நெறியாளர்: முனைவர். ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை ஆய்வுத் துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் – 635 601
முன்னுரைஷம்பாலா 2019 - இல் வெளியான நாவல். தமிழவன் அவர்களால் எழுதப்பெற்ற இந்நாவல் ‘ஓர் அரசியல் நாவல்’ என்ற கோணத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்நாவலில் கூறுகின்ற அரசியல் மக்களுக்கு எந்த விதமான சூழ்நிலைகளில் பயனுள்ளதாக இருக்கிறதா? அல்லது பயனற்றதாக இருக்கிறதா? என்பதை நாம் பார்ப்போம். இந்நாவல் இரண்டு வகைக் கதைப்போக்குகளைக் கொண்டுள்ளது. ஒன்று பேராசிரியர் அமர்நாத் எனபவரது எழுத்தும் சிந்தனையும் அரசால் உளவு பார்க்கப்படுகிறது. அமர்நாத் என்பவர் ஒரு எழுத்தாளர். சிந்தனையாளர், அறிவுஜீவி, முற்போக்காளர் என்ற அடையாளத்துடன் விளங்குபவர். அதனால்தான் அவர் சிந்தனைப் போலீசால் கண்காணிக்கப்படுகிறார். எப்படியெல்லாம் கண்காணிக்கப்படுகிறார்? எதற்காக கண்காணிக்கப்படுகிறார்? அதனால் அமர்நாத் அடைந்த வேதனை - மனநிலை என்ன? அவர் குடும்பம் அனுபவித்த அவல நிலை என்ன? சிந்தனை எப்படியெல்லாம் தடம் மாறுகிறது. தன் வாழ்வை எப்படி? நகர்த்திச் செல்கிறார். குடும்பத்துக்காக என்ன செய்கிறார். அது மட்டுமல்லாமல் அந்த கண்காணிப்பை மீறி அதிகாரத்தை உடைத்து எப்படி செயல்படுகிறார் என்பதையும் பார்க்கலாம்.
இரண்டாவது, அரசாங்கத்தால் உளவு பார்க்கப்படுகின்ற பேராசிரியர் அமர்நாத்தின் மனதில் தோன்றிய ஒரு சொல் ஹிட்லர். இவர் ஒரு ஓவியர், பிற்போக்காளர் ஆவார். ஒரு திரைப்படத்தில் எப்படி? கதாநாயகனும், வில்லனும் இருப்பார்களோ அதுபோலத்தான் இந்நாவலும் செயல்படுகிறது. ஹிட்லர் என்பவர் அரசாங்காத்தால் எப்படி? பாதுகாக்கப்படுகிறார். பிறருடைய சிந்தனையை எப்படி? தன்னுடைய சிந்தனையாக மாற்றுகிறார். ஜீனியர் அமைச்சர் என்ற பதவி எப்படி? அவருக்கு கிடைக்கிறது. அதனை வைத்து அவர் எப்படி செயல்படுகிறார். பிறரை எப்படி? வீழ்த்துகிறார். என்பதே இரண்டாம் கதைப் போக்காகும்.
சட்டம் என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவானதாக உருவாக்கப்பட்ட ஒன்று. ஆனால் அச்சட்டம் “அறிவுஜீவிகளுக்கு“ பாதகமாகவும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சாதகமாகவும் செயல்படுகிறது. அரசு எனும் அதிகாரத்தை அடையும் அரசியல் கட்சிகள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது. நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் அதிகாரத்திலிருந்து எப்படி தம்மை விடுவித்து கொள்கிறார்கள். அதிகாரத்தை விரும்புபவர்கள் எப்படி? தம்மை அதிகாரத்திற்கு உட்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றிய அறிவு, சிந்தனை நம் தமிழ் சமூகத்திற்கு தேவைப்படுகிறது. இந்நாவல் முழுவதும் அதிகாரத்தின் விளைவுகளை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. அதை மையப்படுத்தி நாவல் அமைந்திருப்பதால் நாவலை முதன்மைத் தரவாகக் கொண்டு இவ்வாய்வு அமைகிறது.
