளன்:2009:100) இவரின் கருத்தும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
மராட்டியர் ஆட்சிக் காலத்தில் வாணிகம் மிகவும் செழிப்பாக நடைப்பெற்று வந்தது. உள்நாட்டு வணிகர்களுடன் பிரெஞ்சு, போர்த்துக்கீசிய, டச்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வணிகக் குழுக்களைச் சார்ந்த வணிகர்களும் சோழநாட்டுப் பகுதியில் வாணிகம் செய்து வந்தனர். வெளிநாட்டு வணிகர்கள் கடற்கரைகளில் தொழிற்சாலைகளையும், சேமிப்புக் கிடங்குகளையும் கட்டிக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக உள்நாட்டுக்குள் பொருள்களைக் கொண்டு வந்து விற்றனர்; வாங்கினர். அவர்களுக்குப் பல வணிகச் செலவுகளும் அளிக்கப்பட்டன. முதலில் குத்தகைக்கு ஊர்களைப் பெற்ற வெளிநாட்டினர் பின்னர், தமிழக அரசியலில் ஈடுபட்டு இலவசமாகவும் ஊர்களைப் பெறத்தொடங்கினர்.
“மராட்டியர் காலத்தில் பல்வேறு அந்நிய நாட்டினர் தஞ்சைப் பகுதியில் குடியேறினர். வாணிப நோக்கங்களுக்காகவும் சமய நோக்கங்களுக்காகவும் இவர்கள் வந்தனர். நாகப்பட்டினத்தில் போர்ச்சுக்கீசியர்கள் குடியேறினர். காரைக்கால் பகுதியில் பிரெஞ்சு நாட்டவர் ஆதிக்கம் வளர்ந்தது. இந்த அந்நிய நாட்டவரில் சமயப் பரப்பாளர்கள் இங்குள்ள மக்கள் போலவே உடை உடுத்தி இங்குள்ள பழக்க வழக்கங்களைப் பின்பற்றினர். இந்த ஐரோப்பியர் பின்பற்றிய பல வழக்கங்கள் இங்குள்ள சமுதாய மக்களால் பின்பற்றப்பட்டன. பொதுவாக இஸ்லாமியர்கள் வாணிபத்தில் ஈடுபட்டு வந்தனர்”.(ஜே.தர்மராஜ்:2003:130). மராட்டியர் காலத்தில் வாணிப நோக்கத்திற்காக வந்தவர்கள் தங்களுடைய பண்பாட்டை நிறுவுவதற்கு இங்குள்ள பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொண்டு அதன் வழியாக சமயத்தைப் பரப்பினர் என்பதை இவரின் கூற்று வழி அறியமுடிகிறது.
மராட்டி-தமிழ் தொடர்பினைக் காலகட்ட அடிப்படையில் பின்வரும் பிரிவினுள் வகைபடுத்தலாம்:
1. தொடக்கக்காலத் தொடர்புகள்
2. இடைக்காலத் தொடர்புகள்
3. தமிழகத்தில் மராட்டிய ஆட்சியின் தோற்றம்
4. மோடி ஆவணக் குறிப்புகளும், சரஸ்வதி மஹால் நூல் நிலையமும்
5. தற்காலத் தொடர்புகள்
தொடக்கக் காலத் தொடர்புகள்
தமிழ்-மராட்டிய உறவு பன்னெடுங்காலப் பழமை வரலாறு உடையது. மராட்டியமொழி தமிழ்மொழி வழியாகவும் பண்பாட்டு வழியாகவும் இணைந்து வந்துள்ளததைத் தமிழ் இலக்கியச் சான்றுகள் எடுத்தியம்புகின்றன. பௌத்த இலக்கியமான மணிமேகலையில்தான் முதன் முதலாக மராட்டியர் பற்றிய குறிப்பு "மராட்டக் கம்மரும்” எனக் (19:105-112) காணப்படுகிறது. மணிமேகலைக்குப் பின், பெருங்கதை இவ்விரண்டு மொழிகளுக்குமான தொடர்பைப் பற்றி "அம்புகை கழுமிய அணி மாராட்டம்" எனக் (2:10:72) குறிப்பிடுகிறது. இதன் பொருள் வாசவதத்தை, மராட்டிய தேயத்து அணிகளைப் புனைந்து மகிழ்ந்தாள் என்பதாகும்.
