“படைப்பு மட்டுமல்ல, படைப்பாளியே இதில் விமர்சனமாவது விசேஷம். அவனது எழுத்தின் செல்நெறி மாற்றமும், பின்னால் உண்டாகும் பலமும் பலவீனங்களும் இங்கே தெளிவாக முன்னெடுத்து வைக்கப்படுகின்றன. க.நா.சு.விலிருந்து ந.ரவீந்திரனூடாக பல விமர்சகர்களும் இந்நிலையை எடுத்து விளங்கப்படுத்தியிருப்பினும், வாசகனை இணங்கச் செய்து தன்னுடன் அழைத்துச் செல்லும் விந்தையை நூலாசிரியனின் இக்கட்டுரை செய்திருக்கிறது.” காற்று மரங்களை அசைக்கின்றது; பக். 211
இணையவழி தேடலும் வாசித்தலும் ஒரு உயிர்ப்பான செயற்பாடாக அமைந்து விட்டது, எனக்கு. நிதானமான வாசிப்புக்கு இணையம் வழிசமைக்கின்றது; புதிது தேடலுக்கு வித்திடுகின்றது; அறிதலின் பரப்பை விஸ்தீரனமாக்குகின்றது. வானொலியில் எதிர்பாரத நேரத்தில் நம் மனசை தொடுகின்ற பாடல்களை கேட்க முடிவதைப்போல, இணையத்திலும் பல அரிய புதிய கருத்தியல்களை அறிய முடிகின்றது. அண்மையில் இணைய வழி உசாவலின் போது, 'யு டியூப்'பில் (www.youtube.com/watch?v=LHovj0cb_GY) “ஆறு சிறுகதைகள் ஒரு பகுப்பாய்வு” என்ற என் புத்தகத்தின் தலைப்பினைக் கண்டேன். யாரோ இதே தலைப்பில் எழுதியிருக்கக்கூடும் என்ற நினைப்பில் அதனை பார்த்து கேட்டபோது வியப்பாக இருந்தது. என் நூலை பற்றிய உரை அது. உரையின் ஆரம்பமே என் உணர்வுகளை உசுப்பிவிட்டது.
“சென்ற ஆண்டு இலங்கை சென்றிருந்தபோது ஜீவநதி அலுவலகத்தில் வாங்கிவந்திருந்த ஏ.எச்.எம்.நவாஷின் (ஈழக்கவி) ‘ஆறு சிறுகதைகள்: ஒரு பகுப்பாய்வு’ என்கிற நூலை சமீபத்தில் வாசிக்க முடிந்திருந்தது. நூலையும் ஜீவநதியே வெளியிட்டிருக்கிறது. அதன் 54வது வெளியீடு அது. அடக்கமான அழகிய பதிப்பு. ஆச்சரியமாக இருந்தது, இன்றைய காலகட்டத்து இலங்கைத் தமிழிலக்கியத்திற்குத் தேவையான விமர்சனக் கூறுகளையும் கண்ணோட்டத்தையும் நூல் தாங்கியிருந்தது காண. 2015இல் வெளிவந்த நூல் இன்றுவரை கவனம் ஆகியிருக்கவில்லையே என மனம் கனத்தது. ஜீவநதியைப் பாராட்டுகிற வேளையில் அதற்கான வருத்தத்தையும் கொஞ்சம் பட்டுக்கொள்ளவேண்டும்.
இதை வாசிக்க நேர்ந்த சந்தர்ப்பம் மிகவும் முக்கியமானது. அண்மைக் காலமாக ‘வாசிப்பு பற்றிய மீளாய்வுகளும் தேடல்களும் ஓர் அவசியத் தேவையாய் என் மனத்தில் ஊன்றியிருந்த வேளையில், இந்நூல் ஓரெல்லையை நோக்கி நகர்வதற்கான வழியினைத் திறந்துவிட்டதாய்ப் பட்டது. அது வாசிப்பு, குறிப்பாக வாசக மைய விமர்சனம், சார்ந்தது. பரவசத்தின் எல்லையில் நிற்க வாசகனைக் கூவி அழைத்துக்கொண்டிருந்த வாசிப்புச் செயற்பாங்கு, தன்னுள் எத்தனைதான் வாசிப்புச் சுதந்திரத்திற்கும் அர்த்த பரிமாணத்திற்குமான வெளியினைக் கொண்டிருந்தபோதும், வாசகனின் சர்வாதிகாரமாக அது உருவெளிப்பாடடையக் கூடிய சாத்தியம் தெரிய தொடர் வாசிப்பு ஒரு தேக்கத்தை எனக்குள் அடைந்துவிட்டது. கொவிட் -19 உலகைச் சூழ்ந்தபொழுதில் சகல காரியங்களும் கைவிடப்பட்டன. இப்போது இடத்திலிருந்து தொடர என்னை ஊக்கியிருக்கிறது ‘ஆறு சிறுகதைகள்: ஒரு பகுப்பாய்வு’ நூலின் வாசிப்பு.....'
