
எங்கள் முதல் நாள் பயணத்தின் முடிவில் ரீச்சவிக் அருகாமையில் ஒரு பண்ணையில் உள்ள சிறிய மரத்தால் ஆன கபின்(Cabin) எனப்படும் இடத்தில் தங்கியிருந்தோம். இங்கு மிகவும் சிறிதான ஒரு படுக்கை வைத்திருக்கக் கூடிய இடமும் திரும்பி உடலில் சவர்க்காரம் போடமுடியாத குளியலறையும் உள்ளது. இதுவரை காலத்தில் நான் இப்படி ஒரு இடத்தில் இராத் தங்கவில்லை. ஆனால் வெந்நீரும் ஹீட்டர் இருந்ததே போதுமாக இருந்தது .. தலைநகரிலும் மற்றும் ஒரு சில இடங்களைத் தவிர ஐஸ்லாந்தில் பெரும்பாலான தங்குமிடங்கள் இப்படியே. இவை வாடகை அதிகமில்லை என்பதால் அமரிக்கா ஐரோப்பாவிலிருந்து ஏராளமான இளைஞர்களும் யுவதிகளும் இங்கு விடுமுறைக்கு வருகிறார்கள். நகரங்களில் உள்ள விடுதிகள் மிகவும் விலை கேட்டால் உடலில் மயிர்கூச்சம் ஏற்படும்.
ஐஸ்லாந்தைக் கரைகளால் வட்டமாக சுற்றி வரும் தெருப் பயணமே இங்கே பிரபலமானது. பல இடங்களில் நல்ல பாதையும் சில இடங்களில் கற்பாதையும் உள்ளது. இந்தப் பாதையால்போய் வருவதே ஒரு விதமான சாகசமே என்பதால் எங்கள் பயணமும் அதேதான். இங்குதான் அருவிகள் எரிமலைகள் , பனிப்பாறைகள் கறுப்பு கடற்கரைகள் அதிகம் ஐஸ்லாந்தின் தெற்குப் பகுதியில் எங்கள் பயணம் அத்திலாந்து சமுத்திரத்தின் கடலலை ஒரு பக்கமும் மலைகளை மறுபக்கமும் தடவியபடியே எங்களது பயணவான் சென்று கொண்டிருந்தது .
முதல் இடமாக ஸ்கோஃபொஸ் (Skógafoss)என்ற பிரசித்தமான ஒரு அருவியை நோக்கியே எங்கள் பயணமும் இருந்தது. இந்த அருவி ஆரம்பத்தில் கடலருகே இருந்ததாம். தற்பொழுது ஐந்து கிலோமீட்டர் முன்வழுக்கையில் தலைமயிர் மின்வாங்குவதுபோல் தள்ளிப் போய்விட்டது. இப்படியான மாற்றங்கள் மற்றைய இடங்களில் நடப்பதற்கு ஆயிரக்கணக்கான வருடங்கள் எடுக்கும் ஆனால் இங்கு ஒரு எரிமலை பொங்கி தனது குளம்புகளை தள்ளுவதன் மூலம் கடலை பின்னால் சில நாளில் தள்ளிவிடும்
இந்த அருவி அருகே பல ஆங்கில சினிமாக்கள், சீரியல்களில் காண்பிக்கப்பட்டுள்ளது . நமது இந்தியர்களும் சாருக்கான் நடித்த இந்தி (தில்வாலே) படத்தின் பாட்டு காட்சிகள் எடுத்தார்கள். அப்படியான அழகான காட்சியமைப்பைக் கொண்ட இடமிது . அந்தப் பாடல் காட்சி அந்தப் படத்திற்கு கிரீடம் போன்றது. வருடத்தின் குளிர்காலத்தில் பாதி உறைந்தபடியும் மற்றைய காலத்தில் பெருகி ஓடி மாயாஜாலமாக காட்சி தரும் ஒரு இடமாகும் .
