ஓவியம் _ AI
அ
அம்மா இறந்த பிறகான இந்த ஒரு வருடத்தில் நான் கனவிலும் நினைத்துப் பார்க்காத நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன. எந்தவிதமான நெருக்கடிகளிலும் என்னைத் தடம் புரளாமல் வழிநடத்திவந்த என் அப்பா அம்மாவின் இறப்பிற்குப் பிறகு தடம் புரண்டு போனார். அந்த நாட்களில் என்னை விட்டு அவர் வெகுதூரம் போய்விட்டது போலிருந்தது. ஐந்து வருடத்திற்கு முன்பு வரைக்கும் எனக்கு அப்பாவாக மட்டும் இல்லாமல் நல்ல நண்பரைப் போலவும் இருந்தவர்தான். படிப்பறிவு இல்லாமல் பட்டறிவைக் கொண்டே தனக்குண்டான மரியாதையையும் மதிப்பையும் எங்கள் சின்ன கிராமத்தில் தேடிக்கொண்டவர். அவருக்கிருந்த விசாலமான பார்வையினாலேயே என்னைத் தன்னியல்பாக சுயக்கட்டுப்பாடுடன் இருக்கச் செய்தாரே அன்றி ஒருநாளும் ஒரு சிறிய அறிவுரைகூடக் கூறியதில்லை. முக்கியமாக என்னை எனது சுதந்திரத்திற்கு விரோதமாக நடத்தி அவர் தன் கட்டுப்பாட்டிற்குள் என்னை வைத்திருக்க முயன்றதில்லை.
என் முதிராத, வெகுளித்தனமான பேச்சை அவர் எப்போதும் ரசித்துக் கேட்பார். என்னுடைய ஆதங்கத்தை, கோபத்தை, புறணிகளை எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு என் புரிதல்களின் பின்னே உள்ள விடுபாடுகளை, பார்வைக் கோணல்களை அவருக்கேயுரிய கேலி, நகைச்சுவைகளோடு எனக்குப் புரியவைப்பார்.
திருமணமானதும் மிகப் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனத்தின் வேலையை, இலட்சங்களில் உள்ள சம்பளத்தை மன அழுத்தம் என்று உதறிவிட்டு விவசாயம் செய்ய வருகிறேன் என்று சொன்னதும் ஒரு வார்த்தை மறுத்துப் பேசாமல் தானே உழைத்து வாங்கிய எங்கள் குடும்பத்தின் ஒரே சொத்தான 15 ஏக்கர் விவசாய நிலத்தையும் ஊருக்குள் வாடகைக்கு விட்டிருந்த நான்கு வீடுகளையும் என் பெயருக்கு மாற்றி எழுதித் தந்துவிட்டார். நாங்கள் எல்லோரும் குடியிருந்த ஒரே ஒரு பெரிய வீட்டை மட்டும் – இந்த வீடு எங்களுடைய பூர்வீக இடத்தில் கட்டப்பட்டிருக்கிறது - அவர் பெயரிலேயே வைத்துக்கொண்டார். இப்படியாக எங்களுடைய உறவு எந்தவித ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் சரிவிகிதமான புரிதலுடன் நிலைத்தன்மையில் சென்று கொண்டிருந்தது.
இதற்கிடையில் அம்மாவின் எதிர்பாராத இறப்பு எங்கள் குடும்பத்தை உலுக்கி எடுத்துவிட்டது. அதன் பிறகு அப்பாவுடைய இருப்பே எனக்குப் பெரும் தொந்தரவளிக்கக் கூடியதாக மாறியது. அந்த சமயத்தில் அப்பாவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாறுதல்கள் எங்கள் உறவில் கசப்பை உண்டாக்கி, அவர் மீது நான் வைத்திருந்த மதிப்பு மரியாதையைக் குலைத்து ஆற்றுவெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மண்குதிரை போலாக்கியது. எங்களுடைய தந்தை, மகன் உறவு அவ்வளவு தூரம் மாசு படிந்து போகும் என்பதை இப்போதும் என்னால் நம்பமுடியவில்லை.
அவராக என் வழிக்கு வந்துவிடுவார் என்ற எனது நம்பிக்கை நாளடைவில் தகர்ந்துவிட்டது. அவர் மீது ஏற்பட்ட சங்கடங்கள் எல்லாவற்றையும் அவருடைய இறப்பு இப்போது மிகுவிக்கிறதே அன்றி குறைக்கவில்லை. ஒருவேளை அம்மாதான் அவரைக் கையாளச் சரியான ஆளோ என்று ஆதங்கமாக இருக்கிறது இப்போது. இன்று அப்பாவுக்குப் பதினாறாவது நாள் காரியம். அக்கா அழுது கொண்டேயிருக்கிறாள். தேற்ற முடியாத இழப்பு அவளுக்கு. துக்கம் விசாரிக்க வருகிறவர்களும் என்னிடம் கடமைக்கு விசாரித்துவிட்டு அவளை நினைத்துப் பரிதாபப்படுவது போல் எனக்குத் தோன்றும். அவர்கள் எல்லோருக்கும் தெரியும் செத்துப்போனவர் எனது அப்பா என்கிற உறவுக்கு வெறும் பெயராக மட்டுமே நடமாடியவர் என்பது. இத்தனை இழவு விசாரிப்புகளும் என்னைப் பொறுத்தளவில் எப்போதோ உயிரற்றுப் போன ஒரு பெயரழிந்த மனிதருக்குத்தான்.
அம்மா இறந்ததும் அக்கா அப்பாவை தன்னுடன் வந்துவிடுமாறு எவ்வளவோ கேட்டுப் பார்த்தாள். என்ன நினைத்தாரோ ‘வரமாட்டேன்’ என்றுவிட்டார். அவளுடைய அத்தனைக் கெஞ்சல்களுக்கும் கண்ணீருக்கும் அவருடைய பொருட்படுத்தல் அந்த ஒரே ஒரு வார்த்தைதான். ‘வரமாட்டேன்’. மேற்கொண்டு கற்சிலையைப் பார்த்துக் கண்ணீர் மல்கி என்னவாகப் போகிறது என்று நினைத்தாளோ என்னவோ எழுந்துபோய்விட்டாள். அப்படி அவளுடன் போயிருந்தால்கூட இந்நேரம் இருந்திருப்பாரோ என்னவோ? யாருக்குத் தெரியும். அப்போதெல்லாம் அவருக்கும் எனக்கும் பெரிதாக எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. அதனாலேயே அக்கா கேட்டதற்காக அப்பாவைப் போகச் சொல்லி பெயருக்கு சொன்னேனே தவிர மனதிற்குள் இங்கேயே இருக்கட்டும் என்றுதான் நினைத்தேன்.
திருமணமாகி ஐந்து வருடமாக எங்களுக்குக் குழந்தை இல்லை. இதை அம்மாவும் அப்பாவும் பெரிதுபடுத்தாததுடன் மதுமிதாவை பக்குவமாக நடத்தியதும் எங்களுக்கு அவர்கள் கொடுத்த தைரியத்தையும் என்ன சொல்ல? வீட்டைப் பொறுத்தளவில் குழந்தை இல்லை என்கிற குறையே தெரியாமல் இருந்தோம். அம்மா இறந்து இரண்டு மாதம் கழிந்ததும் மது கர்ப்பம் தரித்தாள். ஒரே நேரத்தில் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் எங்களுக்குத் தந்த செய்தி அது. இதற்கிடையில் கரு தரித்த நாள் தொட்டே மருத்துவர் மதுமிதாவை முழுமையாக ஓய்வில் இருக்கச் சொல்லி வலியுறுத்தியதால் அவள் அம்மாவும் எங்களுடன் வந்து தங்கிக்கொண்டார். குழந்தை பிறக்கிற வரைக்கும் மதுமிதா அவர் கவனிப்பில் இருந்து நலமாகக் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
மதுமிதா முழுமையான ஓய்வில் இருந்த அந்தக் கால இடைவெளியில்தான் அப்பா புரியாத புதிராக மாறிப்போனது. நானும் அம்மாவின் இழப்பிலிருந்து மீண்டு வருவதற்கு கொஞ்ச காலம் பிடிக்கும் என்று ஆரம்பத்தில் கண்டும் காணாமல் விட்டிருந்தேன். முழுமையாக வீட்டையே துறந்தது போல் ஊர் சாவடியில், கடைத் தெருவில், கோயில்களில் என பொழுது போக்கிக் கொண்டிருந்தார். வீட்டிற்கு மூன்று வேளையும் சாப்பிட வருவார். இரவு தூங்க வருவார். மற்றபடி வேறு எந்தக் காரணத்திற்காகவும் வீட்டை அண்டுவதில்லை. சமயத்தில் ஓரிரு இரவுகள்கூட வருவதில்லை என்பது மதுமிதா சொல்லித்தான் என் கவனத்திற்கு வந்தது. அவரிடம் ஏதாவது கேட்கப் போய் வீட்டில் தேவையில்லாத சலசலப்பிற்கு வழிவகுக்கலாகாது என்று அவரிடம் எதுவும் கேட்காமல் இருந்துவிட்டேன்.
விவசாய வேலைகளிலாவது துணையாக இருப்பார் என்று எதிர்பார்த்தேன். அதுவும் இல்லாமல் நாள்பட நாள்பட அவருடைய நடவடிக்கைகள் அதீதமாக, எல்லை மீறிப் போகிறதோ என்கிற உணர்வு தோன்றும்படி நடந்துகொண்டார். எதுவும் கைமீறிப் போய்விடக்கூடாது என்பதற்காக அவரைக் கண்டித்து வைக்க முடிவெடுத்தேன். ஆனால் எங்களிருவருக்கும் இடையில் அப்படியான விசாரணைகளோ கண்டிப்புகளோ அதுவரை நடந்ததில்லை. எனக்கு ஒரு மாதிரி குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. வேறுவழியில்லை. வாய்விட்டுக் கேட்டால்தான் நோய்விட்டுப் போகும் என்று எனக்கு நானே அர்த்தமில்லாமல் சொல்லிக்கொண்டு அவரிடம் கேட்டுவிட்டேன்.
