நான்கு
நான் யாருக்கும் போதிக்க முடியாது.
ஆனால் அவர்களைச் சிந்திக்கத் தூண்டலாம். - சோக்ரடீஸ்சிந்தனை மலர்ச்சிக்கான பாதையைக் காட்டிய சோக்ரடீஸ் இன் அறிவுத் தேடல் இங்கு அலசப் பட்டுள்ளது. ஒழுக்க விசாரணைகளில் மிகுந்த கவனம் செலுத்திய போதும் அரசியலில் சோக்ரடீஸ் போதிய அளவு ஆர்வம் காட்டவில்லை. எனினும் அவருடைய சீர்திருத்தத் திட்டத்தில் அரசியலுக்கும் இடம் இருந்தது. நாட்டின் பொதுச் சேவைகளை அவர் வேண்டுமென்றே புறக்கணித்தார் என்ற குற்றச்சாட்டிலும் உண்மை இருக்கவில்லை. நாட்டுப் பற்றில்லாதவர் எனும் குற்றச்சாட்டும் அவர் மீது இல்லை. ஆனால் தமது மெய்யியல் ஒழுக்கவியல் போதனைகளில் அவர் தம்மை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தார். நடைமுறை வாழ்க்கையோடு தொடர்புடைய பிரச்சினைகளுக்கும் அவர் பதில் தேடினார். சோக்ரடீஸ் தமது சிந்தனைகளை எழுத்து வடிவில் தரவில்லை. எழுதுவதில் அவருக்கு நம்பிக்கையோ ஆர்வமோ இருக்கவில்லை. அவர் காலத்தில் அறிஞர்கள் பலரிடம் இருந்தது போல் நூலகங்களும் அவரிடம் இருக்கவில்லை. பிளேட்டோ, அரிஸ்டோட்டில், எபிக்கூரஸ் முதலானவர்கள் நடத்தி வந்தது போன்ற கல்விக் கூடங்களும் அவருக்குச் சொந்தமானவையாக இருக்கவில்லை. பொதுமக்கள் கூடும் சந்தை, பாதை ஓரம், விளையாட்டரங்கு அல்லது நண்பர்களின் வீடு போன்ற இடங்களில்தாம் அவருடைய கல்விச்சாலைகளாளவும் சிந்தனைக் கூடங்களாகவும் விளங்கின. பொதுவாக அவருடைய உரைகள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மீதும், மக்களின் சிந்தனை மாற்றங்கள் மீதும் அக்கறை கொணடவையாக இருந்தன. அதேவேளை அவ்வப்போது மெய்யியலாளர்களோடும் அரசியல் வாதிகளோடும் கலைஞர்களோடும் அவர் கருத்துப் பரிமாற்றங்கள் செய்துள்ளார். அவருக் கென்று மிக நெருக்கமான தோழர்களும் சீடர்களும் இருந்தனர் இவ்வாறு சோக்ரடீஸ் இன் சிந்தனை மலர்ச்சிக்கான பாதையை நூலாசிரியர் விரிவாக விபரித்துச் செல்கின்றார். ஐந்து பக்கங்களில் இது நீண்டு செல்கின்றது.
சோக்ரடீஸ் புதிதுதேடும் முயற்சியில் மிகுந்த உற்சாகம் காட்டினார். அவர் ஏதென்ஸ் நகரத்து வீதிகளில் முன்னணி மெய்யியலாளர்களின், விஞ்ஞானிகளின் பேச்சுக்களை செவி மடுத்தார். அவர்கள் கூறும் கருத்துகளில் காணப்படும் முரண் பாடுகள் பற்றிச் சிந்தித்தார். இவர்கள் பேசும் பிரச்சினைகள் பற்றித் தாமாகவே சிந்திப்பதற்கும் அவர் தூண்டப்பட்டார். இவ்வகையில் அவரது அறிவு தேடும் ஆர்வமானது படிப்படியாக அதிகரித்துச் சென்றது. சோக்ரடீஸ் காலத்தில் மிகவும் செல்வாக்குடன் விளங்கிய அவருடைய சமகாலச் சிந்தனையாளர்களான ஹெராக்கிளிட்டஸ், அனெக்சிமினிஸ், அனக்சகோரஸ், ஆர்ச்சலஸ் போன்றவர்களின் கோடபாடுகளையும் அவர் அறிந்திருந்தார். பிரபஞ்ச வாதியாக அல்லது இயற்கை மெய்யிலாளராக இருந்த ஆர்ச்சலஸ் பற்றி பற்றி சற்று விரிவாக துலக்கியுள்ளார்.