இவ்வாறு தொடர்கின்ற அந்த விமர்சன உரை, பல்வேறு விடங்களை பல கோணங்களில் ஆய்வுப்பூர்வமாக துல்லியமாக்குகிறது. வாசகரை மையமாகக் கொண்ட (reader oriented) விமர்சனக் கொள்கை பற்றிய அரிய பல கருத்துக்களை இவ்வுரை முன்மொழிந்துள்ளது. படைப்பாளிக்கு நிகராக வாசகனை முன்னிறுத்திப் பேசும் ஒரு கோட்பாடுதான் வாசக மைய விமர்சனம் (Reader Response Theory) ஆகும். Water J. Slotoff தனது With respect to readers எனும் நூலில், “வாசகனுக்கு அதன் அர்த்தத்தைத் தன்போக்கில் கிரகித்துக்கொள்ள உரிமை உண்டு” என்கின்றார். வாசக விமர்சனம் பற்றி அந்த உரை பின்வருமாறு விபரிக்கின்றது: “அறுபதுகளின் ஆரம்பத்திலிருந்து முக்கியத்துவம் பெற்றெழும் வாசக மைய விமர்சனமானது உண்மையில் இன்று வழக்கிழந்துபோன புதிய விமர்சன முறையிலிருந்து உருவானதுதான். ஆயினும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த வொல்ஃப்காங் ஈஸர்போன்ற சில ஜேர்மன் பேராசிரியர்களினால் தாய்ச் சிந்தனைப் போக்கினைப்போல் வலுவிழந்து போகாமல் இது மேலும் ஊட்டமளித்து முன்னெடுக்கப்பட்டது. இதில் வாசக உலகத்தை இரு கூறாக்கியது முக்கியமான விஷயம். பிரதியின் அர்த்தம் கோடல் அதிகாரம் வாசகரிடம் இன்னுமே இருந்த பொழுதில், அது வாசக சர்வாதிகாரமாக உருவாகாமல் காக்கின்ற கவசமாக அது இருக்குமென்று பலராலும் நம்பப்பட்டது.
இன்று இதனால் இரண்டு விளைவுகள் வாசிப்புக் களத்தில் நிகழ்ந்திருக்கின்றன.
(1) அர்த்தமானது பிரதியிலோ அல்லது அதற்கு வெளியிலோ இல்லையென்றும், அது வாசகனின் புரிந்துகொள்ளலில் இன்னுமே இருக்கிறதென்றும் ஈஸரது கூற்றின்படி உறுதியானது.
(2) அதன்மேல் வாசகரையே உத்தேச வாசகரென்றும் ஆதர்ஸ வாசகரென்றும் இரண்டாகப் பிரித்து, வாசக இன்பத்தைத் தேடும் ஆதர்ஸ வாசகரை ஈஸர் முன்னிலைப்படுத்தினார். அதன்மூலம் வாசக அதிகாரத்தின் விசை தணிக்கப்பட்டது.
இப்போது வாசக மைய விமர்சனமானது ஆய்வடிப்படையிலோ கோட்பாடுகளின் அடிப்படையிலோ செய்யப்படும் விமர்சனங்களுக்கு நிகரான பெறுபேறுகளைத் தந்தபடி நிகழ் களத்தில் திகழ்ந்துகொண்டு இருக்கிறது.
இவைபற்றியெல்லாம் சொல்வதற்கு ஓர் அவசியமிருக்கிறது. பெரும்பாலும் பிரதிகள் குறித்த உண்மையான விமர்சனங்கள் பூரணமாய் இன்று அற்றுப்போயிருக்கின்றன என்பதைச் சொல்வதில் தயக்கம் காட்டவேண்டியதில்லை. அபிப்பிராயங்கள் இருக்குமளவு விமர்சனமில்லை. அபிப்பிராயம் வாசகனோடான தாயும், முடிவு விமர்சகனுடையதாயும் இருந்த நிலை மாறியதிலிருந்து வெறும் அபிப்பிராயங்களே விமர்சனங்களாய் விழுந்து கொண்டிருந்தன. ஆனால் வாசக மைய விமர்சனத்தின் மீதான வாசக அதிகாரம் பற்றிய அய்யம் உணரப்பட்டு, அதைத் தீர்ப்பதற்கான வழிமுறை கண்டடையப்பட்ட பின்னால் அது மூச்சாக இன்று பயில் வரங்கில் நிற்கிறது. நல்ல விமர்சனம் பிறக்குமென்ற நம்பிக்கையும் பிறந்திருக்கிறது.
‘ஆறு சிறுகதைகள்: ஒரு பகுப்பாய்வு’ நூல் வாசக விமர்சனத்தின் வழியில் ரசனை முறைத் திறனாய்வு, ஆய்வுத் திறனாய்வு, கோட்பாட்டுத் திறனாய்வென பல தளங்களிலும் செயற்பட்டிருப்பது இம்முறை சார்ந்த விமர்சனத்தின் முதல் வெளிப்பாடாய் எனக்குத் தெரிகிறது. வாசக மைய விமர்சனமானது நிகழ்வு வாதத்துடனும் உரைவிளக்கக் கோட்பாட்டுடனும் தொடர்புகொண்டுள்ள வகையில் இந்நூலில் ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) செய்துள்ள முனைப்புக்கள் ஆகக்கூடுதலான ரசனையையும் விளக்கத்தையும் கொண்டிருக்கின்றன.
இது உண்மையிலேயே சிரமமான காரியம். ஏனெனில் வாசக மைய விமர்சனமானது நிறைந்த கருதுகோள்களைக் கொண்டது. அதனை ஒரு சிந்தனைப் போக்கில் அடக்குவது இயலாத காரியமாயும் இருக்கிறது. ஆனால் புரட்சிகரமான, புதுமையான விமர்சன முறையாக இருந்ததில் எழுபதுகளின் ஆரம்பத்தில் இது பலரின் கவனத்தைக் கவர்ந்தது. பின் இது வாசக சர்வாதிகாரமாக மாறக்கூடிய சாத்தியத்துடன், ஏற்கனவே குறிப்பிட்டபடி புதிய விமர்சனத்தின் சீணத்துடன், இதுவும் மதிப்பிறங்கியது. இன்று இது மறுபடி மேனிலை அடைந்திருப்பதால் பயில்வு செய்வதில் தவறில்லையென நம்பமுடிகிறது.”
