கார்க்கி தனது நாவலான ‘ஆர்ட்டமோனோவை’, 1900லேயே, தன் எண்ணத்தில் கரு கொண்டு விட்டதாக கருதப்படுகின்றது. 1901-1902 காலப்பகுதியில் டால்ஸ்டாயை சந்திக்கும் கார்க்கி, அவரிடம் பின்வருமாறு தான் உத்தேசித்திருக்கும் நாவலை பற்றி கூறியதாக எழுதுகின்றார்:
“அவரிடம், நானறிந்த, வர்த்தக குடும்பமொன்றின் மூன்று தலைமுறைகளின் கதையை, கதையாக கூறினேன். அக்குடும்பத்தின் கதையில், இடம்பெறும் உளவியல் சீரழிவும் சிதைவும், எப்படி, இடைவிடாது தன் இயங்கு விதிகளுக்கேற்ப இயங்குகின்றது என்பதனையும், எப்படி ஏனைய விதிகளும் இயங்குகின்றன என்பதனையும் கூறினேன். எனது சட்டை கையை பற்றி இழுத்த அவர் கூறினார்: “ஆ… அனைத்தும் உண்மை!... நான் தனிப்பட்ட முறையில் ஏற்கனவே அறிந்திருக்கும் ஒன்று இது. துலாவில் (வுரடய) இரண்டு அப்படியான குடும்பங்கள் உண்டு. நான் அறிந்திருக்கின்றேன். இது எழுதப்பட்டே ஆக வேண்டும். நீங்கள் இதனை ஒரு பெரிய நாவலாக ஆனால் சுருக்கமாக எழுத வேண்டும். புரிகின்றதா. நிச்சயமாக…”.
1904 அளவில், நாவலின் வடிவம் கார்க்கியின் மனதில் மெது மெதுவாக வடிவம் பெற தொடங்குகிறது. ஆனால் 1908-1910 இல் கார்க்கியை சந்திக்கும் லெனின், கார்க்கியிடம் கூறுகின்றார்:
“உங்களது அனுபவங்களை, தொடர்ந்தும் பிய்த்து, பிய்த்து சிறு கதைகளாக கொடுப்பது தவறு. இவற்றையெல்லாம் நீங்கள் ஒரு நூலில் அடக்கி ஒரு நாவலாக வார்த்தெடுக்கும் தருணம் இது”.
கார்க்கி லெனினிடம், தான் ஒரு நூறு வருடத்து குடும்பத்தின் கதையை, மூன்று தலைமுறைகளாய் எழுத உத்தேசித்திருப்பதை கூறுகின்றார். இவற்றை ஆர்வத்துடனும், மிகுந்த அவதானத்துடனும் செவிமடுக்கும் லெனின்:
“மிக அருமையான விடயம் இது. ஆனால் மிக கடினமானதும் கூட. இருந்தும் உங்களால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இதற்கான நேரமும் பிரமாண்டமாய் தேவைப்படும் ஒன்றாகும். ஆனால், இதன் முடிவு எவ்வாறு இருக்க போகின்றது? இதற்கான விடையை, யதார்த்தம் இன்னும் வழங்கியபாடில்லை. இல்லை. நீங்கள் இதனை புரட்சியின் பின்னரேயே எழுத வேண்டும் - எழுதக் கூடும்”
என்று அபிப்பிராயப்படுகின்றார். இவ்விளக்கத்தின் தர்க்கத்தை புரிந்து கொள்ளும் கார்க்கி, தன் கதையை தள்ளி வைத்து விடுகின்றார். பின் ரஷ்ய புரட்சி நிகழ்ந்து முடிய, 1924இல், கார்க்கி தனது ‘மூன்று தலைமுறையை’ (The Artmonovs) எழுதத் தொடங்குகின்றார். மார்ச்15, 1925 இல் Stefan Zwigeக்கு, தான், நாவலை முடித்து விட்டதாக அறிவித்தும் முடிக்கின்றார்.
1
- டால்ஸ்டாயை சந்திக்கும் கார்க்கி..-
ஆர்ட்டமோனோவின் ‘மூன்றாவது தலைமுறை’, பக்கம் 120 முதல், அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றது. அது வரையில், இந்த ‘ஆர்ட்டமோனோவ் மனிதனின்’, இரு தலைமுறைகள், நாவலில் வந்து போகின்றன. பண்ணையடிமைகளின் விடுவிப்பானது, பண்டை ரஷ்யாவில், நடந்தேறிய இரு வருடங்களின் பின், 1863 இல், தன் விடுதலையை காணும் ஆர்ட்டமோனோவ் (முதல் தலைமுறையினன்) தன் நெசவு நூல் நூற்கும் தொழிற்சாலையை தன் மகன்கள் இருவருடனும் தன் மருமகனுடனும் ஆரம்பிக்கின்றான். அதாவது முதலாம் தலைமுறையினனும், இரண்டாம் தலைமுறையை சேர்ந்த மகன்களும் இணைந்தாற்போல், தொழிற்சாலையை ஆரம்பிக்கின்றார்கள். தொழிற்சாலை காலபோக்கில் விஸ்தாரம் பெற்று, வேரூன்ற தொடங்குகின்றது.