கண்காணிப்பு அரசியல்
கண்காணிப்பு என்பது ஒருவர் மற்றொருவரை உளவு பார்ப்பதாகும். இந்த கண்காணிப்பானது ஒரு மனிதர் தவறு செய்வதற்கு முன்பாகவும் பின்பாகவும் நிகழ்த்தப்படுகிறது. வீடுகளிலும் சரி, பள்ளிகளிலும் சரி, கல்லூரிகளிலும், வேலைப் பார்க்கும் இடங்களிலும் சரி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கண்காணிப்பானது ஒரு மனிதர் தவறு செய்யாமல் இருப்பதற்கும், தவறு செய்தவர் யார்? செய்யாதவர்கள் யார்? என்பதைக் கண்டடையவும் கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும். இது ஒரு வகை. ஒரு மனிதர் கொலையோ, கொள்ளையோ செய்தால் காவல் அதிகாரிகள் அவரனுக்குத் தெரியாமல் உளவு பார்க்கும். இது இன்னொரு வகையான கண்காணிப்பாகும். “அலைபேசி, இணையம் மூலமாக ஒருவருடைய அரகசியத்தைத் திருடி பெரிய பெரிய மூலதனத்தை அடையவது கூட ஒருவித கண்காணிப்பு தான்“ (ஜமாலன், உடலரசியல், ப. 306) என்று ஜமாலன் கூறுவது கூட, ஒரு வகையான உண்மை தான். ஏனென்றால் டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்த பிறகு, பலவிதமான பிரச்சனைகளை மக்கள் சந்தித்து கொண்டு தான் இருக்கிறார்கள். கேமரா மூலம் பலவிதமான படங்களை எடுத்து உரியவர்களிடம் பணம் வாங்கும் பணப்பிசாசுகளை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் இந்நாவலில் வரக்கூடிய கண்காணிப்பு அரசியல் என்பது பலவிதமானதாக நமக்கு தென்படுகிறது. ஒரு வேளை அரசியல் என்பதளாலோ? தெரியவில்லை. பிறகு பார்க்கலாம். இந்நாவலில் மையக் கதாப்பாத்திரமாக இருப்பவர் அமர்நாத்.
கண்காணிப்பு அரசியலால் பாதிக்கப்படுபவர்கள்
அமர்நாத்தைக் கண்காணிப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு என்னவென்றால் அவரைக் கேள்வி கேட்பதற்கு யாரும் இல்லை என்பதாலோ என்னவோ? அமர்நாத் என்பவரும் சுரேஷ் என்பவரும் கண்காணிக்கப்படுகிறார்கள். எப்பொழுதும் காவல்துறை அதிகாரிகள் சரியைச் சரியாகத்தான் செய்வார்கள். அமர்நாத் என்பவரை கண்காணிப்பு கேமரா மூலமாகவோ அல்லது ஆட்கள் வைத்தோ கண்காணிக்கப் படவில்லை. இது ஒரு வகையான கண்காணிப்பு என்று நாம் ஊகித்தறியலாம். முன்னுரையில் நாம் பார்த்தது போல அமர்நாத் என்பவர் ’நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்’, சமூக நலனுக்காக பாடுபடுவர், பொறுமையைக் காக்கும் குணம் கொண்டவர். இவையெல்லாம் அரசு எனும் அதிகாரத்திற்கு எதிராக உள்ளது. அதனால்தான் எந்தவொரு காரணமின்றியும் அமர்நாத் கண்காணிக்கிறார்கள். அமர்நாத்தைக் கண்காணிக்க நினைத்திருந்தால் ஒன்று அதிகாரிகளை வைத்து மறைமுகமாகக் கண்காணித்திருக்க வேண்டும். இரண்டு கேமரா வைத்து கண்காணித்திருக்க வேண்டும். இவை இரண்டுமே இல்லாமல் புதுவிதமான கண்காணிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. அமர்நாத் சிந்தனைப் போலீசாரான மயித்தப்புடுங்கி என்ற பெயரை பெற்ற லோகேஷ், ஒற்றைக் கண் காவலன் இவர்கள் இருவராலும் கண்காணிக்கப்படுகிறார். முன்பு குறிப்பிட்டது போல அமர்நாத் என்பவர் சமூக நலனுக்காக பாடுபடுபவர். எவ்விதமான சமூக நலனுக்காக பாடுபடுபவர் என்றால், இட ஒதுக்கீடு என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவது, சந்ததியினரை