ஒன்பது
நீங்கள் நம்பமாட்டீர்கள். நான் கூறுகிறேன். சிறந்த மனிதத்துவம்
என்பது உங்களிடமும் மற்றவர்களிடமும் கேள்வி எழுப்புவதுதான். - சோக்ரடீஸ் -சோக்ரடீசின் மெய்யியல் விசாரணை சிறைகூடத்தில் எவ்வாறு இருந்தது என்பதனை ‘சிந்தனைக் களமாகிய சிறைக்கூடம்’ என்ற அடிப்படையில் அலசியுள்ளார். மரண தண்டனைக் கைதியாக முப்பது நாள்கள் சோக்ரடீஸ் சிறையில் வாழ்ந்தார். சிறையில் நடந்தவைகளை திரைகாவியம் போல நூலாசிரியர் காட்சிபடுத்தியுள்ளார். சோக்ரடீஸ் அவரது நண்பன் கிரீட்டோ ஆகியோருக்கிடையிலான உரையாடல் நாடகப்பாணியில் தரப்பட்டுள்ளது. சோக்ரடீஸ் இன் பேச்சு முழுவதும் மெய்யியல் விசாரணையே வியாபித்திருந்தது. நாடும் சட்டமும், ஆன்மாவும் மரணமும், நல்ல மரணம், தெய்வத்திற்கு நேர்த்திக் கடன். நீட்சே, சடமும் அகமும், ஒர்பிக்வாதிகளின் மரணக் கோட்பாடு, நப்ஸ்-சுயம், ரூஹ், சித்திலெப்பை: ரூஹ் போன்ற மினிதலைப்புகளில் சோக்ரடீஸ் இன் மெய்யியலை ஒப்பாய்வு செய்துள்ளார். சோக்ரடீஸ் நஞ்சை உட்கொள்ள முன்னும் பின்னும் நிகழ்ந்தவைகளை ஒரு திரைப்படத்தின் இறுதி காட்சிபோலவே நூலாசிரியர் சித்திரித்துள்ளார். மாதிரிக்கு சில வரிகள் வருமாறு,
நாங்கள் அனைவரும் அதுவரை அழுகையைக் கட்டுப்படுத்தியே அங்கு நின்றுகொண்டிருந்தோம். அவர் நஞ்சுக் கோப்பையை கையில் ஏந்தியதையும் அதைக் குடித்ததையும் பார்த்தபோது, எங்களால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. இத்தனை பேர் அழுதுகொண்டிருக்கும் போது, சோக்ரடீஸ் மட்டும் அழாமல், அமைதியாக இருந்தார்……. சோக்ரடீஸ் தனது கால்கள் கனத்து மரக்கும்வரை நடந்து கொண்டிருந்தார். பிறகு அவர் தரையில் படுத்துக்கொண்டார். இப்போது காவலாளி அவருடைய பாதத்தையும் கால்களையும் பரிசோதித்தான். பாதத்தில் கிள்ளிவிட்டு வலி தெரிகின்றதா என்று அவன் கேட்டான். வலி தெரியவில்லை என்று சோக்ரடீஸ் பதில் சொன்னார். கால்களில் இருந்து உடலின் மேற்பாகம்வரை உடலைத் தொட்டுப் பரிசோதித்தான். உடம்பு குளிரடைந்து விறைத்துப் போயிருந்தது. பிறகு சோக்ரடீஸ் தாமே தமது உடலைத் தொட்டுப் பார்த்து விட்டு நஞ்சு இதயத்தை போய்ச் சேர்ந்ததும் உயிர் பிரிந்துவிடும். என்றார். முடிவைத் தீர்மானிக்கும் விதியின் கைகள் தொலைவில் இல்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது. அடிவயிறுவரை இப்போது குளிர்படர்ந்திருந்தது. அவர் தமது கடைசி வார்த்தைகளைக் கூறுவதற்குத் தயாரானார்…….
