இன்று கவனயீர்ப்புப் பெறும் சமகால ஈழத்துக் கவிஞர்களுள் இக்பால் அலியும் ஒருவராவார். இவர் ஓர் ஊடகவியலாளராக தன்னை அடையாளப்படுத்தும் அதேவேளை நாடறிந்த கவிஞராகவும் அறியப்படுகிறார். ஓர் ஊடகவியலாளன் தன்னைச் சுற்றி நிகழும் அசாதாரண சம்பவங்களை செய்திகளாக்குவது போல ஒரு கவிஞனும் தான் காணும் சமூக மாற்றங்களை தன் கவிதைகளுக்குள் பாடுபொருளாக்குகின்றான். இவ்வகையில் இக்பால் அலியின் கவிதைகளை நோக்கும்போது ஓர் ஊடகவியலாளனுக்குரிய செய்திப் பார்வையும், நுணுகிய நோக்கும்; இவரின் கவிதைகளில் இயல்பாய் இணைவதோடு சமுதாயப் பற்றுமிக்க கவிதா ஆற்றலும் அதனை மொழிவயப்படுத்துவம் திறனும் இவரிடம் ஒருங்கே அமைந்துவிடுகின்றன.
இக்பால் அலி தனது கவிதைகளில் இயற்கை நிகழ்வுகள்,அனர்த்தங்கள், அன்றாட மனித செயற்பாடுகள், அவற்றின் விகற்பங்கள் என்பனவற்றைப் பேசுகின்றார். இவற்றின் மூலம் கவிதையை ஒரு பரபரப்பு நிலையிலான செய்திக்கு ஒப்பாக மாற்ற முனைவது அவர் கொண்டிருக்கும் சிறப்பம்சமாகும். ஒரு செய்தியை காணொளி மூலம் காட்சிப்படுத்தல், செய்தித்தாளில் பரபரப்பாக்குதல், வானொலியில் ஒலிக்கச் செய்தல், சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாக மாற்றுதல் என்பனவற்றின் மூலம் அதிக பரவலடையச்; செய்யமுடியும். இந்த உத்தியை இக்பால் அலியின் கவிதைகளிலும் காண முடியும்.
சூழலில் காணப்படும் காட்சிப் படிமங்களே இக்பால் அலியின் கவிதைகளது கருப்பொருட்களாகின்றன. இவற்றை ஊடகக் கண்கொண்டு பார்ப்பதினால் உருவாகும் உணர்ச்சிகளை அவர் கவிதையாக்கிவிடுகிறார். ஊடக நிகழ்வுகள் எவ்வளவு சீக்கிரம் மக்களிடத்தில் சென்று சேர்கிறதோ அதுபோலவே கவிதை எனும் இலக்கிய வடிவமும் மக்களிடத்தில் உடனே சென்று சேரவேண்டும் என இவர் கருதுகிறார். இதனால் அவர் எழுதும் கவிதைகள் சமகாலம் என்ற அடிப்படையில் முக்கியத்துவம் பெற்றுக் காணப்படுகின்றன.
இக்பால் அலி தனது கவிதைகளில் எளிய படிமங்களையும் குறியீடுகளையும் உலவ விடுகிறார். இவர், பெரும்பாலும் உணர்வுபூர்வமான சொற்களைத் தேர்ந்தெடுப்பதுடன் அவற்றை கவிதை வடிவத்திற்கேற்றபடி அடுக்குவதிலும் கவனம் செலுத்துகிறார். ஒரே தளத்தில் மரபையும் நவீனத்தையும் இணைத்து இவர் பயணிக்கும் கவிதைப் பயணம் வாசகர்த்தளத்தில் பொதுவான அனுபவங்களைக் கிளர்த்தக் கூடியதாகவுள்ளது.