இவ்வுரை ‘வாசக மைய விமர்சனம்’ பற்றி எடுத்துரைக்கின்ற கருத்தியல்களை கேட்கையில், நேர்காணல் (நேர்கண்டவர் ஸ்டாலின் ராஜாங்கம்: இணையம்) ஒன்றில் இந்திரன் (இராஜேந்திரன்) ‘வாசக மைய விமர்சனம்’ பற்றி கூறிய கருத்தொன்று என் ஞாபத்திற்கு வருகின்றது. ““நான் இலக்கிய சன்னிதானங்களுக்காக எழுதும் எழுத்தாளன் அல்ல. மாறாக எனக்கு முகம்காட்டாத ஓரத்து வாசகனுக்கான எழுத்தாளன்” என்று என்னைப்பற்றி நான் அடிக்கடி சொல்வதுண்டு. அடிப்படையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது எழுத்தாளனும் வாசகனும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். “எழுத்து என்பது முத்தம் போன்றது – அதை யாரும் தனியாகச் செய்ய முடியாது. எழுதுவதற்கு எனக்கு வாசகன் தேவை” என்று ஜான் ச்சீவர் சொன்னது இந்த நேரத்தில் எனக்கு நினைவுக்கு வருகிறது. படைப்பை உருவாக்கிய படைப்பாளியே அது குறித்த தரநிர்ணயங்கள் உருவாக்குவதும், அதனடிப்படையில் தன் படைப்புகளைச் சிறந்தவை என்றும், பிறரின் படைப்புகள் தரம் தாழ்ந்தவை என்றும் பித்தலாட்டங்கள் செய்வது தமிழிலக்கியப் பிரதேசத்தில் சர்வசகஜமாக நடைபெறுகின்றன. இதனை எதிர்த்துக் கேள்வி கேட்கும் ஒரு கோட்பாடாகத்தான் வாசகமைய விமர்சனம் என்பதை நான் முன்வைக்கிறேன்.”
இவ்விடத்தில் நா.வே.அருள் இன் குறிப்பொன்று நினைவு கூரத்தக்கது: “தமிழ் இலக்கிய உலகில் இந்திரன் முன்வைத்திருக்கும் வாசக மைய விமர்சனம் என்பது முக்கியமானது. அது ஓர் விமர்சகன் அதிகார மையமாக மாறுவதிலிருந்து தனது விடுதலையை வாசகன் மூலம் அடைந்து விடுகிற இலக்கிய விடுதலை எனலாம். படைப்பாளி தனது எழுத்தின் மீது வன்முறைச் செலுத்தி வாசகர்களைத் தன் அதிகாரத்திற்கு அடிபணிய வைக்கிற ஆபத்தை நிகழ்த்துகிறபோது ஆய்வு மைய விமர்சனம் படைப்பாளியின் அதிகாரத்தை அடையாளம் காட்டுகிறது. தரிசன விமர்சன முறை அல்லது ரசனை விமர்சன முறை மூலம் படைப்பாளியின் அதிகாரத்தைக் கட்டமைக்கிற போது வாசகன் வாசக மைய விமர்சனத்தின் மூலம் எதிர்கொள்ள முடியாமல் திணறுகிற வாய்ப்புண்டு. அப்போதுதான் ஆய்வு மைய விமர்சனத்தின் மூலம் ஒரு தேர்ந்த திறனாய்வாளன் வாசகனுக்கு ஆயுத உதவி செய்கிறான். பாசிக்கு அடியில் ஒளிந்திருக்கும் மீன்களைப் போல வெவ்வேறு அர்த்த அடுக்குகள் பிரதியின் அடியில் சஞ்சரிக்கின்றன. பளிங்கு நீரோட்டமான மேல் மட்டத்திலிருந்து உள் பாய்ந்து பாசிகளுக்கு அடியிலிருக்கும் மீன்களை விரல்களின் மூலம் வெளிக் கொண்டு வருகிறான் ஆய்வு மையத் திறனாய்வாளன். வாசக மைய விமர்சனமும் ஆய்வு மைய விமர்சனமும் இலக்கியத்தின் இரண்டு கண்கள்.”
‘ஆறு சிறுகதைகள் ஒரு பகுப்பாய்வு’ நூலிலுள்ள ஆறுகட்டுரைகளைப் பற்றி விமர்சன பூர்வமான கருத்துக்களை விரிவாகவும் தெளிவாகவும் பல்வேறு தேடல்மிக்க கருத்தியலோடும் முன்வைத்துள்ள இந்த உரை பின்வருமாறு முடிகின்றது. “இந்நூல் மாணவர்களின் கல்வித் தேவைக்காக எழுதப்பட்டதென்கிறார் ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி). ஆனால் இது படைப்பாளிகளுக்கும் விமர்சகர்களுக்கும்கூட உகந்தது என்பது என் அபிப்பிராயம். ஏற்கனவே முதலாம் பகுதியில் வாசக மைய விமர்சனம்பற்றி எழுதியது இதற்காகவேதான். அது ஒரு புதிய வாசிப்பையும், தானே ஒரு முடிவைக் கண்டடையும் வெளியையும் வாசகனுக்கு அளித்திருக்கிறது. அதன்படி சில ஆண்டுகளின் முன்பாக தமக்குப் பிடித்த சிறுகதைகளையும், அவை ஏன் தமக்குப் பிடித்தனவென்ற விபரிப்பையும் செய்த தொகுப்பொன்று ‘சாளரம்’ என்ற பெயரில் வந்திருந்தது ஞாபகம். கால இடைவெளி நீண்டிருந்தும் அதன் நீட்சியாக இந்நூலைக் காணலாம்.
வாசிப்பினை ஆழமாகச் செய்யாமல் அபிப்பிராயங்கள் இல்லை. ஆழமான வாசிப்பிலும் தன் அரசியல் கலவாமல் அபிப்பிராயம் பிறவாது. சுவையை அடிப்படைத் தேவையாக்கும்போதுதான் அவற்றினை ஓரளவு கடந்த நல்ல வாசிப்பு உண்டாகிறது. எனில் அதை முன்நிபந்தனையாக விதிக்கும் புதிய அம்சம் சேர்ந்ததாய் இருக்கிறது ஏ.எச்.எம்.நவாஷின் (ஈழக்கவி) பகுப்பாய்வு.”
