இறைவன் எழுதிய மானுடம் என்ற புத்தகத்தில் ஏற்பட்ட சில இலக்கணப் பிழைகள் திருநங்கைகள். ஆண்பால், பெண்பால் என்ற இரண்டு பாலினத்தவரையும் தாண்டி தற்காலத்தில் மூன்றாம்பாலினத்தவா் என்ற குரலை அதிகமாகக் கேட்க இயலுகின்றது. பிறப்பால் ஆணாகவோ பெண்ணாகவோ இருந்து மாற்றுப்பாலினத்தவரின் உணா்வுகளை மிகுதியாகப் பெற்றவா்களை மூன்றாம் பாலினத்தவா் என்று குறிப்பிடுகின்றனா். ஆனால் மானுடவியலாளா் மாறுபட்ட உணர்வுகளைக் கொண்டவா் என்பதனை ஏற்பது இல்லை. ஏனெனில் உணா்வுகள் குறிப்பிட்ட சமுதாயத்தாரால் கட்டமைக்கப்பட்டு அம்மக்கள் அச்சமுதாயத்தால் வார்க்கப்படுகின்றனரே அன்றி பிறப்பால் அமையும் உணா்வுகள் என்பது வேறு என்பது மானுடவியலாளா் கருத்து. இம்மூன்றாம் பாலினத்தவர் குறித்த கருத்துகளை தற்காலத்தில் மட்டும் இல்லாமல் தொல்காப்பியா் காலம் முதற்கொண்டே காணமுடிகிறது. இலக்கியங்கள் இவா்கள் பற்றிய குறிப்புகளை நோ்மறையாகவும் எதிர்மறையாகவும் பதிவு செய்துள்ளன அவற்றை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
திருநங்கைகள்
தம்பால் நிலையில் இருந்து உடல்மற்றும் உளநிலையில் திரிபடைபவர்களே திருநங்கைகள் ஆவர். இவர்களில் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறுபவர்களும் உண்டு. பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறுபவர்களும் உண்டு. திருநங்கை என்றசொல் இவ்விருவருக்கும் வழங்கப்பட்டுள்ள பொதுப்பெயர் ஆகும். இந்தஆய்வுக்கட்டுரையில் திருநங்கைகள் என்ற சொல்லாட்சியே பயன்படுத்தப்பட உள்ளது.
திருநங்கைகள் வேறுபெயர்கள்
எதிர்பாலினத்தவர் உணர்வுகளைப் பெற்று இருப்பவர்களைக் குறிக்க அரவாணிகள், அலிகள், திருநங்கைகள் என்ற பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. “ வேதஇலக்கியங்கள், திருத்தியபிராக்ரிதி, சாண்டா, கலிபா, பாண்டா, காமி என்ற பெயர்களாலும், கிறித்துவமதத்தின் வேதநூலான பைபிள் அண்ணகர் என்ற சொல்லினாலும் திருநங்கையைக் குறிப்பிடுகின்றது. மனுஸ்மிருதி திருநங்கையை நிபூசகம் என்ற பெயரில் குறிப்பிடுகின்றது”1 என்று குறிப்பிடுவா்.
அலி என்பதற்கு தமிழ்ச்சொற்றொடர்அகராதி,“பேடி, பெண்டகன்,நபுஞ்சகன், சண்டன்”2 என்று விளக்கம் தருகின்றது.
க்ரியாவின் தமிழ்அகராதி அலிஎன்பதற்கு, “அரவாணி, Person who is neither male nor female”3 என்றும், அரவாணிஎன்பதற்கு, "உடல்அமைப்பைக் கொண்டு ஆண்என்றோ, பெண் என்றோ விவரிக்க முடியாத நபர் third sexual,trans gender ”4 என்றும் பொருள் தருகின்றது.
நிகண்டுகள் இலக்கண நூல்களில் மூன்றாம் பாலினத்தவா்
திருநங்கைகள் குறித்து நிகண்டுகளிலும், இலக்கண நூல்களிலும் குறிப்புகளைக் காணமுடிகிறது. திவாகரநிகண்டு திருநங்கைகளை பேடி என்று குறிப்பிட்டு அவா்களுக்கான செயல்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது.
