அப்பாவை இழந்து ஒரு வருடமாகி விட்டது. அதன் தாக்கம் இன்னும் எங்களை விட்டுப் போகவில்லை. அன்று நடந்த விபத்திலிருந்து அம்மா மீண்டு வந்ததே அதிசயம். அவளின் உடல்நிலை முழுமையாக குணமாகவில்லை பெரும்பொழுது படுக்கையிலேயே கழிகிறது.
“படிப்பை விட்டிடாதை ஒ எல் சோதினையை எடுத்து பாஸ் பண்ணுடா”
அப்பா போனதில் இருந்து இதையே சொல்லிக் கொண்டிருக்கிறாள். தம்பியைப் படிக்க அனுப்பினேன்.
“நானும் படிக்கப் போனால் குடும்பத்தை ஆரம்மா பாக்கிறது. படிக்கிறதுக்கு உதவி கிடைச்சாலும் நாளாந்த செலவுக்கு நான்தானே உழைக்கவேணும்”
“பதினெழு வயசு படிக்கிற வயசடா. நீயும் படிக்கவேணும் எண்டு அப்பா ஆசைப்பட்டாரே.. படிக்கிற வயசில எந்த வேலைக்குப் போவாய். அப்பா மாதிரி கூலி வேலைக்குத்தான் போகவேணும். வேண்டாமடா அப்பா ஏமாந்ததும் துன்பப்பட்டதும் போதும் நீ படிக்கப் போடா” அம்மா கெஞ்சினாள்.
வருமானம் இல்லாமல் எப்படிப் படிக்கமுடியும். அப்பாவின் இடத்திலிருந்து இனி இவர்களை நான்தானே பார்க்கவேணும் அப்பா இருந்திருந்தால் இந்த நிலைமை வருமா. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன் அன்று நடந்ததை இன்றும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
அப்பா அதிகம் படித்ததில்லை. குமரபுரத்தில் வீட்டுக் காணியோடு மூன்று ஏக்கர் வயலும் சொந்தமாக இருக்கிறது. வருடத்திற்கொரு முறை மாரி மழையை நம்பி விதைப்பு நடக்கும். நல்ல விளைச்சல் தருகின்ற காணி ஆனால் பணம் செலவழித்து காணியைப் பதப்படுத்தவோ உரிய நேரத்தில் உழுது நெல் விதைத்து பசளை போடவோ முடியாமல் அப்பா திண்டாடிக் கொண்டிருந்தார். கடன் வாங்கி முழுச்செலவும் செய்ய முடியாமல் தனியாளாய் நின்று முடிந்தளவுக்கு வயலோடு போராடுவார். சாப்பாட்டுக்கு நெல் வரும் மற்றச்செலவுகளுக்கு கஷ்டமாயிருக்கும். விதைத்தது கைக்கு வராமல் நட்டப்பட்டதும் உண்டு. ஆனாலும் வயலை விடாது விதைத்துக்கொண்டிருந்தார். வேண்டாம் என்றாலும் கேட்கமாட்டார். மேலதிக வருமானத்துக்காக அடுத்தவர் வயல்களிலும் தோட்டங்களிலும் வேலை செய்தார். நிரந்தர வருமானம் வரக்கூடியதாய் ஏதாவது செய்ய வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு கரடிப்போக்குச்சந்தியிலுள்ள ஒரு இரும்புக்கடையில் வேலை கிடைத்தது.
அந்த நேரத்தில்தான் லண்டனிலிருந்து நீண்ட நாட்களுக்குப் பின் ஊருக்கு வந்திருந்தார் கேசவன் மாமா. எங்களுக்குச் சொந்தமில்லை என்றாலும் சின்னவயதிலிருந்து மாமா என்று அழைத்துப் பழகி விட்டது. பற்றைக்காடாய் இருந்த தன்னுடைய காணியையும் இடிந்து போயிருந்த வீட்டையும் பார்த்துவிட்டு அப்பாவைத் தேடி வந்தார்.
“பிறந்து வளர்ந்த வீட்டையும் காணியையும் இப்பிடிப் பாக்க கவலையாயிருக்கு. மூண்டு மாத லீவில வந்தனான் காணியைத் துப்பரவாக்கி மரங்கள் வைக்கவேணும் வேலைக்கு வாறியா” அப்பாவிடம் கேட்டார்.
