- ஜீவநதி சஞ்சிகையின் சிற்றிதழ்கள் சிறப்பிதழ் 175இல் வெளியான கட்டுரை. -

கலைச்செல்வி சஞ்சிகையின் ஆரம்பமும், நோக்கங்களும் பற்றி.....

இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த முக்கியமான சஞ்சிகைகளிலொன்று 'கலைச்செல்வி'.   இச் சஞ்சிகை எழுத்தாளர் சிற்பி  (சிவசரவணபவன்) அவர்களை ஆசிரியராகக்கொண்டு ஆடி 1958இலிருந்து வெளியானது.  'புதிய சொல'  சஞ்சிகையின் , ஜனவரி-மார்ச் 2016 வெளியான,  முதலாவது இதழில்  எழுத்தாளர் அருண்மொழிவர்மன் எழுதிய 'கலைச்செல்வி' பற்றிய கட்டுரையில் முதலாவது கலைச்செல்வி இதழ் ஆகஸ்ட் 1958 வெளியானதாகக் குறிப்பிட்டிருந்தாலும், அதன் முதலாவது இதழ் ஆடி 1958 வெளியானது என்பதை 'நூலகம்' தளத்திலுள்ள ஆடி 1958 இதழிலிருந்து அறிய முடிகின்றது. 1966 வரை வெளியான சஞ்சிகை. அக்காலகட்டத்தில் அதன் 70 இதழ்கள் வெளிவந்துள்ளதாக எழுத்தாளர் அருண்மொழிவர்மன் கலைச்செல்வி பற்றிய 'புதிய சொல்' இதழில் வெளியான கட்டுரையில்  'ஈழத்தின் மிகமுக்கியமான இதழ்களில் ஒன்றாக கலைச்செல்வி 1958 முதல் 1966 வரையாக 8 ஆண்டு காலத்தில் கிட்டத்தட்ட 70 இதழ்கள் வரை வெளியானது' என்று குறிப்பிட்டிருப்பார்.  ஆனால் ஜூன் 2008 ஞானம் இதழில் வெளியான சிற்பியின் 'கலைச்செல்விக்காலம்'  கட்டுரையின் இறுதியில் கலைச்செல்வி  71 இதழ்கள் வெளியானதாகக் கட்டுரையாளர் சிற்பி கூறுவார்: "அவர் கையளித்த பிரதிகளுடன் என்னிடமிருந்த பிரதிகளையும் சேர்த்து, ஆண்டு - மாத வாரியாக ஒழுங்கு படுத்தினேன். அந்த எட்டு ஆண்டுகளில் 71 பிரதிகள் மட்டுமே வெளியாகியிருந்தன; அவற்றுள் இரண்டு பிரதிகள் தொலைந்தே விட்டன. " (ஞானம் ஜூன் 2009 பக்கம் 129)

இவற்றிலிருந்து கலைச்செல்வி சஞ்சிகையின் முதல் இதழ் ஆடி 1958இல் வெளியானதென்பதையும், மொத்தம் 71 இதழ்கள் வெளியானதென்பதையும் அத்துடன் சஞ்சிகை 1966 வரை வெளியானதென்பதையும் அறிய முடிகின்றது. எண்ணிம நூலகம் தளத்தில் கலைச்செல்வி சஞ்சிகையின் இறுதி இதழாக அக்டோபர் 1966 இதழ் பற்றிய விபரமேயுள்ளது. அதற்கான இணைப்பு வேலை செய்யவில்லை. இவ்விதழ் கலைச்செல்வியின் கடைசி இதழா என்பது தெரியவில்லை. ஏனென்றால் கலைச்செல்வி இதழானது தொடர்ச்சியாக மாதா மாதம் வெளிவந்திருக்கவில்லை. சில சமயங்களில் இரு மாதங்களுக்கு ஓர் இதழாகவும் வெளிவந்துள்ளதை நூலகம் தளத்திலுள்ள கலைச்செல்வி இதழ்களிலிருந்து அறிய முடிகின்றது. அருண்மொழிவர்மனின் கட்டுரையிலிருந்து சில மாதங்களில் அது வெளிவராமலுமிருந்திருக்கின்றது என்பதையும் அறிய முடிகின்றது.  டிசம்பர் 1966  வரை இதழ் வந்ததா அல்லது மேற்படி அக்டோபர் இதழே அதன் இறுதி இதழா என்பது நிர்ணயிக்கப்பட வேண்டியதொன்று. எது எபபடியிருந்தாலும் ஆடி 1958இல் வெளியாகத்தொடங்கிய கலைச்செல்வி 1966இன் இறுதிப்பகுதியில் தன் பயணத்தை நிறுத்துக்கொண்டது என்பது தீர்மானமாகத்தெரிகின்றது.

கலைச்செல்வி இதழின் ஆரம்பத்தில் இணை  ஆசிரியர்களாக தமிழ்வேள், சிற்பி ஆகியோர் இருந்திருக்கின்றனர். துணை ஆசிரியர்களாக தமிழ்ச் செல்வன், ஈழத்துச் சோமு இருந்திருக்கின்றனர். இடையில் கெளரவ ஆசிரியர்களாக தமிழ்வேள், சிற்பி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் இருந்திருக்கின்றனர். இறுதிக் காலத்தில் ஆசிரியராகச் சிற்பியும், துணை ஆசிரியராக மு.கனகராசனும், கெளரவ ஆசிரியராக இ.வைத்தியலிங்கமும் இருந்திருக்கின்றார்கள்.  முதல் இதழில் கலைச்செல்வியைத் தமிழ் இலக்கிய  மன்றம் (கந்தரோடை, சுன்னாகம்) வெளியிட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இடைப்பட்ட காலத்தில் பாலன் வெளியீடு (மார்கழி 1962, கார்த்திகை 1962) என்றும் அறிவிக்கப்பட்டு கலைச்செல்வி வெளியாகியுள்ளது. அக்காலகட்டத்தில் செட்டிகுளம் பகுதியிலிருந்து கலைச்செல்வி வெளியானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைச்செல்வி இதழ் பற்றிக் குறிப்பிடுகையில்  எழுத்தாளர் 'ஞானம்' ஞானசேகரன் அவர்கள் தனது 'ஈழத்துச் சிற்றிதழ்கள்' கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுவார்:

"ஈழத்தில் இதுவரை காலத்தில் நூற்றுக்கும்; மேற்பட்ட சிற்றிதழ்கள் தோன்றியுள்ளன. பாரதி, மறுமலர்ச்சி, கலைச்செல்வி மல்லிகை, குமரன்,  இளம்பிறை, சிரித்திரன், விவேகி, மரகதம், தேனருவி, மலர், மாலை முரசு, நதி,  அலை, தீர்த்தக்கரை, அஞ்சலி, கொழுந்து, நந்தலாலா, பூரணி, சுடர் புதுசு....."

