அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைத் தமிழ்க்கவிஞருக்கு ஆதரவுக்கரம் நீட்டுதல்'
பாரதி இன்று இருந்திருந்தால் சக கவிஞர் ஆத்மாஜீவின் இன்றைய நோய் வருத்தும், நிதிநெருக்கடி அலைக்கழிக்கும் நிலைக்காக வருந்தி மேற்கண்டவாறு தனது கவிதையின் இறுதிவரியை மாற்றியமைத்திருக்கக்கூடும். கவிஞர் ஆத்மாஜீவ் முகநூற் பக்கம் எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் 10 பேர் வெற்றிபெற்றிருக்கிறார்கள், பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்றால் அவ்வத்துறைகளிலான UNSUNG HEROES அதற்கு மும்மடங்குக்கும் மேல். தற்காலத் தமிழ்க்கவிதையுலகில் அத்தகைய ஒருவர் ஆத்மாஜீவ். உடல் நிலைசார் நெருக்கடியும், நிதிநிலை சார் நெருக்கடியுமாக அவர் சமீபகாலமாக எழுதிவரும் கவிதைகள் மிகவும் துன்பகரமானதாக ஒலிக்கின்றன. கவிதை என்றாலே சோகம் ததும்புவது தானே, தமிழ்க்கவிஞர்களுக்கு உலகாயுதவாழ்வில் இன்னல்களும் இல்லாமையும் உடன்பிறந்த வையாயிற்றே, என்று பலவாறாகப் பேசி நம் மனதை சமாதானப்படுத்திக்கொண்டு கவிஞர் ஆத்மாஜீவின் கவிதைகளைக் கடந்துபோய்விடலாகாது. சமீபகாலமாக தனது ஃபேஸ்புக் வெளியில் அவர் உதவிகேட்டு எழுதும் வரிகளில் ஒரு கவிஞரின் துயரம் பீறிடுகிறது. அதைத் தாண்டி தமிழ்க்கவிதையார்வலர்கள், அமைப்புகள் தனக்கு உதவாதா என்ற ஏக்கம், உதவுவார்கள் என்ற நம்பிக்கை பீறிடுகிறது. தனிநபர்களாக முடிந்த உதவியை மனமுவந்து செய்பவர்கள் இருக்கிறார்கள். எள்ளல் பார்வையோடு அவரை விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். அவருக்கு உதவி தேவை. உதவ முடிந்தவர்கள் உதவவேண்டும் என்ற வேண்டுகோளோடு மின்னஞ்சல் வழி கேள்விகள் அனுப்பி அதற்கு அவர் அளித்திருக்கும் பதில்களை ஒரு நேர்காணலாக உங்களிடம் பகிர்ந்துள்ளேன். - லதா ராமகிருஷ்ணன் -
லதா ராமகிருஷ்ணன்: தரமான கவிஞராக உங்களை அறிவேன். நீங்கள் நடத்திய காலக்ரமம் சிற்றிதழ்களைப் படித்திருக்கிறேன். என்னுடைய ஓரிரு கவிதைகளும் அதில் வெளியானதாக நினைவு. இருந்தாலும் உங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் தாருங்கள். இலக்கியத்தில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
ஆத்மாஜீவ்: இயற்பெயர் வி.சி.இராஜேந்திரன், 12.11.1966 ல் நெய்வேலியில் பிறந்து 28 ஆண்டுகள் அங்குதான் வளர்ந்தேன் வாழ்ந்தேன். கந்தக நிலத்திலிருந்துதான் எனது கலை இலக்கிய வாழ்க்கை துவங்கி வளர்ந்து அவ்விடத்திலேயே முடிந்தது. 13 வயதில் பள்ளி ஆண்டுவிழா நாடகத்தில் நடிக்க ஆரம்பித்ததுதான் எனது கலை சம்பந்தமான துவக்கமாக இருந்தது. நாடகம் எழுதி இயக்கி நடிக்கத் துவங்கியதில் தான் எழுத்தார்வம் நாடகத்திலிருந்து சிறுகதைக்கும். கவிதைக்குமாக இடம் பெயர்ந்தது. எட்டாம் வகுப்பு படிக்கும்போது, கலீல் ஜிப்ரானின் "முறிந்த சிறகுகள்" தொகுப்புதான் என்னை கவிதை எழுத கவர்ந்திழுத்தது. அந்த வயதில் எனக்கேற்பட்ட பால்ய காதலின் ஈர்ப்பில் அந்த பெண்ணுக்காக வடிவமைத்து கவிதையென நினைத்து எழுதிப் பழகினேன்.
படிக்கிறபோதே “ஆத்மா" கையெழுத்து இதழை ஆரம்பித்து, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் (1983-1986) மாதம் ஒரு இதழாக நெய்வேலி நூலகத்தில் வைத்தேன். விமா்சனப் பகுதிக்காக விடப்பட்ட வெள்ளைத்தாள்களில் வாசகர்களின் கவிதைகளையும் இடம்பெற செய்ததும் அப்போது புதிதான விஷயம். "ஆத்மா" பெளர்ணமி இலக்கிய கூட்டம் தொடர்ந்து நடத்தினேன். முதல் கூட்டத்தில் கலந்து கொண்ட ஏழெட்டு பேர் மாதாமாதம் வளர்ந்து சுமார் அறுபது நபர்கள் தவறாமல் கலந்து கொண்டது ஆச்சரிமூட்டியது.
அதன்பிறகுதான் 1990 களில் "காலக்ரமம்" கவிதைகளுக்கான காலாண்டிதழ் ஆரம்பித்து சுமார் 15 இதழ்கள்வரை பல சிரமங்களுக்கிடையில் தொடர்ந்து நடத்தினேன். அச்சமயத்தில்தான வெளியூரிலிருந்த இலக்கிய நண்பர்களின் தொடர்பு கிடைத்ததும், வளர்ந்ததும்.
1987 ல் அம்மா கர்ப்பப்பை புற்றுநோய்க்கு ஆளானப் பிறகு அவர்களை கவனித்துக் கொள்ள. பராமரிக்க, மருத்துவமனை அலைச்சல்கள் என அவர்களுக்குத் துணையாய், அம்மாவின் நிழலாய் இருந்தேன். அச்சமயத்தில் தான் நாடகத்துறையிலிருந்து முற்றிலும் விலகினேன். ஆனாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் இலக்கிய புத்தகங்கள் வாசிப்பதும் எழுதுவதும் தொடர்ந்தது.
