மனமகிழ மனநிறைய கொண்டாடி நிற்க
தினமதனை முன்னோர்கள் வகுத்துமே நின்றார்
அறிவுடனும் தெளிவுடனும் அவரளித்த கொடையே
ஆனந்தம் பெருக்குகின்ற திருநாட்க ளாகும்
தீபமது வாழ்வினிலே சிறப்பளித்து நிற்கும்
தீபவொளி எல்லோர்க்கும் மங்கலமே ஆகும்
மாவிருளைப் போக்குதற்கு தீபவொளி தேவை
மனமகிழ தீபாவளி வருகிறது வாழ்வில்
பக்தியொடு பக்குவமும் பாங்காகக் கொண்டு
பலர்மகிழத் தீபாவளி வருகிறது பாரில்
சுற்றமெலாம் சூழ்ந்திருந்து சுவைபயக்கும் நாளாய்
இப்புவியில் தீபாவளி அமைந்திருக்கு எமக்கு
தீமையெனு மெண்ணம் திசையறியாப் போக
தீபாவளி எமக்கு வாய்த்திருக்கு வாழ்வில்
ஞானமதை உணர்த்தி நற்கருமம் ஆற்ற
மாநிலத்தில் தீபாவளி வாய்த்திருக்கு எமக்கு
புத்தாடை எமக்குப் புத்துணர்வை ஊட்டும்
மத்தாப்பு பட்டாசு மனமகிழ்வைக் காட்டும்
சொத்தான சுற்றங்கள் சுவைமிக்க உணவு
அத்தனையும் தீபாவளி ஆனந்தப் பரிசே
விலவாசி ஏற்றம் விண்ணைத் தொடுகிறது
வேலையின்றி பலபேர் நாளுமே பெருகுகிறார்
எரிபொருளின் விலையோ எரிச்சலைத் தருகிறது
என்றாலும் தீபாவளி எமையணைக்க வருகிறதே
போர்மேகம் ஒருபக்கம் போட்டியோ மறுபக்கம்
பொறுப்பின்றி செயலாற்றும் நாடுகளோ பலபக்கம்
வறுமை ஒருபக்கம் வாய்த்தர்க்கம் ஒருபக்கம்
வரவிருக்கும் தீபாவளி இவைபோக்க உதவிடட்டும்
தித்திப்பை மனமிருத்த தினமே நினைப்போம்
எத்திக்கும் ஆனந்தம் பெருகிடவே எண்ணுவோம்
சித்தமதில் இறையெண்ணம் என்றுமே இருந்திட்டால்
இப்புவியில் எல்லாமே இன்பமாய் ஆகிவிடும்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.