அன்று இரவு சீக்கிரம் வந்தவர் சாப்பிடக்கூட வராமல் நேராக அவரறைக்குச் சென்றார். நானும் பின்னாடியே சென்றேன். கட்டிலில் அமர்ந்து தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தார். நான் கதவைத் திறந்ததும் திரும்பிப் பார்த்தார். எந்தவிதமான உணர்ச்சியும் முகத்தில் இல்லை. இயல்பாக இருந்தார். போய்விடலாமா என்று யோசித்தேன். என்னையுமறியாமல் ‘அப்பா’ என்றழைத்தேன். என்ன என்பது போல் புருவமுயர்த்திப் பார்த்தார்.
‘என்ன சொல்றதுனே தெரிலீங்பா!’ மென்று விழுங்கிய போது வயிறு கலக்குவது போலிருந்தது.
‘ஏன் வீட்டுக்கே ஒழுங்கா வர மாட்டீங்குறீங்க? எங்க மேல எதாவது கோவமா?’ கேட்டுவிட்டேன். அப்பாடா என்று இருந்தது. ஆனால் ஒரு கால் பின்வாங்கித் தயாராக நின்றிருந்தது.
‘அதெல்லாம் ஒன்னுமில்லப்பா. நீ போய்த் தூங்கு’ பேச்சைச் சட்டென்று இடைமுறித்தார். எங்களுக்குள் இப்படியான அரைகுறை உரையாடல் இருந்ததில்லையாதலால் நான் பின்வாங்காமல் தொடர்ந்தேன்.
‘மது ஏதாவது சொன்னாளாங்பா?’
சட்டென்று என்னை நிமிர்ந்து பார்த்தவர், ‘யாரும் என்னைய எதுவும் சொல்லல. போய்ப் படுப்பா. விடியால பேசிக்கலாம்’ என்றார் மீண்டும் அதே இயல்பான முகத்துடன். ஆனால் அவர் குரல் என்னுள் அதிர்ந்தது போலிருந்தது.
நான் விடாமல், ‘தோட்டத்துக்கு அப்பப்ப வந்துட்டுப் போங்கப்பா. கொஞ்சம் மனசு மாறிக்கும். அம்மா போனதுலருந்து எனக்கே என்னமோ மாறித்தா இருக்குது. நம்ம கையில என்ன இருக்கு? போன அம்மாவ பத்தியே நெனச்சுட்டு இருந்தா எல்லாம் சரியாயிடுமா? நீங்கதாபா இந்த வீட்டுக்குப் பெரியவரு. நீங்கதா எங்களுக்கு நல்லது கெட்டது சொல்லி வழிநடத்தனும்’ என்றேன்.
குனிந்த தலை நிமிராமல் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டவர் நாளைக்குப் பேசிக்கொள்ளலாம் என்கிற மீண்டும் அதே பல்லவியை எடுத்தார். நான் வந்துவிட்டேன். எங்களுடைய உறவு எவ்வளவு தூரம் நேரடித்தன்மையோடு அதற்கு முன்பு வரை இருந்திருக்கிறது என்பதை அவர் முன் நின்ற அந்தக் கணத்தில் உணர்ந்தேன். அதே கணத்தில்தான் அந்த நேரடித்தன்மையே என் மீது மேலாதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது என்பதையும் உணர்ந்தேன். அத்துடன் எங்கள் இருவருக்கும் இடையில் இருந்த உயிர்ப்பான ஒன்றுதல்கள் ஒழிந்துபோயின.
அவரைப் பற்றிய வேறுபல செய்திகளும் என்னை நிம்மதியிழக்கச் செய்தன. இரவானால் யாரோ ஒரு பெண்ணுடைய வீட்டிற்குச் சென்று உணவருந்தி வருவதாகக் கேள்விப்பட்டேன். மானம் கெட்டு இப்படித் திரிவதோடு என் பெயரையும் சேர்த்துக் கெடுக்கிறாரே என்று வெளியில் செல்வதற்கே உடம்பு கூசியது. ஆத்திரத்தில் ஒருநாள் கேள்வி கேட்கப் போய் வாக்குவாதம் முற்றியது. எரிச்சல் கோபமாகி கடைசியில் வெறுத்துப் போய் வாக்குவாதத்தினூடே இப்படிச் சொன்னேன்:
‘நீ எங்க வேணாலும் போ. யார் வீட்ல வேணாலும் படுத்து எந்திரிச்சுட்டு வா. ஒழுங்கா தோட்டத்துக்கு வந்து சேரு. ஆத்தர அவசரத்துக்கு எங்கியும் வெளியில போக முடியல.’ இப்படி நான் சொன்னதும் பேச்சை நிறுத்திக்கொண்டு வெளியில் போய்விட்டார். அன்று இரவு வீட்டுக்கு வரவில்லை. அதன்பிறகு எங்கள் உறவு முகர்ந்துகூட பார்க்க முடியாத புளித்த பழைய சோறு போலானது. ஆரம்பத்தில் அவருக்கு வீட்டில் மூன்று வேளை உணவாக இருந்தது இந்த சண்டைக்குப் பின் ஒருவேளையாக மாறி பிறகு அதுவுமில்லாமல் போய் சாப்பிட வருவதேயில்லை என்றானது. இது அவருடைய இருப்பை எங்கள் அறிதலின் எல்லைக்கு அப்பாற் கொண்டு சென்றுவிட்டதாக மாற்றியது. தோட்டத்துப் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. கடைவீதி, ஊர் சாவடி, கோயில் என அவர் எந்தக் கவலையுமில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தார்.
அத்தோடு பிரச்சினை முடிந்தது என்று நினைத்தேன். ஆனால் மதுமிதாவின் வளைகாப்பன்று பிரச்சினை வேறுவழியில் முளைத்தது. அன்று மதுமிதாவிற்கு ஒன்பதாவது மாத வளைகாப்பு. நிகழ்வை வீட்டிலேயே வைத்திருந்தோம். ஊரில் எல்லோரையும் அழைக்க வேண்டுமென்று மதுமிதா ஆசைப்பட்டாள். அவள் ஆசைப்படியே அழைப்பு விடுத்து அழைத்த வீட்டிலிருந்தெல்லாம் பெண்கள் வந்திருந்தனர்.
அக்காவிடம் சொல்லி அப்பாவை வரவைப்பது அவள் பொறுப்பு என்று அவளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு தலைவலியிலிருந்து தப்பிக்கொண்டேன். அக்காவும் உறுதி சொல்லியிருந்தாள். வந்தாலும் அப்பா பட்டும்படாமல்தான் இருப்பார் என்று தெரியும். அறவே வராமல் போவார் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் அவர் அப்படித்தான் செய்தார். விசேசத்திற்கு வந்தவர்கள் எல்லாம் அப்பாவைப் பற்றி விசாரிக்கவே அவர்களிடம் பதில் சொல்லி மாளவில்லை. வந்துவிடுவார் வந்துவிடுவார் என்று சும்மா சமாளிக்க மட்டுமே சொல்லாமல் உண்மையிலேயே அவர் வந்துவிடுவார் என்றுதான் நம்பிக்கொண்டிருந்தேன்.
வளையல் போடத் தொடங்கும் நேரத்தில்கூட எதிர்பார்த்தேன். வரவில்லை. போனில் அழைத்தேன். தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாகக் கணினிக் குரல் சொன்னது. சுற்றிலும் இருந்த சொந்தபந்தங்களின் நடுவே சட்டென்று அநாதையாக நிற்பது மாதிரி இருந்தது. என் முகமே இருண்டு போயிற்று. என் முக மாற்றத்தைக் கண்ட அக்கா அருகில் வந்து, ‘எதுவும் நெனைக்காதடா தம்பி. மாமாவ தாட்டி விட்ருக்கேன். கூப்ட்டு வந்துருவாரு. அப்பா எதையும் மனசுல வச்சுக்குற ஆளில்லடா. வந்துருவாரு வந்துருவாரு’ என்றாள்.
இப்போது என்னைச் சமாதானப்படுத்துவதைவிட அவளுக்கு அப்பாவின் மரியாதை, கௌரவம் முக்கியம். அது என்னால் கெட்டுவிடக்கூடாது என்கிற சுதாரிப்புடனேயே என்னைச் சமாதானம் செய்கிறாள் என்பதும் எனக்குத் தெரியும். எத்தனையோ தருணங்களில் என் சுயக்கட்டுப்பாட்டைப் பேணிக்கொண்டு உறுதியோடு யார் முன்னும் இறுமாந்திருக்கிறேன். அப்போது என்னுள் இயல்பாய் எழுந்த அந்தச் சுயக்கட்டுப்பாட்டை உதறி ஒதுக்கிவிட்டு அப்பாவுக்கும் அவர் கௌரவத்திற்குமாய் சேர்த்து வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கும் அக்காவைத் திரும்பி ஒரு முறை முறைத்தேன். சடக்கென்று பின்வாங்கி பெண்கள் கூட்டத்தில் மறைந்துகொண்டாள்.
மதுமிதாவுக்கும் தெரிந்திருந்தது. என்னிடம் எதுவும் கேட்காமல் இருப்பதே நல்லது என்று அமைதியாக இருந்துகொண்டாள். நான் யாரிடமும் அதற்குப் பிறகு முகம் கொடுத்துப் பேசவில்லை. அப்போது அங்கிருந்த எல்லோர் முன்னிலையிலும் நான் இருந்த நிலையை இப்போது நினைத்தாலும் காய்ச்சல் வந்து படுத்திருப்பது போல இருக்கிறது. என்னுள் எழுந்த கோபத்தை அங்கு இருந்த யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் விசேசம் நடந்து முடியும் வரைக் காத்திருந்து எல்லோரும் சென்ற பிறகு விறுவிறுவென்று கடைவீதி நோக்கி நடந்தேன்.
