பகுதி ஒன்று (சென்ற இதழ் தொடர்ச்சி)
தனது எல்லையிலிருந்து, கிட்டத்தட்ட 500கி.மீ தொலைவிலுள்ள, ரஷ்ய விமான தளமான, ஏங்கெல்ஸ்-2ஐ, உக்ரைன் 04.12.2022 இல், தனது ட்ரோன்கள் மூலம் தாக்கியதற்கூடாக, ரஷ்ய-உக்ரைன் போரை இன்னுமொரு புதிய தளத்திற்கு, உக்ரைன் கொண்டுசென்று சேர்த்தது என கூறலாம். அதாவது கிரைமியாவின் பால-தாக்குதல், பின் ரஷ்யாவின் கடலுக்கடியிலான, எரிவாயு குழாய் தாக்குதல், இவற்றுக்கு பின்னதாக நடைபெற்றுள்ள ரஷ்யாவின் இவ்விரு விமான தளங்களின் மீதான தாக்குதல்கள் உலக அவதானிப்பை பரந்த அளவில் பெற்றுள்ளது. ரைசன் விமானதள தாக்குதலை விட ஏங்கெல்ஸ் விமான தள தாக்குதல் நிர்ணயகரமானதாக கருதப்படுகின்றது. காரணம், இவ்விரு தளங்களிலும், இத்தளமே, ரஷ்யாவின் அணு ஆயுதங்களை உள்ளடக்கியதாய் இருந்தது. இத்தாக்குதல் தொடர்பில், இதுவரை, இரண்டு பொருட்கோடல்கள் செய்யப்பட்டுள்ளன. ஒன்று, கார்டியன் போன்ற மேற்குலக ஊடகங்களின் கூற்று. மற்றது, மெக்ரோகர் போன்ற யுத்த வல்லுனர்களின் கூற்று.
கார்டியனின் கூற்றுப்படி, இதுவரை பாவிக்கப்பட்டிராத, மிக நுணுக்கமாய் வடிவமைக்கப்பட்ட, முன்னேறிய, 'ட்ரோன்'களை கொண்டு உக்ரைன் தாக்கியது, என்பது ஒரு வகை. அதாவது, புதிய வகை 'ட்ரோன்'களின் புதுவரவு. இப்புது வரவே, இவ்விரு விமான தளங்களின், தாக்குதல்களை சாத்தியப்படுத்தி இருந்தன. உக்ரேனிய எல்லையில் இருந்து, கிட்டத்தட்ட 500கி.மீற்றருக்கு உள்ளே, ரஷ்யாவில் ஆழ அமைந்து கிடக்கும் –அதுவும் ரய்சான் தளம் மாஸ்கோவில் இருந்து கிட்டத்தட்ட, 150கி.மீற்றர் தொலைவிலேயே உள்ளது என்ற சூழ்நிலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மறுபுறத்தில், மெக்ரோகரின் பொருள்கோடல்: இத்தாக்குதல்கள், உக்ரைனில் இருந்து புறப்பட்ட புதிய வகை 'ட்ரோன்'களால் நடத்தப்பட்டவை ‘அல்ல’. மாறாக, ரஷ்யாவின் உள்ளேயே இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களே இதுவாகும் என்பதே அவரது பொருள் கோடலின் உள்ளடக்கமாகும்.
முன்னர் குறிப்பிட்ட, கார்டியனின், முன்னேறிய 'ட்ரோன்'கள் பொறுத்த கூற்று, ரஷ்யாவின் 'ட்ரோன்' விடயங்களை திசை திருப்பவும், ரஷ்யாவை தொடர்ந்தும் இருட்டில் ஆழ்த்தவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக இருக்கலாம். ஆனால் மெக்ரோகரின் பார்வையில், ரஷ்யா ஒரு பிரமாண்டமான எல்லைகளை கொண்ட ஒரு நாடாக இருக்கின்றது. இப்படி விரிந்து கிடக்கும் ஒரு நாட்டின், எல்லைகளுக்கூடாக, ‘ஆழ ஊடுருவுவது’ என்பது மிக எளிதான ஒரு விடயம்தான் என்பது அவரது கருத்தாகின்றது.
உதாரணமாக, கடந்த காலத்தில் கூட, உக்ரைன் முன்னதாக இப்படியாய் ஆழ ஊடுருவி, ரஷ்ய அதிபர் புட்டினின் மூக்கிற்கு கீழாகவே, ஓர் கார் குண்டை வெடிக்க செய்து, அவரது மிக நெருங்கிய ஆதரவாளர்களின், மகள் ஒருவரை கொன்றிருக்கவே செய்தது என்பது அவரது வாதம். எது எப்படியாயினும், இத்தாக்குதல்கள், பல படிமுறை மாற்றங்களை, ரஷ்ய-உக்ரைன் போருக்கும், மொத்தத்தில் உலகிற்கும் கொண்டுவந்து சேர்த்துள்ளது என்பதே குறிக்கதக்கதாகும். முக்கியமாக, அமெரிக்கா, இத்தாக்குதல்களை அடுத்து, தனது அணு ஆயுத கோட்பாட்டை மீள சீர் செய்து கொண்டது என்ற உண்மை ஆழ கவனிக்கத்தக்கது.