~~வீரத் தியாகப் பெண்|| எனும் தலைப்பில் இக்பால் அலி எழுதிய கவிதையொன்று இவர் சேகரித்த செய்தியின் சம்பவங்களை விபரிக்கிறது. தான் பெற்ற தகவல்களை வெறும் செய்தியாக வெளியிடுவதிலும் பார்க்க அதனை ஒரு கவிதையாகச் சொல்வதில் இவருக்கிருக்கும் கவிதா ஈடுபாட்டை இக்கவிதையில் காணலாம்.
கண்டி கெலிஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வே இது. தொழிற்சாலைக்குச் செல்ல வந்த பெண். அந்தப் பெண் தன்னந்தனியாக காலையில் வேலைக்குச் செல்லும் சமயம் பார்த்து ஒரு போதை வஸ்துப் பாவனைக்கு அடிமையான ஒருவனிடம் சிக்கிக் கொள்கிறாள். அப்பொழுது அவன் அவளை சூறையாட முயற்சிக்கிறான். ஆனால் அந்தப் பெண் அவனை எதிர்த்துப் போராடுகிறாள். நீண்ட நேரப் போராட்டம். அவளால் வெற்றி கொள்ள இயலவில்லை. இறுதியில் அவள் தோற்றுப் போகின்றாள். மண் அவளுடலை இரையாக்கிக் கொள்கிறது.
சமூகமும் சூழலும் குற்றவாளியாக்கிய ஓர் இளைஞன் மென்மேலும் சீரழிந்ததை இக்கவிதை சுட்டிக் காட்டுகிறது. இதற்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டிருக்கும் போதைக் கலாசாரத்தையும் முதலாளித்துவ இரக்கமின்மைகளையும் கவிஞர் வெளிப்படையாகவே எதிர்க்க முனைகின்றார்.
வாயால் வீணி வடிய வடிய ஓடி
வாடின அப்பாவிப் பூக்களின்
தொண்டைக் குரல் வளையினைப்
பாய்ந்து கவ்விப் பிடித்து
கதறக் கதறக் கடித்துப்
பசி தீர்க்கும் விசர் நாய்களின் சிறையிலே
கண்ணீர்ப் பூக்கள்.
கழுத்தை நெருக்கி இறுதி உயிர் மூச்சு வரை
அழகிய பூவின் சதைத் துண்டுகளை
கடித்து சப்பித் துப்பிடும்
விசர் நாய்களுக்கு சிம்ம சொப்பனமாய்
இறைச்சி எலும்புகள்
தெருக்களில் மலிவு விலையில் விற்கப்படுகின்றன.
இதை வேடிக்கை பார்க்கும்
பாதாள உலக பண முதலைகளே
இங்கு தெருவெங்கும் வீதி உலா வருகின்றார்கள்.
இங்கு வசூல் மன்னர்களின்
போதை மாத்திரையின் வெறியாட்டம்
அரங்கேற்றம் செய்யப்படுகிறது.
பெண்மைக்காக அவலக் குரல் எழுப்புகின்ற ஒரு காவியத்தின் தொடர்ச்சியாக இக்கவிதையை இக்பால் அலி படைத்துள்ளார். கொலைவெறியாட்டம் ஆடிய கயவனொருவன் தண்டிக்கப்பட வேண்டும் என்ற உணர்வைத் தூண்டி அதற்கு உடந்தையாகவுள்ள போதை வஸ்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் மனித மிருகங்கள் ஈவிரக்கமின்றி ஒழித்துக்கட்டப்பட வேண்டும் எனக் கவிதையின் மூலம் குரல் எழுப்புகிறார். மேலும் இத்தகையோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் இக்கவிதையினூடாக வலியுறுத்துகிறார். புhதிக்கப்பட்ட பெண்ணின் உயிர் ஓய்;ந்தாலும் அவள் வரலாற்றை அந்தப் பிரதேசத்தில் ஓடும் மகாவெலி நதி பாடவேண்டுமென்பதும் அவளின் நாமத்தை, புல் பூண்டுகள் எல்லாம் உச்சரிக்க வேண்டுமென்பதும் கவிஞருக்குள் கனன்று எரியும் மனத்தீயின் வெப்ப அலையாகும்.