மதிய நேரத்தின் வெம்மை குறைந்திருந்த பிற்பகல் நேரம். திருமணத்தன்று போட்டிருந்த பட்டு வேட்டி, பட்டு சட்டையுடன் அந்த பிற்பகல் சுளீர் வெயிலில் நடந்துபோனதை நினைத்தால்…. வழியில் ஒருவரும் என்னை நிறுத்தி என்னவென்று கேட்கவில்லை. என் மனதில் எழுந்த அவ்வளவு ஆங்காரமும் தன்னிலை மறக்க வைத்துவிட்டது. இருந்தாலும் சுளீரென்று அடித்த வெயிலின் வெம்மை, காலுக்குச் செருப்புகூட போடாமல் வந்திருந்தது என மனதின் சூட்டை மிகுவித்தன. வளைகாப்பு நிகழ்விற்கு வந்திருந்தவர்களின் முன்னிலையில் நான் அடைந்த அவமான உணர்வு காட்சியாக மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது. அவருக்கும் அப்படியொரு சூழ்நிலையில் ஒரு கேவலத்தைச் சந்தித்தால்தான் புரியும். சொல்லிச் சொல்லிப் பார்த்தால் கிளிப்பிள்ளைகூட நம் பேச்சைக் கேட்காது.
ரியாஸ் இருசக்கர வாகனத்தில் பின்னாலேயே வந்து வண்டியில் ஏறச் சொன்னான். வளைகாப்பை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றவனை மதுமிதா போனில் அழைத்து விசயத்தைச் சொல்லியிருக்கிறாள்.
‘எதா இருந்தாலும் வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்டா. வண்டியில ஏறு சொல்றேன்’ என்று அருகில் வண்டியை ஓடவிட்டவாறே சொல்லிக்கொண்டு வந்தான்.
கடைவீதியில் இருக்கும் ரியாஸுடைய கடைக்கு முன்னால்தான் எப்போதும் அப்பா அரட்டை அடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். மனதுக்குள் அவர் மகிழ்ச்சியாகச் சிரித்துப் பேசுவதான காட்சி எழுந்ததும் எரிச்சலடைந்து காலில் குத்திய கற்களையும் பொருட்படுத்தாமல் வேகமாக நடந்தேன். அந்த நேரத்தில் வெறிச்சோடியிருந்த கடைவீதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆட்கள் கடைகளில் நின்றுகொண்டிருந்தனர். வேறு யாரும் இல்லை. அவரும் இல்லை.
ஏமாற்றத்துடன் வியர்த்து விறுவிறுத்து நின்றிருந்த என்னை ரியாஸ் கையைப் பிடித்து அவன் கடைக்குள் அழைத்துச் சென்று உட்காரவைத்தான். கடைப் பையனைத் தண்ணீர் எடுத்துவரச் சொல்லிக் குடிக்கக் கொடுத்தான். நான் ஒன்றும் பேசாமல் வாங்கிக் குடித்துக் கொண்டேன். படபடப்பு குறைந்தது. இருந்தும் மனதில் வெந்தணலாக கோபம் வெந்துகொண்டிருந்தது. நிதானத்திற்கு வந்தவனிடம் ரியாஸ் ‘எதா இருந்தாலும் வீட்டுல வச்சுப் பேசிக்கலாம். நாலுபேரு முன்னாடி பேசறதுங்கறது நல்லாருக்காது. நம்ம குடும்பத்துக்கு பேரு கெட்டுப்போயிரும்டா’ என்று சமாதானப்படுத்தினான். அப்போது மதுமிதா ரியாஸுக்கு போன் செய்தாள். போனில் மதுதான் பேசிக்கொண்டிருக்கிறாள் என்பதும் போனின் மெல்லிய ஒலிப்பெருக்கி சத்தத்திலேயே அறிந்துகொண்டேன். என்னை வீட்டுக்கு அழைத்து வருவதாகச் சொல்லி அவளிடம் ரியாஸ் சொல்லிக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் முருகன் கோயிலில் அவர் இருப்பார் என்று மண்டையில் உரைக்கவே எழுந்து கோயிலை நோக்கி வெகுவேகமாக நடந்தேன். ரியாஸ் வண்டியில் துரத்திக்கொண்டு வந்தான்.
‘வழியில எல்லாரும் என்ன என்னனு கேப்பாங்க. வண்டியிலயாவது ஏறு’ என்று கெஞ்சி வண்டியைவிட்டு வழிமறித்து ஏற்றிக்கொண்டான். ஒரு பக்கமாக உட்கார்ந்துகொண்டேன். கோயில் வாசலில் கொண்டுவிட்டவன் வெளியிலேயே நின்று கொண்டான். நான் கோயிலுக்குள் நுழைந்தேன்.
கோயிலின் ஒரு மூலையில் நின்ற அரசமரத்தடி மேடையில் ஊரின் ஒருசில மூத்த பெருசுகளும் வேலைக்குப் போகாத சோம்பேறிகளும் உட்கார்ந்தும் படுத்தும் பேசிக்கொண்டிருந்தனர். ஒருசிலர் மத்தியானக் கிறக்கத்தில் அயர்ந்திருந்தனர். நான் போய் நின்றதுமே படுத்தபடி பேசிக்கொண்டிருந்த அப்பா எழுந்து உட்கார்ந்துகொண்டு ‘ஏப்பா’ என்று கேட்டார். அதே உணர்ச்சியில்லாத முகபாவனை. முகத்தில் சேற்றை அள்ளி வீசியது போல் இருந்தது எனக்கு. ஒன்றுமே நடவாததுபோல் முகத்தை வைத்துக்கொண்டவரை நோக்கி வாயில் வந்த நாலு கெட்ட வார்த்தைகளில் இரண்டைக் கேட்டுவிட்டு, ‘மனசுல என்னதான் நெனச்சுட்டிருக்கிற?’ என்றேன்.
நான் போட்ட சத்தத்தில் உறக்கத்திலிருந்த ஒருசில பெருசுகளும் எழுந்து உட்கார்ந்து பேந்தப் பேந்த முழித்துக்கொண்டிருந்தன. அந்தமாதிரி அவர்களுக்கு மத்தியில் பார்த்ததால் எனக்கு மேலும் பொங்கிக் கொண்டு வந்தது.
‘என்ன திண்ணக்க மயிரு இருந்தா இப்படி உக்காந்திருப்ப! நீ தான என்னயப் பெத்த? இல்ல தவுட்டுக்கு வாங்கீட்டு வந்தியா?’
வார்த்தைகள் எல்லை மீறுவதைப் புரிந்துகொண்ட பெருசுகளில் ஒருவர் எழுந்து என்னருகே வந்து பொறுமையாகப் பேசச் சொன்னார். என் ஆதங்கத்தைத் தொண்டை அடைக்கும் வேதனையில் அவரிடம் முறையிட்டேன். இடையிடையே ஏற்கெனவே உதிர்த்த அந்த இரண்டு கெட்ட வார்த்தைகளையும் மீண்டும் மீண்டும் சொன்னேன். அவரும் நான் சொன்னதை எந்தவொரு அதிர்ச்சியும் இல்லாமல் கேட்டுக்கொண்டு ‘உங்கப்பன் அப்புடி செய்ற ஆளில்லப்பா. நாங்க என்னனு கேக்கறோம். இப்பிடி அப்பனும் மகனும் மொகஞ்சுக்கிட்டு நின்னா நாலு பேரு தப்பா நெனப்பாங்க. நீ வீட்டுக்குப் போ. நாங்க சொல்லித் தாட்டி உடுறோம்’ என்று என்னைப் போகச் சொல்லிச் சொன்னார். அந்தப் பெருசு கோயில் வாசல் வரை வந்து நான் போகிறேனா என்று உறுதி செய்துகொண்டு மீண்டும் உள்ளே போனது. நான் இவர்களிடம் முறையிட்டுக் கத்திக் கொண்டிருக்கும் போது தலைக்கு வசமாக துண்டை மடித்து கையைத் தலைக்குத் தாங்கி சாவகாசமாக படுத்துக்கொண்ட அப்பாவை நினைத்ததும் இவர் என்ன இப்படி இருக்கிறார் என்று மனம் குழைந்துபோனது. அன்றிலிருந்து அவருக்கும் எனக்கும் உறவே அற்றுவிட்டது என்று தீர்மானித்துவிட்டேன். யார் அவரைப் பற்றி என்னிடம் விசாரித்தாலும் என் பதில் மௌனம்தான். மதுமிதா மட்டும் அடிக்கடி அப்பாவைப் பற்றி என்னிடம் விசாரிப்பாள்.
குழந்தை பிறந்த அன்று அப்பாவுக்கு அழைத்துச் சொல்லச் சொல்லி மாமனாரும் மாமியாரும் எவ்வளவோ வற்புறுத்தியும் நான் அசைந்துகொடுக்கவில்லை. மாமனார் நான் வழிக்கு வரமாட்டேன் என்று அவரே போன் செய்து தகவல் சொன்னதும் மருத்துவமனைக்கு உடனே வந்தார். இதுவே நான் சொல்லியிருந்தால் வந்திருக்கமாட்டார். என் மாமனார் என்பதால் உடனே வந்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டேன்.
வந்தவர் போய்க் குழந்தையைப் பார்க்கவில்லை. அறைக்கு வெளியில் மாமனாருடனேயே நின்றுகொண்டார். குழந்தையை செவிலி எடுத்துக்கொண்டு வந்து காண்பித்த போது இன்னும் தள்ளிப்போய் நின்றுகொண்டார். மாமனாரும் மாமியாரும் அழைத்தும் வரவில்லை. நான் இருப்பதால் சங்கடப்படுகிறாரோ என்னவோ என்று மாமியார் மதுமிதா கூப்பிடுவதாகச் சொல்லி என்னை அங்கே போகச் சொல்லிவிட்டார். நான் மதுமிதா இருக்கும் அறைக்குள் நுழையப் போனபோது குழந்தையை அவர் ஒதுங்கி நின்றிருக்கும் இடத்திற்கு மாமியார் எடுத்துச் சென்று காண்பித்தார்.