பத்து
விவாதத்தில் தோற்றுப்போகும் போது,
தோற்றவரின் கருவியாக ‘அவதூறு’ மாறுகிறது. - சோக்ரடீஸ் -
சோக்ரடீசுக்கான மரண தண்டனை ‘நீதியின் முடிவா’ என்று வினா எழுப்பி விவாதிக்கின்றது இந்த இயல். ‘நீதி விசாரணை தொடங்கிய காலத்தில் இருந்து தற்காலம்வரை சோக்ரடீஸ் விசாரணை பற்றியும் அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை பற்றியும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. வெறியர்களின் சகிப்புத்தன்மையற்ற குற்றச்சாட்டு களுக்கு சோக்ரடீஸ் பலியாக்கப்பட்டுள்ளார் அல்லது சுதந்திர அறிவு விசாரணைக்காகத் தம் உயிரை அவர் தியாகம் செய்துள்ளார் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது நீதி விசாரணைக் கொலை (ஜுடிசியல் மர்டர்) என்று சிலர் கூறுகின்றனர். சட்டரீதியான மரண தண்டனை என்றும், திட்டமிட்டு அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்றும் சிலர் வாதாடுகின்றனர். இதற்கு அவர்கள் பல்வேறு காரணங்களை முன்வைத்துள்ளனர். நீதியற்ற முறையிலோ நீதிக்குப் புறம்பான விதத்திலோ சோக்ரடீசிற்கு தண்டனை வழங்கப்படவில்லை. அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை சட்டப்படியானது எனப் பேராசிரியர் பெரி கூறுகின்றார். சோக்ரடீசைவிட அதிவுயர் மனிதர் வேறு யாருமில்லை. ஆனால் அவர்மீது குற்றம் சாட்டியவர்களின் குற்றச்சாட்டுகள் சரியானவையாக இருந்தன. இருந்தாலும் பெரியினுடைய கருத்து சித்தாந்தரீதியானதாக அமைந்திருந்தது. ஆனால், இதற்குப் போதிய நியாயங்களை அவர் முன்வைக்கவில்லை’ – இவ்வாறு இந்த இயல் விவாதத்திற்குரிய கருத்துக்களை விமர்சன பிரக்ஞையுடன் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் சோக்ரடீஸ் எவ்வாறு இந்த விடயத்தைக் கருத்தில் எடுத்துக் கொண்டார் என்பதைப் பிளேட்டோ தமது அப்போலொஜயில் விளக்கியுள்ளார். அதனை இவ்வியல் பதிகைச் செய்துள்ளது (பார்க்க, பக். 186-189),
பதினொன்று
நீ எதையும் அறியவில்லை என்பதை
அறிந்திருப்பதுதான் உண்மையான அறிவு. - சோக்ரடீஸ் -
தமிழ்நாட்டில் பகுத்தறிவுக் காலம் மற்றும் மு.கருணாநிதியின் திரைநாடகம் பற்றிய ஆய்வாக இவ்வியல் அமைந்துள்ளது. உலகின் பல நாடுகளில் நடந்தது போலவே சோக்ரடீசின் சிந்தனை அலை தமிழ்நாட்டிலும் பரவியது. மு. கருணாநிதியின் திரைநாடகத்தை (சோக்ரடீஸ் விசாரணைக் காட்சி) இந்த அலையின் ஒரு பகுதியாகக் கருதலாம். 1956ஆம் ஆண்டில் ஒரு முழுநீளப் படத்தில் ஒரு திரைநாடகமாக 'சோக்ரடீஸ் திரைநாடகம் இடம்பெற்றிருந்தது. அது ஒரு விபத்து போன்ற தீடீர் நிகழ்வல்ல. நவீன யுகத்தில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த பகுத்தறிவுவாத எழுச்சியின் ஒரு குறியீடு என்று அதைக் குறிப்பிடலாம் – என்று பேராசிரியர் அனஸ் ஆய்வை ஆரம்பித்துள்ளார். தந்தை பெரியார் (ஈ,வெ.ராமசாமி), கலைஞர் கருண்நிதி ஆகியோர் சோக்ரடீஸ் இன் மெய்யியல் சிந்தனைகளை எவ்வாறெல்லாம் மக்களை ஈர்க்கும் வகையில் வெளிப்படுத்தினர் என்பதனை நுண்ணயமாக ஆய்வு செய்துள்ளார். பெரியாரின் அரசியல் உரைகளில் அல்லது பகுத்தறிவுவாதச் சிந்தனைகளில் சோக்ரடீஸ சிந்தனை எவ்வாறு உயிர்ப்போடு துளிர்த்தது என்பதனை ஆய்வணுகலுடன் துலக்கியுள்ளார். பின்வரும் வரிகளை இதற்கு எடுத்துக்காட்டாக்கலாம். “பெரியார் மெய்யிய லாளர்களைப்போல கேள்விகள் எழுப்பிய சூழ்நிலைகளும் இருந்தன. ஓர் உரையில் அவர் பின்வருமாறு கூறுகின்றார்: ‘கடவுள் பற்றிய தத்துவ விளக்கம் என்றால் என்ன? கடவுள் நிர்வாணமாய், பட்டாங்கமாய்க் காணப்படும் வகையில் ஆராய்ச்சி செய்வதாகும். ஒரு விசயத்தைத் தத்துவ விசாரணை செய்ய முதலில் என்ன, எதற்காக, எங்கே, எப்போது போன்ற கேள்விகளுக்கு திருப்தியான பதில் வேண்டும். பக்தனுக்கு இதில் தேவை இருக்காது. தத்துவ விசாரணைக்காரனுக்கு இது அவசியமானதாகும்.”