அதாவது, அணு ஆயுதத்தை ‘முதலில் பாவிக்கும் உரிமையை’, அமெரிக்கா, இத்தாக்குதலின் பின்னர் மீள் அங்கீகாரம் செய்து கொண்டு மேலும் உறுதி செய்து கொண்டது. அதாவது, தனது எந்த ஒரு Conventional போரும் (மரபுசார் போர்) தோற்குமிடத்து, தான், அணு ஆயுதங்களை முதலில் பாவிக்கலாம் என்பதே அமெரிக்காவின் நவீன அணு ஏவுகணை கோட்பாடாகின்றது. இதனை தொடர்ந்து ரஷ்யாவின் புட்டினும், தன் பங்குக்கு, இனிமேல், இன்னமும் ‘அணு ஆயுத முதல் பாவிப்பு இல்லை’ என்ற கோட்பாட்டை தொடர்ந்தும் ரஷ்யா கைப்பிடித்து பேண, ரஷ்யர்கள் ஒன்றும் அவ்வளவு மடையர்கள் இல்லை–எமக்கு எட்டக்கூடிய ஆய்வு தரவுகளின்படி, எமக்கெதிராக ஒரு அணு ஆயுத ஏவுகணையானது தயார்செய்யப்படுகின்றதா-அதற்குரிய செலுத்தியில் ஏற்றப்படுகின்றதா அல்லது செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றனவா–என்பது குறித்த சமிக்ஞை கிடைக்கப்பெற்ற உடனேயே, எங்களது அணுசக்தி ஏவுகணைகள் புறப்பட்டு குறித்த நாடுகளை தரைமட்டமாக்கிவிடும் என்றார் அவர். (09.12.2022). அதாவது ஏங்கெல்ஸ் தள தாக்குதல் இடம்பெற்று வெறும் நான்கு தினங்களில் வெளிவந்த, உலகின் மிகப்பெரிய இரு அணுசக்தி நாடுகளின் அறிவிப்புகள் இவை-பரஸ்பரம், தத்தமது, அணு ஏவுகணை கொள்கைகளை இப்படியாக மாற்றியமைத்துள்ளன அவை.
போதாதற்கு, இன்று வரை தன் அணு ஆயுத சேமிப்பை பல்வேறு வகையில் பாதுகாத்து பேணிவரும், ரஷ்யா தன் அதிநவீன ஏவுகணைகளை, தனது மேற்கு எல்லை நோக்கி நகர்த்தி, பூரண தயார் நிலையில் கிடத்தி விட்டது. உதாரணமாக, தனது அதிமுக்கிய ஏவுகணையான சர்மத்-2 ஏவுகணையை (சாத்தான்-2) மிக அண்மையில், ரஷ்ய-உக்ரைன் போரின் போது, ரஷ்யா மீள் சோதித்தது மாத்திரமல்லாமல் (18-நவம்பர்-2022) இவ்வகையில் ஓர் 50க்கும் மேற்பட்ட சர்மத்-2 ஏவுகணைகளுக்கான பரந்துபட்ட தயாரிப்புக்கான உத்தரவையும் பிறப்பித்து முடித்து விட்டது அல்லாமல், தனது மேற்கு எல்லை நோக்கியும் நகர்த்தி விட்டது. (ஏவுகணையின் நிறை: 200 தொன். வேகம்:16000 மைல்ஃமணி. தொலைவு: 11000 மைல்கள். ஹிரோஷிமா–நாகசாகியை விட 1000 மடங்கு நாசத்தை விளைவிக்க கூடியது). கூடவே, கடந்த சில தினங்களில், குறைந்தபட்சம் 20,000 மைல்/மணி வேகமுடைய தன் அவன்கார்ட் ஏவுகணையையும் போர் நிலைக்கு ஏற்ற வகையில் தயார் செய்து நிறுத்தி விட்டது.
இருந்தும், உக்ரைனின் இவ்விரு விமான தளங்களின் தாக்குதல்களை அடுத்தே, பைடன், தன் உக்ரைன் சார்பான ‘புது அறிவிப்பையும்’, அணு ஆயுத தாக்குதல்கள் தொடர்பிலான தன் ‘புது கருதுகோளையும்’ வெளியிட நேர்ந்தது என்பதும் ரஷ்யா அதற்கு ஏற்ற எதிர்வினை ஆற்ற முன்வந்துள்ளது என்பதும் நடந்தேறி உள்ளது. அதாவது, இழந்து போன தன் உக்ரைன் தொடர்பிலான உற்சாகத்தை, உக்ரைனின் ஏங்கெல்ஸ் தள தாக்குதலின் பின் அமெரிக்கா மீள பெற்றுக்கொண்ட அதே சமயம் ரஷ்யாவும் தனக்குரிய நடவடிக்கைகளில் இறங்கிக் கொண்டது.
தோற்று, வாடி வதங்கி போன நிலையில் இருந்த ஒரு உக்ரைன், ரஷ்யாவுக்கெதிரான இப்போரில் எக்கேடு கெட்டு குட்டிசுவரானாலும் ரஷ்யாவுக்கு எதிராக ‘தான்’ தொடுக்கும் போரில், ரஷ்யாவுக்கு பாரிய தாக்கத்தை இவ்யுத்தம் ஏற்படுத்தி விடுமா -இத்தகைய நாசத்தை விளைவிக்கும் திறன் அல்லது தகுதி உக்ரைனுக்கு உண்டா, என்ற அமெரிக்காவின் அண்மித்த கேள்விக்கு, இவ் ஏங்கெல்ஸ் தள தாக்குதல் ஓர் பதிலாகி, ஓர் புது உற்சாகத்தை அமெரிக்காவில் கிளப்பி விட்டது.
