இலங்கை மலையகத் தமிழ் இலக்கியத்தின் குறியீடுகளில் ஒருவராக விளங்கிய எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் (சந்தன்சாமி ஜோசப்) மறைந்து விட்டார். பதிவுகள் , பதிவுகள் வாசகர்கள் மற்றும் என் சார்பில் ஆழ்ந்த இரங்கல்.
விருதுகள் பலவற்றைத் தனது எழுத்துக்காகப் பெற்றவர். கடந்த 62 வருடங்களாக இவர் எழுதிக்கொண்டிருந்தார். இவரைப்பற்றிய அறிமுகத்தில் விக்கிபீடியா பின்வருமாறு கூறுகின்றது:
"தெளிவத்தை ஜோசப் இலங்கையின் மலையகத்தில் பதுளை மாவட்டம், ஹாலி எல்ல இற்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் பிறந்தார். மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு மீண்டும் இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். இவர் ஆரம்பத்தில் தெளிவத்தை என்னும் தோட்டத்தில் ஆசிரியராக இருந்தவர். இதன் காரணமாகவே தனது பெயருடன் தெளிவத்தையையும் இணைத்துக் கொண்டார்."
தெளிவத்தை ஜோசப் என்றதும் என் ஞாபகத்துக்கு வரும் முதல் நினைவு என் பால்ய காலத்தில் பார்த்த 'மித்திரன் வாரமலர்' பிரதிதான். அப்பொழுதுதான் மித்திரன் வாரமலராக, அதிக பக்கங்களுடன், ஆக்கங்கள் பலவற்றுடன் , அத்தர் மணம் கமகமக்க வெளிவரத்தொடங்கியிருந்தது. அதன் முதலாவது இதழில் வெளியான முதலாவது தொடர்கதையாக தெளிவத்தை ஜோசப்பின் தொடர்கதையொன்று ஆரம்பமாகியிருந்தது இன்னும் நினைவிலுள்ளது. அதனைத்தொடர்ந்து யாழ்நங்கை (அன்னலட்சுமி இராஜதுரை) அவர்களின் தொடர்கதை வெளிவந்ததது.
வீரகேசரி அறுபதுகளில் நான்கு முறை நடத்திய மலையகச் சிறுகதைப்போட்டிகளில் பரிசு பெற்ற முதல் மூன்று சிறுகதைகளைத் தொகுத்து ,மொத்தம் 11 சிறுகதைகள் ( பரிசு பெற்ற சிறுகதைகளில் ஒன்று உரிய நேரத்தில் கிடைக்காததால், தொகுப்பில் இடம் பெறாததால்) 'கதைக்கனிகள்' என்னும் பெயரில் சென்னையிலிருந்து இளவழகன் என்னும் பதிப்பகம் வெளியிட்டிருந்தது. தொகுப்பாசிரியர் அண்மையில் மறைந்த எழுத்தாளர் எஸ்.எம்.கார்மேகம். இப்போட்டிகளில் இருதடவைகள் தெளிவத்தை ஜோசப் முதற் பரிசு பெற்றுள்ளார். அவரது 'பாட்டி சொன்ன கதை', 'பழம் விழுந்தது' ஆகிய கதைகளே அப்பரிசு பெற்ற சிறுகதைகள்.
இவற்றில் 'பாட்டி சொன்ன கதை' காவேரியையும் , அவளது பாட்டியையும் என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை. இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சிறந்த சிறுகதைகளிலொன்றாக இச்சிறுகதையினை அடையாளம் காண்கின்றேன். படுக்கப்போகும் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் கதையினூடு, தன் காதலனுடன் சல்லாபிக்கச் செல்லவிருக்கும் பேத்தி காவேரிக்கும் அறிவுரையிருக்கும். அந்த அறிவுரை எப்படி பேத்தியின் மனத்தினை மாற்றுகின்றது என்பதுதான் கதை. இக்கதையினூடு தோட்டத் தொழிலாளக் குடும்பங்களின் நிலையும் நெஞ்சினைத் தொடும் வகையிலும் விபரிக்கப்பட்டிருக்கும். ( இக்'கதைக்கனிகள்' தொகுப்பினை நூலகம் தளத்தில் வாசிக்கலாம் - https://noolaham.net/project/137/13601/13601.pdf ) ஆனால் இச்சிறுகதை நற்றிணை பதிப்பகத்துக்காக எழுத்தாளர் ஜெயமோகன் தொகுத்த தெளிவத்தை ஜோசப்பின் 'மீன்கள்' தொகுப்பில் இடம் பெறவில்லை. இடம் பெற்றிருக்க வேண்டுமென்பது என் கருத்து. இச்சிறுகதைக்கு இன்னுமொரு முக்கியத்துவமும் உண்டு. அது இச்சிறுகதை மூலமே எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்கள் எழுத்துலகில் காலடி எடுத்து வைத்தார் என்பதுதான். ஜெயமோகன் அவர்கள் தெளிவத்தை ஜோசப்பை கோசங்களற்ற முற்போக்கு எழுத்தாளராக அடையாளம் காண்பார்.
இதன் பின்னர் வீரகேசரி பிரசுரமாக அவரது 'காலங்கள் சாவதில்லை' நாவல் வெளியானபோது வாங்கியிருந்தேன். எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பின் மறைவுச் செய்தி இவற்றை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தது.
எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பை நினைவு கூரும் இத்தருணத்தில் அவரது 'குடை நிழல்' சிறுநாவலுக்கு நான் எழுதியிருந்த விமர்சனக் குறிப்பினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
(பதிவுகள்.காம்) தெளிவத்தை ஜோசப்பின் 'குடை நிழல்' - வ.ந.கிரிதரன் -
அண்மையில் நான் வாசித்த குறிப்பிடத்தக்க நூல் ஒரு புதினம். அளவில் சிறியதென்றாலும் கூறும் பொருள் கருதிப்புறக்கணிகக் முடியாதது. அதன் பெயர் 'குடை நிழல்' . எழுதியவர் இலங்கையின் பிரபல எழுத்தாளர்களிலொருவரான தெளிவத்தை ஜோசப் அவர்கள். . இந்நூலானது 'எஸ்.கொடகே சகோதரர்கள்' பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. மலையகத்தமிழ் இலக்கியத்துக்கு, இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு, உலகத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் படைப்புகளை வழங்கிய, வழங்கும் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களின் இந்நாவல் பற்றி ஆசிரியரே நூல் முன்னுரையில் பின்வருமாறு கூறுவார்:
"அரசியல் பலம் என்கின்ற ஒரே காரணத்தை முன்வைத்து வடக்கு கிழக்கு தீவிரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்துகின்றோம் என்கின்ற போர்வையில் சிறுபான்மை இனங்களின் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற அராஜகங்களை பதிவு செய்து வைக்கின்ற ஒரு முயல்வே இந்த நாவல். சம்பவங்களின் கோர்வுடனான ஒரு காலக்கட்டத்தின் சரித்திரம் இது."
உண்மையில் ஆசிரியர் இவ்விதம் கூறியிருந்தாலும், இந்நாவலானது போர்காலச்சூழலில் கொழும்பு போன்ற பகுதிகளில் நிலவிய பதட்டம் நிறைந்த சூழலில் ,தமிழரென்ற ஒரே காரணத்துக்காகச் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு மலையகத்தமிழனின் அனுபவத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்டிருந்தாலும் , நாவலானது கொழும்பில் நிலவும் வாடகை வீட்டுப் பிரச்சினையை, மலையகத்தோட்டங்களில் நிலவிடும் தோட்டக்கங்காணிமாரின் ஆதிக்கத்தால் விளையும் பிரச்சினை என்பவற்றையும் விரிவாகவே பதிவு செய்திருக்கின்றது. அந்த வகையிலும் இந்நூல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவிருக்கின்றது. அன்று இவ்விதம் கைது செய்யப்பட்ட அப்பாவித்தமிழர்கள் யுத்தம் முடிந்த ஆண்டுகள் பல கடந்த இன்றைய சூழலிலும் சிறைகளில் நீதி மறுக்கப்பட்டு வாடுவது மிகவும் துயரகரமானது. இன்றும் மானுட உரிமைகளை மீறுவதற்கு வழி வகுக்கும் 'பயங்கரவாதத் தடைச்சட்டம்' அமுலில் இருப்பதும் துரதிருஷ்ட்டமானது.
ஆசிரியர் நூலுக்கு வைத்துள்ள தலைப்பும் இலக்கியச்சுவை மிகுந்தது. அது பற்றியும் நூலின் முன்னுரையில் அவர் இவ்விதம் கூறுவார்:
"குடை நிழலில் இருந்து
குஞ்சரம் ஊர்ந்தோர்
நடை மெலிந்தோரூர்
நன்னினும் நன்னுவர
என்கின்ற பழந்தமிழ்ப் பாடல் குறிக்கும் குடையின் நிழலில்தான் இந்த நாவலின் மையம். குடை நிழலில் இருந்து குஞ்சரம் ஊர்வோர் யாராக இருக்க முடியும்? மன்னர்கள், அரசர்கள், அரசியல் பலத்துடனான ஆளும் வர்க்கத்தினர் என்பதன் குறியீடு இது. அந்த நிழல் தரும் குடையையும் அவர்கள் ஏறி அமர்ந்து உலாவரும் அந்தக் குஞ்சரத்தையும் பிடுங்கி விட வேண்டும் என்னும் ஆவலுடன் , முயல்வுடன் ஆத்திரத்துடன் நாவல் முற்றுபெறுகின்றது"
நாவல் இவ்விதம் முடிவுறுகின்றது:
"குடை நிழலில் இருந்து குஞ்சரம் ஊரும் இவர்களுக்கு நடை மெலிந்து நலிவுறும் எங்கள் நிலை எங்கே தெரியப்போகின்றது. அதனால்தான் சொல்கின்றோம் குடையைப் பிடுங்க வெண்டுமென்று. குடையை மட்டுமல்ல குஞ்சரத்தையும் சேர்த்து என்கின்றது மனம்"
ஈழத்துத் தமிழர்களின் அரசியல் நாவல்களில் இந்நாவலுக்குமோரிடமுண்டு. அத்துடன் விருதுகளைப்பெற்ற இந்நாவலானது 'சுபமங்களா' சஞ்சிகையில் வெளியாகி , சஞ்சிகை நின்று போனதன் காரணமாக முற்றுப்பெறாது போனதும், பின்னர் வீரகேசரி வாரவெளியீட்டில் தொடராக வெளியானதென்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.