கலைஞர் கருணாநிதி சோக்ரடீஸ் இன் மெய்யியலை தன்னுடைய எழுத்துக்களிலும் கருத்துகளிலும் எவ்வாறு எதிரொலிக்கச் செய்தார் என்பதை பற்றி விரிவாக எழுதியுள்ளார். கலைஞர் தன்னுடைய நாடகங்களையும் திரைப்படங்களையும் இதற்காக பயன்படுத்தியுள்ளமையை படம்பிடித்துக்காட்டியுள்ளார். ராஜா ராணி திரைப்படத்தில் (1956) சோக்ரடீசின் நீதி விசாரணைக் காட்சி ஒரு சிறிய நாடகமாக இடம்பெறுகிறது. இந்தப் படத்தின் வசனகர்த்தா மு. கருணாநிதி. அதில் புகழ்பெற்ற சோக்ரடீஸ் வழக்கு விசாரணையின் ஒரு பகுதியை ஒன்றிணைத்து இருக்கிறார். சோக்ரடீசின் சமுதாய, ஒழுக்க, அரசியல் சீர்திருத்தக் கருத்துகளையும் அரசியல் ஊழல், சமய எதிர்ப்பு விமர்சனங் களையும் அதில் அவர் கொண்டுவந்ததோடு, தமிழ்நாட்டின் அரசியல், சமயச் சீர்கேடுகளையும் உள்ளார்த்தமாக அதில் இணைத்திருக்கிறார். இதன் மூலம் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏதென்சில் நிகழ்ந்த வழக்கு விசாரணையை 20ஆம் நூற்றாண்டின் தமிழச் சமூக, அரசியல், சமய பிற்போக்கு வாதங்களின் காட்டுருவாக நம்முன் கொண்டுவந்திருக்கிறார். இதனால் சோக்ரடீஸ் நாடகம், தமிழ்நாட்டின் சமூக-அரசியலைப் பிரதிபலிக்கும் விமர்சன நாடகமாகவும் அமைந்திருக்கிறது. சுய மரியாதை, பகுத்தறிவுப் பார்வை, மாற்று அரசியல் என்ற கொள்கைக் குரல்கள் திரும்பத் திரும்ப எதிரொலிக்கக்கூடிய வகையில் அந்தத் திரைநாடகத்தின் தொடக்க வசனங்கள் அமைந் திருந்தன. 'உன்னையே நீ அறிவாய், யார் எதைச் சொன்னாலும் ஏன் எதற்காக என்று கேள்' என்ற பகுத்தறிவுக் குரலோடு சோக்ரடீஸ் திரைநாடகம் பட்டிதொட்டிகளில் எல்லாம் எதிரொலித்தது. பாடசாலை மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் இந்த நாடகத்தை மீண்டும் மீண்டும் மேடையேற்றி மகிழ்ந்தனர். தமிழ்நாட்டிற்கு வெளியிலும் இந்தப் பண்பாடு பரவியது. திரை நீங்கியதும் சோக்ரடீஸ் கூடியிருந்த மக்களிடம் இவ்வாறு கூறுகிறார்:
உன்னையே நீ அறிவாய்!
உன்னையே நீ அறிவாய்!
கிரேக்கத்தின் புகழ் உலகம் அறியாததல்ல.
அதற்காக இங்கு விழுந்திருக்கும் கீறல்களை மறைத்திட
முயல்வது புண்ணுக்குப் புணுகு தடவும் வேலையைப் போல.