இது ‘அபிப்பிராயம் ஓதும்’ வெறுமையான ஒரு உரைக்கட்டு அல்ல. உரையாடல் பாணியில் எழுதப்பட்ட உயிர்ப்பான விமர்சனம்; நுணுக்கமான ஆய்வு. மிக நேர்த்தியாக கூரிய பார்வையோடு இந்த விமர்சனத்தை தேவகாந்தன் எழுதியிருக்கிறார். இந்த விமர்சனம் தேவகாந்தனின் விமர்சன நோக்குநிலையையும், ஒரு பிரதியை நுண்ணய உணர்வோடு வாசித்து, கிரகித்து அந்த பிரதியின் தாற்பரியத்தை வெளிப்படுத்துகின்ற திறனை எடுத்துக்காட்டுவதவும் அமைந்திருக்கின்றது. இது ‘தாய்வீடு’ (ஜுன் 2020) இணைய இதழில் வெளிவந்து, ஒலிவடிவம் (Youtube) ஆகியிருக்கிறது. ‘தேவகாந்தன் பக்கம்’ (devakanthan.blogspot.com/ 2020/06/blog-post.html) இணையப் பகுதியிலும் இதனைக் காணலாம். தற்போது இக்கட்டுரை “காற்று மரங்களை அசைக்கின்றது” (2021 மாசி; பக். 205-214) என்ற நூலிலும் இடம் பெற்றுள்ளது. ‘ஆறு சிறுகதைகள் ஒரு பகுப்பாய்வு’ நூல் பற்றி தேவகாந்தன் எழுதிய விமர்சனத்தை பல முறை ஒலிஅலைகளில் செவிமடுத்து, பல முறை வாசித்தலின் உந்தலாக, ‘காற்று மரங்களை அசைக்கின்றது’ நூலை பற்றி சற்று விரிவாக எழுத விழைகிறேன்.
2
“1968இல் ‘ஈழநாடு’ தேசிய நாளிதழின்
ஆசிரிய குழுவின் பிரவேசத்துடன் தீவிரம் கொள்ளும்
தேவகாந்தனின் படைப்பு முயற்சிகளுக்கு
அரை நூற்றாண்டுக்கும் மேலான வரலாறுண்டு.
இவற்றில் பல சாதனைகளாகவும் ஆகியுள்ளன.”
நூலின் பின் அட்டை
ஶ்ரீ தேவகாந்தன் என்ற ஆசிரியரிடம்தான் நான் தமிழ் கற்றேன். அவர் ஒரு எழுத்தாளர். அழகான கையெழுத்து அவருடையது. அவர் தமிழ் கற்பித்த அணுகுமுறைகளின் பிம்பங்கள் என் ஆழ்மனக்கரையில் இன்னும் அலையாக எழுகின்றன. எண்பதுகளின் நடுக்கூற்றில் அவர் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து விட்டார். அவரது படைப்புகளை சஞ்சிகைகளில் கண்ணுற்றேன். ‘ஶ்ரீ’ ஐ நீக்கிவிட்டு, ‘தேவகாந்தன்’ பெயரில் எழுதுகிறாரோ? என்ற நினைப்பில் அவரது படைப்புகளை படித்துவந்தேன். அவரது ஆக்கங்களின் வீச்சு என்னை பிரமிக்கவைத்தது. என் ஆசானின் எழுத்துக்கள் என்ற பெருமிதமும் இருந்தது. ஆனால் தற்செயலாக படிக்கக் கிடைத்த ஒரு நாவலின் மூலமாக இந்த ‘தேவகாந்தன்’ என் ஆசான் அல்ல என்பதனை தெரிந்துக்கொண்டேன். இப்படித்தான் தேவகாந்தனின் எழுத்துக்களில் எனக்கு பரிச்சயம் ஏற்பட்டது.
தேவகாந்தன் (1947; சாவகச்சேரி) இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து, கனடா தொராண்டோவில் வசிக்கும் தீவிர இலக்கியப் படைப்பாளி. நாவல் (உயிர்ப் பயணம், விதி, லங்காபுரம், கதாகாலம், கனவுச்சிறை, யுத்தத்தின் முதலாம் அதிகாரம், உயிர் பயணம், நிலாச்சமுத்திரம், கலிங்கு), குறுநாவல் (எழுதாத சரித்திரங்கள், திசைகள்), சிறுகதை (காலக்கனா, இன்னொரு பக்கம், நெருப்பு), உரைவீச்சு (ஒரு விடுதலைப் போராளி), கட்டுரை, விமர்சனம் (எதிர்க்குரல்கள், காற்று மரங்களை அசைக்கின்றது) என பல பரிமாணங்களில் அவரது படைப்புகள் பரிணமிக்கின்றன. சிற்றிதழ், சினிமா, தொலைகாட்சி என அவரின் கலைமுயற்சிகள் விரிவு கண்டுள்ளன. 1968-1974 வரை ‘ஈழநாடு’ நாளிதழில் பணி புரிந்தவர். 1984 முதல் 2003 வரை தமிழ்நாட்டில் வாழ்ந்து, தமிழக இலக்கிய ஆளுமைகளுக்கூடாக, தன்னுடைய எழுத்தாற்றலை வளப்படுத்திக்கொண்டவர். இலக்கு (தமிழ்நாடு), கூர் (கனடா) ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தன்னுடைய ‘அடையாளத்தினை’ தேவகாந்தன் பின்வருமாறு ஒரு நேர்காணலில் (வ.ந.கிரிதரனின் ‘பதிவுகள்' இணைய இதழ்: “தேவகாந்தன்”) பிரகடனப்படுத்தியிருக்கிறார்: “எனது முதல் படைப்பு வெளிவந்த காலத்துக்கும், அண்மையில் நான் முடித்திருக்கும் ‘கந்தில் பாவை’க்குமிடையே சுமார் அரை நூற்றாண்டுக் கால இடைவெளியிருக்கிறது. இந்த இடைவெளியை என் வாசிப்பும் அனுபவமும் பூரணமாக தன் படிமுறையான வளர்ச்சியில் நிரவி வந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். அதுபோல் இலக்கியத்தின் நோக்கம், தன்மைகள்பற்றிய என் பார்வை மாறாமலும், அதேவேளை இன்னும் தீவிரப்பட்டும் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.... ஒரு தீவிர வாசகனாக இருக்கும் நான், தொடர்ந்த எனது படைப்பாக்க முயற்சிகளில் புதிய தளங்களைக் கண்டடைகிற அதேவேளையில், அவ்வாசிப்பினூடாக புதிதாக என்னை வார்த்தும் கொள்கிறேன். அதனால் எனது எந்தப் படைப்பையுமே இன்றைய வாசிப்பில் பூரணமானதென என்னால் சொல்லிவிட முடியாதிருக்கிறது. நான் வளர்ந்துகொண்டே இருக்கிறேன் என்பதன் அடையாளமும் இதுதான்.”