இடைக் காலத் தொடர்புகள் (மராட்டியர் காலம்)
சங்க இலக்கியக் காலகட்டத்தில் இருந்தே மராட்டிக்கும், தமிழுக்குமான தொடர்புகள் இருந்திருப்பினும் தமிழ்ச்சூழலில் மராட்டிய மன்னர்களின் வருகைக்குப் பின்னால்தான் அத்தொடர்புகள் வளர்ச்சி அடைந்தன. தமிழகத்தில் நாயக்கரது ஆட்சிக்குப் பின் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு 1676 முதல் 1799 வரை ஆட்சி புரிந்தும் பிறகு 1855 வரை தஞ்சையிலேயே செல்வாக்குப் பெற்றும் விளங்கினர். 1676-இல் ஏகோஜி தஞ்சையைக் கைப்பற்றித் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிப்புரியத் தொடங்கினார். அது முதல் தஞ்சையில் மராட்டியர் ஆட்சி ஆரம்பமானது. மராட்டியர்கள் ஏறத்தாழ 180 ஆண்டுகள் தஞ்சையிலேயே ஆட்சி புரிந்து வந்துள்ளனர். அதன் காரணமாகத் தமிழகத்தில் மொழி மற்றும் கலாச்சாரத்தில் மராட்டியத் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம். முதலில் தமிழர்கள் சமஸ்கிருதத்தைத் ‘தேவ பாஷை’ என்று ஏற்றுக்கொண்டு அதற்கு தேவத்தன்மை கொடுத்தனர். பின்பு மராட்டி மொழிக்கும் தேவத்தன்மை வழங்கினர். இதனை க.ப.அறவாணன், “களப்பிரர், பல்லவர் காலம் தொடங்கி (1700 ஆண்டுகள்) அண்மைக்காலம் வரை தமிழர் சமஸ்கிருதத்தைத் தேவ பாஷை என்று கருத வைக்கப்பட்டனர். தமிழ் மொழி ‘நீச பாஷை’ என்று ஆரிய வழியினரால் நம்ப வைக்கப்பட்டது. சமஸ்கிருத மொழிக்குரியோர் தேவர்கள் என்றும், தமிழ் மொழிக்குரிய தாம் நீசர்கள் என்றும் ஒத்துக்கொள்ள வைக்கப்பட்டனர். இந்தத் தேவ நிலையை ஏற்றுக் கொண்ட தமிழர், அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த உருது, தெலுங்கு, மகாராட்டிரம் முதலான மொழிகளுக்கும் தேவத்தன்மை கொடுத்தனர்”(க.ப.அறவாணன்:2009:79) என்கிறார். மேலும் இவரின் கூற்றுவழி தமிழ்ச் சூழலில் மராட்டி மொழி கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி தேவத்தன்மை அடைந்த சூழலையும் அறிய முடிகிறது.
தமிழகத்தில் மராட்டிய ஆட்சியின் தோற்றம்
விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் இஸ்லாமிய அரசுக்கு எதிராக இந்து சமயப் பண்பாட்டைக் காக்கும் பொறுப்பை மாராட்டிய அரசுகள் ஏற்று நின்றன. தக்காணத்திலும், தமிழகத்திலும் மராட்டிய அரசுகள் தோன்றின. தக்காணத்தில் தோன்றிய மராட்டிய அரசு இஸ்லாமிய அரசுகளைத் துன்பப்படுத்தி முன்னேறியது. ஆனால் தமிழத்தில் தோன்றிய மராட்டிய அரசு இதற்கு நேர் மாறாக விளங்கியது. தமிழக மராட்டியத் தலைவர்கள் முஸ்லிம் அரசின் படைத்தலைவர்களாக விளங்கி முஸ்லிம்களுக்காக நாடு பிடிக்கும் பணியில் இறங்கினர். பீஜப்பூர் சுல்தானின் தளபதியான சாஜிபோன்ஸ்லே தஞ்சை, செஞ்சி போன்ற இடங்களைக் கைப்பற்றி தங்கள் வசம் ஆக்கிக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் வெங்காஜி பீஜப்பூரின் மேலாதிக்கத்தை உதறித் தள்ளிவிட்டு 1676-இல் தஞ்சையின் அரசரானார். இவ்வாறு தஞ்சையில் மராட்டியர் ஆட்சி ஆரம்பமானது.
மராட்டிய சிவாஜியின் தமிழகப் படையெடுப்பு
தென்னிந்தியாவில் மராட்டியர் வலிமைமிக்க அரசாக முன்னிறுத்திக் கொள்ள மேற்குக் கடற்கரையில் சாதாராவிலும் கோல்காப்பூரிலும் பெரும் ஆதிக்கம் உடையவராகத் தங்களை நிலை நாட்டினர். பின்னர் தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையோரங்களில் அரசியல் வெற்றிகளைப் பெற அவர்கள் முற்பட்டனர். 1676-ஆம் ஆண்டின் இறுதியில் மராட்டிய சிவாஜி பெரும்படை ஒன்றைத் திரட்டிக் கொண்டு தமிழ்நாட்டின் மீது படையடுத்தார். அதனூடாகச் செஞ்சியைக் கைப்பற்றி செஞ்சிக் கோட்டையைப் பழுது பார்த்து தனது சொந்த இராணுவ நிர்வாக முறையை ஏற்படுத்தினார். செஞ்சியிலிருந்து ஒரு படையை வேலூருக்கு அனுப்பினார். ஆனால் அதனைப் பீஜப்பூர் தளபதி அப்துல்லாகான் திறம்படப் பாதுகாத்தார். எனவே பின்னர் தஞ்சையை நோக்கிப் படையெடுத்தார். பரங்கிப்பேட்டை, திருவடிகை, தேவனாம்பட்டிணம், புவனகிரி ஆகியவற்றைக் கைப்பற்றிக்கொண்டு 1677-இல் கொள்ளிடம் நதிக்கரை திருவாடியில் முகாமிட்டார்.