அதனால்தான் உங்களைச் சிந்திக்கக்
கற்றுக்கொள்ளுங்கள்
என்று சிரம் தாழ்த்தி அழைக்கிறேன்.
அறிவு உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும்
அதைத் தேடிப்பெறுங்கள் என்று உங்களை அழைக்கிறேன்.
உன்னையே நீ அறிவாய்!
இந்த உபதேசத்தின்
உண்மைகளை அறியத்தான் ஏற்றமிகு
ஏதென்ஸ் நகர வாலிபர்களைப்பார்த்து
நாற்றமெடுத்த சமுதாயத்தை நறுமணம் கமழ்விக்க
இதோ சோக்ரடீஸ் அழைக்கிறேன்
இதோ நான் தரும் அறிவாயுதத்தை
எடுத்துக் கொள்ளுங்கள்
அறிவாயுதம் அகிலத்தில் அணையாத ஜோதி.
சோக்ரடீசிற்கு எதிரான வழக்கு விசாரணையும் அதைத் தொடர்ந்த தண்டனை நிறைவேற்றமும் தொன்மைக் கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் கிமு 399இல் நடைபெற்றது. தத்துவஞானி சோக்ரடீஸ், குழப்பம் மிகுந்த ஆனால் கடுமையான இரு குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்தார். இளைஞர்களைக் கெடுக்கின்றார், சமயத்தை இகழ்கின்றார் என்ற இரு இழிசெயல்கள் அவரிடம் உள்ளதாக 500 நடுவர்கள் முன்னிலையில் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. இது மிகவும் வெளிப்படையாகப் பெரியார், அண்ணா, மு. கருணாநிதி போன்றவர்களுக்கு எதிராக அன்று முன்வைக்கப் பட்ட குற்றச்சாட்டுகள் போலவும் அமைந்திருந்தன. (I) நகர மக்கள் வழிபடும் கடவுளர்களுக்கு மதிப்பளிக்கவில்லை என்பதோடு (2) புதிய கடவுளர்களை சோக்ரடீஸ் அறிமுகம் செய்கிறார் என்ற அடிப்படையில் சோக்ரடீஸ் ஒரு நாத்திகவாதி எனவும் குற்றம் சாட்டப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சோக்ரடீஸ் நஞ்சூட்டிக் கொல்லப்பட வேண்டும். இருந்தபோதும், சோக்ரடீஸ் விளக்க முயன்ற இந்தக் கருத்திற்கு நீதிமன்றம் மதிப்பளிக்கவில்லை. அதிகாரபூர்வமான குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதற்காகவும் தமது நிலைப்பாட்டை விளக்குவதற்காகவும் அவர் முன்வைத்த பதிலுரைகள் பொருத்தமற்றவையாக இருந்தன; அல்லது எதிர்த்தரப்பினர் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தன. மு.கருணாநிதியின் திரைநாடகத்தில் நாம் அடிக்கடி காண்பது போல் குற்றம்சாட்டப்பட்டவரான சோக்ரடீஸ் விசாரணை மன்றத்தில் பரிகாச வார்த்தைகளைச் சரமாரியாக வீசிக்கொண்டிருந்தார். வரலாற்றுரீதியான வழக்கிலும் அவர் அவ்வாறுதான் பேசினார். சமய விடயத்தைப் பற்றி அவர்கள் கேள்வி கேட்ட போதும் அதற்கு அவர் பரிகாசமாகவே பதிலளித்தார். திரைநாடகத்தில் வருவது போல, அவர் கூறிய உவமானங்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் வாதிகளும் பிரமுகர்களும் அதிகம் எரிச்சலூட்டப்பட்டனர். மேலும் நாட்டின் நீதித் தீர்ப்புக்குக் கட்டுப்படுவது முழுமை யாகக் கடைப்பிடிக்க வேண்டிய கடப்பாடு என்றும், அது தம்மால் இளைஞர்களுக்கு வழங்கக்கூடிய ஆன்ம பலமுள்ள கருத்தாக இருக்க முடியும் என்றும் அவர் நம்பினார். விமர்சனங்களுக்கு இடமிருந்தாலும் நாட்டின் சட்டத்தை மீறுவது தமது நாட்டுடன் தாம் செய்துகொண்டுள்ள சமூக ஒப்பந்தத்தைத் தாமே முறித்துக் கொள்வதற்குச் சமமாகும் என்ற கருத்திற்குள் சோக்ரடீசின் சிந்தனை சிறைப்பட்டிருந்தநா? தனக்கு விருப்பமான ஒரு சோக்ரடீசிய கருத்துடன் மு. கருணாநிதி நாடகத்தை பின்வருமாறு நிறைவு செய்கிறார்.