சோக்ரடீஸ் இன் உரைகள் மனித இயல்பை விவரிப்பதாக மட்டும் இருக்கவில்லை. இயக்கவியல் முறையினூடாக மனித வாழ்வின் இயல்பையும் ஒழுக்கத்தின் இயல்பையும் அவர் விளங்கிக் கொள்ள முயன்றார் தர்க்கரீதியாக அவர் உருவாக்கிய இந்த உரையாடல் சிந்தனைமுறை உண்மையைத் தேடும் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. தம்மைப் போல மற்றவர்களும் அறிவையும் ஒழுக்கத்தையும் சிந்திக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அந்த ஆர்வத்தைச் சக மனிதர்களிடத்திலும் அவர் தூண்டினார். அறியாமையையும் கற்பனையான நம்பிக்கை களையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒழுக்கத்தை அறிதல் பற்றி விளக்குகையில் சோக்ரடீஸ் – மேனோ ஆகியோருக்கிடையிலான உரையாடலையும் தந்துள்ளார் (பார்க்க, பக். 83- 86),
சோக்ரடீஸ் இன் சிந்தனை முறையை மிகத்தெளிவாக மெய்யியல் கண்ணோட்டத்துடன் இவ்வியல் விளக்கியுள்ளது. ‘கிரேக்க கலாசாரம், அரசியல், சமூகச் சூழலின் பின்னணியில் இருந்துதான் உண்மை, வாழ்வு, அறிவு, ஒழுக்கம் என்ற எண்ணக் கருக்களை சோக்ரடீஸ் விசாரணைக்கு உள்ளாக்குகின்றார். சோக்ரடீசின் மெய்யியல் சிந்தனையின் முதன்மை ஊற்றுக் களாக இவற்றைக் கொள்ளலாம். ஆயினும் அவருடைய மெய்யியலைப் புரிந்துகொள்வதில் அவர் பயன்படுத்திய முறைக்கு ஒரு முக்கிய பங்குள்ளது. சோக்ரடீசின் முறை பற்றிய புரிதல் இன்றி சோக்ரடீசின் மெய்யியல் வடிவம் பற்றிப் பேசுவது சாத்தியமற்றது. சோக்ரடீசின் கருத்துக்கள் நன்கு வரையறுக்கப்பட்டவை அல்ல. ஆனால், அவை புரிந்துகொள்ளக் கடினமான அகவய ரீதியான கருத்துகளும் அல்ல. அதே வேளை அளவையியல் முறையில் ஒழுங்கமைக்கப்பட்டதும் அல்ல. ஆனால் அவை உணர்வுகளை அறிவுரீதியாகக் கிளரக்கூடியவை, செயலதிறனுள்ளவை. பெறுமதியானது என்று கிரேக்கர் கருதிய எல்லாவற்றின் மீதும் சோக்ரடீஸ் கேள்வி எழுப்பினார். ஏன், எதற்காக என்று கேட்டார். இதனால் எழுந்த பிரச்சினைகள் அனைத்தையும் பெரும்பாலான சூழ்நிலைகளில் அவர் தன்னந்தனியாக எதிர் கொண்டார். தமது காலத்தின் ஊழல் மலிந்த சமயத்திற்கும் சமூக-அரசியல் நிறுவனங்களுக்கும் எதிரான அல்லது மாற்றுக் கருத்துகளை சோக்ரடீஸ் பேசினார். சமூகத்திலும் ஏதென்ஸ் அரசியலிலும் இது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர் மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றிருந்தது உண்மை யாயினும் ஏதென்சில் அவரை விரும்பாதவர்கள் இருந்தனர். எதிரிகள் சோக்ரடீசுக்கு எதிரான குற்றப்பத்திரிகையைத் தயாரிப்பதிலும் அதை மேலிடங்களுக்குக் கொண்டுசெல்வதிலும் விரைந்து செயல்பட்டனர். சோக்ரடீஸ் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்து அரசியல் மேலிடம்வரை பரவியிருந்தது என்றெழுதி இவ்வியலை நிறைவு செய்துள்ளார்.
ஐந்து
திறமைசாலிகள் எல்லாரிடமிருந்தும் எல்லாவற்றிலிருந்தும் கற்றுக் கொள்கிறார்கள்.
எளிய மனிதர்கள் தமது அனுபவங்களிலிருந்து மட்டுமே கற்கிறார்கள்.