விட்கின்ஸ்டைன் (Wittgenstein)) என்ற நவீன மெய்யியலாளர் தன்னுடைய ‘ட்ரெக்டேட்டஸ்’ (Tractatus Logico- Philosophicus; 1921) என்ற நூலின் முன்னுரையில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்:
“சாத்தியமாவதற்கு இன்னும் பின்னால் நான் நிற்கின்றேன். ஏனெனில், என்னுடைய சக்தி சொற்பமானது. இந்தவேலை பூர்த்தியடைவதற்கு மற்றவர்கள் வந்து இதனை இன்னும் சிறந்த முறையில் செய்ய வேண்டும். ஆணியின் தலையில் அடிப்படப்படத்தான் அதற்கு பெறுமதி அதிகரிக்கும்” ((Tractatus Logico- Philosophiicus; Translation: D.F.Pears; New York; 1963; Page: 3,4).
3
“காற்று மரங்களை அசைக்கின்றதென்ற தலைப்பு,
காற்றின் விசைக்கேற்ப மரங்கசையுமென்னும்
இயல்பான பொருளோடு
நூல்களின் கனதிக்கேற்ப வாசக இதயங்கள்
அதிர்வு கொள்கின்றன என்ற
அர்த்த வியாப்தியையும் தன்னுள்ளாய்க் கொண்டிருக்கிறது.”
நூலின் பின் அட்டை
தேவகாந்தனின் தீவிர வாசிப்பின் அடையாளத்தினையும், அவரது தேடலின் விரிந்த தளத்தினையும், ஒரு படைப்பாளியின் விமர்சனக் குரலையும் முனைப்பாக வெளிப்படுத்துகின்ற ஒரு நூல்தான் ‘காற்று மரங்களை அசைக்கின்றது’ என்ற ‘பத்தி’ விமர்சன நூலாகும். ‘ஜீவநதி’ பதிப்பகம் (கலைஅகம், அல்வாய்) இந்நூலினை 2021 ஆம் ஆண்டு வெளிக்கொணர்ந்துள்ளது. ‘ஜீவநதி’யின் 180ஆவது வெளியீடாகும். ‘ஜீவநதி’யின் பதிப்புத் துறை வளர்ச்சியையும் நூலாக்க செய்நேர்த்தியையும் இந்நூல் நிரூபித்துநிற்கின்றது. நூலின் பக்கங்கள் 276 ஆகும். பெருந்தொகை பிரதிகளை இந்நூல் விமர்சன பேசுபொருளாக்கியுள்ளது. பகுதி ஒன்றில் 45 பிரதிகளும், பகுதி இரண்டில் 8 பிரதிகளும் அவதானத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ‘பத்தி’ எழுத்துக்களாக மட்டுமன்றி, நூல் மதிப்பீடுகளாக, மதிப்பீடே விமர்சனங்களாக, விரிவு கொண்ட கட்டுரைகளாக பரிமாணம் கண்டுள்ளன. ஒரு படைப்பாளி இன்னுமொரு படைப்பை அல்லது பிரதியை எவ்வாறு உள்வாங்குகிறான் என்பதையே இந்நூல் உணர்த்துகின்றது. ஒரு பிரதியை கூர்மையான அவதானிப்போடு வாசித்து, தன்னுடைய நோக்குதலை தேவகாந்தன் பிரக்ஞையோடு துல்லியமாக்கியுள்ளார். நூலின் அணிந்துரையில் தி.செல்வமனோகரன் (விரிவுரையாளர், யாழ். பல்கலைக் கழகம்) முன்வைத்துள்ள கருத்தொன்று அவதானிக்கத்தக்கது: “கலாசிருஷ்டியாளர் ஒருவரின் கலை பற்றியும் கலைப்படைப்புப் பற்றியும் தன் சிந்தையில் கொண்டிருக்கக் கூடிய கருத்துக்களின் விசாலத்தை இப்புனைவு சாரா எழுத்துக்களின் வழி அறிய முடிகின்றது. இவ்வெழுத்துக்கள் மதிப்பீடுகளாக, உரையாடல்களாக, வாசிப்புக்களாக, ‘பத்தி’ எழுத்துக்களாக தனக்கே உரிய கருத்தியற்றளத்தினின்றும் தேவகாந்தன் எழுதிய விமர்சனங்கள். இவற்றில் அவரின் கருத்தியல் பலகோணங்களில் திரட்சியுற்று காட்சிக் குரியதாகிறது. அந்தக் காட்சியைக் காண ‘ஐயம், திரிபு, விகற்பம் – முற்கற்பிதம் அற்ற மனம்’ எமக்குத் தேவைப்படுகிறது. படைப்பாளியின் அகவுலக சஞ்சாரங்களை, கனவுகளை, கற்பனைகளை மெய்மை வாத குறிப்பான்களை இனங்கண்டு – வாசகனுக்கும் இனங்காட்டி தன் கருத்தியலை தெளிவுற, சுருக்கமாக எளிமையாக தேவகாந்தன் தந்துள்ளார்” (vii, viii).
