பூக்கோள உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவாக இயற்கை அளித்த பரிசு உணர்வு. அவ்வுணர்விலும் காதல் உணர்வு சிறப்பிற்குரியது. இவ்வியற்கை அற்புதப் பிறவியாக மனிதனைப் படைத்து காதலைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அக்காதலைப் பரிமாறிக்கொள்ள மொழியையும் கொடுத்துள்ளது. இத்தகைய மொழி காலந்தோறும் மனிதப் பண்பாட்டிற்கேற்ப மாறும் இயல்பினையுடையது. இம்மொழி மாற்றத்தில், காதலர்கள் பயன்படுத்தும் சொற்களில் பாலீற்று விகுதிகள் எவ்வகையில் மாற்றம் பெற்றுள்ளன என்பதனை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

கருதுகோள்
மொழிமாற்றம் ஏற்படுத்தும் காரணிகளில் காதலும் ஒன்றாகின்றது என்பதே இவ்வாய்வின் கருதுகோளாகும்.

பால் விகுதிகள்

    கிளவியாக்கத்தில் பாலுணர்த்தும் எழுத்திற்கெல்லாம் இலக்கணம் கூறுகின்ற பொழுது,

        “இருதிணை மருங்கின் ஐம்பாலறிய
        ஈற்றுநின் றிசைக்கும் பதினோரெழுத்தும்
        தோற்றந் தாமே வினையொடு வருமே”     (தொல்.தெய்வ.10)

சொல்லாக்கத்தில் வழுவின்றி வாக்கியங்களை எழுதுவது சிறப்பிடம் பெறுகின்றது. (தொல்.சொல்.தெய்வ. நூ. 5, 6, 7, 8, 9) போன்ற ஐந்து நூற்பாக்களும் ஐம்பால் ஈறுகள் (ன, ள, ர, ப, மார், து, டு, று, அ, ஆ, வ) பற்றிக் குறிப்பிடுகிறது. இங்குப் பால் ஈறுகளின் பங்கு முக்கிய இடம் பெறுகின்றது. பால் ஈறுகள் பால்களைக் காட்டுவது மட்டுமின்றி எண்ணையும் காட்டுகிறது. இவ்வீறுகளை வழுப்படாமற் எழுதுவதற்கென்று பெயரியலிலும் வினையியலிலும் பொருத்திக் காட்டியுள்ளார். இதனை,

    “வினையிற் றோன்றும் பாலறி கிளவியும்
    பெயரில் றோன்றும் பாலறி கிளவியும்
    மயங்கல் கூடா தம்மர பினவே”   (தொல்.தெய்வ.11)

என்பதன்வழி, பாலறி கிளவிகள் பெயரினையும் வினையினையும் அடிப்படையாகக் கொண்டமையும் என்பதனை அறியலாம். இத்தகு பாலறிகிளவியினை மொழியலாளர்கள் பாலெண் இயைபுவிதி என்பர்.

“அன் ஆன் அள் ஆள் அர் ஆர் ப மார்
அ ஆ கு டு து று என் ஏன் அல் அன்
அம் ஆம் எம் ஏம் ஓமோடு உம் மூர்
க ட த ற ஐ ஆய் மின் இர் ஈர்
ஈயர் கயவும் என்பவும் பிறவும்
வினையின் விகுதி பெயரினும் சிலவே”    (நன்.140)

இவற்றையே மீண்டும் பெயரியலிலும் வினையியலிலும் சிறப்பித்துக் காட்டுவார்.

வினை விகுதிகள்
அன் ஆன்        -    ஆண்பாற் படர்க்கை    (நன்.325)
அள் ஆள்        -    பெண்பாற் படர்க்கை    (நன்.325)
அர் ஆர் ப மார்    -    பலர்பாற் படர்க்கை    (நன்.327)

பாலீற்றில் மாற்றம்
பாலீறுகள் என்பது ஒரு பெயர்ச்சொல்லையோ அல்லது வினைச்சொல்லையோ எவ்வகையான பாலினைப் பெற்றுள்ளது என அடையாளப்படுத்தும் விகுதியாக அமைகிறது. இத்தகைய பாலீறுகள் காலந்தோறும் மாறும் இயல்புடையது. இதனை,

“எல்லாரு மென்னும் பெயர்நிலைக் கிளவியும்
எல்லீரு மென்னும் பெயர்நிலைக் கிளவியும்
பெண்மை யடுத்த மகனென் கிளவி
அன்ன வியல என்மனார் புலவர்”   (சொல்.தெய்வ.159)

என்ற நூற்பாவிற்கு உரைகூறும் பொழுது, விளையாடு பருவத்துப் பெண்மகளைப் பெண்மகன் என்றல் பண்டையோர் வழக்கு (தொல்.சொல்.ப.113) என்று தெய்வச்சிலையார் குறிப்பிட்டுள்ளார்.