இவ்விதமே  கலைச்செல்வி பற்றி எழுதும் பலரும் குறிப்பிடுவதை அவதானிக்க முடிகின்றது. இவ்விதமான பட்டியல் தவறானதொரு பிம்பத்தைத்  தருகின்றது. ஏனென்றால் இங்கு முக்கியமான இன்னுமொரு சஞ்சிகையின் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. அது தவிர்க்கப்பட முடியாத சஞ்சிகை. அதுதான் ஈழதேவி. கலைச்செல்வி சஞ்சிகை தோன்றுவதற்குக் காரணமே ஈழதேவி சஞ்சிகைதான்.  1957-1958 காலகட்டத்தில் கழுத்துறையில் வெளியான மாத சஞ்சிகை ஈழதேவி. இதன் ஆசிரியர் பண்டிதர் த.சுப்பிரமணியம். நிதி, நிர்வாகம், வெளியீட்டுக்குப் பொறுப்பாக இருந்தவர் நா.பாலசுப்பிரமணியம் (பாலா). 58 கலவரத்தையடுத்து உருவான சூழலில் கழுத்துறையில் தொடர்ந்தும்  ஈழதேவி சஞ்சிகையினை நடத்த முடியாத நிலயேற்படுகின்றது. இதனைப்பற்றி எழுத்தாளர் உதயணன் டிசம்பர் 15 வெளியான 'தாய்வீடு' பத்திரிகையில் பின்வருமாறு பதிவு செய்கின்றார்:

“பாலா என்னிடம் வந்து ஈழதேவியை நிறுத்தமுடியாது என்று துன்பப்பட்டார்.  வெகுநாட்கள் யோசித்தபின்னர் பாலாவும் நானும் யாழ்ப்பாணம் போய் சிற்பியைச் சந்தித்து விபரத்தைச் சொன்னோம். களுத்துறையில் வெளிவந்த ஈழதேவி இதழை ஒரு குழு அமைத்து நடத்துவது பற்றி பல தடவைகள் கூடி ஆலோசித்தோம்.  அந்தக் குழுவில் சிற்பியின் ஆசிரியரான பொன்னம்பலமும் இருந்தார்.  முடிவில் ஈழதேவி என்ற பத்திரிகைப் பெயரைக் கலைச்செல்வி என்று மாற்றுவது என்றும் ஈழதேவியில் வெளிவந்த தொடர் அம்சங்களைத் தொடர்ந்து கலைச்செல்வியில் வெளியிடுவது என்றும் முடிவுசெய்யப்பட்டது.  உதாரணமாக ஈழதேவியின் கடைசி இதழில் இதய வானிலே எனும் எனது தொடர்கதையின் முதலாம் அத்தியாயம் வெளியானது.  அதன் இரண்டாம் அத்தியாயம் கலைச்செல்வி முதலாம் இதழில் வெளியானது.  இதுவே கலைச்செல்வியின் ஆரம்பகால வரலாறு!”

இதனைப்பற்றிக் கலைச்செல்வி சஞ்சிகையின் முதலாவது இதழிலும் விரிவாகக்குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்விதழில் வெளியான 'அன்பார்ந்த நேயர்களே' என்னும் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

"வணக்கம், இம்மாதம் தொடக்கம் ஈழதேவி கலைச்செல்வியாக மாறுகின்றாள். பெயர் மாற்றம் பெரும்பாலான நேயர்களின் வேண்டுகோளுக்கிணங்கச் செய்யப்பட்டது. கலைகள் பல வளரத் துணை புரியும் ஈழதேவி உண்மையிலேயே கலைச்செல்விதானே. நிர்வாகத்திலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கழுத்துறைத் தமிழ்க்கழகத்தின் வெளியீடாக வந்த பத்திரிகை , இனி மேல் தமிழ் இலக்கிய மன்றத்தின் ஆதரவில்  ஒவ்வொரு தமிழ் முதலாந்திகதியின் போதும் ஒழுங்காக மலரும். ஆசிரியர் குழுவில் புதிதாக தமிழவேள், தமிழ்ச்செல்வன் ஆகியோர் இடம் பெறுகின்றனர்."

'ஈழதேவி'யே கலைச்செல்வியாக உருமாறினாள் என்னும் தகவலைக் கலைச்செல்வி சஞ்சிகை பற்றி ஆய்வுக்கட்டுரைகள் அல்லது அறிமுகக் கட்டுரைகள் எழுதும் எவரும் மறக்காமல் குறிப்பிட வேண்டும். இலங்கைத்  தமிழ்ச் சஞ்சிகைகள் வரலாற்றில் 'ஈழதேவி'  சஞ்சிகைக்குள்ள முக்கியத்துவத்தை எக்காரணம் கொண்டும் மறைத்துவிடக் கூடாது. 'ஈழதேவி' சஞ்சிகையின் பிரதிகள் எவையும் என் பார்வைக்குக்  கிட்டவில்லை. நூலகம் தளத்திலும் தேடிப்பார்த்தேன்.கிடைக்கவில்லை. 'ஈழதேவி' சஞ்சிகை பற்றிய ஆய்வும் அவசியமானது.

கலைச்செல்வி பத்திரிகை பற்றி எழுத்தாளர் உதயணன் தாய்வீடு பத்திரிகையின் டிசம்பர் 15,2015 இதழில் எழுதிய கட்டுரையை வெளியிட்ட தாய்வீடு பத்திரிகை கட்டங்கட்டிப்பின்வருமாறு கூறும்:

"ஈழத்தமிழ் இலக்கிய உலகின் முன்னோடி சஞ்சிகை எனக்கூறப்படுவது கலைச்செல்வியாகும்.  தமிழகத்தில் இலக்கியத்தில் முக்கிய பாய்ச்சல்கள் நடந்த காலத்தை மணிக்கொடி காலம் என்று அழைப்பது போல் ஈழத்தில் கலைச்செல்வி காலம் அழைக்கப்படுகிறது."

