அத்தியாயம் ஆறு - அடுத்த நாள்
" முதல் நாளைப் போல அதிகம் ஓடாமல் கிட்ட இருக்கிற சிறிய டவுண் பக்கம் போவோம் " என்றாள் பூமலர் . அவர்கள் சென்ற இடம் வூத்வில் . விவசாயப் பண்ணைகளிற்கு மையமாக இப்படி ஒரு சந்தைகடை ( ஃபாம் மார்க்கட்) , மற்றும் வேறு சில கடைகளும் சேர்ந்த தொகுதிகள் அங்காங்கே இருக்கின்றன . " நான் இந்த கடையிலே வந்து நல்ல காய்கறிகளை வாங்கிறேன் " என்றாள் பூமலர் . அந்த மார்க்கட் கடையில் வீட்டிற்கு வேண்டிய சகலப் பொருட்களும் நிறைந்த பெரிய கடையாக இருக்கிறது . எல்லாம் மனித தயாரிப்புடைய பழமைச் சாயல் . அவற்றை ரசனையோடு பார்த்தார்கள் லொப்ஸ்டர் இடுக்கிகள் தொங்கின்றன . நண்டு போன்ற (ஓடு) கோதுகளை உடைத்து சாப்பிடுவதற்கு உபயோகிக்கப்படுகிறது . இடுக்கிகளையும் வைக்கிறார்கள் . இங்கே , உணவகங்களில் லொப்ஸ்டர் பேகர் சன்விச்கள் கூட விற்கப் படுவதாக கேள்வி .
பூமலர் சமைக்கிறதுக்கு வாங்கி விட்டு , ஐஸ்கிரீமையும் வாங்கினார்கள் . பக்கத்தில் பூங்கா போல இருந்த இளைப்பாறும் இடத்தில் ஆடு ,மாடு , பறவைகளை கம்பிக் கூண்டில் வைத்திருக்கிறார்கள் . அவற்றிற்கு போட உணவையும் மெசினில் டொலரைப் போட்டு எடுத்து சாப்பிட போடலாம் . வங்கிகள் , மற்றும் ரொரொன்ரோவில் இருக்கிற மாதிரியான ஒரு கடையையும் கண்ணில் காணவில்லை . எங்கையும் ஓரிரண்டு இருக்கலாம் . ஐரோப்பியர்கள் உணவை ரசித்து சாப்பிடுறவர்கள் . உணவகங்கள் வழியே இருந்து சாப்பிடுறவர்கள் இல்லை . குறைந்த வாழ்க்கைச் செலவு . சிக்கனம் உள்ளவர்கள் . சேவைப்பிரிவினரே கடையே தவம் என அலைபவர்கள் . இங்கே ஒரு கிராமியமே முழுதாய் படர்ந்திருந்தது . வியாபாரம் இருந்தால் தானே கடைகள் பூக்கும் . தவிர , மக்கள் தொகையும் கூடுதலாக இருக்க வேண்டும் . இங்கே இரண்டும் இல்லை .
இன்னொரு நாள்
" வீட்டிற்கு கிட்டவாக சில கிலோ மீற்றர் நடந்து விட்டு வரலாமே " என்று கிளம்பினார்கள் .ரோஜா , அங்கே காட்டிலே தானாக வளர்கிற செடியாக இருக்கிறது . காட்டு ரோஜாவை பூமலர் காட்டினாள் . அது பூ பூத்து தக்காளிப்பழம் போன்ற சிவப்புப் பழக்கொத்துடன் பார்க்க ஆச்சரியமாக இருந்தது . தில்லை இதுவரையில் இப்படி காய்த்தை , பூத்ததை பார்த்ததேயில்லை . ஜெயந்தி " நான் ஊரிலே பார்த்திருக்கிறேன் " என்றாள் . ரொரொன்ரோவிலும் பழங்களுடன் இருக்கிறது தான் அவன் அதை ரோஜாசெடி என நினைத்திருக்கவில்லை , காட்டுச்செடியாக மல்பெரி , புளுபெரி கூட இருந்தன . அதை பறித்து வாயில் லபக் என போட்டுக் கொண்டான் . சுவையாகத்தான் இருந்தது . வீதியில் இருந்தால் தூசி படர்ந்திருக்கும் . இது பசுமைப் பூங்கா . நடக்கிற ' ட்ரெயில்' பகுதி . அடிக்கடி பெயிற மழையால் கழுவி சுத்தமாகவே இருக்கும் . நீர் தேங்கிய குளம் ஒன்றிருந்தது . அதற்கு வருகிற வாய்க்கால் மீது பாலம் அமைத்து ஒரு வளையமாக குளத்தை சுற்றி வரலாம் காலையில் நடை போடுறவர்கள். சிலர் எதிர்பட்டார்கள் .
சிரித்து " ஹலோ ! குட்மொனிங் ."என்று விட்டு போனார்கள் . பதிலுக்கு சிரித்து கை காட்டினார்கள் . வழியில் . வீதியை நோக்கி இருந்த பழைய வெயார்கவுஸின் ஒரு சுவரில் பழங்குடிமகனின் படம் வரைந்திருந்தது . சும்மா அதையும் ' கிளிக்' . " நான் இங்கே அடிக்கடி நடக்கிறேன்" என்கிறாள் பூமலர் . வீட்டிற்கு வர மழை பிடித்துக் கொண்டது . சூடான தேனீருடன் அராலிக்கதை , குடும்பக்கதை என பலதைக் கதைத்துக் கொண்டிருந்தார்கள் . இடி முழக்கத்துடன் மழையும் கொட்டியது .
கலிபஸ் துறைமுகம்.
காலை விடிந்தது . பூமலர் தான் முதலில் எழும்பி விடுகிறவள் . பூமலர் ,வீட்டினுள் இருந்த சேதனக் குப்பையை போட்ட மூடியுடன் கிடக்கிற பச்சை பிளாஸ்டிக் வாளியை சரித்து இழுத்துக் கொண்டு போய் வீதி ஓரத்தில் வைத்தாள் . முன்புறத்தில் புல் வெட்டப்பட்டிருந்தது . ஜேம்ஸ் அவர்கள் வீட்டு புல்லை வெட்டுற போது பூமலர் வீட்டுப் புல்லையும் வெட்டி விடுகிறான் . அவற்றை கம்பி விளக்கு மாறால் கூட்டி அள்ளி எடுத்து புறோன் பையில் போட்டுக் கொண்டிருந்தாள் . தில்லை , முகம் கழுவி விட்டு கீழே இறங்கி வந்தவன் , ஜன்னலூடாகப் பார்த்து விட்டு வெளியில் வந்தான் . " இண்டைக்கு பச்சை குப்பை எடுக்கிற நாள் எடுதிட்டு போய் விட்டார்கள் . கொஞ்சம் , கொஞ்சமாக எடுத்து பையில் போடுவேன் . இனி அடுத்த கிழமை தான் எடுப்பார்கள் .அவசரப்படத் தேவையில்லை " என்றாள் . " பெரிய வேலை தான் " என்றான் . " இங்கே எல்லோரும் தாங்களே புல்லை வெட்டிக் கொள்கிறவர்கள் . எனக்கு ஜேம்ஸ் தான் வெட்டி விடுறவன் . நான் ரொரொன்ரோவில் இருக்கிற போது தெரேசா வீட்டினர் வீட்டை நன்கு பார்த்துக் கொள்வினம் . விமானத்தில் வார போது காரையும் கொண்டு வந்து தரிப்பிடத்தில் விட்டு விட்டு போய் விடுவினம் . நான் எடுத்து கொண்டு வருவேன் . போற போதும் தரிப்பிடத்தில் விடுவேன் . அவர்கள் வந்து எடுத்து வந்து வீட்டிலே விடுவார்கள் . ஜேம்ஸ் செய்யிற வேலைக்கு பணமும் கொஞ்சம் கொடுப்பேன் . அவனும் சந்தோசப்படுவான் . " என்றாள் .
