- இலங்கையில் சீனக் கப்பல் -
18
சென்ற முறை, அத்தியாயம் 17இல், குறிப்பிட்டிருந்த ஆட்சியாளரின் இருசக்கரங்களின் செயற்பாடுகள் குறித்த அம்சங்கள் தொடர்பிலான அக்கறைகள், தமிழ் அரசியலின் ஒரு பிரிவினருக்கு, முக்கியமாக, புலம்பெயர் அரசியலின் ஒரு சார்பினருக்கு, தேவைப்படும் விடயங்கள்தாமா என்ற சந்தேகங்கள் இன்று எழுவதும் தவிர்க்க முடியாததாகின்றது. காரணம், அண்மையில் ‘தமிழ்வின்னில்’ திலீபன் தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரை ஒன்றில் ‘ஆதங்கங்கள்’ குறித்து பின்வருமாறு பிரகடனம் செய்யப்பட்டிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது:
“அந்த அவலத்தின் சாட்சியாக இன்னும் ஒரு சிலர் உலக பந்தின் எங்காவது ஒரு மூலையில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை எதிர்ப்பார்த்து வாழக்கூடும்… …”
இருக்கலாம். ஆனால், இது, உண்மையில், மிக அடிப்படையான, பலம் வாய்ந்த தர்க்கங்களில், ஒன்றாக கருத இடமுண்டு. அதாவது, தாம் எதிர்ப்பார்த்து நிற்கும், சர்வதேச நீதியும் நியாயங்களும், கிட்டாது, காலம் காலமாக, ‘சர்வதேச நீதிமன்றில் இலங்கையை ஏற்றித்தான் தீருவோம்’ என்ற வாதமும் பொய்ப்பட்டு, ஏமாற்றப்பட்டு, இனி இந்த பழம் புளிக்கத்தான் போகின்றது என்று முடிவு செய்து கொண்ட வேளை, உலக பந்தின் எங்காவது ஒரு மூலையில் தனது ‘ஆதங்கங்களுடன்’ நின்றுக்கொண்டு, ஒதுங்கிக் கொள்வது சிறப்பானது–என்ற வாதம் இங்கு கட்டியெழுப்பப்படுகின்றது. ஆனால், இப்படியாக, உலக பந்தின் எங்காவது ஒரு மூலையில், அன்னார் ஆதங்கங்களுடன், வாழத்தான் வாழலாம் என்ற அன்னாரின் இந்த ‘ஆதங்கங்களுக்கு’ இங்குள்ளவர்கள்தாம் ஈற்றில் விலை கொடுத்தாக வேண்டி இருக்கும் என்பதே ‘பூனைக்கு மணி கட்டுவது யார்’ என்பது போன்ற ஓர் கேள்விக்கு எம்மை இட்டு செல்வதாயுள்ளது.
மறுபுறம், இந்த ‘ஆதங்கங்கள்’ அனைத்தும், தமது அரசியல் தோல்விகளை, ஒருவகையில், புதைத்து வைத்து கொள்ள அல்லது தமது சர்வதேச–தேசிய அரசியல் நகர்வுகளின் மத்தியில் தமது அரசியல் ஞான போதாமைகளை மூடி மறைத்து கொள்ள அல்லது தமது புரியாமைகளை மறைத்து கொள்ள துணை போகின்றனவா என்ற கேள்வியும் எம்மை எழுப்பி தொந்தரவுபடுத்தாமல் இல்லை. அதே சந்தர்ப்பத்தில் அரசியல் யதார்த்தங்களை மறப்பதால் தோன்றும் பாரதூரமான நிலைமைகளுக்கு விலைகளை யார் தருவது அல்லது விலைகளை கொடுப்பவர் யார் போன்ற அடிப்படை வினாக்கள் தொடர்பிலும் வெறுமனே தெளிவற்றவையாகவே இந்த ‘ஆதங்கங்கள்’ இருக்கின்றன.
19
இருந்தும், மிக அண்மையில் சஹ்ரானின் சாரதி உட்பட நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்ற செய்தியும்(27.09.2022:வீரகேசரி), மறுபுறத்தில் சுமந்திரன் கொலை முயற்சி சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுவிட்டது என்ற செய்திகளும் வந்து சேரவே செய்தன. (13.10.2022: தினக்குரல்).
அதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளுடன் சம்பந்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டோரில் நூற்றுக்கணக்கானோர் இதுவரை சிறைகளில் இருந்து வெளியேறி உள்ளவேளை, தமிழ் அரசியல் போராளிகள் எனப்படுவோர், காலங்காலமாக சிறையில் இருந்து, தற்போது ஒரு ‘புனர்வாழ்வு நிலையத்துடன்’ திருப்தியடைய வேண்டிய தேவைப்பாடு எழுந்து விட்டதா என்ற அவல கேள்வி இங்கு “பூமிபந்தின் எங்கோ ஒரு மூலையில் ‘ஆதங்கங்களுடன்’ ஜீவிக்கக்கூடிய ஒருவருடன்” தோன்றாமலும் விட்டதில்லை.
20
வேறு வார்த்தையில் கூறுவதானால், இந்துமகா சமுத்திரத்தின் இன்றைய அரசியல் நகர்வுகள், IMF முதற்கொண்டு ஏனைய பல்வேறு சர்வதேச சக்திகளாலும் இப்படியாகவா நகர்த்தப்படுகின்றது என்ற கேள்வி முன்னிலை நோக்கி நகர்வதாகவே உள்ளது.
இச்சூழ்நிலையிலேயே, மிக அண்மையில் IMFஇன் நிர்வாக பணிப்பாளர்களில் ஒருவரான கிரிஸ்டலினா ஜோர்ஜிவா (KRISTALINA GEORGIEVA) இலங்கையின் தேசிய பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் பின்வருமாறு கூறி நின்றது, கவனத்துக்குரியதாகின்றது: “இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு ஊழலே காரணம்” (இதனை தமிழ்வின் தனது தலைப்பு செய்திகளில் ஒன்றாக வேறு பிரசுரித்திருந்தது: 11.10.2022).
- கலாநிதி அகிலன் கதிர்காமர் -
அதாவது, இலங்கையின் பிரச்சினைகளுக்கு இறைமுறிகள் (Sovereign Bonds) விற்கப்பட்டதே காரணம் என்பதை பொருளாதார நிபுணர்கள் மீண்டும் மீண்டும் அடித்து கூறியுள்ள நிலையில், அதிலும் முக்கியமாக கலாநிதி அகிலன் கதிர்காமர் போன்றோர் இலங்கையின் மத்திய வங்கி வெளியிட்ட “இனி கடன் செலுத்த மாட்டோம்” என்ற இலங்கையின் பிரகடனத்தை கேள்விக்குட்படுத்தி வரும் ஒரு சூழலில், ஒன்றுமறியாத குழந்தையாக, அதாவது, விரலை வைத்தாலும் கடிக்க தெரியாத வெறும் பாப்பாவாக, இலங்கையின் இத்தனை கொடூர பிரச்சினைகளுக்கும் ‘ஊழல்தான்’ காரணம் என்று பாட்டிகளின் காலத்து பாடலை பாட முன்வரும், சர்வதேச அரசியலின், அரிச்சுவடியை எமது தமிழ் அரசியல் அறிய முற்படுகின்றதா அல்லது அதனை தவிர்த்து தனது வழமையான ‘ஆதங்கங்களுடன்’ இளைப்பாற முனைகின்றதா என்பதுவே கேள்வியாகின்றது.
இவ்வடிப்படையிலேயே அரசியல் ஆய்வாளர் யதீந்திராவின் மீள் கேள்விக்குட்படுத்தும் அல்லது மீள் விஜயம் செய்யும் (Revisit) செய்கைமுறை கடினமானதாக தென்பட செய்கின்றது. அதாவது, அவர் கூறுமாப்போல் ‘ஒன்றை நம்புவது தவறல்ல. ஆனால்… அதனை நியாயப்படுத்த முற்படுவதும், அதனை (தொடர்ந்தும்) சரியானதாக நம்பி செயற்படுவதும் தவறானது”.
இது, வலிமையான தர்க்கம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதில் அடங்கக்கூடிய கடினங்கள், இதன் சாத்தியத்தையும் சந்தேக கண் கொண்டே பார்க்க வைக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. அதாவது, கவிஞர்கள் ‘கப்பலை கரை ஏற்றுவோம்’ என்ற அவா ஒரு புறம். ‘தொப்புள் கொடி அரசியலை’ புணரமைப்போம் என்ற கோரிக்கை மறுபுறம்.
21
இத்தகைய ஓர் பின்னணியிலேயே, எதிர்வரும் நாட்கள் மிகுந்த சவால் மிக்க நாட்களாக இருக்க போகின்றன என்பது திண்ணமாகின்றது. உக்ரைனில், பாகிஸ்தானில் இன்று நடந்தேறும் அரசியல் தொடர்ச்சியின் பின்னணியில்,IMFஇன் அரசியல் மறைகரம் உள்ளதா என்பது குறித்து, வேறு பல் சர்வதேசத்து ஆய்வாளர்களும் இன்று, ஏற்கனவே விசனம் தெரிவித்துள்ள ஓர் சூழ்நிலையில், இலங்கையின் தற்போதைய நெருக்கடி, இந்திய ஆய்வாளர்கள் கருதுவது போல, ஆபத்தானதுதான் -ஆராயத்தக்கதுதான். அதாவது, இங்கு செயல்படும் மறைகரங்கள் குறித்து சிந்திக்கவேண்டியே உளது.