புறத்துப்போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்மகளை மாறோக்கத்தார் இக்காலத்தும் பெண்மகனென்று வழங்குப (தொல்.சொல்.ப.119) என்று சேனாவரையர் குறிப்பிட்டுள்ளார்.

நாணுவரை யிறந்து ஆண் தன்மையாளாகிப் புறத்துப் போய் விளையாடும் பெண்மகளைப் பெண்மகன் என்பது முற்காலத்து வழக்கம். அதனை இப்பொழுதும் மாறோகத்தார் வழங்குவர். மாறோகம் என்பது கொற்கை சூழ்ந்த நாடு (தொல்.சொல்.ப.168) என்று கல்லாடனார் குறிப்பிட்டுள்ளார்.

பெண்மகன் என்பது அத்தன்மையாரை அக்காலம் அவ்வாறே வழங்கினாராயிற்று (தொல்.சொல்.ப.116 ) என்று நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார்.

இக்கூற்றுகளைக் காணும் பொழுது, பெண்மகளைப் பெண்மகன் என்று ஆண்பால்படச் சொல்லுகின்ற வழக்கு நிலவியது என்பதனை சேனாவரையர், கல்லாடனார் உரைகளின் வழி அறியமுடிகிறது. ஆனால், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் உரைசெய்கின்ற காலத்தில் பெண்ணைப் பெண்மகள் என அழைக்கும் பழக்கம் தான் நிலவியது அறியமுடிகிறது. எனவே, இந்நால்வருடைய கூற்றுகளை நோக்கும் பொழுது, இவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தவர்கள். எனவே, காலம் மாறமாற மொழியிலும் மாற்றம் ஏற்படுகின்றது எனத் தெளிவுபடுத்துகின்றது.

காதலர்கள் அன்பை வெளிப்படும் விதம்
காதலர்கள் தங்கள் அன்பை மெய்ப்பாட்டின் வழியாக வெளிப்படுத்துகின்றனர்.  அம்மெய்ப்பாட்டினை வெளிப்படுத்த உடல்மொழியும், குரல் மொழியும் பயன்படுகின்றன. இவ்விரு முறையில் காதலர்கள் தங்கள் சுக, துக்கங்களை வெளிப்படுத்தி அன்பை பெருக்கிக்கொள்கின்றனர்.

காதலர் கொஞ்சு மொழிகள்
    காதலர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்துவதற்கு மெய்யப்பாடுகளைப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய மெய்யப்பாடுகள் எல்லாம் கண்ணெதிரே இருக்கும் பொழுது தான் பயன்படுகின்றன. ஆனால், தற்காலத்தில் செல்லிடைப்பேசியின் வாயிலாகவே காதலர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அவ்வாறு வெளிப்படுத்தும் பொழுதினில் எல்லா மெய்ப்பாடுகளையும் வெளிப்படுத்துவது கடினமான ஒன்றாகும். எனவே, அவ்வகையான மெய்ப்பாடுகளை வெளிப்படுத்துவதற்கு கொஞ்சுமொழிகள் பயன்படுகின்றன. இம்மொழிகளின் மூலம் அன்பை வெளிப்படுத்தும் பொழுது, ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றியழைப்பதுண்டு. மேலும், அஃறிணைக்குரிய விகுதிகளைப் பயன்படுத்தி அழைப்பதும் உண்டு. இதனைப் போன்று அன்பிற்குரியவர்கள் அல்லாதவரிடம் இவ்வாறு அழைத்தால் பெரிய பிரச்சினையாக மாறிவிடும். ஆனால், அன்பின் வெளிப்பாட்டினால் அழைப்பதனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதனால் தான் காதல் கண்ணையும் மறைக்கும் என்றார்களோ? இங்கு, காதல் கண்ணை மறைப்பதன்றி மொழியையும் மறைக்கிறது எனலாம். இதனை, தற்காலத்தில் காதலர்கள் கொஞ்சிப் பேசுகின்ற பொழுது பாலீற்றினை மாற்றி அழைப்பதன்வழிக் காணலாம்.