4
“ஒரு நல்ல நாவல் எழுதுவதைவிட
ஒரு நல்ல சிறுகதை எழுதுவது மிகக் கடினமானதொன்று என
ஆங்கில விமர்சகர்கள் சிலர் கூறியிருக்கிறார்கள்.
சிறுகதையானது எழுத்துருவில் வார்ப்பட்ட பிறகுகூட
அது செதுக்கிச் செதுக்கிச் செம்மையாக்கப்பட வேண்டும்.”
பக். 64
‘காற்று மரங்களை அசைக்கின்றது’ நூல் பத்து சிறுகதைத் தொகுப்புகளை பற்றி ஒன்பது பத்திகளில் விமர்சன உரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறது. நிரூபாவின் ‘சுணைக்கிறது’, தாட்சாயணியின் ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’, கோகிலா மகேந்திரனின் ‘முகங்களும் மூடிகளும்’, குமார்மூர்த்தியின் ‘குமார்மூர்த்தி கதைகள்’, கருணை ரவியின் ‘கடவுளின் மரணம்’, ம.தி.சாந்தனின் ‘13905’, காஞ்சனா தாமோதரனின் ‘மரகதத் தீவு’, எஸ்.எல்.எம்.ஹனீபாவின் ‘மக்கத்துச் சால்லை’, வதிரி இ.ராஜேஸ் கண்ணனின் ‘முதுசொமாய்’, ‘தொலையும் பொக்கிஷங்கள்’ என்பனவே அவையாகும்.
“பிரதி மொழியால் தாங்கப்படுவது என்பான் ரோலன் பார்த். ‘சுணைக்கிறது’ சிறுகதை மொழியால் தாங்கப்பட்டிருக்கின்றது. பேச்சு மொழியின் வலு அது. ஆனால் அது செம்மொழியின் வீறார்ந்தும் அவ்வப்போது வெளிப்பாடடையும்” (03) என்னும் அடிப்படையில், ‘பேச்சு மொழியின் வீரியத் தோடும், பாசாங்குத் தனமற்ற வெளிப்பாட்டுத் திறனோடும் கடந்த இரண்டு ஆண்டுகளுக் கிடையில் வெளிவந்திருக்கின்ற நூல்களில் முக்கியமானது நிரூபாவின் ‘சுணைக்கிறது’ சிறுகதைத் தொகுப்பு” (01) என்கிறார் தேவகாந்தன். இத்தொகுப்பின் பேச்சு மொழியின் வீரியம் பற்றியே உதாரணங்களுடன் விதந்துரைத்து விளக்கியிருக்கிறார். பத்தியை தனக்கே உரிய ‘தனித்துவ முத்திரை’யுடன் பின்வருமாறு முடிக்கின்றார்: “’சுணைக்கிறது’ நூலைப் புரிந்துக்கொள்ள கொஞ்சம் வாசிப்புப் பயிற்சி அவசியம். கடிதம் படிக்கத் தெரிந்த, கனடா வாரப் பத்திரிகைகளைப் படித்துப் பழக்கமான சுளுவோடு இதை வாசித்துப் புரிந்துவிட முடியாது. அல்லது ரமணிசந்திரன் மாதிரியான வாசிப்புப் பழக்கமும் உதவிசெய்யாது. இலக்கியம் தனி வாசிப்புக்கானது. அதற்கு முயற்சியும் பயிற்சியும் அவசியமான கூறுகள்” (04). இப்பத்தி 2007இல் எழுதப்பட்டிருக்கின்றது.
“காலகாலமாக வரலாற்றில் இடம்பெற்று வந்திருந்த மோசடிகள் மற்றும் மறைப்புகளை, பின்னால் எழுந்த சில இலக்கிய முயற்சிகள் தோலுரித்து அம்பலப்படுத்தியுள்ளதை இந்நேரத்தில் எண்ணிக்கொள்ள முடிகிறது. இலக்கியத்தின் புனைவுத் தன்மை மூலமாகவே விடுபட்ட வரலாற்றின் சில பக்கங்கள் மீளக்கண்டடையப்பட்டன என பின்நவீனத்துவ விமர்சகர் கூறுவர். Alternative History என்ற ஒரு வகைப்பாடே இலக்கியத்தில் உண்டு. இதுபற்றி மிகச் சுவாரஸ்யமான பல விஷயங்கள் உள்ளன. அதன் விவரணம் வாசிப்பு சூழ்நிலையை சார்ந்ததும் ஆகும். வாசிப்போனின் அனுபவம் ஒரு கூறாக, வாசிப்பின் சூழ்நிலை இன்னொரு கூறாக பிரதியின் அர்த்தமும் பயனும் அமையும் என்பது பொதுப்புத்தியிலும் விளங்கக்கூடியதே. ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’ சிறுகதைத் தொகுதியின் வாசிப்பு, ஒரு மகத்தான அவலத்தை என் முன் நிறுத்தியது. அந்த உணர்வையும், அதன் மூலமாக இலக்கியப் பிரதியொன்று பதிவேடாக ஆகியிருக்கிற தன்மையையும் எடுத்துக்காட்டுவதே இந்த உரைக்கட்டின் நோக்கம்” (42) என்கிறது தேவகாந்தனின் இவ்வுரைக்கட்டு. “ராணுவத்தால் விடப்பட்ட பகுதிகளிலிருந்து எழும் அவலங்களின் இலக்கிய சாட்சியம்” ஆக இத்தொகுப்பை சுட்டிக்காட்டியிருக்கிறார்.
