பேராசிரியர் அ.ராமசாமியின் புலம்பெயர் தமிழர்தம் எழுத்துகள் பற்றிய கூற்றுகள் பற்றிச் சில கருத்துகள்! - வ.ந.கிரிதரன் -
பேராசிரியர் அ.ராமசாமியின் 'அ.ராமசாமி எழுத்துகள்' வலைப்பதிவில் புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றி, இணைய இதழ்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் பற்றிச் சில கருத்துகளைக் கூறலாமென்று கருதுகின்றேன். புலம்பெயர் தமிழர்களின் ஆரம்பகாலப் படைப்புகளைப்பற்றி அவர் கூறுகையில் பின்வருமாறு கூறியுள்ளார்:
1. "தமிழின் தொடக்க நிலையில், புலப்பெயர்ந்த எழுத்தாளர்களின் புனைவுப் பனுவல்கள் அவர்களின் வாழிடத் தேச அடையாளங்கள் எதுவும் இல்லாமலேயே வெளிப்பட்டன. எழுதியவர்களின் உடல்கள் புலம்பெயர் நாடுகளில் - ஐரோப்பிய/ஆஸ்திரேலிய/ கனடிய நாடுகள் - ஏதாவதொன்றில் இருந்தபோதிலும் மனம் முழுவதும் இலங்கையில் தமிழர்கள் வாழும் பரப்பிலேயே இருந்தன."
2."புலம்பெயர் நாடுகளிலிருந்து அச்சிடப்பெற்ற சிற்றிதழ்களிலும், அந்தந்த நாடுகளில் தொடங்கப்பட்ட அமைப்புகளின் தொகைநூல்களிலும் வந்த கவிதைகளிலும் புனைகதைகளிலும் அவர்கள் எந்த நாட்டில் வாழ்கிறார்கள் என்ற பின் குறிப்புகள் மட்டுமே புலம்பெயர் அடையாளங்களாக இருந்தன. "
இவற்றில் முதற் கூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள 'தமிழின் தொடக்க நிலையில், புலப்பெயர்ந்த எழுத்தாளர்களின் புனைவுப் பனுவல்கள் அவர்களின் வாழிடத் தேச அடையாளங்கள் எதுவும் இல்லாமலேயே வெளிப்பட்டன.' என்னும் கூற்றினையும், இரண்டாவது கூற்றிலுள்ள 'கவிதைகளிலும் புனைகதைகளிலும் அவர்கள் எந்த நாட்டில் வாழ்கிறார்கள் என்ற பின் குறிப்புகள் மட்டுமே புலம்பெயர் அடையாளங்களாக இருந்தன' என்னும் கூற்றினையும் என்னால் ஏற்க முடியவில்லை. இம்முடிவுகளுக்கு அவர் எவ்விதம் வந்தார் என்பதற்குரிய ஆதாரங்களை முன் வைக்க வேண்டும். அதற்கு அவர் ஆரம்பகாலப் படைப்புகளை உதாரணங்களாக முன் வைத்து ஏன் அவை 'வாழிடத்தேச அடையாளங்கள்' எவையுமில்லாமல் வெளிவந்தன ' என்னும் அவரது கூற்றை நிரூபிக்க வேண்டும்.