நெறியாளர்: முனைவர். ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை ஆய்வுத் துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் – 635 601
முன்னுரை
தன்னை மீறிய அல்லது தன் கட்டுப்பாட்டில் இல்லாத அதே சமயம் அச்சுறுத்தும் செயல்கள் எல்லாம் மனிதர்களை அச்சம் கொள்ள வைத்தன. அப்படி அவர்களை அச்சுறுத்தும் எல்லாவற்றையும் வணங்குவதால் அதன் பெரிய சீற்றமோ பாதிப்போ அவர்களுக்கு ஏற்படாது என அம்மனிதர்கள் எண்ணி வழிபாட்டைத் தொடங்கினார். அப்படி தொடங்கிய வழிபாட்டில் தோன்றிய தெய்வங்களில் பல தெய்வங்கள் இன்று கலாச்சாரத்தை காக்கும் மற்றும் கலாச்சாரத்தை போதிக்கும் சின்னங்களாக மாறியுள்ளன. அவ்வகையில் தீப்பாஞ்சியம்மன் என்னும் பெண் தெய்வம் எப்படி கலாச்சார காவலாளியாக மாறி வழிபடப்பட்டு வருகிறது என்பதை ஆராய்வதாக இவ்வாய்வானது மேற்கொள்ளப்படுகிறது.
ஆய்வு நோக்கம்
தீப்பாஞ்சியம்மன் என்னும் பொதுப் பெயரால் வணங்கப்படுகின்ற அப்பெண்கள் ‘கலாச்சாரத்தைக் காப்பது‘ என்பதன் எதிரொலியாக எப்படி கொல்லப்பட்டு தெய்வமாக்கப்பட்டனர் என்பதை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கம்.
கடவுளின் பிறப்பு
கடவுளே மனிதர்களை படைத்தார். அவரே அம்மனிதர்களை காக்கின்றார். பின்னர் அவரே மனிதர்களை அழிப்பார். அந்தக்கடவுளே மண் தொடங்கி வான் வரையிலும் உள்ள அனைத்து பருப்பொருட்களையும் உயிர்களையும் படைத்தார். இத்தனை பெரிய செய்லகளைச் செய்கின்ற அந்தக் கடவுள் யார்? அந்தக் கடவுளை யார் படைத்தார்? அந்தக் கடவுளை யார் அழிப்பார்? ஒரு மனிதர் பிறக்கிறார், வளர்க்கிறார், பின்னர் இறக்கிறார். கடவுளும் மனிதரை ஒத்த உருவம்தானே? எனில் கடவுள் எப்படி பிறப்பார்? எப்படி வளர்வார்? எப்படி இறப்பார்?
மனிதனைத் தெய்வம் படைத்தது, மனித உருவம் கொண்ட தெய்வத்தை மனிதன் பிறக்க வைத்தான் அந்த தெய்வத்தை வழிபாட்டால் வளர்க்கின்றனர். அதே தெய்வத்தை வழிபடாமல் விட்டுவிடல் என்ற நிலையால் அழிக்கின்றனர். எனில் இங்கு மனிதனும், தெய்வமும் செய்யும் வேலை ஒன்றே.
தெய்வம் பிறந்தது, இல்லையில்லை தெய்வம் மனிதரால் பிறப்பிக்கப்பட்டது என்று கூறினோம். மனிதர்கள் உடலும் உயிரும் கொண்டவர்கள். அந்த மனிதர்கள் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ கருவுறுவதால் பிறக்கின்றனர். அப்படியென்றால் தெய்வத்தை மனிதர்கள் எப்படி பிறக்க வைக்கின்றனர்? சகமனிதரை கொன்றுதான். அந்த மனிதரை கொன்றப்பின் அவரை உயர்நிலையில் வைத்தல் என்ற செயலால் தெய்வத்தைப் பிறக்கச் செய்கின்றனர். பின்னர் அந்த தெய்வத்தை வழிபாடு செய்கின்றனர்.