1988ல் அம்மா காலமானப் பிறகு ஏற்பட்ட வெறுமையை இலக்கிய புத்தகங்கள்தான் நிரப்பித் தந்தது. "இலக்கியம் எனது இன்னொரு அம்மா" என உணர்வுப்பூர்வமாக உணர்ந்தது அப்போதுதான். தீவிரமான இயக்கம் விஸ்தரிக்கப்பட்ட இலக்கிய நண்பர்கள். இலக்கியக் கூட்டத்தில் பேசப்பழகிய காலம் அப்போதுதான்.
பல பிரபலமான இலக்கிய கர்த்தாக்களுடன் கடிதத் தொடர்பும் நேர்பழக்கமும் வளர்ந்த சூழல் அது. இச்சமயத்தில்தான் இயற்பெயரிலும், "ஆத்மா", "ஆத்மாஜி" என்ற பெயர்களிலும் எழுதிக் கொண்டிருந்த எனக்கு, "ஆத்மாஜீவ்” என்ற பெயரை, எண்கணிதமுறைப்படி அமைத்துக் கொடுத்தார் திரு. பிரமீள் அவர்கள். அதன் பிறகு அந்தப் பெயரே எனக்கு நிலைத்து விட்டது.
சுயக்குறிப்பெழுத ஆரம்பித்தால், நிறைய இலக்கிய நினைவுகளில் ஆழ்ந்து போகத்தான் செய்கிறேன் சுயசரிதையாகி விடக்கூடாது. சுருக்கமாக இதுபோதுமென நினைக்கிறேன்.
லதா ராமகிருஷ்ணன் : 1. கவிஞராக வேண்டும் என்ற எண்ணம் எப்போது எதனால் ஏற்பட்டது?
ஆத்மாஜீவ் : கவிஞராக வேண்டும் என்ற எந்த எண்ணமும் என்னிடம் இல்லை. பள்ளி நாட்களில் மரபுக் கவிதைகள் எழுத பயிற்சி தந்தார் எனது தமிழாசிரியா். பிறகு, நாடகத்தின் மீதான ஈர்ப்புதான் நடிக்கவும், கதை வசனம் வசனம் எழுதவும் தூண்டியது. நாடக வசனம் எழுதுவதற்காக நிறைய வாசித்தேன் வகுப்புகளுக்கு செல்லாமல் நூலகமே கதியென கிடந்தேன். எல்லோரையும் போல, பாரதி, பாரதிதாசன் என்ற ரீதியில்தான் எனது வாசிப்பு இருந்தது. கலீல் ஜிப்ரானின் "முறிந்த சிறகுகள்" வாசித்த பின்பு. ஏற்கெனவே கூறியபடி அந்த பால்ய காதலுக்கான எழுத்தாகத்தான் முதலில் கவிதை என்று நினைத்து கவிதை எழுத ஆரம்பித்தேன்.
உரைநடையிலிருந்து நகர்ந்து கவிதைகளை தேடித்தேடி வாசித்ததும், நா.காமராசன், வைரமுத்து மு.மேத்தா என்று ஆரம்பித்து மெல்ல மெல்ல புதுக்கவிதை. பிறகு நவீன கவிதை என்ற பட்டியலுக்கு வந்தேன். சுந்தர சுகன் வகையிலான நிறைய இதழ்களில் எழுத ஆரம்பித்து, நவீன விருட்சம், கணையாழி, மீட்சி போன்ற இதழ்களில் எனது கவிதைக்கள் பிரசுரமானது. அச்சமயத்தில்தான் திரு.பாலா அவர்களின் களின் "சாரியலிசம்" வாசிக்கக் கிடைத்தது. அதிலுள்ள ஈர்ப்பு இன்னமும் என்னிடம் இருப்பதாக நினைக்கிறேன்.
கவிதை எழுதுவதால் கவிஞன்" என்ற அடைமொழியை எப்போதும் நான் விரும்பியதில்லை. வேறுவழியின்றி என் இன்றைய சூழலின் காரணமாக "கவிஞன்" என்ற வார்த்தையை ஆயுதமாக உபயோகிக்க வேண்டியிருக்கிறது. அவ்வளவுதான்.
லதா ராமகிருஷ்ணன் : உங்களைப் பொறுத்த அளவில் கவிதை எழுதுதல். வாசித்தல் என்ன தருகிறது?
ஆத்மாஜீவ் : ஒளிவு மறைவில்லாமல் சொல்கிறேன். கவிதை வாசிப்பதைவிட நல்ல உரைநடைகளை கவிதைபோல வாசிப்பதுதான் எனது பழக்கம். அதுவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில புத்தகங்களை மட்டுமதான் வாசிக்கிறேன். சில நல்ல கவிதைகளை இனங்கண்டால் மீண்டும் மீண்டும் வாசிப்பேன். அப்படி நிறைய இருக்கிறது. எந்த புத்தகத்தையும் முழுதாக ஒரே மூச்சில வாசித்ததேயில்லை. வாசித்துக் கொண்டிருக்கும்போதே எனக்குள் சில சொல்லமுடியாத உணர்வுகள் ஆட்கொண்டு விடும். கண்ணைமூடி அதற்குள் ஆழ்ந்து விடுவேன். எப்போது மீள்கிறேன் என்று சொல்ல முடியாது. சிலசமயம் அந்த உணர்வுகள் மறுஉயிர்த்தெழுதல்போல் எனக்குள்ளிருந்து கவிதையாக தன்னிச்சையாக வெளியாகிவிடும். எழுதுவதற்காக வாசிப்பதில்லை. நாலைந்து நாட்கள் சில சமயம் மாதக்கணக்காக அந்த ஒரு வார்ததை அல்லது ஒரு வாக்கியம் எனக்குள் தன்னிச்சையாக எழுந்து கொண்டேயிருக்கும். ஒருவிதமான போதை அது.
நான் எழுதினாலும் சரி. வேறு யார் எழுதினாலும் சரி. வெளிப்பட்டு வாசகர்களின் பார்வைக்கு வந்து விட்டால் அக்கவிதையோ, நல்ல உரைநடையோ வாசகர்களுக்குள் உறைந்து கிடக்கும் ஏதோவொன்றை தட்டியெழுப்பி விட்டால் அது நல்ல கவிதை அல்லது உரைநடையாக இருக்கிறது. வலி, வேதனை, மரணம் என்று அந்த உணா்வுகளை தனித்தனியாக வகைப்படுத்தி பிரிக்க வேண்டியதில்லை. நோ்மறை எதிர்மறை சமநிலை என்றெல்லாம் பார்த்தால் இலக்கியத்தில் எதிர்மறைகளே அதிகமாக மிஞ்சும்.