இக்கூற்றினைத் தாய்வீடு பத்திரிகை எழுத்தாளர் உதயணனின் கட்டுரையில் கட்டங்கட்டிய கூற்றாகப் பிரசுரித்துள்ளது. உதயணனின் கட்டுரையைப் பார்க்கும் எவரும் இக்கூற்று அக்கட்டுரையிலுள்ள உதயணன் அவர்களின் கூற்றென்றே எண்ணி விடுவர். ஆனால் இது உதயணனின் கூற்றல்ல. அக்கட்டுரையில் இல்லாத கூற்று. தாய்வீடு பத்திரிகையின் கலைச்செல்வி பற்றிய அறிமுகக்கூற்று. இவ்விதமான கட்டுரையாளரின் கூற்றுகள் அல்லாத கூற்றுகளை வெளியிடுகையில் வெளியிடும் ஊடகத்தினர் அவ்வகையான கூற்றுகளின் சொந்தக்காரர்களையும் குறிப்பிடுவது அவசியம். தேவையற்ற சந்தேகங்களைத் தவிர்ப்பதற்கு இவ்வகையான அணுகுமுறை உதவும். உண்மையில் மேலுள்ள கூற்றில் குறிப்பிட்டுள்ளவாறு கலைச்செல்வி ஈழத்தமிழ் இலக்கிய உலகின் முன்னோடிச் சஞ்சிகையும் அல்ல. இலங்கையின் மணிக்கொடிக்காலத்துடன் கலைச்செல்விக்காலகட்டத்தை ஒப்பிடவும் முடியாது. இலங்கையின் மணிக்கொடிக்காலத்தை மறுமலர்ச்சிச் சஞ்சிகைக் காலத்துடன் ஒப்பிடுவதே பொருத்தமானது. கலைச்செல்வி சஞ்சிகை இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் முக்கியமானதொரு சஞ்சிகை. இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பங்களித்த முக்கியமானதொரு சிற்றிதழ். இலக்கியத்தின் பல்வேறு முகாம்களைச் சேர்ந்தவர்களுக்கும் களமாக விளங்கியதோர் இதழ் கலைச்செல்வி என்று கூறலாம்.  அதன் நோக்கத்தை அதன் முதலாவது இதழின் ஆசிரியத்தலையங்கமே வெளிக்காட்டுகின்றது:

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ  வேண்டும். தமிழனின் மொழி,கலை,கலாச்சாரம் ஆகியவற்றிற்கு , அவற்றின் தொன்மை மணம் குன்றாது புதுமை மெருகேற்ற வேண்டும். இவைதான் 'கலைச்செல்வி;யின் நோக்கங்கள். 'ஈழதேவி'யை இதுவரை ஆதரித்து வந்த சந்தா நேயர்கள், வாசகர்கள் , எழுத்தாளர்கள், விற்பனையாளர்கள், விளம்பரதாரர்கள் தொடர்ந்து 'கலைச்செல்வி'யையும் ஆதரிப்பார்கள் என்று நம்புகின்றோம்."

மேற்படி ஆசிரியத்தலையங்கக்  கூற்று 'கலைச்செல்வி'யின் நோக்கங்களைச் சிறப்பாகவே வெளிப்படுத்துகின்றது. தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும். தமிழர்தம் மொழி , கலை, கலாச்சாரம் ஆகியவற்றின் தொன்மைக்குப் புதுமை மெருகேற்ற வேண்டும். இதுதான் கலைச்செல்வியின் பிரதான நோக்கம். இந்த அடிப்படையிலேயே கலைச்செல்விக் காலகட்டத்தை 'தாய்வீடு' கூறுவதுபோல் 'தமிழகத்தில் இலக்கியத்தில் முக்கிய பாய்ச்சல்கள் நடந்த காலத்தை மணிக்கொடி காலம் என்று அழைப்பது போல் அழைக்க முடியாது. மறுமலர்ச்சி சஞ்சிகை அத்தகைய பாய்ச்சல்களை நிகழ்த்திய சஞ்சிகை, ஆனால் நிச்சயமாகக் கலைச்செல்விக் காலமென்று இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் ஒரு காலகட்டத்தைக் குறிப்பிடலாம்.

கலைச்செல்வி சஞ்சிகை பற்றிக்  கலாநிதி க.கைலாசபதியின் 'முற்போக்கு  இலக்கியம் உச்சக்கட்டத்தில் இருந்த அறுபதுகளை ஒட்டிய காலப்பகுதியில்  எதிரணியில் இருந்தவர்களுக்கு ஓர் ஒதுக்கிடமாக கலைச்செல்வி இருந்தது' என்னும் கூற்றினையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.  முற்போக்குத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் பலர் பேராசியர் க.கைலாசபதி உட்படக்  கலைச்செல்வியுடன் இணைந்திருந்தார்கள் என்பதையும் தட்டிக்கழித்துவிட முடியாது. கலைச்செல்வியின் முதலாவது இதழ் வெளியானபோது ஈழத்துச்சோமு அதன் துணையாசிரியர்களிலொருவராக இருந்திருக்கின்றாரென்பதும் குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் டொமினிக் ஜீவா, பேராசிரியர்கள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி (அப்பொழுது அவர்கள் பட்டதாரிகள்)  போன்றோரின் படைப்புகள் வெளியாகியுள்ளன.  கூடவே  எஸ்.பொன்னுத்துரை , மு.தளையசிங்கம் போன்றவர்களின் படைப்புகள் வெளியாகியுள்ளன.  கலைச்செல்விக்கென்று நோக்கங்கள் இருந்தபோதும் அனைத்துத்தமிழ் இலக்கியப் பிரிவினரையும் அது அரவணைத்தே சென்றுள்ளது என்பதற்குக் கலைச்செல்வியில் பல்வேறு இலக்கிய முகாம்களையும் சேர்ந்தவர்கள் எழுதியதே சான்று. .  அதே சமயம் அனைத்துப் பிரிவினரையும் அரவணைத்து , ஆதரிக்கும் அதன் தனித்துவத்தையும் கலைச்செல்வி  பேணி வந்துள்ளதையும்  அவதானிக்க முடிகின்றது. அதனைக் குறிப்பிட்ட ஓர் இலக்கியக் குழுவைச் சேர்ந்தது என்று கூற முடியாத வகையில் அது தன்னை இறுதிவரைத் தக்கவைத்துள்ளது. அதுவோர் ஆரோக்கியமான விடயம்.