தீப்பாஞ்சியம்மன் தோற்றப் பின்புலம்
அந்த வகையில் தீப்பாஞ்சியம்மன் என்ற பெண்தெய்வம் எப்படி மனிதர்களால் பிறப்பிக்கப்பட்டது எப்படி வழிபடப்படுகிறது என்பதையெல்லாம் ஆராய்வோம்.
ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்குமுன்பு ஒரு தம்பதிக்கு, கணவன் மனைவிக்கு பெண் குழந்தையொன்று பிறந்ததாம். அந்த பெண் குழந்தை பிறந்தபோதே அவர்களின் உறவுப் பையன் ஒருவன் சிறு பிள்ளையாக இருந்திருக்கிறான். அந்தப் பெண் குழந்தை வளர்ந்து திருமணதிற்கான வயதை அடைந்தவுடன் முன்னர் குறிப்பிட்ட ஆணிற்கே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று இரு வீட்டாரும் அதாவது பெண் குழந்தையின் பெற்றோரும், அந்த சிறுவனின் பெற்றோரும் ஒப்பந்தம் செய்துக்கொண்டனர். இருவரும் வளர்கின்றனர். இருவருமே பெற்றோர்கள் ஒப்புதல் கொடுத்ததால் காதல் செய்கின்றனர். ஆண் குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறான். அதனால் வேலை செய்வதற்காக வெளியூர் செல்கிறான். அவன் வெளியூரில் வேலைசெய்துக் கொண்டிருக்கும்போதே அங்குள்ள பெண் பருவம் எய்திவிட்டாள். அவள் பருவம் எய்திவிட்டாள் என்பதை தெரிந்துக்கொண்ட ஊரார் அவளைப் பெண் கேட்க வருகின்றனர். ஆனால் அப்பெண்ணின் பெற்றோர், ஏற்கெனவே திருமணத்திற்கு ஒப்புதல் கொடுத்ததை மனத்தில் வைத்துக்கொண்டு வேறு ஓர் ஆணுக்குத் திருமணம் செய்ய மறுக்கின்றனர்.
ஆனால் ஊராரோ ஏன் இவளுக்கு இன்னும் திருமணமாகவில்ல? அவள் மீது ஏதேனும் குறை இருக்குமோ என்றெல்லாம் பழி பேசத் தொடங்குகின்றனர். பெண் வீட்டாரும் பெண் வயதிற்கு வந்துவிட்டதையும், நிறையப் பேர் அவளைப் பெண் கேட்க வந்துக்கொண்டே இருப்பதையும், ஏற்கனவே ஒப்பந்தம் செய்ததால் இன்னொருவனுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் ஊரார் பேசும் பழியினையும், வெளியூரில் வேலை செய்யும் ஆணிற்கு உறவினர்கள் மூலம் சொல்லியனுப்புகின்றனர். இருப்பினும் அவனால் திருமணம் செய்துக்கொள்ள வர இயலவில்லை. ஊர் மக்கள் பேசுகின்ற பழிச்சொற்கள் அதிகரிக்கின்றன. அவற்றை எல்லாம் கேட்டு மனம் பொறுத்துக்கொள்ள இயலாத பெண் குறிப்பிட்ட நாட்களுக்குள் அவளை திருமணம் செய்துக்கொள்ள வரவில்லை என்றால் தற்கொலை செய்துக்கொள்வதாக வெளியூரில் வேலை செய்யும் அவள் காதலனுக்கு உறவினர்கள் மூலம் சொல்லியனுப்புகிறாள். காதலி அனுப்பிய செய்தியினைக் கேட்ட காதலனும் தன் சொந்த ஊரிற்கு திரும்பி வந்துக்கொண்டிருக்கிறான். ஆனால் காதலி சொன்ன நாட்களுக்குள் அவனால் வந்துசேர முடியவில்லை. அதனை அறியாத காதலி, காதலன் தன்னை கைவிட்டுவிட்டான் என்று எண்ணி ஊராரின் பழியினை பொறுக்க முடியாமல் தீயில் இறங்கி தற்கொலை செய்துக் கொள்கிறாள். பின்பு அவளையே தெய்வமாக அவர்கள் (அவ்வூர் மக்கள்) வழிபடுகின்றனர். அவளுக்குத் தீப்பாஞ்சியம்மன் என்ற பெயரைக் கொண்டு வணங்குகின்றனர். இது திருப்பத்தூரில் உள்ள தீப்பாஞ்சியம்மன் உருவான வரலாற்றுக் கதை..