குழந்தையைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்தவர்களிடமெல்லாம் நன்றாகப் பேசினார். வந்தவர்கள், ‘பேரனுக்கு அப்டியே உங்க சாடை’ என்று சொன்னால் திரும்பி ஒருமுறை என்னைப் பார்ப்பார். பிறகு ஒன்றும் சொல்லாமல் அவர்களிடம் சிரித்து மழுப்பிவிடுவார். அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்ததால் ஒருவாரம் இருந்துவிட்டுத்தான் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் செல்ல அனுமதித்தார்கள். அந்த ஒரு வாரமும் அப்பா வருவார். குழந்தையைப் பார்க்க மாட்டார். வருகிற எல்லோரிடமும் உற்சாகமாகப் பேசுவார். அடிக்கடி என்னையும் திரும்பிப் பார்த்துக் கொள்வார். மருத்துவமனையில் இருந்த அந்த ஒரு வாரமும் இதே நாடகம்தான்.
ஒரு வாரம் கழித்து மதுமிதாவையும் குழந்தையையும் வீட்டிற்குக் கூட்டிப் போன மறுநாள் அப்பா ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிற முருகன் கோயில் தாண்டியுள்ள தோட்டமொன்றின் கிணற்றுமேட்டில் வாயில் நுரை தள்ளியவாறு இறந்துகிடந்தார். அதற்கு ஒரு மணி நேரம் முன்புதான் எனக்கு அலைபேசியில் அழைத்திருந்தார். தவறிய அழைப்புகள் நிறைய ஆனதும் நான் எடுக்கமாட்டேன் என்று உறுதிப்படுத்தியிருப்பார் போல. ரியாஸுக்கு அழைத்திருக்கிறார். நிறையப் பேசியிருக்கிறார். தன்னிடம் கடன் வாங்கியுள்ள ஊர்க்காரர்கள் சிலரைச் சொல்லி அவர்கள் ஒழுங்காக வட்டி கொடுப்பதில்லை என்பதையும் சொல்லியிருக்கிறார். அந்த வரவு செலவு கணக்கு விவரங்கள் அடங்கிய நோட்டு அவர் அறையில் இருப்பதையும் பேச்சினூடே சொல்லியிருக்கிறார்.
‘தோட்டத்தில் மிளகாய் வேண்டாம் மக்காச் சோளம் போடச் சொல்லு அவன. இப்போ மக்காச் சோளம் நல்ல விலைக்குப் போகிறது’ என்றிருக்கிறார். அவர் பேசியதன் ஒலிப்பதிவை ரியாஸ் காட்டும்போது எந்தவொரு உணர்ச்சியும் இல்லாமல் அன்று கோயிலில் அவர் எப்படி முகத்தை வைத்திருந்தாரோ அதேபோல் வைத்துக்கொண்டேன். அவனிடம் சொல்லி வைத்தாற்போல அரை மணி நேரம் பேசியிருக்கிறார். அடுத்த அரை மணி நேரம் கழித்துக் கிணற்று மேட்டில் கிடந்திருக்கிறார்.
முந்தைய இரவு குழந்தையை வீட்டில் வந்து பார்த்துப் போயிருக்கிறார். மதுமிதாவும் அவள் அம்மாவும் இருந்திருக்கிறார்கள். யாரிடமும் எதுவும் பேசாமல் அவர் தன் வாழ்நாள் முழுவதும் அணிந்திருந்த ஒற்றை மோதிரத்தை குழந்தையிடம் வைத்துவிட்டு அவசர அவசரமாகக் குழந்தையைக் கொஞ்சிவிட்டுப் போயிருக்கிறார். நான் வருவதற்குள் போய்விட வேண்டும் என்று நினைத்திருப்பார். நான் தோட்டத்திலிருந்து வந்ததும் மது என்னிடம் சொன்னாள். நான் அவளிடம் சொன்னேன் ‘அப்புடி அவசரமா வந்து பாக்கோணும்னு என்ன கெடக்குது? பொறுமையா நாளைக்கு நானு இல்லாதப்ப வந்து பாத்துட்டுப் போக வேண்டியதுதான. எழவு வந்து தூக்கிட்டுப் போகப் போகுதா நாளைக்கு?’ என்று.
ஆ
இருசக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருக்கிற இந்த சமயத்திலும் ஏன் கோயிலுக்குப் போக வேண்டும் என்றுதான் இருந்தது எனக்கு. வண்டியைத் திருப்பிவிடலாமா என்று கால் பரபரக்கிறது. பின்னாடி உட்கார்ந்திருக்கும் கணவனிடம் வேறு ஏதாவது காரணத்தைச் சொல்லிக்கொள்ளலாம். இந்தக் கடைவீதியின் நெருக்கடிகளில் வேறு பார்த்துப் பார்த்து ஓட்ட வேண்டியதாக இருக்கிறது. உடனே வளைத்துப் பின்னாடி திருப்ப வேண்டுமென்றால் ஆகாத காரியம். கொஞ்ச தூரம் போய் வேண்டுமானால் தாராளமாக இடம் இருக்கும். லாரியே திரும்பலாம். அங்கு அவ்வளவு இடம் விலாசமாக இருக்கும்.
இன்றோடு மாமா இறந்து ஆறு மாதம் ஐந்து நாள் ஆயிற்று. இந்த ஆறு மாதமும் வீட்டில் தினமும் மாலை சூடமேற்றச் சொல்லியிருந்தார் சோதிடர். மாமனார் உயிர் போன நேரத்தைத் தோராயமாகச் சொல்லி சோதிடரிடம் சென்று இறந்தது நல்ல நேரமா என்று பார்க்கையில் அது கெட்ட நேரமாக இருந்துவிட்டது. ஆறு மாதமும் வீட்டில் சூடத்தை ஏற்றி ஆறு மாதம் முடிந்ததும் ஆற்றுக்கு வள்ளுவரை அழைத்துச் சென்று பிண்டம் கரைத்துவரச் சொன்னார். நான்கு நாட்களுக்கு முன்பு தான் கணவன் வள்ளுவர் ஒருவரை ஆற்றுக்கு அழைத்துச் சென்று பிண்டமெல்லாம் கரைத்து சாங்கியமெல்லாம் செய்து முடித்துவிட்டு வந்தார். அதற்கும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே என்னைக் கோயிலுக்குப் போகச் சொல்லி அம்மா நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார். குழந்தை பிறந்த பிறகு எந்தக் கோயிலுக்கும் போகவில்லை. கையோடு இப்போதே போய் வா என்று வற்புறுத்தி இப்போது அனுப்பி வைத்திருக்கிறார். இதற்கு முன்பும் நிறையத் தடவை இந்த முருகன் கோயிலுக்கு போயிருந்தாலும் இப்போது ஒருவிதத் தயக்கம் முன்னிற்கிறது. அம்மாவிடம் என் தயக்கத்தைச் சொன்னதும் அப்படியெல்லாம் நினைக்கக்கூடாது என்று விடாப்பிடியாக இன்று கிளம்பவைத்துவிட்டார். குழந்தை வேண்டி கோயில் கோயிலாக ஏறி இறங்கிய போது வராத அயர்ச்சி இப்போது ஏற்படுகிறது.
கணவனுடைய வண்டி பழுதானதால் பழுது பார்க்கக் கொடுத்திருந்தார். என்னுடைய ஸ்கூட்டியைத் தான் இன்று எடுத்துக்கொண்டு பக்கத்து ஊருக்கு ஏதோ வேலையாகப் போய்விட்டு வந்தார். அவர் வந்ததும் ‘நான் கோயிலுக்குக் கிளம்புகிறேன். வண்டி வேண்டும்’ என்றதும் நானும் வருகிறேன் என்று சொல்லி கோயிலுக்கு உடன் கிளம்பி வந்துவிட்டார். அவர் அப்படி வருகிறேன் என்று கிளம்பியதும் என்னுள் எழுந்த இனம் புரியாத ஆசுவாசத்தைப் பார்த்து எனக்கே வியப்பாக இருந்தது. இவர் வரவில்லையென்றால் உறுதியாகப் பாதியிலேயே கோயிலுக்குப் போகாமல் திரும்பி வந்திருப்பேன்.
கடைவீதியில் வண்டி மெதுவாய்ப் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடியான கடைவீதியில்தான் இந்த ஸ்கூட்டியை நான் நன்றாக ஓட்டிப் பழகியது. மக்கள் நெருக்கடியோடு இப்போது சினிமாப் பாடலின் ஒலியும் சேர்ந்துகொண்டு மண்டையைக் குடைகிறது. எரிச்சலாக இருக்கிறது. விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்டிருக்கும் சிலைக்கு சினிமாப் பாடல்களைக் கொண்டு அர்ச்சனை செய்துகொண்டிருக்கிறார்கள். அடுத்த வாரம் ஊர்வலம் என்கிற பெயரில் ஊரையே கலங்கடிப்பார்கள். போதாக் குறைக்கு நீர்நிலைகளையும் மாசுபடுத்திக் கலங்கடிப்பர். ஊர்வலத்தின் போது பெண்களும் குழந்தைகளும் இந்தப் பகுதிக்குள் எட்டிப் பார்க்கக்கூடாது. போதையில் ஆட்டமும் பாட்டமும் காணவே சகிக்காது. ஆகாவழிகள். ஊர்வலத்தில் இவர்கள் அடிக்கிற கூத்தில் விநாயகரே நெளிந்துகொண்டு கூட்டத்தில் குதித்து வெளியேறி ஓடிவிடலாம் என்று நினைப்பார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். கண்றாவியாக இருக்கும் கடைவீதியில் கால் வைக்க முடியாது அப்போது.