கொஞ்சு மொழிகள்
அன்பில் ஒத்த காதலர்களின் அன்பினை வெளிப்படுத்திக் கொள்ள கொஞ்சுமொழிகள் பயன்படுகின்றன. இவ்வாறு கொஞ்சும் பொழுதினில், தங்களுக்குள்ளே புனைப்பெயர் கொண்டு விளிக்கும் வழக்கும் நிகழ்பெறுகின்றன. இவ்வாறு அழைக்கும் புனைப் பெயர்கள், காதலியையோ? காதலனையோ? மிகைப்படுத்தி விளித்தல் தன்மையில் உயர்வாகவும், உடல்தோற்றத்தின் அடிப்படையிலும் அமையப்பெறும். இவ்வாறு அழைக்கும் கொஞ்சுமொழியில் இழிவுச்சொற்களும் காணப்படுகின்றன.

    காதலர்கள் தங்களின் அன்பினை வெளிப்படுத்துவதற்கு உரையாடுகின்றனர். அவ்வாறு உரையாடும் பொழுது, எவ்வாறெல்லாம் அழைக்கின்றனர்.

    ஹலோ!
    என்னடி
என்ன
சொல்லுமா
சொல்லுப்பா
சொல்லுடி
சொல்லுடா
சொல்லமாட்டா
என்னப்பா
சொல்லுச்சுல

அம்மு
செல்லம்
கண்ணு
மம்மு
குஞ்சு
குட்டி
பப்பி
பாப்பு
குட்டிமா
அம்முக்குட்டி
செல்லக்குட்டி

மேற்கண்டவாறு காதலர்கள் கொஞ்சும் முறையினைக் காணும்பொழுதினில், தாங்கள் எப்போதும் இளமையாக இருக்கவேண்டும் என்ற அவா காதலர்களின்  மனதினில் காணப்படுகிறது. இவ்வுள்ளாசையினை இளமைப் பெயர்களால் அழைத்து நிறைவேற்றிக்கொள்கின்றனர் என எண்ணத் தோன்றுகிறது.

ஜாங்ரி
தங்கம்
சாமி
சொல்லுங்க

தங்களின் காதலியை உயர்வாகக் கருதும் காதலர்கள் பயன்படுத்துகின்றனர்.

மக்குப்பையா
லூசு
கருவாப்பையா
கருவாயன்
பன்னி
எருமை
எருமைக்குட்டி

பெண்கள் ஆண்களை மக்குப்பையா, கருவாயா, மாடு, எருமை, பன்னி என்று அழைப்பது தங்களின் கட்டுப்பாட்டின் கீழாக வைத்திருக்கும் பெண்கள் மட்டும் அழைக்கின்றனர் எனலாம்.

பொண்டாட்டி
வாடி
போடி
குட்டச்சி
கருவாச்சி
திம்ஸ்                                           
அரிசிமூட்டை

மேற்கண்டவாறு அழைக்கும் காதலர்கள் தங்களின் காதலியையோ காதலனையோ விட தன்னை உயர்வாகக் கருதிக்கொள்கின்ற மனநிலையில் இருப்பதன் வெளிப்பாடாக இவ்வாறு அழைக்கும் முறையினைக் கருதத் தோன்றுகின்றது.

காதலர்களின் பயன்பாட்டில் பாலீறுகள்
விளிப்பெயரில் இடம் பெறும் ஈறுகளில் பெண்ணிணைக் குறிக்க ‘இகர’ ஈறும் ஆணிணைக் குறிக்க ‘ஆகார’ ஈறும் பெரும்பாலான மொழிகளில் பயன்படுத்தப் படுகின்றன.

வாடி        -     இ    -    பெண்    -    தமிழ்
வாடா        -   ஆ    -    ஆண்    -    தமிழ்
பச்சா        -   ஆ    -    ஆண்    -    ஹிந்தி
பச்சி        -    இ    -    பெண்    -    ஹிந்தி
சேட்டா    -    ஆ    -    ஆண்    -    மலையாளம்
சேச்சி        -  இ    -    பெண்    -    மலையாளம்

அ) பெண்ணைக் கொஞ்சுதல்

சொல்லுப்பா
சொல்லுடா
எப்படா
வாங்கங்க
சொல்லுங்க

மேற்கண்டவற்றில் அப்பா என்பதன் சுருங்கிய வடிவமே ‘பா’ ஈறு. இவ்வீற்று வடிவத்தினை ஆணிற்கு அழைக்கவேண்டியதாகும். இவ்வடிவினை பெண்ணிற்கு வழங்கி வருகின்றனர்.