மூடர்களிடமோ ஏற்கனவே பதில்கள் உள்ளன. - சோக்ரடீஸ்
நடுவர் மன்றத்தில் சோக்ரடீஸ் முன்வைத்த வாதங்களும் எதிர்வாதங்களும் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சோக்ரடீஸ் இன் இரத்ததில் ஊறிப்போயிருந்த உண்மையையும் மனிதத் தன்மையையும் நேர்மையையும் இந்நூல் முழுவதிலும் பேராசிரியர் அனஸ் அவர்கள் துலாம்பரமாக துலக்கியுள்ளார். .இது இவ்வியலில் துல்லியமாய் துலங்கியுள்ளது என்பதற்கு இவ்வியலின் ஆரம்ப வரிகளே ஆதாரமாகின்றன. “நீதிமன்றத்திற்கு வருமாறு அழைப்பானை கிடைத்தவுடன் சோக்ரடீஸ் ஆர்கோனின் சபைக்குச் சென்றார். சோக்ரடீஸ் ஐ கைது செய்யும் தேவை அரசுக்கு இருக்கவில்லை. ஏனெனில் சோக்ரடீஸ் சட்டத்திற்கு மதிப்பளிப்பவர் என்பது தெளிவானதாக இருந்தது. அவர் விரும்பியிருந்தால் தப்பிச் சென்றிருக்கலாம். தப்பிச் செல்வதற்கு அதிக வாய்ப்புக்கள் இருந்தன. விசாரணைக்கான அழைப்பாணை கிடைத்த பிறகும், தமது வழக்கமான செயல் பாடுகளில் அவர் எந்த மாற்றங்களையும் செய்துகொள்ள வில்லை. தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பற்றியும் அவர் அதிகம் கவலைகொள்ளவில்லை.” மேலும் நூலாசிரியர், சோக்ரடீஸ் உண்மை என்ற மெய்யியலுடன் எவ்வாறு ஒன்றித்திருந்தார் என்பதை நுண்ணுணர்வோடு எடுத்துரைத்துள்ளார்.
“எனது வாழ்நாள் முழுவதுக்குமான ஓர் ஆயத்தத்தை நான் செய்துகொண்டிருக்கின்றேன் என்பது உங்களுக்குத் தெரிய வில்லையா? எது சரி, எது பிழை என்பது பற்றித்தான் வாழ்க்கை முழுக்கச் சிந்தித்துக்கொண்டிருக் கிறேன். இதை நீங்கள் உணர வில்லையா என்று சோக்ரடீஸ் தமது பேச்சை ஆரம்பித்தார். தமது தற்காப்பிற்கான சிறந்த பயிற்சி அதில் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். நமது நீதிபதிகள் வெறும் வாதங்களுக்கு அடிமை யாகி ஏதெனிய அப்பாவி மக்களுக்கு மரணதண்டனை விதிப்பதை நீங்கள் அறியவில்லையா என்று நண்பன் ஒருவன் கவலையுடன் கூறியபோது சோக்ரடீஸ் பின்வருமாறு பதில் அளித்தார்: “ஹேமொஜனிஸ் நான் சொல்வதை நம்பு, எனது தற்காப்பைப் பற்றி சிந்திப்பதற்காகத் தயாராகும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒரு தெய்வீகக் குரல் அதை எதிர்த்து வருகின்றது.’ வாழ்நாள் முழுக்க இந்தப் பண்பு அவரிடம் நீடித்திருந்தது. அதாவது சமநிலையான ஒரு வாழ்க்கை முறையை அவர் கடைப்பிடிக்க முயன்றார். எத்தகைய பதற்ற நிலையிலும், அதன் தீவிரத்திற்குத் தம்மை இழக்காத ஒரு பண்பு அவரிடம் இருந்து வந்தது. ஆனால், உண்மையை ஆராய்வது எல்லாச் சூழ்நிலைகளிலும் அவருடைய இடைவிடாத முயற்சியாகவும் இலட்சியமாகவும் இருந்துள்ளது. அதனால், அவர் வழக்கு விசாரணையின் தீவிரத்தைப் பற்றியோ அதன் விளைவுகளைப் பற்றியோ கவலைப் படாதவராகவும் அச்சமற்றவராகவும் இருந்தார்……… (பக். 93),