ஒரு இடத்தில் கூட்டமாக நின்றிருக்கின்றனர். எல்லோர் முகத்திலும் ஒரு மாதிரி பரபரப்புத் தொற்றியிருந்தது. சாலையை மறித்துக் கூட்டம் நின்றிருந்ததால் வண்டிகள் போகவும் முடியாமல் வரவும் முடியாமல் இருக்கின்றன. என்னை ஓரமாக நிறுத்தியிருக்கச் சொல்லி கணவன் இறங்கி என்னவென்று பார்த்துவரப் போகிறார். கூட்டத்திற்குள் நுழைந்து பார்த்தவர் உடனே போன வேகத்திலேயே வெளியே வந்து அருகில் இருக்கும் ரியாஸ் அண்ணனுடைய கடைக்குள் நுழையப் போகிறார். நான் கையைக் காட்டி என்ன என்று கேட்க என் மொபைலுக்கு அழைத்து அங்கிருக்கிற கூட்டத்தைத் தாண்டிப் போய் நிற்கச் சொல்லிச் சொல்கிறார். இப்போதும் ஒன்றுமில்லை திரும்பி வீட்டுக்கே போய்விடலாம். வீட்டுக்குப் போய் அவரிடம் போன் போட்டுச் சொல்லிக் கொள்ளலாம். தலைவலி அது மாதிரி ஏதாவது சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அம்மாவைச் சமாளிப்பதென்றால் ஆகாத காரியம். ஒரு வாரமாகக் கோயிலுக்குப் போகச் சொல்லி அம்மா செய்த நச்சரிப்பை நினைக்கையில் வீட்டுக்குத் திரும்பிப் போவதை நினைத்தால் உண்மையாகவே வராத தலைவலி வந்துவிடும். எனக்கு முன்னால் நிற்கிற லாரிக்காரன் ஹாரன் ஒலி எழுப்பிக்கொண்டே லேசாக வண்டியை முன்னகர்த்துகிறான். லாரியில் அரிசி மூட்டைகளும் அதை ஏற்றி இறக்கும் தொழிலாளர்களும் சுமைகளாக அமர்ந்திருக்கின்றனர். கூட்டம் ஒதுங்கி வழிவிடவே லாரி ஓட்டுநர் சற்று வேகமாக நகர்த்துகிறான். நான் அதை ஒட்டியவாறே வண்டியை ஓட்டி கணவன் சொன்ன இடத்துக்கு போய் நிறுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. கூட்டம் கூடி நின்றிருந்த இடத்தைக் கடந்து வரும்போதுதான் பார்த்தேன். அங்கே இருந்த உணவுக் கடையில் எல்லாப் பொருட்களும் தாறுமாறாகக் கிடக்கின்றன. சோற்றுப் பாத்திரங்களெல்லாம் உருண்டு போய் சிதறுண்டு கிடக்கின்றன. பிரியாணியும் கறியும் கடைக்குள் கால் வைக்க முடியாத அளவுக்குச் சிதறி பார்க்கவே அலங்கோலமாக இருக்கிறது. அருகில் நின்றிருந்த ஒருவரை அழைத்து விசாரிக்க, ‘கடைய அடிச்சி ஒடச்சுட்டாங்கமா’ என்கிறார் அவர்.
நான் ‘யாருங்க பண்ணா?’ என்று கேட்க வாயெடுப்பதற்குள் கணவன் வந்துவிட்டார். வண்டியின் ஓட்டத்திலேயே ‘யாருங்க? என்னாச்சு?’ என்றேன்.
‘ஓட்டல் கடைய அடுச்சு ஒடச்சிருக்கறானுங்க. லூசுப் பயலுக.’
‘யாருங்க?’
‘கடையில பீப் கறி வித்துட்டிருந்தானுகளாமா. இவனுக போய் இங்க இதெல்லாம் விக்கக்கூடாதுனு சத்தம் போட்ருக்கானுங்க. அவரும் சரி சரின்னுட்டு அடுத்த நாள் மறுபடியும் கடையத் தொறந்து வச்சிருக்கிறாரு. இன்னைக்கு திடுதிடுனு உள்ள புகுந்து அடுச்சு நொறுக்கிருக்கிருக்கானுக.’
‘யாருங்க? நம்மூர் ஆளுகளா?’
‘நம்மூர்க்காரனுகளுக்கு எங்க இருந்து இவ்வளவு தைரியம் வரப்போகுது. அடுச்சு நொறுக்கனதுல நம்மூர்க்காரனுகளும் இருந்திருக்கிறானுக. மெயினான ஆளுகெல்லாம் வெளியூர்க்காரனுகதான். அவனுக ஊர்ல போய் பன்னாட்டுப் பண்ன வேண்டியதுதான. எல்லாம் இந்த விநாயகர் சதுர்த்திய வச்சு உடான்ஸ் உட்டுட்டுத் திரியறானுங்க பைத்தியக்காரனுக. இவனுக ஊர்வலம் போய் நாட்டக் காப்பாத்தப் போறானுக பாரு. கலவரம் பண்ணாம இருந்தாப் பத்தாது.’
கொஞ்ச நேரம் கழித்து ‘கடைவீதிக்குள்ள அந்த ஓட்டல் கடை பாய தொரத்தி தொரத்தி அடுச்சுருக்கானுங்க. வயசானவர்னுகூடப் பாக்காம பாவிப் பையனுங்க. எல்லா அழியறதுக்குக் கேடு காலம்’ என்றார். அவர் குரலில் அதிர்ச்சி தெரிகிறது. ரியாஸ் அண்ணனும் இன்னும் சிலரும் அந்தப் பெரியவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். மேலும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றிருப்பதாக ரியாஸ் அண்ணன் கடையில் இருந்த பையன் சொன்னானாம். ஆனால் என்னுள் இருந்ததோ வேறு. கடந்த ஆறு மாத காலம் மாமா இறந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் மனம் உழன்று தவிக்கிறது. அந்த அவத்தையை எப்படிப் போக்குவது என்று தெரியாமல் நானே விழித்துக்கொண்டு இருக்கிறேன். மனம் அடைந்திருக்கிற உளைச்சலில் இதையெல்லாம் கவனிக்க முடியவில்லை இப்போது! அதனால் நான் மேற்கொண்டு கடைவீதி சம்பவத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை.
கோயிலுக்குள் இருவரும் நுழைந்தோம். இந்த முருகன் கோயிலை நினைத்தாலே எனக்கு எப்போதும் மாமா ஞாபகம்தான் வருகிறது. அதோ அந்த மூலையில் இருக்கும் அரசமர மேடையில்தான் எப்போதும் படுத்திருப்பார். நானே ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். வீட்டில் மாமா இல்லாத போது அவர் பேச்சை எடுத்தாலே முருகன் கோயில் அரசமர மேடையில் அவர் படுத்திருப்பதுதான் மனதில் காட்சியாக வந்து போகும். அதனால் அவர் எப்போதும் அந்த மேடையிலேயே இருப்பார் என்று மனதில் பதிந்துவிட்டது. இப்போது அந்த அரசமர மேடையில் மயில் ஒன்று தோகை விரித்து நின்றிருக்கிறது. வானம் கருக்கல் கொண்டு மழை வருவது போல் காலையில் இருந்தே போக்குக் காட்டி வந்ததால் மயிலும் ஏமாந்து தோகை விரித்து நிற்கிறது மழை வரும் என்று.
எண்ணி நான்கே பேர்தான் கோயிலில் இருந்தனர். அர்ச்சகர் திரையிட்டு அலங்காரம் செய்துகொண்டிருந்தார். பிரகாரத்தைச் சுற்றி வந்தோம். மனம் மாமாவின் ஞாபகத்தில் உழன்றுகொண்டிருக்கிறது. அன்றாடம் கசங்காத வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் மாமா வெளியில் கிளம்பிச் சென்ற காட்சிகள் ஒவ்வொன்றும் தேங்கிக்கிடந்த நினைவிலிருந்து எழுகின்றன. தினமும் காலையில் சாப்பிடுகிறாரோ இல்லையோ குளித்துவிட்டு புதிய உடைகளை மாற்றிக்கொண்டுதான் வீட்டை விட்டு வெளியேறுவார். அத்தை இறந்த பிறகும்கூட அவர் இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை. அன்றும் அதேபோல்தான் காலையில் வீட்டிற்கு வந்தவர் குளித்துவிட்டு கசங்காத வெள்ளை உடைகளை உடுத்திக்கொண்டு சென்றிருக்கிறார். அம்மாதான் பார்த்திருக்கிறார். பிறகு நண்பகலில் கிணற்று மேட்டில் கிடந்திருக்கிறார். திரும்பி மீண்டும் அரசமர மேடையைப் பார்க்கிறேன். மயில் இப்போது தோகையை மடக்கிக் கொண்டு கோயில் மதில் மேல் நின்றிருக்கிறது. மேடையில் மயில் இல்லாதது மனதுக்கு ஒரு பெருங்குறையாகக் காட்சியளிக்கிறது.