சுருக்கமாக கூறினால், IMFஇன் 17வது பொதி, பொருளியல் நெருக்கடிகளை மாத்திரம் அல்லாமல் கூடவே அரசியல் நெருக்கடிகளை சேர்த்தே நாட்டுக்கு பரிசளிப்பதாய் இருக்கும் என்ற ஆய்வாளர்களின் இன்றைய எதிர்வுகூறல் கவனத்துள் எடுப்பட வேண்டிய ஒன்றேயாகும். (அண்மித்த புது புது வரிவிதிப்புகளும், இன–நில பரம்பல்களை கட்டுப்படுத்தி மாற்றியமைக்கும் திட்டங்களும், இரு சக்கரங்களுடன் தொடர்புடையது என்பதும் இது தொடர்பில் கவனத்துள் எடுப்படதக்கது என்பதும் குறிக்கத்தக்கதே).
இதனுடன் சேர்த்தே, எதிர்வரும் காலங்களில், மேற்கு–ரஷ்ய முரண்களால் உலகில் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடிகள், பணவீக்கங்கள், எரிசக்தி தட்டுப்பாடுகள், வாழ்க்கை செலவு உயர்வுகள் இவை யாவும் இலங்கையில் செலுத்தக்கூடிய எதிர் தாக்கங்கள்–உயர்த்த இருக்கும் வாழ்க்கை நெருக்கடிகள்–இவை, அனைத்துக்கும் ஓர் நெம்புகோலாக திகழக்கூடியவைதான் என்பதிலும் ஐயமில்லை.
அதாவது, மேலும் அதிகரிக்ககூடிய பொருளியல் நெருக்கடிகள், ஒரு யதார்த்தம் என்றால், இந்நெருக்கடிகளால் மேலும் தூண்டப்பட்டு, மேலும் மேலும் வேகம் கொள்ளக்கூடிய எதிர்ப்பரசியல்–எதிர்ப்பலைகள்–மறு யதார்த்தம் என்றாகின்றது. இவற்றை சமாளித்துதான் ஆகவேண்டும் என்றால்–இருக்கவே இருக்கின்றது–துருவப்படுத்தலின், இனவாத முடுக்கல்–என்பதே ஆதிக்க சக்திகளிடம் இருக்கும் ஒரே ஒரு கணிப்பாகின்றது. (‘துருவப்படுத்தலின் அரசியலை’ ஆதிக்கசக்திகள் அல்லது பேரினவாதிகள் மாத்திரம்தான் தோற்றுவிப்பர் என்பதல்ல. குறுந்தேசியவாதிகளும் துணைபோவர் என்பதும் குறிக்கத்தக்கதே–இது குறித்து திரு.மனோகணேசன் போன்றோரின் நுண் அரசியல் நகர்வுகள் மேலும் விளக்ககூடும்).
ஆனால், இத்தகைய ஒரு பின்னணியிலேயே, பிராந்திய வல்லரசான இந்தியாவும் சில கேள்விகளை தன் சொந்த நலன்கள் சார்பில், பக்கத்திலேயே, உருவாக்கி கொள்ளவும் இடமுண்டு எனலாம். இனி, இந்தியா பக்கத்தில் இருந்தே எழுப்பக்கூடிய இந்த சாத்தியங்களை கத்தரித்து கொள்வதென்றால், ஒரு ‘இந்துமகா சமுத்திர’ கருத்தாக்கத்தை விடுத்து, ஓர் ‘இந்தோ-பசுபிக் மகாசமுத்திர’ கருத்தாக்கத்துள் இறங்கவேண்டிய தேவை உண்டு என்பது வெளிப்படை.
இதனையே திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்களும், தன் கோக்லேயின் பேட்டியில் வெளிப்படுத்தியிருந்தார் –தொடரந்து வந்த தனது எரிக்கின் ‘நியமனம்’ போலவே. இருக்கலாம். ஆனால், இவற்றுக்கும் அப்பால், இவ்வடிப்படையில் செயல்பட ஒரு அதீத தன்னம்பிக்கையும் ஒரு நாட்டை ஆள்பவருக்கு தேவையானதாகலாம்.