கிரிட்டோ: கடைசியாக நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்
சோக்ரடீஸ்: புதிதாக என்ன சொல்லப் போகிறேன், உன்னையே நீ எண்ணிப் பார்! எவர் சொன்ன சொல்லானாலும் உன் இயல்பான பகுத்தறிவால் ஆராய்ந்து பார்!
உனக்கும் இந்த நாட்டுக்கும் இதைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன்.
பன்னிரண்டு
அமைதி என்பது ஓர் ஆழமான மெல்லிசை, எல்லாச்
சத்தங்களையும் தாண்டி அதைக் கேட்கக்கூடியவர்களுக்கு மட்டுமே. - சோக்ரடீஸ் -
இறுதி இயல் (பின்னுரை) அரசியலில் சோக்ரடீசின் மெய்யியல் கிளர்ச்சி பற்றிய ஆய்வாகியுள்ளது. ‘விசாரணை மன்றத்தில் சோக்ரடீசின் உரைகளும் வாதங்களும் ஒரு வித்தியாசமான கருத்துச் சூழலை உருவாக்கின. ஏதெனிய அரசியல் மரபுகளுடன் மோதும் நிலைப்பாட்டை சோக்ரடீஸ் ஏற்படுத்தியிருந்தார். அதாவது அரசியலுக்கும் மெய்யியலுக்கும் இடையில் ஒரு மோதல் உருவாகியிருந்தது.’ இந்த மோதலைத்தான் பேராசிரியர் அனஸ் விமர்சன நோக்கில் விவாதித்துள்ளார். அரசியல் மெய்யியல் பேசுவது ஒருவகை என்றால் மெய்யியலில் அரசியலை பேசுவது பிறிதொருவகை. சோக்ரடீஸ் மெய்யியலில் அரசியலை பேசியிருக்கிறார். இதனைதான் பேராசிரியர் நுண்ணாய்வு செய்திருக்கிறார். சோக்ரடீஸ் இன் மெய்யியல் பிம்பம் காட்டும் பரிமாணங்களே அனஸ் அவர்களின் ஆய்வில் படர்ந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக நுட்பமான சில வரிகள் வருமாறு,
ஜனநாயக மக்கள் மன்றத்தினரைப் பார்த்து அரசியல் வாழ்விலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள தமக்கு உரிமை இருப்பதாகச் சோக்ரடீஸ் கூறினார். தமது உரையில் மக்கள் பேரவையை' (அசெம்ப்ளி) அவர் சாடினார். சட்ட ரீதியற்ற செயல்கள் அங்கு நடைபெறுவதாகவும் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தருவதன் மூலம் ஏதெனிய நீதியில் குறைபாடுகள் நிகழ்ந்து வருவதாகவும் கூறினார். அரசியல் முறைமையில் காணப்படும் ஊழல்களுக்கு ஜனநாயக ஆட்சியின் குறைபாடுக காரணமாக இருப்பதாகவும் குற்றம் சாடினார். சோக்ரடீசின் பிரச்சினை சோக்ரடீஸ்தான். விசாரணை மன்றத்தில் சாதாரண குற்றவாளி போல் அவர் நடந்துகொள்ளவில்லை. விசாரணை மன்றமாக இருந்தாலும் உரையாட சூழ்நிலை அமைந்தால் நீதி, நியாயம், ஒழுக்கம் என்று பேசும் அவருடைய பாணியைக் கைவிடுவார் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல அவ பேசியவற்றுள் பல வழக்குடன் நேரடித் தொடர்பற்றவை. இவர் மீதுள்ள குற்றச்சாட்டு என்ன, இவர் எதற்காக அழைக்கப்பட்டார். ஆனால், இவர் இங்கு என்ன பேசுகிறார் என்று நடுவர்கள் நினைத்த சூழ்நிலைகள் இருக்கின்றன. மெலிட்டசின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாகப் பதில் அளிப்பதை அவர் தவிர்த்துக்கொண்டார். ஆனால் அவர் குற்றச் சாட்டுகள் சார்பான பிரச்சினைகளின் உண்மைகளைப் பேசவும் விவாதிக்கவும் அதிக நேரத்தைச் செலவிட்டார். சாதாரண ஏதெனிய குடிமகனாகவும் அங்கு பேசப்படும் கருத்துகளை விசாரணை செய்பவராகவுமே நீதிமன்றத்தில் சோக்ரடீஸ் நடந்துகொண்டார்……. (பக். 228),
