"(கோல்) கால் " துறைமுகம் ( யூனெஸ்கோவினால் அமெரிக்காவின் ஏழு அதிசயங்கள் ஒன்று என பதியப்பட்டிருக்கிறது )
வீட்டை அடைந்த பிறகு , தில்லை மறுபடியும் தேனீர் அருந்தினான் . ஜெயந்திக்கும் , பூமலருக்கும் ரிம் கொட்டனே போதுமாகவிருந்தது .
வீட்டிலே , பூமலர் செய்திருந்த ' கோழிக்கறி ' பழைய நினைவு ஒன்றைக் கிளறி விட்டது . ஜெயந்தியும் " நல்லாயிருக்கிறதே " என்று ரெசிபியைக் கேட்டாள் . தில்லை " இப்படி உருளைக் கிழங்கு கறியையும் வைத்தால் ...தூக்கலாக இருக்கும் " என்றான் . " இதுக்கு எப்பவும் சாப்பாட்டு நினைப்பு தான் " என்று ஜெயந்தி சொல்ல பூமலர் சிரித்தாள் . யாழ்ப்பாணத்து பிளவுஸ் , மொக்கங் கடைகளில் ரோஸ்ட் கறிகளில் இந்த உப்பும் , உறைப்பும் அப்படியே இருந்தது . " முதல் நாள் மெரினேற் பண்ணி குளிர்ப்பெட்டியில் வைத்து காலையில் எடுத்து சமைக்க வேண்டும் . இங்கே என் சினேகிதி ஜீவி நல்லா சமைப்பார் . அவர் தான் சொல்லித் தந்தார் . இப்படி வைத்தால் சித்திராவும் , சுமியும் உடனேயே முடித்து விடுவார்கள் . திரேசாவின் பிள்ளைகளுக்கும் பிடிக்கும் " என்றாள் .
சிறிது நேரம் இளைப்பாறிய பிறகு , " களைப்பு இல்லை என்றால் பக்கத்தில் இருக்கிற ஒன்றை பார்த்து வரலாமே ". என்றாள் பூமலர் . " இரண்டு மணி நேரம் ஓடி கலைத்திருப்பாய் , நான் ஓடுகிறேன் " என்று தில்லை கூற (கார் ஓட்டம் ) பூமலர் தில்லையிடம் . சாவியைக் கொடுத்து கராஜ் கதவைத் திறந்து விட்டாள் . குறுக்கலான நிலைகளைத் தட்டிக் கொள்ளாமல் , ஒரு கட்டத்தில் பக்கக் கண்ணாடி ஒன்றை மடித்து விட்டே பிரயாசைப்பட்டு வெளியில் எடுத்தான் . " இந்த கண்ணாடியை மடிக்கலாம் என்று எனக்கு தெரியாதே " ....என்று வியக்கிறாள் . அரும்பொட்டு இடைவெளியில் கராஜ் கதவுகளை ஏன் அமைக்கிறார்கள் . பழைய கார்கள் தற்போதைய காரை விட அகலத்தில் குறந்தவையா இருக்க வேண்டும் . அப்ப இருந்த கட்டட விதியை ( பில்டிங் கோட்) மாற்றாமல் விட்டு விட்டார்கள் போல இருக்கிறது . இப்படியும் ஒரு ரோதனை . . வழி காட்ட செலுத்துகிறான் .