சில நல்ல கதைகளையும், சில சுமாரான கதைகளையும் கொண்டு (64) மொத்தமாய்ப் பதினெட்டுக் கதைகள் அடங்கிய தொகுப்பாக அண்மையில் வெளிவந்திருக்கிறது கோகிலா மகேந்திரனின் ‘முகங்களும் மூடிகளும்’ தொகுப்பு. ‘முன்னுரையிலும், அணிந்துரையிலும் சொல்லப்பட்டது போல் உளவியல் சார்ந்த, பெண்ணியம் சார்ந்த கதைகளின் தொகுப்பென்பதெல்லாம் சும்மா. படைப்பாளி இக்கதைகளின் கலாரீதியான அம்சங்களைத் தன் வரும் படைப்புகளில் முன்னெடுத்தால் ஈழத்தமிழ்ச் சிறுகதைக்குப் பலம் சேர்க்கமுடியும்’ என இப்பத்தியை முடிக்கின்றார் தேவகாந்தன். இப்பத்தியில் சிறுகதைக்குரிய பண்புகள் துல்லியமாக துலக்கப்பட்டிருக்கின்றன.
‘குமார்மூர்த்தி கதை’களை முன்வைத்து, ‘படைப்பு, படைப்பாளி, படைப்பாளியின் இயங்குதளம் குறித்த விசாரணை’யாக்கியிருக்கிறார். ஜுலை 30, 2011இல் தேடல் சார்பிலான குமார்மூர்த்தி நினைவரங்கில் வாசிக்கப்பட்ட பிரதியே இது. சற்று விரிவாக எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரையாகும். இத்தொகுப்பு இருபத்தைந்து கதைகளினைக் கொண்டது. குமார்மூர்த்’தியின் ‘சப்பாத்து’ என்ற சிறுகதை இத்தொகுப்பில் இடம்பெறவில்லை என்பதனைச் சுட்டி, 26 கதைகளின் விமர்சனத்தை இங்கு முன்வைத்துள்ளார். புனைவுத்திறன் சார்ந்து ஒவ்வொரு சிறுகதையினதும் நுண்தளத்தை பிரக்ஞைப் பூர்வமாக அவதானித்திருக்கிறார். ‘மொத்தத் தமிழ்ப் பரப்பிலும் வெளியான கதைகளில் இன்றும் என்னைப் பிசைந்துகொண்டிருக்கும் ஒரு சிறுகதை மலேசிய எழுத்தாளர் இளஞ்செழியன் எழுதிய ‘பாக்கி’ ஆகும். அது செய்த பாதிப்புப்போல் தமிழ்ச் சிறுகதைகளில் ஓர் அனுபவத்தை நான் அடைந்ததில்லையென்று துணிந்து சொல்லமுடியும். அந்தக் கதைக்கு பின்னாலேயாவது வரக்கூடிய வலு கொண்டது குமார்மூர்த்தியின் ‘இறுதி அத்தியாயம்’. தன்னளவில் சிறுகதையாகக் கட்டமைத்து, முடிவுறும் கணத்திலும் ஒரு பாதிப்பனை நிகழ்த்திய இக்கதையை ஈழ புகலிட இலக்கியப் பரப்பினுள் சிறந்த சிறுகதைகளுள் ஒன்றாகக் குறிப்பிட எனக்குத் துளியேனும் தயக்கமில்லை’ (79) என்கிறார் தேவகாந்தன்.
கருணை ரவியின் ‘கடவுளின் மரணம்’ சிறுகதைத் தொகுப்பை, ‘இலக்கியம் சார்ந்த வடிவம் மற்றும் மொழியாடல்களும், அரசியல் சார்ந்த போரின் மூலமும் இயங்குவிதங்களும்’ என்ற பார்வைக்கூடாக துலக்கியுள்ளார். ‘பின்நவீத்துவ அலையொன்று தமிழ் இலக்கியப் பரப்பில் வீசிய காலத்தில் புரிந்தும் புரியாமலும் மொழிநடையிலேயே நம் படைப்பாளிகள் தாக்குதலைத் தொடுத்திருந்தார்கள். அது ஒருவகையில் அதுவரை காலத்தில் மரபார்ந்தும், அலுப்பை ஏற்படுத்துவது மான நடையிலிருந்து வாசகனுக்கு ஒரு விடுதலையை அளித்தது மெய்யே. ஆனாலும் மொழியை எவ்வாறேனும் பினைந்துபோட்டு கதையை உருவாக்கும் விஷயத்தில் பிரேம் மற்றும் ரமேஷ்போல வெற்றிகண்டவர்கள் மிகக் குறைவு. அவ்வகை மொழிநடையைக் கையாளுவதில் மிகுந்த அவதானம் தேவை. கருணை ரவியின் ஏனைய கதைகள் பலவும் நடைரீதியாக தேறியுள்ள வேளையில், ‘கடவுளின் மரணம்’ மட்டும் அவதான இழப்பின் அடையாளங்களை நிறையவே கொண்டிருக்கிறது. ஆனாலும் அக்கதையே மண்ணுள்ளிருந்து வெளியே வந்து நுணுந்திக்கொண்டு கிடக்கும் ஒரு மண்ணுண்ணிப் பாம்புபோல சிந்தனையை அலைக்கழிப்பதாயும் இருக்கிறது’ (82). இவ்வாறான அணுகலில் இக்கதைகள் பற்றி அலசப்பட்டிருக்கிறது.
