சிறுகதை: கனவுகள் ஆயிரம்! - முருகபூபதி -
- எழுத்தாளர் முருகபூபதியின் முதலாவது சிறுகதை. 1972 ஜூலை மாதம் '[மல்லிகை'யில் வெளியானது.
நீர்கொழும்பு கடற்கரையோரம்.
பேரிரைச்சலுடன், அலைகள் எகிறி விசிறிக்கொண்டு ஆவேசமுடன் – தாயை நோக்கி ஓடிவரும் சிறு குழந்தையைப்போல, அம் மோட்டார் எஞ்சின் பொருத்திய தெப்பங்கள் கரையை நோக்கி நெருங்குகையில்…. அப்பெருத்த ஒலி ஊளைச்சத்தம் போல் எழுந்து ஓய்கிறது.
கரையில் மோதும் அலைகளால் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படும் தெப்பங்களும் போட்டுகளும் – அந்த தினமும் சுறாமீனும் பொடி மீனும் சாப்பிட்டதாலும் அச்சாப்பாட்டுக்காகவே உழைத்ததாலுமே மெருகேறியிருந்த கருங்காலி நிறத்து மீனவர்களது கரங்களால் கட்டுப்படுத்தி நிறுத்தப்படுகிறது.
“ செவஸ்தியான் புறகால புடிடா… ம்… ஏலோ….ம்…. ஏலோ…ம்ம்… மத்த அலை வரட்டும், ஆ… வந்திட்டுது… பிடி… ஏலோ…. “ தெப்பத்தின் ஒரு முனையை பிடித்தபடி மணலுக்கு இழுத்து நிறுத்த முயற்சிக்கும் பணியில் பெரும் பலத்தோடு இப்படி கத்துகிறான் அந்தோனி.
கடல்தாயின் அச்செல்வக்குழந்தைகள் மடியைவிட்டு கரையில் இறங்கின. அந்த மீனவர்களது கரங்களும் தோள்களும் என்னமாய் இயங்குகின்றன.! தினவெடுத்த தோள்களின் பலத்தை பார்க்கையில் , கணத்தில் பத்துவயதுச்சிறுவன் இருபது வயதுக்காளையாகி வேலை செய்யும் பக்குவம் அது.
நடு இரவில் தொழிலுக்குப்போகும் மீனவர்கள் மறுநாள் முற்பகலில் கரைக்குத் திரும்புவார்கள். தெப்பங்களையும் எஞ்சின் பொருத்தியுள்ள போட்டுக்களையும் கரைக்கு இழுத்து மணல் மேட்டுக்கு கொண்டு வருவதில் அம்மீனவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பர்.
ஏனெனில் அவர்கள் ஒரே வர்க்கத்தினர் அல்லவா…!
வலையில் சிக்கியிருக்கும் பொடி மீன்களை சற்றுப்பெரிய மீன்களை தரம்பிரித்துப்போடும் வேகமான செயல்பாட்டு அழகு அப்பரம்பரைக்கே உரித்தான பாணிபோலும்.