நகரை, ஒட்டி, அதன் எல்லை புறமாய் ஓடும் நதிக்கு அப்பால், அதன் கரையின் ஓரமாய் இருக்கும் வெற்று மணலில் ஆழ கால்பதித்து, இயங்க துவங்கும் தொழிற்சாலை, காலபோக்கில் விழுதுகள் விட்டு, ஒரு ராட்ஷச மரமாய் வளர்ந்து, தன் பேயாட்டத்துக்குரிய சகலவித சம்பத்துக்களையும் உள்ளடக்கியதாய், உருமாற தொடங்குகின்றது. கணத்திற்கு கணம், விஸ்தாரம் பெற்று, விகாரப்படும் தொழிற்சாலை, ஒரு கணத்தில், தனது மேலும் அதிக வளர்ச்சிக்காய், ஒரு கொதிகலனை கோரி கூப்பாடு போடுகின்றது. கொதிகலனை, பெரும் படகுகளில் இருந்து, தரையிறக்கி, அதனை வெற்று மணலில், நதிகரையில் இருந்து, தொழிற்சாலையை நோக்கி, நகர்த்துவதில், உள்ள சிரமத்தை உணரும் ஆர்ட்டமோனாவ், தொழிற்சாலையின் மொத்த தொழிலாளர்களையும் இதில் ஈடுபடுத்தி, அதற்கு முன்னேற்பாடாக, எல்லா தொழிலாளர்களுக்கும் ஓர் தடல்புடலான விருந்தொன்றுக்கு ஏற்பாடு செய்து விடுகின்றான். விருந்தின் முடிவில் அனைவரையும் ஒன்று திரட்டி, நதிகளுக்கு இட்டு சென்று அவ் ராட்ஷச கொதிகலனை, நதிக்கரை மணலில் தள்ளி உருட்டிபுரள செய்து, அதனை தொழிற்சாலையை நோக்கி நெட்டி நகர்த்துகின்றான். ஓரிடத்தில், அப் பிரமாண்டமான கொதிகலன் மணலில் புதைந்து விட, தன் சொந்த தோள்களை தந்து, அனைவருடனும் சேர்ந்தாற் போல், அக்கொதிகலனை நகர்த்த அவன் தெண்டிக்கின்றான். கொதிகலனுக்கும் அவனுக்கும் இடையில் நடக்கும் இழுபறியில், கொதிகலன் அவனை கீழே தள்ளி வீழ்த்தி விடுகின்றது. கீழே விழும் அவன் வாயில் இருந்து கட்டிப்பட்ட ரத்தம், கொட்ட, அதனை அவன் துப்பியபடி இறப்பதை தூரத்தில் இருந்து பார்க்கும் தொழிற்சாலை, தன் கண்களை சிமிட்டாது, வெறியுடன் பார்த்து திருப்தி அடைவதாக படுகின்றது. ஆர்ட்டமோனோவின், மேற்குறித்த இழப்புடன், முதலாம் தலைமுறையினனின் கதை, இப்படியாய் நாவலில் முடிகின்றது. அதாவது, ஒரு நூறு வருட காலம், ஜீவிக்ககூடிய ஓர் மனிதனின் கதை இப்படியாய் முடிவடைகின்றது. ஓர் 200 ஆண்டு சென்றுள்ள, மலையக வரலாற்றிலும், இப்படி எத்தனை தொழிற்சாலைகள் வந்து போயிருக்க கூடும் என்பது மறு கேள்வி.
