1
அண்மையில் வெளிவந்த நிட்டின் கோக்லேயின் பேட்டி மிகுந்த பரபரப்பை, சர்வதேச மட்டத்தில் எழுப்புவதாக அமைந்திருந்தது. பல்வேறு, மிக அர்த்தமுள்ள கேள்விகளை எழுப்பிய இப்பேட்டியானது, அண்மையில் வெளிவந்திருந்த இன்னுமொரு பேட்டியான, கவிஞர் ஜெயபாலன் அவர்களின் பேட்டிக்கு நேரெதிராக அமைந்திருந்தது, அதன் முக்கியத்துவத்தை குறித்து காட்டுவதாக அமைந்து போனது. ‘ஒன்று சேர்ந்து, கப்பலை கரையேற்றுவோம்’ அல்லது ‘ஒன்று சேர்ந்து கப்பலை காப்பாற்றுவோம்’ என்பதே கவிஞர் ஜெயபாலன் பேட்டியின் தொனிபொருளாக இருந்த போதிலும், கோக்லேயின் பேட்டியானது கப்பல் செல்ல உத்தேசித்திருக்கும் ‘திசையை’ இலை மறை காய் மறையாக காட்டி நின்றதே அதன் அடிப்படை சிறப்பு எனலாம். அதாவது ஒருபுறம் அவா – கவிஞனின் கனவு – கவிஞனின் லட்சியம். மறுபுறம், நடைமுறை யதார்த்தம்.
2
இரண்டு பேட்டிகளும், சொல்லி வைத்தாற்போல் ஜெனீவா கொண்டாட்டத்தின் இடைநடுவே வெளிவந்த போதிலும், இரண்டுமே அது குறித்து எந்த ஒரு அக்கறையும் காட்டி நில்லாது இருந்தமை பேட்டிகளின் இன்னுமொரு சிறப்பம்சம் என கருதலாம். வருடந்தோரும் வந்து போகும் சரஸ்வதி பூஜையை போல, இதுவும் கடந்த பல வருடங்களாய் வந்து போவதால் ஏற்பட்ட சலிப்பின் காரணமாகவும் இவ் அசட்டை தோன்றியிருக்க வாய்ப்புண்டு. எனினும் ஜெனீவா முன்னெடுப்புக்கான நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டு, அரங்கேற்றி கொண்டிருந்த போது ‘தினக்குரலில்’ அடுத்தடுத்து வந்த இரு செய்திகள் ஓரளவில் திகைப்பை தருவனவாக இருந்தன. ஒன்று ‘26 வருடங்களாய் போராடிய இன்னொரு தாய் (விக்னேஸ்வரன் வாகீஸ்வரி) நீதி கிடைக்காது மரணமானார்’ என்பதும் ‘மனித உரிமை பேரவை தலைவரை பீரிஸ் சந்தித்தார்’ என கூறி பீரிஸ் அவர்கள், மனித உரிமை பேரவை தலைவருடன் கைகுலுக்கி கொண்டிருக்கும் காட்சி படத்துடன் வெளிவந்தது (17.06.2022). இது, விடயங்களின் சாராம்சத்தை கூறுவதாய் அமைந்து போனது.
இம்முரண்பட்ட செய்திகள், மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்ட அதே நிலையிலேயே, இவ் ஜெனீவா இழுபறிகளின் இடைநடுவே, வருஷாவருஷம் வந்து போகும் சரஸ்வதி பூஜை கொண்டாட்டங்களும் வந்து சேர்ந்தன. இது, தொடர்பில் கனேடிய பிரதமர் பூசைக்கான தமது வாழ்த்தை தெரிவித்தார் என்ற செய்தியும் சேர்ந்து வந்தது (22.09.2022).
- கவிஞர் ஜெயபாலன் -
அதாவது, விடயங்கள் எப்படி இருந்த போதிலும், பூசை காலங்களில் சுண்டலை மறக்க கூடாது என்ற சர்வதேச யதார்த்தம் சர்வதேச அரசியலின் அச்சாணி வேராகின்றது.
இதனாலோ என்னவோ, சொல்லி வைத்தாற் போல், வருடத்திற்கு வருடம், ஈழத்தமிழரை பொறுத்த வரை, தன் ஆரம்ப கால சோபையை படிப்படியாக இழந்து வரும் ஜெனீவா கொண்டாட்டங்கள், மேற்படி இரு பேட்டிகளில் இருந்தும் தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும், இக் கொண்டாட்டத்திற்கு உயிர் கொடுத்தே தீருவோம், என்ற வகையில் மல்லுக்கட்டல்களும், கயிறிழுப்புகளும் எம்மிடையே நடந்தேறாமல் இல்லை. இருந்தும், இவ்விரு பேட்டிகளும் மேற்படி ஜெனீவா கொண்டாட்டங்களை முற்றாக புறந்தள்ளி வைக்க முற்பட்டது, உக்கிரப்பட்டு வரும் ஏனைய சர்வதேச விவகாரங்கள் காரணமாக இருக்கலாம் - அல்லது இலங்கையானது அமைவுற்றிருக்கும் கேந்திர ஸ்தானத்தின் அமைவு காரணமாகவும் இருக்கலாம் அல்லது ஜெனீவாவில், யாதொன்றையும் சர்வதேசம் தீர்மானகரமாக நிறைவேற்ற போவதில்லை என்று ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒரு முடிவின் காரணமாகவும் இருக்கலாம் - எப்படியிருப்பினும் இவ்விரு பேட்டிகளிலும் ஜெனீவா விவகாரங்கள் தலைதூக்கவே இல்லை என்பதுவே ஒரு முக்கிய விடயமாகின்றது – சர்வதேச அணுகுமுறைகளை சுட்டிக்காட்டுவது.