அப்பொழுது தஞ்சையை ஆட்சி புரிந்த வெங்காஜியிடம் தஞ்சையின் ஜாகீர்களைப் பகிர்ந்து கொள்வது பற்றி விவாதித்தார். ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் எவ்வித முடிவும் ஏற்படவில்லை. அதன் காரணமாக வெங்காஜிக்குச் சொந்தமான கொள்ளிடத்தின் வடக்குப்பகுதியைக் கைப்பற்றினார். சிவாஜி தான் வெற்றி பெற்ற பகுதிகளை நிர்வாகிக்கும் பொறுப்பைச் சாந்தாஜியிடம் ஒப்படைத்து விட்டுத் திரும்பினார். தெற்கிலிருந்து சிவாஜி திரும்பியதும் வெங்காஜி தான் இழந்த பகுதிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டார். வெங்காஜிக்கும், சாந்தாஜிக்கும் இடையே ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி தஞ்சையையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மட்டும் பெற்று வெங்காஜி ஆண்டார்.
1680-இல் சிவாஜி இறந்த பின்னர் வெங்காஜி தஞ்சாவூரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நிர்வாக முறையைத் தன்வசம் ஆக்கினார். தனது நிலையை வலுப்படுத்த எண்ணிய வெங்காஜி வடக்கிலுள்ள மராட்டியர்களையும், அந்தணர்களையும் பதவியில் அமர்த்தி நிர்வாகத்தை மாற்றியமைத்தார். விவசாயிகளின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. இப்புதிய எஜமானர்கள் நல்ல நிலங்களைத் தங்களுக்கு வைத்துக்கொண்டு தமிழ் விவசாயிகளைக் குத்தகையாளர் நிலைக்கு மாற்றினர்.
1683-இல் பிரிட்டோ துறவியார் எழுதுவதாக க.ப.அறவாணன் பின்வருமாறு கூறுகிறார்.“வெங்காஜி நெல் விளைச்சலில் 5-இல் 4-பங்கை வாங்கிக் கொள்கிறார். வரியைக் காசாகவே வசூலிக்கிறார். கொடிய சித்ரவதை செய்து வரி வசூலிக்கப்படுகிறது. அத்தகைய கொடுங்கோலை எண்ணியும் பார்க்க முடியாது’’(2009:94). இவரின் கருத்துப் படி மராட்டியர்கள் விவசாயிகளிடம் கொடுங்கோல் ஆட்சி முறையை நடத்தினர் என்பதை அறிய முடிகிறது. இதற்குக் காரணமாக விளங்கிய சமூக நிலையையும், மராட்டியர்கள் தமிழகத்தில் எந்த சமுதாயத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர் என்பதையும் அறிந்து கொள்வதன் மூலம் மேலும் அக்காலத் தொடர்புகள் புலப்படும்.
மராட்டிய மன்னர்கள் வேறு குறுநில மன்னர்களிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர். அதற்கு அடுத்த நிலையில் தான், ஆட்சிக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்த பிராமணர்களுடன் தொடர்பு கொண்டனர். இவர்கள் மராட்டிய மன்னர்களின் உதவியோடு ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதுவையில் வேலைகளைத் தேடிக்கொண்டனர். புதுச்சேரியை ஆண்டோருக்கும் மராட்டிய மன்னர் சிவாஜிக்கும் இடையே நடந்த உடன்படிக்கை பற்றி மார்டின் எனும் அயல்நாட்டார் எழுதிய குறிப்பு நம் கவனத்திற்கு உரியது. ‘’மராட்டிய மன்னர்கள் அளித்த ஒப்பந்தப்படி 20,000 மராட்டியப் பிராமணர்கள் புதுவைக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் எல்லாக் கிராமங்களிலும் புகுந்து கொண்டு வேலைத் தேடிக்கொண்டனர். ‘அவர் அனுப்பிய அவுல்தாருக்கு உட்பட்டு நாங்கள் வாழவேண்டியிருந்தது’ என்று எழுதுகிறார்.”(சமூகப் பண்பாட்டுத் தமிழக வரலாறு(1565-1984:1991)
தமிழகத்தில் மராட்டியர் கால ஆட்சியில் மராட்டிய மன்னர்களிடம் பிராமணர்களுக்கு அதிக செல்வாக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்களுக்கு நிலங்கள் வழங்கி தானம் செய்தனர். பிராமணர்கள் வாழ்ந்த பகுதியின் அருகே தங்கள் அரண்மனைகளைக் கட்டிக்கொண்டனர். அரசாங்கத்தின் உயர்பதவிகளிலும் ஆலயப் பராமரிப்புப் பணியிலும் பிராமணர்கள் அமர்த்தப்பட்டனர். பிராமணர்களுக்கு அடுத்தப்படியாக மராட்டியர் ஆட்சியில் செல்வாக்கு பெற்றிருந்தவர்கள் வேளாளர்கள் ஆவார்கள். இன்னும் பிற சமூகத்தினரான மருத்துவர், வண்ணார், சவரம் செய்வோர் முதலானவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருந்தனர். பிராமணர்களுக்கு மட்டும் அரண்மனையில் உயர்ந்த பதவி கொடுக்கப்பட்டு வந்தது மற்ற சமூகத்தினரை இழிவுநிலையில் வைத்திருந்தனர்.1676 முதல் 1855 வரை தஞ்சையில் மராட்டிய மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்; சுமார் 180 ஆண்டுகள் 13 அரசர்கள் ஆட்சி புரிந்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சி புரிந்த பல்லவர், பாண்டியர், சோழர், நாயக்கர் ஆகியோர்களின் வரலாறு ஆராய்ச்சி அறிஞர்கள் பலரால் நன்கு ஆராயப்பட்டு நூல்கள் எழுதியிருப்பது போலத் தஞ்சை மராட்டியர் வரலாறு இன்னும் சரியான அளவுடன் முழுமையாக ஆராயப் படவில்லை. 1928-இல் கே.ஆர்.சுப்பிரமணியம் அவர்கள் ‘தஞ்சை மராட்டிய அரசர்கள்’ (The Maratha Rajas of Tanjore) என்னும் ஆங்கிலநூலை வெளியிட்டார். பின் 1944-ஆம் ஆண்டு சி.கே.சீனிவாசன் அவர்களின் ‘கர்நாடகப் பகுதியில் மராட்டியர் ஆட்சி’(Maratha Rule in the Carnadic) என்னும் ஆங்கிலநூல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வெளியீடாக வந்தது. டாக்டர் என்.சுப்பிரமணியம், டாக்டர் கே.ராஜய்யன் இருவரும் தனித்தனியாக எழுதியுள்ள தமிழக வரலாறு(1565-1956) என்னும் ஆங்கில நூலிலும் தஞ்சை மராட்டியர் வரலாறு பற்றி ஓரளவு எழுதியுள்ளனர்.