'ஞானம்' தி.ஞானசேகரன் அவர்கள் 'சிற்றிதழ்கள்' பற்றிய தனது கட்டுரையில் 'இந்த இதழ்கள் வாசகர்களைக் கவர்வதற்குச் சமரசம் செய்வதில்லை' என்று கூறியிருப்பார். கலைச்செல்வி சஞ்சிகை இறுதிவரை அப்படி இருந்ததா என்பதை உறுதியாகக் கூற முடியாது. அறுபதுகளில் வெளியான அதன் பல இதழ்களில் சினிமா நட்சத்திரங்களை உள்ளடக்கிய விளம்பரங்களும், செய்திகளும் (திரைவிருந்து, சினிமா ரேஸ்) வெளிவந்திருந்ததை அவதானிக்க முடிகின்றது. சினிமா நடிகர்களுடனான நேர்காணல்கள், நடிகர், நடிகைகள் பற்றிய செய்தித்துணுக்குகள் என வெகுசன வாசகர்களைக்கவரும் வகையில்  சினிமா சம்பந்தமான விடயங்களைத் தாங்கி கலைச்செல்வி அக்காலகட்டத்தில் வெளியாகியுள்ளது என்பதையும் அவதானிக்க  முடிகின்றது. கலைச்செல்வியின் இப்போக்கு அது தீவிர வாசகர்களை மட்டும் அணுகுவதை நோக்கமாகக்கொண்டிருக்கவில்லையென்பதைப் புலப்படுத்துகின்றது.  அனைத்து வாசகர்களையும், அனைத்து இலக்கியப்பிரிவினரையும் கவர்வதையே நோக்கமாகக்கொண்டு அது செயற்பட்டது என்பதையும் வெளிக்காட்டுகின்றது.  இது ஒருவகையில் சமரசமே. 'கலைச்செல்வி'யும்  தன் இருப்புக்காகச் சமரசம் செய்த சஞ்சிகைகளிலொன்றே என்பதும் மறுக்கப்பட முடியாததே.

மேலும் பாரதி, மறுமலர்ச்சி , கலைச்செல்வி போன்ற சஞ்சிகைகள் வெளிவருவதற்குப் பல வருடங்களின் முன்னரே இலங்கையில் தமிழ் சஞ்சிகைகள் சில வெளியாகியுள்ளன என்பதையும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது பற்றிப்  பேராசிரியர் செ.யோகராசா குறிப்பிட்டிருக்கின்றார். இதனை 'ஈழத்தில் தமிழ்ச் சஞ்சிகைகளின் பங்களிப்பு' என்னும் ஆய்வுக் கட்டுரையில் கிழக்குப் பல்கலைக்கழகத் தற்காலிக விரிவுரையாளரான  சி.ஓசாநிதி பின்வருமாறு சுட்டிக்காட்டுவார்: "1015இல் யாழ்ப்பாணத்தில் இருந்து மங்களாம்பாள் என்பவரைக்கொண்டு வெளிவந்த தமிழ்மகள் என்னும் பெண்கள் சஞ்சிகை, 1927இல் திருகோணமலையில் இருந்து தையலமா என்பவரைக்கொண்டு வெளிவந்த மாதர்மலிமாலிகை என்பவனவும் குறிப்பிடத்தக்கவையாக இருந்தாலும் இவை பற்றி ஆய்வு செய்தவர்கள் குறைவாதலினால் இவை பற்றிக் கவனத்தில் எடுக்கப்படவில்லை (செ.யோகராசா, செ.2011)"   இசசுட்டிக்காட்டல் இலங்கையில் வெளியான சஞ்சிகைகள் பற்றிய விரிவான ஆய்வொன்றின் தேவையினை வலியுறுத்துகின்றது.

கலைச்செல்வியும் அதன் கலை, இலக்கியப்பங்களிப்பும் பற்றி...

- கலைச்செல்வி ஆசிரியர் சிற்பி சரவணபவன் -

கலைச்செல்வி தனது முதலாவது இதழிலிலிருந்தே இளம் எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக்கொடுத்தது. உதாரணத்துக்கு எழுத்தாளர் யாழ்நங்கையைக் (அன்னலட்சுமி ராஜதுரை)  குறிப்பிடலாம். அப்பொழுது அவர் இராமநாதன் கல்லூரி மாணவியாகவிருந்தார்.  'அன்னையின் ஆவல்' என்னும் அவரது கவிதையினைப் பிரசுரித்து  'சற்று முயன்றால் சிறந்த கவிஞராகலாம்' என்றும் வாழ்த்தியிருந்தது. யாழ்நங்கை பின்னர் சிறந்த எழுத்தாளர்களிலொருவராகப் பரிணாம வளர்ச்சியடைந்தார். அவரைப்போல் கவிஞர் ச.வே.பஞ்சாட்சத்திரத்தின் எழுத்தையும் வளரும் எழுத்தாளர் பகுதியில் பிரசுரித்து வாழ்த்தியிருந்தது.  எழுத்தாளர் இலங்கையர்கோனின் உறவினரான திருமது நாகபூஷணி பாலசுப்பிரமணியத்தின் முதற் சிறுகதையான 'அன்பிற்கு அப்பால்' கதையினை முதற்கதையெனக் குறிப்பிட்டு , அவரை அறிமுகப்படுத்தி வைத்தது (ஏப்ரில் 1963 இதழ்). இவை சில  உதாரணங்கள். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதென்பது ஊடகங்களின் முக்கியமானதொரு பங்களிப்பே.  அதுபோல் எழுத்தாளர்களை அவர்கள்தம் படைப்புகளூடு அறிமுகம் செய்வதும் முக்கியமானதே. அந்தப் பங்களிப்பின் தேவையினை ஆரம்பத்திலிருந்தே உணர்ந்து கலைச்செல்வி செயற்பட்டிருப்பது ஆரோக்கியமானது. பாராட்டுதற்குரியது.

