எழுத்தாளர் செ.சுதர்சனின் காலி முகம் போராட்டம் குறித்த கவிதைகளின் தொகுப்பு 'காலிமுகம் 22' என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. கவிஞர் சேரனின் அணிந்துரையுடன் வெளியாகியுள்ள தொகுப்பினை வெளியிட்டிருப்பது அமரர் 'எஸ்.பவித்திரன் நினைவுச்சின்ன அறக்கட்டளை'. நூல் இ.பத்மநாபஐயருக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் காலிமுகத்திடலில் நடைபெற்ற மக்கள் போராட்டம் இலங்கை வரலாற்றில் மட்டுமல்ல , உலக வரலாற்றிலும் முக்கியமானது. மிகவும் செல்வாக்குடன் விளங்கிய சகோதரர்களான பிரதமரையும், ஜனாதிபதியையும் அவர்கள் பதவிகளை விட்டு ஓட விரட்டியது. அமைதி வழிப் போராட்டம் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இவ்வரலாற்று முக்கியத்துவம் மிக்க போராட்டத்தைப் பதிவு செய்வதன் மூலம் செ.சுதர்சனின் இக்கவிதைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இலக்கியப் பங்களிப்புடன், வரலாற்றை ஆவணப்படுத்தும் பங்களிப்பையும் இக்கவிதைகள் ஆற்றுகின்றன. கூடவே இலங்கையில் நிலவிய இன, மத, மொழி மற்றும் வர்க்கப் பிரிவுகளால் ஏற்பட்ட அழிவுகளையும் விம்ரசனம் செய்கின்றன. மக்கள் பிரிவகள் நீங்கி ஒன்றிணைவதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.