சிறுகதை: கிழக்கும் வெளிக்கவில்லை! மேற்கும் வெளிக்கவில்லை! - கடல்புத்திரன் -
நம் தீவு நாட்டில் தான் ‘ தீ ‘க் குளிப்புகள் நடக்கிறதென்றால் போற புலம் பெயர் நாடுகளிலுமா இடம் பெற வேண்டும் ? இந்த பூமிப்பந்திற்கு என்ன தான் வந்து விட்டது . தாமாக ஈடுபட்டாலும் சரி , மற்றவர்கள் வலுவால் தூக்கி எறியப்பட்டாலும் சரி அது மனிதத்திற்கு அவமானமான செயல் தான் . மனிதம் செத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு சமிக்ஞை . மிருக நிலையிலிருந்து தேவ நிலைக்கு வைக்கிற வைக்கப்படுற ( கால் ) அடிகள் சறுக்குண்டு பின்னோக்கி விழுவது போன்ற ஒரு விபத்து . மனிதம் தின்று வாழ்கிறவர்கள் அதிகமாகிப் போனதனால் அதில் ஒரு அங்கமாகி தலைவராகி , இவை நிகழ்வதற்கு தார்மீக ஆதரவையும் , கூடுதலாக படையினரின் ஈனச் செயல்களையும் அனுமதித்து விடுகிறார்கள் . பழையபடி அரசநாயகத்தில் நழுவி விழுந்து தலைவர்களாகத் ( அரசர்களாக ) தான் போட்டி நடை பெறுகின்றது . இன்று , நம்நாடு போர்க் குற்றங்கள் மலிந்த ஒரு ஈன நாடாக காட்சி அளிக்கின்றது . பெயர் கெடுக்கப்பட்டு விட்டிருக்கிறது . படைப்பிரிவுகளைக் கலைத்து மீள புதுதாக ஏற்படுத்த வேண்டிய தேவை கிடக்கிறது . குற்ற விசாரணைகளைச் செய்ய வேண்டிய பணியை சமூக நீதிமன்றங்களிடம் தள்ளி விட வேண்டும் . அப்ப தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் . ஆளுக்காள் அபிப்பிராயம் சொல்லகிற அழுகிய நிலை வேண்டாம் . அரசியல் அத்திவாரம் சரியில்லை . அதைச் சீர்ப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது . ஆனால், நம்நாடு , சீராகி மூச்சு விடுமா? , விடவே நூறு ஆண்டுகள் செல்லும் போல இருக்கிறது .
விமல் , ” டேய் , நானும் ,ரமணாவும் இங்கே தான் இருக்கிறோம் . ரவி பையித்தியம் பிடித்தவன் போல இருக்கிறான் . எப்படி தேற்றுறறென்று தெரியல்லை ” என்கிறான் . அவன் குரலும் உடைந்திருக்கிறது . அப்படி என்ன தான் நடந்து விட்டிருக்கிறது . ரமணனின் தங்கை சித்திராவை ரவி முடித்தவன் . நாமெல்லாம் கிராமத்துப் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள் . நம் நட்பும் உயிர்ப்புடன் திகழ்கிறது . ” என்னடா , பதற்றபபடுறதைப் பார்த்தால் பயமாக இருக்கிறதடா ” ” இவன்ர அம்மா ,இங்கே வந்தது தெரியும் தானே . கொலண்டிலே இருந்து விட்டு பவியைப் பார்க்க வந்து ஒரு கிழமையாய் தங்கி இருந்தவர் . நாளை பிளேன் ஏற இருந்தவர்…” அவன் சொல்ல முடியாது திணறினான் . ரமணன் அலைபேசியை பறித்து ” டேய் , வீடு எரிந்து அம்மா , தங்கச்சி , பவிக் குட்டி எல்லோரும் சாமிக்கிட்ட போயிட்டாங்கடா . பிறகு எடுக்கிறோம் . ரவியை கவனிக்க வேண்டி இருக்கிறது ” என்று தொடர்ப்பு அறுபடுகிறது . நாயகம் இரத்தம் உறைய அதிர்ந்து போய் நிற்கிறான் . அவனுடைய செல்ல மகள் கீதாவின் சாவு …புரட்டிப் போட்டிருக்கிறது .குறு , குறுவெனப் பார்க்கும் அந்தப் பார்வை , வில்லு போல தெளிவாகத் தெரியும் புருவங்கள் ,அவன் அலட்டுவதைக் கேட்டு , அப்பப்ப முகத்தில் பூக்கும் சந்தோசங்கள் …சிறிது குளிராக இருந்தாலும் சரிவர உடுப்புப் போட்டு சில்லு நாற்காலியில் அவளை பல்கணிக்கு கொண்டு வந்து காற்றை சுவாசித்து புத்துணர்ச்சி பெற நிற்பார்கள் .இன்று அவள் இல்லை . தனிய நின்று ஏதோதோ யோசித்துக் கொண்டிருக்கும் போது இந்த பேரிடி வருகிறது . பிறந்த நாட்டில் இருந்திருந்தால் இந்த அவலமெல்லாம் எமக்கு நிகழ்ந்திருக்காது . எமக்கு தான் ” கடவுளே இவளை வேளைக்கு துன்பப்படுத்தாமல் எடுத்து விடு ” என்ற பிராத்தனை இருந்தது என்றால்…., , பவி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டியவள் அல்லவா , அவளைப் போய் சிங்களக்காடையர் துன்புறுத்துவது போல எடுத்து விட்டாரே!