2
தொழிற்சாலையின் பராமரிப்பை தன் மகன்கள் இருவரதும் கைகளில் ஒப்படைத்து இறக்கும் ஆர்ட்டமோனோவ், ஆர்ட்டமோனோவ் குடும்பத்தாருக்காய், நகரில் இருந்து விடுபட்டு, பிரத்தியேகமாய் அமைக்கப்பட்டிருக்கும் சுடுகாட்டில் புதைப்படுகின்றான். இவன், இப்படி, தங்களுக்கென ஓர் பிரத்யேகமான, சொந்த, மயான ப10மியை உருவாக்கி கொள்வதில் கூட காரணங்கள் இருக்கவே செய்தன. நகரத்தின் பெரிய மனிதருள் ஒருவனாக, ஆர்ட்டமோனோவ் அங்கீகரிப்பட்டு (?) இருந்தாலும், நகரம் அவனை பகை உணர்வுடன் அந்நியப்பட்டே பார்ப்பதாய் இருந்தது. அதாவது, ஓர் வர்த்தக சமூகம் ஏற்கனவே கோலோச்சும் அச்சிறிய நகரில், ஒரு பண்ணை பின்புலத்தில் இருந்து வரும் ஒருவன், யாருக்குமே புலப்படாத, நகரின் எந்த ஒருவருக்கும் அந்நியமான முறையில், ஒரு சணல் தொழிற்சாலையை தொடங்குகின்றான் -அதாவது, காலம் காலமாக அல்லது பரம்பரை பரம்பரையாக இருந்து வரும் ஒரு சமூகத்தின் அந்தஸ்தை, அவன், நதிக்கரை ஓரமாய், தங்கள் கண் முன்னாலேயே, அவன் தட்டி பறிக்கின்றான். அவனது தொழிற்சாலை, கால்பதித்து, வேரூன்றி, ஆட்டம் காட்ட தொடங்குகின்றது. இருவேறு, அந்தஸ்த்துகளும் ஆதிக்கங்களும், இப்படி, ஒன்றுக்கொன்று பகைமை பூண்டு, இயங்க தொடங்குவதை கார்க்கி எனும் மகா கலைஞன் படம் பிடிக்க தொடங்குகின்றான்.
இப்பகைமை உணர்வே, தங்களுக்கான, இப்படியான, ஓர் தனித்த மயான பூமியை உருவாக்கி கொள்ளக் காரணமாகின்றது. ஆனால், ஆர்ட்டமோனோவின் இரண்டாம் தலைமுறையை சார்ந்த அவனது மூத்த மகன் (பியோதர்) ஆரம்பத்தில், தன் வாழ்க்கை வெறுமனே, சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவே உணரத் தலைப்படுகின்றான். தந்தை இறந்த பின், தொழிற்சாலையின் நிர்வாகத்தை –தேவைகளை –கோரிக்கைகளை கட்டிக்காக்கும் இவன், சமயங்களில் இப்படி உணர்வதென்பது நாவலில் தர்க்கப10ர்வமான சித்தரிப்புக்கூடாக வெளி கொணரப்படுகின்றது. தன் மனைவியிடமோ அல்லது தன் குழந்தையிடமோ ஈடுபாடு காட்டக்கூட அவனுக்கு நேரம் கிட்டுவதாய் இல்லை. அதாவது, தொழிற்சாலையின் அசுர பிடியில், அவனும் சிக்கி பரிதவிக்கின்றான்- அதன் வேகத்தில், இழுத்து செல்லப்படுகின்றான்.
அவனது முகமும் கண்ணும் காலபோக்கிலும் மாற்றமடைகின்றன -இயல்பிழந்த மனிதனாய் அவன் உருவாகுகின்றான். அவனது குடும்ப உறவுகள் படிப்படியாக பாதிப்புறுகின்றன. இன்னல்கள் உருவாகின்றது. அவனது இளைய சகோதரன் - அதாவது ஆர்ட்டமோனோவ் குடும்பத்தின் கடைசி ஆள் - ஒரு கூன் படைத்தவன் - நதிக்கரையின் ஓரமாய் இருக்கும் வெற்று மணலை அகற்றி, வீட்டை சுற்றி வேறு ஆரோக்கிய மண்ணால் பிரதியிட்டு, அவ்விடத்தை ஓர் நந்தவனத்துக்கேற்றதாய் மாற்றியமைத்து, மரங்களையும் ப10க்களையும் உருவாக்கி கொள்வதில் வெற்றி பெறுகின்றான். ஆனால், அவன் தனது தனிமை காரணமாக, தனிமையுற்று இருக்கும் தன் மூத்த சகோதரனின், (பியோதர்) மனைவியுடன் காதல் வயப்பட நேர்கின்றது. இத்தருணங்கள் அழகுற–மிக அழகுற சித்தரிக்கப்படுகின்றது.