பதவியில் அமர வைப்பது, இலவசம் என்ற பெயரில் மக்களை பேசவிடாமல் தடுப்பது, மெஜாரிட்டியாக மக்களுக்கு உதவி செய்வது இவை போன்ற செயல்களை எல்லாம் தடுக்கக் கூடியவர். அமர்நாத் பயன்படுத்திய கணினி, புத்தகம், சட்டை, கழிப்பறை, செய்தித்தாள், அறைகள் இலையெல்லாம் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுகிறது. இந்த கண்காணிப்பானது ஒருவரை எந்தவிதமான செயலையும் செய்யவிடாமல் தடுப்பதற்கும், ஒருவரை உள் ஒடுங்கல் நிலைக்கு ஆளாக்கவும் நிகழ்த்தப்பட்டுள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்பொழுதும் மற்றவர்களைத் துன்பப்படுத்தும் வகையிலும், தன்னை எந்தவொரு துன்பத்துக்கும், பிரச்சனைக்கும் ஆளாக்காத வகையிலும் நடந்துக்கொள்வார்கள். ஏனென்றால் இவர்கள் பிரச்சனையைத் தேடி செல்லமாட்டார்கள். பிரச்சனைகளை உருவாக்குபவர்களே இவர்கள் தானே. திறனாய்வாளர் ஃபூக்கோ அவர்கள் கூறுவதுப்போல “ஒருவரை ஒடுக்குவதற்கு உடலால், மட்டுமல்ல அறிவாலும் ஒடுக்கலாம் என்கிறார். இன்றைய சமூகத்தில் இரண்டாவதாக கூறப்பட்ட அறிவு பலத்தால் ஒருவரை ஒடுக்குவது என்பது அதிகமாகிவிட்டது என்கிறார். (கா. பஞ்சாங்கம், இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், ப. 120) ஃபூக்கோ அவர்கள் கூறியது இந்நாவலில் உண்மையாகிவிட்டது. அமர்நாத் போல சில செயல்களை சுரேஷ் என்பவர் செய்வார். ஆனால் அமர்நாத் கண்காணிக்கப்படுவது வேறொரு விதமாகவும் உள்ளது. சுரேஷ் என்பவர் கல்லூரி பேராசிரியர், பொதுப் பிரச்சனைகளில் ஈடுபடுபவர். அமர்நாத்துக்கும், சுரேஷிக்கும் பொதுவாக உள்ளது மக்களின் நலனுக்காக உள்ளது, மக்களின் நலனுக்காக பாடுபடுவது. ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நன்மையும் சரி, உதவியும் சரி தங்களால் மட்டும் தான் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அமர்நாத் கண்காணிப்பு அரசியலில் இருந்து மீண்டும் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவள் இவருடைய மகள் அமரி ஆவார். இல்லாதவொன்றை, நடக்காதவொன்றை நம்பக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். இதன் காரணமாக தான் அமர்நாத் அந்த கண்காணிப்பிலிருந்து விடுபட்டார்.
ஹிட்லர் போல பல பிம்பங்கள்
ஷம்பாலா நாவலில் மையக் கதாப்பாத்திரமாக இருப்பவர் ஹிட்லர். இவர் ஒரு பிற்போக்காளர், ஓவியர், பிறர் சிந்தனையில் வாழ்பவர், முரட்டுத்தனமானவர். அமர்நாத் எனும் கதாப்பாத்திரத்துக்கு நேர் எதிரான ஒரு கதாப்பாத்திரம் ஆகும். நாவலில் ஹிட்லரின் பிம்பம் போல பல பிம்பங்கள் சித்தரிக்கப்படுகிறது. கொத்தனாராக வேலைசெய்யக்கூடிய ஹிட்லர் ஒருவர். இவருடைய மகனான ஜீனியர் அமைச்சராக இருக்கக்கூடிய ஹிட்லர் ஒருவர். இவனுடைய நண்பனான ஏ.பி.சிங் கூட ஹிட்லராக நாம் கருதலாம். ஏனென்றால் ஜீனியர் அமைச்சராக இருக்கக்கூடிய ஹிட்லருக்கு எந்தவிதமான பிரச்சனை வந்தாலும் யோசனை தருவது ஏ.பி. சிங்கேயாகும். ராம்குமாரோ, பிரேம்குமாரோ என்றொரு கதாப்பாத்திரம் இந்நாவலில் வரும் இருவரும் கூட நாம் ஹிட்லரின் பிம்பங்களாகக் கருதலாம். ஏனென்றால் ஜீனியர் முதலமைச்சர் போலவே இவ்விருவரும் முரட்டுத்தனமாகச் செயல்படுபவர்.