ஆனால், இவ் அதீத நம்பிக்கைகள், நடைமுறை யதார்த்தங்களை மறக்க முனையும் போது, இவை கவிஞர்களின் கனவுகள் போன்றவைதாமா என்ற கேள்வியில் எம்மை கொணர்ந்து நிறுத்தி விடுகின்றன. அதாவது, அரசியலில் இவ்வகை தன்னம்பிக்கைகள், யதார்த்தத்துக்கு பொருந்தாததாய், துருத்தி நிற்குகையில், உதாரணமாக, மேற்கு விரும்பக்கூடிய ஒரு யதார்த்தம், ஒரு பிரதேச அரசியல் யதார்த்தத்துடன், முரண் கொண்டு துருத்தி நிற்கையில்–உருவாகவிருக்கும் புதிய யதார்த்தம் குறித்த பிரக்ஞை எமது கவனத்துக்குரியதாகின்றது.
- அரசியல் ஆய்வாளர் யதீந்திரா -
இதனாலோ என்னவோ, யதீந்திரா குறிப்பிடும் ‘மீள் விஜயம்’ என்ற கருத்தாக்கமும், இப்பின்னணியிலும் மீண்டும் தனது முக்கியத்துவத்தை ஏந்துவதாக இருக்கின்றது. இவற்றையெல்லாம் உள்வாங்காமல், அல்லது ஒரு சிறிய அளவில், தொட்டேனும் பார்க்காமல் நகரக்கூடிய தமிழ் ‘ஆதங்கங்கள்’ என்பன எதிர்வரும் நவம்பர் நினைவேந்தல்களை, வழமைபோல், ஒருதலைபட்சமாக, ‘ஆதங்கங்களுடன்’ மாத்திரம் எல்லைப்படுத்தி அரங்கேற்ற துணியுமேயானால், ஒரு சக்கரத்தின் நொறுக்குதல் என்ற விடயம், ஒப்பீட்டளவில் ஆதிக்க சக்திகளுக்கு எளிதானதாகவே அமையும் என கருத இடமுண்டு.
அதாவது, நினைவேந்தல்கள் மாத்திரமின்றி, குருந்தூர் மலை, கோணேஸ்வர விவகாரங்கள் போன்றவை கூட - இந்திய, மற்றும், சர்வதேச அணுகுமுறைகளை, மற்றும் எதிர்ப்பலைகளின் தோழமைகளை, தகுந்த முறையில் உள்வாங்கி நகர்த்தப்படாவிடின், பாதிப்புக்களை உள்ளடக்கும் என்பது தெளிவு. அல்லது மிஞ்சக்கூடியது, கனடிய பிரதமரின் சுண்டலுடன் கூடிய, சரஸ்வதி பூஜைக்கான வாழ்த்துரையாக மாத்திரமே இருக்கக்கூடும்.
22
இத்தகைய ஒரு பின்னணியிலேயே, மேலே குறித்தவாறு, எதிர்வரும் நாட்கள், எமது ஆழ்ந்த சிந்தனையை கோரப்போவனவாகவே இருக்கின்றன. அதாவது, ஏற்படக்கூடிய பொருளியல் நெருக்கடி-அதன் விளைபயனாக மேலும் வேகம் பெறக்கூடிய எதிர்ப்பலைகள் - அல்லது எதிர்ப்பலை சுவாத்தியங்கள் - இவற்றை சமாளிக்க - இடம்பெயர்க்கப்பட வேண்டிய தேவையுறும் இனவாத அரசியலின் முடுக்கி விடல் - இவை நாட்டின் தர்க்கமாகலாம்.
இப்பின்னணியிலேயே, பிரதேச வல்லரசான இந்தியாவும் தனது கேள்விகளை உருவாக்கி கொள்ளலாம். இனி, இந்த நகர்வுகளை, தடுத்தாக வேண்டி உள்ளது. இதனையே, கோக்லேயின் பேட்டி எதிரொலிக்கவும் செய்திருந்தது.