அந்த குடும்பம், எவ்வளவு உதவியாய் இருக்கிறது . " மீள்சுழற்சி குப்பையை எடுக்கிறதில்லையா ? " என்று கேட்டான் . இங்கே எல்லா வீடுகளில் , அப்பார்ட்மெண்டுகளில் இரண்டு குப்பைகள் தான் இருக்கின்றன . " இல்லை . அது சேர , நாம் தாம் எடுத்துக் கொண்டு போய் அந்த மையத்தில் போட வேண்டும் . கொஞ்சம் தூரத்தில் இருக்கிறது . அது சேர கன நாள் எடுக்கும் " . ரொரோன்ரோவில் இரண்டையும் நகரசபையே எடுக்கிறது . " இப்படி குறைத்ததாலே , இங்கே ( சோலை) வரியும் குறைவு " என்று சிரித்தாள் . அவனும் உதவ விரும்பினான் " நான் என்ன செய்ய வேண்டும் " என்று கேட்டான் ." விளக்குமாறால் அழுத்திக் கூட்டாமல் மெதுவாகக் கூட்டு . புல்லு சேதம் அடைந்து விடும் " என்று தந்தாள் . அவன் கூட்டி உருட்டி விட அவள் எடுத்துக் கொண்டு போய் பையில் போட்டு வந்தாள் .
அரைமணி நேரம் வரையில் செய்திருப்பார்கள் ." இன்றைக்கு இது போதும் " என்றாள் .
வடையும் , தென்னம் சீனீ போட்டு தயாரித்த எள்ளுருண்டையையும் , தேனீர்க் குடுவையில் தேனீரையும் நிரப்பி எடுத்துக் கொண்டு தயாரானார்கள் . அந்த குறுகிய நேரத்திலும் தில்லை பொன்னியின் செல்வனில் ஒரு பக்கத்தை வாசித்து விடுகிறான் . வந்திய தேவன் எப்பவும் வாய் சவாடல்காரன் . முதலில் இவன் நீரில் குதித்த போது , நீச்சல் தெரிந்ததால் தான் குதிக்கிறான் என பூங்குழலி பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருப்பாள் . இவன் நீரைக் குடித்து மேலே வரவே ... பாய்ந்து அவன் முகத்திலே ஒரு குத்து போட்டு மயக்கமுற காப்பாற்றுவாள் . வந்தியதேவன் மன்னார் செல்லும் கப்பலில் சென்று கொண்டிருக்கிறான் . இளவரசன் சென்று கொண்டிருக்கிறான் என்று தவறாக நினைத்து ஏறி விட்டான் . ரவிதாசன் தான் அதில் இருக்கிறான் . அவன் இவனைக் கண்டு கட்டிப் போட்டு விடுகிறான் . கப்பலுக்கும் தீ வைத்து விட்டு படகில் இறங்கி போய் விடுகிறான் .
பூங்குழலியுடன் வரும் இளவரசர் , தீப்பற்றி எரியும் கப்பலிலிருந்து காப்பாற்ற கடலில் குதிப்பார் . இவருக்கும் நீச்சல் தெரியாது . பூங்குழலி இருவரையும் காப்பாற்றுவாள் . இப்படி கதை போகும் . வந்தியதேவனை வீராதி வீரன் என்று நினைத்து விடாதீர்கள் . கத்திச் சண்டையில் மல்யுத்தத்தில் வீரன் தான் , ஆனால் , கத்தியால் முதுகில் குத்து வாங்குவான் , எக்கச் சக்கமாக எல்லாம் போய் மாட்டிக் கொள்வான் . நம்பியோடு நெடுக கொளுவிக் கொண்டே இருப்பான் . நம்பி , காப்பாற்றி , காப்பாற்றி விடுவார் . இதற்கிடையிலே , வந்திக்கு குழலி மேலே ஒரு கண் . அவள் ஒரு விளையாட்டு வீராங்கணை . அவளுக்கு இளவரசர் மேலே கண் . நாவலில் வரும் பல பாத்திரங்களுக்கு வந்தி மேல் ஒரு பிடிப்பு . காப்பாற்றி , காப்பாற்றி விடுவார்கள் . இப்படிப்பட்ட ஒரு தொடர் தான் . இவன் பார்வையிலேயே சோழ இராட்சியத்தையேப் பார்த்து விடுகிறோம் .
வாகனத்தில் ஏறி , மாகாண கைவேக்கு சமாந்தரமாகச் செல்கிற ஒரு லோக்கல் கைவே 14 இலக்க வீதியில் செலுத்தினான் . அது போக , வர ஒருலேனிலே ஓடுது . வேக எல்லை 70 ,80 ,90 என மாறிக்கொண்டிருந்தது . மூன்று கிலோ மீற்றர் தூரத்திற்கொரு தடவை லேன் இரண்டாகி ஒரு கிலோ மீற்றர் ஓடும் . அதில் விலத்த விரும்புறவர் விலத்திக் கொள்ளலாம் . இவர்களுக்கு அவசரமில்லையே . பின்னாலே போய்க் கொண்டிருந்தார்கள் . இருபுறங்களிலும் மரங்கள் உடையதாக , சமயங்களில் விவசாயப்பண்ணைகள் தென்பட சுமார் நூறு கிலோ மீற்றர் ஓடிச் சென்று மாகாணக் கைவே 103 இலே ஏறி , கிழக்குப் பக்க இரண்டாவது வெளியேறலில் வெளியேறி சாதாரண வீதியில் தெற்கு நோக்கி இறங்கி விட்டார்கள் . பிறகு , அவ்வளவு தூரமில்லை . கலிபஸ் பெரிய துறைமுகம் . வாகனத்தை தரிப்பில் நிறுத்தி விட்டு ( பணம் செலுத்த வேண்டும் ) சனநெரிசலே காணப்படுகிறது . போர்ட்வோக்கில் , மரத்தாலான பாதையில் கீழே தண்ணீர் அடிக்கிறதைப் பார்த்து நடந்தார்கள்
இந்த கடலுக்கு அண்மையில் தான் , " பிரிட்டனின் பெரிய சுற்றுலாக் கப்பலான " டைடானிக் கப்பல் ..... ( நியூபவுண்ட்லாண்டிலிருந்து இருநூறு மைல் தூரத்தில் ) தாண்டது .