இந்நாவல் ஒரு அரசியல் நாவல் என்பது நமக்கு தெரியும் இந்நாவலை பொறுத்தளவில் அரசியல் என்பது, அரசியல் செய்பவர்கள் யார்? அவர்களின் பின்புலம் என்ன? அவர்கள் நாம் சொல்வதைச் செய்வார்களா? செய்யமாட்டார்களா? இப்படி பல கோணங்களில் சிந்தனை செய்து அரசியல் செய்கிறார்கள். ஓவியராக இருக்கக்கூடிய ஹிட்லரை ஜீனியர் முதலமைச்சராக பதவியில் அமர வைத்ததற்குக் காரணம் உண்டு. என்னவென்றால் ஹிட்லருக்கு குஸ்தி தெரியும். அத்திறமையை வைத்து சீனியர் முதலமைச்சரின் எதிரிகளை அழிப்பதற்கே அந்த பழியை லஸ்மணன் மீது சுமத்துவது. லஷ்மணன் யார் என்றால் உயர் போலீஸ் எதிகாரி, தலித் குடும்பத்தைச் சார்ந்தவன். இவன் வாழக்கூடிய பகுதிகளில் காலனி அணியக்கூடாது. தன் மனைவியை அடிப்பது, யூனிபார்ம் போட்டுக்கொண்டு போக முடியாது. இதன் காரணமாகவே ஹிட்லர் செய்யக்கூடிய கொலைக்கு அல்லது தவறுக்கு எல்லாம் இவர் மேல் பழி சுமத்துகிறார்கள். இதுவும் ஒருவகையான அரசியல் தான். “பொது வாழ்வில் பெரும்பங்கு வகிக்கும் ஆண்கள் பலர், தனி வாழ்வில் தனது குடும்பத்தாரைப் புறக்கணித்தல், வன்முறைக்கு ஆளாக்குதல் போன்றவற்றில் ஈடுபடுவது பலநேரம் சிந்தனையான விவாதத்திற்குகூட எடுக்கப்படுவதில்லை“ (அ. மங்கை, பெண்ணிய அரசியல், ப.6) சுய சிந்தனை என்பது கிடையாது. இவனுடைய நண்பன் ஏ.பி.சிங் தான் ஹிட்லருக்கு நிழல் போல் செயல்பட்டு கொண்டிருக்கிறான்.
ஏ. பி. சிங் எனும் கதாப்பாத்திரம் ஹிட்லர் போல தோற்றம் பெறுவது.
ஏ. பி. சிங் என்பவர் ஹிட்லரின் நண்பர். ஹிட்லர் முதன் முதலில் ஏ. பி. சிங்கை பள்ளி மைதானத்தில் சிந்திக்கிறார். பிறகு ஏ. பி. சிங் குஸ்தி பயில்வான் தங்கப்பனின் மகன் ஏ. பி. சிங்கிற்கு குஸ்தி நன்றாக தெரிந்திருந்தும் ஹிட்லரால் தோற்கடிக்கப்பட்டிருப்பான். ஹிட்லருக்கு குஸ்தி தெரியாது. குஸ்திக்கு என்று சில விதிமுறைகள் உள்ளது. ஹிட்லர் அது தெரியாமல் தனது கொடுரமான, பயங்கரமான செயல்களால் ஏ. பி. சிங்கை தோற்கடித்து இருப்பான். விதிமுறைகளை மீறி ஹிட்லர் இந்நாவலில் பல இடங்களில் செயல்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. பிறகு இருவரும் இணைப்பிரியா நண்பர்களாக ஆகிவிட்டார்கள். ஹிட்லர் எங்குப் போனாலும் ஏ.