வேலையில்லாமல் அலைந்தபோது கேட்டிருந்தால் உடனே சம்மதம் சொல்லியிருப்பார். மாதவருமானம் வரும் கடைவேலையை விட முடியாது. மறுப்பு சொல்லியும் மாமா விடவில்லை.
“காணி திருத்தி வீடு கட்டின பிறகும் உனக்கு உழைப்பிருக்கும். வைச்ச மரங்களை நீதான் பாக்கவேணும். காணி இனி உன்ர பொறுப்பு. நான் எல்லாம் பாத்து செய்வன். நீ வா”
சின்னவயதிலிருந்து பழகிய உரிமையில் கேட்க மறுக்க முடியாமல் சம்மதம் சொன்னார். அம்மா கடை வேலைக்கே போகச் சொன்னாள் அப்பா கேட்கவில்லை.
அடுத்த நாள் மூன்று பேருடன் வேலைக்குப் போனார். வளர்ந்த பெரிய மரங்களை வெட்டி அடிமரத்தை வேரோடு கிளப்பி அதைத் துண்டாக்கி அப்புறப்படுத்தினார்கள். பற்றையாய் படர்ந்திருந்த புற்களை உழவு யந்திரத்தால் உழுது சமப்படுத்தினார்கள். இடிந்து போயிருந்த வீட்டின் கற்குவியல்களை அள்ளி காணியின் மூலையில் குவித்தார்கள். காணியைத் துப்பரவாக்கி முடிக்கவே இரண்டு மாதங்களாகிவிட்டது.
“அடுத்தமுறை வந்துதான் வீட்டுவேலையைத் தொடங்கவேணும். இப்ப நிழல் இல்லாமல் வெயில் வெக்கை தாங்கமுடியேல முதல் மரங்களை வைப்பம்”
திருத்திய காணியில் தென்னை, மா, தேசி, தோடை தேக்கு என்று இடம் பார்த்து நட்டார்கள். நட்ட கன்றுகளுக்குத் தண்ணீர் விட மோட்டரும் தேவையான பைப்புகளும் வாங்கிக் கொடுத்தார் மாமா. அவர் போகமுதல் வேலைகளை முடிக்கவேணும் என்பதால் நேரகாலமில்லாமல் எந்தநேரமும் காணியில் வேலை செய்து கொண்டிருந்தார் அப்பா. நானும் பள்ளிக்கூடம் முடிய பின்னேரங்களில் அங்கு போய் விளையாடிக் கொண்டிருப்பேன். தினமும் வேலை முடிந்ததும் வேலைக்குரிய பணத்தை அப்பாவிடம் கொடுத்து விடுவார் மாமா.
“இப்பதான் காணியைப் பாக்க நிம்மதியாய் இருக்கு. நட்டதுகளுக்குத் தண்ணி விட்டு பசளை போட்டு நீதான் கவனமாய் பாக்கவேணும். இனி மாதச் சம்பளம் தாறன். தண்ணி போற வாய்க்கால் ஒரங்களில மரக்கறியளை போட்டு நீயும் எடு. பக்கத்தில தம்பின்ர காணியும் இருக்கு. அவனும் காணியைத் திருத்தி மரங்கள் வைக்கிறதுக்கு உன்னோட கதைச்சு செலவுக்கு பணம் அனுப்புவான். இரண்டையும் பாத்துக்கொள். மாதம் பத்தாயிரம் தாறம்”
“சரி அண்ணை. நான் பாத்துக் கொள்ளுறன்” சந்தோஷமாக தலையாட்டினார் அப்பா.