ஆனால், இவ்விமான தள தாக்குதல்களின், பின்னர் இடம்பெற்ற ரஷ்யாவின் மூர்க்கத்தனமான தாக்குதல்கள் அதிகரித்து, உக்ரைனை கிட்டத்தட்ட முழு இருட்டடிப்பு நிலைக்கு இன்று தள்ளிவிட்டுள்ளது. அமெரிக்க தந்த Himar ரொக்கெட்டுக்களையும், ஏனைய நவீன ஆர்டிலரிகள்-விமான,வான் எதிர்ப்பு நிலையங்களினதும் இருப்பிடங்களை இரண்டொரு வினாடிகளிலேயே துல்லியமாக கண்டு பிடித்தது மாத்திரமல்லாமல் அவற்றை அடுத்து, இரண்டொரு வினாடிகளுக்குள்ளாகவே துல்லிய தாக்குதல் திறன் கொண்ட தனது கருங்கடல் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்கி அழிக்க தொடங்கியமை முக்கியமானது –வியக்கத்தக்க வைப்பது என மக்ரோகர் குறிப்பிடுவார்.
அதாவது, உக்ரைனின் ஏவுகணை இருப்பிடங்களை துல்லியமாக கண்டுப்பிடித்து கொள்வது அல்லது தெரிந்து கொள்வது மாத்திரம் அல்லாமல், பின் அவற்றை உடனடியாக தாக்கி அழித்து விடுவது-அதிலும், அமெரிக்கா-ஐரோப்பா தந்துள்ள, உக்ரைனின் அனைத்து எதிர்ப்பு ஏவுகணைகளின் மத்தியிலும்! மேலும், இவற்றுக்கான நேரம் சில வினாடிகளே: இது ரஷ்யா மேற்கொள்ளும் இரண்டாம் வகை நடவடிக்கையாகும். அதாவது, உள்நுழையும் ரஷ்ய ஏவுகணைகள் அனைத்தும் தங்களால் சுடப்பட்டு, வீழ்த்தப்பட்டு விட்டன-தாங்கள் முன்னேறுகின்றோம் என்ற வெற்றி முழக்கங்கள் அனைத்தும் உக்ரைனின், மின்சாரம்-நீர்-எரிவாயு இன்றி அவதிப்படும் நேரடி யதார்த்தங்களோடு முரண்படுவதை மக்ரோகர் சுட்டிக்காட்டுவார்.
அதாவது உக்ரைனின் மேற்படி அறிவிப்புகள் அனைத்தும் அந்நாட்டில் நிலவும் உண்மை யதார்த்தங்களோடு பயணிக்க முடியாமல் சீரழிந்துள்ளதை அவர் சுட்டுவார். சுருக்கமாக கூறினால், அமெரிக்கா-நேட்டோ மேற்கொள்ளும் இந்த தொழிநுட்ப போரில், ரஷ்யா தன் வல்லமையை கட்டவிழ்த்து உள்ளது எனலாம். இப்பின்னணியில், இவ் ஏங்கெல்ஸ் தள தாக்குதல்கள் விடயங்களின் உக்கிரத்தை குறைக்காது, கூட்டி தீவிரப்படுத்துவதிலேயே முடிந்துள்ளது என்பது அவரது கணிப்பு. இத்தகைய ஒரு சூழலிலேயே, இலங்கையில், ரணிலும் தனது பட்ஜெட் உரையின் போது, “இலங்கையில் ஒரு உலக மகா யுத்தம் ஏற்படாததுதான் ஆச்சர்யம். இந்தியா, ஜப்பான், சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அனைத்து நாடுகளும் இருந்த போதிலும்” என்பார் அவர். (பாராளுமன்றம்: அவரது பட்ஜெட் உரை).
பகுதி-2
ரணிலின் இந்த கூற்று ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதே. காரணம், மேற்குறித்த பின்னணியில், அதாவது, உக்ரைனில், ஓர் மூன்றாம் உலகப் போருக்கான, சாட்சாத் நிலவரம் நிலவும் போது, இது போன்று, ஒன்றும் நிலவாத ஒரு இலங்கை, இன்று, ஓர் மூன்றாம் உலக மகா யுத்தத்தினை கொணர்ந்து சேர்க்க போகின்றதா அல்லது இது ரணிலின் செயற்கையான ஓர் கட்டமைப்பு மாத்திரம் தானா எனும் கேள்வி முன்னோக்கி நகர்கின்றது. அதாவது, ரணிலின் இந்த பயமுறுத்தல் வெறும் பயமுறுத்தல் மாத்திரம் தானா –அப்படி எனில் இப்பயமுறுத்தல், யாரை, எவரை நோக்கி எழுப்பப்பட்டுள்ளது என்பது கேள்வியாகின்றது. இத்தகைய ஓர் பின்னணியிலேயே, உக்ரைனின் ‘மின்ஸ்க்’ ஒப்பந்தத்தின் முக்கியத்துவமும் இங்கே தேவைப்படுவதாகின்றது.