அதே திருப்பத்தூரில் சின்னக்கந்திலி என்னும் ஊரிலும் தீப்பாஞ்சியம்மன் வழிபடப்பட்டு வருகின்றது. அவ்வூர் மக்கள் அந்த அம்மனுக்கு வேறு ஒரு பிறப்பு கதையினைக் கூறுகின்றனர். ஒரு சில தலைமுறைகளுக்கு முன்பு இளம்பருவத்தில் உள்ள பெண் ஒருத்தி ஆண் ஒருவனை காதலித்திருக்கிறாள். இருவரின் மனமும் ஒன்றிய நிலையில் காதலர்களின் மன ஒப்புதலோடு இருவரும் திருமணத்திற்கு முன்னரே சேர்ந்து வாழ்கின்றனர். அதனால் திருமணத்திற்கு முன்பே பெண் கருவுற்றுவிட்டாள். தன்னுடைய தங்கை கருவுற்று இருக்கிறாள் என்பதை தெரிந்துக்கொண்ட அவளின் அண்ணன்கள் அந்த பெண்ணை மட்டும் சோளக்கொல்லையில் தீ வைத்து எரித்து விட்டனர். பின்னர் அவளின் குடும்பத்தினர் அவளை தீப்பாஞ்சியம்மன் என்ற பெயரால் வழிபடுகின்றனர். இதுவரை சொன்ன இரண்டு கதைகளும் திருப்பத்தூரில் வழிபடப்படுகின்ற தீப்பாஞ்சியம்மன் வரலாறு.
அதைப்போன்றே தருமபுரியிலும் தீப்பாஞ்சியம்மன் வழிபடப்படுகின்றது. குறைந்தது ஏழு அல்லது எட்டு தலைமுறைகளுக்கு முன்பாக கணவன் மனைவி வாழ்ந்திருக்கின்றனர். அதில் கணவன் வேலைவேண்டி வெளியூர் சென்றிருந்தானாம். இருப்பினும் அடிக்கடி அவன் அவனுடைய மனைவியைச் சந்திக்க இரவில் வந்திருக்கிறான். இருவரும் தனிமையில் இருந்திருக்கின்றனர். ஆனால் இப்படி கணவன் வந்து செல்லும் விடயம் வீட்டிலும், ஊரிலும் வேறு யாரும் தெரிந்திருக்கவில்லை. வெளியூரில் உள்ள கணவனுக்கு வேலையில் சுமை அதிகமாக இருந்ததால் மனைவியை சந்திக்க வர முடியவில்லை இரண்டு மாதங்களுக்கும் மேலாகிறது, அவள் கருவுற்றால் என்பது தெரியவருகிறது. அவளின் வீட்டாரும் ஊர் மக்களும் உன் கணவன் வெளியூரில் இருக்கையில் எப்படி நீ மாதமானாய் என்று கேள்விகளைக் கேட்டு அவள் கற்பை சந்தேகப்படுகின்றனர். அப்பெண்ணும் அவளின் கணவன் வந்து சென்றதையும் தனிமையில் இருந்ததையும் கூறுகிறாள். ஆனால் யாரும் நம்பவில்லை. நீ உண்மையில் பத்தினிப்பெண் எனில் நெருப்பில் இறங்கி உன் கற்பை நிருபித்துக் காட்டு என்று சொல்லுகின்றனர். வேறு வழியின்று அவளும் நெருப்பில் இறங்கி இறக்கிறாள். அவளின் கற்பையும் நிருபிக்கிறாள். அவளையே அவ்வூராரும் அவளின் சுற்றத்தாரும் தீப்பாஞ்சியம்மன் என்று வழிபடுகின்றனர்.
