உக்ரைன் நாட்டின் சில பகுதிகளை ரஸ்யா கைப்பற்றியதன் எதிர்வினை என்ன? - குரு அரவிந்தன் -
- பெப்ருவரி 22, 2022 -
கடந்த இரண்டு மாதங்களாக ரஸ்யா - உக்ரைன் எல்லையில் நடக்கும் பிரச்சனை உலகநாடுகளின் கவனத்தைத் திருப்பி இருக்கின்றது. உக்ரைன் எல்லையில் 100,000 மேற்பட்ட ரஸ்யாவின் இராணுவ வீரர்களும், தாக்குதல் வாகனங்களும் குவிக்கப்பட்டிருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். எந்த நேரமும் ரஸ்யா உக்ரைன் மீது படை எடுக்கலாம் என்றதொரு மாயை இதன் மூலம் உருவாக்கப் பட்டிருக்கின்றது. ஊரிலே நடக்கும் வேலிச் சண்டை போல இதுவும் ஒரு எல்லைச் சண்டைதான். இதற்கு முக்கிய காரணம் நேட்டோ கூட்டணியில் உக்ரைன் அங்கத்தவராகச் சேர்வதை ரஸ்யா தனது பாதுகாப்பு காரணங்களுக்காக விரும்பவில்லை. அதை அனுமதித்தால் தங்கள் எல்லையில் நேட்டோ நாடுகள் ஏவுகணைகளை நிலை நிறுத்திவிடுவார்கள் என்ற பயம் ரஸ்யாவுக்கு இருக்கின்றது. எனவேதான் உக்ரைன் மட்டுமல்ல, எல்லைநாடுகள் நேட்டோவில் இணைவதையும் ரஸ்யா விரும்பவில்லை. இதைவிட 2015 ஆம் ஆண்டு நடந்த மின்ஸ்க் உடன்படிக்கையின் தொடராகவே இந்த ரஸ்யா – உக்ரைன் எல்லைப் பிரச்சனை மீண்டும் உருவெடுத்திருக்கின்றது என்றும் சொல்லலாம்.
இதன் காரணமாக ரஸ்யா ஏன் படைகளை எல்லையில் குவித்திருக்கிறது என்பதற்கான காரணத்திற்கு ரஸ்யா விளக்கம் கொடுத்திருக்கின்றது. ‘உக்ரைன் மற்றும் முன்னாள் சோவியற்யூனியன் நாடுளில் நேட்டோ ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்த வேண்டும். ரஸ்ய நாட்டு எல்லைக்கு அருகே ஆயுதங்கள் கொண்டு வருவதை நிறுத்த வேண்டும். கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கூட்டுப் படைகளை விலக்க வேண்டும்’ என்பன போன்ற கோரிக்கைகள் ரஸ்யா நாட்டு அதிபர் விளாடிமிர் புடினால் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.