2014இல் செய்து முடிக்கப்பட்ட இம் மின்ஸ்க் (Minsk) ஒப்பந்தத்தின்படி, உக்ரைன் தனது சிறுபான்மை இனமான, ரஷ்யர்களின் சம உரிமைகளை வழங்கி விடவும், அவர்களுக்கெதிராக தான் இதுவரை கொண்டு நடத்தி வந்துள்ள யுத்தத்தை உடனடியாக நிறுத்தவும், தொடர்ந்து உக்ரைனின் நடுநிலைமையை பேணி கொள்ளவும் (நேட்டோவில் இணையாமல் இருக்க) இவ் ஒப்பந்தம் வழிவகுத்தது. இவ் ஒப்பந்தம் பிரான்ஸ் -ஜெர்மன் நாடுகளின் நேரடி அணுசரனையின் கீழ் நடந்திருந்தாலும் (மெக்ரல், மெக்ரோன், புட்டின், செலன்ஸ்கி ஆகியோரின் பங்கேற்புடன் நடந்திருந்தாலும்) ஒட்டு மொத்தத்தில், இது சர்வதேச அங்கீகாரத்தை, முக்கியமாக, அமெரிக்கர்களின் அங்கீகாரத்தை, பெற்றிருக்கவே செய்தது –முன்னர், நோர்வே நாட்டில் இடம்பெற்ற எமது சமாதான பேச்சுவார்த்தைகள் போன்று! ஆனால், எமது ஒப்பந்தங்கள் போல் அல்லாது, இன்று இம் மின்ஸ்க் ஒப்பந்தம் குறித்த தரவுகள் இன்று வெளியாக தொடங்கி உள்ளன எனலாம்.
ரஷ்ய-உக்ரைன் போரின் போது. மிக ஆரம்பத்தில் Petro Poroshenko (முன்னைநாள் உக்ரேனிய அதிபர்) மிக வெளிப்படையாக, இந்த மின்ஸ்க் ஒப்பந்தம் எனப்படுவது, உண்மையில் உக்ரைன் தேசமானது, ரஷ்யாவுக்கு எதிரான ஒரு போருக்கான ஏற்பாட்டில் தன்னை வலுப்படுத்தி மேலும் தன்னை உறுதியாக்கி கொள்ள தேவைப்படும் ‘காலத்தை’ உக்ரைனுக்கு பெற்று தருவதற்காகவே இவ்ஒப்பந்தம் செய்யப்பட்டதே அன்றி உண்மை சமாதானத்தை நோக்காக கொண்டதல்ல என பகிரங்கப்படுத்தி விட்டார்.
இதனை மேலும் சந்தேகமற்ற முறையில் உறுதிப்படுத்தும் விதமாக, மிக அண்மையில், எஞ்சலா மெக்ரல் (இவ்ஒப்பந்தத்தின் முக்கிய அணுசரனையாளர்களில் ஒருவர். முன்னைநாள் ஜெர்மனி அதிபர்) அவர்கள், இம்மின்ஸ்க் ஒப்பந்தமானது, ரஸ்யாவுக்கு எதிரான போர் நடவடிக்கைகளுக்காக, உக்ரைனுக்கு தேவைப்படும் காலத்தை பெற்று தருவதே அன்றி பிறிதொன்றில்லை என்பதனை போட்டுடைத்து விடயங்களை மேலும் தெளிவுற ஆக்கி விட்டார். {Die Zeit N நேர்முகம்-08.12.2022). அதாவது, ஒரு மின்ஸ்க் ஒப்பந்தத்தின் உண்மை பின்னணிகளை இப்படி இவர்கள் இன்று ஏற்றுக்கொண்டிருப்பதானது, சர்வதேசத்தின் சூது வாதுகளை, அல்லது அதன் உள் நோக்கங்களை தெளிவுற இன்று, வெளிக்கொண்டுவந்து அம்பலப்படுத்தி உள்ளதென குறிக்கலாம்.
இவ்விடயங்கள், எமது 13வது அரசியலமைப்பு சீர்திருத்தம்-சமாதான ஒப்பந்தங்கள்-முன்னெடுப்புகள்-நோர்வே, சர்வதேசத்தின் உற்சாகமான பங்கேற்புகள் -அவற்றின் உண்மை நோக்கம்-போன்றவற்றை மீள, நாம் ஆய்ந்து பார்க்க வேண்டிய சூழலுக்குள் எம்மை தள்ளி விடுகின்றன என்பதில் சந்தேகமில்லை. இருந்தபோதும், இத்தகைய ஓர் பின்னணியிலேயே, சர்வதேசத்தின் உள் நோக்கங்களை சரியாக, உள்வாங்க முடியாமல், (அல்லது சரியாக உள்வாங்க விருப்பம் கொள்ளாமல்), உக்ரைன் போன்ற நாடுகள், தாங்கள் தாங்கள் மக்களை வெறும் பலிகடாக்கள் ஆக்குவதில் மும்முரம் காட்டுவதாய் உள்ளன– போட்டி போட்டபடி! (எமது தமிழ் அரசியல் போல).