கவிதை வாசித்தலை விட எழுதும்போதுதான் எனது நிலை தன்வயமின்றி இருக்கிறது. அதிகபட்சமும் நடுநிசி நேரங்களில்தான் எழுதுகிறேன். பார்ப்பவனைப் பார்ப்பது போன்றதொரு உணர்வு. பல கவிதைகளை எழுதி முடிக்கும்வரை தன்னுணர்வின்றி தன்னிச்சையாகதான் எழுதுகிறேன். பெரும்பாலும் எந்தவொரு சூழலிலும் கவிதைதான் எனக்குள் இயங்கிக் கொண்டேயிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் எந்த கவிதைகளோ, கவிதை வரிகளோ ஞாபகத்திலிருப்பதில்லை. யோசித்தால்கூட நினைவுக்கு கொண்டுவருவது சிரமம். எனது எல்லா சிரமகாலங்களிலும் ஏதோவொரு கவிதை அல்லது கவிதை வரி சட்டென்று தானாகத் தோன்றும். வாசிக்கிறபோது ஆழ்மனதிற்குள் சென்று பதுங்கிக் கொள்ளுமோ என்னவோ.
சில வருடங்களுக்குமுன், சைக்கிளில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஸ்பீட்பிரேக்கில் ஏறியிறங்கும்போது தடுமாறி சைக்கிளோடு கீழே விழுந்தேன். எனக்கு ஏற்கெனவே முதுகுத்தண்டுவடப் பிரச்சனையிருப்பதால் கழுத்தைத் திருப்பும்போது, ஒருமாதிரி மயக்கமாக இருக்கும். மிகுந்த கவனமாகத்தான் ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும். கீழே விழுந்ததில் நினைவு தப்பிக் கொண்டிருந்ததை சட்டென்று உணர்ந்தேன். நிற்கும் போதே தலையை சட்டென்று உயர்த்தினால் மயக்கம் வந்துவிடும் நிலை எனக்கு அப்போது அதிகமிருந்தது. இலவச மருத்துவமனையில் மூளை நரம்பியல் டாக்டரிடமும், பிசியோதெரபியுமான சிகிச்சையிலிருந்த சமயம் அது. விழுந்ததும் நினைவு தப்புவதை உணர்ந்த அந்த சமயத்தில் வே.பாபுவின் கவிதையொன்று சட்டென ஞாபகத்திற்கு வந்தது. எல்லா வரிகளும் என்றெல்லாம் சொல்லமுடியாது. வரிகளைவிட அந்தக் கவிதையின் சாரம்சம்தான் அது. சிலதினங்கள் கழித்து அந்நிகழ்வு குறித்து முகநூலில் கவிதையொன்றும் பதிவிட்டேன். எல்லாச் சூழல்களிலும் ஒரு கவிதை வாசிப்பாளனுக்கு கவிதைதான் கடவுளாக இருக்கிறது என்பதற்கு இந்தவொரு சம்பவமே நல்லதொரு சாட்சி.
வே.பாபுவின் கவிதை.
"சற்று முன்
இறந்தவனின்
சட்டைப்பையில்
செல்போன்
ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.
கையில் எடுத்த
காவலர்
``சார் யாரோ
அம்முன்னு கால் பண்றாங்க"
என்கிறார்.
ஒரு நொடி
இறந்தவனின் கண்கள்
திறந்து
மூடுகின்றன."
- கவிஞர் ஆத்மாஜீவ் -
லதா ராமகிருஷ்ணன் :. ஒரு குடும்பத் தலைவராக நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் ?
ஆத்மாஜீவ் : தற்போது சேலத்தில் ஒரு தனியார் கிளினிக்கில் கணினி தகவல் தட்டச்சு பதிவு செய்யும் வேலையில் இருக்கிறேன். மாதசம்பளம் ரூ.9,500. (ஒன்பதாயிரத்து ஐநூறு மட்டும்)
லதா ராமகிருஷ்ணன் : கவிஞர் என்ற மதிப்பு உறவளவில், ஊரளவில் இருக்கிறதா?
ஆத்மாஜீவ் : இல்லை. எங்கும் என்னை கவிஞர் என்ற அடையாளத்துடன் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. கடந்த ஒரு வருடமாகத்தான் (ஏப்ரல் 2024க்குப் பிறகு) எனது சூழலின் காரணமாக ஒரு அடையாளச் சொல்லாக "கவிஞர்" என்று அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியதிருக்கிறது.
லதா ராமகிருஷ்ணன் : இவ்வகைக் கவிதைதான் எழுதுவது என்ற தீர்மானம் கொண்டிருக்கிறீர்களா?
ஆத்மாஜீவ் : நிச்சயமாக இல்லை. முதலில் கவிதை எழுத வேண்டும் என்ற தீர்மானமே இல்லை. என் உணர்வுகளின் தீவிரத்தை வெளிப்படுத்த வார்த்தைகளை பயன்படுத்துகிறேன். அதுவும் தேர்ந்தெடுக்கப்படாத வார்த்தைகள்தான். எழுதும்போது என்னவிதமான உணர்வுநிலையிலிருக் கிறேன் என்று கூட எனக்குச் சொல்லத் தெரியவில்லை. பெரும்பாலும் கவிதை எழுதுபவர்களின் மனோநிலை இப்படித்தான் இருக்குமென உணா்கிறேன்.
தன்னிச்சையான எழுத்து என்பார்கள். எப்படி சொல்வது? கணத்துக்கு கணம் மாறிக் கொண்டிருக்கிற புறச்சூழல்களில் இன்பமோ துன்பமோ எது என்னை பாதிக்கிறதோ, அதை, அந்த உணர்வுகளை ஒருமயக்கநிலையில் பதிவு செய்கிறேன். இயன்றவரை "கவிதை செய்கிற" வித்தைகளை புறக்கணிக் கிறேன்.