இரவு உணவின் பின் தனது கணவன் மீண்டும் வேலைக்கு சென்று விட, அவனது மனைவி (இளம் வயதினள்) கூன் படைத்தவனின் அறைக்கு சென்று, அங்கே ஜன்னலருகே போடப்பட்டிருக்கும் ஒரு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தவாறே தன் தையல் வேலைகளில், மூழ்க தொடங்கி விடுவாள். இச் சாய்வு நாற்காலியானது, கூன் படைத்தவனால், அவளுக்கென்றே சிரத்தையுடன் செய்யப்பட்டு, நன்கு அவன் கரங்களாலேயே செதுக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும். தொழிற்சாலையின் கணக்கு வழக்குகளை இரவு முழுதும் செய்து முடிக்க வேண்டிய பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அவள் வந்தவுடன் அவற்றை அவன் ஒரு கணம் மூடி வைத்துவிட்டு, அவளுடன் தன் கடந்த கால வாழ்வு பொறுத்து கதைக்க ஆரம்பித்து விடுவான். அவனது பெண்மை சார்ந்த மெல்லிய குரல் இறுகியும், ஆனால் வருடுவதாயும், அவனது நீல கண்கள் அவளது முகத்தை தவிர்த்து கொண்டு ஜன்னல் வழியே தன் பார்வையை வீசி எறிவதாயும் இருக்கும். இப்படியாய் அவர்கள் ஒரு மணி, இரண்டு மணி என்று கணக்கற்று இருப்பர் - ஒருவரை ஒருவர் பார்ப்பதை தவிர்த்து கொண்டு. ஆனால் தற்செயலாக அவன் அவனை நோக்கி பார்வையை வீசி எறியும் போது அவனது காதுகள் இரண்டும் சிவந்து விடும். அவளது கண்கள் அவனை நோக்கி புன்னகைக்கும். அது வினோதமான ஓர் புன்னகைத்தான். சிலவேளை அவன் உணர்வான் - தன் உள்ளக்கிடக்கை உணர்ந்த ஓர் வருடும் புன்னகை அது என. ஏனைய பார்வைகள் தன்னை நோக்கி ஓர் வினோத பார்வையை அல்லது நிராகரிக்கும் பார்வையை வீசி எறிந்து தன்னை புண்படுத்தி, தன்னை குற்ற உணர்வு மல்க தலைகுனிய செய்கையில், இவளது, இப்பார்வை அனுதாபம் மிக்கதாய் உள்ளது என்பதையே, கார்க்கி தன் ஆழ்ந்த எழுத்து திறனால் சித்தரிக்கின்றார்.
கூன் விழுந்த சகோதரன் இப்படியாய் தான் அறியாது, காதல் வயப்பட்டு பரிதவிக்குகையில், இவர்களின் சந்திப்பை காண நேரும் காவலாளி, பொதுவில், இருவரையும் எச்சரிக்கையுற செய்கின்றான். இவை அனைத்தும் கூன் படைத்தவனை, இவள் இப்போது சந்தேக கண் கொண்டு பார்க்க தூண்டுகின்றது–தன்னை உளவு பார்க்கவே இவன் தன் கணவனால் (மூத்த சகோதரனால்-பியோதர்) நியமிக்கப்பட்டுள்ளான் என அவள், தனக்குத்தான் முடிவு செய்து கொள்கின்றாள். இவற்றை ஆழ உணரும், கூன் விழுந்த இச்சகோதரன் தனது தற்கொலைக்கு முயற்சிக்கின்றான்:
“ஈரம் உலர, காய்போடப்பட்டு கிடக்கும் அவளது இரவு உடைகளை அவன் முத்தமிட்டப்பின், தன் தற்கொலை முயற்சியை அவன் முன்னெடுக்கின்றான்”.
தற்கொலை முயற்சியின், இறுதி கணத்தில் காப்பாற்றப்படும் அவன், வெட்கம் அவனை அண்டி சூழ்ந்த நிலையில் ஓர் துறவு வாழ்வை மேற்கொண்டு வீட்டை விட்டு அகல்கின்றான். இவனது ஒரே ஒரு நண்பனான, தொழிற்சாலையின் -அதாவது, ஆர்ட்டமோனோவின் வீட்டு காவலாளி டிக்கன் (Tikhon) ஒரு வித்தியாசமான ஆளுமையாக, நாவலில் படைக்கப்பட்டுள்ளான். பிறரை அதிசயத்தில் அல்லது ஆச்சரியத்தில் ஆழ்த்த தனது கூற்றுக்களை ஆற்ற விரும்பும், தன்முனைப்பு கொண்ட இவனின் மறுபக்கத்தில் அவனது ஆன்ம ‘ஜீவிப்பை’ கார்க்கி காட்டவே செய்கின்றார். ஆனால், மூத்த ஆர்ட்டமோனோவ், டிக்கனின் ஆன்ம விழிப்பு நிலை கண்டு, அவனை வெறுக்கவே செய்கின்றான்: யார் இவன்? ஆன்மாவை பற்றி கதைப்பவன்?? டிக்கனின் ஆன்மா சார்ந்த கேள்விகள் பியோதரின் (ஆர்ட்டமோனோவின் முதலாம் மகன்) வெட்ககேடான வாழ்க்கையை குத்தி காட்டுவதாய் இருக்கின்றது. இதன் காரணமாகவே, பிரதானமாக, பியோதர் அவனை வெறுக்கத் துணிகின்றான். அதாவது தொழிற்சாலை, இப்படியாய் முரண்களை ஏற்படுத்தி விடுகின்றது.