முதல் முறையாக நீதிமன்றத்திற்கு வந்துள்ளேன். இங்கு எப்படிப் பேச வேண்டும் என்று எனக்குத் தெரியாது. குறைகள் இருந்தால், மன்னித்துக்கொள்ளுங்கள். நான் அழகாகப் பேசுகிறேனா என்று பார்க்காதீர்கள். எனது பேச்சில் இருக்கும் உண்மையைப் பாருங்கள். சோக்ரடீஸ் எப்போதும் வலியுறுத்தும் ஒழுக்கத்தின் தொனி அவருடைய ஆரம்ப உரையில் எதிரொலித்தது. உலகில் ஆற்றப் பட்ட வழக்குமன்ற உரைகளில் அரிதான ஒன்றாக இதைக் கூற முடியும். ஆனால், எதேச்சையாகவும் முன்தயாரிப்பு இல்லாமலும் அவர் பேசினார். நடந்த நிகழ்வுகளின் நியாயங்களை சோக்ரடீஸ் இந்த உரையில் விளக்கினார். தம்மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதில் தரக்கூடிய அடித்தளம் ஒன்றைத் தமது பாணியில் அவர் உருவாக்க முயன்றதை இந்த உரை நமக்கு உணர்த்துகிறது. இந்த உரையின் இரண்டாவது கட்டத்தை சோக்ரடீஸ் பின்வருமாறு தொடங்குகிறார்: ஏதென்ஸ் நகர மக்களே! என் மீது குற்றம் சுமத்தப்படுவது இதுதான் முதல் தடவை என்று கருத வேண்டாம். பல ஆண்டுகளாகச் சிலர் இப்போது சுமத்தப்பட்டுள்ள இதே குற்றங்களை என் மீது சுமத்தி வந்துள்ளனர். பல ஆண்டுகளாக இவ்வாறு அபாண்டமாக என்மீது பழி சுமத்தப்பட்டு வந்துள்ளது. அனிட்டசும் அவருடைய தோழர்களும் ஆபத்தானவர்கள். அவர்கள்தாம் எனது முதல் எதிரிகள்…..” (பக். 99),
விசாரணை மன்றத்தில் நிகழ்ந்தவைகளையும் அவர் மீது சுமத்தப்பட்ட பதினொரு குற்றச்சாட்டு களையும் குற்றச்சாட்டுகளில் முன்வைக்கப்பட்ட மூன்று பிரச்சினைகளையும் எடுத்துக்காட்டியுள்ளார். சோக்ரடீஸ் எப்போதும் வலிறுத்தும் ஒழுக்கத்தின் தொனி அவருடைய உரையில் எதிரொலித்ததைச் சொல்லி அந்த பேச்சை பதிவிட்டுள்ளார். “ஏதென்ஸ் நகர மக்களே! குற்றச்சாட்டாளர்கள் பேசியதை நீங்கள் கேட்டீர்கள். நானும் கேட்டேன். மற்றவர்களைத் தூண்டும் வகையில் நாவன்மையுடன் அவர்கள் பேசினார்கள். ஆனால் அவர்கள் உண்மை பேசவில்லை. அவர்கள் பேசிய ஏராளமான பொய் உரைகள் என்னை வியப்பில் ஆழ்த்தின. அவர்கள் கூறிய பொய்களில் எல்லாம் பெரிய பொய் எதுவெனில் சோக்ரடீசைப் பற்றிக் கவனமாக இருங்கள்; அவன் பேசத் தெரிந்தவன்; அவனிடம் நீங்கள் ஏமாற வேண்டாம் என்று கூறியதுதான். இவன் பேச்சில் வல்லவன்; இவனிடம் கவனமாக இருங்கள் என்று சொன்னார்களே அதுதான் அவர்கள் கூறிய அனைத்திலும் பெரிய பொய். நான் பேச ஆரம்பித்தால், உண்மை வெளியாகிவிடும் என்பதை இவர்கள் அறிவார்கள். நல்ல பேச்சின் இலக்கணம் உண்மை பேசுவது தான். எனது இந்த ஆற்றலைத்தான் பேச்சுவன்மை என்று. அவர்கள் கூறுகிறார்கள். வெட்கமற்று இவ்வாறு பேசியுள்ளார்கள். உண்மை பேசுவதுதான் நன்றாகப் பேசத் தெரிந்தவன் என்பதற்குப் பொருளாயின் அது ஏற்கக்கூடியதுதான். இந்தப் பொருளில் கூறியிருந்தால், நான் ஒரு சிறந்த பேச்சாளன் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அவர்களின் பேச்சில் இருப்பது பொய்.உங்களிடம் நான் பேசுவது உண்மை. அவர்களைப்போல் அலங்கார வார்த்தைகளால், நாவன்மைத் திறன் காட்ட நான் உங்கள் முன் வரவில்லை. உண்மை என் பக்கம் இருப்பதால், எதுகை மோனை வார்த்தைகள் எனக்குத் தேவையில்லை…….” (பார்க்க, பக் 98, 99),
ஆறு