கலைச்செல்வி சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை எனத் தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பினைக் குறைத்து மதிப்பிட முடியாது.  சிறுகதையைப்பொறுத்தவரையில் இலங்கையர்கோன், சம்பந்தன், சு.வே, தெளிவத்தை ஜோசப், வ.அ.இராசரத்தினம், மு.தளையசிங்கம், சொக்கன், சாந்தன்,  செ.கணேசலிங்கன், ஈழத்துச் சோமு, புதுமைப்பிரியை, உமா, யாழ்நங்கை, செம்பியன் செல்வன், செங்கை ஆழியான், பவானி, செ.யோகநாதன் (இனியன்), பா.பாலேஸ்வரி (பின்னர் நா.பாலேஸ்வரி என்று அறியபப்ட்டவர்), எஸ்.பொன்னுத்துரை,  நாவேந்தன் , தேவன்(யாழ்ப்பாணம்) , முனியப்பதாசன், தெணியான்  , து.வைத்திலிங்கம், பானுசிம்ஹன் , இ.நாகராஜன், மு.பொன்னம்பலம் (தீவான்) , சி.வைத்தியலிங்கம், பெரி சண்முகநாத, யாழ்வாணன்  என்று  அனுபவம்மிக்க, ஆரம்ப, வளர்ந்துவரும் எழுத்தாளர்களின் படைப்புகளைக் கலைச்செல்வி வெளியிட்டதும் கவனிக்கத்தக்கது.  சு.வே.யின் புகழ்பெற்ற சிறுகதையான 'மண் வாசனை' வெளியானது கலைச்செல்வி இதழில்தான். எழுத்தாளர் மு.தளையசிங்கத்தின் முக்கிய சிறுகதைகளிலொன்றான 'புதுயுகம் பிறக்கிறது' கலைச்செல்வியின் தீபாவளி மலரில் (1962) வெளிவந்துள்ளது. குகம் என்னும் பெயரில் எழுதிய எழுத்தாளரும் கலைச்செல்வி அறிமுகப்படுத்திய எழுத்தாளர்களில் ஒருவர்.  எழுத்தாளர்  பானுசிம்ஹன் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வடமொழிப்பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழகத்தைச்சேர்ந்தவர். சரித்திர, இலக்கிய நிகழ்ச்சிகளை மையமாகக்கொண்டு சிறுகதைகள் எழுதியவர். அவரது 'அவள் பென்' நினைவில் நிற்குமொரு சிறுகதை. காரணம்: யசோதரை, சித்தார்த்தரை வைத்து, சித்தார்த்தர் துறவு போனதற்குப் புதியதொரு காரணத்தை வைத்துப் பின்னப்பட்ட கதையென்பதால்.  தமிழகத்தின் சிறந்த  எழுத்தாளரான எம்.வி.வெங்க்ட்ராமனின் சிறுகதையான  'ஊஞ்சல்' அதன் பொங்கல் மல'ரொன்றில் (1966) வெளியாகியுள்ளது. சொக்கனின் 'ஆசிரியர்' சிறுகதை மறக்க முடியாத சிறுகதைகளிலொன்று. அவரது மாணவனொருவன் உண்மைவிளம்பியென்று கையொப்பமிட்டு நடக்கவிருந்த திருமணமொன்றில் மணமகளுக்கு எதிராக மொட்டைக்கடிதமொன்றை எழுதித் திருமணத்தைக் குழப்பவிருந்த சமயம், ஆசிரியர் செல்வரத்தினம் மொட்டைக்கடித்ததிலிருந்த இலக்கியப்பிழைகள் மூலம் அதை எழுதியவன் அவரது மாணவர்களிலொருவனே என்பதைக் கண்டுபிடித்துத் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி வைக்கின்றார். சிறுவயதில் வாசித்ததிலிருந்து  மறக்க முடியாத சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் சிறுகதைகளிலொன்று.

கலைச்செல்வி அவ்வப்போது உருவகக்கதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளது. சு.வே, சொக்கன் ,  எம்.ஏ.ரஹ்மான் என்று பலரின்  உருவகக்கதைகள் கலைச்செல்வியில் வெளியாகியுள்ளன.

மேலும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காகவும், சிறுகதையின் வளர்ச்சிக்காகவும் கலைச்செல்வி நடத்திய சிறுகதைப்போட்டிகள் முக்கியமானவை. குறிப்பாக கலைச்செல்வி வவுனியாவில் அது நடத்திய கலைவிழாவினையொட்டி (1962) சிறுகதைப்போட்டியை குறிப்பிடலாம். முதல் மூன்று பரிசுகளை முறையே செம்பியன் செல்வன் ( 'இதயக்குமுறல்'), யோ.பெனடிக்ற் பாலன் ('மெழுகு வர்த்தி') , எம்.எம்.மக்கீன் ('ரிவொலூஷன்') பெற்றன. பாராட்டுப்பத்திரங்களை நால்வர் பெற்றனர். அவர்கள்: வி.சிங்காரவேலன் ('பெரியக்கா'), செங்கை ஆழியான் ('உச்சிப் பொழுது'), நாவேந்தன் ('தவறு'), மு.பொன்னம்பலம்  அல்லது 'தீவான்' ('குருட்டுச் சிலை') . அன்று ஆரம்ப எழுத்தாளர்களாகிய மேற்குறிப்பிட்ட எழுத்தாளர்கள் பின்னர் நாடறிந்த , இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு  வளம் சேர்த்த முக்கிய எழுத்தாளர்களாக விளங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விதமான  அவர்களது வளர்ச்சிக்கு நிச்சயம் கலைச்செல்வியில் அவர்களது பங்களிப்பு நிச்சயம் உதவியிருக்கும். கலைச்செல்வியின் இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கான சிறுகதைப் பங்களிப்பு முக்கியமானதுடன் விரிவான ஆய்வுக்குமுரியது.  கலைச்செல்வி நடத்திய இலங்கையர்கோன் சிறுகதைப்போட்டியும் அதன் சிறுகதைத்துறைப்பங்களிப்பே.