பகுதி -3
உக்ரைன்-ரஷ்ய போர் முனையானது, தனது உச்சத்தை நோக்கி, மெது மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளை, உலகமும், தானறியாது மெது மெதுவாக ஓர் புதிய கட்டமைப்பின் புள்ளியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவே விடயங்கள் இன்று எமது பார்வையை எட்ட செய்கின்றன. இவற்றில் முக்கியமான ஒன்று: உக்ரைனின் தோல்வி என்பதாகும். இப்படி உக்ரைன் தோற்குமானால், தொடர்ந்து, பல் ஆதிக்க முனை கொண்ட ஒரு உலகு (Multi Polar World) என்பது ஓர் நிதர்சன உண்மை என்றாகி விடும். இங்கேயே, இதற்கெதிரான ஓர் மாற்றீட்டு முயற்சியாக, ஓர் மூன்றாம் உலக-மகா-யுத்தம் வெளி கிளம்ப வேண்டிய சூழல் வந்துசேர்ந்து விடுகின்றது.
“இதற்கான நிகழ்தகவுகள் ஏராளம். ஒரு Multi Polar World இல் உள்ள தீமைத்தான் யாது” என்பார் விமர்சகர் மக்ரோகர் - கிசிஞர் போன்றே! இது, இவ்விருவரின், தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். ஆனால், இன்றைய எமது யதார்த்த உலகு என்பது, நிர்ணயமாக மாறி கொண்டு அல்லது மாற்றங்களை ஏற்கனவே அமுல்படுத்தி கொண்டிருக்கும் யதார்த்தங்களை உள்ளடக்கி விட்டதை, விடயங்கள் இன்று சுட்டுவதாயுள்ளன.
உதாரணமாக, ரஷ்யா தனது எண்ணெய்-எரிவாயு விற்பனையை, மேற்கிலிருந்து கிட்டத்தட்ட முற்றாக அப்புறப்படுத்தி, கிழக்கை நோக்கி விஸ்தரித்து கொண்டு விட்டது. சீனாவுக்கான தனது எண்ணெய், எரிவாயு விற்பனையை, பன்மடங்கில் அதிகரித்து கொண்டு செல்லும் ரஷ்யா, தனது பிரமாண்டமான, சீனா நோக்கிய தனது நிலத்தடி குழாய்களை நிர்மானிப்பதற்கூடு, (தனது சைபீரிய குழாய்கள்) சீனாவுக்கான தனது எரிவாயு விற்பனையை 2030இல், வருடமொன்றுக்கு 90 பில்லியன் கிய10பிக் மீட்டராக சீரமைத்து கொள்ளும் என்ற அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது (19.12.2022).
இப்பின்னணியில், ஏற்கனவே, 2021இன் வருடத்துடன் ஒப்பிடுகையில் ரஷ்யா, சீனாவுக்கான தனது எரிவாயு வினியோகத்தை, இதே காலப்பகுதியில், தான் மேற்குக்கு வழங்கி இருந்த எரிவாயு தொகையுடன் ஒப்பிடும் போது, அது 173 சத விழுக்காடால் அதிகரித்து விட்டது என்று வேறு அது கூறி இருக்கின்றது. வேறு வார்த்தையில் இவற்றை கூறினால், ரஷ்யாவுக்கெதிரான, மேற்கின் பொருளாதார தடை, இன்று அர்த்தமற்றதாக முடிவுற்று போய் உள்ளது எனலாம். அதாவது, தன்னால் சுமக்க முடியாத ஓர் சுமையை தூக்கி தனது கால்களிலேயே போட்டுக் கொண்டது போல், ஐரோப்பிய ய10னியன் நாடுகள், அமெரிக்காவின் பேச்சை கேட்டு, Pசiஉந-ஊயி –(விலை நிர்ணயம்) -என்ற அடிப்படையில் ஓர் எல்லைப்பாட்டை ரஷ்யாவுக்கு ஏற்படுத்த, ரஷ்யாவோ, இதனை அடுத்து, தனது எண்ணெய்-எரிவாயுவை–சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு திசை திருப்பி விற்று தள்ளுவதில் ஈடுபட்டு விட்டது-ஒட்டுமொத்தமாய். அதாவது, ரஷ்ய வர்த்தகமானது, தனது மேற்கத்தைய பயணிப்பில் இருந்து விலகி, இன்று கிழக்கை நோக்கி, தன் பயணத்தை மேற்கொள்ள தொடங்கி விட்டது.
போதாதற்கு, இத்தகைய ஓர் பின்னணியில், இன்று இந்தியாவும் சர்வதேச பேச்சை செவிமடுத்ததாக இல்லை. ரஷ்ய எண்ணெயை வாங்க வேண்டாம் என மேற்கு, முக்கியமாக ஐரோப்பிய ய10னியன், எங்களுக்கு போதித்தது போதும், எரிவாயு இன்றி குளிரில் நடுங்கி கொண்டிருக்கும் உங்கள் நாடுகளை நீங்கள் முதலில் பார்த்து கொள்ளுங்கள் என்ற தினுசில் இந்தியா இன்று திமிறுவதாக உள்ளது. (இந்தியாவின் இந்த திமிறலை, தமிழ் அரசியலும், தென்னிலங்கையும் எவ்வகையில் கையாளப்போகின்றனர் என்ற கேள்வி மிக மிக சுவாரஸ்யமானது என்பது பிறிதொரு விடயம்). இது போக, இரண்டாவது உதாரணமாக, அண்மையில் நடந்தேறிய, சீன–சவுதி கூட்டு சேர்க்கையை சுட்டிக்காட்டலாம் (07.12.2022). அமெரிக்காவின் செல்ல பிள்ளையாக இதுவரை திகழ்ந்து வந்த, சவுதி-இன்று சீனாவுடன், மொத்தமாய் ‘34’ ஒப்பந்தங்களில் கைசாத்திட்டுள்ளது. 2016ம் ஆண்டுகளில், சவுதி அரேபியா சீனத்திற்காக மிக பெரிய எண்ணெய் வழங்கும் நாடாக இருந்தது. (2014இல் இரு தர வர்த்தகம் 69.1 பில்லியன் டொலர்). அப்போது இரு நாடுகளும், ஓர் ஒப்பந்தத்துக்கான ‘வடிவமைப்பில்’ மாத்திரமே கைச்சாத்திட்டதுடன் விடயங்கள் முடிந்தப்பாடாகின. ஆனால், ஆறே ஆறு வருடங்களில், இன்று, மேற்படி 34 முக்கியத்துவம் வாய்ந்த (ளுவசயவநபiஉ னுநயடள) ஒப்பந்தங்களில் இவ்விரு நாடுகளும் கைசாத்திட்டுள்ளன. (அந்த அளவிற்கு உலகம் தன் மாறல்களை வெளிப்படுத்தி முடித்துவிட்டது).