லீவு முடிந்ததும் லண்டனுக்குப் போய்விட்டார் மாமா. கிடைத்த வேலையை விட்டிட்டமே என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்த அப்பாவுக்கு இரண்டு காணிகளையும் தன் பொறுப்பில் விட்டதும் மாத வருமானம் வரும் என்றதும் நிம்மதியைக் கொடுத்தது. கேசவன்மாமாவின் தம்பி மாதவன்மாமாவோடும் கதைத்து அவர் சொன்னபடியே காணியைத் திருத்தி கன்றுகள் வைத்து இரண்டையும் தன் சொந்தக் காணி போலவே பார்த்துக் கொண்டார். சிறு கன்றுகளாக இருப்பதால் காலை மாலை இரண்டு நேரமும் தண்ணீர் விட மோட்டரையும், பைப்புகளையும் சிறு தள்ளு வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு போய் இறைத்து விட்டு வீட்டுக்கு கொண்டு வருவார். பட்ட மரங்களை அகற்றி புதிய கன்றுகள் வைத்தார். கிணற்றடியைச் சுற்றி வாழை போட்டார். இறைக்கும் தண்ணீர் வீணாகாமல் கத்தரி வெண்டி மிளகாய் என மரக்கறிகளும் வைத்தார். பகலில் வேறு வேலைகளுக்குப் போனாலும் பின்னேரங்களில் இரண்டு காணிகளிலுமுள்ள வேலைகளை தனியாளாய் நின்று செய்வார். அப்பா விருப்பத்தோடு செய்வதைப் பார்த்து அம்மாவின் மனமும் சமாதானமாகி விட்டது.
கேசவன் மாமா லண்டன் போன பின்பும் அடிக்கடி எடுத்து மரங்களின் வளர்ச்சியையும் அதன் செலவுகளையும் கேட்பார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு வந்து வீட்டின் வேலைகளைத் தொடங்கினார். நின்ற நாட்களில் வேலைகள் மும்முரமாக நடந்தது. அந்தநேரங்களில் அப்பாவால் வேறு வேலைகளுக்குப் போக முடியவில்லை. மாமா லண்டன் போன பின்பும் அப்பாவின் பொறுப்பில் வேலை நடந்து கொண்டிருந்தது. இடையில் மாதவன் மாமா வந்திருந்து மீதி வேலைகளைப் பார்த்துக் கொண்டார். பண விஷயத்திலும் சரி வேலை விஷயத்திலும் சரி அவர் எப்போதும் கண்டிப்பும் கறாருமாய் இருப்பார். வேலை செய்தாலும் அதில் குற்றம் கண்டு குறை சொல்லிக் கொண்டிருப்பார்.
“காணியைப் பாக்கச் சொன்னால் அதில நீங்களும் பயிரை வைச்சு எடுக்க நிக்கிறீங்கள். அண்ணா சொன்னாரெண்டு நெடுகவும் செய்யிறதே அதில வாழையைப் போட்டால் காணிச்செலவுக்கு வரும். வைச்ச மரங்களும் வாடிப்போயிருக்கு வாங்கிற பசளையளை என்ன செய்யிறீங்கள்”
“பசளை போட்டு தண்ணி விட்டாலும் இந்த வெயிலுக்கு வாடித்தான் தெரியும் அண்ணை”
“அங்க இருந்து உங்களை நம்பி காசை அனுப்புறம் காணியை கவனமாய் பாருங்கோ” காணியோடு கஷ்டப்படுவது தெரிந்தும் திருப்தி இல்லாத முகத்தோடு சொன்னார். அப்பா ஒன்றும் சொல்லவில்லை. வீட்டு வேலைகளை முடித்து விட்டு லண்டன் போய்விட்டார்.
இரண்டு காணிகளோடும் அதிக நேரங்களைச் செலவழித்தார் அப்பா.
ஆறு வருட உழைப்பில் இரண்டு காணிகளும் பசுமையாகத் தோன்றின. நானும் நேரமிருக்கும்போது அவருடன் போய் குழாய் பிடித்து மரங்களுக்குத் தண்ணீர் விடுவேன். சின்ன சின்ன வேலைகளையும் செய்வேன். அந்தக் காணியோடு அப்பா பட்ட கஷ்டங்களும் அதற்குக் கொடுத்த உழைப்பும் சிந்திய வியர்வையும் எனக்கு நன்றாகவே தெரியும். அப்பாவின் உழைப்பைப் பார்த்த சிலர் தங்கள் காணிகளிலும் மரங்கள் வைக்கவும் பராமரிக்கவும் வேலை கொடுத்தார்கள். இதனால் வீட்டின் நிலைமையிலும் முன்னேற்றம் தெரிந்தது. வரும் பணத்தில் செலவு போக அவசரதேவைக்கென்று அம்மாவாலும் சிறிது சேமிக்க முடிந்தது. காணியில் விளையும் மரக்கறிகளை சந்தைக்கு கொண்டு போவதற்கு இரண்டாம் தரத்திலுள்ள ஒரு மோட்டார்சைக்கிளையும் வாங்க முடிந்தது.