3
- நிட்டின் கோக்லேயின் & ரணில் விக்கிரமசிங்க பேட்டியின் போது.. -
நிட்டின் கோக்லேயின் பேட்டியின் போது ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றி வினவப்பட்ட போது, சர்வதேச உலக நிதி நிறுவனத்துடன் (IMF) உத்தியோகத்தர் மட்டத்தில் (Staff Levels) ஏற்கனவே உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளதை தெரிவித்திருந்தார்.
இவ் ‘உத்தியோக மட்ட உடன்பாடு’ என்பதில், தமது கடன் தருநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பதும் ஒரு அம்சம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இலங்கையை பொறுத்த மட்டில் இப்பேச்சுவார்த்தை இருவகைப்படும் என்றும், ஒன்று உத்தியோகப்ப10ர்வமானவை என்பதும் மற்றது தனிப்பட்ட கடன் தருநர்கள் பொறுத்தது என்பதும் அவரது கருத்தாக அமைந்திருந்தது (Official and Private Creditors).இதில் உத்தியோகபபூர்வ கடன்தருநர் என்ற வகையில், இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் தலையாய நாடுகளாக இருந்த போது, தனிப்பட்ட கடன்தருநர்கள் என அவர் கருதுவது மேற்கின் பிரமாண்டமான வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் குறிப்பதாக இருக்கலாம்.
4
இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளுக்கான உண்மை காரணம் உக்ரைன்-யுத்தமே அல்லது சீன-கடன் பொறியே என்றலெ;லாம் எம்மிடம் காரணம் ‘கற்பிக்கப்பட்டாலும்’ இவை பார்வையை திசைதிருப்பும் செய்கையே அன்றி, உண்மையை உரைப்பன அல்ல, என்பதனை ஏற்கனவே பல பொருளியல் வல்லுனர்கள், பல சந்தர்ப்பங்களில் கூறி வந்துள்ளனர்.
உண்மைத்தான். இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன் தொகையில், 47விழுக்காடு (47%) என்பது கடன் முறிகளை (Sovereign Bonds) இலங்கை விற்று தீர்த்ததால் எழுந்த பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டது என்பது மறக்கப்படலாகாதுதான். ஏனெனில், இப்பிரக்ஞை இன்றி, இலங்கை அரசியலை நாடி பிடிப்பதென்பது சற்றே கடினமான செய்கைத்தான்.
ஒரு அறிக்கையின்படி 81 வீதமான (81%) மான இலங்கையின் வெளிநாட்டு கடன்கள் என்பவை பின்வரும் மேற்கத்தைய நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள், இலங்கையின் கடன் முறிகளை வாங்கி போட்டு கொண்டதால் எழுந்தவை என்பது, இதே சர்வதேசத்து விமர்சகர்கள் சுட்டி காட்டும் ஒன்றாகும்:
i. Black Rock நிதி நிறுவனம் (அமெரிக்கா).
ii. Ashmore Group (பிரிட்டன்).
iii. Alliance (ஜேர்மனி).
iv. HBS (சுவிஸ்லாந்து).
v. HSBC (இங்கிலாந்து).
vi JP Morgan (US).
vii. Prudential (US). (தரவு Ben Norton : 13.07.2022)
பென் நோர்ட்டனின் கருத்துப்படி, இலங்கையானது தற்போது, உலக-நிதி-நிறுவனத்திடம், (IMF) அது நகர்த்தியிருக்கும், ‘17வது பொறியை’, அமுல்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது என அவர் கூறுகின்றார் (20.07.2022).
சுருக்கமாக கூறினால், இவற்றை விடுத்து, அதாவது, இவ் உண்மைகளை மூடி மறைத்து, உக்ரைன் போர் என்றும், உலக சந்தையில் எண்ணையின் விலையுயர்வு என்றும், அல்லது சீன-கடன்-பொறி என்றும், கூறுவது மக்களை திசை திருப்பும் அரசியல் சார்ந்தது என்பதே அவரது உள் கருத்தாக அமைந்து விடுகின்றது. (உண்மையில் இவற்றின் தாக்கம் இரண்டாம் பட்சமாக அமைந்து விட கூடும். கேள்வி, தலையாய அடி எதனால் ஏற்பட்டது என்பதே).
5
- கலாநிதி அகிலன் கதிர்காமர் -
இப்பின்னணியிலேயே ன் பின்வரும் கூற்று பெரிதும் முக்கியத்துவப்பட்டு போகின்றது:
“ ‘கடன்களை மீள செலுத்த முடியாது’ என்று மத்திய வங்கி எடுத்த தீர்மானம், நல்ல தீர்மானம் அல்ல என்பதே எனது கருத்தாகும். இந்த தீர்மானம், அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் 78 மில்லியன் டொலர் கடனை இலங்கை செலுத்த வேண்டியிருந்தது. (மறுபுறத்தில் தீர்மானம், அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் 130 கோடி டொலர் என்பது ஒவ்வொரு மாதமும் வந்து கொண்டிருந்தது. அதனை மேலும் ஊக்குவித்திருந்தால் 500 கோடி டொலரை இலங்கை ஒவ்வொரு மாதமும் பெற்றிருக்கும். இவ்வாறு இருக்கும் போது, ஏன் ‘கடன் செலுத்த முடியாது’ என்ற பிரகடனத்தை 19.05.2022 இல் வெளியிட்டார்கள் என்பது எனக்கு புரியவில்லை” (வீரகேசரி நேர்காணல்: 20.08.2022).
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.