“பேடிஇலக்கணம் பேசுங்காலை
நச்சுப்பேசலும் நல்லுரைஓர்தலும்
அச்சுமாறியும் ஆண்பெண்ஆகியும்
கைத்தலம் ஒன்றைக்கடுக வீசியும்
மத்தகத்து ஒருகை மாண்புறவைத்தலும்
விலங்கிமதித்தும் விழிவேறுஆகியும்
துளங்கித் தூங்கிச் சுழன்று துனிந்தும்
நாக்குநாணியும் நடம்பல பயின்றும்
பக்கம் பார்த்தும் பங்கிதிருத்தியும்
காரணம் இன்றிக் கதம்பல கொண்டும்
வார்அணி கொங்கையை வலிய நலிந்தும்
இரங்கியும் அழுதும் அயர்ந்தும் அருவருத்தும்
குரங்கியும் கோடியும் கோதுகளசெய்தும்
மருங்கில் பாணியை வைத்தும் வாங்கியும்
இரங்கிப்பேசியும் எல்லேல் என்றும்
இன்னவை பிறவும் இயற்றுதல் இயல்பே”5
என்று திவாகரம் திருநங்கைகளுக்கான இலக்கணத்தை விவரித்துச் செல்கிறது.
“குறளொடு செவிடு மூங்கை கூன்மருள் குருடுமாரே
உறுமுறுப்பில்லா பிண்டம் ஓதிய எண்மெய்யெச்சம்”6
என்று சூடாமணிநிகண்டும்,
“குறள் செவிடு மூங்கை முடங் கூன் குருடு
துறுபிண்டம் பேடுடனே யெச்சமெட்டாம்”7
என்று உரிச்சொல் நிகண்டும் உடல் உறுப்புக் குறைபாடு உடையவா்கள் என்ற நிலையில் இவா்களைப் பற்றிப் பேசுகின்றது. தொல்காப்பியர் பெண் அரவாணிகளைப் பற்றி மட்டும் பேசியுள்ளார். நன்னூலாரும் ஐந்து பால்களுக்கும் இரண்டு திணைகளுக்கும் பொதுவானவா்களாக திருநங்கைகளைச் சுட்டியுள்ளார். அறுவகை இலக்கணம் இவா்களை அலிகள் என்று குறிப்பிடுகின்றது. மேலும் அலிப்பாலை உயா்திணையில் இணைக்காமல் அஃறிணையில் சுட்ட வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது.
நோ்மறைப்பதிவு
தமிழ் இலக்கியங்களில் திருநங்கைகளைக் குறித்த நோ்மறைப் பதிவுகளை காணலாகின்றது. திருமூலர்திருநங்கைகளின்பிறப்புஉருவாகும்முறைகுறித்து,
“ஆண்மிகில்ஆணாகும்பெண்மிகில்பெண்ணாகும்
பூணிரண்டொத்துப்பொருந்தில்அலியாகும்”
( திருமந்திரம்,கருஉற்பத்தி 26 462 1-2 )
என்றபாடலடிகளிலும்,
“குழவியும்ஆணாம்வலத்ததுவாகில்
குழவியும்பெண்ணாம்இடத்ததுவாகில்
குழவியும்இரண்டாம்அபானன்எதிர்க்கில்
குழவிஅலியாகுங்கொண்மால்ஒக்கிலே”
( திருமந்திரம்,கருஉற்பத்தி 30 466 )
என்றபாடலிலும்குறிப்பிடுகின்றார். ஆண்,பெண் பிறப்பு போன்றே திருநங்கைகள் பிறப்பும் இயல்பானது என்ற கருத்தினை அவரது பாடல்களில் காணமுடிகின்றது.