23
இச்சூழ்நிலையிலேயே, திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அடுத்தடுத்து நகர்த்திய இரு முக்கிய நகர்வுகள், இன்று ஆய்வாளர்களின் புதிய விமர்சனங்களுக்கு உட்பட்டதாய் இருக்கின்றது: ஒன்று ஏற்கனவே குறிப்பிட்ட எதிர்ப்பலைகளில் பங்கேற்ற குழந்தையின் விவகாரத்தை அவர் பிரபாகரனுடன் முடிச்சு போட்ட விதம் (13.10.2022). மற்றது, சடுதியாக அவர் திருகோணமலைக்கு விஜயம் செய்து பாரதூரமான விடயங்களை உலகுக்கு அறிவித்த முறைமை. (14.10.2022)
மேற்குறித்த இரு நகர்வுகளும், அவரால், 24 மணிநேர இடைவெளிக்குள்ளாகவே நகர்த்தப்பட்ட புதிய இரு நகர்வுகள் என்பதனையும் ஆய்வாளர்கள் குறிப்பிடாமல் இல்லை. முதலாவது நகர்வு, ஏற்கனவே குறிப்பிட்டபடி, எதிர்ப்பலை சக்திகளுடன், சிறுபான்மையினரின் போராடும் சக்திகள் இணையவிடாது, ‘துருவப்படுத்தலை’ மையமாக கொண்டு இயங்ககூடிய ஒரு அரசியல். மற்றது, தமிழர் நலன்களை இந்தியாவுக்கு தாரைவார்த்துவிட்டு, (அதாவது, தாரைவார்ப்பதாய் காட்சிபடுத்திவிட்டு,) இருவரும் அடிபடுவதை பார்த்து ரசிக்கும் ஒரு அரசியல்.
இது தவிர, தனது திருகோணமலை விஜயத்தின் போது, ‘குழப்பி அடிக்கும்’ அரசியலையும் (மாறுபட்ட சமிக்ஞைகளை காட்டுதல் மூலம்) அன்னார் தெரிவு செய்திருந்ததும், சம்பூர் விவகாரம் முதல் எண்ணை தாங்கிகளை அன்னார் ஓர் அலசு அலசி இருந்ததும் முக்கிய விடயமாகின்றது. அதாவது, தனது ‘தோழமை’ மிக்க இந்தியாவின் சம்பந்தமில்லாமல் இலங்கை ஓரங்குலமாவது முன்னேற முடியாது என்பதனை அவர் குறிப்பிட்ட பின், ஆனால், இதற்கெல்லாம் குறைந்தபட்சம் ஒரு 25 வருட காலமாவது தேவைப்படும் என்று ஒரு செருகு செருகவும் அன்னார் மறந்தாரில்லை. அதாவது, 25 வருடங்கள் இந்தியா பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் அல்லது நம்பிக் கொண்டிருக்க வேண்டும் அல்லது காத்து கிடக்கும் என்பதே அன்னாரின் கணிப்பாகின்றது. இதனுடன், கடற்படை விவகாரங்களையும் அன்னார் ஓர் பிடி பிடித்து, கிழக்கு எப்படி முக்கிய பங்கை இது தொடர்பில் வகிக்க கூடும் என்றும், இலங்கையின் கடற்படை நடவடிக்கைகளை இனி தாங்களே மேற்கொள்ள வேண்டும் என்றும் இதன்படி தமது கடற்படைக்கு அதிக கப்பல்கள் தேவையுறும் என்பதனையும் கூறி, கூடவே இதற்கும் கூட இந்தியாவுடன் இணைந்தே மேற்கொள்ள ஒரு ஒப்பந்தம் தேவையுறும் என ஒரு இறுதி போடு போடவே செய்திருந்தார்.
இந்தியாவுடன் அன்னார் செய்யவிருக்கும் இவ் ஒப்பந்த விவகாரம், அனைத்தும் ஒருபுறம் இருக்க, கோக்லேயின் பேட்டியின் போது, ‘தீர்வு’ என்ற வகையில் அவர் குறிப்பிட்ட ‘தேர்தல் முறைமைகளை’ மாற்றியமைப்பதுதான் நாட்டு மக்களுக்கு சிறந்தது -நாடு விரும்புவது என்ற அவரது ஆழ்ந்த கருத்தும் முன்வைக்கப்படவே செய்தது. (இதே போன்று, புது ஒப்பந்தம் ஒன்றை கட்ட இந்தியாவை சம்மதிக்க செய்வதும் அல்லது 13ஐ இல்லாது செய்வதும், அல்லது அதனை வலுவிழக்க செய்வதும், இதற்கு துணைவழியாக, தேர்தல் முறைகளை மாற்றியமைப்பதும், திட்டங்களில் ஒன்று என்பதை மிக அண்மித்த தூதுவரின் பேட்டியும் எதிரொலிக்கவே செய்தது என்பதை பின்னர் அவதானிக்கலாம்).