3
தொழிலாளர்கள், பியோதரை ஒரு சந்தர்ப்பத்தில், தங்களின் விருந்துபசாரத்திற்கு வரவேற்பது, கிட்டத்தட்ட, எமது மலையக தொழிலாளர்கள், தங்களது விருந்துபசாரங்களுக்கு (திருவிழா நாட்களில், பொன்னர் சங்கர்-காமன் கூத்துக்களுக்கு–அல்லது ஏனைய நாடகங்கள் -திருவிழாக்கள் -பண்டிகை தினங்களில்) பெரிய கங்காணிமாரை அழைத்து, அவர்களை “குதிரை வர்றத பாருங்கடி, குதிர குனிஞ்சு வர்றத பாருங்கடி அல்லது சூரை படர்ந்ததை பாருங்கடி – அது சுத்தி படர்ந்ததை பாருங்கடி, சூரைவிதை போல நம்மய்யா கங்காணி, சொல்லு வரிசைய பாருங்கடி” என்று தமது பெரிய கங்காணிமாரை துதி செய்து பாடுவது போல அவனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றனர்.
அதாவது ஓர் ஆதிக்க சக்தி, தன் அடிமை சக்திகளை ஆட்சிக்குட்படுத்திய விதங்களை இப்படியாய் நாவல் கூற தவறவில்லை. காவலாளி டிக்கனை பற்றி எழுதும் போது பின்வருமாறு குறிக்கப்படுகின்றது: “ஏதோ இவ் உலகில் அவன் இறுதியாய், வாழ்ந்திருக்க சம்மதம் அளித்திருப்பது, அவனது இதயம் அவனுக்களித்த ஒரு சலுகையினால் மாத்திரமே” என்பது போல அவன் வாழ்ந்து வந்தான் என்றும் பொலிஸ்காரன் ஒருவன் தன்னை சுற்றி இருக்கும் தொழிலாளர்களை வெறுப்புடன் பார்ப்பது போல பெண்களிடத்தில் அவன் முரட்டுதனமாகவே நடந்து கொண்டான் என்றும் அவன் கல்யாணம் செய்யாமல் பிரமச்சாரியாய் இருப்பது மாத்திரமல்லாமல், பேசவே பிடிக்காமல் எரிச்சல் பிடித்தவனாயும், அதிகம் கதைக்காதவனுமாயும் இருந்தான், என்பதும் நாவலின் சித்தரிப்பு.
“இந்த டிக்கன், நண்பர்கள் இருந்திருந்தால், ஓர் குறுங்குழுவினனாக உரு கொண்டிருப்பான்”.
இவனது சட்டை காலரை பிடித்து, ஓர் உலுக்கு உலுக்கி, பேசாத அவன் வாயையும் திறந்து பேசவைத்து, அவன் அதற்குள் நிறைத்து வைத்திருக்கும் வார்த்தைகளை, அவனது வாயிலிருந்து, அப்படியே கொட்ட செய்யும் அடங்காத ஆசை ஆர்ட்டமோனோவின் இரண்டாம் தலைமுறையினனான பியோதருக்கு ஒரு சந்தர்ப்பத்தில் எழுகின்றது அதாவது, முதலாம் தலைமுறையை சார்ந்த ஆர்ட்டமோனோவின் வாயிற்காவலன் தொடர்பிலான பகைமை உணர்வு, இரண்டாம் தலைமுறையினன் காலத்தில், இப்படியாக வளர்ந்து, உருவாகி விடுகின்றது– தலைமுறைகளின் மாற்றத்துடன். இதற்கான காரணங்களையும் கார்க்கி தன் நூலில் தீண்டாமல் இல்லை.
பியோதர் (இரண்டாம் தலைமுறையினன்) ஒரு சந்தர்பத்தில் தன் அன்பான மகனை (இல்யா-ஐடடலய) கெடுவழிக்கு இட்டு செலுத்துவது தொழிலாள குடியிருப்பை சேர்ந்த, அவனது தீய தோழன் (பதின்வயது நிக்கொலாய்) தான் என்பதை அறிகின்றான். போதாதற்கு பியோதர், அறவே வெறுக்கும் புறாக்களை வளர்ப்பதிலும் கூட இரு தோழர்களும் கரிசனை காட்டுகின்றனர். தோழர்களின் அக உலக தேவைப்பாடு குறித்த அக்கறை பியோதரிடம் இல்லை. தனது மகன் கல்லூரி ஹாஸ்டலுக்கு சென்றுள்ள வேளை புறாக்களையும் அவனது தோழனையும் ஒன்று சேர துரத்தியடித்து விடுகின்றான். ஆனால் விடுமுறையில் அவனது மகன் இல்யா வீடு திரும்பி இருக்கும் போது, அவனது தோழன், இல்யாவுக்கூடாக, புறாக்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள பியோதரை நிர்பந்தித்து விடுகின்றான்.புறாக்கள், ஒதுக்குபுறமாய், இருக்கும் குளியலறையில் வளரத் தொடங்குகின்றன.