போதாதற்கு, அண்மையில் சில தினங்களின் முன்,(16.12.2022) இலங்கை, மொரீசியஸ், ரஷ்யாவுடனான, கொடுக்கல் வாங்கல்களை இனி, இந்தியா தன்னுடைய சொந்த ரூபாவாலேயே வர்த்தகம் செய்ய இந்திய மத்திய வங்கி ஒப்புதல் அளித்து விட்டதாக செய்தி வெளிவந்துள்ளது. (மேலும் பல நாடுகளுடன் இந்தியா, இது தொடர்பில் பேச்சுவார்த்தையில் இன்று ஈடுபட்டு வருவதாக வேறு அறிவித்துள்ளது). இவை அனைத்தும், டாலரின் சர்வதேச அந்தஸ்தை கேள்விக்குட்படுத்துகின்றன என்பதனை விட, இன்று உருவாகிவரும் ஒரு Multi Polar உலகின் கட்டமைப்பை எடுத்துரைப்பதாகவே இருக்கின்றது. இத்தகைய ஒரு பின்னணியிலேயே, ரணிலின், உலக மகா யுத்தத்துக்கான, தளமாக, இலங்கை மாறிவிடுமோ என்ற அச்சுறுத்தலும் எழுவதாய் உளது. அதாவது, இந்தியாவுக்கான கொடுக்கல்-வாங்கல்களை, இலங்கை, இந்திய ரூபாவால் செய்ய இன்று முன்வந்துள்ளது, தனது இன்றைய உண்மையான பொருளாதார நெருக்கடி காரணமாகவா அல்லது தனது தமிழ் அரசியல் கட்சிகளுடனான இன்றைய பேச்சுவார்த்தைக்காக, இந்தியாவுக்கு தரப்படும் கையூட்டல் காரணமாகவா என்பன போன்ற மிக சுவாரஸ்யமான கேள்விகள் இன்று, இப்பின்னணியில், எழுந்த வண்ணமாகவே உள்ளது. இது போன்றே ‘இவ் உலக-மகா-யுத்தம்’ தொடர்பிலான கதையும் கூட ஓர் மறைமுக அழுத்தத்தை சம்பந்தப்பட்ட சக்திகளுக்கு அறிவிப்பனவா என்பது கூட சுவாரஸ்யமானதுதான்.
பகுதி -4
தென்னிலங்கையின் சாணக்கிய நடைமுறைகளில் பிரதானமானது, தமிழ் அரசியலை, அல்லது தமிழ் அரசியல் சக்திகளை, இந்தியாவுக்கு எதிராக திருப்பி விடுதல் என்பதே என்பது மேற்படி அரசியல் விமர்சகர்களின் ஆழ்ந்த கணிப்பாகின்றது. இதுநாள் வரை, தென்னிலங்கை, மிக பெரிய வெற்றிகளை இது தொடர்பில் பெற்று வந்துள்ளது என்பதையும் அவர்களே சுட்டிக்காட்டி உள்ளனர். இதில் உண்மை இருக்கலாம். ஆனால், இதில், தென்னிலங்கை மாத்திரம் சம்பந்தப்பட்டுள்ளதா அல்லது சர்வதேசமும் ஊக்கத்துடன் கைக்கோர்த்துள்ளதா அல்லது குறைந்தபட்சம் அவை தூண்டிவிடும் காரணிகளாக இருந்தாவது செயல்படுகின்றனவா என்பதெல்லாம் ஏற்கெனவே இதே அரசியல் வல்லுனர்களால்-விமர்சகர்களால்- விலாவாரியாக, கேட்கப்பட்ட வினாக்கள்தாம்.
அதாவது, இரு பக்கமும், ஒத்துபாடி, விடயங்களின் முரண்களை அப்படியே தக்கவைத்து, அல்லது கூட்டி, அதற்கூடு தமது உள்நோக்கங்களை நிறைவேற்றி கொள்வது என்பது, எமது, பஞ்சதந்திர கதைகளின் காலம் தொட்டு, நாளும் எமக்கு சொல்லி தரப்படும் ஒரு செய்தியாயினும்-இத்தந்திர அணுகுமுறை அவ்வவ் கணத்திற்கேற்ப, காலத்தில் இயங்கும் சக்திகளுக்கேற்ப–தகுந்த முறையில் பிரயோகிக்கப்படுகின்றதா என்பதெல்லாம் வேறுபட்ட விடயங்களாகின்றது.