இந்த ஊரில் எல்லோருக்கும் மாமாவைத் தெரியும். இருந்தாலும் மாமாவுக்கு நெருக்கமான நண்பர் என்றால் முகமது அக்மல் மட்டும்தான். ரியாஸ் அண்ணனின் அப்பா அவர். கடந்த சில வருடங்களாகவே மிகவும் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கிறார். அவர் மகன் ரியாஸும் என் கணவனும் தந்தைகளைப் போலவே நெருங்கிய நண்பர்கள். படுக்கையில் கிடந்தாலும் மாமா அவரை அடிக்கடி சென்று பார்த்து பேசி வருவார். இறப்பதற்கு முந்தைய இரவுகூட மாமா அவரைப் பார்க்கச் சென்று வெகுநேரம் இருந்து பேசிவிட்டு வந்திருக்கிறார். மாமா இறந்ததை அவருக்குத் தெரியப்படுத்தியிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
இந்த முருகன் கோயில் ரியாஸ் அண்ணனுடைய குடும்பத்திற்குச் சொந்தமான இடத்தில்தான் கட்டப்பட்டுள்ளது. முருகனுக்கும் ரியாஸ் அண்ணனுடைய குடும்பத்துக்கும் நெருக்கமான பிணைப்பு இருப்பதாக என் கணவன் அடிக்கடி சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஒரு காலத்தில் இந்த இடமே பெரிய விவசாய நிலமாக இருந்திருக்கிறது. முகமது அக்மலின் அப்பா, ரியாஸ் அண்ணனின் தாத்தா இந்த இடத்தை விலைக்கு வாங்கி வீடு கட்ட குழி தோண்டியிருக்கிறார். அப்போது இந்த முருகன் சிலை வெளிப்பட்டிருக்கிறது. ஊர்க்காரர்கள் தெய்வாதீனமாகக் கிடைத்த முருகன் சிலையை இந்த ஊரிலேயே பிரதிஷ்டை செய்து கோயில் கட்டிவிடலாம் என்று முடிவெடுக்கின்றனர். எந்த இடத்தில் கட்டலாம் என்று பேச்சு வரும்போது ரியாஸ் அண்ணனுடைய தாத்தா தன்னுடைய இடத்திலேயே கட்டிக்கொள்ளுங்கள் என்று நிலத்தைக் கொடுத்துதவியதோடு கோயில் கட்டுவதற்கான முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். ரியாஸின் அப்பா முகமது அக்மல் காலத்தில் முருகன் கோயிலைக் கொஞ்சம் விரிவுப்படுத்திக் கட்டினார்கள் ஊர்க்காரர்கள். அப்போது அவர் முருகனுக்கு வேல் செய்து தந்திருக்கிறார். ரியாஸுடைய அப்பா மாமாவிடம் முருகன் எங்கள் வீட்டு மருமகன் என்று அடிக்கடி பெருமை பொங்கச் சொல்வாராம். அதற்கேற்றாற் போலத்தான் ஊருக்குள் முஸ்லீம்களும் இந்துக்களும் இப்போதும் மாமன், மச்சினன்கள் போலப் பழகி வருகிறார்கள்.
அர்ச்சகர் திரையை விலக்கி திருப்புகழை ஓதுகிறார். வழிபாட்டை நடத்தி முடித்து வெளியே நின்றிருந்த எல்லோருக்கும் தீபாராதனை காட்டுகிறார். கண்மூடி முருகனை வணங்கி நிற்கிற இந்நேரத்தில் வெள்ளை உடுப்புகளுடன் வெளியில் கிளம்பிச் செல்லும் மாமாவின் புறப்பாட்டுக் காட்சிகளை மனதிற்குள் வருவித்துப் பார்க்கிறேன். எங்களுக்குத் திருமணமான இந்த ஐந்தாறு வருடங்களில் எனக்கும் மாமாவுக்கும் சொல்லிக்கொள்ளும்படியான எந்த உரையாடலும் பெரிதாக இருந்ததில்லை. என்னவென்றால் என்ன, கேள்விக்குப் பதில் என்பது தான் எங்களுக்குள் இருந்த அதிகபட்சப் பேச்சுவார்த்தைகள். அதனால் கணவனுக்கும் அவருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டுக்குப் பிறகு எளிமையாக என்னால் எங்களுக்குள் இருந்த அந்த அதிகபட்சத்தையும் புறக்கணிக்க முடிந்தது. அவரே ஓரிரு முறை வலிய வந்து பேசினார். நான் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. உண்மையைச் சொல்லப் போனால் என் பங்குக்கு எப்போது அவரை விளாசலாம் என்று காத்திருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். முன்பு மூன்று வேளையும் தவறாமல் சோற்றுக்கு வருகிறவர் கணவனுடன் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு மதியம் ஒருவேளை மட்டும் வந்து போய்க் கொண்டிருந்தார். அப்படி ஒருமுறை மதியம் சாப்பிட வந்தவரிடம் என் அம்மா ஏன் காலையில் சாப்பிட வருவதில்லை என்று கேட்டார். அவர் ஏதேதோ சொன்னார். வயிற்றுக்கு ஒத்துக்கொள்வதில்லை, பசிப்பதில்லை அப்படி இப்படியென்று.
நான் இதுதான் தருணமென்று, ‘எப்பப் போனாலும் சோறு போட ஊருக்குள்ள இருக்காளுக தொறந்து வச்சுக்கிட்டு. ஊட்டிக்கூட விடுவாளுக. இந்தூட்டுச் சாப்பாட்டச் சாப்ட்டா வாயிக்குப் புடிக்குமா?’ என்று அமுக்கி வைத்த நாயனத்தை எடுத்து ஊதினேன். நான் சொன்னதைக் கேட்டதும் வெடுக்கென்று எழுந்து ஒரு கணம், ஒரே ஒரு கணம் என் கண்களை நேராகப் பார்த்துவிட்டு – அர்த்தமாகப் பார்த்த அந்தப் பார்வையில் எனக்குக் கோபம் மட்டும் தெரியவில்லை - சட்டென்று வெளியேறி விட்டார். வட்டிலில் போட்ட சோற்றில் அவர் சுண்டு விரல் நுனி பட்டிருக்கவில்லை. அவ்வளவு ரோசம். அம்மா பின்னாடியே சென்று கூப்பிட்டுப் பார்த்தார். ‘இதோ வந்தர்றங்க’ என்று மட்டும் சொல்லி நிற்காமலேயே போய்விட்டார். அதன்பிறகு மதிய வேளையும் அவருக்கு இல்லாமல் போய்விட்டது. சோறு மிச்சம் என்று நினைத்துக்கொண்டேன். இந்தச் சம்பவம் எனக்கும் என் அம்மாவுக்கும் மட்டுமே தெரிந்த ஆனால் என் கணவனுக்கு இன்று வரை தெரியாத ஒரு ‘சாதாரண’ ரகசியமாக எங்களிருவருக்குள்ளேயே நின்றுவிட்டது.
எனது வளைகாப்பன்றும் மாமா நிகழ்விற்கு எட்டிப்பார்க்கவில்லை. என் நாத்தனாரும் அவள் கணவரும் போய் கூப்பிட்டிருக்கிறார்கள். வரமாட்டேன் என்று அப்போதே சொல்லியிருக்கிறார். வந்து என்னிடம் சொன்னார்கள். நான் ‘சும்மா அவர் மேல இருக்கற கோவத்துல சொல்லீருப்பாரு. அதெல்லாம் வந்துருவாரு’ என்றேன். ஆனால் எனக்குத் தெரியும் அவர் வரமாட்டார் என்று. அதே போல் வரவில்லை.
குழந்தை நல்லபடியாகப் பிறந்து ஒரு வாரம் கழித்து நான் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்ததும் அன்றைய நாள் இரவு குழந்தையைப் பார்க்க வந்தார் மாமா. வந்தவர் உட்காரக்கூட இல்லை. தொட்டிலில் இருந்த குழந்தையை நின்றுகொண்டே கொஞ்சினார். நான் கட்டிலில் கால்களை நீட்டி அமர்ந்திருந்தேன். என்னை அவர் பொருட்படுத்தவில்லை. கொஞ்சிக்கொண்டே இருந்தவர் ஞாபகம் வந்தவர் போல் கையில் போட்டிருந்த தன் தங்க மோதிரத்தைக் கழற்றி குழந்தையின் நெஞ்சில் வைத்துவிட்டு என்னை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தார். நான் சிரிக்க முயன்றேன். ஆனால் அவர் உண்மையிலேயே சிரித்தார். அம்மா அவரை உட்காரச் சொல்லிப் பார்த்தார்; சாப்பிடச் சொல்லிச் சொன்னார். பதிலுக்கு ‘இதோ வந்தர்றங்க’ என்று மட்டும் சொல்லி அவசரமாகக் கிளம்பிவிட்டார். அன்று இரவு வீட்டிற்கு வரவில்லை. ஆனால் எனக்குத் தெரிந்திருக்கவில்லை எப்போதும் அவர் வர மாட்டார் என்று.
கோயிலில் வேறு யாரும் இல்லை. அர்ச்சகர் மட்டும் இருந்தார். சிறிது நேரம் அமர்ந்திருக்கலாம் என்று அமர்ந்தது. கணவன் தலை குனிந்தவாறே போனை நோண்டிக் கொண்டிருக்கிறார். இணைய உலகத்தில் அலைமோதிக் கொண்டிருப்பார். கவனம் இங்கு இல்லை. கருவறையில் முருகன் குழந்தை வேலராக அமர்ந்திருந்தார். முகம் பொன்னிற ஒளி வெள்ளத்தில் அழகாகத் துலங்கியிருக்கிறது. அர்ச்சகர் பொருத்தமாக அலங்காரம் செய்திருக்கிறார். இதே குழந்தை முகம் கம்பீரமான இளைஞனான பிற்பாடு எப்படி இருக்கும்? வீரம் பொருந்தியிருக்குமோ? இளமைப் பொலிவோடு திமிரும் தோள்களோடு செம்மாந்திருப்பான் அந்த முருகன்! நான் அப்படியொரு முருகன் சிலையை எங்கேயுமே பார்த்ததில்லை. ஆறுபடை வீடுகளில் ஏதாவது ஒரு படைவீட்டில் அப்படியொரு முருகன் இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. அங்கெல்லாம் போய்ப்பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.
ரொம்ப நேரம் ஆயிற்று. அரசமரம் இன்னும் சிறிது நேரத்தில் சூழப்போகும் இருட்டில் மேலும் தனிமை கூடிப்போய் நின்றிருக்கும் என்று தோன்றுகிறது. கோயிலின் மின்சார விளக்குகளின் வெளிச்சம் தீண்டப்படாமல் கும்மிருட்டில் சலனமில்லாமல் நின்றிருக்கும் அந்த மரத்தை மனதில் எழுப்பிப் பார்த்தேன். அந்த மரத்தின் கிளையில் ஒரு மின்சார விளக்கை மாட்டினால் அந்த இடமே பிரகாசமாக இருக்கும். அதற்குள் யாரோ போன் செய்யவே என்னை வேகமாகக் கிளம்பச் சொல்லி பரபரப்பாக என்னை எதிர்பார்க்காமல் கோயிலுக்கு வெளியே போகிறார் கணவன். எனக்கும் மெல்லிய அவசரம் தொற்றவே நான் எழுந்துகொண்டு கொடிமரம் இருக்கும் இடத்தில் நெடுஞ்சாணாகத் தரையில் விழுந்து எழுந்தேன். கோயிலுக்கு வெளியிலிருந்து மயிலின் அகவல் கேட்கிறது. உடம்பு சிலிர்த்து மயிர்க்கூச்செரிகிறது.
