- ( சிட்னியில் அண்மையில் நடந்த இலக்கிய சந்திப்பில், கானா. பிரபா எழுதிய வாசிப்பு அனுபவத்தை சமர்ப்பித்தவர் : செல்வி அம்பிகா அசோகபாலன் ) -
இன்றைய ஈழத்து இலக்கியப் பரப்பில் ஒரு நடமாடும் வரலாற்று ஆவணமாகத் திகழ்பவர் எழுத்தாளர் முருகபூபதி. சொல்லப் போனால் கிட்டத்தட்ட ஐம்பது வருட கால ஈழத்து இலக்கிய மரபின் ஒரே சாட்சியமாக முருகபூபதி விளங்குகின்றார் என்றால் மிகையில்லை. வாராந்தம் அவர் பகிரும் இலக்கிய மடல்கள், சக எழுத்தாளர்கள், அரசியல் கொண்டோர் குறித்து அவரின் பகிர்வுகள் எல்லாமே முன் சொன்னதை நியாயப்படுத்தும். முருகபூபதியின் படைப்புகளும் ஒரு குறுகிய வட்டத்தோடு நின்று விடவில்லை. அதனால்தான் அவை கட்டுரை, நாவல், பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம், புனைவு சாரா இலக்கியம் என்பவற்றோடு, சிறுகதைகளாகவும் பன்முகப்பட்டு நிற்கின்றன. தமிழக, ஈழத்து இலக்கியவாதிகளின் நட்பையும், பரந்துபட்ட வாசகர் வட்டத்தையும் சம்பாதித்து வைத்திருக்கும் முருகபூபதி, இரண்டு தடவைகள் இலங்கையின் தேசிய சாகித்திய விருது பெற்ற பெருமையையும் தனதாக்கிக் கொண்டவர்.
முருகபூபதி சமீப ஆண்டுகளில் புனைவு சாரா இலக்கியங்களிலேயே அதிகம் மூழ்கிப்போய்விட்டார் என்ற குறையைக் களையுமாற் போல, “கதைத் தொகுப்பின் கதை” என்ற அவரின் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அவரது ஏழாவது கதைத் தொகுதியான இந்தத் தொகுப்பை இலங்கை ஜீவநதி வெளியிட்டிருக்கின்றது. மொத்தம் பதினைந்து சிறுகதைகள் திரட்டப்பட்டு இந்தத் தொகுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவுஸ்திரேலிய மண்ணில் மேற்படிப்புக்காக வந்த புலமையாளர் கலாமணி அவர்களின் மகன் பரணீதரனை சிறுவனாக இந்த மண்ணில் கண்டவர் முருகபூபதி. தற்போது அதே சிறுவனை ஜீவநதி ஆசிரியர் பரணீதரனாகக் கண்டு, அவரே பின்னாளில் தன்னுடைய நூலை வெளியிடுவார் என்று முருகபூபதி அன்று நினைத்திருப்பாரா என்று இந்த நேரம் சிந்திக்கத் தோன்றுகிறது. அது முருகபூபதியின் நீண்ட இலக்கியப் பயணத்தையும் சொல்லாமற் சொல்லி வைக்கின்றது.
இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஒரு புதுமையான விடயமாக, ஒவ்வொரு சிறுகதைகளும் அவற்றை வாசித்தவர்களின் கண்ணோட்டமாக “இவர்களின் பார்வையில்” என்று கொடுக்கப்பட்டிருப்பது புதுமை. ஆனால், ஒவ்வொரு கதைகளுக்கும் பின்னணியாக அவற்றை இணைத்திருந்தால், குறித்த கதைகளை வாசித்த வாசகனும் தன்னுடைய வாசிப்பனுபவத்தோடு தொடர்ந்து ஒப்பு நோக்கவும் ஏதுவாக அமைந்திருக்கும். இருப்பினும் இம்மாதிரி வாசகர் அனுபவத்தை இணைத்துக் கொண்டது நல்லதோர் விடயம்.
புலம்பெயர்வு வாழ்வின் கலாச்சார அதிர்ச்சியை மெல்லக் கொடுத்து, பின்னணியில் இலங்கையில் சக இனங்களுக்கிடையிலான பகை, இரண்டு குடும்பங்களை இணைக்கும் ஒரு நேர் கோட்டில் வந்து நிற்கும் அவலச்சுவையைப் பின்னணியாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது கணங்கள் என்ற சிறுகதை. நமது அடுத்த தலைமுறை வலு வேகமாக புலம்பெயர் வாழ்வியலுக்கேற்பத் தன்னை மாற்றிக் கொள்கிறது என்ற சிந்தனையையும் இந்தக் கதை வளர்த்தது.