ம.தி.சாந்தனின் ‘13905’ சிறுகதைத் தொகுப்புபற்றி பின்வருமாறு எழுதத் தொடங்குகின்றார்: ‘ம.தி.சாந்தன் என்றபெயரைப் பார்த்ததும் தெரிந்ததுபோலத் தோன்றாவிட்டால் சாந்தன் என்றுமட்டும் கொண்டுபாருங்கள். ராஜீவ் காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவரில் ஒருவரை அப்போது சுலபமாக ஞாபகங்கொள்ள முடியும். அவரின் இச்சிறுகதைத் தொகுப்புபற்றி எவ்வளவு பேர் அறிந்திருப்பார்கள் என்றுகூடத் தெரியவில்லை. அந்த நூலும் தமிழ்ச் சமூகத்தின் பிரக்ஞைக் குளத்தில் வீசப்பட்ட ஒரு கல்லாகத்தான் இன்றுவரை கவனமிழந்து கிடக்கிறது’ (87).
‘மரணதண்டனை பெற்ற ஒரு சிறைக் கைதியாக மரணத்தையும், பின் மேன்முறையீடுகளின் விசாரணைக்குக் காத்தும், விசாரணையின் எதிர்மறை முடிவுகளின் பின் மறுபடி மரணத்தையுமென தன் மரணத்தைமடியிலே கட்டிக்கொண்டு ஒரு பயமும் அவலமுமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த ஒருவர், தான் வாழ்ந்ததின் அடையாளத்தை இவ்வுலகத்தில் நிலைநிறுத்துவதற்கு வேறு வெளி தெரியாது, நிறைய வாசிக்கவும் பின் எழுதவுமான நிலைக்கு சென்றிருந்தாரென்றாலும் தன் படைப்புக் கணத்தை ஒரு மரணபயம் கடந்த இயல்பு நிலையில் நிகழ்தியிருக்கிறார் என்பது சாதனை’ (88, 89).
‘புகலிட இலக்கியத்தின் தன்மையைத் துல்லியப்படுத்தும் தொகுப்பு’ என காஞ்சனா தாமோதரனின் ‘மரகதத் தீவு’ பிரதியை அடையாளப்படுத்தியுள்ளார். புகலிட புனைவுகளாக இச் சிறுகதைகள் அமைந்துள்ளன. தேவகாந்தன் குறிப்பிடுவது போல, ‘ புகலிட எழுத்து என வருகையில் அதன் திசையை துல்லியப்படுத்தும் விதமாகவே இத்தொகுப்பிலுள்ள ஐந்து கதைகளும் தென் படுகின்றன. இந்தவகையில் இது புகலிட இலக்கியத்திலும் முக்கியத்துவம் பெறவேண்டிய தொகுப்பாகிறது. மேலும் காஞ்சனா தாமோதரனின் நவீன தமிழின் ஆற்றல் வாய்ந்த மொழிப் பிரயோகம் இத்தொகுப்பின் இத்தொகுப்பின் இன்னொரு சிறப்பு’ (102).
‘முஸ்லிம் மக்களின் வாழ்க்கை யதார்த்தத்தை’ எஸ்.எல்.எம். ஹனீபாவின் ‘மக்கத்துச் சால்வை’ நூல் நிதர்சனத்தில் வைக்கிறது என்கிறார். ‘தமிழகத்தின் சிறந்த மார்க்சீயத் திறனாய்வாளர்களில் ஒருவரான தி.க.சி.பாணியில் கதைகளைத் தனித்தனியாக சுருங்கக் கூறி விமர்சனம் செய்வது இந்நூலைப் பொறுத்தவரை அவசியமில்லை என்று கருதுவதால் மக்கத்துச் சால்வைபற்றி சில வார்த்தைகளை மட்டுமே முன்வைப்பதாக இப்பத்தி குறிப்பிடுகின்றது. ‘எஸ்.பொ.வின் முன்னுரை கண்டதும் நெய்த நூலிலும் தைத்த நூல் வலிதாகிவிடுமோ, காகத்தின் தலையில் பனம்பழத்தை வைத்ததுபோல பாரமாகிவிடுமோ என்று நினைத்தேன். ஆயினும், எஸ்.பொ.வின் முன்னீட்டைத் தாங்கக் கூடிய அளவுக்கு தொகுப்பு பலமாகவே உள்ளது’ (136) என்ற தேவகாந்தனின் கணிப்பு சரியானதே.
வதிரி இ.ராஜேஸ் கண்ணனின் முதுசொமாய், தொலையும் பொக்கிஷங்கள் ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை, ‘மனத்தில் அசரீரியாய் ஒலிக்கிறது காலத்தின் சுருதிபேதம்’ என அவதானித்துள்ளார். இப்பத்தியில் இலங்கை முற்போக்கு இலக்கியம் பற்றி முக்கியத்துவம் மிக்க கருத்தொன்றினையும் எடுத்தியம்பியுள்ளார். “இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் வருகையோடு தான் ஈழத்தமிழிலக்கியம் தனக்கான பாதையில் நடைபோடத் தொடங்கியதென்பதை விடவும், அது அடையாளம் காணப்பட்டதே அதன் பின்னர்தான் என்கிற அறிகை, இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் முக்கியத்துவத்தை எப்போதும் உரத்துச் சொல்லிக் கொண்டிருக்கக் கூடியதே. ஆனாலும் தனக்கான ஒரு இலக்கிய முறைமையை, தனித்துவத்தை உருவாக்கிக் கொண்ட பின்னரும், வளர்ந்தும் கைவண்டியில் நடக்கிற பிள்ளைபோல அது தொடர்ந்தும் ஆரம்பப் புள்ளியிலேயே நின்றுவிடுவது வளர்ச்சிக்கானதல்ல. ராஜேஸ்கண்ணனின் கதைகள் யதார்த்தமானவை. அவையும் மிக எளிய பதங்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இவை புதியதடத்தில் செல்லவில்லையென்பதை சொல்லியே ஆகவேண்டி இருக்கிறது” (151).
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.