வெளியே வந்தோம். அவர் எந்தவொரு சலனமும் இல்லாமல் இயல்பாக என்னுடன் இருந்தார். கோயிலுக்குப் போய்விட்டுத் திரும்பும்போது ததும்புகிற பக்திதான் அவர் முகம் முழுக்க இப்போது ஒட்டிக்கொண்டிருக்கிறது. போன் வந்ததால் கூடவே லேசான பதற்றமும். ஆனால் எனக்கு தளும்புகிற குடம் போல கோயிலுக்குள் நுழைந்தேன். இப்போது குடத்திலிருந்து சிந்திச் சிதறிய துளிகள் போல் உணர்கிறேன்.
கடைவீதியில் நடந்த பிரச்சினையைச் சொல்லிக் கொண்டு வருகிறார் என்னிடம். ரியாஸ் அண்ணனும் இன்னும் சிலரும் போய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு வந்ததும் ரியாஸ் அண்ணனுக்கு போன் போட்டு யாரோ மிரட்டியிருக்கிறார்கள். ரியாஸ் அண்ணன் தேவையில்லாமல் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு அவர் கடையை அவர்கள் ஏதாவது செய்துவிடப் போகிறார்கள் என்று மனம் பதைத்தது. கணவனிடம் சொன்னேன். ‘ஒன்றும் ஆகாது சும்மா பம்மாத்து காட்றானுங்க. நாங்கெல்லாம் இருக்கறோம்ல. பாத்துக்கலாம்’ என்கிறார்.
ஸ்கூட்டியைப் பின்னகர்த்தி எஞ்சினை ஓடவிட்டு தார் சாலையின் மேல் ஏற்ற முன்னகர்த்திய போது ஏதோ உள்ளுணர்வால் தூண்டப்பட்டது போல் கோயிலைத் திரும்பிப் பார்க்கிறேன். அந்த மயில் அருகிருந்த தோட்டத்திலிருந்து பறந்து வந்து கோயிலுக்குள் தரையிறங்குவது அந்தி மங்கலில் நன்றாகத் தெரிகிறது. இப்போது அந்த மயில் அரசமர மேடையின் இருள் மூலையில் தோகையை விரித்துக்கொண்டு மழைக்காகக் காத்திருக்கும்.
இ
கோயிலுக்குப் போய்விட்டு வந்ததற்கு அடுத்த நாளின் அதிகாலை நேரம். செந்தில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறான். மதுமிதா கண்களை மூடியிருந்தாலும் தூக்கம் வராமல் திரும்பித் திரும்பிப் படுத்துக்கொண்டிருந்தாள். நள்ளிரவில் குழந்தை அழுததால் பால் கொடுக்க எழுந்தது. வழக்கம் போல் செந்தில்தான் முதலில் எழுந்திருந்தான். அதன் பிறகு மதுமிதாவை எழுப்பி பாலூட்டச் சொன்னான். பாலூட்டி முடிந்த பிற்பாடு அவனே குழந்தையைத் தூங்க வைத்து அவனும் தூங்கிவிட்டான். இன்னும் மதுமிதாவிற்குத் தூக்கம் வந்தபாடில்லை. விடிவதற்கு இன்னும் இரண்டு மணி நேரமாவது இருக்கும். எழுந்து அருகில் தொட்டிலில் கிடக்கும் குழந்தையைத் துணியை விலக்கிப் பார்த்தாள். குழந்தை நன்றாக உறங்குகிறான். ஒரு பத்து நாளாகவே இப்படித்தான் இரவில் எதற்காகவாவது விழித்தால் அவ்வளவுதான். அந்த இரவு சிவராத்திரிதான். எழுந்து தண்ணீரைக் குடித்தாள். வாய் உலர்ந்து போனதற்கு இன்னும் குளிர்ந்த நீரைக் குடித்தால் நன்றாக இருக்கும் என்றிருந்தது. வரவேற்பறைக்கு வந்து குளிர்சாதனப் பெட்டியிலிருந்து நீரை எடுத்துக் குடித்துவிட்டு வந்தாள். தொண்டைக்கு இதமாக இருந்தது. வந்து படுத்துக்கொண்டாள். கடந்த பத்து நாட்களின் இரவுகளும் இப்படித்தான் கழிகிறது என்று மனம் எண்ணியதும் சோர்வாக உணர்ந்தாள். அப்படியே தூக்கம் வந்து கண்களை அப்பிக்கொண்டது. கண்களை மூடியதும் கசமுச கசமுச என்று சத்தங்களும் காட்சிகளும் கண்களுக்குள் குழம்பி எழுந்தன. காட்சிகளும் சத்தங்களும் கனவாக உருப்பெற்று மெல்ல அவளை ஆட்கொண்டு கனவு நிலைக்குள் இழுத்துக்கொள்ளப்பட்டுவிட்டாள்.
பெரும் மக்கள் கூட்டம். எல்லாக் கூட்டமும் அங்கிருந்த ஒரு மலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மதுமிதாவும் செந்திலும் கையில் குழந்தையுடன் கூட்டத்தில் ஒருவராக ‘அரோகரா’ ‘அரோகரா’ என்று பாடிக்கொண்டு போகிறார்கள். அருகில் கடல் அலைகளின் சத்தம் காதில் மோதுகிறது. தமிழிசைப் பண்கள் ஒலிக்க அங்கு யாரோ ஒரு பெண்ணும் ஆணும் இணையாக நாட்டிய முத்திரைகளைக் காட்டி இசையின் நுணுக்கங்களுக்குத் தக ஆடிக்கொண்டிருக்கின்றனர். கூட்டத்தில் ‘அரோகரா’ ‘அரோகரா’ என்ற முழக்கம் மட்டும் ஓயாது ஒலித்துக்கொண்டே இருக்கிறது. எங்கு திரும்பினாலும் மக்கள் திரள். கூட்டம் தன்னியல்பாக அந்த மலையை நோக்கி அழைத்துச் செல்லப்படுவது போல் தோன்றுகிறது.
அப்போது தூரமாகப் பின்னால் இவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு நேர் எதிர் திசையில் ‘ராம் ராம் ராம்’ என்ற முழக்கம் எழவே எல்லோரும் ஒரு கணம் பின்னால் திரும்பிப் பார்க்கின்றனர். இன்னொரு கூட்டம் வந்துகொண்டிருக்கிறது. இதை விடப் பெரிய கூட்டம் இல்லையென்றாலும் பார்வைக்குப் பெரியதாகத் தெரியும்படி பரந்துவிரிந்து சிதறிக் கிடக்கிறது. தூரமாகக் கேட்டது கொஞ்ச நேரத்தில் அருகில் நெருங்கிக் கேட்கிறது. அதே நேரம் இந்தக் கூட்டம் ‘அரோகரா’ முழக்கத்தைக் கைவிடாது உரக்க முழங்குகிறது. ‘அரோகரா’ கூட்டத்தின் இந்த பக்தி முழக்கம் காது செவிடாகும்படியாக இருக்கிறது. இப்போது ‘அரோகரா’ முழக்கத்தை அந்த ‘ராம்’ முழக்கம் புழு ஒன்று முழு இலையை தின்று விழுங்குவது போல் மெல்ல விழுங்குகிறது. ‘அரோகரா’ கூட்டத்தால் வாயை மட்டுமே அசைக்க முடிகிறது. ‘அரோகரா’ சத்தத்தின் இடத்தை ‘ராம்’ சத்தம் சீக்கிரத்தில் பிடித்துக்கொள்கிறது.
திடீரென்று ஒரு கிழவரை அந்த ‘ராம்’ கூட்டம் துரத்தி வருகிறது. அந்தக் கிழவர் இவர்கள் நிற்கும் இடத்தைத் தாண்டியும் ஓடிக்கொண்டிருக்கிறார். கையில் கத்திகளும் அருவாள்களும் கொண்டு அந்தக் கூட்டம் ‘அரோகரா’ கூட்டத்தில் ஊடுருவி இந்தக் கூட்டத்தை சிதற அடிக்கிறது. மதுமிதாவும் செந்திலும் குழந்தையோடு எங்கும் நகர முடியாமல் ‘அரோகரா’ கூட்டம் சிதறிப் பின்வாங்கி ஓடுவதற்கும் ‘ராம்’ கூட்டத்தின் கூர்மையான ஊடுருவலுக்கும் நடுவில் மாட்டிக்கொள்கின்றனர்.
ஆனால் கையில் கத்தியும் அருவாள்களும் வைத்திருந்த ‘ராம்’ கூட்டத்தினர் எந்தவித தடங்கல்களும் இல்லாமல் சிதறி ஓடும் ‘அரோகரா’ கூட்டத்தைக் கிழித்துக்கொண்டு அந்த வயதான தலைநரைத்த கிழவரைத் துரத்துகின்றனர். ‘அரோகரா’ போட்டக் கூட்டம் மலைக்கு எதிர்த்திசையில் பயந்து ஓடிக்கொண்டிருக்க ‘ராம்’ கூட்டமோ மலையை நோக்கி ஓடுகிறது. எப்படி இங்கிருந்து வெளியேறுவது என்று மதுமிதாவும் செந்திலும் தவித்துக்கொண்டிருக்க ஒரு பெரியவர் வந்து அவர்களை கோயிலுக்குள் போனால் தப்பிக்கலாம் என்று சொல்லி மலைக்குக் கீழே இருக்கும் ஒரு பழைய கோயிலை அவர்களுக்குக் காண்பிக்கிறார். இவர்களுக்கும் வேறு வழியிருக்கவில்லை. சுற்றிலும் நெருக்கிய கூட்டத்தின் இடிபாடுகளில் அந்தப் பெரியவருடன் மதுமிதாவும் செந்திலும் குழந்தையை அணைத்தபடி செல்கின்றனர்.