இக்பால் அலியின் கவிதைகளில் பெண்களின் துயர் குறித்த சம்பவங்கள் மிகுதியாகக் கூறப்பட்டுள்ளன. பொதுவாக ஊடக வெளியில் பிரபல்யம் பெற்ற நிகழ்வுகளையும் பலரின் கவனயீர்ப்பைப் பெறாத செய்திகளையும் இவர் கவிதையாக்கியிருக்கிறார். மேலும் இவர் தனது கவிதைகளில் வாகன விபத்துக்கள், உயிரிழப்புகள், கொரோனானாவின் கொடுமை, ஊரடங்குச் சட்டம். இயற்கைச் சீற்றங்கள், இன முரண்பாடுகள், போராட்டங்கள், வன்முறைகள், சகவாழ்வு, பிரிவினை பேதங்கள், திருட்டுச் சம்பவங்கள் முதலியனவற்றையும் கவனப்படுத்துகிறார்.
“இடரி விழுந்த பூக்கன்று|| என்னும் நீண்டதொரு கவிதை, பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகள் பலவற்றைப் பேசிச் செல்கிறது. பருவம் எய்தா வயதில் காதல் ரீதியாக ஏமாற்றப்பட்டு, குடும்ப ரீதியாக ஒடுக்கப்பட்டு, பொருளாதார ரீதியில் அடிட்டத்தில் சீரழிந்து சின்னாபின்னமாகிய வாழ்வொன்றின் ரணங்களைப் பகிர்கிறது. தான் பெற்றெடுத்த தன் அன்புக் குழந்தையை வளர்த்துக்கொள்ள முடியாமல் அல்லல்பட்டு போதைக்கு அடிமையான கணவனினால் கொடூரமான சித்திரவதைக்குள்ளாகி அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்ணின் வாழ்வியலைச் சித்திரிக்கிறது.
எழும் பசிகளுக்கு
உடலையும் உதிரத்தையும்
உறிஞ்சி
சுவைக்க குடிக்கக் கொடுத்து
இருண்ட வீட்டிலும்
வெளிச்ச விளக்குகள் ஏற்றி
பிண ஊர்தியாய்
உதிர்ந்து போன
பூக் கன்றுகள் நாங்கள்.
பூக்கன்றுகளான பெண்கள் புரட்சிப்படையாய் புறப்படவேண்டும் என்பதனை கவிஞர் கட்டியம்கூறி நிற்கிறார். குடும்ப வன்முறைகளுக்கெதிராகவும் போதைக் கலாசாரத்திற்கெதிராகவும் பெண்கள் திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என்கின்ற சிந்தனையை பொதுவெளியில் கவிஞர் பதிவுசெய்து விடுகிறார். இக்குரல்கள் கவிதையில் ஒலிப்பது போல் சமூக நிலைகளில் ஒலிக்கும்போதுதான் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான விடுதலை கிடைக்கும் என்பது கவிஞரின் நம்பிக்கையின்பால் உள்ளதாகும்.
தினமும் எங்களின் இரத்தத்தை
சூடாக்கி குளிப்பதை விட
இந்தப் பூக்களின் விடியலுக்காய்
கொடூரமான வெறியர்களை
சிறைப்பிடித்து கூண்டிலடைத்து
அடியோடு ஒழிப்போம். புறப்படுங்கள்.
போதையற்ற நாட்டைக் கட்டியெழுப்பி
தேசத்தின் சுவரிலே
வண்ணச் சித்திரங்கள் வரைவோம்! புறப்படுங்கள்!