வழியில் , " சித்திராவும் , சுமியும் படித்த பள்ளிகூடம் இது ! " என்று காட்டினாள் . சிறிது தூரம் சென்ற போது " நீச்சல் வகுப்பிற்கு இங்கே வருவோம் " என்று ஒரு கட்டிடத்தைக் காட்டினாள் . " நீ நீந்துவாயா ? " என்று தில்லை அவளைக் கேட்டான் . " அவர்கள் நீந்துறதை மட்டும் பார்ப்பேன் " என்று சிரித்தாள் . " நீயும் பழகி இருக்க வேண்டும் " என்றான் தில்லை . " இவயள் பழக்கிறேன் என்று கலவரப் படுத்தினாள்கள் . வேண்டாம் என விட்டு விட்டேன் " என்றாள் . ஒரு இயல்போட்டம் எதிலும் இருக்க வேண்டும் . இல்லாட்டி கஸ்டம் தான் . இனப்பிரச்சனை தமிழரின் அத்தனையிலும் இயல்போட்டத்தைக் குழப்பி விட்டிருக்கிறதே . " கர்மமக்காரர்கள் , நீண்ட காலம் இருந்து அனுபவிக்கப் போறார்கள் " . மகாபாரதத்தில் கிருஸ்ணர் , அஸ்வத்தாமனுக்கு இட்ட சாபம் போல தில்லையினுடையதும் இருக்கிறது . இலங்கையின் வடக்கு , கிழக்கை பல தடவைகள் எரித்து விட்டவர்கள் . அதை விடவா இது பெரியது , என்ன , அனுபவிக்கட்டும் .
" சித்திரா , உவள் நல்ல நீச்சல்க்காரி . இப்படியே பழகி ...இருந்தால் ஒலிம்பிக்கிலே சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் . சுமியும் கால்பந்து நல்லாய் விளையாடுவாள் . எது தான் நேர்...கோட்டில் சென்றிருக்கிறது . ஈடுபடுறதை விட்டு விட்டார்கள் " . பெற்றோர் இரவு நேரங்களில் கொண்டு வந்து விட்டு இறக்கி .., நின்று பிறகு கூட்டிச் செல்ல வேண்டும் . நிற்கிற பெற்றோர்களுடையேயும் சந்திப்பு நிகழ்கிறது . கனடா அம்மாவாக இருந்தால் பூமலர் இந்நேரம் நீச்சலைக் கற்றுக் கொண்டிருப்பாள் . படிச்சவர்களால் நீச்சலைக் கற்றுக் கொள்ள முடியாதிருக்கிறது ஏன் ? இது விகடன் பகிடி போல இருக்கிறது . பெரிய பாரங்களைத் தூக்கிற பயில்வான் , வீட்டிலே தட்டிலே சோறு சாப்பிடுற போது ஒரு சிறுகல் பல்லில் கடிபட்டு விடுகிறது . தாம் தூம் என துள்ளிக் குதிக்கிறான் . அந்த கேலிச்சித்திரமே நினைவில் வருகிறது . முடியாதது என்று ஒன்றுமில்லை . என்ற நெப்போலியனைப் போல முடிக்க வேண்டும் . ஆண் , பெண் எல்லாருக்கும் இது பொது தான் .
இங்கும் இலவசக் கல்வி தான் . ஆனால் பெற்றோர் சமூக வகுப்புகளிற்கு கூட்டிச் செல்லல் போன்ற இதரச் செலவுகள் இருக்கின்றன . காரின் எரிபொருள் விலை தணிவாக இருக்க வேண்டும் . ஏற விட்டார்கள் என்றால் மக்களின் தோள் மீது சுமை எறி விடுகிறது . உக்ரேன் போரை ஏற்படுத்தியது இவர்களது முட்டாள் தன அரசியலையே வெளிப்படுத்தி நிற்கிறது . ( நியாயப்படுத்த என்ன பேச்சு பேசினாலும் அது வேஸ்ட் தான் ) .