இந்த பயணத்தில் வாகனத்தின் ஒரு பக்கத்தில் கோடையிலும் பனி படர்ந்த மலைகளும் அதன் கீழே பச்சைப் பாசி பிடித்த எரிமலைக் கற்களும் காணப்படும்… மறுபக்கம் பெரிய கற்பாறைகளைக் கொண்ட கடற்கரையாகும். கடலருகே செல்வதால் அதிக காற்று வீசும். பாதையெங்கும் மிருகங்கள் தெரிவதில்லை ஆனால் ஐஸ்லாந்தில் விசேடமான குதிரைகள் உண்டு என்பது அறிவேன் . பாதைகளில் அதிகம் வாகனங்கள் இல்லை . பெரும்பாலும் ஒரு வாகனம் இரண்டு வாகனமே காணமுடியும். ஆங்காங்கே மலையடிவாரங்களில் சில வீடுகள் தென்படும்.
வழிகாட்டியின் கூற்றுப்படி ஆரம்பத்தில் இந்தப் புகுதியில் வந்தவர்கள் இனக்குழுக்களாக வசித்ததாகவும் , அவரகள் குழு யுத்தங்களில் ஈடுபட்டு கொலைகள் செய்வதும் நடந்தது. அவர்களுக்கு ஒரு சிறிய தேவாலயம் இங்கு உண்டு எனக் காட்டினார்.
காலை பத்துமணியளவில் அருவி அருகே போனதும் இறங்க நடந்தபோது மிகவும் அழகான காட்சி தெரிந்தது. மலைக்கு மேலாக சூரியன் அரிவியில் முகம் கழுவிவிட்டு மெதுவாக எட்டிப்பார்பதுபோல் இருந்தது. 60 மீட்டார்கள் மலையின் உயரத்தில் 25 மீட்டர்கள் அகலத்தில் அருவி நீர் கொட்டும் போது எதிர்ப் பக்கத்தில் அழகிய வானவில்லை உருவாக்கியபடி இருந்தது. இந்த காட்சி தில்வாலே திரைப்படத்தில் அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த அருவியின் பின்பாக ஒரு மலைக் குகை உள்ளது . அங்கு பாதுகாப்பாகத் தங்கம் நிறைந்த ஒரு பெட்டி இருந்ததாகவும் தொன்மைக் கதை உள்ளது . மலையின் உயரத்திற்கு நடந்து போகலாம். அதேபோல் அருவியின் பின்னாலுள்ள குகையுள்ளும் போகமுடியும். அருவியும் வானவில்லும் அருகே கருமையான கற்களைத் தடவியபடி ஓடும் ஆறும் எங்களுக்கு போதுமானதாக இருந்தது.
அடுத்ததாக எங்கள் பயணம் ரெயினிஸ்/ஃபியரா( Reynisfjara black sand beach) கறுப்பு மண் கொண்ட கடற்கரை நோக்கி இருந்தது. எரிமலை வெடித்ததால் வெளிவந்த கற்களும் மண்ணும் கரையெங்கும் கறுப்பாக இருக்கும்.
நோர்வேயை ரெயினிஸ் என்பவர் தங்கியிருந்ததால் அவரது மலை (ஃபியரா) என வழங்கப்படுகிறது. எரிமலை, காற்று மற்றும் கடலலைகள் என மூன்று இயற்கையின் சக்திகளிடையே ஏற்பட்ட மோதலால் இந்த இடம் உருவாகியது .பார்க்கும்போது உலகத்திலே மிகவும் அபூர்வமான இடமாகத் தெரிந்தது. அதிகாலை அல்லது மாலை மயங்கும் நேரங்களில் பார்பதற்கு திவ்வியமான நேரம் என நினைக்கிறேன் ஆனால் நாங்கள் சென்றது மதியநேரம் என்பதால் படம் எடுப்பதற்கு சிறந்த நேரமாக இருக்கவில்லை என்ற கவலை எனக்கு இருந்தது . தொலைவிலுள்ள இப்படியான கறுப்பான கடற்கரை கடற்கரை நியூசிலாந்திலும் உள்ளது ஆனால் இங்குள்ள அழகு எழுத்துகளில் வர்ணிக்க முடியாது.
ரீச்சவிக்கு 180 கிலோ மீட்டர் தொலைவில் இது எப்படி உருவாகியது எனப் பார்ப்போம்.