மோடி ஆவணக் குறிப்புகளும், சரஸ்வதி மஹால் நூல் நிலையமும்
தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள் எல்லாக் கணக்குகளையும் பிற அனைத்து வகையான செயல்பாடுகளையும் ‘மோடி’ எழுத்தில் ஆவணமாக மராட்டி மொழியிலேயே எழுதி வைத்துள்ளனர். மராட்டி மொழி பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை மோடி எழுத்துக்களால் எழுதப்பட்டது. அச்சு இயந்திரம் வருகைக்குப் பின் மோடி எழுத்துக்களைத் தனித்தனியே வார்க்க முடியாததால், கிருத்துவ பாதிரிமார்கள் நாகரி எழுத்தைக் கொண்டு அச்சிட ஆரம்பித்ததால் இன்று மராட்டிமொழி நாகரி எழுத்துகளையே கையாண்டு வருகிறது. தஞ்சை மராட்டிய “அரசின் பெயர்கள் அனைத்தும் மராட்டி மொழியிலேயே இருந்தன. அரசிகளின் பெயர்கள் யமுனாபாய், அகல்யாபாய் என அமைந்திருந்தன. மராட்டிய அரசர்களின் ஆணைகள் பெரும்பாலும் மோடி மொழியில் வெளியிடப்பட்டன. மராட்டி மொழிக்கு அக்காலத்துத் தனி எழுத்தின்மையால் சமஸ்கிருதத்திற்குரிய தேவநாகரி எழுத்தே பயன்படுத்தப்பட்டது.” (தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும்: தொகுதி 2: 1989)
மோடி எழுத்துப் பயன்படுத்தபட்ட விதம் பின்னர் கால வளர்ச்சியால் மாற்றம் பெற்றமைக் குறித்து அறியும் விதமாக இவ்ஆவணக்குறிப்பு அமைந்துள்ளது. “யாதவ அரசர்கள் மராட்டிய மொழிக்கு எழுத்துரு (லிபி) ஏற்படுத்தினார்கள். மோடி என்று அந்த எழுத்து வழங்கப்பட்டது. இப்போது தேவநாகரி லிபியே பயன்படுத்தப்படுகிறது”. (க.பூரணச்சந்திரன் : 2004 : ப 77) மேலும் எழுத்து பயன்பாடு இன்றளவு மாறுபட்டுள்ளதை அறிய முடிகிறது. மராட்டி மன்னர் ஆட்சிக்கால வரலாற்றுக்கான முக்கியச் சான்றுகளாக மோடி எழுத்தில் எழுதப்பட்ட மோடி ஆவணங்கள் அமைகின்றன. அரண்மனை மற்றும் அன்றாடச் செயல்பாடுகளை இவை பதிவு செய்துள்ளன.
மோடி ஆவணம், மோடி எழுத்துக் குறித்து பா. சுப்பிரமணியன் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
‘மோடணே’ என்றால் மராட்டி மொழியில் ‘உடைதல்’ என்று பொருள். மோடி எழுத்து என்பது தேவ நாகரி எழுத்தை உடைத்துச் சிதைத்து உருவாக்கியது எனக் கொள்ளலாம். தொடக்க காலத்தில், மராட்டி மொழி பேச்சு வடிவினின்று எழுத்துருக் கொண்டபோது, அதற்கெனத் தனி ஒரு வரி வடிவம் இல்லையாதலால், முன்னரே வழக்கிலிருந்த சமஸ்கிருத மொழிக்குரிய‘தேவ நாகரி’ எழுத்தைக் கைக்கொண்டனர். இஸ்லாமியர் இந்தியாவைக் கைப்பற்றி ஆளத் தொடங்கிய விடத்து, அவர்கள் இருவகை வரி, வடிவங்களைத் தங்களுடைய பார்சி மொழிக்குப் பயன்படுத்தினர். ‘நாஸ்தலிக்’ என்னும் எழுத்து முறை விரைவாக எழுதுவதற்கும் பயன்படுத்தப்பட்டது. அதனைக் கண்ட ஹேமாட் பந்த் என்ற தேவகிரி யாதவ அரசர்களின் அமைச்சர் மராட்டி மொழிக்கும் ஒரு வகை சுருக்கெழுத்து முறையை உருவாக்கினார். அவ்வாறு, தேவ நாகரி எழுத்தை உடைத்துச் சிதைத்து மாற்று வடிவம் உண்டாக்கிய எழுத்து முறையே ‘மோடி’ எழுத்தாயிற்று, ‘கிகஸ்த’ என்ற சொல்லுக்குரிய ‘உடைந்து’ என்ற பொருளே ‘மோடி‘ என்பதற்கும் உரியதாதலின் இதுவே பொருந்துமெனலாம்.