சுயவுணர்வற்ற ஒருவிதநிலை. எழுதி முடித்த பிறகு வாசிக்கிறேன் பாருங்கள். அப்போதுதான் சில மாற்றங்கள் செய்கிறேன். அப்போதுதான் வார்த்தைகளை சற்று கவனமாக இடம்மாற்றி வைக்கிறேன். வார்த்தைகளுக்கிடையில் ஊடாடியிருக்கும் மௌனத்தை கலைக்காதபடிக்குத்தான் அந்த சிறுமாற்றங்கள் இருக்கும். வார்த்தைகள் ஒவ்வொன்றும் அதீத சக்தி வாய்ந்தவை என்று தெரியும்.
"ஆதியிலே வார்த்தை இருந்தது. வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது" என்று பைபிளில் கூறப்பட்டிருப்பதை இங்கு அவசியம் கூறவேண்டியிருக்கிறது. அந்தவகையில் வார்த்தைகள்தான் சிலைரூபக் கடவுளர்கள் எனக்கு.
உண்மையில் கவிதைக்கு கீழே என் புனைப்பெயரை போடுவதுகூட தயக்கமாகத்தான் இருக்கிறது. ஒரு அடையாளத்துக்காக மட்டுமே பெயரை போடவேண்டியிருக்கிறது. காரணம். என் வழியாக எழுதுவது வேறு யாரோ என்ற உணர்வு பெரும்பாலான கவிதைகள் எழுதி முடித்து மீண்டும் வாசிக்கிறபோது எழுதி முடித்த ஒவ்வொரு முறையும் தோன்றுகிறது.
இந்த நிலையில் இந்தவகையான கவிதைகள்தான் எழுத வேண்டும் என்று எப்படி நான் தீர்மானிக்க முடியும்.
லதா ராமகிருஷ்ணன்: கவிதைக்கான பாணியை, போக்கை, யாரைப்போல் இருக்க வேண்டும் என்று எப்படி தீர்மானித்துக் கொள்கிறீர்கள்?
ஆத்மாஜீவ் : இந்த கேள்விக்கான பதில் இப்போது கூறப்போகும் சம்பவத்துடன் சம்பந்தமுள்ளதால் கூறுகிறேன்.
1980 களில் "ஆத்மா" கையெழுத்து இதழ் நடத்தினேன், மாதாந்திரக் கூட்டம் நடத்தினேன் என்று முன்பே கூறியிருந்தேன். "ஆத்மா" என்ற புனைப்பெயரில் கையெழுத்து இதழிலும், சுந்தரசுகன் போன்ற சிற்றிதழ்களிலும் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தபோது, நெய்வேலி நூலகத்தின் துணை நூலகர், டி.வி.ராஜன் (சேது மாதவன் என்ற புனைப்பெயரில் அவரும் எழுதிக் கொண்டிருந்தார்) என்னைத் தனியே அழைத்து, "ஆத்மா, உங்க எழுத்துகளில் "ஆத்மாநாம்" பாதிப்பு கொஞ்சம் இருக்கறமாதிரி தெரியுது. கொஞ்சம் பாத்துக்கோங்க" என்றார்.
நான் முதன்முதலில அவர் மூலம்தான் "ஆத்மாநாம்" என்ற பெயரையே கேள்விப்படுகிறேன். நா.காமராசன், மு.மேத்தா, வைரமுத்து தவிர சுந்தரசுகன் போன்ற சிற்றிதழ்கள்தான் எனக்குத் தெரியும். உண்மையில் அவர் கூறியது ஆச்சரியமாகவும் இருந்தது எனக்கு.
"நீங்க சொல்லிதான் ஆத்மாநாம் பெயரையே கேள்விப்படுகிறேன். யார் அவர்? எங்கிருக்கிறார்? விபரமாக சொல்லுங்க சேதுமாதவன்" என்றேன். அவர் என்னை அதிசயமாகப் பார்த்தார்.
"என்ன சொல்றீங்க ஆத்மா? ஆத்மாநாம் பற்றி உங்களுக்கு இதுவரை எதுவுமே தெரியாதா?" என்று கேட்டுவிட்டு மேலும் கூறின விஷயம்தான் என்னை நடுங்கச் செய்தது.
"ஆத்மாநாம் தற்கொலை செஞ்சிக்கிட்டார். கிணற்றில் இறங்கி உயிர் விட்டார்." என்றார். அதிர்ந்து போன அந்த நொடியை இதை சொல்லும்போது இப்போதும் நான் உணர்கிறேன். அதற்குபின் அவரிடமிருந்த "காகிதத்தில் ஒரு கோடு"என்ற ஆத்மாநாமின் சிறு கவிதைத் தொகுப்பைத் தந்து வாசிக்கச் சொன்னார். கூடவே என்னிடம் ஒரு சத்தியமும் வாங்கினார்.
"நீங்க ஆத்மாநாம் மாதிரி, எந்தச் சூழ்நிலையிலும் தற்கொலை பண்ணிக்கூடாது" என்று. அதற்கு பல வருடங்கள் கழித்து எனக்கு திருமணமாகி கோவை வந்துவிட்ட பிறகு, என்னிடம் நான் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்ட சேதுமாதவன் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் கிடைத்தது. இடிந்து போனேன். எனக்கு அப்போது கூட, திரு. பிரமீளின் "தியானதாரா" குறுநாவல்தான் ஞாபகத்திற்கு வந்தது.அதிர்ச்சியான அந்தத் தகவலின் பதிவு ஒருபுறம் இதயத்தை பாதிக்கிறபோது, அதனுடன் சம்பந்தப்பட்ட இலக்கியப் பதிவுதான் என் ஞாபகத்தில் தன்னிச்சையாக வருகிறது. முன்பு கூறியிருந்தேனே. நான் சைக்கிளிலிருந்து விழுந்து நினைவு தப்பிப்போகிற நிலையில், வே.பாபுவின் கவிதை ஞாபகத்திற்கு வந்தது என்று.
இதை ஏன் இங்கு சொல்ல வேண்டியிருந்தது என்றால், நான் எந்தவொரு படைப்பாளியையும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளவிலலை. யார் போலவும் எழுத முயற்சிப்பதில்லை. ஆத்மாநாம் பெயரும், பிற்காலத்தில் திரு . பிரமீள ஆத்மாஜி என்ற பெயரை மாற்றி தந்த ஆத்மாஜீவ் என்ற பெயரும், நான் ஆத்மாநாமின் தாசன் என்ற ரீதியில் ஆகிவிடக்கூடாது என்றுதான் 1991-ல் "காலக்ரமம்" வெளியீடாக நான் வெளியிட்ட எனது "அறியப்படாத உலகம்" சிறு கவிதைத் தொகுப்பில். இதற்கான சிறு குறிப்பொன்றையும் எனக்கு நானே செய்து கொண்ட எனது அறிமுகத்தில் பதிப்பித்தேன்.