சிறுவர்களுக்கான திடல் . ஐஸ்கிரிம் , சொக்கிலேற் கடைகள் . " பாடியோ " மரத்தளங்களுடன் உணவகங்கள். பிரெஞ்சுக்காரர்கள் போல வைன், பியருடன் உணவை ரசித்து உண்ணும் கூட்டம் . நடை தளத்தில் பாலம் போன்ற ஓரிடத்தில் கீழாலே நீர் அடிக்க மறுபுறத்தில் கற்குவியல் வரம்பு ஒன்று காணப்படுகிறது . துறைமுகத்தில் இரண்டொரு சிலைகளுடன் குறிப்பும் கிடக்கிறது . உடைந்த சுவரின் நிமிர்ந்து நிற்கிற சிதைவு பிறிம்பாகத் தெரிய , பக்கத்தில் கடை ஒன்றும் இருக்கிறது . இந்த துறைமுகம் இரண்டாம் உலகப் போரிற்கு முதல் ஒரு பெரும் துன்பியல் நிகழ்வை சந்தித்திருக்கிறது .
கொரோனாவிற்கு முதல் உரத்தை ஏற்றி வந்த ஒரு கப்பல் லெபனான் துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அது வெடித்து ஏறத்தாழ அரைவாசி துறைமுகமே அழிந்த்துடன் 200ற்கு மேலானவர்கள் இறந்து போனதை தொலைகாட்சித் திரைகளில் பார்த்திருக்கிறோம் . இங்கே நடந்தது அதை விட பல மடங்கு பெரிய வெடி விபத்து . அன்று உடைந்த கற்சிதறல்களைச் சேர்த்து தான் ஞாபகர்த்ததுக்கு வரம்பிலே ... வைத்திருகிறார்கள் . இடிந்த சுவரும் அன்று எஞ்சியது தான் . ஜேர்மனியர்களின் கறுப்புத் திமிங்கலம் என்கிற நீர்மூழ்கிகள் , கப்பல்களை மோசமாக வேட்டையாடிக் கொண்டிருந்த காலம் .நாஜிகளுக்கு உலகமே நடுங்கிக் கொண்டிருந்தது .
பிரான்ஸ் கப்பல் ( மொன்ட்) ஒன்று டன் கணக்கில் வெடிமருந்துகளை கலிபஸ் துறைக்கு வருகிறது . கரையை ஒட்டி நிற்கிறது . அதேசமயம் நோர்வேயின் சிறிய கப்பல்( இமோ) நியூயோர்க்கிற்கு நிவாரணப் பொருட்களை ஏற்ற போய்க் கொண்டிருக்கிறது துறைக்குள் வருகிறது . கொஞ்சம் நெரிசல் இருந்திருக்க வேண்டும் . சென்றது பிரான்ஸ் கப்பலுடன் சிறிது உராய்ந்து விட்டது .கப்பலின் மேல் தளத்தில் இருந்த பரல்களில் ஒன்று உருண்டு விழ்ந்து தீ பிடிக்க ஒரு வெடிச் சத்தம் . துறைமுகத்திற்கு அண்மையிலிருந்த ரிச்மெண்ட் வீதியில் இருந்த குடும்பத்தில் பார்பரா என்ற சிறுமி துறைமுகத்தை ஜன்னலினூடாக கவனித்துக் கொண்டிருந்தவள் " ஏதோ வெடி விபத்து " என்று இறங்கி வீதிக்கு ஓடி இருக்கிறாள் . பத்து நிமிடத்திற்குப் பிறகு பெரும் வெடியில் துறைமுகமே அதிர்ந்து தகர்ந்து போய் விட்டது . சிறுமி நிலத்தில் வீழ்ந்து விட்டதால் தப்பினாள் . அக்குடும்பமே இறந்து போய் விட்டது . தூர இருந்து ஜன்னலினூடாகப் பார்த்த சிலர் கண் பார்வையை முழுமையாகவே இழந்து போனார்கள் . உடனடியாக அமெரிக்கா , தீயணைப்பு படையினரை , மருத்துவர்களை , நிவாரணப் பொருட்களை அனுப்பி தோள் கொடுத்தது . அந்த நன்றிக்காக நோவாகோர்ஸியா இன்றும் நியூயோர்க் மாநகரசபைக்கு கிரிஸ்மஸ் அன்று நிறுத்துவதற்கு பெரிய கிரிஸ்மஸ் மரம் ஒன்றை அலங்காரத்துடன் அன்பளிப்பு செய்து வருகிறது . இவ்விரு நாடுகளுக்குமிடையில் .... இப்படி பல நட்புக்கைகள் கிடக்கின்றன . நோர்வேக் கப்பலின் கப்டன் ஜேர்மனியர் . எனவே சதியாய் இருக்குமோ ? என்ற சந்தேகத்தில் பொலிஸ் , கலிபஸிலே இருந்த ஜேர்மனியரைப் பிடித்து சிறையில் அடைத்து விட்டது . எட்டு நாள் விசாரணையின் பிறகே .... உண்மையை அறிந்து மன்னிப்புகோரி விடுவித்தது .
கலிபஸ் துறைமுகத்திலிருக்கிற பிரமாண்டமான மெரிட் டைம் மியூசியத்தில் இதை எல்லாம் அறியலாம் . இவர்களுக்கு இங்கேயும் கொஞ்சம் அதிருஸ்டமும் இருக்கிறது. கொரோனா உபயத்தால் நுழைவு இலவசம் . வக்சின் எடுத்ததை மட்டுமே செக் பண்ணினார்கள் . கடலிருந்து சேகரிக்கப்பட்ட டைடானிக் சேகரிப்புக்கு என்று ஒரு தனிப்பிரிவையே ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் . டைடானிக்கை பற்றி முழுமையாக அறிய சிறு மாதிரிகளை கூடுதலாக செய்தும் வைத்திருக்கிறார்கள் .
துறைமுகத்திற்கு அண்மையில் இருந்த ஒருகிராமத்தில் பழங்குடியினர் இருந்தனர் . முந்தி , மாகாணவரசு , அவர்களுக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி எழுப்ப முயற்சித்து வந்திருக்கிறது . அவர்கள் மசிந்து கொடுத்திருக்கவில்லை . துறைமுகத்திலிருந்து எழுந்த சுனாமி அலை அக்குடியிருப்பு முழுதையும் வாரிக் கொண்டு சென்று விட்டது . இன்று ஒருத்தரும் தப்பவில்லை என்ற பதிவு இருக்கின்றது . ஆனால் , ஒரு சிலர் தப்பியே இருக்கிறார்கள் . அச்செய்தியை மறைத்து விட்டார்கள் . அக்கிராமம் மீள கட்டி கொடுக்கப்படவில்லை . துறைமுகம் அப்பகுதியை எடுத்துக் கொண்டிருக்க லாம் .