கோக்ரகைக்கு எதிரான விசாரணை, மெய்யியல் மீதான விசாரணையாக ஆனது. ஏதெனிய நகரத்தாருக்கும் சோக்ரடீசுக்கும் இடையிலான ஒரு துன்பியல் மோதலாகவும் இது குறிப்பிடப் படுகின்றது. ஏதெனியர் ஒன்று, சோக்ரடீசின் மெய்யியல் சிந்தனையை அல்லது அப்போது ஏதென்சின் நடைமுறையில் இருந்த அரசியலைத் தேர்வு செய்யுமாறு சோக்ரடீஸ் கூறிவந்ததை ஏதென்ஸ் மக்கள் அனுமதித்தனர். சோக்ரடீசின் மெய்யியல் புரட்சிக்கு ஏதெனிய சமூகத்தில் இடமிருந்தது. எழுபது வயது வரை சோக்ரடீசின் உரைகளுக்கும் விமர்சனங்களுக்கும் எதென்ஸ் மக்கள் தடையாக இருக்கவில்லை. ஒரு பேச்சுச் சுதந்திரம் நடைமுறையில் இருந்துள்ளது…… (பக். 231, 232),
‘மெய்யியலின் பெருங்கனவு சோக்கரடீஸ்’ என்ற பெருநூலின் இறுதி எழுத்துக்கள், 'சோக்ரடீசின் மரணம்' ('த டெத் ஆஃப் சோக்ரடீஸ், 1787). பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் ஓவியர் ஜாக் லூயிஸ் டேவிட் வரைந்த படத்துடன் பதிவாகியுள்ளன: “இறுதியில், என்றுமே திரும்பிப் பெற முடியாத உயிர்ப்பலியை நடுவர்மன்றம் அவருக்கு பரிசாகத் தந்தது. நடுவர் மன்றத்தில் சோக்கிரடீஸ் ஆற்றிய இறுதி உரை அவருடைய முடிவிலிருந்து சிறிதும் மாறவில்லை என்பதை உறுதிபடுத்தியது. சட்ட ஒழுங்குமுறை சரியாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். ஆனால், உண்மைகள் கணக்கில் எடுக்கப்பட்டனவா? எந்த ஒப்புதலுக்கும் அவர் தயார் இல்லை. அதனால், ஏதென்ஸின் நடுவர் மன்றத்தின் மீது தமக்கிருந்த மனக்குறையை அவர் மறைக்கவில்லை. என்றென்றைக்கும் உலகில் எதிரொலிக்ககூடிய ஒரு வாசகத்தை அந்த மன்றத்தில் அவர் உரக்கச் சொன்னார்:
நான் சாகப்போகின்றேன். நீங்கள் வாழ்ந்துகொள்ளுங்கள்!
நம்மில் யார் சிறந்தவர் என்பதைக் கடவுள் அறிவார்.”
உசாத்துணைகள்
அனஸ், எம்.எஸ்.எம்., 2022, மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ், அடையாளம், புத்தாந்தம்.
அனஸ், எம்.எஸ்.எம்., 2006, மெய்யியல் கிரேக்க மெய்யியல் முதல் தற்காலம் வரை, குமரன், கொழும்பு.
அனஸ், எம்.எஸ்.எம்., 2001, தற்கால இஸ்லாமிய சிந்தனை, பண்பாட்டு ஆய்வு வட்டம், பேராதனை.
அனஸ், எம்.எஸ்.எம்., 1996, விஞ்ஞானமும் சமூக விஞ்ஞானங்களும் – ஒரு முறையியல் நோக்கு, பண்பாட்டு ஆய்வு வட்டம், பேராதனை.
கிருஷ்ணராஜா, சோ, 1982, விமரிசன முறையில், சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.
மர்லின் பீரிஸ், டி.பி., பொன்னம்பெரும, 1999, சோக்ரடீஸ் ஜீவன சரிதய (சிங்களம்), கொழும்பு.
சரிநிகர், 1998 பெப். 11
முற்றும்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.