பெண் தெய்வமும் கலாச்சாரமும்
மேலே சொன்ன மூன்று தீப்பாஞ்சியம்மன்களின் கதைகள் வேறு வேறாக இருப்பினும் இந்த மூன்று தீப்பாஞ்சியம்மன்களுக்கும் ஒற்றுமை உண்டு. அது என்னவென்றால் இவர்கள் எல்லோரின் இறப்பிற்கும் ஊடகம் ஒன்றே. அதுதான் தீ. இது வெளிப்படையான ஒற்றுமை. இவர்களுக்கு மறைமுகமான ஒற்றுமை கலாச்சாரத்தை காப்பது.
அந்த மூன்று பெண்களின் மன உணர்வும், சமுதாயத்தில் உயர்ந்தாக கருதப்படுகின்ற கலாச்சாரத்தை காப்பது என்ற இரண்டும் இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதாக உள்ளன. மேலே குறிப்பிட்ட அந்த மூன்று பெண்களின் மன உணர்வு, கலாச்சாரத்தை காப்பது என்ற இரண்டிற்கான போராட்டத்தில் கலாச்சாரத்தைக் காப்பது என்பது வெற்றிப் பெறுகிறது. குறிப்பாகச் சொன்னால் அது வெற்றிப் பெற வைக்கப்பட்டது. கலாச்சாரத்தைக் காப்பது என்பது வெற்றிப்பெற்றதால் அந்த பெண்களின் மன உணர்வுகள் தோற்கடிக்கப்பட்டன. இதனை இன்னும் தெளிவக்ச் சொல்ல வேண்டுமென்றால், கலாச்சாரத்தைக் காத்து அதனைப் புனிதமாகவே வைத்திருக்கவேண்டும். அதற்கு அந்தப் பெண்களின் மன உணர்வுகள் என்ற கலாச்சாரத்தின் எதிரியை ஆராதிக்காமல் வேரோடு அழிக்க வேண்டும். அந்த காரணத்தால்தான் அப்பெண்களுக்கு இறப்பு என்ற மிகப்பெரிய தண்டனையினைக் கொடுத்து அதன் விளைவாக இங்கு கலாச்சாரம் காக்கப்படுகிறது.
சரி அவர்களுக்கான மிகப்பெரிய தண்டனையான மரணத்தை கொடுத்துவிட்டனர். பிறகு எதற்கு அவர்களை தெய்வம் என்ற நிலையில் வைத்து வழிபடுகின்றனர்? உலகில் எங்காவது தவறு செய்தவர்கள் (பொது புத்திக் கொண்டோரின் பார்வையில்) தண்டிக்கப்பட்டு பின்பு அவர்களுக்கென்று கோயில் எடுத்து அவர்களையே புனிதப்படுத்தி வழிபடும் செயல் நடைபெறுமா?
காரணம், அப்பெண்கள் இறந்துபோய் இருப்பினும் அப்பெண்களின் இறப்பு என்பது இயற்கையான இறப்பு கிடையாது. உண்மையில் சொல்லப்போனால் அப்பெண்கள் கொல்லப்பட்டனர் அல்லது அவர்கள் தற்கொலை செய்துக்கொள்ள தூண்டப்பட்டனர். அப்படியென்றால் அவர்களைக் கொன்ற பாவம் யாரை சேரும்? கொன்றவரை அல்லது தற்கொலை செய்ய தூண்டியவர்களைதானே? அவர்களையே வழிபட்டு தெய்வமாக்கினால் அவர்கள் கோபம் தணிந்து இறப்பிற்கு காரணமானவர்களை மன்னிப்பர். அதனால் தான் அவர்களையே தெய்வமாக வழிபடுகின்றனர்.