இன்று , கனடிய சிறைகளில் இருக்கிற கைதிகளில் முற்பது வீததிற்கு மேலானவர்கள் இப்பழங்குடியினர் என்று ஒர் கணிப்பு இருக்கிறது . அவர்களில் பலர் போதைப் பொருள் பாவிப்பு , குடியில் வீழ்ந்தவர்...என பலவீனமான நிலையில் சீரழிகிறார்கள் . மத்தியரசில் ஒப்பந்தங்கள் மூலமாக சட்ட வரைபுகள் இருந்தாலும் மாகாண அரசுகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுற போது சட்டவிரோதமாகப் பார்க்கப்படுகின்றன . இல்லாவிட்டால் எப்படி சிறைகளில் நிரம்பி வழிவார்கள் . அகதி மக்களை விட கல்வி அறிவு ..எல்லாவற்றிலும் தாழ் நிலையில் இருக்கிறவர்கள் ஒரு காலத்தில் சிறப்பான நாகரீகத்தைக் கொண்டிருந்த மக்கள் என்றால் நம்புவீர்களா ? . இன்று வடக்கில் நிகழ்றதைப் பார்க்கிற போது ...அரசின் பின்னணியிலே நடகின்றன என கூறி விடலாம் . இவர்கள் உலகத்திற்கு வழங்கிய அறிவியல்கள் அனேகம் . இன்று , எல்லாவற்றையுமே வர்த்தக நிறுவனங்கள் கைப்பற்றி விட்டன . இயற்கையை காப்பாற்ற முன்வைக்கிற விதிகள் அனைத்துமே இவர்கள் முன்பு கூறியவை தாம் . மரங்களை நடுங்கள் . பறவை . உயிரினங்களை பாதுகாக்குங்கள் . சங்கரின் , " எந்திரன் இரண்டை " இன்னொரு தடவையும் பார்க்க வேண்டும் . இப்படி துணிச்சலாக படம் எடுத்திற்கு இயக்குநரைப் பாராட்டவே வேண்டும் .
அந்த விபத்தில் 3000 இற்கும் மேலானவர்கள் இறந்து போய் விட்டார்கள் . 9/11 ஐ விட அதிகம் .9000 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் . துறைமுகத்தில் கரைத்தடுப்புகளாக இருந்த வளைக்க முடியாத இரும்புக் கிராதி , உருகி வழிந்து மொட்டையாகிய துண்டொன்றையும் வைத்திருக்கிறார்கள். அன்று , உடனே துப்பரவு படுத்த முடியாததால் தற்காலிகமாக நிலமட்டதோடு பென்னாம் பெரிய கோவில் மணிகளை அமைத்திருக்கிறார்கள். பல மைல் தூரத்தில் இருப்பவருக்கும் கேட்பதற்காக அமைத்திருக்க வேண்டும் . அதை அப்படியே பாதுகாக்கிறார்கள் . " பார்பரா " என்ற அந்த சிறுமி 90 வயது வரையில் வாழ்ந்திருக்கிறார் . இறக்கும் வரையில் ஒவ்வொரு வருசமும் தவறாது வந்திருக்கிறார் . சில தகர்ந்த தேவாலயங்களை மீள அதே மாதிரியே கட்டி எழுப்பியும் இருக்கிறார்கள் .
இச் செய்திகளை அறிய இவர்களுக்கும் வருத்தமாக இருகிறது . இலங்கையிலும் நிகழந்த துன்பியல் நினைவுகளையும் நினைவு படுத்தி விடுகிறது . சூரிய அஸ்தமனம் பார்க்கும் பெகிமுனை சிறிது தூரத்தில் தான் இருக்கிறது .
பெகிமுனை , செல்கிறார்கள் .
ஐஸ்கிரீமையும் ஆளுக்கொன்று சாப்பிட்டு விட்டு வாகனத்தில் ஏறி , குறுக்கலான டவுண் வீதிகளில் ஓடியும் , ஏறியும் பெகிமுனை என்கிற பாறைக் குவியலுக்கு வந்து சேர்ந்தார்கள் . பென்னம் பெரிய குவியல் மலை . இப்படியான பகுதிகளில் தான் வெளிச்ச வீடுகளை வைப்பார்களோ ? மலுங்கலான இந்த படுக்கைப் பாறைகள் எப்படி உருபெற்றிருக்கும் ? தெரியவில்லை . அதற்கும் ஒரு புவியியல் வரலாறு இருக்கும் . அங்கு சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கிறதுக்கு சனம் அள்ளுபடுகிறது . இதை ஒட்டி சிறிய துறையும் இருக்கிறது . அவற்றில் மீன் பிடிக்கிறவர்களுடைய படகுகள் காணப்படுகின்றன . அவ்விடத்தில் இருந்த இயற்கை உபாதை கழிக்கும் கழிநீர் கழிப்பிடத்திற்கு செல்கிறான் . கீழே நீர் தெரிகிறது . அதற்கு முதல் நீல உப்பு சேர்க்கப்பட்டு வெளியேறுகிறது . இருந்தாலும் இப்படியேயா கடலில் கொட்டுவது ? .
சூராதி சூரர்களாக மலையுச்சிக்கு ஏறிய போது சனம் எந்த வித சிரமுமின்றி அவ்விடத்திற்கு வீதியிலிருந்து சரிவில் சுலபமாக வருகிற வழி இருக்கிறது தெரிகிறது . அந்தப் பாறையிலும் பங்களா கவுஸ் போல ஒர் உணவகம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது . அதில் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கிறது என்று பெரிய சமதள மரமேடை கிடக்கிறது . " இந்த வழி தெரியாமல் முந்தியும் சிரமப் பட்டு தான் வந்தோம் " என்கிறாள் பூமலர் . சூரியன் விடை பெறுவதற்கு நிறைய நேரம் இருந்தது . அதுவரையில் சுற்றி வர , கலங்கரை விளக்கம் தெரிய பல கிளிகள் . எல்லாருமே போஸ் கொடுத்துக் கொண்டு நிற்க , கத்தரி வெருளியாக அவன் நிற்கிறான் . சூரியன் , சிவப்புப் பந்தாக அழகாக கடலினுள் அமிழ்கிறான் . பலர் மெல்ல , மெல்ல வீடியோ ... எடுத்துக் கொண்டிருந்தார்கள் . ஜெயந்தியின் ஒரு சின்ன ஆசை நிறைவேறுகிறது . மனிதருக்கு தான் எத்தனை சின்ன , சின்ன ஆசைகள் . அவனைக் கேட்டால் நீர்ப்பரப்பில் படகில் நின்று ஈழப்பாட்டு பாட வேண்டும் என்பான் . வீட்டிலே சொன்னால் அடிக்க வருவார்கள் . ஆசையை அடக்கு, அடக்கு .. !
இருண்டிட வீதியை முளித்து , முளித்துப் பார்த்து , பார்த்து வாகன வெளிச்சத்தில் ஓடி வீடு வந்தது ஒரு சாதனை தான் . முளிகள் இரண்டும் வெளிய வந்து விட்டது .போங்கள் .
ஆடி அம்மாவாசை
பூமலருடன் படித்த சுந்தர் குடும்பம் , " ஆடி அம்மாவாசை தினத்தில் , உங்கள் சகோததர் குடும்பத்தையும் கூட்டி வாருங்களன் " என அழைத்திருந்தது .அப்பாவை இழந்தவர் கடைப்பிடிக்கிற விரத நாள் . சைவ சமயத்தோடு தொடர்பு பட்டது . அம்மாவை இழந்தவர் சித்திரா பெளர்ணமி அன்று விரதம் இருக்கிறார்கள் . ஊரிலே , அம்மாட நாள் தெரியாது . அன்று உறவினர்களை ,நண்பர்களை அழைத்து விருந்தோம்பல் நடைபெறும் . இங்கே உள்ளவர்கள் பொட்லக் பார்ட்டி போல ஒரு கறியோ , பலகாரமோ செய்து கொண்டு போய் ...எல்லா நிகழ்வுகளையும் கடை பிடிக்க முயல்கிறார்கள் . பூமலர் , ரைஸ் புடிங்கை ஜெயந்தி சொல்ல , சொல்லத் தயாரித்தாள் .