மோடி எழுத்துக்கள் தேவ நாகரி வரி வடிவத்தை அடியொற்றியவை. ஆயினும் தேவ நாகரியிலுள்ள பல எழுத்துக்கள் குறைக்கப்பட்டுள்ளதோடு குறில், நெடில் வேறுபாடுகளும் இல்லை. இடத்திற்குத் தக்கவாறு அமைத்துப் படித்துக் கொள்வதே முறையாயிற்று. மேலும் எழுதுகோலைக் காகிதத்திலிருந்து எடுக்காமல் தொடர்ச்சியாக வேகமாக எழுத மோடி எழுத்துப் பயன்படுகிறது. இதனால் சத்திரபதி சிவாஜியின் காலத்திற்கு முன்பிருந்த வரலாற்றுக் குறிப்புகள், கடிதப் போக்குவரத்து, நாட்குறிப்பு, வரவு செலவுக் கணக்குகள் முதலியன மராட்டி மொழியில் மோடி எழுத்தில் எழுதப்பட்டன.
மோடி எழுத்தினைப் படிக்க வல்லோர் மட்டுமே இதனைப் புரிந்துகொள்ளக் கூடுமாகையால் அரசியல் இரகசியங்கள் பிறர் அறியாமல் காப்பதற்கும் பயன்பட்டது.” (தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும்;1989) என்னும் இவரின் கருத்துக்கேற்ப மராட்டியர்களின் அலுவலக மொழியாக மோடி மொழி எழுத்து இருந்தது என்றும் மோடி எழுத்தைக் கற்றவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்றும் மேலும் அடிமை முறை மராட்டியர் ஆட்சியில் தமிழகத்தில் இருந்தன எனவும் மோடி ஆவணத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
மோடி ஆவணங்களும் ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பும்
மராட்டியர்களின் ஆட்சிக் காலத்தில் அடிமை முறைகள் இருந்ததை மோடி ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. சிறுமிகளைத் தஞ்சை மராட்டிய அரசாங்கம் விலைக்கு வாங்கியுள்ளது தொடர்பாக தரும் ஆவணச் செய்திகளை வேங்கடராமையா குறிப்பிடுகிறார் “சிதம்பரம் பிள்ளை அலிகானா சந்திலிருக்கும் வெள்ளாளர் சுப்புபிள்ளை பெண் சாதியின் பெண் காவேரி - வயது 12-கிரயம் 10.“நாடக சாலையில் கிருஷ்ணாவின் பெண் செல்லம் வயது 10 சர்க்காரில் கிரயம் சக் 10. எழுதிய வாத்தியாருக்கு 2 பணம்” இச்சான்றுகளைத் தந்துவிட்டு “இங்ஙனம் செய்தமை அரண்மனை மாதரசிகளுக்குப் பணிவிடை அல்லது வேலைகள் செய்வதற்காகவேயாம் என்று ஊகித்தறியலாம் என்று சிறுமிகள் விற்பனைக்கு உள்ளானமை குறித்து (வேங்கட ராமையா 1984:327) விளக்கமளிக்கிறார். அவரது விளக்கத்தின் படி விட்டுவிடாமல் எதற்காக சிறுமிகள் விலைக்கு வாங்கப்பட்டனர் என்பதற்கான தரவுகள் கிடைக்குமாயின் அதற்கான நோக்கத்தை அறிந்து கொள்ள முடியும். தமிழக மராட்டியர்களின் ஆட்சிக்காலத்தின் போது கி.பி.1738-இல் படையெடுத்த சந்தா சாய்புமக்களை அடிமைகளாக சிறைப்பிடித்துச் சென்றதை “ஊரைக் கொள்ளையிட்டு சிறைகள் கூட பிடித்துப் போகிறபடியினாலே“ என்று ஆனந்தரங்கப் பிள்ளை (1998:47) தமது நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார்.
மராட்டியர் ஆட்சிக் காலத்திலும் அடிமை முறை நிலவியிருந்ததையும் சமூகத்தில் கடைநிலையிலிருந்த மக்கள் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்றும் பெண்கள், சிறுமிகள் விலைக்கு விற்கப்பட்டனர், கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்றும் இங்கு கருத இடமுள்ளது. மேலும் தஞ்சை மராட்டியர் காலத்தில் தீண்டாமை இருந்துள்ளமை குறித்து மோடி ஆவணத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. “மராட்டியர் ஆட்சியின் போது சாதிய உணர்வுகள் தலை தூக்கியிருந்தன. ஒருவன் கீழ்ப்பால் ஒருத்தியின் கைச்சோறு உண்டான். அவன் பார்ப்பனன். ஆகையால் மீண்டும் உபநயனச்சடங்கு (முந்நூல் அணியும் சடங்கு) முதலியவற்றிற்கு உட்படுத்தப்பட்டான். அரச தண்டனையும் அவனுக்கு அளிக்கப்பட்டது. கோயிலில் வழங்கப்படும் பிரசாதங்கள் எல்லோருடைய வீட்டிலும் கொடுக்கப்பட்டன. எனினும் மகமதியன், பறையன் வீட்டில் மட்டும் கொடுக்கப்படவில்லை என்று மோடி ஆவணம் குறிப்பிடுகிறது.