பி. சிங்கும் பின் தொடர்வான். ஹிட்லர் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் முழுபங்கு இருப்பது ஏ. பி. சிங்கிற்கே ஆகும். சிந்தனை ஏ. பி. சிங்குடையது. செயல்பாடுகளில் நன்மைக்கும் சரி, தீமைக்கும் சரி கூடவே இருந்த ஏ. பி. சிங், ஹிட்லரின் உயிர்ப் போன நேரத்தில் இல்லாமல் போனது ஏன்? ஏனென்றால் ஹிட்லர் தன்னை குஸ்தியில் தோற்கடித்துவிட்டான் என்பதற்காக கூட நேரம் பார்த்து பழிவாங்கி இருக்கலாம். அது மட்டுமல்லாமல் தன் கூடவே இருந்து ஜீனியர் முதலமைச்சர் ஆகிவிட்டான். இதன் காரணமாக கூட ஹிட்லரை பழிவாங்கி இருக்கலாம். ஏனென்றால் ஹிட்லரின் ஒவ்வொரு செயலையும் கவனித்த ஏ. பி. சிங், தன் நண்பனுக்கு ஆபத்து வரும் என்பது தெரியாமலா? இருந்திருக்கும். ஹிட்லரை விட்து ஏ. பி. சிங் செல்கிறான். அதற்கான காரணத்தை ஹிட்லர் கேட்கிறான். பார்ட்டிக்கு மதுவாங்க என்று கூரியதை நம்பி ஏன்? ஓடிப்போன என்று கேள்வி கேட்கிறான். ஏ. பி. சிங் பதில் பேசவில்லை சீனியர் முதலமைச்சர் தன் எதிரிகளைக் கொல்ல ஹிட்லரிடம் கூறுவான். ஹிட்லர் சிந்தனையை ஏ. பி. சிங்கிடம் கேட்கிறான். உன் மூளை என்ன சொல்கிறது என்று ஏ. பி. சிங் உண்மையான நண்பனாக இருந்திருந்தால் அதற்கான சிந்தனையை வழங்கியிருக்க மாட்டான். என்னதான் கல்லூரி படிப்பை பாதியில் விட்டு விட்டு ஹிட்லர் கூட வந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பழி வாங்குதல். ஏ. பி. சிங் ஹிட்லருக்கு கொடுத்த சிந்தனைகளை எல்லாம் தான் பயன்படுத்தி இருந்திருந்தால் இவனும் ஒரு ஹிட்லராக மாறியிருக்க வாய்ப்பிருக்கிறது.
தலைமையாசிரியரின் அண்ணன் ஹிட்லராக தோற்றம் பெறுதல்
தலைமையாசிரியரின் அண்ணனுக்கும் ஜீனியர் முதலைமைச்சராக இருக்கக்கூடிய ஹிட்லருக்கும் உள்ள சில ஒற்றுமைகளைக் காணலாம். பள்ளிக்கூடம் பிடிக்காது, பாடம் பிடிக்காது, கல்வி பிடிக்காது. தலைமையாசிரியரின் அண்ணனுக்கு கூத்து பிடிக்கும் ஹிட்லருக்கு ஓவியம் பிடிக்கும், செடி நடுவது பிடிக்கும். இருவருமே ஒரு கலையை மிகவும் நேசித்து இருக்கிறார்கள் இருவரும் பொய் சொல்வதில் கூட ஒற்றுமையாக இருந்திருக்கிறார்கள். தலைமையாசிரியரின் அண்ணன் “அம்மா செத்துப் போனதாலே ஒரு வாரம் வரலடா கரடி“ என்று கூறுகிறான். ஜீனியர் அமைச்சனும் பள்ளிக்குத் தாமதமாக வந்ததன் காரணத்தை தலைமையாசிரியரிடம் “அம்மா செத்துப் போயிட்டா ஸார் இன்று காலைல“ என்று கூறுகிறார். இவர் இப்படி சொன்னது வீட்டுக்கு யாருக்கும் தெரியாது. ஆனால் தலைமையாசிரியரின் அண்ணன் சொன்னது வீட்டுக்குத் தன் தம்பியின் மூலமாகத் தெரிந்துவிட்டது. அதனால் தாய் அடிக்கிறாள், வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்திருந்தால் அடுத்த ஹிட்லராக இந்நாவலில் சித்தரிக்கப்பட்டு இருப்பார்.