ஏலம் என்ற சிறுகதையில் தன் மகளுக்குக் கார் வாங்கப் போகும் தந்தையும், தாயுமாக அசல் ஈழத்தமிழ்க் குடும்பத்தின் உரையாடல் பாணியை அடியொற்றி நகைச்சுவையோடு புனைந்திருக்கிறார்.
“வாகனமும் வாழ்க்கையும் ஒன்றுதான்” என்பதை புலம்பெயர் வாழ்வில் அனுபவப்பட்டவர்கள் கண்முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் நிஜங்கள் பிரதிபலிக்கும். இந்தக் கதையில் ஆசிய நாட்டவரின் மனநிலையையும், ஆங்கிலேய சமூகத்தின் வாழ்வியல் நெறியையும் உருவக வெளிப்பாட்டால் காட்டுகின்றது. வெளிநாட்டு வாழ்க்கை அமைப்பில் வீடு ஏலம் விடுதல், கார் ஏலம் விடுதல் இவற்றிலெல்லாம் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அனுபவப்பட்டவர்கள் உள்ளுக்குள் சிரிப்பார்கள். தம்முடைய கதையை ஒட்டுக் கேட்டு எழுதினாற் போல என்று.
“ரீச்சர் சித்தரித்த பல பெண் பாத்திரங்கள் எங்கள் ஹோட்டலின் சமையல்கட்டுத் தரையில் கிடந்து அழுது புலம்புவதாகவும், தலைவிரி கோலமாக ஒப்பாரி வைப்பதாகவும் இனம் புரியாத கனவுகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன”
இவ்வாறு நிறைவை நோக்கி நகரும் “கதைத் தொகுப்பின் கதை” படிக்கும் போது இனம்புரியாத வலியை மனதில் எழுப்பியது.
பெண்ணிய சிந்தனை கொண்டவர்கள் காலவோட்டத்தில் தம்முடைய வாழ்வியல் மாற்றங்களில் சிதைந்து போவதை இந்தச் சிறுகதை ஆழமாகச் சொல்லி வைத்தது. சுந்தரி ரீச்சரைப் போல ஆயிரம் முகங்களை நம் சொந்த மண்ணில் காணலாம். அவர்களுக்குப் பின்னாலும் இது போலக் கதைகள் கொண்டிருக்கும்.
எழுத்தாளரின் பார்வை விசாலமானது. தன்னைச் சுற்றி அசையும், அசையாச் சலனங்களுக்குப் பின்னால் எப்படியெல்லாம் இருக்கும் என்று கற்பனை வளர்த்து அதையே கதையாக்கி விட முடியும்.
“பார்வை” என்ற கதையைப் படித்த பின்னர் என் மனது சிலாகித்தது அந்தத் தலைப்புக்காகத் தான். யாசகம் கேட்கும் மெல்பன் இளைஞனை ஒரு பக்கம் காட்டி, இன்னொரு எதிர்பாராத திசையில் கதைப் போக்கை நிறுவி, நம் பார்வையும், கோணமும் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்ற உளவியல் சிந்தனையை விதைக்கிறார்.
- முருகபூபதி -
புலம்பெயர் சமூகத்தில் இருந்து எழும் ஈழம் மீதான கரிசனையை அரசியல் விமர்சனம் செய்யும் பாங்கில் “காத்தவராயன்” மற்றும் “தினம் “ ஆகிய சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
“எங்கோ யாரோ யாருக்காகவோ” சிறுகதை என்ற இலக்கணத்துக்குள் அடக்க முடியாத யதார்த்த அவலம் நிரம்பியது. இறுதி யுத்தத்தின் பின்னர் அப்படியே கேட்டு எழுதிய அனுபவக் கதை போலத் தொனிக்கும். இதனை நமது ATBC வானொலிக்காகவும் வீடியோஸ்பதி காணொளித் தளத்துக்காகவும், வானொலிப் படைப்பாளி சங்கீதா தினேஷ் பாக்கியராஜாவின் குரல் வடிவில் பகிர்ந்த போது பல்வேறு நேயர்களின் உணர்வலைகளைக் காணமுடிந்தது.
“ பல வீடுகளில் அம்மம்மா அம்மியாகித் தான் இருக்கிறார். அம்மி எதனையும் அரைக்கும். இறுதியில் அரைத்து ஓய்ந்து முதியோர் இல்லத்தில் ஓய்வெடுக்கும்”
இப்படியாக ஒரு எழுத்தோட்டத்தை “அம்மம்மாவின் காதல்” என்ற சிறுகதையில் குறிப்பிட்டிருக்கிறார். இது வலிக்கும் நிஜம். அம்மம்மாவுக்கும் பேர்த்திக்குமானஉறவைப் பற்றிய இந்தச் சிறுகதையை படிக்கும் போது, புலம் பெயர் சூழலில் தம்பாட்டிமாருடன் வளரும் பிள்ளைகள் தமிழ்ப் பாடசாலை வகுப்பில் தமது அனுபவங்களைப் பகிர்ந்தது நினைவில் வந்து போனது. புலம் பெயர்ந்து வாழும் இன்றைய நம் தலைமுறைக்கு சாதிதான் காதலைப் பிரித்தது என்று எப்படி விளக்கமுடியும்?