" பயிற்சிக்கு வந்து விட்டால் முடிய நேரம் பிந்தி விடும் . இருளில் வீதிகளில் மின்சார விளக்குகள் கிடையாது வாகன வெளிச்சத்தில் செலுத்த வேண்டும் . இருட்டிலே எப்படி வீதி யை தவற விடாமல் சரியாய் ஓட முடிகிறது " தில்லை கேட்டான் . " ஓடி , ஓடி மனதில் பாடமாகி விட்டது " . " வாகனத்தில் ஓடுற போது இரண்டும் சண்டை பிடித்துக் கொண்டே வரும் . மத்தியஸ்தம் செய்து வைப்பதிற்குள் தலை வெடித்து விடும் . சிலசமயம் இரண்டும் சொல்லி வைச்சு கொண்டு சண்டை பிடித்து விட்டு , நான் கத்த சிரிக்கும்கள் . பத்திக் கொண்டு வரும் . வீதியைப் பார்த்து ஓடுவது ...படு திண்டாட்டமாகி விடும் " என்றாள் . " இப்ப வேலையில் சேர்ந்தும் விட்டார்கள் . ரொரொன்ரோவில் இருக்கிறவர்கள் . 10 , 15 நாள்கள் லீவு எடுத்துக் கொண்டு வந்து என்னுடன் நின்று விட்டு போகிறார்கள் . சித்திரா அவளுடை ரூமிற்கு அவளே பெயின்ற் பண்ணி இருக்கிறாள் . சுமி திருத்தல் வேலைகளில் கெட்டிக்காரி . எல்லா வேலையும் செய்து விட்டு தான் போவாள் .இங்கே வந்தால் பழம் பறிக்க , அங்கே .., இங்கே என்று போய்யும் வருவோம் . இப்ப அவர்கள் தான் ரைவர்கள் . தூரத்தில் இருப்பதால் இந்த வீட்டை வித்துப் போட்டு அங்கேயே வருவோம் என்றிருக்கிறேன் " என்றாள் . சுபமாக முடிந்து விட்டால் நிறைவு தான் . இலங்கை அரசியலும் அப்படித் தான் .
அப்படியே வீதிக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டு கால் துறைமுகத்தை அடைந்து விட்டார்கள் . துறைமுகத்தினுள் ஈரமண் தெரிய படகுகள் , ரோலர் போன்ற பெரும் படகு ஒன்றும் மண்ணில் சிறிது புதைந்திருக்க நிலத்தில் வாய்க்கால் ஒன்றும் நீருடன் இருந்தது . ஓரிருவர் அந்த மண்ணில் நடக்கவும் செய்தார்கள் . பார்த்த மாத்திரத்தில் அது கை விடப்பட்ட துறை போல தெரிந்தது . அராலித் துறையில் பாதை கண்டு ஓட வேண்டும் என்று சொல்வார்கள் . அது தான் இந்த வாய்க்கால் போல . " என தில்லை நினைத்தான். எலும்புக்கூடு போல கரையிலிருந்து கடலுக்குள் வருகிற ஒரு மரச்சட்டகப் பாதை ஒன்று , அதன்கீழே இருக்கிற உள்ளீட்டில் பாரமான கல் , மரக்குற்றிகள் போடப்பட்டு கிடப்பது தெரிந்தது. சிறிய பேசின (தேக்கம்) போல இருந்த துறையை கிளிக் பண்ணி செல்லில் அடக்கிக் கொண்டான் . லொப்ஸ்டர் பொன்ட் என்ற எழுத்துகளுடன் பழமை மிளிரும் முழுதும் மரத்தாலான ஒரு பெரிய உணவகம் வீதீயிருந்து துறையோடு சேர எழுப்பப்பட்டிருந்தது. சுற்றுலா வருகிற பயணிகள் அங்கே தங்கி இருப்பார்கள் என நினைத்தான் . வீதியிலும் உள்ளேயும் என அங்கொன்றும் , இங்கொன்றுமாக பச்சை ,மஞ்சள் ,சிவப்பு , நீலம் என வர்ணங்களில் கட்டிய வீடுகள் மலைப் பாங்கான நிலத்தில் அழகாக இருந்தன . மாலை மங்கிக் கொண்டிருந்தது .