மேலும்பக்தி இலக்கியங்கள் இறைவன் ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் விளங்குபவன் என்ற நிலையில் இறைவனுக்குச் சமமாக திருநங்கைகளைச் சுட்டுகின்றன. திருமூலர்,
“காண்கின்றகண்ணொளிகாதல்செய்தீசனை
ஆண்டென்அலியுருவாய்நின்றஆதியை”
( திருமந்திரம், மறைப்பு 3- 420. 1-2 )
என்றுகுறிப்பிடுகிறார்.மாணிக்கவாசகரும்,
‘ஆண்எனத்தோன்றிஅலிஎனப்பெயர்ந்து’
( திருவாசகம்,திருவண்டப்பகுதி,பா – 138 )
‘பெண்மையனேதொன்மைஆண்மையனேஅலிப்பெற்றவனே’
( திருவாசகம், நீத்தல்விண்ணப்பாம்,பா.22 )
என்று குறிப்பிடுகின்றார். நம்மாழ்வார் திருவாய்மொழியில்,
‘ஆணல்லன்பெண்ணல்லன்அல்லாஅலியுமல்லன்’
( நாலாயிரதிவ்யபிரபந்தம் 2245 – 1 )
என்றுகுறிப்பிடுகிறார். பட்டினத்தாரும்,
“ஆணாகிப்பெண்ணாயலியாகிவேற்றுருவாய்
மாணாகிநின்றவகையறியேன்பூரணமே”
( பட்டினத்தார்பாடல்கள்பா.249 )
என்றுகுறிப்பிடுகின்றார். தற்கால இலக்கியங்களிலும் கி.ராஜநாராயணனின் கோமதி சிறுகதை , சு.சமுத்திரத்தின் வாடாமல்லி நாவல் ஆகியவை திருநங்கைகளின் வாழ்வியலை, அவா்களின் வாழ்வியல் சிக்கல்களைப் பதிவு செய்துள்ளன.
மாற்றுப்பாலினமாகமாறியபாத்திரங்கள்
இதிகாசங்களிலும், புராணங்களிலும் மாற்றுப்பாலினமாக மாறிய பாத்திரங்களைக் காணமுடிகின்றது. இப்பாத்திரங்கள் இன்றளவும் சிறப்புப் பெற்ற பாத்திரங்களாக மட்டுமே மக்கள் மனதில் பதிந்துள்ளன. அர்ஜீனன் ஊர்வசியின் சாபத்தால் திருநங்கையாக மாறி பிருகந்நளை என்னும் பெயரில் வாழ்ந்தமை, அம்பை என்ற பெண் சிகண்டி வடிவம் கொண்டு பீஷ்மரை வென்றமை, அமிர்தம் கடைந்த போது திருமால் அசுரர்களை மயக்க மோகினி வடிவம் எடுத்தமை, திருமகள் தன்னைவிட அழகு யாரும் இல்லை என்று இறுமார்ந்து இருந்த போது விஷ்ணு எடுத்த திருக்கோலம், பத்மாசுரனை அழிப்பதற்காக சிவனுடன் கூட திருமால் எடுத்த பெண்ணுரு, தாருகாவனத்து ரிஷிகளை மயக்க திருமால் எடுத்த பெண்ணுரு, அரவானுக்காக திருமால் மேற்கொண்ட பெண்ணுரு என்பது போன்ற பதிவுகள் மாற்றுப்பாலினமாக மாறிய மனிதர்கள், இறைவன் குறித்த கருத்துகளைப் பதிவு செய்துள்ளன. இந்த அடிப்படையிலேயே பக்திஇலக்கியங்கள் திருநங்கைகளை வேறாகப் பார்க்காமல் இறைவனுக்கு நிகராகப் படைத்துக் காட்டியுள்ளன எனலாம்.