அம்மம்மாவுக்கும் பேர்த்திக்குமான பந்தம் இவ்விதமிருக்க, தன் குழந்தைப் பேத்தியும் தாத்தாவும் கதை பேசும் சிறுகதை வழியே தாத்தாவாக வாழும் பூபதி அவர்களின் சில பக்கங்கள் புரட்டப்பட்டிருக்கின்றன. அதைப் படிக்கும் போது மறைந்த நண்பன் ஈழநாதன் எழுதிய கவிதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. அதன் சாராம்சமும் தந்தைக்கும், மகளுக்குமான வேறுபட்ட தாய்நாடு பற்றிய குழப்பமே.
ஈழநாதனின் அந்தக் கவிதை இதுதான்:
பிறந்த பொன்னாடு- ஈழநாதன்
கல் தோன்றி மண்தோன்றாக் காலத்துக்
கதையெல்லாம் தெரியாது. ஆனால்..!
என் முன் தோன்றிய மூத்த பழங்குடி
அப்புவும் ஆச்சியும்
வாழ்ந்த மண்.
ஏன் அப்புவின் அப்புவும்
ஆச்சியின் ஆச்சியும் கூட
அங்கேயே வாழ்ந்தனர்.
அதுக்கு முன்
இன்னும்
ஒன்றிரண்டு தலைமுறை
அப்பு ஆச்சிமார் கூட
இருந்திருக்கலாம்.
நான் கூட பிறந்து
வளர்ந்தது
அங்கேதான்
பிறந்த நாடுதான் பொன்னாாடு
என்றெல்லாம்
சொன்னேன் மகனுக்கு.
அவனும் மொழிகிறான்.
உண்மைதான் அப்பா
பிறந்த நாடுதான் பொன்னாடு
பிறந்த நாட்டை விட்டு
வரமாட்டேன் இலங்கைக்கு.
அவள் அப்படித்தான் சிறுகதை, நம் சமூகம் எதிர்கொள்ளப்போகும் கலாசார அதிர்வின் சிறுதுளியாக அமைந்திருக்கின்றது. கதையின் சாரத்தைச் சொன்னால் அந்தச் சுவாரஸ்யத்தை இழந்து விடுவீர்கள்.
ஒரு செல்லப் பிராணிக்கும் மனிதனுக்குமான பந்தத்தை ஆபிரகாம் கோவூரோடு இணைத்து எழுதிய “எங்கள் ஊர் கோவூர்” அவுஸ்திரேலிய வெள்ளையின மக்களின் வாழ்வியலைக் காட்டும் கண்ணாடி.
- செல்வி அம்பிகா அசோகபாலன் -
கல்வெட்டு எழுதும் கலாச்சாரம், சம்பளமில்லாத திருமணத் தரகர் வேலை இவற்றைக் கூட பூபதி அவர்களின் எழுத்து விட்டு வைக்கவில்லை. எள்ளலோடு நகரும் அந்தச் சிறுகதை கூட நம் வாழ்வியலில் நிஜ தரிசனமே. அதன் பின்னால் வரும் காதலும் கடந்து போகும் சிறுகதை முந்தியதன் எதிர்ப்பரிமாணமாக இருக்கின்றது.
கொரோனா காலத்தைக் கடந்து விட்டோம். ஆனால், அந்த இருள் சூழ்ந்த இரண்டு வருடங்களின் சாட்சியம் பறைகிறது “கொரோனா கால உறவுகள்” மற்றும் “நடையில் வந்த பிரமை”.
சிறுகதைகள் என்று இவை அடையாளப்பட்டாலும், நம் நடைமுறை வாழ்வியலில் கடந்து போகும் பாத்திரங்களை வைத்து, ஈழத்து அரசியல், போராட்ட நிகழ்வுகளின் பின்னணிகளைக் கொண்ட கதைக் களன்கள், புலம்பெயர் இருதலை வாழ்வு இவற்றையெல்லாம் நோக்கும் போது இவையும் புனைவு சாரா இலக்கியத்தின் ஒரு பரிமாணமாகவே அமைந்து விடுகின்றன.
லெ.முருகபூபதி அவர்களின் “கதைத் தொகுப்பின் கதை” சிறுகதைத் தொகுப்பு மனதில் பல்வேறு சிந்தனைகளையும், கேள்விகளையும் கிளப்பும் விதம் அமைந்தவொரு திரட்டு.
அனுப்பியவர்- முருகபூபதி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.