பெரியவர் செந்திலையும் மதுமிதாவையும் முன்னால் வழிநடத்திக் கொண்டு செல்கிறார். இவர்களும் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறார்கள். மதுமிதாவின் ஒரு கை குழந்தையைத் தாங்கிக் கொண்டிருக்க இன்னொரு கை செந்திலின் கையோடு பிணைந்திருந்தது. கூட்டத்தின் நெருக்குதலைச் சமாளித்துக்கொண்டு உள்நுழைந்து கொண்டு அந்தப் பெரியவர் நன்கு பழக்கப்பட்டவர் போல் லாவகமாகப் போய்க்கொண்டேயிருக்கிறார். அந்தப் பெரியவரின் முகத்தைத் தான் எங்கேயோ பார்த்திருப்பதாகப் பட்டது மதுமிதாவுக்கு. இன்னொரு முறை அவரை நன்கு பார்க்க முயன்றவள் அந்த முகத்தை உற்றுப் பார்த்ததும் அவள் திகைத்துவிட்டாள். அந்தப் பெரியவர்தான் தன் மாமா என்பதை உணர்ந்த தருணம் வெடுக்கென்று செந்திலுடன் பிணைத்திருந்த கையை யாரோ விடுவித்ததுபோல் இருக்கவே கூட்டத்தில் நழுவி குழந்தையோடு அநாதையாக மாட்டிக்கொண்டாள்.
கையில் கத்தியுடன் முன்பு ஒரு கிழவரைத் துரத்திப்போன ‘ராம் ராம்’ கூட்டம் இப்போது இவளை நோக்கி வேகமாக வருகிறது. வட்டமாக இவளைச் சுற்றிச் சூழ்ந்து கொள்கிறது. அவர்கள் சுற்றி வளையம் போட்டு நிற்க இவள் மையத்தில் மாட்டிக்கொள்கிறாள். அவர்கள் வாய் ‘ராம் ராம் ராம்’ என்று உச்சரித்துக்கொண்டேயிருக்கிறது. நடுநடுங்கிக் கணவனை அழைக்கிறாள். இயன்ற அளவு உரக்கச் சத்தமாக அழைக்கிறாள். இப்போது எங்கு திரும்பினாலும் ‘ராம் ராம் ராம்’ என்று முழக்கம் காதுக்கருகில் கேட்கும் கொசுவின் ரீங்காரம் போல் அவளை மொய்க்கிறது. இது அவளை இன்னும் பீதிகொள்ளச் செய்கிறது. மலைக்கு எதிர்த்திசையில் சிதறி ஓடிக்கொண்டிருந்த ‘அரோகரா’ கூட்டம் திடீரென்று அப்படியே உறைந்து நின்றுவிடுகிறது. ’ராம் ராம்’ கூட்டம் மட்டும் அவளைச் சுற்றி கழுகுகளைப் போல கொத்திப் பிடுங்க வட்டத்தைச் சுருக்கிக்கொண்டே நெருங்குகின்றனர். கணவனை மீண்டும் மீண்டும் அழைக்கிறாள். அவள் வாயிலிருந்து சத்தம் வெளிவராமல் இருக்க யாரோ அவள் கழுத்தை நெரிப்பது போல் மூச்சு முட்டுகிறது. வட்டம் சிறுகச் சிறுக நெருங்கி வருகிறது. ‘ராம் ராம் ராம்’ முழக்கம் அவளுக்கு மிகச் சமீபத்தில் நெருங்கி இடைவிடாது ஒலிக்கிறது. நம்பிக்கையை இழந்தவள் கண்களை இறுக மூடிக்கொண்டுவிடுகிறாள். அவளையும் அறியாமல் அவள் வாய் ‘மாமா’ என்று உச்சரித்தது. மயில் அகவும் ஓசை கேட்கிறது. பிடறி மயிர் சிலிர்க்கிறது. கூட்டத்திலிருந்து ஒரு கை அவளைத் தரதரவென்று இழுத்துப் போய் கோயில் வாசலில் கொண்டு விட்டது. உள்ளே இருந்து செந்தில் ஓடி வந்து கோயிலுக்குள் அழைத்துச் செல்கிறான்.
தன்னை இங்கு அழைத்து வந்தது யார் என்று பார்க்கும் ஆவலில் திரும்பிப் பார்க்கிறாள். அங்கே மாமா நின்றிருக்கிறார். மறுபடியும் மாமா கூட்டத்தில் கரைந்து அந்தத் தலை நரைத்தக் கிழவரைக் கூட்டி வருகிறார். அவர் யாரென்று பார்த்தால் ரியாஸ் அண்ணனுடைய அப்பா முகமது அக்மல். எல்லோரையும் உள்ளே தள்ளி மாமாவும் உள்ளே வந்தவர் கோட்டைக் கதவு போன்றிருந்த சின்னச் சின்ன மணிகள் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த அந்தக் கதவை இழுத்துச் சாத்துகிறார். வெளியே அந்தக் கூட்டம் கதவை இடித்துத் திறக்க முயலுகிறது.
ராம் ராம் என்ற சத்தத்தை மூடியிருந்த கதவு குறைத்துவிட்டது என்றாலும் மதுமிதாவிற்கு உண்டான நடுக்கம் குறையவேயில்லை. கருவறைக்குள் நான்கு குடுமிகள் எந்த பயமும் இல்லாமல் அவர்களையே முறைத்துப் பார்க்கின்றனர். கருவறைக்குள் வராதீர்கள் என்பது போல் கருவறையை மறித்து நிற்கின்றனர். உள்ளே முருகன் அந்தக் குடுமிகளையும் தாண்டி ஆஜானுபாகுவான இளைஞன் போல் கம்பீரமாக நிற்பது மதுமிதாவிற்குத் தெரிகிறது. திடீரென்று கருவறைக்குள்ளிருந்து வெளிச்சம் வந்து கோயிலின் உள்ளே எல்லாப் பக்கமும் பரவி நிறைக்கிறது. அவர்கள் நின்றிருந்த இடத்தை பார்க்கவே முடியாத மாதிரி கண் கூசுகிறது. குடுமிகள் கோயில் கருவறையை மூடிக்கொண்டு உள்ளே ஒளிந்துகொள்கிறார்கள். வெளிச்சம் மங்குகிறது.
அப்போது மாமா எல்லோரையும் அருகிருந்த படிக்கட்டுகளுக்கு அழைத்துச் சென்று மேலே ஏறச் சொல்கிறார். மாமா சொன்னதும் அக்மல் தட்டுத் தடுமாறி ஏறிச் சென்றுவிடுகிறார். ஆனால் செந்தில் ஏற முடியாது என்று சொல்லி மதுமிதாவையும் தடுக்கிறான். இந்தக் கிழவன் பேச்சைக் கேட்டதெல்லாம் மலையேறிப் போய்விட்டது என்று சண்டை போடுகிறான். மதுமிதா சமாதானம் செய்து அவனை ஏறச் சொல்லி தானும் ஏறிக்கொள்கிறாள். அதுவரை தூரமாகக் கேட்டுவந்த கடல் அலைகளின் ஓசை கோயிலுக்கு வெளியே கேட்கிறது. அலையோசைக்குப் போட்டியாக ‘ராம் ராம் ராம்’ என்ற கத்தல்கள். கொஞ்ச நேரத்தில் அலையோசை கோயில் கதவுக்கருகில் முழங்குவது போல் நெருங்கிக் கேட்கிறது. அலையோசையை மீறி வெளியே ‘ராம் ரான்’ கத்தல்கள் கதறல்களாக மாறிக் கேட்கிறது. மதுமிதா படிக்கட்டுகளில் ஏறி மேலே சென்று பார்த்தால் கோயிலுக்கு வெளியே வெள்ளம் சூழ்ந்துகிடப்பது நன்றாகத் தெரிகிறது.
எல்லோரும் கோபுரத்திற்கு அருகில் பாதுகாப்பாக நின்றுகொண்டனர். அப்போது கோயிலின் மூடியிருந்த கருவறை உள்ளிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து பெரிய வெள்ளமாக உருமாறி மூடப்பட்ட கோயில் கதவையும் சேர்த்து அடித்துக்கொண்டு வெளியே போகிறது. குடுமிகள் வெள்ளத்தில் அடித்து வெளியே வருவதை கோபுரத்தில் இருந்துகொண்டு மதுமிதா பார்க்கிறாள். வெளியே இருந்து வந்த வெள்ளமும் உள்ளிருந்து புறப்பட்ட வெள்ளமும் ஒன்று சேர்ந்து அந்த இடம் இரு கடல்கள் சங்கமித்தது போல் எங்கும் நீர்மயமாகக் காட்சியளிக்கிறது. ராம் கூட்டத்தையும் குடுமிக் கூட்டத்தையும் ஒருவர்கூட மிச்சமில்லாமல் வெள்ளம் எல்லோரையும் துடைத்து எடுத்துக்கொண்டு போய்விட்டது. கோயிலிலிருந்து பரவிய வெளிச்ச அலை வானத்திற்கும் ஒளியூட்டியது. அந்நேரம் மயில் அகவும் ஓசை கேட்கவே மதுமிதா அண்ணாந்து வானத்தைப் பார்த்தாள். தோகை விரித்த மயில் ஒன்று றெக்கையை அடித்துக்கொண்டு பறந்துவந்து அவளுக்கு அருகில் இறங்கியது. மயில் மேல் மாமா ஏறிக்கொள்கிறார். அருகில் நின்றிருந்த அக்மல் உடன் ஏறிக்கொள்கிறார். மதுமிதாவை மாமா அர்த்தம் பொதிந்த பார்வையில் பார்த்து ‘இதோ வந்தர்றம்மா’ என்கிறார். மயில் வானத்தில் எழும்பிப் பறந்து ஒளியோடு கலந்துவிடுகிறது.
காலையில் ரியாஸ் செந்திலுக்கு போன் செய்து தன் அப்பா தவறிவிட்டார் என்று சொல்லும்பொழுது மதுமிதா கண்ணிமைக்காமல் வரவேற்பறையில் மாட்டியிருந்த மாமாவின் புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.