பிரேம்குமாரோ ராம்குமாரோ ஹிட்லராக தோற்றம் பெறுவது
பிரேம்குமாரோ ராம்குமாரோ எனும் பெயரைப் பெற்ற ஒருவருக்கும், ஹிட்லருக்கும் என்ன விதமான ஒற்றுமை இருக்கிறது? அவர் எப்படி ஹிட்லராக செயலபட்டிருக்கிறார்? என்பதை பார்ப்போம். பிரேம்குமாரோ ராம்குமாரோ எனும் பெயரை பெற்ற ஒருவர், ஏ. பி. சிங்கும் ஹிட்லரும் கேண்டினில் அமர்ந்துக் கொண்டிருக்கும் பொழுது வலுகட்டாயமாக சண்டைக்கு வரவழைப்பார். “ஒருவரிடமிருந்து வெற்றி கொள்ள வேண்டுமானால் அவர்களுடைய பலவீனம் என்னவென்று தெரிந்து வைத்திருக்க வேண்டும்“ இதுப்போலத்தான் பிரேம்குமாரோ ராம்குமாரோ எனும் பெயரை பெற்றவருக்கும் பலவீனம் என்னவென்றால் தன்னுடைய தலையைப் பராமரிப்பதில் மிகவும் கவனமாக இருப்பார். இதனை வைத்துக்கொண்டு ஏ. பி. சிங் தனக்குத் தெரிந்து பார்பர் கடையில் மொட்டை அடித்து வைக்க சொல்லிருப்பார். அதுபோல நடந்தது. சில காலம் வெளியே வராமல் முடங்கி கிடந்தார். இதனால் ஹிட்லருக்கு எதிர்காலத்தில் ஆபத்து வரும் என்பது தெரியவில்லை. ஏ. பி. சிங்குக்கு யார் என்ன? செய்தால் என்ன நடக்கும் என்பது தெரிந்து இருக்கிறது. “பலமே வாழ்வு, பலவீனமே மரணம்“ எனும் தொடர் எல்லாம் நமக்கு உண்மையை உணர்த்துகிறது. பிரேம்குமாரோ ராம்குமாரோ என்பவரின் பலவீனம் தெரியாமல் இருந்திருந்தால் பல இடங்களில் இந்நாவலில் ஹிட்லர் எனும் பாசிசவாதியாக செயல்பட்டிருப்பார். அதனால் ஓர் இடத்தில் மட்டும் இவர் செயல்படுகிறார். இதனால் ஹிட்லரின் பலவீனம் ஏ. பி. சிங்குக்குத் தெரிந்திருக்கிறது.
தன்னிடம் இருந்து தான் சிந்தனையைப் பெறுகிறார். அதன் மூலமாக அவரை எப்படி? வீழ்த்தலாம் என்று நினைத்திருக்கலாம். ஹிட்லரை எப்படி? இந்நாவல் கொடூரமானவன் பயங்கரமானவன் என்று சித்தரிக்கிறதோ, அதுப்போலவே ஹிட்லர் போன்ற இவர்கள் எல்லாம் சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள். ஹிட்லர் போன்ற குணம் கொண்டவர்களாக நாம் யாரெல்லாம் கூறுகிறமோ அவர்கள் எல்லாம் ஹிட்லரை விட கொடூரமானவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை இந்நாவலில் நம்மால் பார்க்க முடிகிறது.
ஷம்பாலா எனும் அதிகாரத்தின் கற்பனையும், ஹிட்லர் எனும் கதாப்பாத்திரமும்
ஷம்பாலா என்பது இந்நாவலின் தொடக்கத்தில் சொன்னதுப் போல அதிகாரத்தின் மையமாகும். இந்நாவலிலும் ஹிட்லர் என்பவர் அதிகாரத்தை கையில் வைத்திருப்பதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். இரு அதிகார மையங்களாக பல இரகசியங்கள் கொண்டதாக விளங்குவர், ஷம்பாலா இடமும் ஓர் அதிகார மையமாகவே சுட்டி முடிகிறது. ஷம்பாலாவுக்கு, ஹிட்லருக்கு எந்தவிதமான தொடர்பு என்பதைப் பின்வருமாறு பார்க்கலாம். ஹிட்லருக்குத் தண்டிபத்லாத் சாஸ்திரி ஷம்பாலா பற்றி கூறுகின்றார்.
ஷம்பாலா எனும் அதிகாரத்தை அடை நினைத்தவர்கள் பலர் இறந்திருக்கிறார்கள்.
பலர் ஞாபக மறதிக்கு ஆளாகிறார்கள்.
இந்நாள் வரைக்கும் ஷம்பாலாவுக்கு போனவர்கள் யாரும் அதிகாரத்தை அடையவில்லை.