24
- கலாநிதி தயான் ஜெயதிலக்க -
கோக்லேயின் பேட்டியின் போது, நிட்டின் கோக்லே அவர்கள், 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பி இருந்தாலும் திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சாமர்த்தியமாக அதனை தவிர்த்துக் கொண்டு, தேர்தல் முறைகள் தொடர்பில் ‘விகிதாசாரம்-தொகுதிவாரி’ என்றெல்லாம் கதைத்து, ஈற்றில், எது எப்படி இருந்தாலும் நாட்டு மக்கள் விரும்புவதையே நாம் செய்து முடித்தாக வேண்டும் என்று உறுதிபட கூறி முடித்திருந்தார். (நாட்டு மக்கள் எனப்படுவோர் பெரும்பான்மை மக்கள்தாம் என அர்த்தப்படும் என்பது தெளிவு).
இதன் மத்தியிலேயே, அண்மித்த கலாநிதி தயான் ஜெயதிலக்கவின் பேட்டியும், வந்து சேர்ந்துள்ளது: ‘வட-கிழக்கின் குடி பரம்பலை முழுமையாக மாற்றியமைக்கும் திட்டம்’ என்று ஓர் அதிரடி எச்சரிக்கையை தனது அண்மித்த வீரகேசரி பேட்டியின் போது தயான் அவர்கள் விடுத்திருந்தார். (வீரகேசரி:16.10.2022)
‘குடிபரம்பலை மாற்றி அமைப்பதற்கான இலக்கினை நிறைவேற்றுவதற்கு தடையாக இந்தியா இருந்துவிட கூடாது என்பதற்காகவே, ஜனாதிபதி, தமது திருகோணமலை அபிவிருத்தி திட்டத்தில் இந்தியாவையும் பங்காளியாக இணைத்து கையூட்டு வழங்குவதாக’ அவர் குற்றம்சாட்டி இருந்தார். மேலும், மேற்படி குடிபரம்பலையும் நில பரம்பலையும் மாற்றி அமைக்கும் செயற்பாடுகள் தொல்பொருள் பெயராலும், தேர்தல்கள் பெயராலும், ‘எல்’ வலய பெயலாலும் நடைபெறுகின்றது என்பதனையும் மதங்களுக்கிடையிலான பதற்றங்களை உருவாக்கவும் முயற்சி நடந்தேறுகின்றது என்பதனையும் அவர் தனது குறித்த பேட்டியின் போது விளக்கி இருந்தார். அதாவது, இரண்டு சக்கரங்களில், ஒன்று குறித்த அவரது இக்கூற்றுக்கள் எமது கவனத்துள் எடுபட வேண்டியவையே.
இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே இந்திய நகர்வுகள் என்ற விடயமும் என்றை விடவும் இன்று முக்கியத்துவம் வாய்ந்தனவாக இருக்கின்றன.
இந்தியாவுக்கு எதிராக கட்டி எழுப்பப்படும் அரணில், எரிக்கின் நியமனம் முக்கிய மூலைக்கல்லாக அமைந்துள்ள நிலை குறித்து இந்திய ஆய்வாளர்கள் ஏற்கனவே சுட்டியுள்ளனர். இதில் உண்மை இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இருந்தும், எரிக்கின் நியமனத்தின் பின்னரேயே, எதிர்ப்பலைகளில் கலந்து கொண்ட குழந்தை-பிரபாகரன் ‘முடிச்சு’ கதையும், திருகோணமலையில் வெளிப்படுத்தப்பட்ட குழப்பியடிக்கும் இந்தியா நோக்கிய சமிக்ஞைகளும் வெளிக்கிளம்புவதாய் இருக்கின்றது. ஆனால், இவற்றை இந்தியா விழுங்க முன்வருமா என்பது பிறிதொரு கேள்வியாகின்றது. உதாரணமாக திபாகரன், அண்மையில் டில்லியில் நடந்தேறிய ஓர் ஈழத்தமிழர் சார்பான கூட்டமொன்று குறித்து எழுதியிருந்தார் (தமிழ்வின்:16.10.2022). ஆனாலும், அதே கட்டுரையில், வழமையாக காணக்கிட்டும் ‘பாவிக்கிறேன்’ மனோபாவம் என்பது வெளிப்படவே செய்திருந்தது.
‘பாவிக்கின்றேன்’ –‘பாவிக்கின்றோம்’ –‘கையாள்கின்றோம்’ –‘கையாள்கின்றேன்’ போன்ற பதங்கள், காலம் காலமாக கூறப்பட்டு சலிப்பெடுத்தனவைதான் - தமிழர் அரசியலை பொருத்தமட்டில். இவற்றை அடியோடு நிறுத்தி, சர்வதேச விவகாரங்கள் எப்படி கையாளப்படுகின்றன என்பது குறித்த சரியான நுண் உணர்வுகள் தேவைப்படும் ஒன்றாகின்றது. (இதற்கு, தனது சொந்த பலம் குறித்த பிரக்ஞையும், யதார்த்த நடைமுறைகள் பற்றிய உணர்வும் முன் நிபந்தனையாகின்றன–வெறும் ஆதங்கங்கள் அல்ல).