எதிர்மறைப்பதிவு
உலகப்பொதுமறை திருக்குறளில் பேடி என்ற சொல்லாட்சியினையே காணமுடிகிறது. வீரம் இல்லாதவா்கள் கற்றல் திறமையற்றவா்கள் எனும் போக்கில் திருவள்ளுவா் பேடி என்னும் சொல்லாட்சியைப் பயன்படுத்தியுள்ளார். இதனை,
“தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்” ( குறள் - 708 )
“பகையத்துள் பேடிகை யொள்வா ளவையத்து
அஞ்சுமவன் கற்ற நூல்” ( குறள் - 822 )
என்ற குறள்களால் அறியலாகின்றது. நாலடியாரில் அலி என்னும் சொல்லாட்சியைக் காணமுடிகிறது. முற்பிறவியில் தமக்குரிய செல்வம் முதலான வலிமை காரணமாக மாற்றார் மனைவியிடம் சென்றவர் இப்பிறவியில் திருநங்கையாய்ப் பிறந்து கூத்தாடிப் பிழைப்பர் என்று குறிப்பிடுகின்றது.
“வலியார் பிறர் மனைமேல் சென்றாரே இம்மை
அலியாகி ஆடி உண்பார் ( நாலடியார் – 51 1-2 )
என்ற பாடலடிகளில் நாலடியார் அலி பிறப்பு இழிவானது என்னும் கருத்தினை முன்வைக்கின்றது .
மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலையின் அழகைக் குறிப்பிடும் போது
“படையிட்டு நடுங்கும் காமன் பாவையை
ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ
பேடியா் அன்றோ பெற்றியின் நின்றிடின்”
( மணிமேகலை – மலர்வனம்புக்க காதை 23-25 )
என்று திருநங்கைகள் இழிவாகச் சுட்டப்படுகின்றனா்.சீவகசிந்தாமணியிலும் வீணாபதி என்னும் திருநங்கையின் பாத்திரம் எதிர்மறையாகவே படைக்கப்பட்டுள்ளது. இவை மட்டும் அல்லாது இலக்கியங்களில் திருநங்கைகளைப் பற்றிய பதிவுகள் மிகுதியாக உள்ளன.அவை மேலும் ஆய்தற்குரியன.
முடிவுரை
சங்க இலக்கியங்களில் மிகுதியும் திருநங்கைகள் குறித்த பதிவுகளைக் காணஇயலவில்லை. அற இலக்கியங்கள் அறம் வலியுறுத்துவதனை நோக்கமாகக் கொண்டு எழுந்தவை ஆதலால் அவை தவறு செய்தால் உடல்குறைபாடு உடைய திருநங்கைப் பிறப்பினை அடையநேரிடும் என்று மக்களை கண்டிக்கும் வகையில் திருநங்கைகளைப் பதிவு செய்துள்ளன. பக்தி இலக்கியங்கள் உயிர்கள் அனைத்திலுமே இறைவனைப் பார்ப்பதால் அவை திருநங்கைகளைப் பேதப்படுத்திப் பார்க்கவில்லை. பின்னா் எழுந்த காப்பியங்களில் திருநங்கைகளைப் பற்றிய குறிப்புகள் அவர்களை சிறப்பு செய்வதாக அமையவில்லை. தற்கால இலக்கியங்களான சிறுகதைகள், புதினங்கள், புதுக்கவிதைகள் திருநங்கைகளின் வாழ்வியல் சிக்கல்களை தற்காலத்தில் பதிவு செய்து வருகின்றன. திரைப்படங்களும் திருநங்கைகளை நோ்மறையாகவும் எதிர்மறையாகவும் படம்பிடித்துக் காட்டுகின்றன. எவ்வகையிலேனும் திருநங்கைகளை சகஉயிராக மனிதர்கள் உணர்ந்தால் மட்டுமே அவா்களின் வாழ்வில் மலர்ச்சி ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
சான்றெண் விளக்கம்
1. மகாராசன்தொ.ஆ.,அரவாணிகள்,வா.இராஜேஷ்,பச்சையம்படர்ந்து கொண்டுதான் இருக்கும்ப.187
2. வீ.ஜே.செல்வராசு, தமிழ்ச்சொற்றொடர் அகராதி,ப.68
3. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, ப.68
4. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி ப.58
5. மு.சண்முகம்பிள்ளை, இ.சுந்தரமூர்த்தி(பதி),திவாகரம்,ப.930
6. சூடாமணிநிகண்டு,நூ.97
7. உரிச்சொல்நிகண்டுநூ.27
Ponni B - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.