கலைச்செல்வியின் இன்னுமொரு முக்கியமான பங்களிப்பு அது தமிழ் நாவல் துறைக்கு கொடுத்த முக்கியத்துவம்.  உதயணனின் 'இதயவானிலே', 'மனப்பாறை', சிற்பியின் 'உனக்காகக்  கண்ணே', 'அன்பின் குரல்', 'சிந்தனைக் கண்ணீர்', செம்பியனின் செல்வனின் 'கர்ப்பக்கிருகம்', அகிலனின் 'சந்திப்பு'  என நாவல்கள் பல தொடர்களாக வெளிவந்துள்ளன. செ.யோகநாதனின் வரலாற்றுக் குறுநாவலான 'மலர்ந்தது நெடுநிலா'வையும் கூடக் குறிப்பிடலாம். இக்குறுநாவல்பற்றிய அறிமுகத்தில் கலைச்செல்வியின் 'இனியன்; என்னும் பெயரில் 'முப்பது ரூபா' என்னும் தலைப்பில் சிறுகதை எழுதியவர் செ.யோகநாதன் என்பது குறிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் செ.யோகநாதன் இனியன் என்னும் புனைபெயரிலும் எழுதிய விபரத்தை அறிந்துகொள்கின்றோம்.  நாவல் துறையின் வளர்ச்சிக்காகவும், எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காகவும் அது நடத்திய 1000 ரூபா நாவல் போட்டி முக்கியமானது. முதற்பரிசு ரூபா 500 பெற்ற நாவல் மு.தளையசிங்கத்தின் 'ஒரு தனி வீடு', இரண்டாம் பரிசான ரூபா 300 பெற்ற நாவல் மு.கந்தப்பு (மன்னவன்) எழுதிய 'காலடியில்', மூன்றாம் பரிசு ரூபா 200 பெற்ற நாவல் செ.யோகநாதனின் 'ஞாயிறும் எழுகிறது'. மேலும் நான்கு நாவல்கள் பாராட்டுப்பரிசினைப் பெற்றன. அவை: செங்கை ஆழியானின் 'சங்கிலியன்', பா.பாலேஸ்வரியின் 'திலகம்', மு.மயில்வாகனத்தின் 'காட்டு மல்லிகை' மற்றும் க.பரராஜசிங்கத்தின் 'பெண்ணல்ல நீ'.  பின்னர் பிரபஞ்ச யதார்த்த வாதம் பேசியவரும், முற்போக்கு இலக்கியத்தைக் கடுமையாக விமர்சித்தவருமான மு.தளையசிங்கத்தின் 'ஒரு தனி வீடு'நாவலை முதற் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுத்த நடுவர்களிலொருவர் இலங்கை முற்போக்கிலக்கியத் தூண்களிலொருவரான  திரு.க.கைலாசபதி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனையவர்கள்: அகிலன், இராஜ அரியரத்தினம், சிற்பி, சி.த.சிவநாயகம்.

கலைச்செல்வி சஞ்சிகை கவிதைத்துறைக்கும் முக்கிய பங்கினை ஆற்றியுள்ளது. மஹாகாகவி , சாலை இளைந்திரையன், தில்லைச்சிவன், யாழ்வாணன், திமிலைத்துமிலன், முருகையன், நீலாவணன், அம்பி, ச.வே.பஞ்சாட்சரம், பா.சத்தியசீலன்  , கல்வயல் வே.குமாரசாமி என்று பலரின் கவிதைகள் வெளியாகியுள்ளன. அதிகம் அறியப்படாத லத்திகா போன்ற கவிஞர்களின் கவிதைகளும் பல  வெளியாகியுள்ளன. கவிஞர் மஹாகவியின் 'கல்லழகி' காவியம் வெளியானது கலைச்செல்வியில்தான் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது. கவிஞர் பா.சத்தியசீலன் கலைச்செல்வி மூலம் கவிதையுலகுக்குள் புகுந்து அத்துறையில் தடம் பதித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரைப்போல் கவிதைத்துறைக்குக் கலைச்செல்வி மூலம் அறிமுகமான இன்னுமொருவர் கல்வயல் வே.குமாரசாமி.

கலைச்செல்வியின் புனைவுப் பங்களிப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதன் அபுனைவுப் பங்களிப்பும். கலை இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளான கவிதை , புனைகதை, கட்டுரை, ஓவியம், நாடகம் , சினிமா மற்றும் அறிவியல், வரலாறு பற்றிய கட்டுரைகள், கட்டுரைத்தொடர்களைக் கலைச்செல்வி வெளியிட்டது. குறிப்பாக எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையின் 'நான் நினைப்பவை' , க.இராசரத்தினத்தின் 'ஓவியக் கலை', அ.ஸ.அப்துஸ்ஸமதுவின் 'ஈழத்து இலக்கிய வானிலே' (ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர்களைப் பற்றியது), அ.க.சர்மாவின் 'அணுவில் ஓர் அதிசயம்' (அறிவியல்) , வித்துவான் ந.வேலனின் 'அண்ணாமலை நகரில்' ,  சி.பொன்னம்பலத்தின் 'யாழ் நாட்டு இறந்த நகர்ச் செல்வங்கள்'  , க.த.திருநாவுக்கரசுவின் 'தென்னிந்தியாவும், தொல்லிலங்கையும்' (வரலாறு) போன்ற தொடர்கள் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவை.

இலக்கிய மணிமண்டபம், வளருந் தமிழ்  பகுதிகளில் நூல் விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளன. செம்பியன் செல்வன், ச.வே.பஞ்சாட்சரமென்று, இரசிகமணி கனக செந்திநாதன் என்று  பலர் நூல் விமர்சனங்களை எழுதியுள்ளார்கள். குறிப்பாக இலக்கிய மணி மண்டபம் பகுதியில் விரிவான, ஆழமான விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளன.  தோணி பற்றி செங்கை ஆழியான் (பங்குனி 1963),  வெள்ளிப் பாதரசம் பற்றி க.கைலாசபதி  (தை 1963),  கடவுளரும் ,மனிதரும் - பவானி பற்றி  செம்பியன் செல்வன் (ஏப்ரில் 1963) போன்றவற்றை உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

முற்போக்கிலக்கியம் பற்றிக் கா,சிவத்தம்பி   (கார்த்திகை 1962, தீபாவளி மலர்) அவர்கள் ஆரம்பித்து வைக்க மு.தளையசிங்கம் (மார்கழி 1962, தை 1963) , நவாலியூர் சோ.நடராசன்  (பங்குனி 1963) ஆகியோர் தொடர்ந்து தமது எதிர்வினைகளை முன் வைத்தனர். இத்தர்க்கம் இலங்கைத் தமிழ் ஊடகச்சூழலில் நிகழ்ந்த சிறப்பான தர்க்கங்களிலொன்று. இறுதியாக இது பற்றி எழுதிய நவாலியூர் சோ .நடராசன் அவர்களின் எதிர்வினை தர்க்கரீதியிலானது. அதிலவர் கூறிய பின்வரும் கூற்று என் கவனத்தை ஈர்த்த கூற்றுகளிலொன்று:

"யதார்த்தம் (உலகியல் வழக்கு), கற்பனை நவிற்சி (Romanticism), சேரியலிஸிம்  (Surrealism) , எக்ஸ்பிரஷனிசிம் (Expressionism) என்ற வகையிலுள்ள கலையமைப்புத் தன்மைகளெல்லாம், கலைஞனுடைய உளப்பாங்கைப் பொறுத்து வித்தியாசப்படும். மனிதனிடத்து நான்கு மனக்கூறுகளுண்டென்பர் உளநூலாசிரியர்கள். சிந்தனை, உணர்ச்சி, அகக்காட்சி, புறக்காட்சி என இவை வகுக்கப்பட்டுள்ளன. சில கலைஞரிடம் சில சமயம் சிந்தனை மேலோங்கி நிற்கும். சில சமயம் உணர்ச்சி மேலோங்கி நிற்கும்.  சில சமயம் அகக்காட்சி மேலோங்கி நிற்கும். சிலவேளை புறக்காட்சி மேலோங்கும்.  சில சமயம் இவை தம்முட்  கூடியும், குறைந்தும்  கலந்து நிற்கும். இம்மனப்பாங்குகட்கு ஏற்றவாறு அவ்விலக்கியப்படைப்புகள் கோலங் காட்டும்.புறக்காட்சி ஓங்கி நிற்பவர் ரியாலிஸம் என்ற யதார்த்தவாதிகள்.  அகக்காட்சியிற் திளைப்பவர்கள்  படைப்புகள் அகப்பொருள் விரிவையுடையதாய் (இதனைச் ஸேரியலிசிம் எனவும் - Stream of Consciousness) , தன்னுள நவிற்சி (Expressionism) என்ரும் பலபடப் பிரித்துக் கூறுவர்"

கவிஞர்கள் தாம் எழுதிய, தமக்குப் பிடித்த தமது கவிதைப் பற்றிய கருத்துகளை 'என்னைக் கவர்ந்த என் கவிதை' என்னும் பெயரில் எழுதினார்கள். கவிஞர்களான் முருகையைன், அம்பி, திமிலைத்துமிலன், தில்லைச்சிவன், நீலாவணன் என்று பலரின் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அவர்கள் தமக்குப் பிடித்த தமது கவிதைகளைப்பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். இலக்கியத்தரம் மிக்க, ஆழமான எழுத்துப் பதிவுகள் அவை. இது போல் எழுத்தாளர்கள் பலர் தம்மை உருவாக்கியவர்கள் பற்றி  'என்னை உருவாக்கியவர்கள்' பகுதியில் எழுதினார்கள். அவர்களில் சிலர்: மு.தளையசிங்கம், பவானி, தேவந் யாழ்ப்பாணம், புதுமைலோலன், சொக்கன்.

கலைச்செல்வி நகைச்சுவை இலக்கியத்துக்கும் இடம் ஒதுக்கியிருந்தது. இலங்கை நகைச்சுவை இலக்கியத்துக்கு வளம் சேர்த்த பலர்தம் நகைச்சுவை எழுத்துகளைக் கலைச்செல்வி வெளியிட்டுள்ளது. பொ.சண்முகநாதனின் புகழ்பெற்ற 'கொழும்புப் பெண்' நடைச்சித்திரம் வெளிவந்ததும் பங்குனி 1963 கலைச்செல்வி இதழில்தான். இத்தலைப்பில் அவரது நகைச்சுவை எழுத்துகளை உள்ளடக்கி நூலொன்றும் வெளியாகியுள்ளது. சானா, ரீ.பாக்கியநாயகம் என்று பலரின் படைப்புகள் கலைச்செல்வியில் வெளியாகியுள்ளன.

நாடக உலகைப்பற்றிய கலைச்செல்வி விமர்சனங்கள் மூலம் அக்காலகட்ட தமிழ் நாடக  உலகைப்பற்றிய விரிவான தகவல்களைப் பெற முடிகின்றது. நாடகங்களும் சில கலைச்செல்வியில் பிரசுரமாகியுள்ளன.

இளம் எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக்கொடுத்த கலைச்செல்வி பால்யபருவத்துக் குழந்தைகளுக்காக அதிக அளவில் படைப்புகளை வழங்கியதாகத்தெரியவில்லை. சில குழந்தைப்பாடல்கள் அவ்வப்போது  வெளியாகின.  பாமாராஜகோபாலின் 'இரட்டையர்கள்' சிறுவர் தொடர்கதை (பங்குனி 1963) அதன் சிறுவர் இலக்கியத்துக்கான பங்களிப்புகளிலொன்று.

கலைச்செல்வியின் இன்னுமொரு பிரதான அம்சம்  அது வாசசகர்களுக்குக் கொடுத்துள்ள முக்கியத்துவம்தான்.  வாசகர் கருத்துகளுக்கு அது தன் ஆரம்பப்பக்கங்களில் இடமொதுக்கி வெளியிட்டு வந்தது. கலைச்செல்வியின் வாசகர் கருத்துகளைத் தனியாகத்தொகுத்து வெளியிட்டால் அது நல்லதொரு கலைச்செல்வி  பற்றிய விமர்சனமாக அமையும்.  எழுத்தாளர்கள் தொடக்கம் சாதாரண வாசகர்கள் வரை நூற்றுக்கணக்கில் பலர் கலைச்செல்வியில் வெளியான பல்வகைப்படைப்புகளைப்பற்றிய தங்களது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்கள். இன்னுமொரு முக்கியமான விடயம் அதன் 'நம் நாட்டு வாசகர்' பகுதி. வாசகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களது கலை, இலக்கியம் பற்றிய கட்டுரைகள் கலைச்செல்வியில் வெளியாகியுள்ளன.  குறுக்கெழுத்துப் போட்டிகள் மூலம் வாசகர்களைப் பங்குபற்ற வைத்துப் பரிசுகளை வழங்கியுள்ளதும் குறிப்பிடவேண்டிய அதன் செயற்பாடுகளிலொன்று.

பண்டிதர் வ.நடராஜனின், செட்டிகுளம் பூலோகசிங்கத்தின்  தமிழ் இலக்கியக் கட்டுரைகளும், இரசிகமணி கனக செந்திநாதனின் நவீனத்தமிழ் இலக்கியக் கட்டுரைகளும் கலைச்செல்வி தமிழ்  இலக்கிய உலகுக்கு வழங்கியுள்ள பங்களிப்புகளே.

தாண்டவக்கோனின்  'பட்பட்' கேள்வி -பதில் பகுதி கலைச்செல்வி வாசகர்கள் மத்தியில் புகழ் பெற்ற பகுதிகளிலொன்று.  பல பக்கங்களில் வெளியான இப்பகுதியில் தாண்டவக்கோன் சினிமா, இலக்கியம், அரசியல், மானுட வாழ்க்கையென்று பல்வேறு விடயங்களைப் பற்றிய கேள்விகளுக்குச்  சுவையாக, சிந்திக்க வைக்கும் பதில்களை அளித்திருப்பார். யார் தாண்டவக்கோன் என்பது தெரியவில்லை. ஒருவேளை ஆசிரியர் சிற்பியோ?