இல்யா, மீண்டும் கல்லூரிக்கு சென்ற நிலையில், ஒருநாள் எலும்பும் தோலுமாக இருக்கும் நிக்கொலாய், குளியலறையில் அந்தரங்கமாய் இருப்பதை பார்த்து விடும் பியோதரின் மனதில் கோபம் கொப்புளிக்கின்றது. தன் மகனின் சொல்லை தட்ட முடியாமல் புறாக்களை கொணர்ந்து சேர்த்த கோபம் வேறு. இப்போது… இதுவும் பொறுக்க முடியாமல், கோபம் கொண்டு, அவனை தனது பலம் கொண்ட அளவில் அவனது மெலிந்த நெஞ்சில் உதைத்து அவனை கீழே வீழ்த்துகின்றான். கடுமையான அவனது உதையால் தாக்கப்பட்டு கீழே விழும் அவன் அப்படியே இறந்து விடுகின்றான்.
சவ அடக்கத்தின் போது அழுவதற்கு கண்ணில் கண்ணீருமற்று, வடிக்க மறுக்கும் விழிகளை கொண்ட அவனது தாயார் அவனது தலைமாட்டில் நின்று, தனது மெலிந்த கைவிரல்களால் அவனது கண்களை மூடி வைக்கப்பட்டிருக்கும் உலோக நாணயங்களை மெதுவாக அவனது மூடிய கண்களில் வைத்து அழுத்துவதும், பின் தனக்குத்தான் அசாதாரண முறையில் வேக வேகமாக சிலுவை குறியை இட்டு கொள்வதும், ஒரு கட்டத்தில் சிலுவை இட்டு கொள்ள முடியாமல் அவளது கரம் பலவீனமுற்று அவளறியாமல் கீழே வீழ்வதுமாய் இருப்பதையும் சிறுவனை உதைத்து தள்ளிய, இரண்டாம் தலைமுறையினனான, பியோதர் ஆர்ட்டமோனோவ் அவதானிக்கவே செய்கின்றான்.
இருந்தும், சவ அடக்கத்திற்காய் தன் குற்ற உணர்வு காரணமாக, கொடுக்க நினைக்கும் தொகையை விட குறைவான தொகையையே கொடுக்கின்றான்-வாயிற்காவலன் டிக்கானின் சந்தேகம் தன்மேல் விழாதவாறு. இப்படியாக, ஒரு சிக்கலுக்குள் பல சிக்கல்கள் கொண்டதாய் வாழ்வும் நாவலும் விரிகின்றது–அறவே, தீர்க்கப்பட முடியாத வாழ்வியல் நெருக்கடிகளுடன். வேறு வார்த்தையில் கூறுவதானால் வாழ்வானது, இரண்டாம் தலைமுறையினனின் காலத்தின் போது, புதுவரவு பெற்று, தனது தீர்க்கமுடியாத நெருக்கடிகளுடன் புதிய தளத்தில் இயங்க முற்படுகின்றது–நேற்று இயங்கிய தளத்தில் இருந்து வேறுபட்டு. அதாவது, தொழிற்சாலையானது, புதிய தொழிநுட்பத்தை கோரி கொதிகலனூடாக அவனது தந்தையை பழிவாங்கும் நிகழ்வு ஒரு புறம் சென்று சேர, இப்போது இவனது உதையால், அவனது மகனின் தோழன், பழிவாங்கப்படும் நிகழ்வும் புதிதாய் வந்து சேர்கின்றது. இவை அனைத்தையும் உள்வாங்கும் பியோதரின் மனநிலை சில சமயங்களில் பரிதவிக்கவே செய்கின்றது. இருந்தும், ஈற்றில் தொழிற்சாலையின் கோரிக்கைகளுக்கு அவன் அடிபணியவே செய்கின்றான். அவனது மனமும் மரத்து போக பழக்கப்பட்டு போகின்றது–தொழிற்சாலை ஆட்டுவிக்கும் ஆசைகளுக்கு அடிபணிந்து.