கடவுள் கொள்கை பற்றியதாக அதாவது தொல்சமய நம்பிக்கையும் நிராகரிப்பும் பற்றியதாக இவ்வியல் அமைந்துள்ளது. சோக்ரடீஸ் ஒரு சமய மறுப்பாளர் என்பது அவர்மீது சுமத்தப்பட்ட முதன்மைக் குற்றச்சாட்டாகும். குற்றச்சாட்டின் இரண்டாம் பகுதி சோக்ரடீஸ் புதிய கடவுள்களை அறிமுகப்படுத்தினார் என்பதாகும். இக்குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் ஏதும் இருக்கவில்லை என்பதை தர்க்கப்பூர்வமாக நூலாசிரியர் விளக்கியுள்ளார். மேலும் அக்காலத்து கிரேக்க சமய நிலவரங்களையும் அரசு எவ்வாறு சமயத்தை கையாண்டது என்பது போன்ற விபரங்களையும் விரிவாக எழுதியுள்ளார். சோக்ரடீஸ் இன் கடவுள் பற்றிய நம்பிக்கை எவ்வாறு இருந்தது என்பதையும் அன்றைய சமயங்கள் மீது அவர் கொண்டிருந்த விமர்சனத்தையும் விளக்கியுள்ளார். கடவள் இருப்பு, கடவுள் மறுப்பும் புதிய சமயமும், சடங்குகளும் சமய நம்பிக்கையும், வழிபாட்டு முறைகள், சோக்ரடீஸ் இன் தெய்வீக குரல் முதலான விடயங்கள் பற்றி இவ்வியல் ஆய்வுபூர்வமாய் அலசியுள்ளதுத
‘மெலிட்டஸ் சோக்ரடீஸ் ஐ ‘நாத்திகர்’ என்றும் குற்றம் சுமத்தினான். நாத்திகர் என்பதோடு இளைஞர்களைக் கெடுத்தார் என்பதும் சேர்ந்துகொண்டது. இது ஓர் அபாண்டமான குற்றச் சாட்டாக இருந்தபோதும், இந்தப் பிரச்சினை பற்றிய ஒரு நேர்மையான கலந்துரையாடலுக்குச் செல்வதற்கே சோக்ரடீஸ் விரும்பினார்’ என்று கூறி நீதி மன்றத்தில் நடந்த அந்த உரையாடலை நூலாசிரியர் தந்துள்ளார், அந்த உரையாடலின் ஒரு சிறுபகுதி வருமாறு,
மெலி: நீங்கள் எந்த விதத்திலுமே கடவுள்களில் நம்பிக்கை வைத்த ஒருவர் அல்ல. இதுதான் எனது எண்ணம்.
சோக்: அற்புதம் மெலிட்டஸ். ஏன் நீ அவ்வாறு சொன்னாய். மற்றவர்களைப் போல நான் சூரியனையும் சந்திரனையும் கடவுளர்களாக நம்பவில்லை என்று நீ கருதுகின்றாயா? (இந்த இடத்தில் மெலிட்டஸ் அவரை மடக்குவதற்கு முயலுவது போல).
மெலி: நான் சத்தியமிடுகின்றேன். நீதிபதி அவர்களே நான் அவ்வாறு கூறவில்லை. சூரியனைக் கற்பாறை என்றும் சந்திரனை நிலம் என்றும் அவர் கூறுகின்றார்.
சோக்: எனது அன்புக்குரிய மெலிட்டஸ்! நீ அனெக்சகோரசைக் குற்றம் சுமத்துகின்றாய் என்று நான் நினைக்கிறேன். மெலிட்டஸ், உனக்கு நீதிபதிகள் மீது மிகவும் தாழ்வான எண்ணம் உள்ளது. அவர்களைப் படிப்பற்றவர்கள் என்றும் நீ கருதுகின்றாய். அனெக்சகோரஸ் உடைய நூல்கள் அனைத்திலும் இந்தக் கோட்பாடுகள் அடங்கியிருப்பது பற்றி அவர்களுக்குத் தெரியாது என்று நீ நினைக்கின்றாயா? இந்த நூல்களைத் திறந்தவெளி அரங்குகளின் அருகிலுள்ள புத்தகசாலைகளில் மக்கள் பணம் கொடுத்து வாங்க முடியும். அப்படி இருக்கும் போது அதை அவர்கள் சோக்ரடீசிடம் இருந்துதானா கற்றுக்கொள்ள வேண்டும் ? அவ்வித அதீதமான கருத்துகளை சோக்ரடீஸ் தம்முடைய கருத்துகளாக இளைஞர்களிடம் போதித்தால் சோக்ரடீசைப் பார்த்து அவர்கள் நகைக்கமாட்டார்களா? கடவுளின் பெயரால் கூறு! இதைப் பற்றி நீ இப்படித்தான் சிந்திக்கின்றாயா. எந்தத் தெய்வங்கள் பற்றியும் என்னிடம் எந்த நம்பிக்கையும் இல்லை என்றா நீ கூறுகின்றாய்…..”
ஏழு
தாங்கள் அறியாத வணிகத்தில் யாரும் ஈடுபடுவதில்லை.
ஆனால் எல்லாவற்றிலும் கடினமான அரசியலில், ஈடுபடுவோர்
தங்களை எல்லாம் அறிந்தவர்களாகக் கருதுகின்றனர்.
