தொடர்கதை: ஒரு கல் கரைந்தபோது…..! - - நெல்லை வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ் -
(6)
இப்போதெல்லாம் அக்காள் என்னிடம் முகம்கொடுத்துப் பேசுவதே குறைவு. நினைக்கும்போது மனத்துக்குள் அழுத்தமாக இருந்தாலும், சுதந்திரமாக நடமாட முடிகிறதே என்னும் ஒரு ஆறுதல்.
என்பொருட்டு அம்மாவுக்கும் வேதனைகள் குறைந்துள்ளமை கண்டு மகிழ்கின்றேன். பக்கத்திலுள்ள பெரிய கோவிலுக்கு, அவ்வப்போ அம்மாவுடன் செல்வதும், தரிசனம் முடித்தபின் கோவில் மண்டபத்தில் சிறிதுநேரம் உட்கார்ந்திருப்பதும், அப்போது அம்மாவின் மடியில் தலைவைத்துப் படுத்திருப்பதும் என்னை வேறு வேறு உலகுகளுக்குக் கொண்டுசென்றன.
அம்மாவும் அதே சூழ்நிலையில் மெய்மறந்தவங்களாய் தனது பால்யகால நினைவுகளை, என் தாத்தா பாட்டியோடு வாழ்ந்த காலத்தில் இதே கோவில், இதே மண்டபம், இதே இடத்தில் பாட்டியின் மடியில் சாய்ந்திருந்த, சுவையான சம்பவங்களைக்கூட பேசுவாங்க.
அத்தகைய சூழலில் இன்றும் நாங்கள். அம்மாவிடம் கேட்டேன் நான்.
“யேம்மா…. செவ்வாய்க் கெழமையில எப்பவுமே சாயங்கால பூஜைக்குத்தானே என்னய இந்தக் கோயிலுக்குக் கூட்டிக்கிட்டு வருவீக…. இண்ணிக்கு எதுக்கு காலைப் பூஜைக்கே கூட்டிக்கிட்டு வந்திட்டிய….. முகத்தில வேற ரொம்ப பூரிப்பு தெரியிது…. சொன்னா நானும் சந்தோசப்படுவேன்…. இல்லியா….”
கருவறைப் பக்கம் திரும்பி ஒருகணம் கண்ணை மூடித் தொழுத அம்மா தனது பார்வையை எனது பக்கம் திருப்பினாக.
“நீயும் சந்தோசப்படாமல் வேறை யாரு சந்தோசப்படுவா…. நாளைக்கு காலையில ஒம்பதரை டூ பத்தரை மணிக்குள்ள உன்னய பொண்ணுபாக்க வர்ராங்க…. மாப்பிளை சொந்த ஊரு மதுரைப் பக்கம்…. அதனால, அதுசம்பந்தமா இண்ணைக்கு சாயங்காலம் பாத்து முடிக்கப் பல வேலைங்க இருக்கிறதால, எல்லா வெசயமும் நலமாய் முடியணும்னு வேண்டிக்க மொதல் வேலையாய் இங்க வந்தோம் புரியிதா….”