ஷம்பாலா என்பது முழுக்க முழுக்க கற்பனையேயாகும். அதனால்தான் அது இரகசியமான ஒன்றாக உள்ளது. அதிகாரம் என்பது மனிதனுக்கானது. மனிதனே அந்த அதிகாரத்தை அடையமுடியவில்லை எனும்போது கற்பனைக்கான இடமாகத்தான் நாம் அதனை கருத வேண்டும். “பாசிஸ்டுக் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதும் அனைத்துக் கட்சிகளையும் ஒழித்துக் கட்டுவதே முதல் குறிக்கோளாக வைத்திருக்கிறது“. (பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்த விரிவுரைகள், ப. 71) தண்டிபத்லா சாஸ்திரியின் அதிகாரம் எதுவென்றால் சீனியர் முதலமைச்சர் என்பவர் தான் சொல்வதை நம்புவது. அதன் அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஹிட்லரைக் கொல்வது. ஷம்பாலாவுக்கு சென்றவர்கள் பலர் இறந்திருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது ஷம்பாலாவுக்கு ஏன்? ஹிட்லரை கொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதிகாரம் என்பது ஒருவரை வாழவும் வைக்கும். வாழாமல் அடிமைப்படுத்தவும் செய்யும்.
அதிகாரமும் நாட்டுப்புறக் கூறுகளும்
அமர்நாத்தின் பெரியம்மா தனது இரண்டாவது மகனுடன் சண்டை என்பதால் தான் வாழக்கூடிய பகுதியை விட்டுவிட்டு பழங்குடிகள் வாழக்கூடிய சத்திரத்தில் வாழ்ந்து கொண்டு இருந்தாள். இந்த செய்தி தனது முதல் மகனான கன்னையாவுக்கு தெரியாது. பழங்குடிகள் அரசு அறிவித்த பண மதிப்பிழப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் இந்நாவலில் வாழக்கூடிய பழங்குடிகளுக்கு ஒரு வழக்கம் இருக்கிறது. அந்த பழங்குடிகள் எதையொன்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அந்த பழங்குடிகளிலே குப்பன் ஒருவருக்கு சாமி வந்து குறி சொன்னால் மட்டுமே எதையொன்றையும் ஏற்றுக்கொள்வார்கள். பணமதிப்பிழப்பை சாமி வந்து குறி சொன்னதாலோ என்னவோ பணமதிப்பிழப்பை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள். இங்கு ஒரு கேள்வி நமக்கு தோன்றுகிறது எப்படி? அவர்கள் உணவு இல்லாமல் வாழ்ந்தார்கள். 500ரூ, 1000ரூ பழைய நோட்டுகள் மாறாது. அவர்கள் பண்டமாற்றம் செய்து (மூங்கிலரிசி, தேன், கேழ்வரகு, கிழங்கு, சாமை) வாழ்ந்து வந்திருக்கலாம். தெரியாமல் பணமதிப்பழப்பால் வந்த பணத்தை கன்னையாவின் அம்மா வைத்திருந்தால் அவர்களை யாரோ ஒருவர் விஷ வேரைக் கொடுத்து கொன்று விட்டார்கள் என்பது போல அந்த பகுதியில் வதந்தி பரவுகிறது. அதற்கு காரணம் பழங்குடிகள் தான். வழக்கங்களை மீறியதற்கு ஒருவரைக் கொல்வது என்பது எந்த விதத்திலும் சரியானதாக இருக்குமென்று தெரியவில்லை. சமூகத்தில் இப்பொழுது பார்க்கும்பொழுது கிராமத்தில் வாழக்கூடிய மக்களிடம் ஒரு வழக்கம் இருக்கின்றது. ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டால் மூன்று ஆண்டுகளுக்கு கோயிலுக்கு செல்லக்கூடாது என்தொரு வழக்கம் இருக்கிறது. அதையும் மீறி கோயிலுக்கு சென்றால் அவர்களை தேச துரோகி போல பார்ப்பது. இதை பார்க்கும்பொழுது என்ககொரு கேள்வி எழுகிறது. ஒருவர் இறந்துவிட்டால் 5 நாட்கள் கழித்தோ, 12 நாட்கள் கழித்தோ தீட்டை கழிப்பதற்கு கோயிலுக்கு செல்வது சரியென்று கூறும்பொழு, மூன்று ஆண்டுகளுக்கு கோயிலுக்கு செல்லக்கூடாது என்பது மட்டும் தவறாக எப்படி இருக்க முடியும்? இவையெல்லாம் கிராமத்தவர்களின் மூட நம்பிக்கையாகும். பெரியார் அன்றே கணித்தார் மக்களிடம் மூடநம்பிக்கை வேண்டாம் என்று “தொடர்ந்து மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போராடிய வீரர் பெரியார் ஆவார்“ (பாவலரேறு பெருஞ்சித்திரனார், பெரியார், ப. 65) பழங்குடிகள் வழக்கங்களை மீறியதற்கு கன்னையாவின் அம்மாவை கொல்கிறார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பணமதிப்பிழப்பால் இறந்தாள் என்பதும் ஒருவகை உண்மை தான்.