இதனால் மகமதியர், பறையர் கீழ் நிலையில் இருந்துள்ளமை புலப்படும். வலங்கை, இடங்கை எனச் சாதியினர் பேசப்பட்டனர். ஒவ்வொரு பிரிவிலும் 98 சாதிகள் இருந்துள்ளன” என (மு.இளங்கோவன்:1994: 46) மோடி ஆவணத்தில் சாதி தீண்டாமை குறித்தும் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது. மோடி ஆவணத்தின் மூலம் மராட்டியர்களின் ஆட்சி நிர்வாகத்தைப் பற்றியும் நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது.
சரஸ்வதி மஹால் நூல் நிலையம்
இந்நூலகம் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னரே (கி.பி.1400)-களில் சோழர்கள் காலத்தில் தோன்றியிருக்கிறது. அவர்கள் பணியால் வளர்ச்சி யடைந்து, பின்னர் தஞ்சை நாயக்க மன்னர்களால் வளர்க்கப்பட்டு அதன் பின்னர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களால் வளர்ச்சியுற்றது. இன்று பன்மொழிச் சுவடிகளும், காகிதத்தில் எழுதிய நூல்களும், ஓவியங்களும் கொண்ட ஓர் ஒப்பரிய நூலகமாகத் திகழ்கின்றது.
இங்கு தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், டச்சு, இலத்தீன், கிரேக்கம் முதலிய பலமொழிகளிலுள்ள ஓலைச்சுவடிகளும் கையெழுத்துப்பிரதிகளும் அச்சுப்பிரதிகளும் உள்ளன. வரலாறு, மருத்துவம், அறிவியல், இசை, நாட்டியம், சிற்பம், மதம், தத்துவம் முதலிய பல்கலைகளில் சிறந்த நூல்கள் உள்ளன. 16,17- நூற்றாண்டுகளில் தஞ்சையை ஆண்ட நாயக்க அரசர்கள் சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் நூல்களைப் கொண்டு வந்து சேர்த்தனர். மகாராட்டிர அரசர்கள் மேலும் பல நூல்களைச் சேர்த்து நூல்நிலையமாக மாற்ற, ஊக்கத்தோடு செயற்பட்டனர். அதில் தலை சிறந்தவர் இரண்டாம் சரபோஜி ஆவார். இரண்டாம் சரபோஜி 1820-ஆம் ஆண்டு காசிக்கு சென்ற போது, ஏராளமான சமஸ்கிருத நூல்களைக் கொண்டு வந்து சேர்த்தார். மேலும் இவர் காலத்தில், மேனாட்டு மொழியிலான 5000 அச்சுப்புத்தகங்களும் பல சிறந்த ஓவியங்களும் சேர்க்கப்பட்டன. ஆகையால் தான், இந்நூலகம் சரபோஜி சரசுவதி மகால் நூல் நிலையம் என்று வழங்கப் பெறுகிறது.
இந்நூலகத்திற்கு வெளியே கொலுமண்டபமாக இருந்த ஒரு மண்டபத்திலே, 1807-இல் கிழக்கிந்தியக் கம்பெனியாரால் நிறுவப்பெற்ற சரபோஜி மன்னரின் உருவச்சிலை அழகாக அமைந்துள்ளது. 1871-இல் அரசாங்கத்தார் நூல் நிலையத்திலுள்ள நூல்களின் பட்டியலொன்றைத் தயாரிக்குமாறு டாக்டர் பர்னெல் என்னும் நீதிபதிக்குப் பணித்தனர். அவர் இந்த நூல் நிலையமே உலக முழுவதிலும் மிகப் பெரியதும் மிக முக்கியமானதுமாகும் என்று கூறினார். 1918 -இல் தஞ்சை மராட்டிய மன்னரின் சந்ததியர், தமது சொந்த உடைமையாக்கி, இந்நூலகத்தை அரசாங்கத்திடம் ஒப்புவித்தனர். அதன்பின் ஜம்புநாதபட் லாண்டகே, காகல்கர், பதங்க அவ தூதர் முதலிய பல சிறந்த அறிஞர்களின் பரம்பரையிலிருந்து ஏராளமான நூற்றொகுதிகள் இந்நூலகத்தில் சேர்க்கப்பட்டன. இப்பொழுது தமிழ்நாடு அரசால் மேலாண்மை செய்யப்படுகிறது.