பூமலரின் மூத்தவள் , சித்திரா " அன்ரி , எங்கே போனாலும் குளிருக்கு சுவேட்டரையும் , மப்ளரையும் எடுத்துச் செல்ல மறந்து விடாதீர்கள் " என்று சொல்லியே இருந்தாள் . விமான நிலையத்திற்கு வெளியில் வந்த போதும் , வீட்டில் இருந்த போதும் குளிரவில்லை . எச்சரிகை விட்டு விட்டது . மாலையானால் வெப்பநிலை வேறு சிறிது குளிரும் . இவர்கள் அவ்விடத்தில் இப்ப கூதலை உணர்ந்தார்கள் . பூமலர் எப்பவும் வாகனத்தில் ஒரு போர்வையை போட்டு வைத்திருப்பவள் . அவளுக்கும் . சட்டென ஞாபகம் வரவில்லை . இங்கே கடைசியாய் வந்தது எப்ப இருக்கும் ?. அவளும் மறந்திருப்பாள் . துறைமுகத்தின் மறுபகுதி , இறங்கி பீச் ஆகிறது . உயரமான கரையில் போடப்பட்டிருக்கிற பாறைக் கற்களில் நின்று சூரியன் மறைவைப் பார்த்து விட்டு செல்வது என்பதே தீர்மானம் .
ஒன்ராரியோவில் , சூரியன் உதிக்கிறதையும் , மறையிறதையும் பார்க்கவே முடியாது . சந்திரன் , எட்டி மட்டுமே பார்ப்பான் . எனவே , இங்கே வந்து பார்க்கிறதுக்கு விரும்பினார்கள் . நட்சத்திரம் பார்க்கிறதுக்கு என்றும் கூட இங்கே ,ஒரு பார்க் ( பகுதி) இருக்கிறது . கூதல் கூடுதலாகி பல்லு கிடுகிடுக்க தொடங்கி இருந்தது . நோவாகோர்ஸியாவிலுள்ள மற்றப் பகுதிகளை விட இவ்விடம் அலைகளோடு , பருவப்பெயர்ச்சி...போல ஒரு காற்றும் வருவதால் குளிராக இருக்கிறது . இதை எல்லாம் யார் தெரிந்து வைத்திருக்கிறார்கள் . சொல்லி இருந்தாலும் , கூட பள்ளிப்பாடம் போல மண்டையில் நிற்கவா போகிறது ? .
ஆனால் , அன்று சூரியனுக்கு அவர்களை பிடிக்கவில்லை . சிவப்பு பந்தாகி கடலுக்குள் இறங்கிய போது வெள்ளை புகார் மேக வேட்டியைக் கட்டிக் கொண்டு நிற்கிறது . நின்று , நின்று பார்த்தார்கள் . கடலுக்குள் விழவே இல்லை . ஜெயந்தியின் ஆசை நிறைவேறவில்லை . குளிர் வேற வாட்டியது ." அதிருஸ்டம் இவ்வளவு தான் ! , வீட்டிற்கு போவோம் " என்றாள் பூமலர் . வாகனத்தில் ஏறினார்கள் .
கால் துறைமுகத்திலிருந்து திரும்பும் போது ஒரு சிறு வழ ,வழப்பான கல்லையுமெடுத்து வந்திருந்தான் . உடம்பை தேய்த்துக் குளிக்க உதவலாம் . ஜெயந்தி , காயத்திரியை ஒவ்வொரு முறை குளிப்பாட்டுற போதும் விரல்களால் தேய்த்து தேய்து ஊத்தை அகற்றி அவளோடு கதைத்துக் கொண்டு நன்றாகக் குளிப்பாட்டுவாள் . பார்த்து கொண்டு நிற்பான் . காயத்திரி , சந்தோசமாக சிரிக்கும் . அந்த கல்லு உதவவில்லை . ஞாபகர்த்தமாக வைத்திருக்கிறான் .