அங்கு சென்றார்கள் . ஒவ்வொருவரும் ஒன்றை செய்து கொண்டு வந்திருந்தார்கள் . ஜீவி , இரண்டு கறிகளை சமைத்து வந்தார் . மாங்காயைப் போட்டு ...என்னவோ சுப்பரானது . சுந்தர் , தன் கையாலே சமைக்க ... பிடிவாதம் பிடித்து ஒரு நள மகராசனாகவே சமைத்திருக்கிறார் . தில்லை சமைத்தால் அவன் மட்டுமே சாப்பிட முடியும் . சமையல் என்பது ஒரு கலை . அது பள்ளிப் பாடமாக இருபாலருக்கும் சொல்லிக் கொடுக்கப் பட வேண்டிய ஒன்று . நாம் வீட்டிலேயும் கூட உரிமைகளை இழந்திருக்கிறோம் . இதனால் தான் ராஜாஜி குலக்கல்வி முறையைப் பற்றியும் சிந்தித்திருக்கிறார் போல இருக்கிறது . படைத்து விட்டு வாழை இலையில் , அப்பளப் பொறியலுடன் மரக்கறிச் சாப்பாடு அந்த மாதிரி இருந்தது . சிறிது நேரம் இளைப்பாறி விட்டு காலாற கடற்கரைப் பகுதியில் நடந்தார்கள் .
வழியில் பழைய பெண்டிகோஸ் தேவாலயம் தென்பட ஜீவி " கிருஸ்தவத்தில் ஆறு பிரிவுகள் இருக்கிறது " என்று ஜெயந்திக்கு கூறினாள் . " பிரதானமாக இருப்பவை இரண்டு . மற்றவை உப பிரிவுகளாக இருக்கலாம் " என்று தில்லை கூற , " இல்லை , எல்லாமே தனிப் பிரிவுகள் . எனக்கே பலதைத் தெரியாது.. " என்று கூறி சிரித்தாள் . " ஜீவி , தெரியாட்டியும் ...தேடி , தேடி அறிந்து கொள்கிற புத்திசாலி " என்று பூமலர் தெரிவித்திருந்தது நினைவில் வந்தது . இவன் அறிந்ததை வைத்து அசை போடுறவன் , சிந்திப்பவன் . போற போக்கில் கிரகரிக்கிற ரகம் . முகத்தில் மீசையுடைய சிறிய மிருகம் ஒன்று நீர்மட்டத்திற்கு மேலே எட்டிப் பார்த்து நீந்திக் கொண்டிருந்தது . இலங்கையில் காணாதவைகளை எல்லாம் இங்கே காணலாம் . " நீர்ச் சிங்கம் " என்றார் சுந்தர் . வோல்ரஸ் , டொல்பின்
, திமிங்கலம் ...என சுவாசப்பையுடைய கடல் உருப்படிககள் எல்லாம் இருக்கின்றன . சுறா , பயங்கரவாதியாய் பார்க்கப் படுகிறது . இதற்குப் போய் இந்த பெயரை வைக்கிறார்கள் .
' முதலை ' டைனோசாருக்கு முற்பட்டது என்றால் நம்புவீர்களா ? . கடலில் என்னென்னவோ எல்லாம் இருக்கின்றன . இயற்கை ஓர் பேரதிசயம் . கரையிலிருந்து நீரிற்குள் நீட்டப்பட்டு கட்டப்பட்ட பழுதடைந்த சில கொட்டேஜ் வீடுகள் இருந்தன . " நீரும் நிலப்பரப்பாக கருதப்பட்டு மலிந்த விலைக்கு விற்கப்படுகின்றன " என்றார் சுந்தர் . " இங்கே , அமெரிக்கர் பலர் எயர் பி. என் பி .. என்கிற புதிய வாடகை முறையில் கொட்டேஜ்களில் , வீடுகளில் இருந்து விட்டு அவற்றை வாங்கியும் விட்டிருக்கிறார்கள் " என்கிறார் . நியூயோர்க்கிற்கும் நோவாகோர்ஸியாவிற்கும் கடல் வழியில் சொந்த படகுகளில் பயணிக்கிறார்கள் . அத்திலாந்திக்கடல் , புயல் பயம் ...பற்றி அக்கறைப்படுறதில்லை . ஒருவேளை எல்லைச் சோதனைகள் இல்லையோ ? .
மீள திரும்பி அவர்களுடைய கொட்டேஜ் வீட்டிற்கு வந்திருந்தார்கள் . இவர்களுக்கருகில் பெரிய வெயர்கவுஸ் போன்ற வாடிக் கொட்டில் ஒன்று கை விடப்பட்டிருக்கிறது . அந்த வீதியிலும் சிறிது நடந்தார்கள் . வீட்டை வாங்கிய போது முள்செடிகள் என இவர் வளவை வெட்டி தள்ளி சுத்தப்படுத்தியிருக்கிறார் . அயலில் இருந்தவர் , " வெட்டாதே இது காட்டு ரோசா செடி " என தடுத்ததில் இன்று பூத்து அழகாக இருக்கிறது . ஒரு அப்பிள் மரமும் காய்த்திருந்தது . பச்சைக்காய்களை பிடுங்கி கொறித்தார்கள் . ஒரு பழைய கொட்டிலும் இருந்தது . " அதை ( அவருடைய )நண்பர் ஒரே நாளில் திருத்திக் கொடுத்தார் " என்கிறார் .
" நேற்று நீங்கள் சென்ற பெகிமுனை , அதோ ...வெளிச்சவீடு தெரிகிறதே , அது தான் ! " என்று சுட்டிக் காட்டினார் . நீலக்கலரில் குட்டித் தோற்றத்தில் தெரிகிறது . தேனீரையும் குடித்து விட்டு அவருடைய அப்பாவின் ஆசியையும் பெற்றுக் கொண்டு திரும்பினார்கள் .
மகோன் 'பே' போகிறார்கள்.