சோக்ரடீஸ்
ஜனநாயகம் என்னும் செல்வந்தராட்சி பற்றியும் நல்லாட்சிக்கான சோக்ரடீஸ் இன் விமர்சனங்கள் பற்றியும் எழாம் இயல் ஆராய்ந்துள்ளது. சோக்ரடீஸ் சமய எதிர்பாளர் என்று அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் ஒரு தெளிவின்மை அல்லது பலவீனம்தான் காணப்பட்டது. அதே தெளிவின்மைதான் இளைஞர்களை அவர் கெடுத்தார் என்ற குற்றச்சாட்டிலும் இருந்தது. உண்மையில் சோக்ரடீஸ் மீதான குற்றச்சாட்டுகளில் அதிகமானவை தவறான முன்ணெண்ணங்கள் என்ற பாதிப்பிற்கு உள்ளானவையாக இருந்தன. சோபிஸ்ட்டுகள் மீது ஏதேனியர் எதிர்மறை மனப்பாண்மையைக் கொண்டிருந்தனர். சோக்ரடீசுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவர்கள் (அனிட்டஸ்….) சோக்ரடீஸ் ஐ சோபிஸ்ட் குழுவினரின் ஒருவராகவே அடையாளப் படுத்தியிருந்தனர். இந்தப் பின்னணியிலேயே சோக்ரடீசையும் சோபிஸ்ட்டுகளையும் சமப்படுத்தி தனது உரையில் அனிட்டஸ் சில கருத்துக்களை வெளியிட்டான் - இந்த கருத்துக்களை இவ்வியலின் தொடக்கத்தில் நூலாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்
அன்றைய அரசியல் போக்குகள் குறித்தும் அதாவது அரசியல் சர்ச்சைகள் பற்றியும் அதனை சோக்ரடீஸ் எதிர்கொண்ட விதம் பற்றியும் அவரது அரசியல் விமர்சனம் குறித்து மட்டுமல்ல, அவரது அரசியல் நிலைபாடு பற்றியும் விவாதநோக்கில் ஆராந்துள்ளார். விசாரணைகளிலும் குறுக்கு விசாரணைகளிலும் தெரிவிக்கப்பட்ட கருத்துகளில் அடிக்கடி சோக்ரடீஸ் சோபிஸ்ட்டுகளுக்குச் சமமாக ஒப்பிடப்பட்டமையை எடுத்துக்காட்டி. அதற்கு சோக்ரடீஸ் முன்வைத்த தர்க்க ரீதியிலான வாக்குமூலங்களையும் விளக்கங்களையும் விரிவாக ஆய்வுக்கு உட்படுத்திள்ளார். சோக்ரடீஸ் வாலிபர்களை கெடுத்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் வெறும் அவதூறுகள் என்றுகூறி தன்னுடைய போதனைகளுக்கும் வாலிபர்களுக்கும் இடையிலிருந்த தொடர்புகளின் தன்மையையும் விளக்கினார். இளைஞர்களைக் கெடுத்தார் என்ற மெலிட்டசின் குற்றச்சாட்டிற்கு குறுக்கு விசாரணை மூலமாக ஒரு விழிப்பை அவர் ஏற்படுத்த முனைந்தார். இதற்கு ஒரு பீடிகை போல அமைந்த பேச்சின் ஒரு பகுதியை நூலாசிரியர் தந்துள்ளார் (பார்க்க, பக். 125), சோக்ரடீஸ் இளைஞர்களை கெடுத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு எதிரான வாதங்களை பற்றி ஆறு பக்கங்களில் நூலாசிரியர் ஆராய்ந்துள்ளார். மெலிட்டசை மடக்கி உண்மைகளை வெளிப்படுத்தும் வாதங்களோடு சோக்ரடீஸ் இன் குறுக்கு விசாரணைகளை நூலாசிரியர் பதிவிட்டுள்ளமை (பக். 126, 127) குறிப்பிடத்தக்கது. அரசியல் எதிர்ப்பாளர் எனும் குற்றச்சாட்டு, அறிவும் ஒழுக்கமும் என்னும் உபதலைப்புகளிலும் இவ்வியல் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
எட்டு
உங்களுக்குக் காற்று தேவைப்படும் அளவுக்கு
வெற்றி தேவைப்படும் போது, நீங்கள் அதை அடைவீர்கள்.
