சந்திரனில் ‘நீலப்பிசாசு’ என்று சமீபத்தில் ஊடகங்களில் வெளிவந்த செய்தியை வாசித்த போது, பலரும் பதட்டப்பட்டார்கள். மனிதர்களைச் சந்திரனில் குடியேற்ற அமெரிக்கா முயற்சி செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அங்கு பிசாசு குடிகொண்டிருக்கிறதா என்ற பயமும் ஒருபக்கம் எழுந்தது. இது உண்மையா, சந்திரனில் பிசாசு இருக்கிறதா? என்றெல்லாம் கேள்விகள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். எட்டாம் வகுப்பில் என்னிடம் கல்வி கற்கும் சில மாணவர்களுக்கும் இந்த சந்தேகம் இருந்ததால், இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தனர். மேலை நாட்டவருக்கும் இந்தப் பேய், பிசாசுகளில் நம்பிக்கை இருப்பதால்தான், கலோவீன் தினத்தைப் பிரமாண்டமாக இங்கே கொண்டாடுகின்றார்கள். சின்னப் பிசாசா அல்லது பெரிய பிசாசா? எப்படி இந்த நீலப்பிசாசு சந்திரனுக்கு வந்தது?
அறிவியல் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளா விட்டால், இது போன்ற சந்தேகங்கள் வரத்தான் செய்யும். நிலா என்று சொல்லப்படுகின்ற சந்திரனில் ‘ப்ளூ கோஸ்ட்’ என்று சொல்லப்படுகின்ற நீலப்பிசாசு இருப்பது உண்மைதான். உங்களுக்கும் இது ஆச்சரியமாக இருக்கும், ஆனால் எங்கள் பூமியில் இருந்துதான் அந்த நீலப்பிசாசு அங்கு சென்றதற்கான சான்றுகள் இருக்கின்றன. ஆமாம், சந்திரனில் மனிதன் ஏற்கனவே தரை இறங்கி இருந்தாலும், தரை இறங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகச் சென்ற ஜனவரி மாதம் 15 ஆம் திகதி 2025 அன்று நிலாவை நோக்கித் தரைஇறங்கியான இந்த ‘ப்ளூ கோஸ்ட்’ என்று சொல்லப்படுகின்ற நீலப்பிசாசு அமெரிக்காவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அது மார்ச் மாதம் 2 ஆம் திகதி வெற்றிகரமாகச் சந்திரனில் தரை இறங்கி இருந்தது.
நிலாவில் தரை இறங்குவது என்பது எவ்வளவு கடினமானது என்பது அனேகருக்குத் தெரியாமல் இருக்கலாம், காரணம் அங்கு ஈர்ப்பு விசை குறைவாக இருப்பதாலும், தரை இறங்குவதற்குத் தேவையான சரியான இடத்தைத் தேர்ந்தெடுப்பதும் மிகக் கடினமானதாகும். சந்திரத்தரை சிறிய குன்றுகளையும், குழிகளையும் கொண்டதாக இருப்பதால், பூமியில் இருந்து சரியான இடத்தைத் தெரிவு செய்வது கடினமாகும். இதுவரை சுமார் 143 விண்கலங்கள் பூமியில் இருந்து சந்திரனுக்கு அனுப்பப்பட்டாலும், அவற்றில் 27 விண்கலங்கள் மட்டும் தான் வெற்றிகரமாகச் சந்திரனில் தரை இறங்கியிருக்கின்றன. பாதுகாப்பாக நிலாவில் தரை இறங்கிய ரோபோக்களில் இந்த நீலப்பிசாசும் ஒன்றாகும். மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு வகை மின்மினிப் பூச்சிகளுக்கும் ‘ப்ளூ கோஸ்ட்’ என்ற பெயர் இருப்பதால், அந்தப் பெயரைத்தான் இந்தத் தரை இறங்கிக்குச் சூட்டியிருந்தார்கள்.
இதுவரை வெற்றிகரமாகச் சந்திரனில் ரோபோட்டிக் விண்கலங்களைத் தரை இறக்கிய நாடுகளில் சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, சீனா, இந்தியா, யப்பான் ஆகிய ஐந்து நாடுகள் இந்த சாதனையைப் படைத்திருக்கின்றன. அமெரிக்கா மட்டும்தான் மனிதர்களைச் சந்திரனில் இதுவரை வெற்றிகரமாகத் தரை இறக்கியிருக்கின்றது. சந்திரனுக்கான இந்தத் திட்டம் வெற்றி அடைந்தால், அடுத்து மனிதர்களை அங்கு தரை இறக்கி, விண்வெளி நிலையத்தில் குடியிருப்பது போல, சந்திரக் குடியிருப்புக்குத் தயாராகுகின்றார்கள். இதைத் தொடர்ந்து செவ்வாய் கிரகம் நோக்கிய பயணம் வெகு விரைவில் ஆரம்பமாகலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.