பிறகு பிரம்மராஜன் ஒகேனக்கல்லில் "மீட்சி" சார்பாக நடத்திய இலக்கிய சந்திப்பில், நாகார்ஜூனன் எனது "அறியப்படாத உலகம்" தொகுப்பை விமா்சித்து பேசியபோதும், வலுக்கட்டாயமாக நானே இப்பெயர் சம்பந்தமான எனது கருத்தையும் கூறினேன். கோவை திரு . ஞானியுடனான நேர்சந்திப்பின்போதும் அவரிடம் இதுபற்றி பேசியிருக்கிறேன்.
முடிவாக எந்தவொரு கவிஞனும் தனக்கென்று ஒரு பாணியை தொடர்ந்து பின்பற்ற முடியாது. காலச்சுழலுக்கேற்ப அவனுடைய கவிதைகள் தன்வடிவையும் உட்பொருளையும் மாற்றிக் கொண்டேதான் இருக்கும். ஒரு நதியைப் போல. அப்படி நகராவிட்டால், குளம் குட்டை என்ற கணக்கில்தான் கணக்கிட வேண்டியிருக்கும். இப்படிச் சொல்வதற்காக மன்னிக்க வேண்டும். கவிதை எழுதுபவன் காலத்திலிருந்தாலும், காலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மனோவுலகத்தில்தான் பெரும்பாலும் வாழ்கிறான். அங்கிருந்து அவனை இழுத்துக் கொண்டு வருவது இந்த எதார்த்த வாழ்க்கைக்கான சிக்கல்களும் சிரமங்களும் துன்பதுயரங்களும்தான். அவனது இயக்கம் தடைபடுவதும் சற்று காலத்திற்கு (சிலசமயம் நீண்ட காலமாகவும் இருக்கிறது) நீடிக்கிறது. கவிதை எழுதுபவனின் உலகம் வேறுவிதமானது. அங்கு அவன் தன்னையும் தொலைத்துவிட்டு வேறு ஏதோ சில அமானுஷ்யங்களுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆதி முதல் இதுதான் நிகழ்கிறது. அதனால்தான் அறிவியல்ரீதியான பிற்கால வெளிப்பாடுகளும், பயன்பாடுகளும் நிகழ்ந்திருக்கிறது. விதை எப்போதும் கவிஞனுடையதாகத்தான் இருந்திருக்கிறது.
இந்தக் கேள்விக்கு இது சரியான பதிலா என்று தெரியவில்லை. நான் யார் போலவும் எழுதவில்லை, எழுத முற்படுவதில்லை. யாருடைய பாணியையும் பின்பற்றவில்லை என்று சொல்லி பதிலை சுருக்கியிருக்கலாம். ஆனால் அது ஒரு அகந்தையின் பதிலாக இருந்திருக்கும்.
லதா ராமகிருஷ்ணன் :. உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள் யார். ஏன்?
ஆத்மாஜீவ் : குறிப்பிட்டு யாரையும் சொல்ல முடியாது. என் பெயருடன் ஒத்திருந்ததால் ஆத்மாநாம் கவிதைகள் முழுதொகுப்பையும் ஆரம்பகாலக் கட்டத்தில் வாசித்திருக்கிறேன். முகநூலில் பதிவான பல கவிஞர்களின் கவிதைகளை வாசிப்பதுடன் சரி. பிரபலங்கள் யாருடைய புத்தகங்களும் ஆரம்பத்திலிருந்தே என்னிடமில்லை. அதனால்தான் யாருடைய பெயரையும் என்னால் குறிப்பிட முடியவில்லை.
ஒரு கனவு - ஆத்மாஜீவ் -
தினசரி வந்து போகும்
பிரமீளும் ஆத்மாநாமும்
நாலைந்து நாட்களாக வரவேயில்லை
ஜிப்ரானும் காம்யூவும் விடுப்பிலிருக்க
தமிழவனுடன் வரும் நாகார்ஜூனன்
சுராவை பார்த்தாயா என்றார்கள்
நபியும் புபியும் கம்பன் வீட்டில்
கம்பங்கூழ் குடித்துக் கொண்டிருந்தபோது
பாரதியும் செல்லம்மாவும்
வெங்காயம் நறுக்கியபடி
பாடிக் கொண்டிருந்ததை
வெளியில் நின்று ரசித்துக் கொண்டிருந்தானாம்
ஆத்மாஜீவ்
அந்தவழி போன பட்டிணத்துப்பிள்ளைக்குப்பின்
பத்ரகிரியும் திருவோடும் நாயொன்றும் தொடர
எத்தனைதான் சொல்வது சம்சாரி
உடன்வராதே என்று
கோபித்துக் கொண்டாராம் சிரித்தபடி பபி
எல்லாம் சரிதான் எப்போதான் விடியுமென்று
வாசலிலேயே அமர்ந்திருந்தது
நெருப்புக் கோளம்
Rendered in English by Latha Ramakrishnan First Draft)
A DREAM
Pramil and Athmanam who visit daily without fail
have not come for the past few days.
With Gibran and Camus on leave
Have you seen Nagarjunan Su.Ra
accompanying Thamizhavan asked they
Bharathi and Chellamma chopping onion and singing
while Na.Pi and Pu.Pi were drinking ‘Kambangkoozh’
in Kamban’s abode _
standing outside Athmajeev was savouring it all
it seems.
Pattinathuppilai going that way
followed by Bathruhari, a begging bowl and a dog
How many times to tell you, ye family man,
not to come along
admonished Pu.Pi
heartily laughing.
Well, but when at all
it would dawn _
wondering thus sitting at the doorway
the Fireball.
லதா ராமகிருஷ்ணன் : இதுவரை வெளியான உங்கள் கவிதை நூல்கள் யாவை? விருதுகள் பெற்றிருக்கிறீர்களா?
ஆத்மாஜீவ் : 1991 ல் "அறியப்படாத உலகம்", 2008 ல் "வெகு தொலைவில்" 2024 ல், "மீன்கள் நீந்தா நதியின் கரை”. விருதுகள் எதுவும் பெறவில்லை.