இவ்வகையில், இரண்டொரு தினங்களின் முன், இந்தியா தனது நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஓர் ஏவுகணையை ஏவி பரீட்சித்திருந்தது முதல் - ரஷ்ய-உக்ரைன் போர் நகர்வுகள் வரை, அனைத்துமே எமக்கு தேவையானதுதான் -முக்கியமானதுதான். ஆனால், இவற்றையெல்லாம் விஞ்சக்கூடியதாய், சில தினங்களின் முன், ஊடகங்களில் பரபரப்புடன் தூக்கி பிடிக்கப்பட்ட செய்திகள் இரண்டு:
ஒன்று, இந்து நாளிதழில் வெளியிடப்பட்ட, தமிழ்நாடு தற்போது அடைந்துள்ள அச்சங்கள் பற்றிய ஒரு செய்தி.
மற்றது, இலங்கை தூதுவர், Times of India விற்கு, இலங்கை-இந்திய உறவுமுறை தொடர்பில் அளித்திருந்த நேர்முகம்.
இரண்டுமே, ஒரே தினத்தில் வெளிவந்திருப்பதும், அதிரடியான திகைப்பூட்டும் விடயங்களை, அவை கொண்டிருப்பதும் குறிக்கத்தக்கது.
இந்து நாளிதழில் வெளிவந்துள்ள செய்தியின்படி, நவீன இலத்திரனியல் சாதனங்களுடன் சீன ராணுவம் இலங்கையில் பிரசன்னம் கொண்டிருப்பது குறித்து தமிழ்நாடு அச்சத்தால் துன்புறுகிறது எனவும், நான்கைந்து சீனர்கள், இலங்கையில் நிலைக்கொண்டிருக்கும் (Based) ஓர் அரசியல் கட்சியின் உதவியுடன், இந்தியாவிற்குள் ஊடுருவி விட்டனர் என்றும் தமிழ்நாட்டு புலன் நிறுவனங்கள் அரசுக்கு தெரிவித்துள்ளதாகவும், தமிழ்நாட்டு அரசாங்கம் உடனடியாக இவ்விடயத்தை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி, மத்திய அரசிடம் இருந்து பாதுகாப்பை கோரியுள்ளதாகவும் செய்தி விரிவதாய் உளது. (17.10.2022).
இதனை ஒத்ததாய் அல்லது இதற்கு சற்றும் சளைக்காத வகையில் இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட அவர்கள் வீசிய அதிர்வெடியும் அதே தினத்தில் வெளியாகி இருந்தது. பேட்டியின்படி வெளிநாட்டு சக்திகளால் தோன்றும் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பில் இலங்கையும் இந்தியாவும் கலந்துரையாடி ஓர் ஒப்பந்தத்திற்கு வந்தாக வேண்டும் என்றும் இவ் ஒப்பந்தம் சிவப்பு எல்லைக் கோட்டை கடக்காமல் இருக்க உதவி புரிவதாக அமையும் என்றும், அதுவரை இலங்கையும் இந்தியாவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது அவசியம் என்றும், ஜப்பானுடனும், ஐக்கிய அரபு ராச்சியத்துடனும், இஸ்ரேலுடனும் கூட்டு முயற்சிகளை உருவாக்கி கொள்ளும் முயற்சியில் இரு நாடுகளும் இணைந்து இறங்க வேண்டும் என்றும், இலங்கையின் பொருளியல் மேம்பாடு, இந்தியாவின் பொருளியல் மேம்பாட்டிலேயே தங்கி உள்ளது என்றும் பேட்டியளித்திருந்தார். (இங்கே நாடுகளின் தேர்வும் அமெரிக்கா-சீனா போன்ற நாடுகளின் தள்ளிவைப்பும், மிக ஆழமான அரசியல் உள்ளடக்கங்களை கொண்டதாகவே உள்ளது என்பதனை கூறியே ஆக வேண்டும்). அதாவது, இஸ்ரேல் போன்ற நாடுகளுடன், இலங்கை கூட்டு வைக்கும் (அல்லது ஏற்கனவே கூட்டு வைத்திருக்கின்றது) அல்லது சிவப்பு எல்லைக்கோட்டை இலங்கை தாண்டிவிடும் அல்லது பிற நாடுகளால் இந்தியாவுக்கு பிரச்சினைகள் எழலாம் - என்பது போன்ற எண்ணற்ற எச்சரிக்கைகளுக்கு குறைவில்லாமல் பேட்டி ஒருபுறம் இருக்குகையில் மறுபுறம் இந்தியாவே பிரதேச வல்லரசு–அதுவே குடும்ப தலைவன் -மற்ற அனைவரும் நண்பர்களே–இந்தியாவே, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு வழிதரும் என்றெல்லாம் புகழாரம் சூட்டுதலும் குறைவின்றி அருகருகாகவே நடந்திருந்தது –மேற்படி உள் குத்துகளுக்கு சரிசமனாய்.
