அத்தியாயம் (17) நடுக்காட்டில் வழிதப்பிய நாயகன்!
"கண்ணம்மா, எதற்காக இங்கு வந்து பிறந்தோம்?" திடீரென நான் கேட்கவே மனோரஞ்சிதம் சிறிது திடுக்கிட்டுப் போனாள்.
"என்ன கண்ணா? உனக்கு என்ன நடந்தது? ஏனிந்தக் கேள்வி? அதுவும் இந்தச் சமயத்தில்" என்று கேட்கவும் செய்தாள். அத்துடன் என் தோள்களைப் பிடித்துக் குலுக்கினாள்.
"கண்ணம்மா, எனக்கு அடிக்கடி வரும் கேள்விதான். இதிலொன்றும் ஆச்சரியப்படுவதிற்கில்லையே. நீ இவ்விதம் திடுக்கிடுவதுதான் வியப்பைத் தருகிறதடீ"
"கண்ணா, சில விடயங்களில் கேள்வி கேட்கக் கூடாது. இருப்பின் இரகசியமும் அவற்றிலொன்று"
'கண்ணம்மா, எனக்கு அதில் உடன்பாடில்லை. கேள்வி கேட்பது பகுத்தறிவு படைத்த மனிதரின் பிரத்தியேக உரிமை. எப்பொழுதும் பாவிக்க வேண்டிய உரிமை. இருப்பிலொரு தெளிவினை அடைதற்கு இவ்விதமான கேள்விகள் அவசியமில்லையா கண்ணம்மா?"
"கண்ணா, என்னைப்பொறுத்தவரையில் அவசியமில்லை. ஏன் இவ்விதம் நம் இருப்பு இருக்கிறது? எதற்காக வந்து பிறந்தோம்? இருப்பில் அர்த்தமுண்டா? இவை போன்றா கேள்விகளுக்கு ஒருபோதும் சரியான விடைகள் கிடைக்கப்போவதில்லை. ஏனென்றால் நாம் படைக்கப்பட்டுள்ள , உருவான விதம் அப்படியிருக்கிறது கண்ணா? எப்படி எறும்பொன்றால் எம்மைப் புரிந்துகொள்ள முடியாதோ அதுபோல்தான் எம் நிலையும்.எமக்கு மேலான நிலையிலுள்ள பலவற்றைப் புரிந்துகொள்ளும் நிலையில் நாமில்லை. கிடைத்ததை ஏற்றுக்கொண்டு, இன்று புதிதாய்ப் பிறந்தோமென்று எண்ணி, நடந்ததைப்பற்றிச் சிந்தனையை நீக்கி , இருப்பை எதிர்கொள்வதுதான் நல்லதென்பேன் கண்ணா."
"கண்ணம்மா, நீ சொல்வது ஒருவிதத்தில் சரிதான் என்றாலும் என்னால் அப்படியெல்லாம் இருந்து விடமுடியாது. எதற்காக எமக்குப் பகுத்தறியும் சிந்தனையும் தரப்பட்டிருக்கிறது. அதனைப் பாவிப்பதற்குத்தானே. இருப்பில் அர்த்தமிருக்கோ, இல்லையோ அது பற்றிச் சிந்திப்பதிலிருந்தும், அது பற்றிய தேடலிலிருந்தும் என்னை யாரும் தடுத்துவிட முடியாது. நானே என்னைத் தடுக்க மாட்டேன் கண்ணம்மா."
"அப்படித்தான் இருப்பேன் என்று நீ அடம் பிடித்தால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது கண்ணா. நீ அப்படியே இருப்பதில் எனக்கும் ஆட்சேபணையில்லை. ஆனால் நான் இப்படித்தான் இருப்பேன் கண்ணா. உனக்கு ஆட்சேபணையேதுமில்லையே"
இவ்விதம் கூறிவிட்டு மனோரஞ்சிதம், வழக்கம்போல் தனக்கேயுரிய குறும்புத்தனத்துடன் கண்களைச் சிமிட்டினாள்.
என் சிந்தனையோ விரிந்துகொண்டிருந்தது. எதற்காக இவ்விருப்பு? இவ்வுலகம்? இப்பிரபஞ்சம்? எதற்காக? நம்மைச் சுற்றிக்கிடக்கும் உயிர்களுக்கு ஒவ்வொரு நாளும் புது நாள். உணவு தேடி, உண்டு , களித்து, கூடிக்குலாவி, இனம் பெருக்கி இருந்துவிடுவதுடன் அவற்றின் இருப்பு முடிந்து விடுகின்றது. நாமோ? நாமே உருவாக்கிய சமுதாயச் சட்டதிட்டங்களுக்குள் சிக்கி, அவற்றின் தாக்கங்களில்ருந்து தப்பிப்பிழைத்தலுக்காகப் போராடுவதிலேயே வாழ்நாளைக் கழித்து விடுகின்றோம். இச்சமுதாய அமைப்பின் தாக்கங்களே இனம், மதம், மொழி, வர்ணம் எனப்பல முரண்களை ஏற்படுத்தி விட்டன. போர்களால் நம்முலகை நிறைத்து விட்டன. சாதாரணக் குற்றச்செயல்களிலிருந்து பெருங்குற்றங்கள் வரை நிகழ்வதற்கு அடிப்படைக்காரணங்களாக இருக்கின்றன. ஒரு சில உளவியல் காரணங்கள் காரணமாக ஏற்பட்டாலும், 99 வீதமானவை நாம் உருவாக்கிய இச்சமுதாய அமைப்புகள் மனிதர்கள் மேல் ஏற்படுத்தும் தாக்கங்களின் விளைவுகளே.