எரிமலையின் குளம்புகள் வெளித்தள்ளியதும் கடல் நீரின் தாக்கத்தால் இவைகள் துண்களாக(Basalt) மாறி ஆறு கோணத்தில் அழகான காட்சியாக நமக்குத் தெரியும். அதைவிட கடலின் தாக்கத்தால் மிகப் பெரிய குகையும் உள்ளது . கடலுக்குள்ளும் கரும்பாறையில் தெரியும் . நீல நிற கடற்கரையில் இப்படியான தோற்றத்தால் உல்லாசப்பயணிகள் பலர் வருகை தருவதோடு, இந்த இடம் பல போட்டோக்கள் எடுக்கப்பட்ட இடம் என்கிறார்கள் . இந்த இடத்தில் ஷாருக்கானும் கஜோலும் பாடல் காட்சி உள்ளது. படம் வழமையான மசாலாவான போதிலும் கஜோலது நடிப்பிற்காகவும் படத்தில் சில காட்சிகளுக்காக பார்க்கலாம்.
இங்குள்ள குகையின் உள்ளே சென்று வெளிவந்தபோது ஒரு அறிவிப்பு இருந்தது . அதைப்படித்து மேலும் வழிகாட்டியிடம் துருவியதால் எனக்கு தெரிந்த தொன்மையான கதையை இங்கு தருகிறேன்.
‘மீனவன் ஒருவன் நான் சென்ற அதே குகைக்குள் சென்று நடனமாடி விட்டுப் பாடியபடி வெளிவந்தபோது சீல்(Seal )தோலால் ஆன ஆடை குகை வாசலில் கடற்கரை மணலில் தேடுவாரற்று கிடந்தது . அந்த மீனவன் அதை எடுத்து வீட்டில் உள்ள பெட்டியில் வைத்துப் பூட்டினான். அடுத்த நாள் அவன் மீன் பிடிக்க கடற்கரைக்கு வந்தபோது அங்கு ஒரு பெண் அழுதபடி குகை வாசலில் நின்றாள் . அவளை வீட்டிற்குக் கூட்டிச்சென்று குடும்பம் நடத்தி ஏழு குழந்தைகள் பெற்றபின் ஒரு நாள் அவள், மீனவன் இல்லாதபோது அந்த சீல் உடையுடன் பிள்ளைகளுக்கு பிரியாவிடை சொல்லிவிட்டு மறைந்துவிட்டாள் .
அந்த பிரியாவிடையில்:
நான் ஒரு துயரம்.
எனக்குக் கடலில் ஏழு குழந்தைகள்.
நிலத்தில் ஏழு குழந்தைகள்.
எனச் சொல்லப்பட்டது.
அவளது மறைவால் துக்கமடைந்த மீனவன் மீண்டும் மீன் பிடிக்கச் சென்றான். அப்போது கடலில் ஒரு சீல் கண்ணீரை உகுத்தபடி கடலில் நீந்திச் செல்வதையே கண்டான் . ஆனால் அதன் பின்பு அவனுக்கு ஒவ்வொரு நாளும் ஏராளமான மீன்கள் அவனது வலையில் படத் தொடங்கியது. குழந்தைகள் தங்களது தாய் மீண்டும் வரப்போவதில்லை என்பதை உணர்ந்து தந்தையுடன் வாழத்தொடங்கினர்.
எப்படி இந்தக் கதை ?
ஐஸ்லாந்தில் மற்றைய நாடுகள்போல் ராணுவம் இல்லை ஆனாலும் நேட்டோ உறுப்பு நாடாக உள்ளது. அமெரிக்காவின் கடற்படைத் தளம் ஒன்று இங்குள்ளது. அங்கிருந்து வந்த விமானமொன்று எரிபொருள் அற்றுக் கடற்கரை அருகே விழுந்தது ஆனால் நல்லவேளையாக உயிர் சேதம் இல்லை. அந்த அமெரிக்க கடற்படையின் நொறுங்கிய விமானம் நாங்கள் செல்லும் வழியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ளது. இது உல்லாச பிரயாணிகள் பார்க்கும் பொருளாக தற்போது மாறிவிட்டது.