ஆனால், இவை அனைத்திலும், தமிழ் அரசியலுக்கு முக்கியம் வாய்ந்தது எதுவெனில் -இலங்கை தற்போது ஒரு நிலைமாறு கட்டத்தில் இருப்பதாகவும், இதற்கமைய குறித்த 13வது திருத்தம் சம்பந்தமான ஒப்பந்தமும் தற்போது ‘நிலைமாறியே’ ஆக வேண்டும் எனவும் அன்னார் அவர்கள் குறிப்பிட்டுள்ள விஷேட செய்தியாகும்.
- இலங்கை - இந்திய ஒப்பந்தம் (13ஆவது திருத்தச் சட்டம்)
கையொப்பமிடல் (1987) -
சுருக்கமாய் கூறினால், 13வது திருத்தம், தற்போது வலுவிழந்து விட்டது என்பதுவே தர்க்கமாகின்றது. அதாவது, கிழக்குமுனைய ஒப்பந்தத்தை போலவே, 13 திருத்தம் குறித்த ஒப்பந்தமும் ஒருதலைபட்சமாக தூக்கி எறியப்படலாம் என்றாகின்றது. இவ் யதார்த்தத்தை புரிந்து கொண்டால் சிவப்பு எல்லைக் கோடுகள் தாண்டப்படாமல் இருக்கலாம் - அல்லது வெளிநாடுகளால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து தாம் ஒரு உடன்பாட்டுக்கு வரலாம் என்பதனையா இந் நிலைப்பாடுகள், மறைமுகமாக சுட்டுகின்றன என்பது கேள்வியாகின்றது. அதாவது, ஓர் புதிய ஒப்பந்தத்தின் தேவை அல்லது 13வது திருத்தத்தின் வலுவிழப்பு, அல்லது புதிய தேர்தல் முறை அல்லது இந்தியாவின் பாதுகாப்பு - இவை தொடர்பில், திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அறிவிப்பும் தூதுவரின் நிலைப்பாடும் ஒன்றாகவே இருக்க காண்கின்றோம். (வெளிப்படுத்திய விதத்தில் மாத்திரம் ஆங்காங்கு வித்தியாசங்கள் உண்டென்பதை தவிர). இதற்கு இந்தியா மசியுமா அல்லது அடங்குமா என்பதுவே இந்திய ஊடகங்களின் கேள்வியாகின்றது.
சுருக்கமாக கூறினால், சக்கரத்தின் வினோத சுழற்சி இப்படி வேகமெடுக்கையில், மறுமுனையில், பிரதேச வல்லரசின் உறவுமுறைகள் அழுத்த நிலைகளை இன்று காண்பதாயுள்ளன. இதற்கு இன்றைய உலக நிலவரங்களும் -துணை போகக்கூடும் -எரிக் போன்ற ஒரு நியமனத்தை கோருவதாகவே. இச்சூழலிலேயே, தமிழ் அரசியலின், எதிர்வரும் நினைவேந்தல்கள் அல்லது மேலே குறிப்பிட்டுள்ள வேறு பல நகர்வுகள், அல்லது எதிர்-நகர்வுகள், என்பன எதிர்ப்பலைகளின் தோழமைகளை, சர்வதேச-பிரதேச முனைப்புகளை -எந்த ஒன்றையுமே உதாசீனப்படுத்தாத நகர்வுகளாய் அமைவது அதிமுக்கிய தேவையாகின்றது. வேறு வார்த்தையில் கூறினால், திரு.மனோகணேசன் அவர்கள் தனது பேட்டியில் (பேட்டி:வீரகேசரி:16.10.2022) குறிப்பிட்ட ‘தந்ரோபாயங்கள்’ போன்ற சாமர்த்திய, சந்தர்ப்பவாத நுண்அரசியல்களில் இருந்து தப்பி தமிழ் அரசியல் தன் பயணத்தை, அவதானத்துடன், மேற்படி நடைமுறை யதார்த்தத்தில் கால் பதித்து தொடரவேண்டி உள்ளது - இன்றைய நிலைமைகளில், எனலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.