"என்ன கண்ணா, என்ன மீண்டும் சிந்தனையில் மூழ்கிவிட்டாய்?"
"கண்ணம்மா, என்னால் நீ சொல்வதுபோல் ஒருபோதுமே இருந்துவிட முடியாது. இருக்கும்வரை என் தேடலும் ஓயாது."
"கண்ணா, ஒருவிதத்தில் சிந்திப்பதிலுமோர் இன்பம் இருக்கத்தான் செய்கிறது இல்லையா?"
"சரியாகச் சொன்னாய் கண்ணம்மா. சிந்திப்பதிலுள்ள இன்பம் என் சிந்தையை எப்போதும் மயக்கும் பேரின்பமடி. இயற்கையின் பேரழகில் எமை மறந்து அது பற்றிச் சிந்திக்கின்றோம். அச்சிந்திப்பில் இன்பம் துய்க்கின்றோம். வாசிப்பில் அதனால் விளையும் சிந்திப்பில் எமை மறக்கின்றோம். இன்பம் அடைக்கின்றோம். இறுதியில் இருப்பின் இறுதிவரை இன்பம் அடைதலொன்றையே நாடி எம் அனைத்துச் செயல்களும் இருந்து விடுகின்றன. இல்லையா கண்ணம்மா?"
"கண்ணா நீயொரு தத்துவ வித்தகன். எவ்வளவு இலகுவாக இருப்பின் தன்மையைக் கூறிவிட்டாய். உண்மையில் இருக்கும்வரை நாம் அனைவரும் செய்யும் செயல்கள் எல்லாமே ஏதோ ஒரு வகை இன்பத்தை நாடுபவையாகவே இருக்கின்றன. ஆழ்ந்து பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. இல்லையா கண்ணா? பல்வகையான சிற்றின்பங்களுக்குள் மூழ்கி அவற்றை நாடிச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நாம் இறுதியில் அச்சிற்றின்பங்களின் தேவைகள் அற்ற நிலையில் பேரின்பத்தை நாடிச் சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றோம். இல்லையா கண்ணா?"
"கண்ணம்மா நீயொரு தத்துவ வித்தகி' என்றேன். 'என்ன பந்தை என் பக்கமே திருப்பி விடுகின்றாயா கண்ணா?" என்றவளை வாரியிழுத்து அணைத்துக்கொள்கின்றேன்.
"என்ன சிற்றின்பமா கண்ணா" என்று குறும்பாக மீண்டும் கண்களைச் சிமிட்டியவளைப்பார்த்துக் கூறுகின்றேன் "இல்லை கண்ணம்மா. நீ என் பேரின்பம்" என்று.
காலக்கடலின் குமிழியென அர்த்தமற்ற
குறுவாழ்வில்
அவலங்களே அனர்த்தங்களாயவிந்திட
அர்த்தமற்றதொரு வாழ்வு.
'பொய்மையின் நிழல்படர்ந்து'
புழுங்குமுலகிலெல்லாமே நாசம்;
படுநாசம்; அழிவு; அழிவுதான்.
காரணமற்ற வாழ்வின் காரணம்தான்
யாதோ?
வெளியே, வெற்றிடமே, விரிகதிரே!
விடை பகின்றிடாயோ?
விடை பகின்றிடாயோ?
சலிப்பின் அலைக்கழிப்பில்
நலிந்திட்ட வுலகில்
வழிந்திடும் சோகங்களென்றுமே
தெளிந்திடாவோ?
அண்டச் சுடர்களே! அண்ரமீடாக்களே!
புதிரை அவிழ்ப்பீரோ? அன்றி,
முதிர வழி சமைப்பீரோ? கூறுவீர்.
நடுக்காட்டில் வழிதப்பிய நாயகன்
நானென்றால் சிரிக்காதீர்.
திக்குத் திசையோ புரியவில்லை.
திணறலினில் மூச்சு முட்டித்
தடுமாறினேனே.
என்றாலுமொரு விளக்கமெங்கோ
ஒளிந்துதானுள்ளது.
விளக்கிடுவேன்; விளக்கிடுவேன்; அவ்
விளக்கின் ஒளிதனிலே
வழிதனைக் கண்டிடுவேன்; அவ்
வழிதனைக் கண்டிடுவேன்.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.