லதா ராமகிருஷ்ணன் : நீங்கள் "காலக்ரமம்" என்ற இலக்கியச் சிற்றிதழை நடத்திய அனுபவம் குறித்துச் சொல்லுங்கள். அதை ஏன் தொடர முடியவில்லை?
"காலக்ரமம்" கவிதைகளுக்கான காலாண்டிதழாக 1990 களிலிருந்து தொடர்ந்து சுமார் 15 இதழ்கள் வெளியானது. ஆத்மாநாம் "ழ" இதழை இன்லேன்ட் வடிவில் வெளியிட்டிருந்ததை அறிவேன். அந்த வடிவில்தான் ஒரு ஆர்வத்தில், ஆரம்பத்தில் ஒருசில காலக்ரமம் இதழ்களை பிரசுரித்தேன். பிறகு நிறைய கவிதைகள் வர ஆரம்பித்தது. எனவே வடிவத்தை மாற்றி டெம்மி சைசில் கொண்டு வந்தேன்.
'ஆத்மா இலக்கிய நண்பர்கள் குழு மற்றும் சேதுமாதவன் அந்த இதழ்கள் வெளிவர பெரும் உதவியாய் இருந்தார்கள். நான் அந்த சமயத்தில் எந்த வேலை கிடைத்தாலும் செய்வேன். அதில் வரும் பணத்தை இதழ் பிரசுர செலவுக்கு பயன்படுத்தினேன். அச்சு செலவு, தபால்செலவு என நிறைய பணத்தட்டுப்பாடு இருக்கத்தான் செய்தது. இதழ் நின்றுபோகவும் அதுதான் காரணமாகவும் இருந்தது.
வர்ணங்கள் கரைந்த வண்ணத்துபூச்சி
நினைவில் இருக்கிறதா எனது பெயர்
ஒரு குழந்தையை போல உன்
கால்களை சுற்றிக் கொண்டிருந்தேன்
உன் பெயரை என்
நெற்றியில் ஒட்டிக் கொண்டு
மாரில் உதைத்த குழந்தையை
வீசி எறிந்த ஒரு தாயின்
நிழல் நீ
என் நம்பிக்கையின் சிறகுகளை
முறித்து விட்டன உனது விரல்கள்
வர்ணங்கள் கரைந்த வண்ணத்துபூச்சி
எருக்கம்பூவில் அமர்ந்து கொண்டிருக்கிறது
அழகிய கனவுகளை வரைந்து கொண்டிருப்பது
சலசலத்துக் கொண்டிருந்த நீரின்மீது என
தெரியவே இல்லை எனக்கு
கப்பல்கள் கவிழ்ந்தபின்தான் புரிந்தது
எனது கனவுகள் எல்லாம் காகிதத்தில்
என்று
தலைதிரும்பிய குழந்தையை பிரசவிக்கும்
தாயின்நிலைபோல் இருக்கிறது இதயம்
கட்டங்களை நிரப்பி
விளையாடிக் கொண்டிருக்கிறேன்
இப்போது எங்கேனும்
என் பெயர் ஒளிந்திருக்கிறதா
உன் நினைவில் என.
#தியான்சித்தார்த் ஆத்மாஜீவ்
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
THE BUTTERFLY WITH HUES DISSOLVED
Do you remember my name
Like a child I was circling your feet
Sticking your name on my forehead
You are the shadow of a mother
who threw away her child
for kicking her on the bosom
Your fingers had torn the wings of my hope.
The butterfly with hues dissolved
is sitting on ‘Erukkam Poo’
That I was drawing all beautiful dreams
on the flowing waters
I didn’t realize
It was only when the ships turned upside down
I could see that they were paper-dreams.
My heart is like the mother delivering a baby
with its head reversed
I play on
filling the squares
wondering whether my name is hiding
somewhere in your memory.
லதா ராமகிருஷ்ணன் : தமிழ் சிற்றிதழ்களின் காலம் முடிந்து விட்டதெனக் கருதுகிறீர்களா? தமிழில் வெளியாகும் இடைநிலை இதழ்கள் தமிழிலக்கியத்தை முன்னெடுத்துச் செல்ல உதவுகின்றன என்று நினைக்கிறீர்களா?
ஆத்மாஜீவ் : தமிழ் சிற்றிதழ்களின் காலம் முன்போல ஒரு தீவிரமாக இல்லை என்றுதான் நினைக்கிறேன். அதற்காக முடிந்து விட்டதென்றும் பொத்தாம்பொதுவாக கூற முடியாது. கணினியும், ஸ்மார்ட் போனும் வந்து விட்டதால் அச்சிதழ்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு நிறைய. இப்போது இணைய இதழ்களின் காலம் போல தெரிகிறது. நினைத்த நேரத்தில் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பதிவிட்டு உடனுக்குடன் கிடைக்கும் "லைக்" மூலம் திருப்தி அடைகிற சூழலும், வசதியுமிருப்பதால் முகநூலே போதுமென்று நினைப்பவர்கள் நிறைய போ் இருக்கிறார்கள். கவிதைக்கான கட்டுப்பாடு எதுவுமில்லையென்றாலும், நிறைய நல்ல கவிதைகளையும் முகநூலில் வாசிக்க முடிகிறது.
அச்சிட்டு கையில் வைத்துக் கொண்டு வாசித்து வாசித்து கண்மூடி ரசித்து ஆழ்ந்து போகிற அனுபவங்கள் எதுவும், இந்த அறிவியல் சாதனங்களில் இருப்பதில்லை எனக்கு.
ஏதோவொரு வடிவத்தில், வெளிப்பாட்டு முறையில் இலக்கியங்கள் தனது பாதையை வடிவமைத்துக் கொள்ளும். ஓலைகள், காகிதங்கள், இப்போது நவீன சாதனங்கள் என்று வளர்ந்து கொண்டுதான் இருக்கும். இடைநிலை இதழ்கள் என்ற குறிப்பிடப்படும் காலச்சுவடு, கணையாழி, விருட்சம் போன்ற இதழ்கள் தொடர்ந்து தமிழிலக்கியத்தை முன்னெடுத்துச் செல்வதில் மிகப்பெரும் உதவியாகத்தான் இருக்கின்றன என நினைக்கிறேன். மேலும் சில இதழ்கள் தீவிரமான இயக்கத்துடன் வெளிப்பட்டால் நல்லது. எனது இன்றைய நெருக்கடியானச் சூழல் மாறும்போது, எனது சிறுபங்காக மீண்டும் "காலக்ரமம்" இதழ், கவிதை இலக்கியத்திற்கான புத்துயிர்ப்புடன் வெளியிடலாம் என்ற எண்ணம் இருக்கிறது. பார்க்கலாம்.