அடுத்த நாள் , பூமலரிற்கு அயல் வீட்டு சினேகிதி தெரேசா தொலைபேசியில் அழைத்தாள் . " உங்களுடைய விருந்தினர்களை வந்து ஒரு தடவை பார்க்க வேண்டும் " என்றவள் , " நேற்று ஜேம்ஸ்க்கு பிறந்த நாள் . நண்பர்களுடன் ஒருநாள் முழுதும் லொப்ஸ்டர்பொன்ட் உணவகத்திலே இருந்து கொண்டாடினான் . நீர் மட்டம் உயர்வதையும் பார்த்தான் . அது ஒரு திரில்லான அனுபவமாக இருக்கும் . வீட்டிலே அது தான் ஒரே கதை . கொரோனாவிற்குப் பிறகு திறந்ததால் அரைவிலைக் கட்டணம் . ஜேம்ஸ் சந்தோசமாக கொண்டாடி இருக்கிறான் " என்றாள் . பொன்ட் என்று பல சிறிய நீர்த்தொட்டிகள் கட்டி வைத்திருக்கிறார்கள் . அதிலே ரோலரில் வருகிற லொப்ஸ்டர்களை உயிருடனே போட்டு வைக்கிறார்கள் . டூரீஸ்டுகள் வரும் பொழுது அதை கையில் எடுத்து லொப்ஸ்டர் பற்றிய விளக்கமும் கொடுக்கிறார்கள் . அது பிரபலமான உணவகம் . இரவிலே , நீர் அறுபது அடி உயரம் வரையில் உயர்ந்து துறைமுகத்தை நிறைத்து விடுகிறது . அதைத் தான் ஜேம்ஸ் பார்த்திருக்கிறான் . நீர் இருக்கிற போது ரோலர் படகு வந்து லொப்ஸ்டர்களை கொட்டுகிறது . பின் மண்ணில் புதைபட கிடக்கிறது . திரும்ப நீர் நிறைகிற போது கடலுக்குச் சென்று விடுகிறது . மீன்பிடிகாரர்கள் தான் இதற்கு இசைவாக்கம் அடைய வேண்டியிருக்கிறது . ஃபண்டி பேயில் இந்த பிரச்சனை நெடுக இருக்கிறது . மற்ற பகுதிகளில் ..... இல்லை என்றே தோன்றுகிறது . அந்த கால் துறைமுகம் பாழடைந்திருக்கவில்லை . உயிர்ப்புடனே இருக்கிறது . பூமலர் கூற தெரிய வருகிறது .
தெரேசாவிற்கு கடைசி அவன் . அவனை விட வேறு நான்கு பெண் பிள்ளைகளும் இருக்கிறார்கள் . சித்திரா , சுமியோடு சகோதரங்களாக பழகிறார்கள் . போனிலே பேசிய பிறகு அவர்களைப் பார்க்க உடனேயே வந்தாள் . சிறிது நேரம் இருந்து கதைத்து விட்டு சென்றாள் . எல்லா பிள்ளைகளுக்கும் வீட்டிலே வைத்து அவள் தான் ஆசிரியையாய் இருந்து சொல்லிக் கொடுத்திருக்கிறாள் . அப்படி படிப்பிக்கிறதை வீட்டுப்பள்ளிகூடம் என்பார்கள் . ஐரோப்பாவில் , பெரும் ஏக்கர் கணக்கில் செய்கை செய்யும் வவசாயிகள் அப்படித் தான் ....படிப்பிக்கிறார்கள் . பெண்களை நல்லாய் படிக்க வைக்கிறார்கள் . ஆசிரியராக இருக்கிறதுக்கு தகுதி வேண்டும் . தெரேசா படித்தவர் . மாகாணவரசு அதற்கான சிலபஸ் , பரீட்சை வைப்பது என ...பல கவனிப்புகளைச் செய்கிறது . பல்கலைக்கழகங்களுகுச் சென்று தான் படிக்க வேண்டும் . பெண் பிள்ளைகள் எல்லாம் பல்கலைகழகப்படிப்பை முடித்து வேலையில் இருக்கிறார்கள் . ஜேம்ஸுக்கு விவசாயப் பண்ணை வைக்கிறது தான் கனவு . இப்படியான முறை ஒன்ரோரியோவில் இருப்பதாகத் தெரியவில்லை .
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.