வழிகாட்டியின் படி அதைப் பார்க்க மூன்று கிலோ மீட்டர்கள் நடந்து செல்ல வேண்டும். அத்துடன் வேகமான காற்று உள்ள கடற்கரைப் பகுதி மழை வந்தால் ஒதுங்க இடம் இல்லை என்றும் ஏற்கனவே 3-4 உல்லாசப் பிரயாணிகள் இறந்தார்கள். ஆரம்பத்தில் பஸ் போக்குவரத்து இருந்தது தற்போது அதை நிறுத்தியதுடன், அங்கு போவதை அரசினர் ஊக்கமளிக்கவில்லை. ‘ மேலும் அது எங்கள் அட்டவணையில் இந்த இடம் இல்லை. இந்த விமானத்தின் மேல் நின்று ஷாருக்கான் கஜோல் படுவதும் திவாலே படத்தில் வருகிறது
எங்கள் வழிகாட்டியின் படி, ‘ இந்தப் பகுதியில் உள்ள எரிமலைகள் எந்த நேரத்திலும் பொங்கும். அதைவிட மலை ப்பகுதியில் மழை பெய்தால் வரும் வெள்ளத்தில் பனிக்கட்டிகளும் வேகமாக வரும் அப்பொழுது எல்லோரும் உயரத்தில் உள்ள தேவாலயங்களுக்கு உயிரைப் பாதுகாக்க ஓடுவார்கள் ‘ என்றார் .
பல காலமாக ஐஸ்லாந்தில் விவசாயிகள் பகுதி நேரமாக மீன் பிடிக்கப் போகும்போது, புயலில் தோணிகள் மூழ்குவதும் அவர்கள் இறப்பதும் அதிகமாக நடந்ததால் இங்குள்ள பெண்கள் ஒன்றாக சேர்ந்து 20 நூற்றாண்டின் ஆரம்பத்தில் நீச்சல் குளத்தை கட்டி ஆண்களை நீச்சல் பழக வைத்தார்கள். ஆனாலும் இங்கு தண்ணீர் குளிர் நிலையிலுள்ளது. தற்செயலாக மூழ்கிவிட்டால் உடைகளிடையே கல்லுகள் மணல்கள் வந்துசேர்ந்து நீச்சலை மேலும் கடுமையாக்கிவிடும்.
ஐஸ்லாந்து மக்கள் நோர்வே மக்களானதால் இவர்களுக்குச் சிறிய மனித உருவான சக்திகள்: எல்ஃப் (Elf /elves) மீது நம்பிக்கை உண்டு. இவை நமது கிராமங்களில் உள்ள பைரவர் சுடலைமாடன் போன்றது ,இவற்றின் தோற்றம் ஜேர்மானிய அல்லது வட ஐரோப்பிய ஆதி மக்களின்தொன்மைக் கதைகளிலிருந்து வந்தவை. இவைகள் மூலம் நன்மைகள், தீமைகள், நோய்கள், விபத்துகள் ஏற்படும் என்று நம்புகிறார்கள். எல்ஃப் பெரும்பாலானவை பெண்கள்- இவை மனித ஆண்களைத் திருமணம் செய்வதது போன்ற கதைகள் உள்ளது. இந்த எல்ஃப் பற்றிய ஏராளமான கதைகள் இடத்துக்கிடம் வேறுபட்டு வட ஐரோப்பாவில் உள்ளது . மொத்தத்தில் நமது ஊரில் உள்ள சிறிய கடவுளர்கள் மாதிரி நினைக்க வேண்டும். பெரும்பாலான கற்பாறைகளில் இந்த எல்ஃப் வசிப்பதாக நம்பிக்கையால் விவசாய நிலங்களிலிருந்து கற்பாறைகளை அகற்றமாட்டார்கள். மேலும் பழைய பண்ணை வீடுகளில் தங்களுடன் எல்ஃப் இருப்பதால் அங்கிருந்து வேறு வீடு போகாது இருப்பார்கள் . எல்ஃப் தங்களுக்குப் பாதுகாப்பும், விவசாயத்தில் நிறைந்த விளைவுகள் கொடுப்பதாக நம்புகிறார்கள். ஐஸ்லாந்து கிராமப் பகுதிகளில்புதிய பாதைகள் அமைக்கும் போதும் வளைவுகள் உருவாக்கும்போது சில இடங்களில் கற்பாறைகளை தவிர்த்து இன்றும் பாதை போடுவார்கள் ஏனென்றால் அந்த பாறைகளில் எல்ஃப் வசிப்பது என மக்கள் நம்புவதால்.
தற்போது ஐஸ்லாந்து மக்களில் பெரும்பாலானவர்கள் புரட்டஸ்தாந்து கிறிஸ்துவத்தை சேர்ந்தவர்கள் என்ற போதிலும் இருபது வீதமானவர்களுக்கு இந்த நம்பிக்கை உண்டு .
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