லதா ராமகிருஷ்ணன் : சமீபகாலமாக நீங்கள் அதிக சோகமான கவிதைகளை எழுதுகிறீர்கள் என்று தோன்றுகிறது. அவற்றுக்கு குறிப்பாக காரணம் ஏதேனும் உண்டா? மிகுந்த மன நெருக்கடியில், நிதி நெருக்கடியில் நீங்கள் இருப்பதாக உங்கள் கவிதைகளிலிருந்தும் முகநூல் பதிவுகளிலிருந்தும் அறிய முடிகிறது. இது குறித்து நீங்கள் சொல்ல விரும்பினால், விவரம் தெரிவிக்கலாம்.
ஆத்மாஜீவ் : ஆமாம் மிகுந்த நிதிநெருக்கடியில்தான் இருக்கிறேன். வாழ்வா சாவா என்ற போராட்டத் தில் தான் இருக்கிறேன். உண்மையில் ஒரு நடைபிணம்போல் வாழ்ந்து கொண்டிருககிறேன். முந்தைய கேள்விக்கு சொன்ன பதிலில் நான் கழுத்தை நெறிக்குமளவுக்கு கடனாளியான காரணங்களை சொல்லி விட்டேன். மகள் திருமணத்திற்குப் பிறகு இருந்த கடன் அளவு, நானும் மகனும் சோ்ந்து கட்டிவிடும்படியாகத்தான் இருந்தது. அவள் தாய்மைபேறு அடைந்த மூன்றாம் மாதத்தில், அவளுக்கு மறுபடியும் வந்த வீசிங் பிரச்சனை, அதுமுதலான மருத்துவச்செலவு, அவளுடைய புகுந்த வீட்டார் கண்டுகொள்ளாத நிலை. சண்டைச் சச்சரவுகளுடன் பிரசவம் வரையிலும், பிரசவத்திற்குப் பின்னும் பத்து மாதங்கள் தொடர்ந்த சண்டைசச்சரவுகள், தனியாரில் வீசிங் பிரச்சனைக்காகப் பார்த்த மருத்துவ செலவினங்கள், அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்ததால் ஏற்பட்ட கடன், ஏற்கெனவே அவளுக்காக வாங்கிய கடனுடைய வட்டி பாக்கி, பேங்க் லோன் EMI. பாக்கி என அதை அடைக்க மறுபடி மறுபடி கடன் வாங்கி கடன் வாங்கி இன்று இந்த நிலைமைக்கு ஆளாகி விட்டேன்.
முகநூலில் கடந்த ஏப்ரல் 2024 முதல் உதவி கோரி மன்றாடுகிறேன். இன்பாக்சிலும் உதவி கேட்டுக் கொண்டிருக்கிறேன். பெரிய அவமானமாகத்தான் இருக்கிறது. வேறுவழி தெரியவில்லை. இருக்கும் இன்னும் கொஞ்சகாலத்திற்கு இப்படி கையேந்திதான் பிழைக்க வேண்டியிருக்குமோ என்ற பயமும் இருக்கிறது. முகநூல் நண்பர்களிடமிருந்து பெரிய அளவில் இல்லையென்றாலும் ஓரளவு நிச்சயமாக உதவி வருகிறது. அவ்வப்போது வரும் அந்த தொகையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, வட்டி பாக்கிகளைத்தான் அடைக்க முடிகிறது. அசலும் மேலுமான வட்டி பாக்கிகளும் அப்படியேத்தான் வளர்ந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து முகநூல் நட்பினரிடம் உதவி கேட்பதும் சங்கடமாக இருக்கிறது. என்ன செய்யப் போகிறேன்? எப்படி சமாளிக்கப் போகிறேன் என தெரியவில்லை.
இப்போது கிட்டத்தட்ட பத்து இலட்ச ரூபாய் அளவுக்கு கடனாளியாக இருக்கிறேன். என சக்திக்கு மீறிய பெரிய கடன்தொகை இது. நினைத்தாலே அடிவயிறு கலங்குகிறது. கடன் பிரச்சனை தான் இப்போது எங்களது வாழ்வை மேலும்மேலும் சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த பேட்டியின் மூலம் எனக்கு உதவி கிடைத்தால், மிச்சமிருக்கும் வாழ்நாளில் சற்றேனும் நிம்மதியாக இருந்து விட்டு போவேன். இரக்கமுள்ள இதயமுள்ளவர்கள் நிச்சயம் உதவுவார்கள் என்று நம்புகிறேன்.
எத்தனையோ சிரமங்களுக்கிடையில் அன்புமகளுக்குத் திருமணம் செய்தோம். அதில் நிறைய கடன். ஆனால் அவள் வாழ்க்கை சரியாக அமையவில்லை. அவள் மற்றும் அவளுடைய குழந்தையின் அவசியத் தேவைகளை நான் பார்த்துக்கொண்டாகவேண்டும்.
மனைவிக்கு மருத்துவ செலவு செய்யக்கூட என்னால் முடியவில்லை. சமீபகாலமாக கவர்மென்ட மருத்துவனையில் மாதாமாதம் போய் மாத்திரைகள் வாங்கி வருகிறாள். சர்க்கரை, இரத்த கொலஸ்ட்ரால், மூட்டுவலி, இரத்தக்கொதிப்பு நோய்களுக்காக. மிகவும் சிரமப்படுகிறாள்.
எனக்கு முதுகுத்தண்டுவடப் பிரச்சனை அதிகமிருப்பதால், மேற்கொண்டு எந்த கடினமான வேலைக்கும் கூடுதலாக செல்ல முடியவில்லை. தலையை சட்டென்று உயர்த்தினால் மயக்கம் வருகிறது. நீண்டநேரம் அமர்ந்திருக்க முடியாது. முடிந்தபோதெல்லாம் படுத்து கிடக்க வேண்டும். 2019ல் செய்ய வேண்டிய கண்புரை இப்போது முற்றிய நிலையிலிருக்கிறது. ஏற்கெனவே கடந்த இருபது வருடங்களாக கிளாக்கோமா (கண் அழுத்த நோய்) இரண்டு கண்களிலும் இருக்கிறது. பார்வை நரம்பு குறைவு. இப்போது புரையும் சேர்ந்து கொண்டது. இடதுபக்க கிட்னியில் கற்கள் வேறு. சமீபகாலமான பிரச்சனைகளில் ஏற்பட்டிருக்கும் மனஉளைச்சலின் காரணமாக இப்போதெல்லாம் அடிக்கடி நெஞ்சுவலி வேறு வந்துவிடுகிறது. மூச்சு விடுவதும் சிரமமாகி விடுகிறது.