இங்கு ஏறத்தாழ 25,000 சமற்கிருத நூல்களும் மற்ற பதினொரு இந்திய மொழிகளின் ஆயிரக்கணக்கான நூல்களும் உள்ளன. வரலாற்றுப் புகழ்வாய்ந்த கையெழுத்தாலான அஞ்சல் மடல்களும் அவற்றுடன் படங்களும் இருக்கின்றன. 400 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நந்திநாகரி என்னும் எழுத்தில் உள்ள சுவடிகளும் உள்ளன. 300 ஆண்டுகளுக்கு முன் சுவடிகளில் பெயர்த்தி எழுதப்பட்ட சீவக சிந்தாமணி, திருவாசகம், திவாகரம், கலிங்கத்துப்பரணி, கம்பராமாயணம் முதலிய நூல்களும் உள்ளன. கி.பி.1476 இல் காகிதச் சுவடிகளில் எழுதப்பட்டட சமஸ்கிருத நூலும் உள்ளது. கி.பி. 1703-இல் சுவடியில் எழுதப்பட்ட சீவகசிந்தாமணி உள்ளது. ஐரோப்பா, இந்தியா நாடுகளில் உள்ள அழகிய நகரங்களின் படங்கள், உடற்கூறு, தாவரம் முதலிய கலைக்களுக்குரிய பல நிறப்படங்களும் சிறந்த ஓவியங்களும் உள்ளன. மகாராட்டிர அரசர்கள் அலுவலகங்களில் பயன்படுத்திய 'மோடி' எழுத்துக்களாலான கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன. பிரெஞ்சு ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட ‘சாமுத்திரிகா’ என்ற அரியநூல் ஒன்றும் உள்ளது இவை மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது.
பண்பாட்டுத் தொடர்புகள்
மராட்டியர் முதன் முதலாக தமிழகத்துக்கு வந்த போதே போர்ப் படையினரையும் உணவு சமைப்போரையும் கணக்காளர்களையும் தமது நாட்டிலிருந்து அழைத்து வந்தனர். அம்மராட்டியர்கள் தற்போதும் தஞ்சை, குடந்தை ஆகிய பகுதிகளில் பல்லாயிரக் கணக்கில் இன்றும் வாழ்கின்றனர். இவர்களுக்குத் தனிப் பள்ளிக்கூடமும் நன்காடுகளும் (கோரிக்குளம்) உள்ளன. இவர்களின் சமையல் சிறப்பு மிக்கது. ‘கயிறுகட்டிகோளா’ உணவும், ‘தஞ்சாவூர் ரசமும்’, ‘கத்தரிக்காய் கொத்சும்’ இவர்களுடைய உணவுகளாகும். மராட்டியரின் உணவு வகைகளில் சுவை கண்ட தமிழர்கள் அவர்களின் சமையல் முறைகளை இன்றும் கையாண்டு வருகின்றனர்.
உணவுத் தொடர்பான மராட்டியச் சொற்கள் தமிழில் அழுத்தமாக பதிந்துள்ளன. உறவு முறை, உணவு முறை, பாத்திரங்கள் மற்றும் பிற சொற்களும் தமிழ் மொழியில் கலந்துள்ளன. தமிழில் கலந்துள்ள மராட்டியச் சொற்கள் கீழ்க்கண்டவற்றை சு.சக்திவேல் பட்டியலிடுகிறார். “தமிழ் மொழியில் மராட்டிச் சொற்கள் கலந்துள்ளன. சேமியா, கிச்சடி, கசாயம், பட்டாணி, கோசும்பரி, வாங்கி, ஸொஜ்ஜி போன்ற உணவுப் பற்றிய சொற்களும் கங்காலம், கிண்டி, ஜாடி, சாலிகை, குண்டான் போன்ற பாத்திரங்கள் பெயரும் கண்டி, சாகி, லாவணி, அபங்கம், டோக்ரா முதலிய இசைத் தொடர்பான சொற்களும் காமாட்டி, கைலாகு, வில்லங்கம், சாவடி, கோலி, அபாண்டம், கில்லாடி, இண்டியா, கலிங்கம், கொட்டு, சந்து, சலவை, ஜாஸ்தி, சுங்கு, சொண்டி, தடவை, தரகிரி, திமிசு, நீச்சு, பீருடை போன்ற சொற்களும் தமிழில் கலந்தன” (சு.சக்திவேல்:1984:219) என குறிப்பிடுகிறார். மேலும் இன்றும் தஞ்சை மற்றும் அதனருகில் உள்ள மாவட்டங்களிலும் இச்சொற்கள் புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று இந்தியாவின் பெரும் பணக்காரர் வரிசையில் உள்ள தமிழர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், தலை சிறந்த நிர்வாகிகள் எனத் தமிழர்கள் மராட்டிய மண்ணில் சிறப்போடு வாழ்கிறார்கள். மராட்டிய சட்டப் பேரவைக்குத் தேர்வாகி, அமைச்சரவையில் இடம் பெற்றுப் பணி புரிந்தவர் சுப்பிரமணியம் என்ற தமிழர் ஆவார். 2009-கணக்கின்படி மகாராஷ்ராவில் ஏறத்தாழ 32 இலட்சம் தமிழர் இங்கு வாழ்கிறீர்கள். மேலும் உலகப் புகழ் பெற்ற குடிசைத் தொகுப்பு மும்பையில் உள்ள ‘தராவி’ என்ற இடமாகும். அந்தக் குடிசைத் தொகுப்பை முழுமையாக ஆக்கிரமித்தவர்கள், தமிழர்களே ஆவார்கள். புகழ்பெற்ற வரதராச முதலியாரும் அவர்களுக்குள் வாழ்ந்து வளர்ந்தவரே. மகாராஷ்ரா வாழ் தமிழர்களுக்காகவே பம்பாய் முரசு, மராட்டியத் தமிழர்களின் குரல் ஆகிய நாளேடுகளும் http://tpimumbai.blogspot.in/ என்ற வலைப்பதிவும் இயங்கி வருகிறது.