ஆ) ஆணைக் கொஞ்சுதல்

தூங்குமா
சாப்பிடுமா

அம்மா என்பதன் சுருக்கமே ‘மா’ என்னும் ஈறாகும். இவ்வீற்றினை பெண்களுக்குப் பயன்படுத்த வேண்டிய ஈறாகும். மேற்கண்டவாறு அழைப்பதில் இருந்து, ஆணிற்குள் இருக்கும் பெண்மையும் பெண்ணிற்குள் இருக்கும் ஆண்மையும் செயல்படுவதன் காரணமாக பால்மாறி அழைக்கின்றனரா? அல்லது காதலுணர்வினால் பெண்மைநிலையில் இருந்து தம்மைக்காண முயற்சிக்கிறார்களா? ஏனெனில், இவ்வுணர்வினைப் போல தம் காதலுணர்வினை திருமங்கையாழ்வார் தம்மை பெண்ணாகப் பாவித்துப் பாசுரங்கள் மூலம் வெளிப்படுத்தியதனை அறிவோம்.

    இதனைப் போன்றே தங்கள் காதலுணர்வின் உச்சத்தினை வெளிப்படுத்தவே இவ்வாறு அழைக்கின்றனறோ என எண்ணத்தோன்றுகின்றது.

பொதுப்பாலீறுகள்

    போறாப்புள    ஆப்புள
    வாராங்க    -    ஆங்க
    சிரிச்சார்    -    ஆர்

இவ்வாறு தன் காதலனையோ? காதலியையோ? குறித்து மற்றவர்களிடம் ஏதாவது குறிப்பிடும் பொழுதும், சிலநேரங்களில் தங்களுக்குள்ளே உரையாடும் பொழுதும் இத்தகைய பொதுப்பாலீறுகளைப் பயன்படுத்துகின்றனர். தற்காலத்தில் உறவுப்பெயர்களில்,

        அக்கா வந்தது
        அம்மா வரும்
        அம்மா இருக்கிறது
        அம்மா இருக்கு

        அப்பா வருவார்
அண்ணன் தூங்குகிறது
        தம்பி போனது
        அப்பா இருக்கிறார்

மாமா போனார்
அத்தை வருவாங்க
        ஆசிரியர் சொன்னார்

இங்கு, உயர்திணையில் அழைக்கவேண்டிய பெயர்கள் அஃறிணையில் அழைக்கின்றனர். இங்கு எல்லாரையும் இவ்வாறு அழைப்பதில்லை. ஒரே குடும்பத்தில் உள்ள உறவுமுறைப் பெயர்களையே இவ்வாறு அழைக்கின்றனர். அத்தை, மாமா, ஆசிரியர் போன்றவர்களுக்குரிய உயர்திணைப் பாலீற்றினிலேயே அழைக்கின்றனர். அதனைப் போலவே காதலுணர்வினால் உந்தப்பட்டு நெருங்கியவர்கள் இவ்வாறு திணை, பால் மாற்றியழைக்கின்றனர்.

முடிவுரை
இதன்வாயிலாக மொழி மாற்றத்தினை ஏற்படுத்தும் காரணிகளில் காதலும் ஒன்றாக உள்ளது என்பது புலப்படுகின்றது.

துணைநின்றவை
இளவரசு சோம        -     நன்னூல், மணிவாசகர் பதிப்பகம், 2006, சிதம்பரம்.
இஸ்ரேயல் மோ        -    இலக்கண ஆய்வு பெயர்ச்சொல், சிந்தாமணி வெளியீடு,  மு.ப.1976, மதுரை - 625 019.
கல்லாடனார்     (உ.ஆ.)    -    தொல்காப்பியம் - சொல்லதிகாரம், தமிழ்மண் பதிப்பகம், 2003, தி.நகர், சென்னை – 17.
சேனாவரையர் (உ.ஆ.)    -    தொல்காப்பியம் - சொல்லதிகாரம், கழக வெளியீடு, 2001,சென்னை -18.
தெய்வச்சிலையார் (உ.ஆ)    -    தொல்காப்பியம் (சொல்லதிகாரம்), நிழற்படப்பதிப்பு.1984, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
நச்சினார்க்கினியர்(உ.ஆ.)    -    தொல்காப்பியம் – சொல்லதிகாரம், சாரதா பதிப்பகம், 2009, சென்னை-14.
Hockett, Charles F        -    A Course in Modern Linguistics, The Macmillan Company, New York,1958


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R