அந்த வருசம் காணியை பார்க்க மாமா இருவரும் வந்திருந்தார்கள். தண்ணீரில் நனைந்து குளிர்ச்சியோடு நிற்கும் மரங்களைப் பார்த்தார்கள். தென்னையில் பாளை விரிந்து கொத்துக்கொத்தாய் காய்த்திருக்கும் தேங்காய்களும், மாமரத்தில் பூவும் பிஞ்சுமாய் தொங்கும் காய்களும், தேசி, தோடையில் சிலிர்த்துப் போயிருக்கும் காய் பழங்களும் அவர்களைப் பிரமிக்க வைத்தன.
“வருமானம் வரத்தொடங்கிட்டுதண்ணை எல்லாம் எழுதி வைச்சிருக்கிறன்” என்றார் அப்பா.
“வருமானத்தில காணியின்ர செலவையும் உன்ர சம்பளத்தையும் எடுக்கக்கூடியதாய் இருக்கவேணும். கைக்காசு போட்டு நெடுகவும் செலவழிக்கேலாது. உன்ர பாடு இப்ப பரவாயில்லை காணியில விளையிற எல்லாத்துக்கும் கணக்குப் போடு”
மாதவன் மாமா ஏற்கனவே சொன்னதை இவர் இப்பொழுது சொல்கிறார். கேசவன் மாமாவிலும் நிறைய மாற்றங்கள் தெரிந்தது எனக்கு.
மாதவன் மாமா தன் காணியைப் போய் பார்த்து விட்டு வந்தார்.
“காணி சோலையாய்தான் இருக்கு. மரங்களெல்லாம் வளர்ந்திட்டுது இனி அதை பராமரிக்கிறது சுகம். இருக்கிற வீட்டையும் ஆக்களில்லாமல் நெடுகவும் பூட்டி வைச்சிருக்கேலாது. மனிசியின்ர சொந்தக்காரன் இருக்க கேக்கிறான் இனி அவன் காணியையும் பாப்பான். அந்த ஒழுங்கைச் செய்து போட்டுப் போகத்தான் வந்தனான்” என்றார். எனக்கு திக்கென்றது.
“அண்ணை” என்ற சொல்லோடு அசையாது நின்றார் அப்பா.
“இந்த கிழமைக்குள்ள அவன் வந்திடுவான். வந்தபிறகு என்னை வந்து பார் உன்ர கணக்கை முடிச்சு விடுறன். இப்ப கிளிநொச்சியில எனக்கொரு அலுவல் இருக்கு நான் போட்டு வாறன்” என்றவர் கேசவன் மாமாவிடம் திரும்பினார்.
“என்ர விஷயம் முடிஞ்சுது நான் போறன். நீங்களும் உங்கட பிரச்சனைகளை கதையுங்கோவன்” சொல்லி விட்டுப் போனார்.
அடுத்த பிரச்சனையா… இந்தக் காணியும் கைவிட்டுப் போகப் போகுதா… பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்தவராச்சே திடீரென இரண்டையும் ஒரே நேரத்தில் இழந்தால் அப்பாவால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும். இனி வேறு வேலை தேட வேணுமே. ஒரு நிமிடத்தில் கற்பனை எங்கேயோ போய்விட தலையை உதறிவிட்டு மாமாவைப் பார்த்தேன்.
அப்பாவின் முகமும் அவரை நோக்கியே இருந்தது.
“மகனின்ர படிப்புக்காக யாழ்ப்பாணத்திற்குப் போன தங்கச்சி திரும்ப வந்து என்ர வீட்டில இருக்கப் போறாளாம்…” என்று இழுத்தார் மாமா.
“அவையள் வந்திருக்கட்டுமண்ணை. நான் வந்து என்ர வேலையளைச் செய்து போட்டு போறன்” அப்பா அவசரமாய் பதில் சொன்னார்.