வெற்றிக்கு வேறு எந்த இரகசியமும் இல்லை. சோக்ரடீஸ்
‘சோக்ரடீசின் குற்ற மறுப்புரை’யை ‘நடுவர்கள் தீர்ப்பை மாற்றாதது ஏன்?’ என்ற கேள்வியை எழுப்புவதன் மூலமாக நூலாசிரியர் ஆராய்ந்துள்ளார். சோக்ரடீஸ் ஆற்றிய உரைகளை எடுகோளாகக் கொண்டு இவ்வியல் எழுதப்பட்டுள்ளது. மெலிட்டஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகள் புதியன அல்ல. ஏற்கனவே பல ஆண்டுகளாக மக்களும் கவிஞர்களும் தம்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளைத்தான் புதியது போல, மெலிட்டஸ் முன்வைப்பதாக சோக்ரடீஸ் கூறினார். ‘அரிஸ்தோபனீசின் நாடகம் பற்றியும் அதில் தம்மைப்பற்றி மோசமாக விமர்சிக்கப்பட்டிருப்பதையும் நடுவர்கள் முன்னிலையில் சோக்ரடீஸ் பேசினார்’ என்று கூறி, அது பற்றிய விபரங்களை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். “சோக்ரடீஸ் ஆற்றிய நீதிமன்ற உரை அவருக்கான குற்ற மறுப்புரையாகவும் அமைந்திருந்தது. எனினும் அந்தக் குற்ற மறுப்புரை பாரிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிக் கடுமையான தண்டனையை எதிர்பார்த்து நிற்கும் ஒருவரின் உரையல்ல. தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து விலக்குப் பெறக்கூடியதாகவோ துயர உணர்வை வெளியிடக்கூடியதாகவோ அந்த உரை இருக்கவில்லை. தமது உரைகளின் கவர்ச்சியால், நீதிபதிகளின் அனுதாபத்தைப் பெறுவதற்கோ வழங்கப்படும் தண்டனையைக் குறைப்பதற்கோ சோக்ரடீஸ் முயலவில்லை. வழக்கமாகப் பேசுவது போல் தமக்குரிய பாணியில் தமது எண்ணங்களையும் கருத்துகளையும் சோக்ரடீஸ் வெளியிட்டார். தனது சிந்தனைமுறையிலிருந்து வழுவாது தமக்கெதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் தந்தார். சிறிதும் தளராத நிலையில் சோக்ரடீஸ் சோக்ரடீசாகத் தமது வாதாட்ட உரைகளை நடத்திச் சென்றார்” என்று அழுத்தியெழுதுகிறார் நூலாசிரியர்.
சோக்ரடீஸ் உரையில் தெரிவித்த பின்வரும் வரிகள் மனதை நெகிழவைக்கின்றன. 'நண்பர்களே! நானும் மனிதன். உங்களைப் போல ஒரு மனிதன். இரத்தத்தாலும் சதையாலும் படைக்கப்பட்டவன், மரத்தாலும் கற்களாலும் நான் படைக்கப்படவில்லை. எனக்கும் குடும்பம் இருக்கின்றது. மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள். ஒருவன் வளர்ந்த பெரியவன். மற்ற இருவரும் இளையவர்கள். ஆனால் கருணை மனுச்செய்து நீதிபதிகளிடமிருந்து விடுதலைத் தீர்ப்புப் பெறுவதற்காக எனது குடும்பத்தை இங்கு அழைத்து வந்து நிறுத்த மாட்டேன்….. (பக். 139, 140),
வாக்கெடுப்பு முறைமை பற்றியும் தீர்ப்பு பற்றியும் எடுத்துரைத்து, சோக்ரடீஸ் இன் இறுதி உரையை பதிவிட்டு அதற்கான மெய்யியல் வியாக்கியானத்தையும் பேராசிரியர் அனஸ் அவர்கள் மிகச்சிறப்பாக முன்வைத்துள்ளார். ஏதென்ஸ் மக்களே! நீண்ட நேரம் நான் பேசப்போவதில்லை. நீங்கள் ஒரு பேரறிவாளனை, சோக்ரடீசைக் கொன்று விட்டீர்கள் என்ற அந்த அவப்பெயர் உங்களுக்கு வராமல் இருக்க வேண்டும். நீங்கள் சிறிது காலம் பொறுத்திரந்தால், காலத்தினாலேயே உங்களுடைய ஆசைகள் முழுமையாகி இருக்கும். எனது ஆயுளின் நீட்சி மரணத்திலிருந்து வெகுதொலைவில் இல்லை. நான் உங்களுக்காக இந்தப் பேச்சை நிகழ்த்த வில்லை. ஆனால் என்னை மரணத்திடம் ஒப்படைத்தவர் களுக்காக இதை நான் பேசுகின்றேன். இன்னொரு விடயமும் அவர்களுக்கு நான் சொல்ல வேண்டும். குற்றவாளியாக என்னை நீங்கள் நினைக்கலாம். அதிலிருந்து என்னை மீட்டுக்கொள்வதற்குரிய வார்த்தைப் பயன்பாடுகளை என்னால் வழங்க முடியவில்லை. மற்றவர்கள் செய்வது போல