இவ்விடத்தில, தெளிவத்தை ஜோசப்பின் குடைநிழலில், அவரது தந்தை ஒரு பெரிய கங்காணியாய் தோன்றும் அதிகாரம் ஒப்பு நோக்கத்தக்கது. (பன்னிரெண்டு பொக்கட் கோட்டு:நந்தலாலா–ஒக்டோபர் 1995 இதழ்). ஒரு பெரிய கங்காணியின் வாழ்வு எப்படி பணத்தாலும், அதிகாரத்தாலும், சீரழியப்பட்டு, கள்ளாலும், காமத்தாலும் ஆட்கொள்ளப்பட்டு குடும்ப சீரழிவுக்கு இட்டு செல்லப்படுகின்றது, என விஸ்தரிக்கும் காட்சி ஒப்பு நோக்கத்தக்கதே. யாரை விடவும், மிக கூர்மையாக அவனில் நிகழ்ந்தேறும் இம்மாற்றத்தை, இறக்கும் தருவாயில் உள்ள பியோதரின் மனைவியின் தாய் (அவனது மாமியார்) ஆழமாக உணர தலைப்படுகின்றாள். அதாவது, பியோதரில் உருவாகும் விகாரமுற்ற ஒரு விலங்கை, சாகப்போகும் அவள் தெளிவுற பார்க்கின்றாள். அவளது மகளோ (பியோதரின் மனைவி)–எதையுமே செய்யமாட்டாதவளாய், மௌனமாய் தனக்குள் அனைத்தையும் புதைத்துக் கொண்டு, பியோதரின் மாறிய உருவத்தோடு, அவள் இழுபட்டு செல்லும் பரிதாபத்தை பார்க்கும் அவளது தாய் கண்ணீர் மல்குகின்றாள்.
- கார்க்கி -
4
பக்கம் 173 உடன், மூன்றாம் தலைமுறையினனின் வரவு, நாவலில் ஆழமாக அடியெடுக்க தொடங்குகின்றது. இதன் இடையே, தந்தைக்கும் (பியோதர்) தனயனுக்கும் (இல்யா) இடையே ஆழமான முரண் தோன்றி விடுகின்றது. தொழிற்சாலையை தனக்கு பின் நிர்வகிக்க அனைத்து தகுதிகளையும் சால பெற்றிருந்த இல்யா, தன் தந்தையுடன் முரணுற்று, தொழிற்சாலையை நிராகரித்து அறிவையும், புதிய கலாசாரத்தையும் நாடி பயணிக்க விழைகின்றான்.
இதேவேளை தொழிற்சாலையின் வியாபாரத்தை, நிர்வாகத்தை, அவனது ஒன்றுவிட்ட சகோதரன், முற்றாக கைப்பற்றி கொள்கின்றான் - பியோதருக்கு ஒரு சிறிய அளவிலான பங்களிப்பை மாத்திரம் தந்தவனாய். மொத்தத்தில், தன் எதிர்பார்ப்புக்கு மாறாக, தனது சொந்த மகனும் தொழிற்சாலை நிர்வாகத்தை நிராகரித்து விட்ட நிலையில், கூடவே அவன், தன்னையும் நிராகரித்துவிட்ட நிலையில், தனிமைப்பட்டு போகும் அவன், தன் மனைவியையும் ‘பன்றி’ என இகழ்ந்துரைத்து விட்டபின், தன் மன அழுத்தங்களில் இருந்தும் விடுபட அல்லது தன் தடித்து போன, தனது மனைவி மீது பழிதீர்க்கும் முகமாகவும், தனது கேளிக்கைகளுக்காக, கோவலன் மாதவியை நாடி புறப்படுவது போல ஒரு வினோதத்தை நாடி ஒரு கண்காட்சிக்கு சென்று சேர்கின்றான்.
ஒரு கிழமை அளவில் அங்கு சீரழியும் அவன், இறுதியில் தன் மன உலைச்சளை மேலும் தாங்க முடியாமல், தற்போது துறவறம் மேற்கொண்டிருக்கும் தன் கூன் விழுந்த சகோதரனை தேடி அவனது மட பள்ளிக்கு சென்று சேர்கின்றான். முதலில் கேளிக்கை சுற்று. இரண்டாவது மத சுற்று. ஆனால் கூன் விழுந்த சகோதரனோ மதத்தை மாத்திரமல்லாது, இப்போது, தன் மூத்த சகோதரனையும், இவர்களின் வாழ்வையும், இவர்கள் ஆற்றும் பாவங்களையும் கேள்விக்குட்படுத்த தொடங்கி விடுகின்றான். கூனனின் உள் மனது கதறுகின்றது:
“எதற்காக - இப்படி நான் பழிவாங்கப்பட்டுள்ளேன் - இப்படியான கடும் தண்டனை விதிக்கப்பட நான் என்ன பாவம் செய்தேன்?”.
அதாவது, தான் ஆற்றும் பாவங்களுக்காய் பிரார்த்தித்து, மன்னிப்பை, அல்லது தனக்கான ஓர் பாவ விமோசனத்தை தேடி கொணர்ந்து சேர்க்க கூடிய தன் கூன் சகோதரனும் தன்னை கைவிட்டு போன நிலையில்-ஒரு இருண்ட மழைகாலத்தில் அவன் தனித்து புறப்படுகின்றான்-மீள தனது நகர் நோக்கி.