இச்சூழ்நிலையிலேயே, எமது தமிழ் அரசியலின், தற்போதைய அரசுடனான பேச்சுவார்த்தையும் துவங்கப்பட்டுள்ளது என்ற உண்மையும் முக்கியத்துவப்பட்டு போகின்றது. இதன் போது, தனது முதல் சுற்றில், தமிழ் தரப்பு, 13வது அரசியல் திருத்தமானது முழுமையாக அமுல்படுத்தப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை தமது ஆரம்ப கோரிக்கையாக முன்வைத்துள்ளதும் தெரிய வருகின்றது. (வீரகேசரி: 15.12.2022). கூடவே, காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை, காணி அபகரிப்புகள், காணிகளை விடுவித்தல் இவற்றை வெற்றிகரமாக கடந்த பின்னரே அரசியல் தீர்வு-அதிகார பகிர்வு நோக்கி பேச்சுவார்த்தை நகரக்கூடும் என்றும் மறுபுறத்தில் கூறப்படுகின்றது.
அதாவது, 13வது திருத்தத்துக்கு எதிராக, தமிழ் அரசியலின் ஒரு பிரிவு செயல்படுமிடத்து, (சமஷ்டியை தனது ஆரம்ப புள்ளியாக வலியுறுத்தி) அதனை இந்தியாவிடம் மூட்டிவிட்டு, அதற்கூடு ‘எமக்கு செய்ய விருப்பம்தான்-ஆனால் தமிழ் கட்சிகளே 13ஐ நிராகரித்து புறந்தள்ளும் சூழ்நிலையில் இருக்கின்றனவே’ எனக் கூறி 13வது திருத்தத்தை வலுவிழக்க செய்யலாம் என்ற ஓர் எதிர்பார்ப்பு-தென்னிலங்கை அரசியலில் இன்னமும் செத்தொழிந்ததாக இல்லை. இது, தனது படைகலன்களில், பிரதான ஒரு ஆயுதமாக இன்னமும் இருக்கும் அதேவேளை, சுமந்திரன் குறிப்பிடும், முதல் சுற்றின் கோரிக்கைகளுடனேயே விடயங்களை இழுத்தடித்து விடுவது என்ற தந்ரோபாயமும் இருக்கவே செய்கின்றது என்பது ஆய்வாளர்களின் கணிப்பாகின்றது.
இதுபோக, உள்ளுராட்சி தேர்தல்களும் ‘இறக்கிவிடும் போது’ கூட்டணி அல்லது கூட்டமைப்பு சிதறிவிடும் எனும் கணிப்பு வேறு பின்புறத்தில் நிழலாடாமலும் இல்லை. அதாவது, முதல் சுற்று நிபந்தனைகள்-பின் ‘சமஷ்டி’ பொறுத்த வீராவேச அறைகூவல்கள்-பின் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள்-இவை அனைத்தும் தமிழர் அரசியலை சிதைக்ககூடிய தகுதிகளை கொண்டிருக்கவே செய்கின்றன என்பதே இக்கணிப்பின் சாரமாகின்றது. அதிலும், புலம்பெயர் அரசியலில் ஒரு தீவிர பக்கம், மற்றும் தென்னிலங்கை அரசியலின் பேரினவாத சக்திகள், கூடவே, உள்ளுர் தீவிர அரசியல்வாதிகளாக நிதம் தோற்றம் தரும் மனோகணேசன் வகையறாக்கள் (அங்கஜன் ராமநாதன் உட்பட)-தீர்வையும், இந்தியாவையும், 13வது திருத்தத்தையும் குழப்பியடிக்கும் கைங்கரியத்தை ஆற்றுவதில் தத்தம் பங்கை செலுத்தாமல் இருக்க போவதில்லை என்பது தென்னிலங்கை அரசியலின் கணிப்பாகின்றது. அதாவது, பஞ்சதந்திர கதை காலத்திற்கேற்ப பிரயோகிக்கப்படுகின்றது.
இப்பின்னணியிலேயே, ஏன் இப்படி என்ற கேள்வியும் எம்மிடை எழுவதாய் உள்ளது. அதாவது, தென்னிலங்கைக்கு உள்ள தீர்வு மேற்குறித்த மூன்று அடிப்படைகளில் செயல்பட வாய்ப்புகள் உண்டு எனலாம். சுருக்கமாக கூறுவதானால், எடுக்கப்படக்கூடிய மூன்று நடவடிக்கைகள்: ஒன்று, பேரினவாத சக்திகளை தட்டி எழுப்புவது அல்லது, இலங்கை நலன்களை (கூடவே வட-கிழக்கு நலன்களையும்) இந்தியாவுக்கு தருவதாக ஒப்பந்தம் செய்து கொள்வது. மூன்றாவது, தமிழ் அரசியல் கட்சிகளை ஆளுக்காள் அடிப்பட வைப்பது.