“தம்பி சொன்னமாதிரி இனி வேலை குறைவுதானேடா. வீட்டில இருக்கிறவை பாக்கட்டும். மெசினையும் பைப்புகளையும் கொண்டு வந்து குடுத்தால் தங்கச்சின்ர மனிசன் தண்ணியை இறைச்சுப் பாப்பார். உன்னையும் உடன போகச் சொல்லேல. முன்பக்கத்துக்கு மதில் கட்டி இரும்பு கேற் போடுவம் எண்டு நாளைக்கு ஆட்களை வரச் சொன்னனான். அந்த வேலை முடியுமட்டும் நீதான் பொறுப்பாய் இருந்து பாக்கவேணும் விடியவே வந்திடு” என்றார் மாமா.
காணி வேலை முடிந்ததும் அப்பா வேண்டாம் என்றவர் மதில் வேலைக்கு வரச்சொல்லுறாரே என்ற கோபத்தோடு அப்பாவை பார்த்தேன்.
“நாளைக்கு அவசரமாய் வவுனியாவுக்குப் போகவேணும் ஒரு செத்தவீடு இருக்குது அண்ணை. வந்ததும் வேலைக்கு வாறன்” ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு சொன்னார் அப்பா.
“என்னடாப்பா நீ. நான் போகக்கிடையில இந்த வேலையளை முடிச்சிட்டுப் போகவேணும். என்ர அவசரம் தெரியாமல் நீ போறாய். சரி போ நான் வாற ஆட்களை வைச்சுத் தொடங்கிறன்” பட்டென்று சொன்னதும் அப்பாவின் முகம் வாடிவிட்டது. வீட்டுக்கு வந்தபின்பும் முகத்தில் மலர்ச்சியில்லை திகிலே தெரிந்தது.
“திடீரெண்டு காணியை விடச் சொன்னால் என்ன செய்யிறது. இவரை நம்பித்தானே கிடைச்ச வேலையையும் விட்டிட்டு வந்தன். இப்பிடிச் செய்வார் எண்டு நினைக்கேலயே இனி எங்க போய் வேலையைத் தேடுவன்” அம்மாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.
பிறகு நடந்ததை நினைத்துப் பார்க்க நெஞ்சு வலித்தது. அடுத்தநாள் என்னையும் தம்பியையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி விட்டு அப்பாவும் அம்மாவும் வவுனியாவிற்கு மோட்டார்சைக்கிளில் போனார்கள். போகும் வழியில் சாமான் ஏற்றி வந்த லொறியோடு ஏற்பட்ட விபத்தில் உயிரில்லாத அப்பாவின் உடல் வீட்டுக்கும் காயத்தால் துடித்த அம்மாவின் இரத்தம் தோய்ந்த உடல் ஆஸ்பத்திரிக்கும் வந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் துடித்த கணங்கள். அம்மாவையும் இழந்து அநாதையாகி விடுவோமோ என்று பதறிய நாட்கள். முதுகுத் தண்டில் ஏற்பட்ட காயத்திலிருந்து அம்மா மீண்டு வர ஆறு மாதங்களுக்கு மேலானது. கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து வைத்த பணம் எல்லாம் அம்மாவின் வைத்தியச் செலவுக்கே கரைந்து போனது. அம்மாவைப் பார்க்க வந்தவர்கள் தந்த பணத்தில் மீதி நாட்கள் நகர்ந்தன. அடுத்தவர் கையை தினமும் எதிர்பார்க்க முடியுமா.. கடை வேலைக்கு முயற்சி செய்தேன் கிடைக்கவில்லை. வேறு என்ன வழி.. என்ன செய்யலாம்…
திடீரென கேசவன் மாமா வந்திருப்பதாக தம்பி சொன்னது நினைவுக்கு வந்தது. அவர் வீட்டுக்கு யாரும் வரவில்லை. பூட்டியிருந்தது. ஆட்களைப் பிடித்துத்தான் காணி வேலைகளைப் பார்க்கிறார். நான் அம்மாவிடம் சொன்னேன்.
“மாமா வந்திருக்கிறாராம் அப்பா செய்த வேலையை நான் செய்தால் படிச்சுக் கொண்டே பின்னேரங்களில காணியையும் பாக்கலாம். நான் மாமாட்ட கேக்கப் போறனம்மா”
“வேண்டாம் போகாதே” என்றாள்.
ஆனாலும் அப்பாவை இழந்து நிர்க்கதியாய் நிற்கும் எங்களுக்கு உதவுவார் என்ற எதிர்பார்ப்பில் மாமாவிடம் போய்க் கேட்டேன்.