இவர்களின் இறப்பிற்கு காரணமான ஒரு தரப்பினரும் அவர்களைத் தெய்வமென வழிபடுகின்றனர். அதேபோல இவர்களின் இறப்பால் இழப்பிற்கு உண்டான மற்றொரு தரப்பினரும் அவர்களைத் தெய்வமாக வழிபடுகின்றனர்.
கலாச்சாரத்தைக் காப்பது, கலாச்சாதரத்தைக் காப்பது என்று முன்பு கூறினோம். பெண்களின் மன உணர்வுகளைக் கொன்றழித்த பின்னர் இந்த தமிழ்ச்சூழலில் அப்படியென்ன பெரும் கலாச்சாரத்தைக் காப்பாற்றுகின்றனர்? அந்த கரலாச்சாரத்தைக் காப்பாற்ற சொல்லுவது யார்? அதை யார் காப்பது?
முன்னர் கூறிய மூன்று பெண்களின் மறைவிற்கும் மறைமுகக் காரணமாகக் கலாச்சாரத்தைப் போதிக்கும் ஆணாதிக்கச் சிந்தனைதான் செயல்படுகிறது. 1. திருமணம் செய்வதற்காக ஒப்பதல் கொடுத்ததை மீறக்கூடாது. 2. திருமணம் செய்வதற்கு முன்பு பெண் கற்பை இழத்தல் என்பது மிகப்பெரிய குற்றம். 3. திருமணபந்தத்தில் பெண் என்பவள் கற்போடு வாழவேண்டும். இது போன்றவைதான் பெரும் கலாச்சாரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றை அழியாமல் காப்பாற்றுவதே இங்கு மனிதர்களின் பெரிய கடமையாக உள்ளது. ஆனால் அத்தகைய கலாச்சாரத்தைக் காப்பாற்றுபவர்கள் யார் என்று கேட்டால், அவர்கள் எல்லோரும் பெண்கள். அந்த கலாச்சாரத்தை காப்பாற்று என்று போதனை செய்பவர்கள் எல்லோரும் ஆண்கள்.
திருமணம் செய்வதற்காக இரண்டு வீட்டாரும் ஒப்புதல் கொடுத்தனர். ஆனால் சொன்னபடி திருமணம் நடைபெறவில்லை. அப்படியெனில் இருவருமே தண்டிக்கப்படவேண்டும் தானே? அந்த பெண் மட்டும் ஏன் பழிதூற்றலுக்கு ஆளாகின்றாள்? அந்த ஆணை ஒருவரும் கேள்வி கேட்பதாகட்ன் தெரியலில்லை. மாறாக அப்பெண்ணை மட்டுமே கேள்விக்கும் பழிதூற்றலுக்கும் ஆளாக்குகின்றனர்.
காதலர்களின் காதல் வாழ்வில் திருமணத்திற்கு முன்பே கருவுறுகிறாள் பெண். திருமணமாவதற்கு முன்பு கருவுற்றது குற்றமெனில் இருவரும்தானே தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்? தன்னையொத்த மற்றொரு உயிரை உருவாக்குவதில் ஆண், பெண் இருவருக்குமே சம உரிமை உண்டுதானே? அப்படியெனில் ஆணையும் தண்டனைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும் என்பது முறைதானே. பிறகு ஏன் அவன் தண்டிக்கப்படாமல் பெண் மட்டும் தண்டிக்கப்பட்டாள்?