ஹிட்லர் பத்து ஆண்டுகளுக்கு பிறகு அரசியலில் புகுந்தான். அவனுக்கு அப்போது வயது 36. ஜீனியர் அமைச்சராக மிக இளைய வயதில் கலை மற்றும் பண்பாட்டுத்துறையில் அமர்த்தப்பட்டான். அதன் பிறகு அவருக்கு இன்னும் மரியாதை அதிகமானது. ஏனென்றால் சீனியர் முதலமைச்சரின் எதிரிகளை ஹிட்லர் வீழ்த்திடுவார் என்று அவர் நம்பிக்கையுடன் இருந்தார். ஹிட்லருக்கு பொறுப்பு அதிகமாகிறது. ஹிட்லர் ஒரு சாதாரணமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அப்பாவின் பெயர் ஹிட்லர். இவர் கொத்தனார் வேலையைச் செய்பவர் ஹிட்லர் நாட்டுப்புறக் கூறுகளினால் உயர்த்தப்பட்ட பின்னர் பல கடினங்களை கடந்து தான் வந்தார் அதிகாரத்தால் ஒருவர் உயர்த்தப்படுவது மட்டுமல்லாமல் நாட்டுப்புறக் கூறுகளினாலும் ஒருவர் உயர்த்தப்படுகிறார்.
முடிவுரை
’அதிகாரம்’ என்ற ஒரு சொல் தான் இந்நாவலில் இருவிதமாக செயல்படுகிறது. அமர்நாத் என்பவருக்கு ஒருவிதமாகவும், ஹிட்லர் என்பவருக்கு வேறொரு விதமாகவும் செயல்பட்டு வருகிறது. சமூகத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்த அமர்நாத்தும் சுரேசும் அரசு எனும் அதிகாரத்தால் கண்காணிக்கப்படுகிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்த்து கேள்வி கேட்டால் சமூகத்துக்கு எதிராக நடந்துக் கொள்கிறீர்கள் என்று முத்திரை குத்துவது. எழுத்தார்களுக்கு சுதந்திரமின்மை இல்லை. மனநிலை பாதிக்கப்பட்டவராக மாற்றுதல், சிந்தனையை மாற்றுவது, முதலாளிகள் தன் சர்வாதிகாரத்தை தொழிலாளிகள் மீது சுமத்தி தன் தேவையை பூர்த்தி செய்துக் கொள்வது அரசு எனும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தன் தேவை மட்டும் தான் முதன்மை என்று கருதுகிறார்கள். அதிகாரமானது தகுதியானவர்களுக்கு மட்டும் சென்று சேர வேண்டும். தகுதி அல்லாதவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தால் அவர்கள் பல விதமானக் கோணங்கிளல் செயல்பட்டு, தன்னையுமு் அழித்துக் கொண்டு, பிறரையும் அழிப்பார்கள்.
தகுதியுள்ளவர்களுக்கு அதிகாரத்தை நன்மையாகவும் கையாள தெரியும். நேரம் வந்தால் தீமையாகவும் கையாள தெரியும் அதிகாரத்தை நிர்வகிக்க தெரியாதவர்கள் தவறாகத்தான் பயன்படுத்துவார்கள். அதிகாரமானது ஒருவருடைய வாழ்க்கையை எப்படி? உயர்த்துகிறது. அதே அதிகார மையமானது ஒருவருடைய வாழ்க்கையை எப்படி? திசைத், திருப்புகிறது என்பதற்கான விளக்கத்தை இந்நாவல் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது. ஷம்பாலா நாவல் முழுவதும் அதிகார மையமாக செயல்படும், சமூகம் அதிகாரங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. என்பதை விளக்கும் விதமாக இந்நாவல் அமைகிறது.
உசாத்துணை நூற் பட்டியல்
ஷம்பாலா 2019 - தமிழவன்வ் பாரதி புத்தகாலயம் - 2019
அ. மங்கை, பெண்ணிய அரசியல் பரிசல் புத்தக நிலையம்
கா. பஞ்சாங்கம், இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும் அன்னம் - அகரம் வெளியீட்டகம்வ் 2016
பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்த விரிவுரைகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் , 1998
ஜமாலன், உடலரசியல், காலக்குறி பதிப்பகம், 2021