மகோன்பே' க்குப் போய் லுனன்பேர்க்கிற்கு போகப் போகிறார்கள். " இரண்டுமே யுனெஸ்கோவினால் குறிப்பிடப்படும் பழைய துறைமுகங்கள் " என்கிறாள் பூமலர் . பரவாயில்லை . நம்ம குட்டித் தங்கச்சி பெரிய சுற்றுலா வழிகாட்டியாய் மாறி விட்டிருக்கிறாள் . ' லுனன் ' என்ற ஜேர்மன் சொல்லுக்கு அர்த்தம் தெரியவில்லை ." பேர்க்' என்றால் மலை என்று அர்த்தம் . ஜேர்மனியில் இருந்த உறவினர் பலபேர்கள் இங்கே இருக்கிறார்கள் . அத்தியம்பேர் ( அக்காவின் கணவர் ) தான் கூறினார் . கலிபஸிற்கு சென்ற அதே லோக்கல் கைவேயில் ( 14ம் இலக்கம்) சென்று , 103 மாகாண கைவேயில் ஏறி இம்முறை மேற்கு திசையை எடுத்து 5 , 6 வது இல் வெளியேறி அதே போல தெற்கு லோக்கல் வீதியை எடுக்க , வளைந்து , வளைந்து ஓடுகிறது . மலைப்பாங்கான நில அமைப்பு . சிறுபிள்ளைக்கு சொல்லிக் கொடுக்கிறது போல , ' மலைகள் எல்லாம் தீவுகளில் நடுப்பகுதியில் இருப்பதில்லை ' . யாழ்ப்பாணத்தில் கூட கீரிமலை , திருவடி முழுதும் காலை கிழிக்கும் கூர் கல்லாக கடற்கரையில் கிடக்கிறது . இந்தியாவின் நிலம் கடல்கோளலால் துண்டுபட ஏற்பட்டது . அங்கே எரிமலை கிடையாது . இது எரிமலை வெடித்து ஏற்படுத்திய தீவு . ஆனால் எரிமலை ஒன்றும் கிட்டடியில் எங்குமே இல்லை . மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ....இருந்தது எல்லாமே வெடித்து சம பூமியாகி போய் விட்டிருக்கிறது போல இருக்கிறது . ஆனால் , தென் அமெரிக்காவில் எரிமலைகள் கிடக்கின்றன . இருக்கிறதா ? .
மகோன் பே ,சிறிய நகரம் . இங்கே வாகன தரிப்பிற்கு பணம் அறவிடுகிறார்கள் . கோவிட் ஏற்பட்டு மீள்கிற தளர்வால் அற விடப்படவில்லை . நிறுத்தி விட்டு அவ்விடத்து இருக்கை ஒன்றில் இருந்து தேனீருடன் எள்ளுருண்டையை சாப்பிட்டார்கள் . ' மகோன் பே இலே தில்லையிற்கு , வாகனங்கள் முன்பக்க இலக்கத் தகடு இல்லாது ஓடித்திரியிறது கண்ணில் படுகிறது . பின் இலக்கக்தகட்டில் 'நோவா' குறிப்பிடப்பட்டிருக்கின்றது . பூமலரின் வாகனத்திற்கும் கூட கிடையாது . எங்கே கவனித்தான்? . இங்குள்ள வீடுகள் பிரத்தியேகமான உள்ளே பழமைச் சாயல் கொண்ட பொருட்களின் பாவனைக் கொண்டவை . வந்த முதல் நாளே அதை கவனித்திருக்கிறார்கள் . வாழ்க்கைச் செலவு மிக குறைந்த மாகாணம் . சிக்கனமாக அரசியலையும் வைத்திருக்கிறார்கள் . இலங்கையை நினைத்துப் பார்த்தான் . அங்கே மத்திய அரசு இருக்கிறது . மாகாண அரசு இருக்கிறது . அதை விட அரச நிர்வாக அமைப்பு ஜி .எ / எ .ஜி .எ / ஜி .எஸ் ...என பெரிய கட்டமைப்பே கிடக்கிறது . அதுக்கு சிக்கனம் என்பது என்ன என்றே தெரியாது . புதிதாக தெரிவாகிற சிங்கள அரசியல்வாதிகள் , ஈழத்தமிழர் மாகாண அரசின் உரிமைகளை பற்றி பேசினால் " பிரிவினை பேசுகிறார்கள் " என்கிறார்கள் . நகரக்காவலர் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் பிடித்து சிறையிலே வேறு அடைக்கிற அநாகரீகம் தொடர்கிறது . அதனால் தான் பிச்சைக்கார நாடாகக் கிடக்கிறது புரிய மனசு வலிக்கிறது .
மற்றைய மாகாண , அமெரிக்க வாகனங்களுக்கு இருபுறமும் இலக்கத் தகடுகள் கிடக்கின்றன . " அழகி" பட்டத்தை நோவாவேயே தட்டிக் கொள்கிறது . இது பரவாய்யில்லையே ! இல்லாத போது தான் வாகனங்களின் வடிவும் தூக்கலாகத் தெரிகிறது . சொல்ல , ஜெயந்தி , " உனக்கு ரொரொன்ரோவை விட மற்றறைய இடத்திலிருக்கிற எல்லாமே அழகு தான் "என்று கேலி பண்ணுகிறாள் . அவளுக்கு இடங்களைப் பார்ப்பதில் விருப்பம் . கரை நகரத்தை வேடிக்கை பார்க்க வீதியில் இறங்கி நடந்தார்கள் . பழைய வீடுகள் . சில உப்பரிகைகளுடன் கூடியவை . அந்தக் கால மர வேலைப்பாட்டை இன்று யார் செய்வார்கள் . தூக்கலாகவேத் தெரிகின்றன . தூரத்தில் நிறுத்தி வைத்திருக்கிற படகுகளை பூமலர் காட்டி " இப்படித் தள்ளி தான் நிறுத்தி விடுகிறார்கள் . கரைக்கு வர சிறிய மிதவைகளைப் பயன்படுத்துகிறார்கள் " என்றாள் . வீடு போன்ற கொட்டில் ஒன்றும் மிதந்து கொண்டிருந்தது . அதன் குட்டி வாராண்டாவில் இருந்து மனிதர் ஹாய்யாக சுருட்டு புகைக்க விரும்புகிறார் போல இருக்கிறது . கரையில் ஏற்றப்பட்ட படகு ஒன்றையும் பார்த்தான் .
சுக்கானில் வெட்டப்பட்ட மரச்சட்டம் போன்ற சிறிய பகுதி தான் ஓட்டத்தை தீர்மானிக்கிறதா ? போலவே இருக்கிறது . விமானங்களிலும் விரிந்த செட்டையில் இப்படி ....சிறிய பகுதிகள் இருப்பதைப் பார்த்திருக்கிறான் . பறக்க அவை உதவுகின்றன போலும் . கப்பல் , விமானம் பற்றிய அறிவு எம்மவர்களுக்கு எவ்வளவு தூரம் இருக்கும் ? அறிவைக் கூட்ட சாதியும் தடையாய் இருக்கிறது
கரையிலிருந்து கடலுக்கு செல்லும் ஒரு அகண்ட மரப்பாதைத் தளம் . பிறகு இதனுடனே யே தொடர்பு பட்ட பல மைய மிதவைகள் , இருபுறங்களும் நீட்டல்கள் , அவற்றில் மிதவைகளை கொண்டு வந்து கட்டி விட்டு , பிடிக்கிறவையையும் இப்படி தான் கொண்டு கரைக்கு வருகிறார்களோ ? கடலைப்பார்த்து நீரின் மேல் பாடியோ தளங்களைக் கொண்டிருக்கும் உணவகங்கள் . அதில் ஒன்றில் நுழைந்து கடலுணவு போட்ட ( சவுடார்) சூப்புகளை எடுத்தார்கள் . கடலுணவு எப்பவும் சுவையானது தான் . சாப்பிட்ட பிறகு வீதியில் இறங்கி மேலும் நடந்தார்கள் இரண்டொரு தேவாலயங்கள் பக்கத்திலும் நின்று " கிளிக் " கள் . சந்தியிலும் பூங்கா போன்ற அமைப்பு இருந்தது . காட்டு ரோசாகள் பூத்துக் கிடந்தன . அதிலிருந்தும் காட்சிகளோடு படம் பிடித்துக் கொண்டார்கள் . கார் நிறுத்ததிற்கு வந்து ஏறி லுனன்பேர்க் நோக்கி விரைகிறார்கள் .