கடந்த ஏப்ரல் 2024 முதல் முகநூலில் உதவி கேட்டு பதிவிட்டும், இன்பாக்சில் உதவி கேட்டும் கையேந்திக் கொண்டிருக்கிறேன். முடிந்தவர்கள் உதவுகிறார்கள். சிலர் கேவலமாக பதில் கூறுகிறார்கள். சிலர் உதவ முடியாத தங்களின் சூழல் குறித்து பதில் சொல்வார்கள்.
எழுதுவதுதான் எனது ஒரே ஆறுதல். அதுகூட இப்போது முடியவில்லை. உணவு உறக்கம் எழுத்து வாசிப்பு என்ற எனது இயல்பான வாழ்க்கை முற்றிலும் சிதைந்து விட்டது.
அவ்வப்போது ஆறுதலுக்காக நேர்மறை எண்ணங்களை மனம் சிந்திந்தாலும், அடுத்த நொடியே கடன் பிரச்சனையோ, மகளின் பிரச்சனையோ அந்த எண்ணங்களை சிதைத்து விடுகிறது.
ஆறுபோ் கொண்ட எனது குடும்பத்திற்காகவும், மகளின் வாழ்க்கை சரியாக அமையாததால், வேறுவழியின்றி மகள் மற்றும் பேரனுக்கான தேவைகளுக்காகவும், நானும் மகனும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். கடன் பிரச்சனை ஓரளவு குறைந்தாலும் எங்கள் உணவுத்தேவையும் கொஞ்சமேனும் நிறைவடையும்.
லதா ராமகிருஷ்ணன் : 13. தமிழ் எழுத்தாளர்களுக்கு அவசரகால உதவிக்கென "சப்போர்ட் சிஸ்டம்" இங்கே அரசு மூலம் கிடைக்க வழியிருக்கிறதா? இது அவசியம் என்று நினைக்கிறீர்களா?
ஆத்மாஜீவ் : சப்போர்ட் சிஸ்டம் பற்றி, எனக்கு எந்த விபரமும் தெரியாது. ஆனால் எழுத்தாளர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் நிச்சயம் அரசு மூலம் கிடைத்தால் நல்லது. கிடைத்தால், என்னைப் போல் உடல்ரீதியான பிரச்சனைகளும், அடிப்படை மற்றும் கடன் பிரச்சனையால சிரமப்படும் எழுத்தாளர்களின் மனோநிலை கொஞ்சமேனும் மாறும்.
கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை ஏது? பிரச்சனைகள் இல்லையென்றால் வாழ்வதில் என்ன சுவாரசியம் இருந்துவிடப் போகிறது? ஆனால், துளியளவேனும் ஏதோவொரு புள்ளியில் மனதை ஆசுவாசப்படுத்திக் கொள்ள இடமிருக்க வேண்டும். எந்தப்பக்கம் திரும்பினாலும் சிரமங்களும், துயரங்களும் கவலைகளும் மட்டுமே சூழ்ந்திருந்தால் எப்படி வாழமுடியும்?
இந்த வாழ்வை நான் நன்றாக, திருப்தியாக வாழ்ந்தேன். அதனால் விடைபெற்றுக் கொள்கிறேன் என்று தன்விருப்பப்படி தன்னை முடித்துக் கொளவதற்கு ஒரு கவிஞனுக்கு உரிமையிருக்கிறது. அல்லது என்னை அவமதிக்கும் இந்த வாழ்வை அவமதிப்பதிற்காகவே நான் வாழ்வேன் என்று சூளுரைப்பதற்கும் மனதிடமிருக்கிறது. இந்த இரண்டு நிலைகளுக்கு அப்பாற்பட்டு, சில குடும்பநிர்ப்பந்தமான காரணத்திற்காக வாழ்வும் முடியாமல் சாகவும் முடியாமல் அவஸ்தைப்படுகிற என்போன்ற கவிஞர்கள் எப்படி வாழ்வார்கள்?
மண்ணின் இறுக்கத்தால் வளர்வதுதான் செடிகளின், மரங்களின் இயற்கை. விதைக்குமேல் பாறாங்கல்லைப் போட்டு மூடினால்.....??
ஆத்மாஜீவின் கவிதையும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும்
கூண்டு
எல்லாக் கோணல்களையும்
அழித்துக் கொண்டிருந்தாள் அவள்
அந்த சிறு பெண் குழந்தை
எதுவும் சரியாக இல்லை
மறுபடியும் புதியதாக வரைகிறேன்
என்றாள்
வெள்ளைக் காகிதத்தைத் தந்தேன்
இதில் வரைந்து கொள் மா
வேணாம் மாமா
மரம் நல்லாத்தான் இருக்கு
குருவிதான் சரியாவே பறக்கல
பேசாம ஒரு கூண்டை வரைஞ்சு
அதுல
இந்தக் குருவியை வச்சிடலாமா
என்னைப் பார்த்தாள்
குருவி பறக்கட்டும் மா
பறக்கறதுதான் பறவைக்கு அழகு
கண்கள் மலர புன்னகையுடன்
என்னை பார்த்தாள்
அவளுக்குத் தெரியாது எனக்குள்
கோணல்மாணலாக வரைந்த கூண்டில்
அடைபட்டுக் கிடக்கும்
என் குருவியை.
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
The little girl went on erasing
All that was crooked, haphazard
Nothing is Okay
Let me draw again
Said she
I gave her a white sheet
“Draw in this, my girl”
Don’t want, uncle
The Tree is fine.
It is just that the sparrow
doesn’t fly well.
Shall we draw a cage and
leave the sparrow inside?
She looked at me.
Well, let the sparrow fly, my girl
Bird’s beauty lies in flying
Eyes blooming, with a smile
She looked at me.
She knows not
My sparrow
contained in the cage
scribbled within
with crooked lines crisscrossing.
* கவிஞர் ஆதமாஜீவ் Whatsup & Gpay # 84385 44124 அவரது முகநூற் பக்கம் - https://www.facebook.com/profile.php?id=100016732304451
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.