கவிதையின் பாடுபொருளில் புரட்சியைக் கூட்டிவைப்பது போல சொல்லும் முறையிலும் எளிமையான படிமங்களை புகுத்தி விடுவது இக்பால் அலியின் பண்பாகும்.
எச்சில் பாத்திரம் ஏந்தும்
என் அழகையும் நகத்தையும்
விசக் கிருமிகள் சுட்டுப் பொசுக்கி விடும்.
எரிவாயு அடுப்பு
விரலையும் சுட்டு
உயிரையும் கொல்ல
மகுடி வாசிக்கிறது.
முதலாளியம்மாள்
ஓவ்வொரு வேளைக்கும்
தீ நாக்குகளால்
தீ குச்சிகள் தான் கொழுத்துவாள்
மேற்கண்ட கவிதையில் ஒரு செல்வந்தர் வீட்டிற்கு கூலித் தொழிலுக்காக செல்லும் பெண்ணின் அடிமட்ட வாழ்க்கையின் சித்திரத்தை படிமக்கலை நுட்பத்துடன் வரைந்துள்ளார். கசப்பான உண்மைகளை ஒவ்வொன்றாகச் சொல்லிச் செல்லும் இக்கவிதை ஒரு கட்டத்தில் பல வகையிலான சிந்தனைகளைத் தோற்றுவிக்கின்றது. இத்தகைய கொடுமைகளுக்குக் காரணம் நமது சமூகத்தின் செல்வந்தர்களும் அரசியல்வாதிகளும் மட்டுமல்ல பெண்களைப் பெற்ற பெற்றோர்களும் அவர்களது குடும்பப் பின்னணியும் சேர்ந்ததே என்பதனை என்பதனை ஆழ யோசிக்க வைக்கிறார்.
இக்கவிதை நூலிலுள்ள பெரும்பாலான கவிதைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் குறித்தே அக்கறை கொள்கின்றன. மேலும் இக்கவிதைகள், இம்மக்களின் வுpடிவுக்கான கொள்கைப் பிரச்சாரமாகவும் அமைந்து விடுகின்றன. குறிப்பாக அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடிகளால் நொடிந்துபோன மலையக மக்களின் விடுதலைக்கான கீதங்களாகவும் தம்மை அறிவிக்கின்றன. தன் கவிதைகளினூடாக சமுதாய மாற்றமொன்றினை வேண்டிநிற்கும் கவிஞர் அது சகவாழ்வுடனான உளவியல் பாடமாக அமையவேண்டுமெனவும் பிரயாசைப்படுகிறார்.
இவ்வகையில் ஈழத்து இலக்கியப் பரப்பில் வாழும் கவிஞர்களுள் இக்பாலி அலியும் முக்கியத்துவம் பெறுகிறார். இதுபற்றிக் குறிப்பிடும் சிங்கப்பூரைச் சேர்ந்த முனைவர் கோட்டி திருமுருகானந்தம்; தனது ஆய்வுக் கட்டுரையொன்றில் “பழைய தலைமுறைக் கவிஞர்களில் எம். ஏ. நுஹ்மான், சி. சிவசேகரம், சேலைக்கிளி, மேமன்கவி, இக்பால் அலி முதலானவர்களின் கவிதைகள், பாடுபொருள், எடுத்துரைப்பு முறைகளில் தனித்தன்மையுடன் விளங்குகின்றன.” என்று குறிப்பிடுகிறார். தனது படைப்பிலக்கியத் திறனால் கவிஞர் இக்பால் அலி பலரது கவனத்தையும் ஈர்த்து வருவது நமக்கெல்லாம் மகிழ்ச்சியான செய்தியே.
இக்பால் அலியின் கவிதை எமது நாட்டின் வற்றாத மகாவலி கங்கை. நொந்த மனங்களுக்கு ஒரு தாயின் தாலாட்டு. ஈழத்தாயின் ஒரு வரலாற்றுப் பார்வை. அவருக்கு எம். வாழ்த்துக்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். . இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.