லுனன்பேர்க்
" இதோ கிட்ட ...வருகிறது " என்றாள் பூமலர் . ஆனால் வீதி நீள , நீள ஓடிக் கொண்டிருந்தது . ஒரு மாதிரியாக துறைமுகத்தை அடைந்தார்கள் . வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு ( இங்கும் கட்டணம் இல்லை ) வீதியிலிருந்த உணவகத்தில் ஏறி தேனீருடன் கேக்கையும் சாப்பிடுகிறார்கள் . வேடிக்கை பார்த்து நடக்க பெரிய தேவாலயத்தின் உச்சி ஒன்று தெரிகிறது உயரமான பகுதியில் இருக்கிறது . " ஐயோ நான் வரவில்லை " என்றஜெயந்தி மெல்ல , மெல்ல நடந்து வருகிறாள் . ஏற்ற , இறக்கம் அவளுக்கு காலை நோக வைக்கும் . அந்த ஏற்றம் தில்லையையே மூச்சிறைக்க வைத்தது . ஏன் , சாமிகளை மலையிலே கொண்டு போய் வைக்கிறார்கள் . மலையிலே கட்டுவதே சிரமம் . தாமும் கஸ்டப்பட்டு மற்றவர்களையும் சிரமப்பட வைக்கிறார்கள் . ஒருவேளை மேலே இருந்து கீழே பார்க்கிற அழகிலே கிறங்கிப் போய் விட்டார்களோ ? . அவனுக்கு எந்த உயரமும் ஒ.கே . தான் . பூமலரும் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை .
தேவாலயத்தைக் கண்டு விட்டு இறங்கி வார போதே படிக்கட்டுகளுடன் இலகு வழியும் வைத்திருக்கிறது தெரிய வர பத்திக் கொண்டு வருகிறது , அந்த நகரத்தின் வரைபடத்தை முதலில் பெற்றிருக்க வேண்டும் .எங்கே கிடைக்கும் ? . தெரியவில்லை . வழி தானே தெரிந்து விட்டது . அதில் இருந்த இருக்கை ஒன்றில் இருந்து வேடிக்கை பார்த்தார்கள் . ஒரு பெரிய குடும்பம் சிறுவர் , சிறுமிகளின் தமிழ்க்கலவைக்குரல்களுடன் இறங்கி வந்து கொண்டிருந்தது . காதிலே தேன் வந்து பாய்ந்தது போல இருந்தது .
பாய்க்கப்பல்கள் அகலமான ஆழமற்றக் கிடங்கைக் கொண்டது . கல்லுக்குள் துறுத்திக் கொண்டிருக்கும் பாறை கூர் , ஓரங்களை , பனிப்பாறைகளை கருத்தில் கொண்டு , அன்றைய மனிதனின் மேலான கண்டுபிடிப்பாக இருக்கவேண்டும் . பாய் காற்றில் வேகமாக ஓட்டியது ...ஆழக்கடலுக்குள்ளும் இழுத்துச் சென்றது , புயல்கள் , மேலும் தள்ளிச் சென்று பல தீவுகளை , கடல் நிலங்களை கண்டறிய வைத்திருக்கிறது . பிறகு , போர்க்கப்பலாக வடிவம் எடுத்ததிருக்கிறது . லுனன்பேர்க்கில் , ஜேர்மன் சகோதரர்கள் கப்பல்கட்டும் தொழிற்சாலை ஒன்றை ஏற்படுத்தி பல பாய்க்கப்பல்களை கட்டியிருக்கிறார்கள் . பல பாய்க்கப்பல்கள் வெளியேறி இருக்கின்றன .
ஜேர்மனியரே கப்பல்களை கட்டுவதில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் போலவும் படுகிறது . ஆங்கிலேயர் சோழச் சுவடிகளை எரிக்கிற போது , ஜேர்மனியர் பொறுக்கி எடுத்து சோழ தொழிற்நுட்பங்களை அறிந்து பயன்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார்கள் போலவும் படுகிறது . நிலவளவையிலும் ...இவர்கள் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் . அது சோழர்களுடைய முறையாக கூட இருக்கலாம் என படுகிறது . ஆங்கிலேயர் , ஒருமுறை லுனன்பேர்க்கில் சிறைக்கைதியாக வைத்திருந்த ஒர் ஜேர்மனியரை கப்பல் கட்டுவதில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள் . முடிப்புக்கு முன்னால் அவரது தண்டனைக் காலம் முடிந்து விட்டது . நீதிமன்றம் அவரை ஜேர்மனிக்கே செல்லும்படி உத்தரவிட்டு விட்டது . அவருக்கு குறையில் ...விட்டுச் செல்ல விருப்பமில்லை . " கப்பலைக் கட்டி விட்டே போகிறேன் " என்று கேட்டிருக்கிறார் . அனுமதி வழங்கப்படவில்லை . அவருக்கு கோபம் ஏற்பட்டு விடுகிறது . அன்று , நோவாகோர்ஸியாவில் சிறைக்கூடம் என்று பெரிய மதில் சுவர்களுடன் இருக்கவில்லை . மரியாதைக்குரியவர்கள் , திறமைசாலிகளுக்கு அறைகள் கொட்டேல் அறையில் இருப்பது போல வசதி செய்து வேறு கொடுக்கப்பட்டிருக்கிறது . துறைமுகப்பகுதியிலும் , நகரத்திலும் திரியவும் அனுமதிக்கப்படுவது வழக்கம் . " நீ கட்டுற கப்பலை ஆசை தீர பார்த்து விட்டுப் போ " என்று விட்டு விட்டார்கள் . ஆங்கில நண்பருடன் லுனன்பேர்க் நகரத்தில் நடந்து கொண்டிருந்தார் . எப்படி குறை வேலையை முடிக்க வேண்டும் என்று பல தடவைகள் அவருக்கு படம் போட்டு எல்லாம் விளங்கப்படுத்தி விட்டிருந்தார் . கவனரின் வீட்டிற்கு எதிரில் வந்தார்கள் . அப்ப தான் அவருள் இருந்த நாகேஸ் வெளியே வந்து குதித்தான் . நண்பரைப் பார்த்து.... முகத்தில் ஒரு சிரிப்பு . வீதியில் இருந்த கல் ஒன்றை எடுத்தார் . கவனர் வீட்டு ஜன்னலை நோக்கி எறிந்து விட்டார் . கண்ணாடி உடைந்தது . நகரக்காவலர் வந்து பிடிக்க " நான் தான் எறிந்தேன் " எனக் கூற குற்றம் பதியப் பட்டது . கொல்லும் நோக்கத்துடன் இல்லை என்பதால் அவருக்கு நீதிமன்றம் சிலநாள்கள் சிறைவாசத்தை நீடித்தது . , கப்பலைக் கட்டி முடித்த போது மேயர் வந்து கை குலுக்கி அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார் . கடலில் இறக்கி ஓடுவதையும் பார்த்து விட்டே சிதம்பரம் சென்றார் . எப்படி இருக்கிறது இந்தக் கதை ? . இப்படி ... ஏதாவது நடந்தால் தான் நம் ஈழப்பிரச்சனையும் தீரும் போல இருக்கிறது .