“என்னடா விளையாடுறியா.. சின்னப் பெடியன் நீ காணியை பாப்பியே” என்றார்.
“காணியைத் திருத்தி தொடங்கிறதுதான் கஷ்டம். அப்பா வேலை செய்யேக்க பாத்தனான் மாமா. அந்த வேலையை எனக்குத் தாங்கோ நான் தண்ணியெல்லாம் இறைச்சுப் பாப்பன்”
“தண்ணி மட்டும் விட்டால் போதுமேடா. காணியில கொத்திப்பிரட்டுற வேலையள் எத்தனை இருக்கும் உன்னால செய்யேலாது. உன்ர அப்பா சொன்ன வேலையளை குறையில்லாமல் செய்தான் நானும் உடனே அவன் செய்த வேலைக்கு சம்பளத்தைக் குடுத்திட்டன் கணக்கு முடிஞ்சுது. இப்ப நீ வந்து அப்பா செய்ததை நான் செய்யப் போறன் எண்டு சொந்தம் கொண்டாடுறாய். வந்திட்டான் வேலை கேட்டு இஞ்ச நீ ஒண்டும் செய்ய வேண்டாம் போய் வேற வேலையைப் பார் திரும்ப வந்து நிக்காதை” அலட்சியமாய் சொல்லி விட்டு திரும்பி நடந்தார். அவமானத்தில் உடல் நடுங்கியது.
அப்பாவை இழந்து நாம் படும் துன்பமும் கஷ்டமும் அவருக்கு நன்றாகவே தெரியும். ஆறுதலாக இரண்டு வார்த்தை கூறினால் பண உதவி கேட்டு வந்திடுவோம் என்று நினைத்திருப்பார்.
உழைப்புக்கு இனி என்ன செய்வது. அப்பாவின் ஞாபகம் வந்தது. திடீரென காணியில் வேலை இல்லை என்றதும் துடித்துப் போன அப்பாவின் மன உளைச்சல் விபத்தில் முடிந்தது. மனதைத் தளர விடக்கூடாது திடமாய் இருக்கவேணும். சொந்தமாய் ஏதாவது முயற்சி செய்ய வேண்டும். அம்மாவிடம் நடந்ததைச் செல்லும்போது அழுகை வந்தது.
“எனக்குத் தெரியுமடா. கஷ்டப்பட்டு உழைச்ச மனிசனையே காரியம் முடிஞ்சதும் தூக்கி எறிஞ்சவை உன்னில இரக்கம் காட்டுவினமே. சொன்னது கேளாமல் நீ ஏன் போனாய்”
“மற்றவையளிட்ட வேலை கேட்டு அவமானப்பட்டது போதுமம்மா. சொந்தமாய் ஏதாவது செய்யலாம் எண்டால் அதுக்கும் வழி இல்லையே” குரல் கம்மியது.
“ஏன் இல்லை. அதுக்கு நான் ஒழுங்கு செய்திட்டன். கொஞ்சக் காலத்துக்கு எங்களால வயல் செய்யேலாது இப்ப வயலைக் குத்தகைக்குக் குடுத்த கதிரேசுவோட கதைச்சனான் ஒவ்வொரு வருசமும் குத்தகை தராமல் அஞ்சு வருசத்துக்கு மொத்தமாய் காசு தந்திட்டு வயலைச் செய் எண்டு சொல்ல அவனும் விளையிற காணியை விடேலாது தாறன் எண்டு சொன்னான். ஒண்டரை லச்சம் வரும். காணாததுக்கு கொஞ்சக் கடனையும் வாங்குவம். இந்த வீட்டுக் காணியிலேயே முன் பக்கமாய் ஒரு கடையைப் போடு. நீ சாமான்கள் வாங்க வெளியில போற நேரம் நான் வந்து இருப்பன். சின்னதாய்த் தொடங்குவம் நல்லதே நடக்குமடா”
அம்மா சொல்லச் சொல்ல என்னால் நம்ப முடியவில்லை. அப்பாவின் பெரிய சொத்து கையில் இருக்க ஒன்றுமேயில்லை என்று நினைத்துக் கவலைப்பட்டேனே. பாய்ந்து அம்மாவைக் கட்டிக் கொண்டேன்.
“இது போதுமம்மா எனக்கு. இந்த நூலைப் பிடிச்சு மேல ஏறிடுவேன்”