ஆண் வெளியூரில் இருக்கிறான். இங்கு பெண் கருவுற்றுவிட்டாள் எனில் அவள் வேறு ஒருவனால் கருவுற்றிருப்பாள் என இச்சமூகம் சந்தேகிக்கும்போது, மனைவியைப் பிரிந்து கணவன் வெளியூரில் வாழ்கிறான் அங்குள்ள அவனின் கற்பை எவரும் சந்தேகிக்கவில்லை. அது ஏன்? காரணம் எல்லா நிலைகளிலும் ஆண் பாதுகாப்பான இடத்திலேயே நிற்கிறான். பெண் என்பவளே கலாச்சாரத்தைக் காக்க வேண்டும் என்பதால் பாதிக்கப்படுகின்றாள். ஆண் குற்றம் செய்தாலும் அவன் தண்டிக்கப்படாமல், கலாச்சாரத்தைப் பரப்பும் பரப்புரையாளனாகவே செயல்படுகின்றான். அவன் காக்கப்படுவதால் பெண் மட்டும் தனியே தண்டனையை ஏற்கும் நிலைக்கு தள்ளப்படுகிறாள். தண்டிக்கப்படுகிறாள்.
கலாச்சாரத்தை இருவரும் மீறினால்கூட பெண் கலாச்சாரத்தை மீறியதாகவே எடுத்துக்கொள்ளப்படும். அதனால்தான் முன்பு சொன்ன மூன்று பெண்களும் கொல்லப்பட்டனர். பின்னர் அவர்களைத் தெய்வமாக்கினர். இப்படியாக உருவாக்கப்பட்ட இந்த தெய்வங்களால், தற்போது உள்ள சமகாலப் பெண்களுக்கும் பின்பு வரஇருக்கின்ற எதிர்காலப் பெண்களுக்கும் நாம் தவறு செய்தால் அதாவது கலாச்சாரத்தை மீறினால் இவர்களைப்போல (தீப்பாஞ்சியம்மன்) நாமும் தண்டிக்கப்படுவோம் என்ற கற்பிதமும் மறைமுகமாகக் கற்பிக்கப்படுகிறது.
முடிவுரை
இநக்ச் சாமிகளின் பிறப்பு வரலாற்றிலிருந்து அறியப்படுகின்ற செய்தி ஒன்றே ஒன்றுதான். கலாச்சாரம் காக்கப்பட வேண்டும். அது பெண்ணால்தான் செய்லபடுத்தப்பட வேண்டும். ஆண் என்பவனுக்கு பங்கு ஏதும் இல்லையா என்றால் உண்டு. அவன் எப்போதும் கலாச்சாரத்தைக் காக்கச் சொல்லும் நபராகவே செயல்படுவான். எளிமையாக சொல்லவேண்டும் என்றால் ஆண் என்பவன் கட்டளையிடும் கலாச்சார மேற்பார்வையாளன். பெண் என்பவள் அதை நிறைவேற்றும் மற்றும் பாதுகாக்கும் கலாச்சாரக் காவலர். இங்கு பெண் இருப்பினும், இறப்பினும் அவள் கலாச்சாரக் காவலரே.
துணை நூல் பட்டியல்
முதன்மை ஆதாரம் – தகவலாளி விவரம்
ஜெயந்தி (48), அரசம்பட்டி
திருநாவுகரசு (53), திருப்பத்தூர், பூசாரி
சாமுண்டீஸ்வரி (42), குட்டுர், தையல்காரர்
பரிமளா (38), சின்னகந்திலி, கூலிவேலை
காந்திமதி (47), புதுகோட்டை, கூலிவேலை
ருக்கு (80), திரியாலம்
துணைமை ஆதாரம்
சு. சக்திவேல் - நாட்டுப்புற இயல் - ஓர் ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், முதற்பதிப்பு – 2007
சிவசுப்பிரமணியன் – ஆணவக் கொலை சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும், காலச்சுவடு பதிப்பகம், இரண்டாம் பதிப்பு – 2022
தமிழ்ச்செல்வன் - சாமிகளின் பிறப்பும் இறப்பும், அறிவியல் வெளியீடு இணைந்து, பாரதி புத்தகாலயம், பத்தாம் அச்சு - 2023