இந்த அடிப்படையிலேயே, இலங்கை-இந்திய வர்த்தக ஒப்பந்தங்கள் என ஆசை காட்டுவதும், இந்திய வர்த்தகங்கள் இனி இந்திய ரூபாவாலேயே நடந்தேறும் என்று கைய10ட்டு தருவதும் இன்று நடந்தேறுவதாய் உளது என்று இந்திய அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்யுள்ளனர். ஆனால், ஜே.வி.பி போன்றோரின் கருத்துப்படி, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குணாம்சமானது இரு தளங்களில் செயற்படுவதாக கருதப்படுகின்றது. ஒன்று, பேரினவாதத்தின் சக்தி, பலம் போன்றவற்றை அவர் மேற்கண்ட பின்னணியில், ஆழ உணர்ந்த ஒருவராய் இருக்கும் அதே சமயம், தன்னையும் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வர்க்கத்தையும் காப்பாற்றக்கூடிய திண்மையும், வன்மமும் கொண்டவராயும், அதற்கான செயல்வடிவத்தை தரத்தக்கது, இந்நாட்டில் நிலவும் பேரினவாதமே என்ற பிரக்ஞையுடன் அவர் செயலாற்றும் விதத்தையும் அவர்கள் குறிப்பதாக தெரிகின்றது. இவை அனைத்தும், இந்திய எதிர்ப்பு வாதத்துடன் பின்னி பிணைந்ததாக இருப்பதாகவும் நம்பப்படுகின்றது.
காரணம், இந்நாட்டின் ‘பேரினவாதத்தையும்’, இந்நாட்டின் ‘மேல்தர வர்க்கத்தையும்’ விமர்சிக்ககூடிய வசந்த முதலிகே போன்றோரை, இந்நாள் வரை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அடைத்து வைத்துள்ளது மாத்திரமல்லாமல், ராஜபக்ஷாக்களை துரத்தி அடித்த முற்போக்கு அரசியல் சுவாத்தியத்தை தகுந்த அரசியலால் மாற்றீடு செய்து நிரந்தரமாக மாற்றி அமைக்கப்பட வேண்டுமென்றால், அது நாட்டில் இனவாதத்தை தூண்டிவிடுவதன் மூலம்தான் சாத்தியப்பட்டாகும் என்ற பிரக்ஞையுடன் இவர் செயலாற்றி வருவதாகவே மேற்படி விமர்சகர்கள் குற்றஞ்சாட்ட துணிகின்றனர். இதுவும் கூட உண்மையாக இருக்கலாம். ஏனெனில், இன்று சாணக்கியனை இலக்கு வைத்து அடிப்பதும் (அல்லது அடிக்க செய்வதும்) அல்லது சுமந்திரனை தேர்ந்தெடுத்து அடிக்க முற்படுவதும் தற்செயலான சங்கதிகளாய் இருப்பதற்கான நிகழ்தகவு ஆக குறைந்த மட்டத்திலேயே இருக்ககூடும்.
சுருக்கமாய் கூறினால், முதலாவது சுற்றை தாண்டி, பேச்சுவார்த்தை தொடர்வதற்கான சாத்தியப்;பாடுகள் குறித்து அனேக சந்தேகங்கள், மேற்படி பின்னணியில் இருக்கவே செய்கின்றது. அதாவது, பேச்சுவார்த்தை எனப்படுவது தமிழ் தேசிய கூட்டமைப்பை குலைய செய்யவும், இந்தியா-தமிழர் உறவை கத்தரிக்கவும், 13ஐ நிராகரிக்க செய்யவும் பயன்படுத்தப்படும் தந்ரோபாயங்களா என்ற ஐயங்கள் இன்று ஏற்படவே செய்கின்றன.
இவற்றின் பின்னணியிலேயே, ஐரோப்பிய யூனியன் அல்லது உலக வங்கி இலங்கைக்கான கொடுப்பனவுகளை (இலங்கைக்கு வழங்குவதா இல்லையா என்ற ஓர் தீர்மானத்தை, முக்கியமாக தமிழ் தேசியத்திற்கு ஒரு தூண்டிலாக்கி) ஒரு தூண்டிலாக தமிழ் தேசியத்தின் முன் வீசி எறியும் ஏற்பாடுகளும் நடந்தேறுகின்றன. (இலங்கைக்கு GST+ சலுகைகளை வழங்க கூடாது, என்ற தமிழ் தேசியத்தின் கோரிக்கைகளை இப்பின்னணியில் நினைவு கூர்ந்து கொள்வது தகும். கூடவே, தமிழர் கோரிக்கையையும் அதற்கான நட்பு சக்திகளையும், (இந்தியா உட்பட) மட்டுப்படுத்தவும் இவை பாவிக்கப்படும் சாத்தியப்பாடுகள் மறுதலிக்கப்பட முடியாதது). எந்த தூண்டிலில் நாம் சிக்குவது? ஐரோப்பியா அல்லது அமெரிக்கா அல்லது மேற்கு வீசி எறியும் (நோர்வே உட்பட) தூண்டிலிலா அல்லது ஒரு இந்திய தூண்டிலிலா என்பது தமிழ் தேசியத்திற்கு மாத்திரமல்லாமல் தென்னிலங்கைக்கும் ஒரு சவாலாகவே அமையப் போகின்றது. இச்சூழ்நிலையிலேயே ஒரு ரஷ்ய-உக்ரைன் போரின் முக்கியத்துவமும் முடிவுகளும் வந்து சேர்வதாயும் உளன.
(தொடரும்)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.