தற்காலத் தொடர்புகள்
தமிழுக்கும் மராட்டிய மொழிக்கும் தமிழருக்கும் மராட்டியருக்கும் வரலாற்றுக் காலங்கள் ஊடாக நெருங்கிய தொடர்புகள் இருந்திருக்கின்றன. அஜந்தா, எல்லோரா ஓவியக் குகைகள் இருக்கும் இடம் வரை சோழ எல்லை, ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரந்திருந்தது. தஞ்சாவூர்ப் பெரிய கோவிலை இராசராசன் கட்டினாலும் இன்றைய அறங்காவலர் அங்குக் கடைசியாக ஆண்ட மராட்டிய மன்னர் வழி வந்தோரே என்பதாக மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்கள் 30.09.2009 அன்று மாலை 6 மணிக்கு மும்பை, தராவி, காமராசர் பள்ளி அரங்கில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் புலம்பெயர் மராட்டி தமிழர்கள் பற்றி சமீரா மீரான் குறிப்பிடுகையில் “மும்பை மாநகரில் மட்டும் ஏழாம் வகுப்பு வரையிலான 49 மாநகராட்சித் தமிழ்ப் பள்ளிகள் இப்போது இருக்கின்றன. 400 தமிழர்கள் ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். மேலும் இந்தக் கல்வி ஆண்டில் சுமார் 15000 மாணவர்கள் இப்பள்ளிகளில் பயிலுகிறார்கள். மும்பை மாநகராட்சியில் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப்பட்ட காலம் முதலே அம்மாணவர்களுக்குத் தமிழில் பாட நூல்கள் வழங்கப்படவில்லை. ஏழாம் வகுப்பு வரையிலான எல்லாப் பாடங்களையும் மராட்டி மொழியில் உள்ள பாட நூல்களைக் கொண்டு தமிழ் வழி மாணவர்களுக்குக்கு ஆசிரியர்கள் பாடநூல்களை மராட்டியிலிருந்துத் தமிழில் மொழி பெயர்த்துப் பாடங்களை நடத்துகிறார்கள். ஒரு சில ஆண்டுகள் தமிழ்நாட்டுப் பாட நூல்களைக் கொண்டு சில பாடங்களையும் மராட்டிய வழிப் பாட நூல்களைக் கொண்டு சில பாடங்களையும் நடத்த முயற்சித்தனர். தமிழ் மொழிப் பாடம் தவிர பிற அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்கள் அனைத்தும் மராட்டிய மாநிலப் பாடத்திட்டத்தின் படி நடத்தப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் மற்றும் தமிழ் காப்போம் ஆகிய அமைப்புகள் இருக்கிறது” என்ற இவரின் கருத்து ‘தமிழ் தேசியம்’ என்ற வலைதள குறிப்பின் வழி அறியமுடிகிறது.
துணை நின்ற நூல்கள்
1.அகத்தியலிங்கம்.ச(2000) திராவிட மொழிகள்-1, சென்னை, மணிவாசகர் பதிப்பகம்.
2.அறவாணன்.க.ப(2009), தமிழர்அடிமையானது ஏன்? எவ்வாறு?, சென்னை, தமிழ்க் கோட்டம் வெளியீட்டகம்.
3.அறவாணன்.க.ப.(2009), தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள், சென்னை, தமிழ்க் கோட்டம் வெளியீட்டகம்.
4.இராசு.செ(1983), தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் 50, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம்.
5.இலக்குமணன்.எஸ்.எஸ், தமிழண்ணல்(1997,2009), ஆய்வியல் அறிமுகம், மதுரை, செல்லப்பா பதிப்பகம்.
6.இளங்கோவன்.மு(1994), மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், அரியலூர், வயல்வெளிப் பதிப்பகம்.
7.சக்திவேல்.சு(1984), தமிழ்மொழி வரலாறு, சென்னை, மணிவாசகர் பதிப்பகம்.
8.சிவகாமி.ச(2004), மொழிபெயர்ப்புத் தமிழ், சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
9.சுப்பிரமணியன்.பா(1989), தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும்( தொகுதி 1&2 ), தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம்.
10.பிரபாகர் மாச்வே(1974), இந்திய இலக்கியங்கள்-22, புது தில்லி, தமிழ்ச் சங்கம்.
11.பூரணச்சந்திரன்.க(2004), இந்திய மொழிகள் ஓர் அறிமுகம், திருச்சி, நிவேதிதா பதிப்பகம்.
12.மணவாளன்.அ.அ(2009), இலக்கிய ஒப்பாய்வு சங்க இலக்கியம், சென்னை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்.
13.முருகேசபாண்டியன்(2004), மொழிபெயர்ப்பில் உலக இலக்கியம், சென்னை, திபார்க்கர்.
14.வேங்கடராமையா.கே.எம்(1984), தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும், தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.