5
இப்படியாய் முதலாம் தலைமுறையினன் ஓர் சணல் தொழிற்சாலைக்கூடாக தனது பிரத்யேகமான மயான ப10மியை வடிவமைத்து கொள்கையில், இரண்டாம் தலைமுறையினன் தொழிற்சாலைக்குரிய தொழிநுட்பங்களை, அதிகாரிகளை, தொழில் துறையினரை தேடிக் கொள்ள, மூன்றாம் தலைமுறையினன், (இல்யாவின் சகோதரன்-மற்றும்) ஒன்று விட்ட சகோதரன் போன்றோர், பணத்தை தேடி, தொழிற்சாலையின் அடங்காத பசிக்கு முற்றாக தீணியாகி விடுகின்றனர்.
நாவலின் இறுதியில், டிக்கன் என்ற அந்த கிழட்டு வாயிற்காவலன் பின்வரும் பொருள்பட கூறுவான்:
“இல்யாவின் தோழனை கொன்றது போல, ஈற்றில் ஆன்மாவை கொன்றது மட்டுமல்லாமல் கடவுளை கூட நீங்கள் பறித்தெடுத்து விட்டீர்கள்”
என. இருக்கலாம். ஏனெனில் கூன் விழுந்த சகோதரன், நிகிடாவுக்கும் இப்பொழுது கடவுளும் இல்லாத ஒரு நிலைமை உருவாகி விட்டது.
நாவலின் ஓரிடத்தில், ஆர்ட்டமோனோவின் மருமகனான அலெக்ஸி வளர்க்கும், (இரண்டாம் தலைமுறையை சேர்ந்தவன்) ஒரு கரடியை பற்றிய ஓர் வர்ணனை வருகின்றது: கிட்டத்தட்ட நாய் குட்டி போல நன்றியுடன் விளையாடும் அப்பிராணி தனக்கு பசியெடுக்கும் போதெல்லாம் நேரடியாக சமையலறைக்கு சென்று ஒரு துண்டு பானை கெஞ்சி கேட்கும் வழக்கத்தை உடையதாக இருந்தது. வீட்டில் அனைவரும், அதனுடன் அன்பு பாராட்டுபவர்களாகவே இருந்தார்கள்.
கூன் விழுந்த சகோதரன் நிகிடா, அதனது அடர்ந்த மயிரை ஒரு சீப்பு கொண்டு வாரி விடுவதும், அதனை குளிப்பதற்காக ஆற்றை நோக்கி இட்டு செல்வதும் பின். அதனுடன் விளையாடுவதுமாய், இருப்பதும்;…பின் அவன் இல்லாத சமயங்களில் அது பியோதரின் மனைவியிடம் சென்று அவளிடம் கெஞ்சி உணவு கேட்பதும்… இப்படியான ஒரு பொழுதில், அலெக்ஸி அக்கரடிக்கு சிறிதளவு வட்காவை ஒரு குதூகலத்தின் போது கொடுத்து விடுகிறான். போதையில் கரடி உருள்வதும் புரள்வதுமாக இருந்து பின் கூரை மீது ஏறி கூரை பலகைகளை பிய்த்து எறிய ஆரம்பித்து விடும். ஆரம்பத்தில் வெறும் தமாசாக இருக்கும் இது, பின்னர் ஓர் வழக்கமாகி, கரடி தானாகவே வட்காவை தேட தொடங்கும் அளவிற்கு வளர்ந்து விடுகின்றது.
மோப்பம் பிடித்து திரியும் அது, ஒரு சந்தர்ப்பத்தில் வாயிற்காவலன் டிக்கனின் காலையும் பிராண்டி எடுத்து விடுகின்றது. பிறகு வேறொரு இளம் தொழிலாளியை, ஒரே அடியில் கீழே சாய்த்து விடுகின்றது. நிகிடாவின் தொடை எலும்பை வேறு முறித்து விடும் அளவிற்கு ஒரு அடி கொடுக்கின்றது. செய்வதறியாத அலெக்ஸி ஓடி சென்று கரடியை ஓர் கோடாரியால் தாக்கி கொன்று விடுகின்றான். கரடியை போன்றே போதை கொள்ளும் ஒரு தொழிற்சாலையின் கதையை, சரியாக கூறுவோமானால் அது உற்பத்தி செய்யக்கூடிய புதிய உறவுமுறைகளை, கார்க்கி என்ற கலைஞன், வாழ்வின் இயங்குவிதிகள் மாறாமல் படம் பிடித்து தீட்டிய சித்திரமே மூன்று தலைமுறைகள் The Artomonov எனலாம். டால்ஸ்டாய் உடனடியாகவும், லெனின் புரட்சிக்கு பிந்தியதாகவும்-எழுதப்பட வேண்டிய நாவல் இது என்று அபிப்பிராயப்பட்ட இந்நாவல், எழுத்துலகில் ஒரு மைல்கல் என்றால் ஆச்சர்யபட யாதுமில்லை எனலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.