அழுதும் இரங்கியும் மன்றாடியும் நான் எனது மீட்பிற்கு வழிதேடியிருப்பேன் என்று நீங்களும் எண்ணியிருக்க மாட்டீர்கள். நான் அவ்வாறு செய்வதைத் தவிர்த்துள்ளேன். அது எனக்குரிய செயல் அல்ல. நான் எல்லோரையும் போல ஏதோ ஒன்றைச் செய்து அமைதி காண விரும்பவில்லை. எதையாவது பேசி உயிர்வாழ்வதைவிட எனது சிந்தனையைச் சரியாகப் பேசிச் சாவது மேலானது. போராக இருந்தாலும் சட்டமாக இருந்தாலும் மரணத்திலிருந்து தப்புவதுதான் மனித நோக்கமாக இருக்கின்றது. இங்குள்ள பிரச்சினை இதுவல்ல நண்பர்களே! சாவிலிருந்து தப்பிக்கொள்வதல்ல. நேர்மையற்ற வழியில் இருந்து தப்பிக் கொள்வது. இதுதான் முக்கியமானது. மரணத்தைவிட வேகமாக ஓடவேண்டிய நிலையை அது கொண்டு வருகின்றது. நான் முதியவன். மிக மெதுவாகச் செயல்படுகின்றேன். நான் வேகமாக ஓடக்கூடியவன் அல்ல. அதனால் மெதுவாக ஒடுகிறேன்……..” (பக். 146, 147),
உலகின் இடர்களிலிருந்து விடுபடுவது தமக்குச் சிறந்ததாகத் தோன்றுகின்றது என்று அவர் கூறினார். தம்மைக் குற்றம் சாட்டியவர்கள் மீதோ தமக்குத் தண்டனை வழங்கியவர்கள் மீதோ அவர் எவ்விதக் கோபத்தையும் வெளிப்படுத்தவில்லை. அவர்களிடம் அவர் ஒரேயொரு சலுகையை எதிர்பார்த்தார். தமது பிள்ளைகள் நீதிக்கு மாற்றமாக நடந்தால் தாம் வழிகாட்டியதைப் போல் அவர்களுக்கு வழிகாட்டும்படியும் அவர்கள் நீதி வழுவி நடந்தால், அதற்குரிய தண்டனையை அவர்களுக்கு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இவ்வாறு பேசிய பின்னர் சோக்ரடீஸ் இறுதியாக,
“நான் செல்ல வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. நான் சாவதற்காகச் செல்கின்றேன். நீங்கள் வாழ்ந்து கொள்ளுங்கள். யார் சிறந்தவர்கள் என்பதைக் கடவுள் மட்டுமே அறிவார்”
என்று தமது உரையை அவர் முடித்தார். ஒரு பேரறிவாளனின் ஆன்மாவிலும் அறிவிலும் இருந்து வெளிப்பட்ட ஒளிமிக்க கதிர்கள் போல் அந்த உரை மன்றம் முழுக்க எதிரொலித்தது. நல்லது நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உண்மையின் மீதான தேடலும் அவருடைய பேச்சில் தெரிந்தன. நீதியை நிலைநாட்டும் போது இருக்க வேண்டிய பாரபட்சமற்ற நிலையும் மரணத்தின் முன்னிலையிலும் தளராத துணிவாண்மையும் அவருடைய பேச்சில் வெளிப்பட்டன. அது ஓர் உணர்வலையை அங்கு உருவாக்கியது. அறிவும் ஒழுக்கமும் நல்லதும் நீதியும் என்ற முடிவான அவரது இலட்சியங்கள் அன்று அந்த நீதிமன்றத்திலும் எதிரொலித்தன. ஒளிவு மறைவின்றி, உண்மைக்காகப் போராடும் ஓர் ஆளுமையின் குரல் அந்த மண்டபம் முழுவதும் ஒலித்து ஓய்ந்தது. எல்லாவற்றுக்கும் மேலாகச் சோக்ரடீஸ் யாருக்கும் அடிபணிந்து செல்பவரல்ல என்பதைத்தான் அவருடைய உரை தெளிவுபடுத்தியது.
உசாத்துணைகள்
அனஸ், எம்.எஸ்.எம்., 2022, மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ், அடையாளம், புத்தாந்தம்.
அனஸ், எம்.எஸ்.எம்., 2006, மெய்யியல் கிரேக்க மெய்யியல் முதல் தற்காலம் வரை, குமரன், கொழும்பு.
அனஸ், எம்.எஸ்.எம்., 2001, தற்கால இஸ்லாமிய சிந்தனை, பண்பாட்டு ஆய்வு வட்டம், பேராதனை.
அனஸ், எம்.எஸ்.எம்., 1996, விஞ்ஞானமும் சமூக விஞ்ஞானங்களும் – ஒரு முறையியல் நோக்கு, பண்பாட்டு ஆய்வு வட்டம், பேராதனை.
கிருஷ்ணராஜா, சோ, 1982, விமரிசன முறையில், சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.
மர்லின் பீரிஸ், டி.பி., பொன்னம்பெரும, 1999, சோக்ரடீஸ் ஜீவன சரிதய (சிங்களம்), கொழும்பு.
சரிநிகர், 1998 பெப். 11
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.