கலைச்செல்வி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது அதன் அழகான அட்டைப்படங்களும், புனைகதைகளுக்கு வரையப்பட்டுள்ள ஓவியங்களும்தாம்.  மாலதி, மேடம், வீகே,மாதவன், ஆதவன் , கோமதி என்று ஓவியர்கள் பலரின் கைவண்ணத்தைக் கலைச்செல்வியின் அட்டைகளில், பக்கங்களில் காணலாம். ஓவியர் மாலதியும் கவிஞர் திமிலைத்துமிலனும் ஒருவரே என்னும் உண்மையினையும் கலையரசி தன் பக்கங்களிலொன்றில் அறிவித்திருந்தது.

இந்திரஜித்தின் இலக்கியக்கணை பத்தியெழுத்தும் குறிப்பிடத்தக்கது. இந்திரஜித்தின் பல்வேறு விடயங்களைப்பற்றிய கருத்துகளை வெளிப்படுத்தும் பகுதி. தாண்டவக்கொனைப்போல் இந்திரஜித் என்னும் புனைபெயருக்குள் ஒளிந்திருப்பவர் யாரென்பது தெரியவில்லை.

இன்னுமொரு குறிப்பிடத்தக்க விடயம். கலைச்செல்வி தமிழ்ப்பகுதிகளில் இயங்கிக்கொண்டிருந்த பல்வேறு தொழிற்சாலைகளைப்பற்றிய கட்டுரைகளை வெளியிட்டு அவை பற்றிக்  கலை, இலக்கிய வாசகர்கள் அறியும் வண்ணம் செய்தது. உதாரணத்துக்கு மில்க்வைற் தொழிற்சாலை மற்றும் அதன் ஸ்தாபகர் கனகராஜா பற்றிய கட்டுரையினைக் குறிப்பிடலாம். தமிழர்தம் கலை, இலக்கிய வளர்ச்சியுடன் , தமிழர்தம் பொருளாதார வளர்ச்சியும் அவசியமென்பதைக் கலைச்செல்வி உணர்ந்து செயற்பட்டதை இது வெளிக்காட்டுகின்றது.

பல புதிய தமிழ்ச் சொற்களையும் கலைச்செல்வி தமிழுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. கவிஞர் பா.சத்தியசீலன் தனது விழி திறப்பு என்னும் நெடுங்கவிதையில் (வைகாசி-ஆனி 1963) 'டாக்ஸி'க்கி வரியி என்னும் சொல்லைப்பாவித்திருப்பார். நவாலியூர் சோ நடராசனும் தனது முற்போக்கு இலக்கியம் கட்டுரையில் இலக்கியக் கோட்பாடுகள் பலவற்றுக்குப் புதிய கலைசொற்களைப்பாவித்திருப்பார். உதாரணத்துக்கு ஒன்று; கற்பனாவாதம் என்று பொதுவாகப் பாவிக்கப்படும் சொல்லுக்குக் கற்பனை நவிற்சி என்று அவர் பாவித்திருப்பார்.

இவ்வளவு கூறிவிட்டுக் கலைச்செல்வி  வெளியிட்ட பல்வேறு மலர்களைப்பற்றிக் குறிப்பிடாமலிருக்க  முடியுமா? வழக்கமான தீபாவளி மலர்கள், பொங்கல் மலர்களுடன் வவுனியாக் கலைவிழா  மலர் (ஆவணி 1962), ஆண்டு மலர் (ஆகஸ்ட் 1959), மகளிர் மலர் (ஆவணி 1960)  வளரும்  எழுத்தாளர் மலர் (சித்திரை 1959)  என்று பல தரமான இலக்கிய மலர்களைக் கலைச்செல்வி வெளியிட்டுள்ளது. நானறிந்து தமிழில் வளரும் எழுத்தாளர்களுக்காக இலக்கிய மலர்கள் எவையும் வெளிவந்ததாகத்  தெரியவில்லை. அறுபதில் மகளிர் மலர் வெளியிட்டுள்ளது உண்மையில்  அது மகளிர் எழுத்தின் முக்கியத்தை உணர்ந்து செயற்பட்டிருப்பதை வெளிப்படுத்துகின்றது. இம்மலர்களில் எழுதியவர்களில் பலர் பின்னர் நாடறிந்த எழுத்தாளர்களாகப் பரிணாமம் அடைந்தார்கள். அது கலைச்செல்வி பெருமைப்படத்தக்க விடயம். அழகான ஓவியங்க௳ளால் அட்டைகளை, பக்கங்களை அழகுபடுத்தி வெளிவந்த மலர்கள் இவை.

மொத்தத்தில் கலைச்செல்வியின் இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கான பங்களிப்பு காத்திரமானது. ஆரோக்கியமானது. பெருமைப்படத்தக்கது. அதன் முழு இதழ்களும் திரட்டபட்டு, அது பற்றிய விரிவான ஆய்வுகளைப் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், கலை, இலக்கியத்திறனாய்வாளர்கள் செய்ய வேண்டும்.

உசாத்துணைச்சான்றுகள்:

1. ஈழத்துச் சிற்றிதழ்கள் - ஞானம் ஆசிரியர். தி.ஞானசேகரன் (தமிழ்ஆதர்ஸ்.காம்)
2.  கலைச்செல்வி - அருண்மொழிவர்மன் (புதியசொல், ஜனவரி-மார்ச் 2016)
3. நண்பர் சிற்பி சிவசரவணபவன் - உதயணன் (தாய்வீடு, டிசம்பர் 2015)
4. கலைச்செல்வி , ஆடி 19568
5. நினைவு கூர்வோம்: 'கலைச்செல்வி' சிற்பி சரவணபவன்! - வ.ந.கிரிதரன் (பதிவுகள், முகநூற் குறிப்பு)
6. இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் (1841-1984) -  ஒரு கையேடு     கோப்பாய் சிவம் (வெளியீடு - கோப்பாய்  சிவம்)
7. கலைச்செல்வி பழைய இதழ்கள் (நூலகம் இணையத்தளம்)
8. ஈழத்தில் தமிழ்ச் சஞ்சிகைகளின் பங்களிப்பு - சி.ஓசாநிதி , தற்காலிக விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்
9. தாய்வீடு (டிசம்பர் 2015)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்