அன்று ' மகோன் பே ' இலே கப்பல் ஓட்டப்பந்தயம் விமர்சிகையாக நடைபெற்று வந்தது . போட்டிக்கு வந்த கப்பல்கள் கலிபஸிலும் , லுனன்பேர்க்கேயிலும் தரித்து நின்றன . நீலமூக்கு என புகழப்படும் பாய்மரக்கப்பல் லுனன்பேர்க்கிலே கட்டப்பட்டது . அக்கப்பலே பந்தயத்தில் சம்பியன் அடித்து கொண்டிருந்தது . கண்னூறு பட்டது போல பந்தயமற்றக் காலத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த போது புயலில் சிக்குண்டு கடலில் தாழ்ண்டு போய் விட்டது . அவர்களுடைய இராசாத்தியை இழந்ததில் பெரும் சோகத்தில் இருந்தார்கள் . அதே மாதிரி இன்னொரு கப்பலையும் ( சிறிது மேம்படுத்திக் ) கட்டி நீலமூக்கு இரண்டு என பெயரிட்டு ஓட விடப்பட்டது . அதுவும் முதல் தடவை வென்றது . அவசரமாக கட்டியதாலோ என்னவோ...அடுத்த பந்தயத்தில் அமெரிக்க பாய்கப்பல் வென்று விட்டது . பெருமையை அது தங்க வைக்கவில்லை . கப்பலுக்கும் கூட ராசி இருக்கலாம் . வெற்றி , தோல்விகள் மாறி , மாறி வரத் தொடங்கி விட்டன . கனடிய பத்து சததிற்கு பின்னால் முதல் நீலமூக்கு , பாய்கள் பட படக்க பயணிக்கிறதை நீங்கள் பார்க்கலாம் .
கப்பல்கள் கட்டிற போது பீரங்கி பொறுத்துற ஏற்பாட்டை சேர்த்து கட்டுவதை ஒரு விதியாகவும் கடை பிடிக்கப்பட்டிருக்கிறது போல இருக்கிறது . பில்டிங் கோட் போல , கப்பல் கோட் . அதனால் , போர்க்காலத்தில் இலகுவாக அனைத்துமே போர்க்கப்பலாக மாற்றப்பட்டன . இல்லாத போது பீரங்கிகளைக் கழற்றி விட்டு வெறும் வர்த்தகக் கப்பல்களாக ஓடின . இந்த புத்திசாலித்தனம் பல வெற்றிகளை அவர்களுக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறது . அதனாலேயும் நோவாகோர்ஸியாவை வெற்றி கொண்டிருக்கிறார்கள் . உலோக நீராவிக்கப்பல் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு பாய்கள் மகிமையை இழந்து விட்டன . ஆனாலும் , இன்றும் பாய்களை வைத்து கப்பல்களை செலுத்துவது அமெரிக்க , கனடிய ஏரிகளில் நடைமுறையில் உள்ளன . எரிபொருள் உயர்ந்து தொடர்ந்து பயமுறுத்துற போது பாய்கள் தோள் கொடுக்கின்றன . பழமையின் தேவை என்றும் இருந்து கொண்டே இருக்கிறது . முட்டாள்களால் உலகம் அழிந்து கொண்டிருந்தாலும் தமிழர் , சோழசுவடிகளை தட்டிப் பார்த்து கப்பல்களை எல்லாம் கடலில் இறக்கி தாராளமாக விடலாம் . தமிழகம் கடல்புறாவையும் கட்டி கடலில் விட வேண்டும் . ஈழத்தமிழரும் சாதியைத் தூக்கி கடலில் போட்டு விட்டு கடலில் கண்டதையும் இறக்க வேண்டும் . ....நம் படகுகளில் , கப்பல்களில் , வள்ளங்களில் நெஞ்சங்களை நிமிர்த்திக் கொண்டு நின்று ஈழப்பாடல்கள் பாடி வரல் வேண்டும் .
கலிபஸ் துறைமுகத்தில் பழைய மீன் தொழிற்சாலை ஒன்றை மாற்றி கப்பல்களின் ஃபிசரி மியூசியமாக்கி இருக்கிறார்கள் . திறந்திருந்தது . வழக்கமாக கட்டணம் இருக்கிறது . அன்று அனுமதி இலவசம் .உள்ளே சென்று பார்த்தார்கள் . அங்கே நீலமூக்கைப் பற்றி விபரமாக அறியலாம் . பழங்குடியினர் மீன் பிடிப்பதிலிருந்து இன்று வரையிலான மீன் பிடிக்கும் முறைகளையும் ...அறியலாம் . ஒருநாள் முழுதும் நின்று பார்க்க ...வேண்டிய சமாச்சாரம் .
" நீல மூக்கு பாய்க்கப்பல் " , பார்வையிடுவதற்காக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது . மூன்று மணி வரையில் தான் பார்க்கும் நேரம் இருந்தது . திமிங்கலம் பார்வையிடும் டூரும் மூன்று மணியோட முடிகிறது . இவர்கள் தேவனைப் பார்த்து விட்டு படிகளில் இறங்கி வந்த போது , நீல மூக்கை பார்ப்பதா மியூசியத்தைப் பார்ப்பதா ? என்று யோசித்துப் பார்த்திருந்தார்கள் .
கடைசி நாள்
" போட்ட உடுப்புகளை தோய்க்கலாமே " என்று பூமலர் சொல்ல , " அங்கே போய் தோய்ப்போம் " என்று விட்டு ஜெயந்தி எல்லாவற்றையும் சூட்கேசினுள் அடைகிறாள் . பிறகு நீண்ட நேரம் கதைத்துக் கொண்டிருந்தார்கள் . நாளை , ரொரொன்ரோவிலே நிற்கப் போறார்கள் . பிறகு பழைய பல்லவி தான் . இன்னம் கொஞ்ச நாள் நின்று விட்டுப் போகலாம் என்றிருக்கிறது .ரொரொன்ரோவில் இறங்கின போது பூமலரிடமிருந்து குறும் செய்தி ஒன்று வருகிறது " திரும்பவும் தீவுக்கு வருக " . இனியொரு சந்தர்ப்பம் வருமா ? , பெருமூச்சு வருகிறது .
( ஜெயமோகன் எழுதிய புல்வெளிதேசத்தை வாசித்த பிறகு , அப்படி ஒரு பயணத் தொடரை எழுதிப் பார்க்க வேண்டும் என்று எண்ணம் எழுந்தது . அண்ணர் " யோசிக்காமல் எழுது " என்றார் . .. எழுதுறது ஒரு போராட்டமாகவே இருந்தது . மரதன் ஓட்டம் போல ஓடி ஒரு மாதிரி கோட்டைக் கடந்து விட்டேன். - கடல்புத்திரன் - ) .
முற்றும்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.